Thursday, June 27, 2013

உயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்

கத்தார் தலைநகர் தோஹாவில் 15வது ஆசிய விளையாட்டு போட்டி 2006இல் நடந்தபோது அதை நினைவில் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆஸ்பயர் டவர் எனப்படும் இன்றைய டார்ச் ஹோட்டல். இதன் வடிவம் என்பது ஒலிம்பிக் டார்ச் போன்று உள்ளதும் இதன் பெயர் காரணத்திற்கு காரணம். இது காலிபா சர்வதேச ஸ்டேடியம் பக்கத்தில் இருக்கிறது. நான் வழக்கம்போல அந்த ஊரின் மிக பெரிய கட்டிடம் என்று தேடியபோது இதை காட்டினார்கள். முதலில் இதை புரிந்து கொள்ள கஷ்டபட்டாலும் முடிவில் உள்ளே சென்று பார்த்தபோது அதிசயமாகவும், ஆனந்தமாகவும் இருந்தது !இந்த டவரின் உள்ளே ஒரு விளையாட்டு முயுசியம், நான்கு தளத்தில் அபார்ட்மெண்ட், மூன்று தளத்தில் சுழலும் ஹோட்டல், இரண்டு தளத்தில் வேடிக்கை பார்க்கும் இடம் என்று உள்ளது, இதில் வேடிக்கை பார்க்கும் இடம் 781 அடி உயரத்தில் இருக்கிறது. இவ்வளவு உயரமான கட்டிடத்தில் இவ்வளவுதான் தளங்களா என்று கேட்பவர்களுக்கு மட்டும் கீழே இருக்கும் காணொளி ! இது கட்டிடம் போல தெரிந்தாலும் ஒரு தூண் போன்ற அமைப்புக்கு நடு நடுவே தளங்கள் அமைத்திருக்கின்றனர், மற்றதெல்லாம் வெற்றிடம்தான். அதை சுற்றி வலை போல அழகுக்கு அமைத்து அதில் லைட் கொடுத்துள்ளனர், இதனால் இரவினில் வானவில்லை போல பல நிறங்களை காணலாம் !


இதன் உச்சியில் டார்ச் போன்ற அமைப்பு உள்ளது, இதனால் இதன் முழு உயரம் 980 அடியாகும். ஆசிய விளையாட்டு போட்டி நடந்தபோது உச்சியில் அந்த ஜோதி எரிவது பல மைல்களுக்கு தெரியுமாம், இன்று உச்சியில் லைட் கொண்டு அது எரிவது போல செட் செய்து உள்ளனர். இதன் உச்சியில் சென்று நீங்கள் பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல் மணல் மணல்தான் !
இந்த படம் பார்த்தால் உங்களுக்கே அதன் உச்சியில் இருந்து பார்த்தால் எப்படி தெரியும் என்பது புரியும்.ஒரு பாலைவன நாட்டில்,  அதுவும் மரங்கள் என்பது அரிதான ஒன்று, வெறும் பெட்ரோல் மட்டுமே கிடைக்கிறது என்கிறபோது அங்கு பார்த்த உயரமான கட்டிடங்கள் எல்லாம் ஏன் எல்லா வளமும் இருக்கும் நமது நாட்டில் இல்லை என்ற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. எல்லா நாடுகளுக்கும் சென்று இந்த உயரம் தொடுவோம் பதிவு எழுதும்போது, இந்தியாவில் இப்படி சென்று வந்து ஒரு பதிவு எழுத முடியவில்லையே !Labels : Suresh, Kadalpayanangal, Uyaram thoduvom, Tall tower visit, Qatar, Aspire tower

Wednesday, June 26, 2013

ஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)

