Monday, January 7, 2013

அறுசுவை - திண்டுக்கல் வேணு பிரியாணி

திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி பற்றி நான் எழுதி இருந்தபோது, நிறைய பேர் வேணு பிரியாணி சாப்பிட்டு பாருங்கள் என சொல்லி இருந்தனர். அதை மனதில் வைத்துக்கொண்டு இந்த முறை சென்று இருந்தேன். இது ஊரின் நடுவில், அதுவும் ஒரு சந்து போன்ற ஒரு இடத்தில் உள்ளதால், பார்கிங் கிடைக்காமல் மிகவும் வெறுத்து போனோம். மதியம் கூட்டம் வேறு, எல்லோரும் பார்கிங் கிடைத்தால் நிறுத்திவிட்டு போய் விடுவதால் டிராபிக் ஜாம் வேறு என்று ஆரம்பமே யோசிக்கும்படி இருந்தது. ஒரு வழியாக வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றால், அடிக்கும் வெயிலுக்கு AC உள்ளே உட்காருவோம் என்றால், அதுக்கு ஒரு நீண்ட வரிசை என்று மண்டை மேல் அனலடித்தது. நிழல் கூட இல்லாமல் என்று ஒரே இம்சை.....இதை எல்லாம் மீறி உள்ளே சென்று அந்த பிரியாணியை சுவைத்தால், நாம் காத்திருந்தது வீணல்ல என்றே தோன்றும் !






ஒரு வழியாக இடம் கிடைத்து உட்கார்ந்து (AC என்று சொல்லிவிட்டு, உள்ளுக்குள் புழுக்கம்தான்) என்ன இருக்கிறது என்று மதியம் 2 மணிக்கு நாங்கள் சென்ற நேரத்தில் கேட்டால் பாதி மெனு இல்லை..... தீர்ந்துவிட்டது !! சரியென்று இருப்பதில் என்ன என்று கேட்டு மட்டன் பிரியாணி, மீன் பிரை, குடல் பெப்பர் என்று ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தோம்.


சும்மா உட்கார்ந்து இருக்கும் நேரத்தில் நம்ம வலைபூவிற்கு விஷயம் சேகரிப்போம் என்று சற்று சுற்றி வந்தேன். இங்கு நான்-AC ஹால் சற்று பெரியதாக இருக்கிறது, வெளியூரில் இருந்து இங்கு வரும் கும்பலும், கட்சி கும்பலும்தான் ஜாஸ்தி. சர்வீஸ் மிகவும் விரைவாக இருக்கிறது..... அதாவது நீங்கள் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு எழுந்தால் தான் அடுத்தவர்களுக்கு இடம் என்பதால் நீங்கள் கேட்கும் எல்லாம் வெகு விரைவில் கிடைக்கிறது. பொதுவாக, எல்லாம் தயாராகி இருக்கிறது, கேட்டவுடன் சட்டென்று எடுத்து கொடுக்கும்படியாக உள்ளது !


 பார்சல் செய்யும் இடத்தை பாருங்கள்..... பிரியாணி சர சரவென்று காலியாகி கொண்டிருந்தது. யாருக்கும் நிற்க நேரமில்லை என்றுதான் சொல்ல வேண்டும் ! சின்ன இடம், இவ்வளவு பிரபலம் ஆன பின்னும் ஏன் விரிவுபடுத்தவில்லை என்பது தெரியவில்லை !

எல்லாம் பார்த்துவிட்டு மீண்டும் என் இடத்திற்கு வந்தபோது சூடான மட்டன் பிரியாணி தயாராக இருந்தது. நிறைய மட்டன் பீஸ் இருந்தது !! முடிவில் மட்டன் சுக்கா, குடல், மீன் வறுவல் என்று வந்தபோது பசிக்கு வெட்ட ஆரம்பித்தோம். சில இடங்களில் பிரியாணி சாப்பிட்டால் வயிறு மந்தமாக இருக்கும், ஆனால் இங்கு அப்படி இல்லை என்றே சொல்ல வேண்டும். நன்கு வேக வைக்கப்பட்ட கறி, பிரியாணி அரிசி என்று அருமையான சுவை !



முடிவில் நன்கு சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தால் மதுரை ஜிகர்தண்டா, ஐஸ் கிரீம், பீடா ஸ்டால் என்று இருந்தது. நீங்கள் இதை சாப்பிட வேண்டும் என்று முன்பே முடிவெடுத்தால் மட்டுமே வயிற்றில் சிறிது காலி இடம் வைத்து கொண்டு வர முடிய வேண்டும், இல்லையென்றால் உள்ளே கிடைக்கும் சுவையான பிரியாணிக்கு வயிறு முட்ட சாப்பிட தோன்றும் !!


பஞ்ச் லைன் :
சுவை               -      அருமையான சுவையான பிரியாணி. திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணியை விட நன்றாக இருந்தது என்றே தோன்றியது.

அமைப்பு         -       உள் அமைப்பு மிகவும் சிறிய இடம், அடிக்கும் வெயிலுக்கு AC ஹால் வேண்டும் என்று எல்லோருக்கும் தோன்றும், ஆனால் அங்கு இடம் கிடைப்பது குதிரை கொம்பு. பார்கிங் வசதி மிக பெரிய 
ஒரு பிரச்சனையாக உள்ளது, அதுவும் உண்ணும் நேரம் நிற்கவே இடம் 
இல்லை அந்த ரோட்டில். 
பணம்              -      சரியான விலை !! நான்கு பேருக்கு 700 ரூபாய் வரை ஆனது !
சர்வீஸ்           -       சூப்பர் சர்வீஸ் ! எல்லாம் முன்பே செய்து வைத்து 
விடுவதால், எடுத்து கொடுக்க வேண்டியதுதான் பாக்கி ! 

மெனு கார்டு :

அவர்களிடம் மெனு கார்டு கேட்டபோது இல்லை என்று சொல்லி சர்வர் வாயாலேயே மெனு சொன்னார். பின்னர்தான் தெரிந்தது, நீங்கள் காத்துக்கொண்டிருக்கும்போது வெளியில் இருக்கும் போர்டில் மெனு படத்துடன் இருப்பது, ஆகவே உங்களுக்காக....




2 comments:

  1. ஒருமுறை போய் வந்திருக்கிறேன்
    நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல
    பார்க்கிங்கும் உட்கார இடம் கிடைப்பதும்
    பிரச்சனையாகத்தான் இருக்கிறது
    படங்களுடன் பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உள்ளது உள்ளபடி எழுதி இருக்கிறேன் நண்பரே..... நாள் ஆகிவிட்டபடியால் சரியாக யாபகம் இல்லை, ஆனால் எப்போதும் நான் சாப்பிட்டதையே எழுதுவேன் என்பதால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது அது அன்று கிடைத்தது என்று.

    ReplyDelete