Friday, May 31, 2013

ஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - 3/5)

என்ன இடையில் வேற ஒரு பதிவு போட்டதும் அடுத்த பதிவு எப்ப அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சிடீங்களா ?? திண்டுக்கல் தனபாலன் சார் உரிமையோட திட்டியதால் அடுத்த வாரம் போடனுமின்னு நினைச்சி இருந்ததை இன்னைக்கு போடறேன் !! சென்ற பதிவில் சுங்குடி சேலையில் டிசைன் செய்வதை பார்த்தீர்கள், அது ஒரு வகை, இன்னொரு வகை மெழுகு பிரிண்டிங். அதாவது புடவையில் இருக்கும் டிசைன் நீங்கள் துவைக்க, துவைக்க சீக்கிரத்தில் அழிந்து விடும், அதனால் இந்த மெழுகு பிரிண்டிங் செய்யும்போது புடவை பிரிண்டிங் சீக்கிரம் அழியாது, புடவையும் பள பளவென்று இருக்கும். அதை பற்றி சற்று விரிவாக பார்ப்போமே !!





மேலே உள்ள படத்தில் பார்த்தால் உங்களுக்கு புரியும், நான் காட்டி கொண்டிருப்பதுதான் அந்த மெழுகு, இது நாம் வீட்டில் உபயோகிப்பது இல்லை, சிறிது அடர்த்தியானது. மூட்டை மூட்டையாய் இருக்கும் அந்த அறையை காட்டினால் நீங்கள் மயங்கி விடுவீர்கள் !! இந்த மெழுகு டிசைன் செய்ய கீழே மெலிதான, சல்லிசான மணல் இருக்கும், இந்த மணல் மெழுகு பதிப்பை வைத்து அழுத்தும்போது அது ஒட்டாமல் தடுக்கும், மேலே உள்ள படத்தில் இடது புறத்தில் பாருங்கள் தெரியும். படத்தில் டிசைன் செய்பவருக்கு இடது பக்கத்தில் ஒரு சதுர வடிவமாய் தெரிவதுதான் உருக்கிய மெழுகு, உங்களுக்கு இந்த படத்தில் தெரியாதது அந்த மெழுகை அந்த நிலையில் வைத்திருக்கும் அடுப்பு. மெழுகு என்பது சீக்கிரமே இறுகிவிடும், அதனால் எப்போதும் அடுப்பு வைத்து அதை உருக்கி கொண்டே இருக்க வேண்டும். அந்த அடுப்பின் பக்கத்தில் நான் உட்க்கார்ந்து பார்த்தபோது தெரிந்தது, ஒரு ஐந்து நிமிடத்தில் எனது வலது புறத்தில் இடுப்பு கன்றிவிட்டது, அவ்வளவு சூடு !!  இந்த மெழுகு டிசைன் இரண்டு வகையாக செய்கிறார்கள், ஒன்று டிசைன் செய்த புடவைக்கு மெழுகு மேலே பிரிண்ட் செய்வது, இன்னொன்று மெழுகில் கலர் சேர்த்து வெள்ளை துணியில் பிரிண்ட் செய்வது. கீழே நீங்கள் பார்ப்பது இரண்டாவது வகை...... அந்த வெள்ளை துணியில் டிசைன் உருவாவதை கவனியுங்கள் !!



 
அடுத்த கேள்வி உங்களது மனதில் வருவது என்ன என்று எனக்கு தெரியும், அது எப்படி அந்த டிசைன் போடுகிறார்கள், அந்த கட்டை எப்படி இருக்கும் என்பதுதானே. இதோ கீழே உள்ள படத்தினை பார்த்தால் உங்களுக்கு தெரியும். சிறிய ஆணிகளை கொண்டு இப்படி வேண்டிய டிசைன் செய்து வைத்து கொள்கிறார்கள். மெழுகை இதை வைத்து தொடும்போது வெகு சிறிய அளவே அதன் முனையில் எடுப்பதால் அது துணியில் பரவுவது தடுக்கபடுகிறது.

