Wednesday, January 30, 2013

தனிமை இனிமையா ?

நீங்கள் எங்கேயாவது விடுமுறைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் எந்த விதமான இடத்தை தேர்ந்தெடுப்பீர்கள் ? எங்கும் மக்கள் நிறைந்திருக்கும் ஒரு இடமா, இல்லை இரைச்சல்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் ஒரு இடமா ? பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுப்பது ஒரு அமைதியான இடம், இல்லையா ?! அப்போது, நாம் இருக்கும் நகரம் ஒரு இரைச்சல்களின் பெட்டகம் ஆகி விட்டது எனும்போது அந்த தனிமை, அமைதி தேவை படுகிறது இல்லையா ? என்னையும், என் குடும்பம்,  இயற்கையையும் தவிர யாரும் இருக்க கூடாது என்றுதான் எல்லோரும் யோசிப்பார்கள் ஒரு விடுமுறைக்கு. இயற்கையும், நாமும் என்று அந்த அமைதியை, தனிமையை விரும்பி தேடி செல்வோம்.... அதே போல்தான் நானும் ஒரு விடுமுறைக்கு ஒரு அமைதியான இடம் சென்றிருந்தேன், ஆனால் அந்த அமைதி ஒரு மிக பெரிய கேள்விக்கு வித்திட்டது, அது என் எண்ணத்தை மாற்றியது என்றால் என்ன செய்வது ?!


தனிமை என்பது எல்லா மனிதனுக்கும் தேவை, அது நமக்குள் கேள்விகளை கிளப்பிவிடும், எங்கும் எப்போதும் நாம் தேடுவது தனிமைதான் இல்லையா ?. சில நேரங்களில் நாம் நமது குடும்பத்தினரை விட்டும் கூட தனிமை தேடுவோம்,  நமது வீட்டினுள்ளே ஒரு இடம் தனியாக அமர்ந்து சிந்திப்பதற்கு வேண்டும், அங்கு சென்று அமர்ந்து கண்ணை மூடிக்கொள்ள தோன்றும் அப்படித்தானே ? நகரத்தின் இரைச்சலில் எப்போதும் நம் காதுக்குள் எப்போதும் ஒரு வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது இப்படி நாம் நினைப்பது ஒன்றும் அதிசயமில்லை. எல்லா மனிதர்களுக்கும் உணர்ச்சிகள் ஒன்றுதான் இல்லையா, ஆனால், நினைத்து பார்த்திருக்கிறோமா ஒரு சில வேலைகள் செய்பவர்கள் தனிமையில்தான் தங்களின் பெரும் பொழுதை கழிப்பதை.... அவர்களுக்கு அந்த தனிமை இனிமையா, கொடுமையா என்று?



திண்டுக்கல்லில் சிறுமலை என்று ஒரு இடம் உண்டு, அந்த மலையின் மேலே நிறைய எஸ்டேட் உண்டு, ஆனால் அது பாதுகாக்கபட்ட வனபகுதி. இங்கு நீங்கள் செல்லும்போது ஒரு செக் போஸ்ட் உண்டு. அங்கு ஒரே ஒரு காவலர் மட்டுமே, இரவு பகல் என்று காவல் காப்பார். பொதுவாக இந்த மலை பகுதிக்கு யாரும் வருவதில்லை ஆதலால் அவருக்கும் வேலை இல்லை. அவரும், இயற்கையும் மட்டும்தான்.....நினைத்து பாருங்கள் சுற்றிலும் மரங்கள், பறவை ஒலி மட்டும்தான், தூரத்தில் ஒரு சிறு ஓடை ஓடுகிறது, பச்சை பசேல், குளுமை..... என்ன ஒரு அழகான இடம், அருமையான தனிமை, நிம்மதியான அமைதி, இல்லையா ? இதை ரசித்து அவரிடம் சொன்ன போதுதான் தெரிந்தது, அவர் எவ்வளவு தூரம் இரைச்சலை தேடுகிறார் என்பது ! காலை முதல் மாலை வரை ஒரு சிறு இடத்தில் இருக்கும் அவருக்கு இந்த அமைதி ஒரு கொடுமை, நமக்கெல்லாம் இந்த நகர வாழ்கையில் இந்த இரைச்சல் ஒரு கொடுமை...... இப்போது சொல்லுங்கள் அமைதி, தனிமை என்பது எல்லோருக்கும் இன்பமா என்ன ?



