Friday, March 22, 2013

கடல் பயணங்கள் - சிறிது இளைப்பாறுவோம் !!

நான் கடந்த மூன்று மாதங்களாக தள்ளி போட்டுக்கொண்டே வந்த என்னுடைய அனைத்து அலுவலக பயணங்களும், இப்போது ஆரம்பித்து விட்டது. நேர மாற்றங்களும், அலுவலக வேலைகளும் அடுத்த ஒரு மாதத்திற்கு என்னை வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. இதனால், ஏப்ரல் கடைசி வரை கடல் பயணங்கள் சிறிது நங்கூரம் இட்டு ஓய்வெடுக்க போகிறது. எழுதுவதற்கு ஆயிரம், ஆயிரம் பதிவுகள் உள்ளன, ஆனால் நேரம் என்பது இல்லை !!


கடந்த ஆண்டு, நான் விளையாட்டாக ஆரம்பித்தது இந்த வலைப்பூ, அதற்க்கு இவ்வளவு ஆதரவும், நண்பர்களும் கிடைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. மீண்டும் இந்த பயணம் மே மாதத்தில் இருந்து மிகவும் புதிதாக, இளமையாக, தகவல் களஞ்சியமாக மாறி வரும். இப்போது இருப்பதை விட, இன்னும் மெருகேறி வரும் என்பது நிச்சயம். அதுவரை சற்று நீங்களும் ஓய்வெடுங்களேன்......!!மே மாதத்தில் இருந்து.......
 
  • தென் ஆப்ரிக்கா தங்க சுரங்கம் பயணம் 
  • நீர் மூழ்கி கப்பல் பயணம் 
  • பெங்களுரின் 99 வகை பரோட்டா, ஹை-டெக் உணவகம், இன்னும் பல....
  • இதுவரை நீங்கள் கேட்டிராத தொழில் நுட்பங்கள் 
  • ஊர் ஸ்பெஷல் - ஓசூர் ரோஜா, சாத்தூர் காரசேவு, சின்னாளபட்டி சேலை 
  • உயரம் தொடுவோம் - ஜப்பான், பெல்ஜியம், தென் ஆப்ரிகா, ஆஸ்திரேலியாவின் உயரமான கட்டிடங்கள் 
  • நீங்கள் மிகவும் விரும்பிய "எப்படி உருவாகிறது" இன்னும் புதிதாக 
  • சிறு பிள்ளையாவோம் - சேமியா ஐஸ், சக்கர முட்டாய் !!
  • மறக்க முடியா பயணத்தில் மனதை மயக்கும் இடம் !
  • உங்களிடத்தில் புன்னகை வரவைக்கும் குறும்படங்கள் 
இப்படி நிறைய நிறைய பதிவுகளுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன், நன்றி நண்பர்களே ! சில நேரங்களில் காத்திருந்தால் கிடைப்பது இன்னும் அழகாக இருக்குமே.....!!


 Labels : Kadalpayanangal, suresh, will be back soon

Wednesday, March 20, 2013

டெக்னாலஜி - 3டி பிரிண்டர்

யாபகபடுத்தி பாருங்கள், சுமார் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு எல்லாம் ஏதாவது ஒன்றை எழுதி எடுக்க வேண்டும் என்றால் டைப் ரைட்டிங் என்று இருந்தது, பின்னர் பிரிண்ட் எடுக்கலாம் என்று இருந்தது, இதன் அடுத்த தலைமுறை டெக்னாலஜி என்பது 3டி பிரிண்டர். என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா.... இன்னும் சிறிது காலத்தில் வீதிக்கு வீதி, முக்கியமாக தமிழ்நாட்டில் "இங்கு கரண்ட் இல்லாமலேயே 3டி பிரிண்டிங் செய்து தரப்படும் !"என்று எழுதி இருப்பதை விரைவில் பார்க்கலாம் !ஒரு பொருளை நீங்கள் அப்படியே இன்னொரு பிரதி எடுத்து விட முடியும் என்பது எவ்வளவு ஆச்சர்யம். அதுவும் எப்படிப்பட்ட நுணுக்கமான பொருளாக இருந்தாலும் இதால் செய்ய முடியும். இதை சற்று விரிவு படுத்தினால்..... வீட்டிற்க்கு நீங்கள் முதல் முதலாக வாங்கிய மெடல் அனுப்பலாம், குழந்தைக்கு பொம்மையை அனுப்பலாம், அப்பாவிற்கு வாக்கிங் ஸ்டிக், அம்மாவிற்கு குக்கர் கைப்பிடி என்று எல்லாம் அனுப்பலாம் போல ?! ஆஹா.... என்ன ஒன்னு வாங்கி வைக்கலாமா ?!


