Wednesday, March 6, 2013

உங்களை எரிப்பார்களா, புதைபார்களா ?

கடந்த வாரம் எனது அத்தை இறந்து விட்டார், பெங்களுருவில் இருந்து பத்து மணி நேர பயணத்தில் இருக்கிறது அந்த ஊர். துக்கத்துடன் நானும் எனது குடும்பமும் இரவினில் காரில் கிளம்பினோம். வழியெங்கும் அவர் என்னை சிறு வயதில் இருந்து இன்று வரை பாசத்துடன் பேசியது எல்லாம் நினைவுக்கு வந்தது. ஒரு வழியாக நாங்கள் அங்கு சென்றவுடன் ஊரில் இருந்த சொந்த பந்தங்கள் எல்லாம் சேர்த்தோம், அவரை நல்லடக்கம் செய்ய எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களை நான் முன் நின்று செய்தேன். இதுவரை எனது தந்தை இந்த சம்பிரதாயங்களை மற்ற நேரங்களில் செய்து வந்ததால், இன்று நான் அதை எடுத்து செய்தேன். சாஸ்திர சாப்பாடு, குளிப்பாடுவதர்க்கு ஆள் ஏற்பாடு செய்வது, சுடுகாடிற்கு குழி வெட்ட பணம், வந்தவர்களுக்கு சாப்பாடு என்று எல்லோரும் துரித கதியில் இயங்கி அவரை நல்லடக்கம் செய்தோம். அன்பான அவரை அந்த தெருவே வழியனுப்பியது. அன்று இரவு தூங்கும்போது தோன்றியது, இங்கு பணம் சம்பாதிக்க என்று நாம் எல்லாம் அமெரிக்கா, டெல்லி என்று ஊர்களுக்கு செல்கிறோமே, அங்கு நமக்கு ஏதோனும் நிகழ்ந்து விட்டால், பக்கத்து வீட்டு ஆட்களையே அறியாமல் வாழும் நமக்கு எத்தனை பேர் வருவார்கள் ? என்னதான் சாஸ்திரம், சம்பிரதாயம், நாத்திகன் என்று போர்வை போர்த்தினாலும், மனதை தொட்டு சொல்லுங்கள் உங்களை அடக்கம் செய்யும்போது உங்களது மதம் என்பது
வருகிறதா இல்லையா ?நமது சாஸ்திர சம்பிரதாயம் எல்லாம் தெரியாமல் நம்மை எரிப்பார்களோ ? என்ன வாழ்க்கை இது ??
நினைத்து பாருங்கள், சாவை சந்தோசமாக மேள தாளத்துடன் கொண்டாடும் மக்கள் நாம், இந்த பதிவை படிக்கும் பலரும் உங்களது கிராமத்தில் இருந்து நகரங்களுக்கோ, இல்லை வெளிநாட்டிலோ வாசிப்பீர்கள், எதுவுமே நிலையில்லாத இந்த வாழ்வில் ஏதேனும் நிகழ்ந்து விட்டால் கருப்பு கோட்டு போட்டு கொண்டு அமெரிக்காவில் பீட்டர் வந்து சவப்பெட்டி தயார் செய்வானோ ? அப்போது சாஸ்திர சாப்பாடு, பங்காளி சேருவது, பங்காளிகள் சமையல் எல்லாம் அவனுக்கு தெரியுமா ? நமது புகழையும், பெருமையையும் சொல்லி ஒப்பாரி வைப்பார்களா ஜப்பானில் வசித்தால் ? ரோடு எல்லாம் பூக்கள் தூவி, குத்தாட்டம் போட்டு செல்ல முடியுமா ஐரோப்பாவில் ? அங்காளி பங்காளி எல்லாம் அப்போது வந்து தோள் கொடுப்பார்களா ? எல்லோரது விலாசமும் ஒரு மொபைல் நம்பரில் இருக்கும்போது அப்போது நாட் ரீச்சபிள் என்று சொன்னால் என்னாவது ? இறந்த வீட்டில் குழாய் ரேடியோ கட்டி பாட்டு போட முடியுமா மும்பையில் ? சொந்த ஊரில் சென்றுதான் புதைக்க வேண்டும் என்ற ஆசை, செலவை பார்க்கும்போது.... அந்த புதைக்கும் குழியில் அந்த ஆசைதான் முதலில் போகுமோ ?