Thursday, February 28, 2013

நான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்

 இந்த குறும்படத்தை முதலில் பார்த்தபோது ஏதோ ஒன்று அந்த பொண்ணுக்கு நடக்க போகிறது என்று மனதுக்குள் தோன்றியது, ஆனால் முடிக்கும்போது செம கலக்கலாக இருந்தது எனலாம். இதற்க்கு மேலே சொன்னால் முழு கதையையும் சொல்வது போல ஆகும், ஆகையால் நீங்களே பாருங்கள்...


Wednesday, February 27, 2013

உங்களின் அடையாளம் என்ன ?

எல்லா மனிதர்களுக்கும் ஒரு அடையாளம் உண்டு இல்லையா. பெங்களுருவின் பரபரப்பு நிறைந்த சாலையில் நான் சென்று கொண்டிருந்தபோது சட்டென்று நான் தூரத்தில் தெரிந்த ஒருவரை கவனிக்க நேர்ந்தது, பார்த்ததுமே மனதில் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது, ஆனால் யாபகம் வர மறுத்தது. அந்த பரபரப்பு நிறைந்த சாலையில் கூட்டத்தை பிளந்து கொண்டு அவரிடம் சென்று ஒரு நிமிடம் முகம் பார்த்து, என் யாபக அடுக்குகளில் தேடி பார்த்து "அட....சம்பத்து நீயா, என்னடா ஆளே மாறிட்ட" என்றவுடன்தான் அவருக்கும் என்னை அடையாளம் தெரிந்தது ! எப்படி என்னை கண்டுபிடித்தாய் என்றைய என் நண்பனின் கேள்விக்கு, எப்பவும் இந்த முதுகை சாய்ச்சி நடப்பியே ஒரு ஸ்டைலா, அது இன்னும் யாபகம் இருக்கு..... அதுதான் இந்த கூட்டத்தில தனியா தெரிந்ததே என்று பார்த்து பதினைந்து வருடம் ஆன நண்பனிடம் புன்னகையுடன் கூறினேன். யோசித்து பார்த்தால் எல்லோருக்கும் ஒரு அடையாளம் என்று ஒன்றை நாம் வைக்கிறோம் இல்லையா, பல வருடம் பார்க்கவில்லை என்றாலும், பெயர் மறந்தாலும், முகம் மறந்தாலும் இந்த அடையாளம் மட்டும் மறக்க முடிவதில்லை இல்லையா ? அப்படி மறக்கவே முடியாத அந்த அடையாளம் நமக்கு என்ன என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா, நீங்கள் பல அடையாளங்களுடன் இந்த உலகத்தில் உலவுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா ? உங்களுக்கு என்று பிடித்த உங்களின் அடையாளம் தெரியுமா ?



இன்றும் நான் எனது வாழ்கையை திரும்பி பார்த்து, என்னை கடந்து சென்ற மனிதர்களின் அடையாளம் தேடினேன்.....அற்புதசாமி மாமாவின் அந்த முன் நெற்றி முடியின் ஸ்டைல், என்றும் ஷர்ட்டை இன் செய்து திரியும் வாசு மாமா, ஆபிஸ் யூனிபார்ம் போட்டே மனதில் இருக்கும் எனது அப்பா, சமையல் அறையில் இருந்து "உனக்கு பிடிக்குமேன்னு பண்ணினேன், சாப்பிட்டு பாரு" என்று வரும் அம்மா, சந்தனம் வைத்தே திரியும் NCC மணி, ஷேவ் செய்யும் தாத்தா, எனது மற்றும் பத்து பிள்ளைகளின் பைகளை சுமந்து வரும் ஆயா, பிரம்பு கையில் இருந்தும் அடிக்காத செல்வி டீச்சர், என்னை பார்த்தாலே கன்னம் வலிக்க கிள்ளும் நாராயணன் மாமா, கருப்பாய் குட்டையாய் படிக்காத அறிவழகன், எப்போதுமே போனில் திட்டி கொண்டே இருக்கும் பாலாஜி சார், அட முடிசிடலாம்பா என்று சொல்லும் முருகேசன், முகத்தில் புன்னகையுடன் டாடா காட்டும் புவனா என்று என் யாபக அடுக்குகளில் இருக்கும் மனிதர்களும், அவர்களின் அடையாளம் என்று மனதில் விரிகிறது. சிறிது கண்ணை மூடி நீங்களும் யோசித்து பாருங்களேன்....