 
சரி, இது போல எத்தனை டிசைன் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். அங்கு நிறைய அறைகள் இருந்தன, அப்படி ஒரு அறையின் உள்ளே நுழைந்தபோது அங்கு கண்ட டிசைன் கண்டு மலைப்பாய் இருந்தது. நான் இங்கே காண்பிப்பது கொஞ்சம்தான், தரையில், மேலே, கீழே என்று ஆயிரம் ஆயிரம் டிசைன் !! பாருங்கள் ஒரு பூக்களோடு உங்களை பார்ப்பது வேறு யார் நானேதான் ! நன்றாக இருக்கிறதா...... நான் கேட்பது பூக்களை அல்ல !!

 

 
இந்த மெழுகு பிரிண்டிங்கில் இன்னொரு வகை என்பது மெழுகு பெயிண்டிங் ! அதாவது சில புடவைகளுக்கு தலைப்பு அல்லது பார்டரில் சில சமயங்களில் டிசைன் வேறு மாதிரியாக இருக்கும், அல்லது பார்டர் பெரிதாக இருக்கும். இந்த சமயங்களில் இது போல அச்சு வைத்து செய்வது முடியாது என்பதால் பிரஷ் கொண்டு மெழுகு கோட்டிங் கொடுப்பதுண்டு. கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது அந்த வகை.
 
 
சரி இப்படி எவ்வளவு புடவைகள் இவர்கள் தினமும் செய்வார்கள் என்ற கேள்விக்கு பதில்தான் கீழே உள்ள படம். மூட்டை மூட்டையாய் துணிகள் குவிந்து கிடக்க தினமும் அந்த உருகும் மெழுகில் உங்களின் புடவைகளுக்கு பளபளப்பு ஏற்றுவது இவர்களின் வேலை.


அடுத்த முறை உங்களின் காட்டன் புடவை மெழுகு கொண்டு செய்யபட்டிருந்தால், அந்த மெழுகு சூட்டில் அவர்களின் வலது புறம் வெந்து இருந்ததை நினைத்து கொள்ளுங்கள், அதுவே இவர்கள் செய்யும் இந்த வேலைக்கு சன்மானமாய் அமையும்.
 
அடுத்தது என்ன ??.......கஞ்சி போட்டு அயன் செய்ய வேண்டும் !
 
Labels : Kadalpayanangal, Suresh, oor special, chinnalapatti sarees, Sungudi sarees
 

Thursday, May 30, 2013

உயரம் தொடுவோம் - தென் ஆப்ரிக்காவின் கார்ல்டன் டவர்

எந்த நாட்டிற்க்கு சென்றாலும் அந்த நாட்டின் உயரமான கட்டிடம் சென்று பார்ப்பது என்பது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. இந்த முறை தென் ஆப்ரிக்காவின் ஒரு நகரான ஜோஹன்நேஸ்பர்க் செல்வதற்கு முன்னரே இந்த கார்ல்டன் டவர் பற்றி தெரிந்து வைத்துக்கொண்டேன். பின்னர் ஒரு வார இறுதியில் அங்கு சென்றேன் ! இந்த ஜோஹன்நேஸ்பர்க் நகரில் நிற வெறி என்பது பட்டும் படாமலும் இருக்கத்தான் செய்கிறது. நான் இங்கு என்னுடைய காரில் செல்கிறேன் என்னும்போதே எல்லோரும் இல்லை வேண்டாம் என்று தடுத்தனர். பின்னர் டாக்ஸி எடுத்துக்கொண்டு அங்கு சென்றவுடன்தான் புரிந்தது ஏன்  என்று, அங்கு உள்ள மக்களில் சிலர் மிகவும் முரடர்களாய் இருக்கின்றனர், இதனால் நமக்கு பிரச்சனை என்றுதான் சொல்லி இருக்கின்றனர். சில நேரங்களில் நீங்கள் காரில் சிக்னல் அருகே நின்று கொண்டிருக்கும்போது, சட்டென்று கண்ணாடியை ஒரு கூர்மையான பொருள் கொண்டு உடைத்து, உங்களிடம் அப்போது என்ன இருக்கிறதோ அதை எடுத்து செல்கின்றனர் என்றபோது மனதில் ஒரு பயம் இருந்தது உண்மை !