மனிதன் ஒரு சமூக விலங்கு, அதுவும் நகரங்களில் வசிக்கும் மனிதன் என்பவன் அந்த சமூகத்தில் வசிக்கும் ஒரு விலங்கு ! அவனது தெருவில் ஒரு ஆள் இறந்து விட்டால் அச்சச்சோ என்று சொல்லி விட்டு டிவியில் மானாட மயிலாட பார்ப்பான். அந்த மனிதர் இந்த நகர வாழ்க்கையில், அந்த தெருவில் வசித்தாலும் தெரிந்தவராக இருந்தால் இன்னும் அதிசயம் !! பொருள் தேடி ஊரை விட்டு புலம் பெயரும் மனிதர்கள் இன்று அதிகம், அந்த மனிதர்களின் கடைசி காலத்தில் தனது வழக்கப்படி எல்லாம் முறைப்படி நடக்க வேண்டும் என்றுதான் எண்ணுவான், இறப்பது என்பது நிகழும்போது எனது நண்பர்கள், உறவினர்கள் வந்து மேள தாளத்துடன்தான் அந்த கடைசி பயணம் இருக்க வேண்டும் என்று தோன்றுவது இயல்பு இல்லையா ? யோசித்து பாருங்கள், உங்களது பக்கத்து வீட்டுக்காரரை எத்தனை முறை நீங்கள் இதுவரை பார்த்திருப்பீர்கள்...... அவருக்கு உங்களது அருமை, பெருமை தெரியுமா ? அவர் ஏதேனும் நிகழ்ந்தால் வருவாரா ?
நான் எனது ஊரில் இருந்த வரை, அங்கு நிகழ்ந்த நல்லவற்றிற்கு பங்காளிகள் சண்டை காரணமாக வரவில்லை எனினும், அங்கு ஒரு மரணம் நிகழும்போது எல்லாவற்றையும் உதறி விட்டு வருவதை பார்த்திருக்கிறேன். தோள் கொடுத்து, துக்கம் பகிர்ந்து கண்ணீர் விடுவதை பார்த்திருக்கிறேன். அந்த துக்கத்திலும் உறவு சேர்வது என்பது நமது கலாசாரம் ! அந்த காலத்தில் போன் என்பது மிகவும் அரிது, ஆனால் ஒருவர் இறந்தால் உறவுகள் அடித்து பிடித்து ஓடி வரும், இன்று உங்களது விரல் நுனியில் பொத்தானை அமுக்கினால் அவர்களுடன் பேசலாம் இருந்ததும் வருமா உறவுகள் ? உதாரனதிர்க்கே கேட்கிறேன்..... உங்களின் உற்ற தோழியாய் / தோழனாய், சமயத்தில் உதவியவராய், உங்களது சுக துக்கங்களை பகிர்ந்து இருந்த ஒரு உறவினர் ஒருவர் இறந்து விட்டார், நீங்களோ கடல் கடந்த தேசத்தில் இருக்கிறீர்கள்..... நிஜத்தை சொல்லுங்கள் நீங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து அவரை நல்லடக்கம் செய்வீர்களா, இல்லையா ? பணம் உங்களது முன், உங்கள் அலுவலக வேலைகள் உங்களின் கண் முன்னே வருமா இல்லையா ? அடுத்த விடுமுறைக்கு அவரது குடும்பத்தை பார்த்து ஆறுதல் சொல்லலாமா என்று மனதினுள் ஓடுமா இல்லையா ? அவருக்கே இந்த நிலை என்றால் அந்த தேசத்தில் நமது மரணம் நிகழ்ந்தால், நமது கதி என்ன ?மரணம் என்பது கண்டு நாம் மிரள மிரள போவதில்லை, இந்த பதிவும் மரணத்தை காட்டி பயமுறுத்த இல்லை. வரும் பணம் அனைத்தும் ஏதேனும் ஒரு வகை செலவு செய்து வாழும் வாழ்க்கையில், அந்த மரணம் நிகழும்போது ஒரு உறவிருந்தும் அனாதை பிணமாக அல்லவா நாம் இருப்போம். அந்த நிலை நினைத்து வருந்திக்கொண்டே எனது வீடு சென்று பைக் நிறுத்திவிட்டு வீடு நோக்கி செல்லும்போது எனது பக்கத்தில் வந்து கொண்டிருந்தார் எனது பக்கத்து வீட்டுக்காரர். இதுவரை அவரிடம் வெகு சிறிதாக சிந்திய வார்த்தைகளும், புன்னகைகளும் யாபகம் வந்தது அந்நேரம் !! அவரிடம் "இன்னைக்கு வெயில் கொஞ்சம் ஜாஸ்தி இல்லையா ??!........." என்று வெளியில் எனது உதடு கூறினாலும், மனதினுள் "நான் இறந்தா நீங்க கண்டிப்பா வரணும்" என்று எனது மனது நினைத்ததை நான் எப்படி கூற ?? Labels : Ennangal, Suresh, Kadalpayanangal, Life, how your life will be