சென்ற வாரம் சின்னாளபட்டி சேலை பற்றிய பதிவுகளை பார்த்தீர்கள், உங்களது கருத்துக்களுக்கு நன்றி. இந்த வாரம், நாமக்கல் பற்றி பார்ப்போம். "நாமகிரி" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. நாமக்கல் என்பது முக்கிய நகரங்களில் இருந்து பார்த்தால்......  சேலம் (57 கிமீ) , ஈரோடு (54 கிமீ) , கரூர் (45 கிமீ), திருச்சி (85 கிமீ), கோயமுத்தூர் (154 கிமீ). சேலத்திலிருந்து திருச்சி & மதுரை செல்லும் பேருந்துகள் நாமக்கல் வழியாக செல்லும். இங்கு முட்டைகள் மிகவும் பிரபலம். ஊருக்கு வெளியே செல்லும்போது எங்கு பார்த்தாலும் கோழி பண்ணைகள். இதுவரை நீங்கள் கோழிகளை பற்றி தெரிந்து வைத்த செய்திகள் எல்லாம் இந்த பதிவின் மூலம் உடைய போவது உறுதி !

எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, அவ்வளவு விஷயம் இருக்கிறது !! முட்டையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவுடன், எப்படி இந்த கோழி பண்ணைக்கு போவது, யாரை கேட்பது என்று புரியவில்லை. எனது நண்பன் ரவிகுமாரிடம் சொன்னவுடன் அவன் சில இடங்களில் ஏற்பாடு செய்து கொடுத்தான், அதனால் அவனுக்கு நன்றி ! முட்டை என்பது ஐந்தாம் தலைமுறை என்பது தெரியுமா ? இது நல்ல லாபம் கொடுக்கும் தொழில்....நஷ்டமும் கொடுக்கும் தொழில் என்பது தெரியுமா ?  முட்டை என்பது சைவம் என்பது தெரியுமா ? ஒரு முட்டை தட்டில் எத்தனை முட்டை இருக்கும் என்பது தெரியுமா ? வாருங்கள்......தெரிந்து கொள்வோம்!

கோழி.......ஒரு கோழி என்பது 72 வாரம் வரை உயிரோடு இருக்கும். குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம், அதற்கடுத்த 8 வாரம் என்பது வளர் பருவம், அதற்கடுத்த 56 வாரமும் முட்டை உற்பத்தி பருவம். முட்டையிடும் பருவத்தை ஆரம்பம், பீக், முடிவு என்று வைத்திருக்கின்றனர். பொதுவாக கோழிகள் 26 மணி நேரத்திற்கு ஒரு முட்டை இடும், அதுவே 28 அல்லது 30 மணி நேரம் வந்து விட்டால், அதை விற்று விடுவார்கள்.முதலில் நீங்கள் வாங்கி சாப்பிடும் கோழி என்பது கமர்சியல் கோழிகள் என்கிறார்கள் அவர்கள் பாஷையில். புரிகிற மாதிரி சொல்வதென்றால்.......

கிராண்ட் பேரன்ட் :

முதன் முதலில் உருவாக்கப்படும் கோழி என்பதை தாத்தா கோழி (கிராண்ட் பேரன்ட்) என்கிறார்கள். இதை தயார் செய்வது என்பது அவ்வளவு கஷ்டம் ! தரமான கோழியின் விந்தணுவில் இருந்து உருவாக்கப்படும் இந்த கோழிக்கு அவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்குமாம், கறியில் சத்தும் கூட.  இந்த கோழிக்கு கவனிப்பு மிகவும் அதிகம், நாசாவில் வேலை செய்வது போல சயின்டிஸ்ட் எல்லாம் இதில் ஜீன் முறையில் சோதனை நடத்துவார்கள். இதன் விலை மிகவுமே அதிகம்.

பேரன்ட் :

கிராண்ட் பேரன்ட் என்பது சுமார் 300 முட்டைகளை வருடத்திற்கு கொடுக்கும் என்று வைத்து கொள்வோம், இந்த முட்டைகள் கோழிகுஞ்சா வெளிவந்தால் அதை இவர்கள் பாஷையில் பேரன்ட் / அப்பா கோழி என்கின்றனர். இந்த வகை கோழிகள் சிறிது எதிர்ப்பு சக்தி கம்மியாக இருக்குமாம். இந்த பேரன்ட் கோழிகள் முட்டையும், கறியும் அதிகம் கொடுத்தால்தான் உங்களுக்கு லாபம் அதிகம், அது மட்டும் இல்லை, இது நோயில்லாமல் இருக்க வேண்டும், ஏனென்றால் இது இறந்தால் நஷ்டம் மிகவும் அதிகம், அதனால்தான் இதை பார்ப்பதற்கு கூட அனுமதி மறுப்பார்கள்.