 
ஜோஹன்நேஸ்பர்க் என்னும் இந்த நகரம் "சிட்டி ஆப் கோல்ட்" - தங்க நகரம் என்று அழைக்கபடுகிறது. முன்னர் ஒரு காலத்தில் இங்கு தங்கம் கிடைப்பது கண்டு பிரிட்டிஷ், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் இங்கு படையெடுத்து வந்தன, அதனால் இந்த பெயர். இன்றும் இங்கு பல இடங்களில் மலை போல மணல் குன்றுகள் உண்டு, அது எல்லாம் தங்கதிர்க்காக தோண்டப்பட்ட குழியின் மணல். இந்த கார்ல்டன் டவர் நகரத்தின் நடுவில் இருக்கும் மிக பிரம்மாண்டமான, உயரமான கட்டிடம். இந்த கட்டிடத்தின் உச்சியில் இருந்து பார்க்கும்போது உங்களுக்கு அந்த மணல் குன்றுகள் தெரியும் !


 
இது ஐம்பது மாடி கொண்ட கட்டிடம்.இது 1960இல் அமெரிக்க வல்லுனர்களால் கட்டப்பட்ட கட்டிடம். நான் இதற்க்கு முன்னர் சென்ற எல்லா உயரமான கட்டிடத்தின் முன்னே உள்ளே செல்வதற்கு வரிசையில் நிறைய பேர் காத்திருப்பார்கள், ஆனால் இங்கோ காற்று வாங்கியது ! நாங்கள் உள்ளே டிக்கெட் வாங்கி கொண்டு நுழைந்தபோது அந்த லிப்ட் மெதுவாக பயணித்து ஐம்பதாவது மாடி என்று காட்டியபோது சந்தோசமாக இருந்தது. பொதுவாக இங்கே நிற வெறி இருந்தாலும், நெல்சன் மண்டேலாவால் இன்று கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் சம உரிமை இன்று கொடுக்கபட்டிருக்கிறது.


 
லிப்டை விட்டு வெளியே வந்தபோது என் கண்ணின் முன்னே விரிந்து இருந்தது ஜோஹன்நேஸ்பர்க் நகரம். உயரமான கட்டிடத்தில் இருந்து பார்க்கும்போது நமக்கு பறப்பது போலவும், நமது கர்வம் எல்லாம் கீழே மனிதர்களை பார்க்கும்போது அழிவது போலவும் இருக்கும் எனக்கு. தரையில் இருந்து பார்க்கும்போது நான் பெரியவன் என்று தெரியும், ஆனால் மேலே சென்று பார்த்தால்தான் தெரியும் நாம் எவ்வளவு சின்னவர்கள் என்று !

 
உங்கள் கண்ணின் முன்னே ஒரு நகரம் சிறு சிறு பெட்டிகளாக தெரியும் வீடுகளாய் தெரியும் போது கண்டிப்பாக ஆனந்தம்தானே ! முன்னொரு காலத்தில் இந்த இடமெல்லாம் தங்கம் தோண்டும் இடமாக, காட்டு பகுதியாக இருந்து..... இன்று உங்களின் கண் முன்னே தெரிவது எல்லாம் ஒரு அதிசயம்தான் ! மேலே இந்த கட்டிடம் கட்டும்போது எடுத்த படங்களுடன் நமது காந்தியின் படமும் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 
முடிவில் சுற்றி பார்த்து விட்டு கீழே இறங்கும்போதுதான் தெரிந்தது, அந்த இடத்தில் நிறைய திருட்டுக்களும், சண்டைகளும் நடப்பதால் இங்கு வருவதற்கு நிறைய பேர் யோசிக்கிறார்கள் என்று. எங்களுக்கு சுற்றி காண்பித்த அந்த நபர் விடை பெறும்போது இது போல உங்க நாட்டில் ஏதாவது கட்டிடம் இருக்கா என்று கேட்க நான் மனதினுள் LIC  பில்டிங் என்று ஒன்று உண்டு என்று மனதினுள் கூறிக்கொண்டேன் !!