காட்டில் செக் போஸ்டில் இருக்கும் ஆள், பணக்கார பங்களாவை காவல் காக்கும் வாட்ச் மேன், இரவில் ரோந்து சுற்றி ஓய்வெடுக்கும் போலீஸ்காரர், எஸ்டேட் பங்களாவை காவல் காக்கும் ஆள், தோட்டத்தை காவல் காக்கும் விவசாயிகள், இரவினில் லாட்ஜ் முன்னே உட்கார்ந்திருக்கும் ரிசப்ஷன் ஆள், மரத்தடியில் வண்டியை போட்டு விட்டு பயணி திரும்பி வர காத்திருக்கும் டிரைவர், வெளிநாடுகளில் குடும்பத்தை பார்க்க முடியாமல் தவித்திருக்கும் சகோதரர்கள், நெடுஞ்சாலைகளில் புகழ் தொலைத்த டீ கடைகள், நமது தேசத்தை காக்க எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்கள், எத்தனையோ முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்கள், வேலைக்கு போகும் பெற்றோர் திரும்பி வர காத்திருக்கும் குழந்தைகள், ஆளில்லா ரோட்டில் காத்திருக்கும் கடைக்காரர்கள், ஏழை வீட்டில் நோய் வாய்ப்பட்டு நகர முடியாமல் இருக்கும் நோயாளிகள், ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிக்கு முன் கண்விழிக்க காத்திருக்கும் சொந்தங்கள், கிராமத்து போஸ்ட் ஆபிசில் தபாலுக்காக காத்திருக்கும் போஸ்ட் மேன் என்று நாம் சந்திக்கும் இது போன்ற மனிதர்கள் எல்லாம் தனிமையை தினமும் அனுபவிக்கும், அவர்களுக்கு எல்லாம் தனிமை உற்சாகம் ஊட்டுமா என்ன ?


ஒரு தனிமையின் இனிமை தெரிய நாம் பணம் கொடுத்து அதை தேடி செல்கிறோம், ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த அமைதி வேண்டாம் என்று சிலர் இருப்பது வாழ்வின் முரண் இல்லாமல் வேறென்ன ? நான் இதுவரை இது போன்ற இடங்களுக்கு செல்லும்போதெல்லாம் என்னை எதிர்பட்டவர்களிடம் ஒரு புன்னகை மட்டுமே சிந்தி இருக்கிறேன். இன்னும் சொல்வதென்றால், நான் கூர்க் மலை பகுதி சென்றிருந்தபோது, நாங்கள் ஒரு எஸ்டேட்டில் தங்கி இருந்தோம். நான் அங்கு எங்களுக்கு புன்னகையுடன் பணிவிடை செய்த அந்த வயதான மூதாட்டிக்கு தினமும் ஒரு சிரிப்பை செலவு செய்தேனே அன்றி, வார்த்தைகளை அல்ல. இன்று நினைத்து பார்த்தால், அட ஒரு சில வார்த்தைகளை பேசி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இது போன்ற நிமிடங்களில்தான் எனக்கு தோன்றும்...... சில நேரம் தனிமையை, அமைதியை கொல்வது என்பது பாவமில்லை என்று !?


Labels : Ennangal, Suresh, Kadalpayanangal, Lonely, being alone, peace

8 comments:

  1. கண்டிப்பாக தனிமை கொடுமை தான்...

    தவறு செய்யும் மனிதனுக்கு, தனிமை அவனை மாற்ற உதவும் ஒரு வரப்பிரசாதம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார், ஒரு தனிமை மனிதனை வெகுவாக சிந்திக்க வைக்கிறது ! பதிவை படித்து கருத்துக்களை பதிவு செய்ததற்கு நன்றி !

      Delete
  2. இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பதை
    அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    படங்களுடன் பகிர்வு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் சார், சரியான வார்த்தைகள் !! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  3. மனிதன் ஒரு சமூக விலங்கு. கூட்டமா இருக்கணும். அதே சமயம் மனசுக்குள்ளில் தனிமையாகவும் இருப்பான்.

    ReplyDelete
    Replies
    1. மனதினுள் தனிமை எல்லோரிடமும் உண்டு, ஆனால் பெங்களூரில் தனிமை தேடி பலர் பயணம் செய்யும்போது ஆச்சர்யமாக இருக்கிறது மேடம் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  4. Replies
    1. Thanks for visiting my blog and providing your comments ! I hope you enjoyed the content !

      Delete