எனக்கு அவர்களின் அடையாளம் என்று இது மட்டுமே, ஆனால் முதல் முதலாக எனது அப்பாவை பல அடையாளங்களுடன் பார்த்தபோதுதான் இந்த அடையாளம் என்பது மாறுபடும் என்று புரிந்தது. வீட்டில் எனக்கு அவர் ஆபிஸ் யூனிபார்ம் பார்த்து பார்த்து பழக்கப்பட்டவர், அம்மாவுக்கு கல்யாணம் ஆகும்போது பார்த்த மனிதர், ஆபீசில் பெருசு என்று செல்ல பெயர், கடைகளில் அவரை பற்றி சொல்லும்போது "அட...குண்டா, சிகப்பா ஒருத்தர் இருப்பாரே" என்று, போனில் பேசும்போது "கொஞ்சம் கட்டை வாய்ஸ் சார்..." என்று, அவரது நண்பர்களுக்கு பழகிய அந்த தலை வாரும் ஸ்டைல் என்று பல அடையாளங்கள் சுமந்து திரியும் பாசக்கார மனிதர். இது போல் நமக்கும் பல அடையாளங்கள் இல்லையா ?


ஒரு மனிதனை நாம் பொதுவாக அடையாளபடுத்துவது என்பது அவரது புறத்தோற்றம் மற்றும் அவரின் நடவடிக்கைகள் இல்லையா ?  விகடனில் ஒரு முறை  கவிதை, இன்றும் இந்த அடையாளத்தை தெள்ள தெளிவாக காட்டும் ஒன்று.... அதில் ஒருவர் அந்த வீதியில் இருக்கும் ஒருவரை தேடி கொண்டிருப்பார், அங்கு இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் அவரை பற்றி கேட்பார் பலவிதமாக, படித்தவர், ஓவியம் வரைவார், வெளிநாடெல்லாம் செல்வார், உண்மையே பேசுபவர், மனைவி அரசு பணியில் இருக்கிறார், அவரது குழந்தைகள் பெயர் என்று அள்ளி கொட்டுவார், கடைசி வரை தெரியாது என்று பதில் வரும், முடிவில் "அவருக்கு கால் ஊனம், கொஞ்சம் விந்தி விந்தி நடப்பார்" என்றவுடன்......"அட, நம்ம நொண்டி வாத்தியார்", என்று வழி சொல்வார்கள். படித்தவுடன் மனதில் அறையும் கவிதை அது.


நீங்கள் சிறிது கண்களை மூடி உங்களது அடையாளம் என்று எதை நினைகிறீர்கள் என்று சொல்ல முடியுமா ? உங்களின் அடையாளம் எது என்று உங்களுக்கே தெரியவில்லையா என்ன..... நமது அடையாளம் என்று ஒன்றும் இல்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களது மனைவியிடம், நண்பர்களிடம் பேசி பாருங்கள், உங்களது அடையாளம் தெரிய வரும். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் இத்தனை அடையாளம் வைத்திருந்தால், நீங்கள் சற்று முயன்றால் ஒரு பெரும் அடையாளம் உங்களுக்கென்று உருவாக்க முடியாதா என்ன ?

Labels : Identity, adayaalam, unique, suresh, kadalpayanangal, do you have a identity

Monday, February 25, 2013

அறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு

இதுவரை தமிழ்நாடு மற்றும் நார்த் இந்தியன் உணவு வகைகளை மட்டுமே தேடி சென்று கொண்டிருந்த எனக்கு அதை தவிர உணவு வகைகள் எதுவும் இல்லையா என்று தோன்றியதன் விளைவே இந்த உணவகம் ! கேரளா உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் அவர்களின் மீன் கறி மற்றும் வறுவல் இன்று நினைத்தாலும் எச்சில் ஊரும் உணவு வகைகள். ஒரு நல்ல கேரளா உணவகத்தை தேடியபோது எல்லோரும் எனக்கு சிபாரிசு செய்தது இந்த என்டே கேரளம். இவர்களின் உணவுகள் பாரம்பரிய கேரள உணவு வகைகளை சேர்த்தது, அது மட்டும் அல்ல நிறைய அவார்ட் எல்லாம் வாங்கி இருக்கின்றனர் !
 
