Wednesday, February 13, 2013

அம்மாவின் சேலை....

சமீபத்தில் எனது மனைவி என்னிடம் ஒரு புடவை வாங்க வேண்டும் என்று கேட்டார், ஒரு கணவனின் கடமையாக அவரை கூட்டி கொண்டு போய் கடையில் விட்டு விட்டு காத்திருந்தேன், முடிவில் இரண்டு புடவை எடுத்து கொண்டு வந்து இதில் எதை எடுக்க என்று கேட்க, நானும் எனது கருத்தை அவர் கேட்கிறாரே என்று சந்தோசப்பட்டு ஒன்றை தெரிவித்தேன், அவரது முகம் சுருங்கியது, நான் இதை இல்லை நினைச்சேன் என்று சொல்லிவிட்டு, சரி ரெண்டையும் எடுக்கறேன், உங்களுக்கு பிடிச்சது ஒன்னு, எனக்கு பிடிச்சது ஒன்னு என்று கூறியவுடன் நான் ஞே என்று விழித்தேன். அவர் பணம் செலுத்தி விட்டு வருவதற்குள் ஒரு குழந்தையின் வேர்வையை தனது புடவையின் மூலம் துடைத்து கொண்டிருந்தார் ஒரு தாய், இன்னொரு  இடத்தில ஒரு அம்மாவின் தலைப்பை பிடித்து கொண்டு விரல்
சூபிக்கொண்டிருந்தது ஒரு குழந்தை...... ஒரு புடவை என்பது நமது கலாசாரத்தில் எத்தனை எத்தனை நினைவுகளை கொடுக்கும் இல்லையா ? இன்றும் அம்மாவின் வாசம் இருக்கும் அந்த புடவை தலைப்பு மறக்க முடியுமா என்ன ? இந்த புடவைகள் எல்லாம் சேர்த்து வைக்கும் இந்த பெண்கள் இறந்தவுடன் அவை என்னவாகின்றன என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா ?? உங்கள் பாட்டி இறந்தவுடன் அவரின் அலமாரியில் இருந்த புடவை இன்று எங்கு இருக்கிறது ?


முதன் முதலில் என் நினைவில் இருப்பது என்பது அம்மா எனக்கு மூக்கு ஒழுகும்போதும் அதை அவரது புடவை தலைப்பில் துடைத்து விடுவதும், வெயில் படமால் இருக்க தலையில் போர்த்துவதும், வேர்வை துடைப்பதும், சாவியும் சில்லரையும் முடிவதும், இரவினில் குளிர்கிறது என்றால் போர்த்துவதும், வெக்கையாய் இருக்கும் சமயங்களில் விசிறியாய் மாற்றி காற்று வரவைப்பதும், மாலையில் நனைந்தால் தலை துவட்டுவதும், சில சமயங்களில் ரயில் வண்டி போல விளையாடுவதற்கும் என்று இந்த புடவை பல அவதாரங்கள் எடுக்கும். சில புடவைகள் கிழிந்து போகும்போது எடுக்கும் அவதாரங்கள் கணக்கில் அடங்காது..... ஜன்னல் திரைசீலை, கரித்துணி, அழுக்கு துடைக்க, மூக்கு சிந்த, அப்பாவின் சைக்கிள் துடைக்க, காயம் ஏற்பட்டால் கட்டு போட, குளிர் காலங்களில் தரையில் போட, கால் மிதியடி, சமயங்களில் வடகம் போடும்போது காக்கை விரட்ட என்று நீளும் !


இன்றும் நினைவில் இருக்கிறது அம்மா அவரது கல்யாண புடவையை அவ்வளவு ஆசையுடன் பாதுகாத்ததை நினைத்தால்..... அந்த புடவையை அவர் ஒருமுறை கூட கட்டி நான் பார்த்ததில்லை, ஆனால் அவர் அடிக்கடி எடுத்து ஆசையுடன் பார்த்ததை நான் பார்த்திருக்கிறேன். அவருடன் புடவை கடைக்கு மட்டும் போக நான் விருப்ப பட மாட்டேன்..... அவர் ஒரு புடவை எடுக்க குறைந்தது ஐந்து கடையாவது ஏறி இறங்குவார். அவ்வளவு பொறுமை அந்த வயதிலேயே எனக்கு இருக்காது. இன்றும் அவர் எடுத்த புடவைகள் எல்லாம் பீரோவின் ஒரு தட்டில் மட்டும் இருந்து இன்று அந்த பீரோ முழுவதுமே ஆக்கிரமித்து, இப்போது எனது அப்பாவின் பீரோவிலும் இடம் கேட்க்க ஆரம்பித்து விட்டது ! அட... இவ்வளவு புடவை இருக்கிறதே, சில புடவைகள் எல்லாம் மிகவும் பழைய டிசைன், ஆகவே தூக்கி போடலாமே
என்றால் என்னிடம் அன்று முழுவதும் பேச மாட்டார்.... அந்த புடவையின்  பின்னே அவருக்கு ஒரு கதை இருக்கலாம் ?!