Saturday, March 16, 2013

சோலை டாக்கீஸ் - ட்ரம்ஸ் சிவமணி

 ட்ரம்ஸ் சிவமணி - இந்த பெயர் எல்லோருக்கும் தெரியும், அதுவும் அவரது அயராத உழைப்பு, அவர் வெளிபடுத்தும் இசையில் தெரியும் என்றால் அது மிகையில்லை. இளையராஜாவின் பாடல்களில் இவரது ட்ரம்ஸ் இசை தனியாக தெரியும், அதுவே எனக்கு இதை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை கிளப்பியது. ஒரு கட்டத்தில் இவரை பற்றி தெரிந்தபோது ஆச்சர்யம் ஆனது. மனிதர் பட்டையை கிளப்புவார். உதாரணதிற்கு சொல்ல வேண்டும் என்றால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.... இளையராஜா பாடும்போது அந்த ட்ரம்ஸ் இசை வெளியில் தெரியாது, ஆனால் அவர் சட்டென்று நிறுத்திவிட்டு தாளம் சொல்லும்போது சிவமணி அதற்க்கு ஏற்றார்போல போடும் ட்ரம்ஸ் இசை ஒரு அற்புதம் எனலாம்.

இவரை பற்றியும், இவரது வாழ்கையை பற்றியும் சுமார் 25 நிமிடத்திற்கு இந்த வீடியோவில் பேசி இருக்கிறார், ஆர்வம் உள்ளவர்கள் இதை பார்க்கலாம்....

Friday, March 15, 2013

டெக்னாலஜி - கார் கண்ணாடி

காரில் செல்லும்போது எல்லாம் சில அசௌகரியங்கள் இருக்கும், அதுவும் இந்த குழந்தைகளை உங்களோடு கூட்டி கொண்டு செல்லும்போது அவர்கள் பொழுதுபோக்கு இல்லாமல் நம்மை படுத்தும்பாடு இருக்கிறதே.... கொஞ்ச நஞ்சம் இல்லை போங்கள் ! இதற்க்கு எல்லாம் தீர்வு விரைவில் வந்து கொண்டு இருக்கிறது என்பதை இந்த வீடியோ பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள் !உங்களது கார் கண்ணாடியில் குழந்தைகள் விளையாட கேம் இருந்தாலோ, வெளியில் தெரியும் காட்சிகள் நன்றாக இல்லையென்றால் அந்த காட்சியை மாற்றுவதாகவும், அதிலேயே மெயில் செக் செய்வது என்றெல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் ? ஜெனரல் மோட்டோர்ஸ் நிறுவனம் இதை முயற்சி செய்து கொண்டிருக்கிறது, விரைவில் உங்களது கார் கண்ணாடியில் நீங்கள் விரும்புவற்றை பார்க்கலாம் !!Labels : Technology, car window, Suresh, Kadalpayanangal, interactive car window

Thursday, March 14, 2013

உயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்

மவுண்ட் பியூஜி என்பது ஜப்பானில் இருக்கும் ஒரு உறங்கும் எரிமலை எனலாம். நான் ஜப்பான் சென்று இருந்தபோது இந்த மலையை எனது ஹோட்டல் ரூமிலிருந்து தினமும் பார்ப்பேன். குளிர் காலங்களில் மட்டும் தொப்பி போட்டது போல ஐஸ் அந்த மலையின் மீது இருக்கும், மற்ற காலங்களில் அது வெறும் மலை போன்றே இருக்கும். இரு முறை செல்லும்போதும் எனக்கு அங்கு செல்ல முடியவில்லை, ஆதலால் மூன்றாவது முறை அங்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். மறக்க முடியாத பயணம் அது என்றால் மிகையாகது !