 
 
இது பெங்களுரு MG ரோடு பக்கத்தில் உள்ளதால் சென்று சேருவதற்குள் டிராபிக்கில் மாட்ட வேண்டி உள்ளது. ஒரு வீட்டை எடுத்து அதை உணவகமாக மாற்றி இருப்பதால் ஒரு வீட்டிற்க்கு சென்று சாப்பிட்டது போன்றே இருந்தது.....அதுவும் பில் கொண்டு வந்து கொடுக்கும் வரைதான் !! ராஜகீயம் என்று ஒரு உணவு வகை உண்டு, அது மட்டுமே 795 ரூபாய் (அதுவும் சைவம்தான் இந்த விலை !!), எனக்கு இந்த உணவகத்தை சிபாரிசு செய்தவர்களுக்கு என்ன நன்றி கடன் (#@$%^&*####) என்றே தெரியவில்லை !!! :-( சரி, உண்ண வந்தாகிவிட்டது, சரி என்று விலையை பார்க்காமல் ஆர்டர் செய்ய ஆரம்பித்தோம்.
 
 
 
 
இங்கு இவர்கள் புட்டு, இடியாப்பம், ஆப்பம் என்று சூடாக சுட்டு தருவதால், அதை தொட்டு கொள்ள நாங்கள் திருவனந்தபுரம் கோழி பொரிச்சது, தலைச்சேரி மீன் குழம்பு என்று தொட்டு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும் என்று கூறியதால் ஆர்டர் செய்தோம். நல்ல பசியில் இருந்தபோது வந்த அந்த மீன் வறுவல் நன்கு பொன்னிறமாக வறுக்கப்பட்டு இருந்தது, அதன் பிறகு வந்த எல்லாம் மிக அருமையாக செய்யப்பட்டு இருந்தது. முக்கியமாக இந்த கோழி பொரிச்சது என்ற அந்த டிஷ் நல்ல பதத்துடன் செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் கொடுத்த அத்தனை பதார்த்தங்களும் கேரளா முறைப்படி செய்யப்பட்டு அவர்களின் உணவு வகைகளின் மேல் காதல் கொள்ள வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
 
 
 
முடிவில் பில் கொண்டு வந்து கொடுத்தபோதுதான் "ஆமாம், நாம இவ்வளவு சாப்பிட்டு இருக்க கூடாது" என்று தோன்றியது. ஒருவருக்கு 800 ரூபாய் வரை ஆனது, இருந்தாலும் அங்கு கிடைத்த உணவுகளின் சுவைக்கு  கொடுக்கலாம் என்றே தோன்றியது (நிஜமாவா, சொல்லவே இல்லை )!!
 
 
பஞ்ச் லைன் :
சுவை -   நல்ல சுவை, பாரம்பரிய கேரளா முறையில் சமைக்கிறார்கள் !

அமைப்பு - சிறிய இடம்தான், பைக்கில் சென்றால் அங்கேயே பார்க் செய்யலாம், வேலட் கார் பார்கிங் வசதி இருக்கிறது. 

பணம் -      விலை ஜாஸ்தி !! மெனு கார்டின் சில பக்கம் கீழே
கொடுத்துள்ளேன் பாருங்கள்.
 
சர்வீஸ் - நல்ல சர்வீஸ் ! கொடுக்கும் பணத்திற்கு நல்ல சர்விஸ் !

அட்ரஸ் :

MG ரோடில் இருந்து ஓல்ட் மெட்ராஸ் ரோட்டில் திரும்பும்போது உங்களது இடது பக்கத்தின் ரோட்டில் சென்றால் இதை காணலாம். சுருக்கமாக சொல்வதென்றால், மணிபால் செனட்டர் பக்கத்து ரோட்டில் இருக்கிறது.
 
 
மெனு கார்டு :


 







Labels : Arusuvai, Ente Keralam, Bengaluru kerala food, suresh, kadalpayanangal, kerala

Friday, February 22, 2013

எப்படி உருவாகிறது ? - டூத் ப்ரஷ்

இந்த பகுதிக்கு பலத்த வரவேற்ப்பு ! மிக்க நன்றி நண்பர்களே ! எல்லோரும் தினமும் உபயோகிக்கும் ஒரு பொருள், அதை எப்படி செய்கிறார்கள் என்று பார்க்கும்போது அதன் டெக்னாலஜி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது இல்லையா ? இந்த வாரம் நாம் பல் துலக்கும் டூத் பிரஷ் எப்படி செய்யபடுகிறது என்று பார்க்கலாம்.


