Thursday, May 9, 2013

சாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 2)

என்ன நேற்று அந்த நீர்மூழ்கி கப்பல் உள்ளே செல்வதையும், சில வண்ண மீன்கள் நீந்துவதையும் பார்த்தீர்கள் அல்லவா, எப்படி இருந்தது ? இன்று இன்னும் பல பல விஷயங்களை பார்ப்போமா ? மீன்கள் இந்த நீர்மூழ்கி கப்பல் பக்கத்திற்கு வருவதற்கு அஞ்சுவதால் அதை நெருங்கி வருவதற்கு அங்கு வேலை செய்யும் டைவர் எனப்படும் நீரில் மூழ்குபவர்கள் அந்த மீன்களுக்கான உணவுகளுடன் உங்களது அருகில் வருவார்கள். அப்போது வண்ண மயமான மீன்கள் அந்த உணவை உண்ண வருகின்றன. காண்பதற்கு கண் கொள்ளா காட்சி !!




இங்கிருக்கும் வண்ண வண்ண பவளபாறைகளில் மீன்கள் சுற்றி வருவதும், சில நேரங்களில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத மீன் வகைகள் வருவதும் என்று இருந்தது. நீர்மூழ்கி கப்பலில் இப்படி பயணம் செய்யும்போது நீச்சல் தெரியாதவர்கள் கூட இதை அனுபவிக்க முடியும் என்பது நல்லதுதானே ! நிறைய நேரம் இப்படி பார்த்து கொண்டிருக்கும்போது கொஞ்சம் போர் அடிக்க செய்கிறது. அதை போக்க அவ்வப்போது பக்கத்தில் வந்து இதை பற்றிய செய்திகளை சொல்கிறார்கள்.



 
இந்தியாவை ஓட்டிய கடல் பகுதிகளிலும் உலகின் பிற பகுதிகளிலும் காணக்கிடைக்கும் இன்றும் ஆச்சர்யமூட்டும் பவளப் பாறைகள்(Coral Reefs) ஒரு அரிய நுண்ணுயிரி ஆகும். மிக சிறிய உயரினமான இவை நிடாரியா(cnidaria ) எனும் வகையை சார்ந்தது மேலும் இவை செசில் (sessile) வகை இனமாகும் அதாவது ஓரே இடத்தில் ஒட்டி வாழும் உயிரி. இவை சாதாரணமாக 1 மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்த உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன.அப்படி இருக்க இவை தனது டெண்டகுள்களின் (tentacles) உதவியுடன் சிறிய மீன்கள், ப்லான்டூனிக் (planktonic) விலங்குகளை உணவாக கொள்கின்றன மேலும் மற்ற ஒளிசேர்க்கை உயிரிகளான பாசிகள் (algae) போன்றவற்றின் உதவியின் மூலம் ஒளிசேர்க்கை(photosynthesis) சக்தி பெற்று வாழ்ந்துவரும் இவற்றின் மரபணு பற்றிய ஆராய்ச்சி ஒன்றில் இவற்றின் பகலிரவு சுழற்சி முறை புலப்பட்டிருக்கிறது.
 
 
 


 
கடலை வாழ்விடமாக கொண்ட இப் பவளப் பாறைகள் கூட்டம் கூட்டமாக அடர்ந்து விரிந்து வாழக்கூடியவை. இக்கூட்டமானது கால்சியம் கார்பனேடால் (calcium carbonate) ஆன கடினக் கூட்டை கொண்டுள்ளது. இவ்வகை பவளப்படுக்கைகள் பசிபிக் பெருங்கடலில் அதிகம் காணப்படும். மிகுந்த ஆழமான கடல் பகுதிகளில் வாழும் இப் பவளப்பாறைகளுக்கு ஒளிச்சேர்க்கை உயிரிகளான டைனோப்லஜெல்லேட்(Dinoflagellates) உடன் நட்புகொண்டிருக்கிறது. டைனோப்லஜெல்லேட் சூரிய ஒளி யை பயன் படுத்தி பவளப் பாறை களுக்கு சக்தியூட்டுகிறது மேலும் அச் சூரிய ஒளியின் மூலம் கணிமக்கூட்டை(mineralized skeleton) பாதுகாப்பிற்காக உருவாக்குகின்றது இது பவள கால்சிபிகேசன்(Coral Calcification) எனப்படும்.


முடிவில் எங்களது பயணம் இனிதே முடிந்தது, அப்போது சட்டென்று ஆயிரக்கணக்கான சிறிய மீன்கள் சட சடவென்று பல உருவங்களை உருவாக்கியது. அவ்வளவு நேரமும் சில மீன்களை மட்டுமே பார்த்த எங்களுக்கு இப்படி வெள்ளி போல ஆயிரக்கணக்கான மீன்களை பார்த்ததும் ஆச்சர்யம் தாங்கவில்லை. எவ்வளவு அற்புதம் இந்த இறைவனின் படைப்பு என்று தோன்றியது. கண்டிப்பாக செல்ல வேண்டிய, பார்க்க வேண்டிய இடம் இது !!
 

2 comments:

  1. அட்டகாசம் போங்க...

    கொடுத்து வைத்தவர் நீங்க... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார் ! கடவுளுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும் !

      Delete