உறங்கும் எரிமலையான இந்த மவுண்ட் பியூஜி, கடைசியாக 1707 - 08ம் ஆண்டில் வெடித்தது, ஆனால் இன்றும் இதை ஒரு பயத்துடனே பார்கின்றனர் ஜப்பானிய மக்கள். இது 3776 மீட்டர் உயரம் உடைய எரிமலை. ஜப்பானில் மூன்று புண்ணிய மலைகளான டேட், ஹகு மற்றும் பியூஜி மலைகளில் ஒன்று. நாங்கள் ஒரு காரில் டோக்கியோவில் இருந்து பயணித்து இங்கு சென்றடைந்தோம். காரில் மலை மீது ஏறும்போதே நீங்கள் அங்கு மரங்கள் எல்லாம் குறைவாக இருப்பதை காணலாம், இது எரிமலை பகுதியாதலால் இயற்க்கை மிக குறைவு.


2020 மீட்டர் தொலைவில் ஒரு இடத்தில நீங்கள் நிறுத்தி அங்கு இருக்கும் இயற்க்கை அழகை பார்க்கலாம். அங்கு இருக்கும் கடைகளில் ஜப்பானிய உணவுகளையும், டீயும் சாப்பிடலாம். இதன் பின் மேலே செல்ல செல்ல குளிரை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். நான் இங்கே சென்றிருந்தபோது உறைநிலையில் இருந்து ஏழு டிகிரி குளிர் இருந்தது ! ஒரு மணி கூண்டு போல அங்கு குளிரை காண்பிக்கும் கடிகாரம் இருந்தது வித்யாசமாக இருந்தது.
மேலே பார்பதற்கு என்று ஒரு கோவிலும், ஒரு கடையும் உள்ளது மற்றபடி அந்த மலையை பார்ப்பது என்பது ஒரு மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஜப்பான் என்றாலே இந்த மலையை காண்பிக்கும்போது, அதை பார்க்கும் திருப்தி கொடுக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒரு உயரமான இடத்தில இருந்து ஜப்பான் நகரை பார்க்கும்போது ஒரு தனி மகிழ்ச்சிதான் !Labels : japan, Mount Fuji, Mt. Fuji, Suresh, Kadalpayanangal, Tallest, Mountain, Fuji

Wednesday, March 13, 2013

ஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்

சர்க்கரை பொங்கல் என்னும்போது நமது நாவில் நீர் ஊரும், அந்த சுவை நமக்கு வெல்லதினால் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் இரண்டு வகை வெல்லங்கள் உண்டு, மண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம். கைகளால் பிடித்து உருட்டப்பட்ட வெல்லம் மண்டை வெல்லம் எனவும், அச்சுக்களில் ஊற்றி வடிவமைக்கப்பட்ட வெல்லம், அச்சு வெல்லம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு நாம் பார்க்கபோவது அச்சு வெல்லம் !! பொதுவாக இந்த வெல்லம் செய்வதற்கு தேவைபடுவது கரும்பு. இதனால் கரும்பு அதிகம் உற்பத்தி ஆகும் பழனி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் பகுதிகளில் இந்த வெல்ல உற்பத்தி ஆலைகள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும், ஒரு ஊரில் எல்லோரும் இதை குடிசைத்தொழில் போல செய்வது என்பது பள்ளபாளையம் என்னும் ஊரில்தான் !
வெல்லம் (இலங்கை வழக்கு: சர்க்கரை, கருப்பட்டி) எனப்படுவது பதனிடப்படாத சர்க்கரை ஆகும். ஆங்கிலத்தில் ஜக்கரி என அழைக்கப்படுகிறது. வெல்லம் இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும்.