இந்த டூத் பிரஷ் செய்வதை பார்க்கும்போது, அதன் தொழில் நுட்பம் வியப்பில் ஆழ்த்துகிறது. இன்று காலை பல் துலக்க அதை எடுக்கும்போது அதை ஒரு அறிவியல் விந்தையாக பார்க்க தொடங்கினேன் ! இந்த வீடியோ பார்க்கும்போது நீங்களும் அதை உணர்வீர்கள்.


Thursday, February 21, 2013

ஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா

திருநெல்வேலி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அல்வா இல்லையா ? இங்கு நெல்லையப்பர் கோவில் இருப்பது எல்லாம் இங்கு நினைவுக்கு வராமல் அல்வா மட்டும் அதுவும் இருட்டுக்கடை அல்வா மட்டும் நினைவுக்கு வருகிறது என்றால் அவ்வளவு சிறப்புடையதாக இருக்க வேண்டும் அல்லவா ? அதை தேடி சென்று இந்த பதிவுகளில் இட வேண்டும் என்று கிளம்பினேன். பயணம் மிக இனிதாக இருந்தது, அல்வா எனது மனது முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தது எனலாம். மதியம் இரண்டு மணிக்கு அந்த ஊருக்கு சென்று இருட்டு கடையை தேடி அலைந்த எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.





முதல் அதிர்ச்சி என்பது அந்த கடைக்கு பெயர் பலகை என்று எதுவும் இல்லை, ஆதலால் சுற்றி சுற்றி வந்து இடம் தேடி தேடி அலுத்து போனேன். கடைசியில்தான் தெரிந்தது இருட்டு கடைக்கு பெயர் பலகை என்று எதுவும் இல்லை என்பது. இரண்டாவது அதிர்ச்சி என்பது அந்த கடை மாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை மட்டுமே என்று. இந்த கடை அல்வாவிற்கு அவ்வளவு கூட்டம் இருந்தும் பாரம்பரியம் காக்க இரண்டு மணி நேரம் மட்டுமே, அதற்கே க்யூவில் நின்று வாங்கி செல்கின்றனர். மதியம் இரண்டு மணிதான் ஆகிறது என்ன செய்வது என்று அங்கு இருந்த மக்களிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.





82 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணசிங் மற்றும் அவரது மகன் பிஜீலிசிங் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த அல்வாக் கடையில் மாலை நேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அல்வா வியாபாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதனால் இந்த அல்வாக் கடையை திருநெல்வேலி மக்கள் இருட்டுக் கடை என்று அழைத்தனர். கடையைத் துவங்கிய இருவரது மரணத்திற்குப் பிறகு ஹரிசிங் என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். இப்போதும் இந்த இருட்டுக் கடையில் தங்களது பழைய நிலையிலேயே அதே மனோபாவத்தில் (செண்டிமெண்ட்) அதாவது வெறும் 40 வாட்ஸ் மின் விளக்கு வெளிச்சத்திலேயே கடையில் எவ்விதமான ஆடம்பரமும் செய்யாமல் அல்வா வியாபாரம் நடப்பதால் இந்தக் கடைக்கு இருட்டுக் கடை என்கிற பெயரே நிலையான பெயராகி விட்டது. நெல்லுக்கு பெயர் போன திருநெல்வேலியில், ராஜஸ்தான் நாட்டு கோதுமையை புகழ் பெற செய்தது என்பது வியக்கத்தக்க சாதனைதான். 



ஒரு வழியாக ஐந்தரை மணி ஆனபோது அன்று கடை திறந்தது, கூட்டம் முண்டி அடித்தது, சிலர் வரிசை ஏற்படுத்தினர். ஒரு வழியாக வேர்வை வழிய நான் அரை கிலோ அல்வா வாங்கினேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறிது நேரம் விட்டு அவர்களிடம் சென்று அல்வா செய்முறையை பார்க்க ஆர்வம் என்றேன், அவர் என்னை முறைத்து பார்த்தார். பக்கத்தில் இருந்த ஒருவர், அது அவர்களது பரம்பரை தொழில் ரகசியம் என்றார். என்ன முயன்றும் அதை பார்க்க அனுபவிக்கவில்லை. இந்த பயணத்தில் அல்வாவின் சுவையை மட்டும் உணர முடிந்தது !




