Friday, May 10, 2013

ஊர் ஸ்பெஷல் - ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

நீங்கள் எங்கு பால்கோவா தின்று இருந்தாலும், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மாதிரி வராது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன், அது எதனால் என்று அங்கு சென்று சாப்பிட்டு பார்த்தால்தான் தெரிந்தது. அது மட்டும் இல்லை, அதை எப்படி செய்கிறார்கள் என்று அவர்களது இடத்திற்கு சென்று பார்த்தும் வந்தேன். சிறு வயதில் அந்த ஊரை தாண்டி போகும்போது பஸ்ஸில் இதை விற்ப்பார்கள், அந்த பயணம் முடியும்போது அந்த பேப்பரில் எங்கும் நக்கி நக்கி எல்லாவற்றையும் தீர்த்திருப்பேன், திகட்டாத சுவை !! வாருங்கள் அதன் செய்முறையை பார்ப்போம் !

பால்கோவா செய்யும் இடம் - ஸ்ரீவில்லிபுத்தூர்
 
அது ஏன் இந்த ஊர் பால்கோவா மட்டும் அவ்வளவு சுவை மற்றும் பிரபலம் என்று கேட்டால், அது அங்கு கிடைக்கும் பால் என்கிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ஆண்டாளுக்கு மிகவும் பிரபலம். அந்த காலத்தில் மாடுகள் நிறைய இருந்தனவாம் (இந்த காலத்திலும் கூட !), அதனால் மீதமாகும் பாலை வீணாக்காமல் இதை செய்ய ஆரம்பித்தார்கள். இன்று, அது அந்த ஊரின் சிறப்பகிவிட்டது. பால்கோவா கிண்டுவதற்கு காலையில் 6 மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரையும், திரும்பவும் மாலை ஆறரை மணி முதல் இரவு பத்து மணி வரையிலும் இதை செய்கிறார்கள். இதுதான் பால் வரும் நேரம் !! ஒரு நாளில் 600 கிலோ வரையிலும் கூட இங்கே பால்கோவா தயார் ஆகிறது !

 
ஒரு கேன் பால் என்பது பத்து லிட்டர், இதில் ஒன்றேகால் கிலோ ஜீனியை போட்டு மெதுவாக கலக்குகிறார்கள். இதை செய்ய கேஸ் அடுப்பு பயன்படுத்துவதில்லை, இன்றும் முந்திரி குப்பைகளை வைத்து எரிக்கிறார்கள். அதுவும் இந்த சுவைக்கு ஒரு காரணம் போலும் ! மெதுவாக அந்த பாலை கிண்ட கிண்ட அது சுண்டி வருகிறது. இங்கு பால்கோவா மட்டும் இல்லாமல் பால் அல்வா ஒன்றும் மிகவும் சுவையாக இருக்கும். பால் அல்வாவில் நெய், முந்திரி, பாதாம் என்று சேர்த்து இன்னும் கொஞ்சம் பதமாக செய்தால்....பால் அல்வா ரெடி !!
 
 
 
முடிவில் அந்த பதம் வர ஆரம்பிக்கும்போது பால் சிறிது மஞ்சள் நிறத்தில் ஆகிறது. பின்னர் அது கெட்டியாகி அந்த வாசனை உங்களது மூக்கை துளைக்க ஆரம்பிக்கும் பாருங்கள், அப்போதிலிருந்தே உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். பத்து லிட்டர் பால் கொண்டு செய்தால் ஒன்று அல்லது இரண்டு கிலோ வரை பால்கோவா கிடைக்கிறது ! நெருப்பிலே காய்ந்து இவர்கள் செய்யும் கைபக்குவதில்தான் இங்கே பால்கோவா அவ்வளவு சுவை போலும் !

 
 
 
 
முடிவில் அந்த பால்கோவா ரெடி ஆகும்போது கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது ஆற விடுகிறார்கள். பின்னர் ஒரு பிளாஸ்டிக் விசிறி கொண்டு நன்கு 
வழித்து எடுத்து  ஒரு தட்டில் காய வைக்கிறார்கள். அது காயும்போதே அடுத்து பால் ஊற்றி இன்னும் பால்கோவா ரெடி ஆகிறது !
 
முடிவில் அந்த தட்டில் இருக்கும் பால்கோவாவை நன்கு கிளறி விட்டு பேன் கீழே காய வைக்கிறார்கள். அது நன்கு ஆறியவுடன் பாக்கிங் இடத்திற்கு செல்கிறது. இங்கு கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ என்று எடை போட்டு, ஒரு கவரில் பாக் செய்கின்றனர். பின்னர் கடையில் இருந்து போன் செய்யும்போது வண்டியில் ஏற்றி அனுப்புகின்றனர்.
 