 
Labels : Kadalpayanangal, Suresh, Tallest building, Africa, Johannesburg, Carlton tower

Wednesday, May 29, 2013

ஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - 2/4)

சென்ற வாரம் இந்த சின்னாளபட்டி புடவைகள் எப்படி சாயம் இடபடுகிறது என்று பார்த்தீர்கள், பலர் கமெண்ட் எழுதியும், sms செய்தும் பாராட்டியது என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  அந்த பகுதியை மிஸ் செய்தவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கலாம்......சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - 1/4). இந்த வாரம் இந்த புடவைகளுக்கு எப்படி டிசைன் செய்யபடுகிறது என்று பார்க்கலாம். பொதுவாக நீங்கள் புடவை கடைக்கு சென்றால் கலர் எல்லாம் ஒன்றாக இருந்தாலும் இந்த டிசைன் மட்டும் நிறைய இருக்கும். புடவை கடையில் அவ்வளவு டிசைன் இருந்தால், அப்போ டிசைன் செய்யும் இடத்தில அந்த கருவிகள் எவ்வளவு இருக்கும் ??
 
 
 
முதலில் இவர்களுக்கு டிசைன் என்பது கடை முதலாளிகள் அல்லது இவர்களே இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்து உருவாக்குகின்றனர். இதில் ஒரு சௌகரியம் என்னவென்றால் ஒரு கடைக்கு அந்த டிசைன் பிடிக்கவில்லை என்றால் இன்னொரு கடை எடுத்துக்கொள்ளும் !! அதனால் எதுவும் தங்காது !! முதலில் இந்த டிசைன் கிடைத்த பிறகு ஒரு செவ்வக வடிவ இரும்பு பிரேமில் ஒரு விதமான பிளாஸ்டிக் துணியை நன்கு மெசின் கொண்டு இழுத்து கட்டுகின்றனர். பின்னர் ஒரு இருட்டு ரூமினில் அந்த பிரேமை கவிழ்த்து அந்த டிசைனை சரியாக அதன் மேல் வைக்கின்றனர். பின்னர் அதன் மேல் கூழாங்கல் போன்ற ஒன்றை வைத்து பரப்புகின்றனர்.
 
 
 
கீழே ஒரு லைட் வைத்து வெளிச்சம் கொடுக்க, அந்த வெளிச்சம் சூட்டை இந்த பிளாஸ்டிக் மீது பரப்புகின்றது. அறிவியல் விதிப்படி எங்கு கருப்பு இருக்கிறதோ அங்கு அதிகம் சூடு பரவுகிறது, இதனால் அங்கு அந்த டிசைன் உருவாகிறது. இப்படி டிசைன் உருவான பிறகு சில நேரங்களில் சரியாக இல்லையென்றால் அங்கு இருக்கும் டிசைன் செய்பவர் ஒருவர் சில கெமிக்கல் மற்றும் சில கருவிகளை கொண்டு அதை சரி செய்கிறார்.
 
 
 
 
 
 
பின்னர் அவர்களின் சௌகரியத்திற்கு அந்த பிரேம் மீது ஒரு நம்பர் எழுதி விடுகின்றனர். இது எதற்கு என்கிறீர்களா?? கீழே உள்ள படத்தை பாருங்கள்......இவ்வளவு பிரேம் இருந்தால் எப்படி பின்னர் கண்டு பிடிப்பது ?
 
 
 
 
பின்னர் இன்னோர் இடத்தில் அந்த டிசைன் எந்த கலரில் வர வேண்டும் என்று முடிவு செய்து அதற்க்கு கலர் ரெடி செய்கின்றனர். அந்த கலர் செய்யும் இடத்தில்தான் உங்கள் அன்பு சுரேஷ் நின்றிருக்கிறேன் (அண்ணே.....ஒரு விளம்பரம் !!?!).
 