டூர் போகும் சிலர் இந்த அல்வாவை வாங்க முடியாமல் திரும்புவார்கள், அவர்களுக்காக இந்த செய்தி. இந்த இருட்டு கடையின் மருமகன் தனியே பிரிந்து "விசாகம் ஸ்வீட்ஸ்"என்று கடை நடத்துகின்றார். அவரது கடையில் பிஜிலி சிங் படம் இருக்கும் ! இங்கு இருட்டு கடையின் சீக்ரெட் அறிந்து அல்வா தயார் செய்வதால், அந்த சுவை இங்கும் இருக்கும் என்கிறார்கள். சிலர்.....இருட்டு கடையை அதிக நேரம் திறக்க முடியாது, அது பாரம்பரிய பழக்கம், ஆதலால் அவர்களே இது போல் ஒரு தனி கடை திறந்து இருக்கின்றனர், எதுவாக இருந்தாலும் சுவையான அல்வா தயார் !



ஒவ்வொரு முறை இந்த ஊர் ஸ்பெஷல் அறிய பயணம் மேற்கொள்ளும்போதும் அதீத முயற்சி செய்து செய்முறை கண்டிப்பாக பார்க்க முயற்சி செய்வேன், அதற்காக பலரை பார்க்க வேண்டி வரும். ஆனால், இந்த முறை என்ன முயன்றும் இந்த திருநெல்வேலி அல்வா செய்முறையை அவர்கள் பார்க்க விடவில்லை !! சரி விடுங்கள்...... சில விஷயங்கள் ரகசியம் காக்க படவேண்டும் என்று இருக்கும்போது, அது ரகசியமாகவே இருக்கட்டும் !
 
Labels : Oor special, special, tirunelveli, alwa, iruttu kadai, suresh, kadalpayanangal

Tuesday, February 19, 2013

மறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா

திருச்சி செல்கிறவர்கள் முக்கொம்பூர் சென்றிருந்தால் இந்த தீவின் அமைப்பு பற்றி தெரியும். காவிரி ஆறு இரண்டாக பிரிந்து சற்று தூரம் சென்று மீண்டும் சேரும், அந்த பிரியும் இடமே முக்கொம்பூர் என்பார்கள், அதே போல் இந்த குறுவா தீவு கபினி ஆற்றினால் உருவாகி உள்ளது. இதன் சிறப்பம்சம் என்பது இன்னும் அந்த இயற்கையை பாதுகாத்து வைத்திருக்கின்றனர். கேரளா என்னும்போதே இயற்கை நமது கண் முன்னே வரும், அதில் இந்த இடம் வெகு சுத்தமான இயற்க்கை எனலாம்.


இந்த தீவிற்கு செல்வதற்கு சாதாரணமாக நமது ஊரு போல துடுப்பு போடும் படகு இல்லாமல், ஒரு மூங்கில் படகு, அதுவும் ஒரு கயிறை கொண்டு கடக்க வேண்டும். இந்த படகு பயணம் அந்த தீவை பற்றி எதிர்ப்பார்ப்பை மிகவும் அதிகப்படுத்துகிறது. முடிவில் நீங்கள் அந்த பகுதிக்கு சென்றவுடன் இரண்டு பக்கமும் மூங்கில் தடுப்பு கொண்டு ஒரு பாதை வருகிறது, அந்த பாதையின் முடிவில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நடக்க ஆரம்பிப்பீர்கள்....... நடந்து, நடந்து, நடந்து நீங்கள் ஏறி வந்த படகு துறை போன்று இன்னொன்னொன்று வரும்போது ஆஹா, நாமும் செல்ல வேண்டும் என்று நினைத்து நாங்கள் அந்த க்யூவில் நின்றோம். பின்னர்தான் தெரிந்தது அது தீவின் மற்றொரு பகுதி, அந்த பக்கம் இருந்து இந்த தீவுக்கு வருகிறார்கள். ஒரு போர்டு வைக்க கூடாதா !!!