லேயர் :

பேரன்ட் கோழி ஒவ்வொன்றும் 300 முட்டைகள் இட்டு, அது கோழிக் குஞ்சுகளை கொடுத்தால் அதை பையன் கோழி அல்லது லேயர் கோழி என்பார்கள். இதுதான் நாமக்கல்லில் நீங்கள் எங்கும் பார்க்கும் கோழி பண்ணைகளில் இருப்பது. பேரன்ட், க்ராண்ட் பேரன்ட் கோழிகளை அதிக வெப்பமோ, தூசியோ, தொற்று நோய்களோ தாக்க கூடாது என்று இந்த பண்ணைகள் எல்லாம் ரோட்டில் இல்லாமல், ஒரு கிராமத்தின் உள்ளே இருக்கும், அதனால் நீங்கள் அங்கு செல்வது என்பது முடியாது. ஆனால் இந்த லேயர் கோழி பண்ணைகள் அப்படி இல்லை.இதை சுமார் 150 ரூபாயில் இருந்து கிடைக்கும், இதைதான் பண்ணைகள் அதிக அளவில் வாங்கி வருகின்றன.

கமர்சியல் :

லேயர் கோழிகள் இடும்  முட்டைகளில் இருந்து வருவதுதான் நாம் சாப்பிடும் பிராய்லர் கோழிகள், இதை பேரன் கோழி என்கின்றனர். பிராய்லர் கோழி என்பது வெறும் 42 நாள் மட்டும் வளர்த்து எடுப்பது, இதை வெகு நாட்கள் வைத்திருந்தால் அது இடும் முட்டை என்பது ஐந்தாம் தலைமுறை, அதைதான் நாம் உண்கிறோம் ! பொதுவாய் இந்த கமர்சியல் கோழிகள் என்பது 72 வாரம் முட்டை போட்டு ஓய்ந்து போன முற்றின கோழிகளும், 42 வாரம் மட்டுமே வளர்த்த இளம் கோழிகளும் மிக்ஸ் செய்து இருப்பதுதான் !என்ன மூச்சு வாங்குகிறதா, நான் இன்னும் பண்ணையின் உள்ளேயே செல்லவில்லையே, முதலில் கோழியை பற்றி மட்டுமே சொல்லி இருக்கிறேன், வாருங்கள் இப்ப பண்ணைக்கு செல்வோம். இந்த பண்ணை லேயர் கோழிகளை பராமரிக்கும் பண்ணை.......

