Thursday, May 30, 2013

உயரம் தொடுவோம் - தென் ஆப்ரிக்காவின் கார்ல்டன் டவர்

எந்த நாட்டிற்க்கு சென்றாலும் அந்த நாட்டின் உயரமான கட்டிடம் சென்று பார்ப்பது என்பது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. இந்த முறை தென் ஆப்ரிக்காவின் ஒரு நகரான ஜோஹன்நேஸ்பர்க் செல்வதற்கு முன்னரே இந்த கார்ல்டன் டவர் பற்றி தெரிந்து வைத்துக்கொண்டேன். பின்னர் ஒரு வார இறுதியில் அங்கு சென்றேன் ! இந்த ஜோஹன்நேஸ்பர்க் நகரில் நிற வெறி என்பது பட்டும் படாமலும் இருக்கத்தான் செய்கிறது. நான் இங்கு என்னுடைய காரில் செல்கிறேன் என்னும்போதே எல்லோரும் இல்லை வேண்டாம் என்று தடுத்தனர். பின்னர் டாக்ஸி எடுத்துக்கொண்டு அங்கு சென்றவுடன்தான் புரிந்தது ஏன்  என்று, அங்கு உள்ள மக்களில் சிலர் மிகவும் முரடர்களாய் இருக்கின்றனர், இதனால் நமக்கு பிரச்சனை என்றுதான் சொல்லி இருக்கின்றனர். சில நேரங்களில் நீங்கள் காரில் சிக்னல் அருகே நின்று கொண்டிருக்கும்போது, சட்டென்று கண்ணாடியை ஒரு கூர்மையான பொருள் கொண்டு உடைத்து, உங்களிடம் அப்போது என்ன இருக்கிறதோ அதை எடுத்து செல்கின்றனர் என்றபோது மனதில் ஒரு பயம் இருந்தது உண்மை !

 
ஜோஹன்நேஸ்பர்க் என்னும் இந்த நகரம் "சிட்டி ஆப் கோல்ட்" - தங்க நகரம் என்று அழைக்கபடுகிறது. முன்னர் ஒரு காலத்தில் இங்கு தங்கம் கிடைப்பது கண்டு பிரிட்டிஷ், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் இங்கு படையெடுத்து வந்தன, அதனால் இந்த பெயர். இன்றும் இங்கு பல இடங்களில் மலை போல மணல் குன்றுகள் உண்டு, அது எல்லாம் தங்கதிர்க்காக தோண்டப்பட்ட குழியின் மணல். இந்த கார்ல்டன் டவர் நகரத்தின் நடுவில் இருக்கும் மிக பிரம்மாண்டமான, உயரமான கட்டிடம். இந்த கட்டிடத்தின் உச்சியில் இருந்து பார்க்கும்போது உங்களுக்கு அந்த மணல் குன்றுகள் தெரியும் !


 
இது ஐம்பது மாடி கொண்ட கட்டிடம்.இது 1960இல் அமெரிக்க வல்லுனர்களால் கட்டப்பட்ட கட்டிடம். நான் இதற்க்கு முன்னர் சென்ற எல்லா உயரமான கட்டிடத்தின் முன்னே உள்ளே செல்வதற்கு வரிசையில் நிறைய பேர் காத்திருப்பார்கள், ஆனால் இங்கோ காற்று வாங்கியது ! நாங்கள் உள்ளே டிக்கெட் வாங்கி கொண்டு நுழைந்தபோது அந்த லிப்ட் மெதுவாக பயணித்து ஐம்பதாவது மாடி என்று காட்டியபோது சந்தோசமாக இருந்தது. பொதுவாக இங்கே நிற வெறி இருந்தாலும், நெல்சன் மண்டேலாவால் இன்று கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் சம உரிமை இன்று கொடுக்கபட்டிருக்கிறது.


 
லிப்டை விட்டு வெளியே வந்தபோது என் கண்ணின் முன்னே விரிந்து இருந்தது ஜோஹன்நேஸ்பர்க் நகரம். உயரமான கட்டிடத்தில் இருந்து பார்க்கும்போது நமக்கு பறப்பது போலவும், நமது கர்வம் எல்லாம் கீழே மனிதர்களை பார்க்கும்போது அழிவது போலவும் இருக்கும் எனக்கு. தரையில் இருந்து பார்க்கும்போது நான் பெரியவன் என்று தெரியும், ஆனால் மேலே சென்று பார்த்தால்தான் தெரியும் நாம் எவ்வளவு சின்னவர்கள் என்று !

 
உங்கள் கண்ணின் முன்னே ஒரு நகரம் சிறு சிறு பெட்டிகளாக தெரியும் வீடுகளாய் தெரியும் போது கண்டிப்பாக ஆனந்தம்தானே ! முன்னொரு காலத்தில் இந்த இடமெல்லாம் தங்கம் தோண்டும் இடமாக, காட்டு பகுதியாக இருந்து..... இன்று உங்களின் கண் முன்னே தெரிவது எல்லாம் ஒரு அதிசயம்தான் ! மேலே இந்த கட்டிடம் கட்டும்போது எடுத்த படங்களுடன் நமது காந்தியின் படமும் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 
முடிவில் சுற்றி பார்த்து விட்டு கீழே இறங்கும்போதுதான் தெரிந்தது, அந்த இடத்தில் நிறைய திருட்டுக்களும், சண்டைகளும் நடப்பதால் இங்கு வருவதற்கு நிறைய பேர் யோசிக்கிறார்கள் என்று. எங்களுக்கு சுற்றி காண்பித்த அந்த நபர் விடை பெறும்போது இது போல உங்க நாட்டில் ஏதாவது கட்டிடம் இருக்கா என்று கேட்க நான் மனதினுள் LIC  பில்டிங் என்று ஒன்று உண்டு என்று மனதினுள் கூறிக்கொண்டேன் !!

 
Labels : Kadalpayanangal, Suresh, Tallest building, Africa, Johannesburg, Carlton tower

2 comments:

  1. எந்த திருட்டும், சண்டையும் இல்லாமல் வந்தது சந்தோசம்...!

    எங்க ஊர் சின்னாளபட்டி சுங்குடி சேலை அடுத்த பாகம் பார்க்க வந்தால், அதுக்குள்ளே எங்கேயோ போயிட்டீங்க... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா......மிக்க நன்றி ! இதோ உங்களுக்காகவே அடுத்த பதிவு சின்னாளபட்டி சேலை பற்றி....

      Delete