அந்த இடத்திலிருந்து ஒரு பாதை செல்கிறது, அதிலும் நடக்க ஆரம்பிக்கிறீர்கள், ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு இயற்கையின் அதிசயத்தை எதிர் பார்க்கிறீர்கள், ஆனால் ஒவ்வொரு திருப்பமும் ஒரு நீண்ட பாதையை தருகிறது. களைத்து களைத்து எங்களை போல நிறைய பேர் இப்படி நடக்கிறார்கள், எதிரே வருபவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டு கேட்டு நடந்து முடிவில் ஒரு சிறு ஓடை வருகிறது. அதற்க்கு மேல் நடக்க வழி இல்லாமல் இதுதானா அந்த அதிசயம் என்று மனதை தேற்றி கொண்டு குளிக்க நினைத்தால் தண்ணி அந்த அளவு ஆழம் இல்லை. அங்கு தண்ணிக்குள் இருக்கும் வழுக்கு பாறைகளில் கால் வைத்து நடப்பது மட்டுமே ஒரு நல்ல அனுபவம் !



நீங்கள் இந்த தீவுக்குள் கால் வைக்கும்போதே அங்கு என்ன இருக்கிறது, எவ்வளவு தொலைவு நடக்க வேண்டும், அங்கு என்ன பார்க்கலாம் என்றெல்லாம் இல்லாதது ஒரு மிக பெரிய குறை. ஒரு எதிர் பார்ப்புடன் நீங்கள் ஒரு நான்கு கிலோமீட்டர் நடந்து சென்று அங்கு ஒரு சிறிய ஓடை போன்று பார்க்கும்போது ஏமாற்றம் ! ஆனால் இப்படி நடக்கும்போது உங்களது உடல் எப்படி இருக்கிறது என்பதை இந்த நீண்ட தூர நடை பயணத்தில் தெரிந்து கொள்ளலாம் !



இந்த இடத்திற்கு சென்று வர குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும், ஆகையால் நீங்கள் திரும்பி வரும்போது நடந்து நடந்து களைத்து பசியுடன் இருப்பீர்கள். இதனால் நீங்கள் செல்லும்போதே அங்கு கோட் போட்டு வண்டியை நிறுத்துவார்கள், நீங்களும் அவர்கள் ஏதோ வன காவலர்கள் போலும் என்று நிறுத்தும் போது அவர்கள் சாப்பாடிற்கு ஆர்டர் எடுப்பார்கள். ஒரு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, குறுவா தீவு சென்று வந்து நல்ல கேரளா உணவு உண்ணலாம். இது போல நிறைய உணவகங்கள் இருப்பதால் நிறுத்தி நிதானித்து முடிவெடுங்கள் !


Labels : Kuruva island, Wayanad, Suresh, Kadalpayanangal, Island, fun trip, from bangalore, short trip

Monday, February 18, 2013

அறுசுவை - பிராமின்ஸ் காபி பார்

சுமார் ஒரு வருடத்திற்க்கு முன்பு, பெங்களுருவில் நல்ல இட்லி எங்கு கிடைக்கும் என்று தேடியபோது எல்லோரும் சொன்னது இந்த பிராமின்ஸ் காபி பார். ஆனால், எனது வீட்டிலிருந்து அது மிக மிக தொலைவு என்பதாலும், அங்கு மட்டும் இட்லி என்பது அப்படி என்ன ஸ்பெஷல் என்று நினைத்தாலும் அங்கு செல்லவில்லை. ஆனால், கடந்த வாரம் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று அங்கு செல்ல, அந்த இட்லியை சாபிட்ட உடன்தான் நான் ஒரு வருடம் வரை வேஸ்ட் செய்துவிட்டேன் என்று தோன்றியது, இது மிகை இல்லை......ஒரு நிச்சயமான உண்மை.



1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று பெங்களுருவில் எல்லாராலும் விரும்பப்படும் இந்த உணவகம் மிகவும் சிறியது. கிடைப்பது என்பது இட்லி, வடை, உப்புமா, கேசரி, காபி - டீ. ஆனால், இதை சாப்பிடவும், பார்சல் கட்டி செல்லவும் அந்த ஏரியாவில் பார்கிங் புல் எனப்படும் அளவுக்கு கும்பல் என்றால் நீங்கள் அந்த இட்லிக்கு எவ்வளவு சுவை இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் அவர்கள் தரும் இட்லிக்கு சட்னி மட்டும்தான், சாம்பார் எல்லாம் இல்லை !