100 கிராம் வெல்லத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:
சக்தி
383 கலோரிகள்
ஈரப்பதம்
3.9 கிராம்
புரதம்
0.4 கிராம்
கொழுப்பு
0.1 கிராம்
தாதுக்கள்
0.6 கிராம்
மாவுச்சத்து (carbohydrates)
95 கிராம்
சுண்ணம் (calcium)
80 மில்லி கிராம்
எரியம் (phosphorus)
40 மில்லி கிராம்
இரும்பு
2.64 மில்லி கிராம்வெல்லம் செய்வதற்கு கரும்பு தேவை, இதில் இந்த கரும்பு சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500 - ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 - ம் ஆண்டில் சீனாவுக்குப் பரவியது. 'சர்க்கரை' என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். கி.பி. 636 -ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.  இது 'கிராமினோ' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். தென் ஆசியாவில் சூடான வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய, உண்பதற்கு இனிக்கும் சர்க்கரை நிறைந்த ஒரு இடை தட்ப வெப்ப நிலைத் தாவரம் ஆகும்.வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு பயிர் செழித்து வளரும். இப்படி கரும்பு பற்றி சொல்லி கொண்டே போகலாம், ஆனால் இந்த பகுதியில் வெல்லம் அல்லவா நாம் தெரிந்துகொள்ள வேண்டும், ஆகையால் நிற்க !!உடுமலைபேட்டை மற்றும் சுற்று பகுதிகளில் இந்த கரும்பு விவசாயம் நன்கு இருப்பதால் இந்த ஊரை சுற்றி நிறைய இடங்களில் நீங்கள் இந்த வெல்லம் காய்ச்சுவதை பார்க்கலாம். மண்டை வெல்லம் செய்வதற்கு பெயர் பெற்றது நெய்காரப்பட்டி (இதை பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்), ஆனால் அச்சு வெல்லம் என்றால் எல்லோரும் சொல்வது இந்த பள்ளபாளையம். ஊருக்குள் நுழையும்போதே உங்களுக்கு முதலில் தெரிவது எங்கெங்கும் கரும்பு சக்கைகள், பின்னர் உங்களது நாசியில் வெல்ல பாகு வாசம் !ஒரு டன் கரும்பு என்பது ஆயிரம் கிலோ அது இன்றைக்கு 2900 ரூபாய், அதுவும் இந்த கரும்புகள் ஆலை கரும்பு வகைகள், அதாவது வெள்ளையாக இருக்கும். கருப்பாக நாம் பொங்கலுக்கு சாப்பிடும் கரும்புகள் இந்த வெல்லம் செய்வதற்கு பயன்படாது என்பதை கவனிக்க.  இப்படி வாங்கப்படும் ஒரு டன் கரும்பிலிரிந்து நான்கு மூட்டை வெல்லம் வரும், ஒவ்வொரு மூட்டையும் 30 கிலோ எடை இருக்கும் ( 1 சிப்பம் = 30 கிலோ), இது இன்றைய தேதியில் 1800 ரூபாய் ஒரு மூட்டை !.
முதலில் கரும்பு கிடைத்தவுடன் அதன் தரத்தை சோதிக்கின்றனர். அனுபவத்தில் இருந்து அது எத்தனை மூட்டை வெல்லம் கிடைக்கும் என்று தெரியும், பின்னர் ஒரு மெசினில் இந்த கரும்பை கொடுத்து சாறு எடுக்கின்றனர். இப்படி எடுக்கப்படும் சாற்றை பின்னர் ஒரு பெரிய தொட்டியில் கொட்டுகின்றனர். இந்த தொட்டியில் இருந்து கசடுகள் நீக்கப்பட்டு சிறிது சிறிதாக ஒரு பெரிய வாணலியில் இந்த பாகு வந்து சேர்க்கிறது. சுமார் 200 டிகிரி வரை இது சூடாக்கபடுகிறது.

