Wednesday, February 27, 2013

உங்களின் அடையாளம் என்ன ?

எல்லா மனிதர்களுக்கும் ஒரு அடையாளம் உண்டு இல்லையா. பெங்களுருவின் பரபரப்பு நிறைந்த சாலையில் நான் சென்று கொண்டிருந்தபோது சட்டென்று நான் தூரத்தில் தெரிந்த ஒருவரை கவனிக்க நேர்ந்தது, பார்த்ததுமே மனதில் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது, ஆனால் யாபகம் வர மறுத்தது. அந்த பரபரப்பு நிறைந்த சாலையில் கூட்டத்தை பிளந்து கொண்டு அவரிடம் சென்று ஒரு நிமிடம் முகம் பார்த்து, என் யாபக அடுக்குகளில் தேடி பார்த்து "அட....சம்பத்து நீயா, என்னடா ஆளே மாறிட்ட" என்றவுடன்தான் அவருக்கும் என்னை அடையாளம் தெரிந்தது ! எப்படி என்னை கண்டுபிடித்தாய் என்றைய என் நண்பனின் கேள்விக்கு, எப்பவும் இந்த முதுகை சாய்ச்சி நடப்பியே ஒரு ஸ்டைலா, அது இன்னும் யாபகம் இருக்கு..... அதுதான் இந்த கூட்டத்தில தனியா தெரிந்ததே என்று பார்த்து பதினைந்து வருடம் ஆன நண்பனிடம் புன்னகையுடன் கூறினேன். யோசித்து பார்த்தால் எல்லோருக்கும் ஒரு அடையாளம் என்று ஒன்றை நாம் வைக்கிறோம் இல்லையா, பல வருடம் பார்க்கவில்லை என்றாலும், பெயர் மறந்தாலும், முகம் மறந்தாலும் இந்த அடையாளம் மட்டும் மறக்க முடிவதில்லை இல்லையா ? அப்படி மறக்கவே முடியாத அந்த அடையாளம் நமக்கு என்ன என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா, நீங்கள் பல அடையாளங்களுடன் இந்த உலகத்தில் உலவுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா ? உங்களுக்கு என்று பிடித்த உங்களின் அடையாளம் தெரியுமா ?இன்றும் நான் எனது வாழ்கையை திரும்பி பார்த்து, என்னை கடந்து சென்ற மனிதர்களின் அடையாளம் தேடினேன்.....அற்புதசாமி மாமாவின் அந்த முன் நெற்றி முடியின் ஸ்டைல், என்றும் ஷர்ட்டை இன் செய்து திரியும் வாசு மாமா, ஆபிஸ் யூனிபார்ம் போட்டே மனதில் இருக்கும் எனது அப்பா, சமையல் அறையில் இருந்து "உனக்கு பிடிக்குமேன்னு பண்ணினேன், சாப்பிட்டு பாரு" என்று வரும் அம்மா, சந்தனம் வைத்தே திரியும் NCC மணி, ஷேவ் செய்யும் தாத்தா, எனது மற்றும் பத்து பிள்ளைகளின் பைகளை சுமந்து வரும் ஆயா, பிரம்பு கையில் இருந்தும் அடிக்காத செல்வி டீச்சர், என்னை பார்த்தாலே கன்னம் வலிக்க கிள்ளும் நாராயணன் மாமா, கருப்பாய் குட்டையாய் படிக்காத அறிவழகன், எப்போதுமே போனில் திட்டி கொண்டே இருக்கும் பாலாஜி சார், அட முடிசிடலாம்பா என்று சொல்லும் முருகேசன், முகத்தில் புன்னகையுடன் டாடா காட்டும் புவனா என்று என் யாபக அடுக்குகளில் இருக்கும் மனிதர்களும், அவர்களின் அடையாளம் என்று மனதில் விரிகிறது. சிறிது கண்ணை மூடி நீங்களும் யோசித்து பாருங்களேன்....எனக்கு அவர்களின் அடையாளம் என்று இது மட்டுமே, ஆனால் முதல் முதலாக எனது அப்பாவை பல அடையாளங்களுடன் பார்த்தபோதுதான் இந்த அடையாளம் என்பது மாறுபடும் என்று புரிந்தது. வீட்டில் எனக்கு அவர் ஆபிஸ் யூனிபார்ம் பார்த்து பார்த்து பழக்கப்பட்டவர், அம்மாவுக்கு கல்யாணம் ஆகும்போது பார்த்த மனிதர், ஆபீசில் பெருசு என்று செல்ல பெயர், கடைகளில் அவரை பற்றி சொல்லும்போது "அட...குண்டா, சிகப்பா ஒருத்தர் இருப்பாரே" என்று, போனில் பேசும்போது "கொஞ்சம் கட்டை வாய்ஸ் சார்..." என்று, அவரது நண்பர்களுக்கு பழகிய அந்த தலை வாரும் ஸ்டைல் என்று பல அடையாளங்கள் சுமந்து திரியும் பாசக்கார மனிதர். இது போல் நமக்கும் பல அடையாளங்கள் இல்லையா ?