முதலில் பார்கிங் தேடி அலைந்து அலைந்து நிறுத்திவிட்டு சென்றால், அங்கு எனக்கு முன்னே மிக பெரிய க்யு. சிலர் பாத்திரங்கள் எல்லாம் பார்சலுக்கு கொண்டு வந்திருந்தது கண்டு சற்று மிரண்டுதான் போனேன். முடிவில் என் முறை வந்தபோது இட்லி மற்றும் காபி ஆர்டர் செய்துவிட்டு அடுத்து இட்லி க்யூவில் நின்றேன் (ஐயோ, எத்தனை க்யு ??!), என் முறை வந்தபோது இரண்டு சூடான இட்லிகளை ஒரு சிறிய பிளேட்டில் போட்டு, அதில் சட்னி ஊற்றியபோது நான் கையில் எடுத்தேன், எனக்கு முன்னே சிலர் அதை திருப்பதி தேவஸ்தான பிரசாதம் போல் கொண்டு சென்றது கண்டு எனக்கு காமெடியாக இருந்தது. இருந்தும் ஒரு விள்ளல் எடுத்து அந்த சட்னியில் தொட்டு வாயில் வைத்தபோது அங்கு கும்பல் கும்பலாக நின்று சாப்பிடுபவர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை என்று உணர்ந்தேன். நன்கு பஞ்சு போன்ற இட்லி, மிதமான காரமும், புளிப்பும் நிறைந்த தேங்காய் சட்னி என்று அருமையாக இருந்தது.






சிலர் இரண்டு இட்லிக்கு ஒரு பக்கெட் சட்னி சாபிடுகிறார்கள். இங்கு சட்னி ஊற்றுவதர்க்கென்றெ ஒருவர் உட்கார்ந்திருப்பது மக்கள் இதை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதற்கு சான்று ! முடிவில் அந்த இட்லியை சாபிட்டுவிட்டு காபி ஒன்றை குடிக்கும்போது அந்த நாள் மிகவும் இனிமையாக இருந்தது என்று தோன்றியது.










பஞ்ச் லைன் :

சுவை -   அருமையான இட்லி மற்றும் சட்னி  ! எல்லோரும் சொல்லும்போது நானும் அப்படி என்ன சுவை என்றுதான் நினைத்தேன், ஆனால் நீங்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் !

அமைப்பு -  சிறிய இடம், பைக்கில் சென்றால் அங்கேயே பார்க் செய்யலாம், கார் என்றால் இடம் கிடைப்பது கடினம். உட்கார இடம் எல்லாம் கிடையாது, நின்று கொண்டேதான் சாப்பிட வேண்டும்.

பணம் - ரொம்பவே விலை கம்மி  !! மெனு கார்டின் சில பக்கம் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.

சர்வீஸ் - மிக நீண்ட க்யு, எல்லாமே செல்ப் சர்வீஸ் ! சட்னிக்கு என்று ஒரு தனி ஆள், வேண்டும் அளவு கேட்டு வாங்கி சாப்பிடலாம் !

அட்ரஸ் :





மெனு கார்டு :



Labels : Arusuvai, Suresh, Kadalpayanangal, Bengaluru, Bangalore, Brahmins coffee bar, best idli, idly

Saturday, February 16, 2013

எப்படி உருவாகிறது ? - சிப்ஸ்

நான் எழுதும் தொடரான "ஊர் ஸ்பெஷல்" நிறைய பேரை கவர்ந்து வருகிறது என்பது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி, அதை கொண்டாடும்போதே எனது நண்பரின் மகள் ஒருவர் ஒரு முறை நாம் பல் விளக்கும் அந்த டூத் ப்ரஷ் எப்படி செய்கிறார்கள் என்று கேட்டாள். அவளுக்கு விளக்கம் சொல்ல யூ டியூப் எடுத்து பார்த்தவன் எனது மனதை அதன் செய்முறையில் பறிகொடுத்தேன் எனலாம். மனிதனின் மூளையில் உருவாகும் என்னற்ற சிந்தனைகளில் எவ்வளவு அழகு !