இந்த கோழி பண்ணைகளில் சிறு குஞ்சுகளாக இருக்கும்போது வாங்கி வந்து இரண்டு முறைகளில் கோழிகளை வளர்ப்பார்கள்.  முட்டைக்கோழிகளை வளர்க்க ஆழ்கூளம், கூண்டு வளர்ப்பு என 2 முறைகள் உள்ளன. கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. கூண்டு முறையில் முட்டைக் கோழி வளர்க்க 42க்கு 30 அடி நீள, அகலமுள்ள 3 கட்டிடங்கள் தேவை. இவற்றில் தலா 2 ஆயிரம் கோழி வீதம் 6 ஆயிரம் கோழி வளர்க்கலாம். கட்டிடத்துக்கு மொத்தம் ரூ.4.5 லட்சம் செலவாகும். 3 கட்டிடத்துக்கும் கூண்டு அமைக்க தலா ரூ.30 ஆயிரம் வீதம், ரூ.90 ஆயிரம் செலவாகும். கட்டிடத்தில் 3 அடுக்குகளை கொண்ட 6 இரும்பு கூண்டுகள் பொருத்த வேண்டும். மொத்தம் 18 அடுக்குகள் அமையும். 2 ஆயிரம் கோழிகள் இடம்பெறும். தீவனம் இருப்பு வைக்கவும், முட்டைகளை அடுக்கவும் தனித்தனி அறைகள் அமைக்க வேண்டும். கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.4 லட்சம்.
 இந்த இடத்தில் நீங்கள் முட்டை உருவாவதை பற்றி தெரிந்து கொண்டால்தான், அதை செயற்கை முறையில் எப்படி குஞ்சு பொரிக்க வைக்கின்றனர் என்பதை அறிய முடியும். ஒரு முட்டையின் ஆயுள் என்பது 21 நாள், அதன் பின்னர் குஞ்சு வெளி வந்துவிடும். பொதுவாக கோழி 17வது வாரத்தில் இருந்து முட்டை இட ஆரம்பிக்கும், சேவலோடு சேர்ந்து உருவாகும் முட்டைக்கு மட்டுமே உயிர் இருக்கும். அதுவே கோழி குஞ்சுகளாக வரும், ஆனால் பிராய்லர் கோழி இடும் முட்டைகள் சேவலோடு சேராதது......அதாவது கோழிகள் இடும் இந்த முட்டைகளுக்கு உயிர் இல்லை, ஆகவேதான் முட்டை சைவம் என்கின்றனர். நாம் இப்போது பார்ப்பது லேயர் கோழிகள், இதுதான் கமர்சியல் கோழிகளை உருவாக்குவது, ஆகவே சேவலிடம் இருந்து விந்துக்களை எடுத்து (அது ஒரு தனி முறை சார், அதை பற்றி எழுதினால் இந்த ப்ளாக் வாசிப்பவர்கள் சங்கடபடலாம் !) ஒரு ஊசியில், கோழியிடம் சேர்கின்றனர். அது முட்டைகளாக உருவாகிறது !
ஆக, நீங்கள் மிக முக்கியமான விஷயங்கள் எல்லாம் தெரிந்து கொண்டாகிவிட்டது. இப்போது செயற்கை முறையில் இந்த முட்டைகளை குஞ்சு பொரிக்க வைக்க இருக்கும் முறையை பற்றி பார்ப்போம். என்ன......இப்பவே கண்ணு கட்டுதா !! சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

Labels : Suresh, Kadalpayanangal, Oor special, Namakkal, Muttai, Koli, Egg


Tuesday, June 25, 2013

சாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே...!! - (பாகம் - 1)