12 comments:

 1. தங்களின் அத்தையின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  சிந்திக்க வேண்டிய கேள்விகள் பல...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் ! எனது பதிவு உங்களது மனதில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தாலே வெற்றிதான் !

   Delete
 2. பதிவில் நிறைய கேள்விகள். நன்றாக சிந்தித்து இருக்கிறீர்கள். வலைப் பதிவிலும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். நமக்கு நெருங்கிய ஒருவர் இறந்தவுடன், மயானத்தில் காரியங்களைச் செய்தவுடன் எல்லோருக்கும் தோன்றும் எண்ணம்தான் இது. இதனை “மயான வைராக்கியம்” என்பார்கள்.

  எல்லாம் உடம்பில் உயிர் இருக்கும் வரைதான். இறந்த பின்பு அந்த உடம்பினை , நன்றாகத் தூய்மை செய்து அடக்கம் செய்தால் என்ன? அல்லது கண்ட இடத்திற் போட்டால் என்ன? ஒன்றுமே இல்லை. – இந்தக் கருத்தைச் சொல்லும் நாலடியார் பாடல் ஒன்று ....

  நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
  பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
  தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
  கூத்தன் புறப்பட்டக் கால்.
  - நாலடியார் ( பாடல் எண்.26 )

  தங்களது அத்தையின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்! மீண்டும் சகஜ நிலைக்கு வாருங்கள். உங்களால் முடிந்த நன்மைகளைச் செய்யுங்கள்.


  ReplyDelete
  Replies
  1. "மயான வைராக்கியம்"....சரியான வார்த்தைதான். நீங்கள் சொல்வது போல உயிர் போன பின்பு ஆட்டம் எதற்கு ! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 3. எனது ஆழ்ந்த இரங்கல்
  ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  ReplyDelete
 4. தங்களின் அத்தையின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  ReplyDelete
 5. நண்பரே தங்களது நிறைய பதிவுகளை படித்தேன், ரசித்தேன். ஆனால் மரணம் பற்றிய தங்களது இந்த பதிவு மிகச்சிறந்த, என்பதைவிட நாம் வாழும் இந்த பொருள் சார்ந்த வாழ்க்கையை காட்டிலும் உறவு சார்ந்த வாழ்க்கையை பற்றிய என் சமீபகால சிந்தனையை தூண்டியது போல் உணர்வு. அதிலும் சென்ற மாதம் எதிர்பாராத சாலை விபத்தொன்றில் என் அன்புத்தந்தையை பறிகொடுத்த தகவல் எனக்கு கிடைத்து காரில் கோவையிலிருந்து மதுரை சென்று சேர்வதற்குள் என் சுற்றம் தாங்கள் சொன்ன சாஸ்திர சம்பிரதாயம் அனைத்தையும் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தது. அப்பொழுது எனக்கு ஏற்ப்பட்ட இதே சிந்தனை, தங்கள் பதிவை படித்தவுடன் என் மனம் கனக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கணேஷ் குமார் ! என்னுடைய எழுத்து ஒரு சிந்தனையை தூண்டுகிறது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய எண்ணங்கள் பகுதிகளில் எனது மனதில் எழும் கேள்வியையே அலசி எழுதுகிறேன், அது உங்களை சிந்திக்க வைத்தது கண்டு மகிழ்கிறேன்.

   Delete