அன்று என் அத்தையின் வீட்டுக்கு சென்றிருந்தபோது அவரது புடவைகள் மட்டும் என்று ஒரு மூன்று பீரோவில் வைத்திருந்தார், அவரது புடவைகளை எல்லாம் ஓல்ட் பேஷன் என்று அவரது மகள் கிண்டல் செய்தார். அப்படியென்றால் இந்த புடவைகள் எல்லாம் அவரது காலத்திற்கு பிறகு என்னவாகும் ? ஒவ்வொரு புடவைகளும் ஒவ்வொரு நினைவுகள் இல்லையா..... அந்த புடவைகள் இந்த நவ நாகரிக உடைகள் காலத்தில் கால் மிதியடியாய் போகுமோ, அன்று நாம் அதை மிதிக்கும்போது அவரின்  நினைவுகளை மிதிப்பது போலாகுமா ? இதை படிக்கும் நீங்கள் உங்களது வீட்டு பெண்களிடம் இந்த கேள்வியை கேளுங்களேன்....... வரும் விடை என்பது குப்பைக்கு என்று இருந்தால், அதை மானம் மறைக்க ஒரு அனாதை இல்லத்திற்கு வருடம் இரண்டு என்று கொடுக்கலாமே ?


 

 
Labels : Ennangal, Suresh, Kadalpayanangal, Mothers saree, saree, sari, donate sarees, donate


8 comments:

  1. ஒவ்வொரு புடவைகளும் ஒவ்வொரு நினைவுகள்

    ReplyDelete
    Replies
    1. ஆம், நீங்கள் சொல்வது மிக சரி. ஒவ்வொரு புடைவையும் ஒவ்வொரு நினைவுகள், அது என்றுமே அழிவதில்லை......தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  2. சின்னக்கா வாங்கிக் குவித்த, ஆனால் ஓரிரு முறைகள் மட்டுமே கட்டிய புடவைகள் அனைத்தும் அக்கா இறந்ததும் அவரிடத்துக்கு வந்த மாமாவின் புதுமனைவியால் ஒரு வருடத்துக்குள் கட்டிக்கிழிக்கப்பட்டன:(

    ReplyDelete
    Replies
    1. ஒரு சில வரிகளில் ஒருவரின் வாழ்வையும், உங்களது எண்ணத்தையும் அருமையாக சொல்லியுள்ளீர்கள்....அருமை !

      Delete
  3. இப்போதெல்லாம் எங்கே...? புடவை விலைக்கும் புடவைக்கும் மதிப்பேயில்லை...

    முடிவில் நல்ல கருத்து...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார், சமீபத்தில் ரெடிமேட் புடவை என்று ஒன்று பார்த்தேன், ஜஸ்ட் பேன்ட் போல ஜிப் வைத்து தைதிருந்தார்கள்......அட கிரகமே என்று இருந்தது !

      //தங்கள் தளத்தில் எல்லா பதிவுகளையும் தொகுத்து தந்திருந்தது எனக்கு ஜாக்பாட் விருந்து !!...நன்றி //

      Delete
  4. எங்கம்மா பாலிசி.மூன்று வருடத்திய சேலைகள் மட்டுமே வைத்து கொள்வார்.வேலைக்கு வருபவர்,விளக்குமாறு விற்பவர்,கட்டிட வேலை செய்பவர் என்று பார்த்து பார்த்து கொடுத்து விடுவார்.எங்களிடமும் கேட்டு அதையும் வாங்கி கொடுத்து விடுவார்.பட்டு சேலைகள் சொந்தக்காரகளில் வறுமையில் இருப்பவர்களுக்கு கொடுத்து விடுவார்.எனவே பீரோ நிறைய சான்ஸ் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நல்ல பாலிசி மேடம், ஆனால் நிறைய பேர் இதை செய்வதில்லை, அதன் பிரதிபலிப்பே எனது பதிவு....நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

      Delete