தங்கம்.....மக்கள் கூட்டம் அலைமோதும் தங்க நகை கடைகளை பார்க்கும்போது எல்லாம் எனக்கும் உங்களை போலவே ஆர்வம்தான், ஆனால் இந்த சுரங்கத்தின் உள்ளே சென்று வந்தவுடன் அதை நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது, அவ்வளவு வலி நிறைந்ததும், ஆச்சர்யங்கள் அடைந்ததும் மிக்க ஒரு பயணம் இது.  ஜோஹன்நெஸ்பெர்க் - சிட்டி ஆப் கோல்ட், தங்க நகரம் என்று அழைக்கபடுகிறது. உலகத்தின் 35 சதவிகித தங்கம் இங்கிருதுதான் வெட்டி எடுக்க படுகிறது என்று உங்களுக்கு தெரிந்தால் அது ஏன் சிட்டி ஆப் கோல்ட் என்று அழைக்கபடுகிறது என்பது விளங்கும். நான் சென்ற முறை அங்கு சென்றிருந்தபோது விளையாட்டாக அந்த தங்க சுரங்கம் செல்ல வேண்டும் என்று சொல்ல  ,எனது தென் ஆப்ரிக்க நண்பர் ஆஸ்கார் என்னை ப்ரிம்ரோஸ் என்னும் நகரத்திற்கு அழைத்து சென்றார். அங்கிருந்து பார்த்தால் ஒரு பெரிய மலை போன்ற மணல் திட்டு தெரியும், அது தங்கம் எடுப்பதற்காக தோண்டி எடுக்கப்பட்ட மண், அங்கு 1880ம் ஆண்டுகளில் கோல்ட் ரஷ் எனப்படும் தங்க வேட்டை ஆரம்பித்தபோது மக்கள் சுரங்கங்களில் இருந்து கற்களை, மண்ணை எடுத்து இப்படி மலை போல ஆக்கி இருந்தனர். அந்த நகரம் இந்த மக்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டது எனும்போது மலைப்பாக இருந்தது. முடிவில் அந்த சுரங்கத்தின் நுழைவு வாயில் வரை சென்று விட்டோம், அது மூடி இருந்தது, அது ஒரு மூடப்பட்ட தங்க சுரங்கம்.....தங்கம் இனி இல்லை என்று மூடி விட்டிருந்தனர், அதை காண்பித்துவிட்டு அவர் திரும்ப, நான் அந்த மூடப்பட்ட சுரங்கத்தின் உள்ளே செல்ல வேண்டும் என்றேன். அவர் அதிர்ச்சியாய் என்னை பார்த்து இல்லை அது முடியாது என உறுதியாக சொன்னார். எனது முடிவில் நான் உறுதியாக இருந்ததால், அவர் வேறு ஒரு தங்க சுரங்கம் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளது அங்கு செல்லலாம் என்று சொல்ல எனக்கு ஆர்வம் இன்னும் அதிகமானது."கோல்ட் ரீப் சிட்டி"இது முன்பு ஒரு தங்க சுரங்கம், ஆனால் என்று தங்கம் இங்கு இல்லை என்று முடிவு செய்யபட்டதோ அப்போது இந்த சுரங்கம் மூடப்பட்டது. அதை இப்போது ஒரு தீம் பார்க் ஆக்கி விட்டிருக்கிறார்கள். அங்கு 4000 அடி சுரங்கம் ஒன்று இருக்கிறது, அதில் ஒன்றை சுற்றுலாவிற்க்காக திறந்து விட்டிருக்கிறார்கள். அதில் நீங்கள் 225 அடி வரை ஒரு சுரங்க தொழிலாளி போல பயணம் செய்யலாம் அதற்க்கு சுமார் நம்மூர் மதிப்பில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. எனது அந்த பயணம் தங்கத்தை பற்றிய கருத்தை மாற்றும் என்று அப்போது தெரியாது !
சுரங்க தொழிலாளர்களின் தங்கும் அறைகள் 
அந்த சுரங்கத்தின் வரைபடம்....225 அடி வரை நீங்கள் செல்லலாம்

சுரங்கத்தின் உள்ளே நுழைவதற்கு முன்னே உங்களுக்கு ஒரு வீடியோ போட்டு காண்பிக்கிறார்கள், அதில் அந்த இடத்தின் வரலாறு, தங்கத்தை பற்றிய சில விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. அது முடிந்தவுடன் எங்களை ஒரு இடத்திற்கு கூட்டி சென்றனர், அங்கு மிக பெரிய மெசின்கலுக்கு இடையில் நடந்து சென்றவுடன் ஒரு இடத்தில் அந்த சுரங்கத்தின் உள்ளே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சுருக்கமாக சொல்லியவுடன், உங்களுக்கு மாட்டி கொள்ள ஒரு தொப்பியும், இரண்டு பேருக்கு ஒரு டார்ச் லைட்டும் தருகின்றனர். அதை வாங்கி கொண்டு எங்களது அந்த பயணத்தை தொடர ஆரம்பித்தோம்.அந்த லிப்ட் இயங்கும் மேற்புற அமைப்பு 

