Thursday, January 3, 2013

உயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவி டவர், சீனா

எந்த நாடுகள் போனாலும், அந்த நாட்டின் உயரமான கட்டிடம் சென்று பார்ப்பது, இல்லையென்றால் அங்கு இருக்கும் உயரமான இடம் செல்வது என்பது எனது பொழுதுபோக்கு. உயரம் செல்லும்போதும், அங்கு இருந்து பார்க்கும்போது தெரியும் காட்சி, நாம்  நமக்கு அருகில் பார்த்த பேருந்து உயரத்தில் இருந்து பார்க்கும்போது சிறு எறும்பாக தெரிவது என்று அது ஒரு த்ரில் அனுபவம். வான் உயர்ந்த கட்டிடம் கட்டுவது ஒன்றும் எளிதில்லை, அது ஒரு விஞ்ஞான அற்புதம். இந்த உயரம் தொடுவோம் தொடரில், நான் இதுவரை சென்று வந்த கட்டிடங்களை, அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை..... அந்த வரிசையில் இன்று ஷாங்காய் நகரத்தின் ஒரு உயர்ந்த கட்டிடம் எனப்படும் ஒரிஎண்டல் டிவி டவர்.




இந்த டவர் சீனாவின் ஹாங்க்பு நதியின் கரையோரம் கட்டப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு கட்ட தொடங்கி 1994ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இது 1535 அடி மொத்த உயரம் கொண்டது. இது ஆசியாவின் மிக பெரிய டிவி டவர் (கட்டிடம் அல்ல) என்றும், உலகின் மூன்றாவது பெரிய டிவி டவர் என்றும் புகழ் பெற்றது. இதன் டிசைன் பார்க்கும் போது இரண்டு முத்துக்கள் கொர்க்கபட்டது போல தோன்றும், அதனால் இது ஒரிஎண்டல் பியர்ல் டவர் என்றும் அழைக்கபடுகிறது. இதன் முதல் பெரிய உருண்டை வரை செல்ல கட்டணம் எதுவும் இல்லை, ஆனால் இரண்டாவது முத்து உருண்டைக்கு செல்வதற்கு கட்டணம் உண்டு. 1 யுவான் (சீன பணத்தின் பெயர்) என்பது இந்திய மதிப்பில் 8.75 ரூபாய் ஆகும் !



259 மீட்டர் உயரத்தில் இருப்பதை காட்டுகிறது, மாடியை அல்ல !



மேலே நீங்கள் பார்க்கும் இந்த கோளத்தில், கீழே கொடுக்கபட்டிருக்கும் தளங்கள் எல்லாம் இருக்கின்றன
  • 863வது அடியில் - வேடிக்கை பார்க்கும் தளம்
  • 876வது அடியில் - டிஸ்கோ கிளப் மற்றும் உணவகம்
  • 889வது அடியில் - Ktv எனப்படும் கரோக்கே பார்
  • 1148வது அடியில் - வேடிக்கை பார்க்கும் தளம் மற்றும் பார்
  • 1535வது அடியில் மிக பெரிய ஆண்டெனாவின் முனை முடியும்.
மொத்தம் 14 (பெரிய) மாடிகளை கொண்ட இந்த டவரில் நீங்கள் கடைசி தளத்திற்கு போகும் போது தெரியும் காட்சிகள் உங்களுக்கு கட்டிட கலையின் மீது ஒரு ஆர்வத்தை வரவைக்கும். மேகங்கள் உங்களை தொட்டு போவதை போல இருக்கும், மொத்த ஷாங்காய் நகரமும் தெரியும் அந்த காட்சி உங்களை மலைக்க செய்யும் !







மேலே சீன உணவுகளை உண்டு கொண்டு நீங்கள் சிறிது நேரம் இருந்து சூரியன்
மறைந்தவுடன் இந்த நகரம்  விளக்குகளால் தன்னை அலங்கரித்து கொள்ளும் காட்சியை நீங்கள் கண்டிப்பாக காண வேண்டும். இந்த ஹாங்க்பு நதியில் மிதக்கும் ஓடங்கள் எல்லாம் சிறு எறும்பு ஊர்வதை போல தெரியும் ! மேலே நீங்கள் இதை பார்த்து முடித்தவுடன் அங்கிருக்கும் கடைகளில் இதன் சிறிய மாடல் ஒன்றை வாங்கலாம்.



உயரம் தொடுதல் என்பது ஒரு நல்ல அனுபவம், அதுவும் இது போல கட்டிட கலையினை சென்று அனுபவிக்கும்போது நிஜமாகவே மனிதன் என்பவன் ஒரு மிக பெரிய அறிவாளி என்ற கர்வம் பிறக்கிறது !

4 comments:

  1. ஷாங்காய் டிவி டவர் அழகிய படங்களுடன் கண்டுகொண்டோம் .நன்றி.

    புதுவருட வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மாதேவி ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  2. //எந்த நாடுகள் போனாலும், அந்த நாட்டின் உயரமான கட்டிடம் சென்று பார்ப்பது, இல்லையென்றால் அங்கு இருக்கும் உயரமான இடம் செல்வது என்பது எனது பொழுதுபோக்கு. //

    நல்ல பகிர்வு மற்றும் தங்களது வித்தியாசமான பொழுதுபோக்கு பழக்கம் ஆச்சர்யமூட்டியது.

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, ஒரே நாளில் எனது நிறைய பதிவுகளை படித்து மகிழ்ந்து, அதற்க்கு கருத்துக்களும் இட்டதற்கு மட்டற்ற மகிழ்ச்சி ! உங்களது வலைப்பூவில் இருக்கும் படங்களை பார்த்தேன், வித்யாசமான ரசனை..... மீண்டும் வருக !!

      Delete