பொதுவாக நமது வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் எப்படி உருவாக்கபடுகிறது என்பதை கவனித்தால் நிறைய சுவாரசியமாக இருக்கிறது. உதாரணமாக பாக்கெட்டுகளில் வரும் சிப்ஸ் !! எப்படி ஒரே விதமான சுவை, தடிமன் என்று வருகிறது என்று கவனித்தால் அவ்வளவு ஆச்சர்யம். இந்த தொடரில் நீங்கள் தினமும் உபயோகபடுத்தும் பொருட்களை பார்க்கலாம், இந்த முறை "சிப்ஸ்".



Friday, February 15, 2013

நான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ

 இந்த குறும்படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன் எனலாம், பெரிதாக கதையோ, ட்விஸ்ட் என்று எதுவும் இல்லாமலேயே வசனங்களும், பின்னணி இசையையும் கொண்டு மிக நன்றாக நம்மை சிரிக்க வைக்கின்றனர். கடைசியில் அடி வாங்கியவன் சொல்லும் வசனத்தை நினைத்து நினைத்து சிரித்தேன் !



Thursday, February 14, 2013

சாகச பயணம் - பிஷ் ஸ்பா

 நான் திருச்சியில் பிறந்து வளர்ந்தவன், ஆதலால் சிறு வயதில் எனது மாமா என்னை காவிரி ஆற்றுக்கு கூட்டி கொண்டு போகும்போது, சிறு மீன்கள் எல்லாம் எனது காலை கடிக்கும்போதும், புண் இருந்தால் அதை கடிக்கும்போதும் கத்தி கூப்பாடு போடுவேன். ஆனால் இன்று காவிரி வறண்டு போனதால் இந்த பிஷ் ஸ்பா சென்று இன்று அந்த அனுபவத்தை காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற நிலைமை !! ஆனாலும் இந்த பிஷ் ஸ்பா ஒரு வித்தியாசமான அனுபவம்தான்....





சிங்கப்பூர் சென்றிருந்தபோது இதை ட்ரை செய்தேன், கால்கள் வலிக்க வலிக்க செண்டோசவில் நடந்து இளைபாரியபோது இது கண்ணில் பட்டது "பிஷ் ரிப்ளெக்ஸ்ஒலோஜி" (Fish Reflexology). கால்களை மசாஜ் செய்தால் அது ரிப்ளெக்ஸ்ஒலோஜி எனப்படும், அதையே இங்கே மீனை வைத்து செய்கிறார்கள். மீன் உங்களது கால்களில் உள்ள இறந்த செல்களை எல்லாம் தின்னுமாம், அது அப்படி தின்னும் போது உங்களது கால்களில் யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல இருக்கும் !






பொதுவாக இந்த வகை மீன்களை டாக்டர் பிஷ் என்பார்கள், அதனது உண்மையான பெயர் கர்ரா ரூபா. இது உங்களது இறந்த தோல் செல் மட்டுமே
உண்ணும் என்பதால்  பயம் வேண்டாம். இந்த வகை மீன்கள் துருக்கி, ஈரான், இராக் மற்றும் சிரியா பகுதிகளில் உள்ள ஆற்று படுகைகளில் மட்டுமே கிடைக்கும். இங்கு சிறிய மற்றும் நடுத்தர வகை மீன் தொட்டிகள் இருக்கும், நீங்கள் அதை உபயோகிக்கும் முன்பு உங்களுக்கு அதை காட்டி ஏதோ ஒரு தொட்டியில் மட்டுமே உங்களுக்கு அனுமதி, ஒரு முறை இறங்கி விட்டால் மறு முறை முடியாது என்று சொல்வார்கள். ஆகவே, இறங்கும் முன் நீங்கள் முடிவெடுக்க வேண்டும்...






இது ஒரு அனுபவம் மட்டுமே.... இதில் பலன் ஏதும் தெரிந்ததா என்றால் எனக்கு பதில் தெரியவில்லை, ஆனால் அந்த மீன்கள் நமது காலை கடிக்கும்போது எல்லாம் அந்த வறண்ட காவிரி ஆறு மனதில் வருவதை நிச்சயம் இங்கு சொல்ல வேண்டும். ஒரு முறை நீங்களும் இதை உபயோகித்து பார்க்கலாம். சிங்கப்பூர், மலேசியா செல்பவர்களுக்கு இங்கு சென்று வர பரிந்துரைக்கிறேன் !



Labels : Fish reflexology, fish spa, kadalpayanangal, fish, doctor fish, kenko, singapore, malaysia, KL