Saturday, May 4, 2013

சாகச பயணம் - ஒட்டக சவாரி

வெகு நாட்களாக மனதினுள் இருந்த ஆசை என்பது இந்த ஒட்டக சவாரி ! என்னதான் பல நாடுகளில் கார் ஒட்டி இருந்தாலும் இந்த பாலைவனத்தில் ஒட்டகம் ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதுவும் பல ஆங்கில படங்களில் எல்லாம் இந்த ஒட்டகத்தை வைத்து ரேஸ் வைப்பார்கள் அல்லது ஹீரோவை துரத்துவார்கள், அதை பார்த்து பார்த்து மனதினுள் நிறைய ஆசை இருந்தது, அதை இந்த முறை கத்தார் சென்றபோது தீர்த்துக்கொண்டேன்.


 
பார்க்கும்போது இதை ஓட்டுவது சுலபம் என்று தெரியும், ஆனால் அதன் மீது ஏறிய பின்னரே அது எவ்வளவு கடினம் என்று புரிந்தது. நான் முதலில் அந்த ஒட்டகத்தை கொண்டு வந்து நிறுத்தியவுடன், அந்த ஒட்டகத்தின் கண்ணில் என்னை பார்த்து ஒரு பயம் இருந்தது போல தெரிந்தது !! ஒரு வழியாக அதை உட்க்கார வைத்து மேலே ஏறியபோது ஒன்றும் தெரியவில்லை, ஆனால் அதை எழுப்பியவுடன் நான் சறுக்குவது போன்ற உணர்வு.

 
உலகிலேயே எல்லா பிராணிகளும் தங்களது முன்னங்காலில் இடது எடுத்து வைத்தால், பின்னால் உள்ள காலில் வலது பக்கத்தை எடுத்து வைக்கும். நீங்கள் நடக்கும்போது பாருங்கள் உங்களது வலது கால் முன்னால் இருந்தால், உங்களது இடது கை முன்னால் வீசி இருக்கும், இது உங்களது உடம்பை பேலன்ஸ் செய்வதற்காக..... ஆனால் ஒட்டகத்தை பார்த்து  இருக்கிறீர்களா ? இரண்டு பக்க காலும் ஒரே சைடில் எடுத்து வைக்கும் !! உலகிலேயே இது போல் செய்யும் உயிரினம் இது ஒன்றுதான், அதனால்தான் அது நடக்கும்போது நாம் அப்படி ஆடுவோம் ! அது நடக்கும்போதே இப்படியென்றால் அது ஓடினால் !!

 
 
ஒரு வழியாக அதன் மேல் ஏறி உட்க்கார்ந்து செல்ல ஆரம்பித்தேன், இது நாள் வரை எப்போது ஒட்டகத்தின் மீது சவாரி செய்வேன் என்று இருந்தேனோ இப்போது அதன் மீது சவாரி செய்யும்போது எப்போது கீழே இறங்குவேன் என்று ஆகிவிட்டது. உயரத்தில் இருந்து ஒட்டகத்தின் தலை வழியாக பார்க்கும்போது என்னவோ இரண்டாவது மாடியில் இருந்து எட்டி பார்ப்பது போல இருந்தது, கீழே விழுந்து விடுவேனோ என்றாகிவிட்டது. அதை கவனித்த அந்த ஒட்டக மேய்ப்பாளர் நான் அதை ரசிப்பதாக நினைத்துக்கொண்டு அதை அதட்டி ஓட வைத்தார் பாருங்கள், இதயம் வாய் வரை வந்து உள்ளே சென்றது !

 
முடிவில் இறங்கியவுடன் அப்பாடா என்று இருந்தது, என்னதான் மனதினுள் பயந்துக்கொண்டு சவாரி செய்தாலும் இறங்கியவுடன் வீரமாக ஒட்டகம் முன்னே போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட போட்டோதான் கீழே இருக்கிறது. என்ன இன்னொரு முறை பயணம் போகலாமா என்றா கேட்டீர்கள், அட போங்க பாஸ் இது ரத்த பூமி..........சினம் கொண்ட சிங்கத்தை சுரண்டி பார்க்காதீங்க !

 
முடிவில் நான் இறங்கியவுடன் ஒட்டகத்தின் கண்களில் தெரிந்த சந்தோசம் பாருங்கள் !!

 
Labels : Kadalpayanangal, Suresh, Camel safari, Camel
 

No comments:

Post a Comment