 
அது ரெடி செய்தவுடன் அவர்கள் அந்த புடவையை ஒரு பெரிய டேபிள் மீது வைத்து பின் செய்கின்றனர். யோசித்து பாருங்கள்...... அங்கு இதுபோல நிறைய டேபிள் மற்றும் ஆட்கள். வேலை நேரத்தில் அவர்கள் செயல்படும் வேகத்தை பார்த்து அசந்து போனேன். முதலில் அந்த பிரேமை சரியாக வைத்து பார்க்கிறார்கள். முன்னரே சொன்னது போல, அந்த கருப்பு இருந்த இடத்தில் இருந்து அந்த பிளாஸ்டிக் போய் விட்டது, இதனால் அங்கு வெறும் நூல்கள்தான், இதனால் இவர்கள் போடும் கலர் எங்கெங்கு இப்படி நூல் இருக்கிறதோ அங்கு மட்டும் வரும், மற்ற இடத்தில் போகாது. அவர்கள் இதன் மேலே ஒரு கட்டையை வைத்து இந்த கலர் கொடுக்கும்போது டிசைன் உருவாவதை பாருங்கள் !
 
 
 
 
 
இப்படி டிசைன் வந்து கொண்டே இருக்கும், சில நேரங்களில் சில புடவைகளுக்கு ஸ்பெஷல் டிசைன் தேவைப்படும், அதாவது ஒரு சின்ன டிசைன் மட்டும் என்று. அதற்க்கு என்று தனி பிரேம் உண்டு. கீழே இருக்கும் படத்தை பாருங்கள், இது ஒரே ஒரு டிசைன் மட்டுமே, இதை தேவை படும்போது மட்டும் உபயோகபடுத்துவார்கள்.
 


ஓகே, இப்போது புடவை டிசைன் செய்தாகிவிட்டது.....அடுத்தது என்ன ?? புடவைக்கு கஞ்சி போட்டு அயன் செய்ய வேண்டும். என்ன ஆர்வம் இன்னும் அதிகமாகுதா, அடுத்த வாரம் வரை பொறுங்களேன் !

Labels : Oor special, District special, chinnalapatti sarees, Suresh, kadalpayanangal, Part 2

 

Tuesday, May 28, 2013

ஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - 1/4)

மிகவும் சந்தோசமாக இருக்கிறது, இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியை நிறைய பேர் படிப்பது. அப்படி படிப்பவர்கள் என்னிடம் கேட்க்கும் கேள்வி, இதற்காக எவ்வளவு தூரம் செல்வீர்கள், எவ்வளவு மெனகெடுவீர்கல்  என்பது.......அதுவும்
இப்படி நிறைய நாடுகள் சுற்றும்போது எப்படி உங்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது என்பதும், இதற்க்கு எனது பதில் என்பது இதை நீங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிந்தால் அதில் கிடைக்கும் சந்தோசமே என்னை இவ்வளவு செய்ய வைக்கிறது என்பதே !! சென்ற முறை ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பற்றி எழுதி இருந்தேன், இதை படித்த ஒருவர் மிகுந்த சந்தோசமாக எனக்கு போன் செய்து அதெப்படி உங்களுக்கு மட்டும் அந்த பால்கோவா செய்யும் இடத்திற்கு அனுமதி கிடைத்தது, யாருமே உள்ளே விட மாட்டார்களே என்றார், உண்மைதான் பல இடங்களில் என்னை கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கின்றனர், அப்போதெல்லாம் நான் பொறுமையாக அவர்களிடம் பேசி அதை தெரிந்து கொண்டிருக்கிறேன். நேர்மையுடன் பேசும்போது அவர்களும் எனது எண்ணத்தை புரிந்து கொள்கின்றனர்........இந்த முறை இதுவரை இல்லாத அளவுக்கு சிரமம் எடுத்து உங்களுக்கு சின்னாளபட்டி சேலை செய்யும் முறையும், அதன் பெருமையும் !! படியுங்கள், ரசியுங்கள்.......தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி !!
 