ஒரு மனிதனை நாம் பொதுவாக அடையாளபடுத்துவது என்பது அவரது புறத்தோற்றம் மற்றும் அவரின் நடவடிக்கைகள் இல்லையா ?  விகடனில் ஒரு முறை  கவிதை, இன்றும் இந்த அடையாளத்தை தெள்ள தெளிவாக காட்டும் ஒன்று.... அதில் ஒருவர் அந்த வீதியில் இருக்கும் ஒருவரை தேடி கொண்டிருப்பார், அங்கு இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் அவரை பற்றி கேட்பார் பலவிதமாக, படித்தவர், ஓவியம் வரைவார், வெளிநாடெல்லாம் செல்வார், உண்மையே பேசுபவர், மனைவி அரசு பணியில் இருக்கிறார், அவரது குழந்தைகள் பெயர் என்று அள்ளி கொட்டுவார், கடைசி வரை தெரியாது என்று பதில் வரும், முடிவில் "அவருக்கு கால் ஊனம், கொஞ்சம் விந்தி விந்தி நடப்பார்" என்றவுடன்......"அட, நம்ம நொண்டி வாத்தியார்", என்று வழி சொல்வார்கள். படித்தவுடன் மனதில் அறையும் கவிதை அது.


நீங்கள் சிறிது கண்களை மூடி உங்களது அடையாளம் என்று எதை நினைகிறீர்கள் என்று சொல்ல முடியுமா ? உங்களின் அடையாளம் எது என்று உங்களுக்கே தெரியவில்லையா என்ன..... நமது அடையாளம் என்று ஒன்றும் இல்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களது மனைவியிடம், நண்பர்களிடம் பேசி பாருங்கள், உங்களது அடையாளம் தெரிய வரும். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் இத்தனை அடையாளம் வைத்திருந்தால், நீங்கள் சற்று முயன்றால் ஒரு பெரும் அடையாளம் உங்களுக்கென்று உருவாக்க முடியாதா என்ன ?

Labels : Identity, adayaalam, unique, suresh, kadalpayanangal, do you have a identity

8 comments:

 1. கண்டிப்பாக... சிரிப்பே எனது அடையாளம்...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக திண்டுக்கல்லும், உங்களது சிரிப்பும் உங்களது அடையாளம்தான் !! நன்றி, தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் !

   Delete
 2. ஹா ஹா ஹா !! இப்படி எல்லோருக்கும் ஒரு பாவனை இருக்கும் நண்பரே! அழகா சொல்லிருக்கீங்க, அருமையான பதிவு .

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆகாஷ் !! நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்ச்சி, தொடர்ந்து கருத்துக்களை அளியுங்கள் !

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே !

   Delete
 4. Replies
  1. உங்களது அடையாளம் என்பது எனக்கு "stay " என்னும் வார்த்தைதான், ரசிக்கும் வார்த்தைகள் ! நன்றி !

   Delete