இந்த வாணலியில் பாகு கொதிநிலை வந்த பிறகு சில கெமிக்கல்களை சேர்கின்றனர். இது அச்சு வெல்லம் நன்கு வருவதற்கும், விரைவில் இருகுவதர்க்கும் உதவுகிறது என்கின்றனர். அடிக்கடி பதம் பார்த்து பார்த்து ஒரு நிலை வந்தபிறகு இந்த வாணலியை அப்படியே ஒரு கயிறின் உதவி கொண்டு சாய்கின்றனர். இதற்க்கு முன்னர் இந்த அச்சு வெல்லம் செய்வதற்கு உரிய அச்சை தரையினில் பரப்பி வைக்கின்றனர். இந்த அச்சில் பிஸ்டன் பம்ப் போன்று அந்த அச்சின் ஓட்டையில் ஒரு குச்சி இருந்தது, அது ஏன் என்று கேட்க அவர்கள் என்னை பொறுத்திருந்து பார்க்க சொன்னனர்.சுட சுட அந்த வெல்ல பாகு கொட்டியவுடன், அதில் இருந்து அந்த பாகை அச்சில் ஊற்றுகின்றனர். இப்படி அந்த பாகு கெட்டியாவதர்க்கு முன் பரபரவென்று செய்கின்றனர். பின்னர் சிறிது நேரம் சென்று அந்த ஆசை அப்படியே தலை கீழாக கவிழ்க்க அந்த குச்சியை இப்போது தட்டும்போது அது அந்த வெல்லத்தை வெளியே தள்ளுகிறது !! இப்போது சூடாக இருக்கும் ஒரு அச்சு வெல்லத்தை எனக்கு தந்து அவர்கள் என்னை பார்க்க, அதை நான் சுவைத்த போது அவர்களின் கண்களில் பேரானந்தம், எனக்கு அந்த சுவையினாலும், இதை நேரில் பார்த்தாலும் பரமானந்தம் !!

Labels : Oor special, pallapaalayam, achu vellam, vellam, Suresh, Kadalpayanangal

Tuesday, March 12, 2013

குறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை

 நித்திலன் என்னும் ஒருவர் இயக்கிய குறும்படம் இது. படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போலவே இந்த படம் கவிதைதான். என்ன அருமையான கதை, சாலமன் என்று பெயர், ஆனால் வரைவது இந்து கடவுள் படம் என்று சிறு சிறு மனதை வருடும் காட்சிகள். நீங்கள் இந்த குறும்படத்தை பார்க்கும்போது கண்ணில் நீர் துளிர்க்க பார்ப்பது என்பது தவிர்க்க முடியாதது !இந்த கவிதை போன்ற படம் ஒரு தகப்பனின் பாசத்தை காட்டுவது என்று இருந்தாலும், அவர் ஒரு காட்சியில் தனது மகனை தேடி வருவது போன்ற காட்சியில் அவர்களின் உரையாடல்கள் முடியும்போது கால்களை காட்டி கேமரா நகர்த்தி, அங்கு எல்லோரும் அதை கவனித்து விட்டார்கள் என்று சொல்வது என்பது எல்லாம் அருமை. நித்திலன்...... விரைவில் இயக்குனராக வாழ்த்துக்கள் !Monday, March 11, 2013