*********************************************************************************
 
சின்னாளபட்டி - இந்த பெயரை கேட்கும்போது இந்த சந்ததியினருக்கு எதுவும் நினைவுக்கு வருமோ என்னவோ, ஆனால் பலருக்கு சுங்குடி சேலை என்று பளிச்சென்று நினைவுக்கு வரும். திண்டுக்கல்லிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஊர். ஊருக்குள் நுழையும்போதே உங்களுக்கு புரிந்துவிடும் பார்க்கும் இடங்களில் எல்லாம் புடவை கடைகள் !! இங்கிருந்துதான் காட்டன் புடவைகள் இந்தியாவில் பல பகுதிகளுக்கும் செல்கிறது என்பதும், நமது ஊரில் இருக்கும் எல்லா புடவை கடைகளும் இங்குதான் இந்த புடவைகளை வாங்குகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா ? ஒரு புடவை இங்கு எப்படி உருவாகிறது என்பது இதுவரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா ?? வாருங்கள் பார்க்கலாம்......
 
 
 
 
இந்த சின்னாளபட்டி சுங்குடி சேலை பதிவை மட்டும் நான்கு பகுதிகளாக பிரித்துள்ளேன், இல்லையென்றால் இதுவே ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு வரும் !!
 
முதல் பகுதி சாயம் போடுவது,
இரண்டாவது பகுதி புடவை டிசைன்,
மூன்றாவது பகுதி கஞ்சி போடுவது,
நான்காவது பகுதி என்பது புடவையை தேய்ப்பது மற்றும் வியாபாரம் !!
சிறப்பு பதிப்பாக.....மெழுகு சேலை பிரிண்டிங் முறையும் உங்களுக்காக !
 
இங்கு நாம் பார்க்க போவது முதல் பகுதி - சாயம் போடுதல். முதலில் இவர்களுக்கு துணி வருவது வெள்ளை கலரில். இந்த துணிகள் பண்டல் பண்டலாக வந்து இறங்குகிறது...... பின்னர் ஊரில் எல்லோரும் புடவை செய்தால் எப்படி இருக்கும் ?! இது வரும்போதே புடவையில் ஓரத்தில் டிசைன் உடன் வருகிறது, இந்த டிசைன் அவர்கள் ஆர்டர் செய்தும், கேட்டும் வாங்குகின்றனர். இந்த புடவை வரும்போது, இதை இயந்திர தறியில் நெயவதால் நூல் பிய்யாமல் இருக்க அந்த இயந்திர தறியில் நூலுக்கு மெழுகு தடவி விடுகின்றனர். இதனால், இங்கு வரும்போது அந்த துணி மெழுகு வழவழப்புடன் வருகிறது, இதனால் இதன் மீது சாயம் ஒட்டாது !
 
 
 
முதலில் இந்த துணியை சுடு தண்ணீரில் சில கெமிக்கல் கலந்து ஊற வைக்கின்றனர். இரு தினங்கள் இது போல செய்தால் இந்த துணியில் இருக்கும் மெழுகு போய் விடுகிறது, இதை அங்கு வேலை செய்யும் பெண்கள் வண்டியில் எடுத்து சென்று காய வைக்கின்றனர். பொதுவாக இதற்க்கு நிறைய இடம் தேவைபடுவதால் இந்த தொழிற்சாலைகள் எல்லாம் ஊருக்கு வெளியில்தான் இருக்கிறது ! அந்த துணிகள் காய்ந்தபின் அந்த கடை முதலாளிகள் சொன்னபடி சாயம் இடபடுகிறது.
 