இதில்தான் உடைக்கப்பட்ட பாறைகள் தங்கதிர்க்காக சலிக்கபடுகின்றன 
முன்னர், இங்கு தங்கம் கிடைக்கும் செய்தி அறிந்து வெள்ளைகாரர்கள் படையெடுத்து வரும்போது இங்கு இருந்த மக்களுக்கு அதை பற்றிய எந்த ஒரு ஞானமும் இல்லை எனலாம். அவர்கள் சுரங்கம் தோண்டுவதற்கு பணம் கொடுத்து கறுப்பின மக்களை அமர்தியவுடன், பல பல ஊர்களில் இருந்து எல்லாம் மக்கள் வர ஆரம்பித்தனர். இதில்தான் நிறைய போர் தோன்ற ஆரம்பித்தது. நாங்கள் 225 அடி தூரத்திற்கு பயணிக்க ஒரு லிப்ட் இருந்தது, அதன் உள்ளே நுழைந்தவுடன் நன்றாக இருந்தாலும் கீழே செல்ல செல்ல ஒரு பயம் மனதை கவ்வ ஆரம்பித்தது. நாங்கள் அங்கு சென்று இறங்கியவுடன் சுரங்கத்தின் உள்ளே வெள்ளை பெயிண்ட் அடித்து இருந்தனர். இது சுற்றுலா பயணிகளுக்கு என்று திறந்து விடப்பட்டு இருந்ததால், அவர்கள் டார்ச் அடிக்கும்போது வெளிச்சம் தெரிய வேண்டும் என்பதால் வெள்ளை பெயிண்ட் அடித்து இருந்தனர், அப்படி நாங்கள் டார்ச் அடித்தே பல இடங்களில் மை இருட்டு எனும்போது, அந்த பெயிண்ட் இல்லாமல் வெறும் பாறைகளாக இருந்தபோது நினைத்து பார்க்கவே முடியவில்லை.தினமும் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அவர்களது வேலைக்கான உபகரணங்களுடன் உயிருக்கு உத்திரவாதமில்லாத இந்த வேலையில், உங்களது கழுத்தில் மின்னும் அந்த தங்கதிர்க்காக அந்த பயணத்தை தொடர்கின்றனர் என்று நினைத்து பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இருப்பது போல அன்றைய நாளில் இந்த லிப்ட் வேலை செய்யவில்லை என்றால் அவர்கள் வெளியே வர இரண்டு நாட்கள் வரை கூட ஆகும் என்னும்போது சிறிது திகிலாக இருந்தது. முடிவில் குலுங்கலுடன் அந்த லிப்ட் அந்த 225 அடி ஆழம் தொட்டது. இந்த சுரங்கம் 4000 அடி வரை உள்ளது, உள்ளே செல்ல செல்ல உங்களுக்கு குப்பென்று வேர்ப்பதை அறிய முடிகிறது, அது மட்டும் இல்லை.....அந்த ஆழத்தில் பிரஷர் அதிகம் என்பதால் சுவாசிப்பதும் சிறிது சிரமமாக இருக்கிறது என்பதை உங்களால் நன்கு உணர முடியும்.

லிப்ட் திறக்கும்போது அந்த சுரங்கத்தின் தோற்றம்....

வெளிச்சம் அதிகம் வேண்டும் என வெள்ளை பெயிண்ட் அடித்த சுரங்க உள்புறம்
லிப்டை விட்டு வெளியே வருகின்றனர் 

அந்த சுரங்க பயணத்தின் ஆரம்பத்தில்.......

முடிவில் நான் 225 அடியில் உலகத்தின் ஒரு மூலையில் இருக்கும் ஒரு மூடப்பட்ட ஒரு தங்க சுரங்கத்தின் உள்ளே.....இனிதான் அந்த பயம் நிறைந்த, மை இருட்டில், தவறினால் நீங்கள் எங்கு என்று யாராலும் கண்டு பிடிக்க முடியாத அந்த பயணம் ஆரம்பமானது. என்னிடம் வேறு டார்ச் இல்லை, என்னுடன் கூட வந்தவர் அவரின் நண்பருடன் முன்னே செல்ல நான் ஒரு பொழுதில் தனியாக மை இருட்டில்......

மேலும் படிக்க அடுத்த பதிவு வரை பொறுங்களேன் !

Labels : Suresh, Kadalpayanangal, Saagasa payanam, Gold mine tour, Gold, Amazing tour, South Africa

Monday, June 24, 2013

அறுசுவை - பெங்களுரு "யு குக்"