அறுசுவை - பெங்களுரு MTR

நிறைய பேர் இந்த பதிவை படித்துவிட்டு என்னிடம் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு - "MTR இல் மசாலா தோசை சாப்பிட்டு இருகிறீர்களா, அது என்ன பெங்களுருவில் இருந்துக்கொண்டு இன்னும் அதை சாப்பிடலை ?" என்பது. அது மிகவும் தூரத்தில் இருந்ததால் செல்ல முடியாமல் இருந்தது. முதல் முறை அவ்வளவு தூரம் சென்ற பிறகு, அங்கு மசாலா தோசை காலியாகி விட்டது. இதற்காகவேயும், நமது வாசகர்களுக்காகவும் இரண்டாவது முறை அங்கு சென்றிருந்தேன். இந்த எட்டு வருடத்தில் நான் பெங்களுருவில் நிறைய இடத்தில மசாலா தோசை சாப்பிட்டு இருந்தாலும், இந்த MTR மசாலா தோசைக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது புரிந்தது. எல்லோரும் சொல்லும்போது அந்த சுவை அவ்வளவு நன்றாக இருக்கும் என்பதும் புரிந்தது.முதலில் இந்த இடத்திற்கு சென்ற போது இதை கண்டு பிடிக்க முடியாமல் சிரமப்பட்டேன், ஏனென்றால் நாம் நினைப்பது போல ஒரு பெரிய நுழைவாயிலுடன், கண்ணை பறிக்கும் போர்டு எல்லாம் இல்லாமல் ஒரு வீடு போல இருந்தது. இதனால் அந்த ஏரியாவை சுற்றி வர நேர்ந்தது, இருந்தும் கடைசியில் கண்டுபிடித்து உள்ளே சென்றவுடனே எல்லா டேபிளிலும் மசாலா தோசை என்றால் என்ன சொல்வது ?! உட்கார்ந்தவுடன் மசாலா தோசை ஒன்று சொல்லிவிட்டு அங்கு இருந்த சர்வரிடம் கதைக்கையில் தெரிந்தது
இவர்களின் கதை.


 

1924 இல் உடுப்பியில் இருந்து வந்து யஜ்ன நாராயண மையா மற்றும் கனப்பையா மையா சகோதரர்கள் ஆரம்பித்தது இந்த மாவல்லி டிபன் ரூம் எனப்படும் MTR !முதலில் ஆரம்பித்தபோது இதன் பெயர் பிராமன்ஸ் காபி பார், ஆனால் 1960இல் இது இன்றைய பெயருக்கு வந்தது. இவர்களது உணவுகள் இங்கு மிகவும் பிரபலம். பல பல அமைச்சர்களும், நடிகர்களும் இதற்க்கு அடிமை !
முடிவில் நான் மிகவும் எதிர் பார்த்திருந்த மசாலா தோசையும் வந்தது, சின்ன தட்டில் மிகவும் முறுகலாக, கொஞ்சம் சாம்பார் மற்றும் மிகவும் சிறிய கப் ஒன்றில் நெய் என்று சுண்டி இழுத்தது. ஒரு வாய் பிட்டு வாயில் வைக்கும்போதே உங்களுக்கு தெரிந்துவிடும் நீங்கள் மற்ற இடங்களில் சாப்பிடும் மசாலா தோசை எல்லாம் வேஸ்ட் என்று !! முடிவில் ஒரு நல்ல காபி ஒன்று குடித்து முடித்தபோது "இந்த நாள் இனிய நாள்" என்று தோன்றியது !!


பஞ்ச் லைன் :

சுவை - அருமையான மசாலா தோசை மற்றும் காபி  ! இவர்களிடம் ரவா இட்லியும் மிகவும் அருமை ! எல்லோரும் சொல்லும்போது நானும் அப்படி என்ன சுவை என்றுதான் நினைத்தேன், ஆனால் நீங்கள் கண்டிப்பாக சாப்பிட்டால்தான் புரியும் !

அமைப்பு -  பெரிய  இடம் ஆனால் கும்பல் ஜாஸ்தி, பார்கிங் என்பது இங்கு குதிரை கொம்பு ! கொஞ்சம் தள்ளி சென்றால் உங்களது இடத்தும், வலதும் ஒரு இடத்தில் பெய்டு பார்கிங் உள்ளது. கார், பைக் எல்லாம் அங்கு பார்க் செய்யலாம்.

பணம் - நல்ல உணவிற்கு கொடுக்கலாம் சார் !! மெனு கார்டின் சில பக்கம் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.

சர்வீஸ் - கூட்டம் அதிகம் இருந்தால் சர்வீஸ் தாமதம் ஆகிறது. உட்காரவே இடம் கிடைக்க டைம் ஆகிறது.


அட்ரஸ் :

பெங்களுருவில் இவர்களின் இடங்கள் பற்றி அறிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்..... MTR அட்ரஸ்.
மெனு கார்டு :


Labels : Arusuvai, Suresh, Kadalpayanangal, Bengaluru, Bangalore, MTR, best masala dosa, rava idli, Mavalli Tiffin Rooms