 
 
 
 
பொதுவாக நம் புடவைகளை பார்த்தல் இரண்டு அல்லது மூன்று கலர் இருக்கும், அதாவது புடவை முந்தானை, மெயின் இடங்கள் மற்றும் ஓரம். இந்த இடங்களுக்கு கலர் இட வேண்டும். மெயின் பகுதிக்கு கலர் இடுவது என்பது ஈசி வேலை. ஆனால், இந்த ஓரங்களுக்கும், முந்தானைக்கும் கலர் இடும்போது அது பரவாமல் தடுக்க வேண்டுமே அதுதான் இங்கே மிக சிரமமான வேலை. அதை செய்ய இந்த புடவையை இரு கட்டைகளுக்கு இடையில் வைத்து ஒரு பெரிய இரும்பு குண்டினால் அடித்து இறுக்கி கயிறு கொண்டு கட்டுகின்றனர். சொல்வதற்கு சுலபம், ஆனால் இந்த வேலை செய்பவர்கள் இதை உட்கார்ந்தே செய்ய வேண்டும் அதுவும் மூச்சு பிடித்து, இதனால் இவர்கள் இந்த வேலையினை அதிகாலை நான்கு மணியில் இருந்து செய்ய துவங்குவார்கள்...... நடுவில் டீ மட்டும்தான். நான் அந்த இரும்பு குண்டினை கையில் எடுத்து பார்த்தபோது தெரிந்தது அவர்களின் கஷ்டம்.
 
 
 
அந்த கட்டையினை வைத்து இருக்க கட்டியபின், அதை அடுத்த கலர் சாயத்தில் முக்கி எடுக்கிறார்கள். இது இறுக்க கட்டியதால் சாயம் மற்ற இடங்களுக்கு பரவுவதில்லை. பின்னர் இதை நன்கு வெயிலில் காய வைக்கின்றனர். இப்போது டிசைன் எதுவும் இல்லாமல் புடவை ரெடி. அடுத்து டிசைன் போடுவது.......அடுத்த வாரம் பார்க்கலாமா ?!
 


 
 
Labels : Oor special, District special, chinnalapatti sarees, Suresh, kadalpayanangal, Part 1

Sunday, May 19, 2013

சோலை டாக்கீஸ் - கடம் விநாயக்ராம்

 தேத்தாக்குடி ஹரிஹர விநாயக்ராம் - இப்படி சொல்வதை விட விக்கு விநாயக்ராம் என்று சொன்னால் உங்களுக்கு எளிதில் புரியும். இவர் கடம் வாசிக்க ஆரம்பித்தால் ஒரு இசை மழை பொழிவது போல இருக்கும். மார்பில் தங்க சங்கிலி தொங்க, சட்டையை கழற்றி விட்டு கொண்டு, குங்குமம் வைத்த நெற்றியுடன் இவர் கடம் வாசிக்கும்போது அந்த இடம் ஒரு வித அமைதியோடு அந்த இசையில் ஆழ்த்திருக்கும்.




இவர் தனது 13வது வயதில் இருந்து இதை வாசித்து கொண்டிருக்கிறார், உலகின் பல நாடுகளில் கச்சேரி செய்து கொண்டிருக்கும் இவர் உயரிய விருதான கிராமி விருதையும் பெற்றிருக்கிறார். இந்த வீடியோவை பாருங்கள், உங்களுக்கே புரியும்....


Friday, May 17, 2013

எப்படி உருவாகிறது ? - பால் பாயிண்ட் பேனா

பேனா.....கவிதை எழுதுவோருக்கும், கணக்கு எழுதுவோர்க்கும் என்று மக்கள் பலருக்கு அன்றாட தேவைப்படும் பொருளில் ஒன்று. நாம் எழுதுதும் பேனா எப்படி உருவாகிறது தெரியுமா ? எப்போதும் நாம் உபயோக்கிக்கும் பொருள், அதை கூர்ந்து கவனித்தால் தெரியும் அது உருவாகும் அதிசயம்.


நீங்கள் இந்த வீடியோ பார்த்து முடிக்கும்போது கண்டிப்பாக உங்களது பேனாவை ஒரு முறை அதிசயமாக பார்க்கபோவது உறுதி. சர சரவென்று உருவாகும் இந்த பேனா ஒரு அதிசயம் இல்லாமல் வேறென்ன.