 ஸ்ரீவில்லிபுத்தூரில் யாரிடம் கேட்டாலும் பால்கோவா வாங்க சிறந்த இடம் என்று சொல்வது இந்த "ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலாஸ்". இவர்கள் கடையில் பால்கோவா வாங்க மக்கள் அலை மோதுகிறார்கள். இந்த கடை கோவிலின் உள்ளே செல்லும்போது இடது புற திருப்பத்தில் இருக்கிறது. கடையை நெருங்கும்போதே வாசனை சொல்லிவிடும். அடுத்த முறை நீங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும்போது மறக்காமல் இந்த கடையில் பால்கோவா வாங்கி ஒரு வாய் போட்டு பாருங்கள், பின்னர் தெரியும் ஏன் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா அவ்வளவு சிறப்பு என்று !Labels : Kadalpayanangal, Suresh, Oor special, srivilliputhur, palkowa, palkova, paal kowa

19 comments:

 1. உண்டு ரசித்து இருந்தாலும்
  செய்யும் முறையை உங்கள் மூலம்தான்
  கண்டு ரசித்தேன்
  படங்களுடன் பகிர்வு அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார் ! இந்த பகுதி உங்களுக்கு பிடித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி !

   Delete
 2. ராஜபாளையம் கல்லூரியில் படிக்கும் போது, இங்கு இறங்கி பால்கோவா வாங்காமல் வந்ததில்லை...

  ஸ்ஸ்ஸ்... அட போங்க...!

  ஹிஹி... வாழ்த்துக்கள்... நன்றிகள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார் ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 3. Replies
  1. நன்றி ஜெயதேவ் சார் ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் !

   Delete
 4. இதுவரை ருசிச்சதே இல்லை. எல்லாம் ஒரு பயம்தான்..... எப்படிச் செய்வார்களோன்னு.

  இப்ப படங்கள் பார்த்து கொஞ்சம் நம்பிக்கை வந்துருக்கு. அடுத்த முறை கொஞ்சம் வாங்கி உள்ளே தள்ள விருப்பம்.

  அருமையான பதிவுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேடம் ! இந்த பதிவு தங்களது மனதை மாற்றியது கண்டு மகிழ்ச்சி !

   Delete
 5. Replies
  1. நன்றி கிருஷ்ணா ! நீங்கள் எந்த ஊர் என்று சொல்லவே இல்லையே !

   Delete
 6. higjly appreciating ur risky n excellent efforts....
  keep rocking!!!!!!!!
  Mano

  ReplyDelete
  Replies
  1. நன்றி மனோ, அடுத்த முறை திருச்சி வரும்போது இது போல் செல்வோம் !

   Delete
 7. இந்த ஊர் பக்கத்துல வத்தாராயிருப்பு புதுப்பட்டி பால் அல்வா சான்சே இல்லை.மிக சிறிய ஊர் தினம் புதுசாய் கிடைக்கும்.படிக்க படிக்க இப்பவே வாங்க தூண்டுது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேடம் ! அடுத்த ஸ்டாப் வத்தாராயிருப்பு புதுப்பட்டி பால் அல்வா......

   Delete
 8. உங்க பதிவை வாசிச்ச நல்ல முகூர்த்தம் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை ருசிக்கவும் ரசிக்கவும் சான்ஸ் கிடைச்சது! சிங்கை கோமளவிலாஸில் கிடைத்தது. ஸ்ரீ ஆண்டாள் அண்ட் கோ ஸ்ரீவில்லிபுத்தூர் என்று போட்டுருந்தது . நல்ல ருசி & மணம். இங்கே நியூஸி வந்து இறங்கியதும் நாய் பிடிச்சது:-)))))

  ReplyDelete
  Replies
  1. ஆஹா......எனது பதிவை படித்து அதன் ருசியை மறக்காமல் கருத்துக்களாக தெரிவித்ததற்கு மிக்க நன்றி. சிங்கை வந்து இருந்தீர்களா, ஆஹா உங்களை காணும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே ! கடந்த இரண்டு வாரங்களாக இங்குதான் இருக்கிறேன்.....

   Delete
 9. http://nativespecial.com/index.php?route=product/product&path=59_68&product_id=67

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாஸ்கரன்.... பகிர்வுக்கு நன்றி !

   Delete
 10. நீங்கள் ஆன்லைனில் sweetkadai.com தளத்தில் ஆர்டர் செய்தாலே போதும் உங்கள் இல்லம் வந்து சேரும்.

  ReplyDelete