Thursday, May 16, 2013

சாகச பயணம் - ஸ்னோர்க்லிங் (Snorkeling)

பவள பாறைகள், வண்ண மீன்கள் நிறைந்த இடங்களில் எல்லாம் இந்த 
ஸ்னோர்க்லிங் (Snorkeling) என்பது உண்டு. இது நீச்சல் கொஞ்சம் 
மட்டுமே தெரிந்தவர்கள், கடலில் மிகவும் ஆழம் செல்ல விரும்பாதவர்கள் 
எல்லாம் இதை செய்வார்கள். நீங்கள் உங்களது உடலை கடலில் மிதக்க 
விட்டு, மூச்சு விட்டு கொண்டு கீழே திரியும் வண்ண மீன்களை மெதுவாக 
ரசிக்கலாம். இந்த முறை மாலத்தீவு சென்றிருந்தபோது இதை முயற்சி செய்ய 
வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன், அது எவ்வளவு ஆனந்தம் 
என்று செய்த பிறகுதான் தெரிந்தது !!
 

ஸ்னோர்க்லிங் (Snorkeling) செய்வதற்கு மூன்று முக்கிய பொருட்கள் தேவை. கண்ணாடி, சுவாசிக்கும் குழாய் மற்றும் பின்ஸ் எனப்படும் கால் குழாய். இந்த கண்ணாடி நமது கண் மற்றும் மூக்கை மூடி விடும். வாயில் அந்த குழாயை வைத்துகொண்டால் அந்த குழாயின் மறு பக்கம்
தண்ணீருக்கு வெளியில் இருக்கும்,  இதனால் வெளி காற்றை வாய் மூலம் சுவாசிக்கலாம். காலில் அந்த பின்ஸ் மாட்டிக்கொண்டால் எளிதில் முன்னே நீந்தி செல்லலாம்.

 
 
முதலில் தண்ணீரில் இறங்கியவுடன், மெதுவாக மிதக்க ஆரம்பிக்க வேண்டும். பின்னர் கால்களை அசைக்க அசைக்க முன்னே செல்வீர்கள். இப்படி செய்யும்போது பளிங்கு போன்ற தண்ணீரில் கீழே தெரியும் பவள பாறைகள் மற்றும் வண்ண மீன்களை நேரடியாக பார்க்கலாம். நான் முதலில் நீந்தும்போது வெள்ளை மணலில் அப்படியே மணல் போலவே இருந்த மீனை பார்த்தேன். ஆடாமல் அசையாமல் வெறும் சுவாசம் மட்டும் இருத்தி பார்த்தபோது அது ஆனந்தமாக நீந்துவதை பார்க்க முடிந்தது. பின்னர் என்னை தாண்டி சென்ற பல வகையான வண்ண மீன்களையும் பார்க்க முடிந்தது. மீன்களில் இத்தனை வண்ணங்களா என்று நீங்கள் நிச்சயம் ஆச்சர்யபடுவீர்கள்.

 
 
 
 இப்படி நீரில் மேலே மிதந்தாலே இவ்வளவு ஆச்சர்யம் இருக்கிறதே, இன்னும் ஆழமாக நீந்தி சென்றால் எவ்வளவு அழகு கொட்டிக்கிடக்கும் என்று எண்ண வைக்கும் அளவு அழகு. கொஞ்ச நேரம் மூச்சு வேகமாக விடும் நீங்கள், பழகியவுடன் மெதுவாக ஆழ்ந்து இந்த அழகை அனுபவிக்க ஆரம்பிப்பீர்கள். நீரின் வெளியே உலகம் அழகு என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, பார்க்க வேண்டிய ஒன்று இந்த பவள பாறைகளும், மீன்களும். சரி, எப்போ போறீங்க ?!

 
Labels : Kadalpayanangal, Suresh, Snorkeling, Coral reef, maldives, beautiful sea, clear water