ஒரு நல்ல ரெஸ்டாரன்ட் தேடி கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இந்த பெயர் "யு குக் "- You Cook ! பேரை பார்க்கும்போதே அட இது என்ன கான்செப்ட் என்று எண்ண தோன்றியது. பப்பெட் உண்டு, அது மட்டும் இல்லாமல் நீங்களும் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொள்ளலாமா என்று குழப்பாமாக இருந்தது.....அங்கு செல்லும் வரை ! அதை பற்றி இன்டர்நெட்டில் தேடி பார்த்து கொண்டிருந்தபோது எல்லாமும் நன்றாகவே இருந்தது, அது மட்டும் இல்லாமல் அது ஒரு புதிதாக தொடங்கிய உணவகம் என்ற தகவலும் கிடைத்தது, ஒரு சந்தோஷ சன்டேயில் நான் அங்கு செல்ல முடிவு செய்தது, ஒரு நல்ல முடிவுதான் என்று தோன்றியது.
பெங்களுரு இந்திரா நகரில் ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருக்கிறது இந்த ரெஸ்டாரன்ட். சிறிய இடம்தான் என்றாலும் மிகவும் பார்த்து பார்த்து அவர்கள் வடிவமைத்து இருந்தது தெரிந்தது. முதலில் அங்கு சென்றவுடன் அவர்கள் அந்த தீம் பற்றி சொல்ல ஆரம்பித்தபோது அது ஒன்றும் புதிதில்லை என்று தோன்றியது ! நான் இதற்க்கு முன் பார்பிக்யு நேசன் என்று உணவகம் பற்றி சொல்லி இருக்கிறேன், பச்சை மாமிசத்தை உங்கள் முன் உள்ள அடுப்பின் முன் வாட்டி எடுத்து தின்பது என்ற முறைதான் இங்கேயும்.....வித்யாசம் என்னவென்றால் இங்கே பல விதமான சாய்ஸ் உண்டு என்பதுதான்.   அவர்கள் உங்களை கவனிக்கும் முறையும் சிறப்பாக இருப்பதால், இனி பார்பிக்யு நேசன் செல்ல விருப்பம் உள்ளவர்கள் இங்கே செல்லலாம் !இதில் சில சிரமும் இருந்தது ?! எனது மனைவியை அங்கு அழைத்து சென்றுவிட்டு சரி நீ கொஞ்சம் சமை என்று சொன்னவுடன் முறைத்த முறைப்பில் அடுப்பு தானாக பற்றி கொள்ளும் அளவுக்கு சூடு ! அவர்கள் உங்களது முன் வைத்திருக்கும் மேடான பகுதியில் கறியை வைக்க வேண்டும், அதை சுற்றி இருக்கும் பகுதியில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது காய்கறிகள், மஷ்ரூம், கறி எல்லாம் போட்டு சிறிது உப்பு மற்றும் மிளகு தூள் போட வேண்டும், அது கொதித்து முடிந்தவுடன் அதுதான் சூப். யாரவது சமைக்க தெரியாதவர்கள் சென்றால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். நான் சூப் செய்கிறேன் என்று சொல்லி அவர்கள் கொடுத்த ஆறு வகை சாஸ் எல்லாம் போட்டு, முடிவில் அதை என்ன பேர் சொல்லி அழைப்பது என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு சென்றது எனது சமையல் திறமை.


பப்பெட் முறையில் அவர்கள் வைத்து இருந்த நல்ல சமைத்த பதார்த்தங்கள் எங்களது பசியை நன்கு ஆற்றின எனலாம். எல்லாமே நல்ல சுவை ! ஜீரா ரைஸ், காய்கறிகள், சிக்கன் வகைகள் எல்லாமே காரத்தை அளவாக போட்டு, கண்ணை கவரும் வகையில் வைத்திருந்தது நன்றாக இருந்தது. புதிதாக ஆரம்பித்து இருந்ததால் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து இருந்தனர். எங்களுக்கு பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் எல்லாம் வயசு பசங்க, அவர்கள் யாருக்கும் சமையல் தெரியவில்லை, அதனால் ஒரு பக்கம் சந்தோஷ கூச்சல், இன்னொரு பக்கம் பசிக்கும்போது எதையும் சாப்பிட முடியவில்லை என்ற ஆதங்கம் வேறு. முடிவில் அவர்கள் அதை புரிந்து கொண்டு அவர்களது செப் வரவைத்து சூப் செய்து கொடுத்தனர். உங்களது சமையல் திறமையை டெஸ்ட் செய்ய நல்ல வாய்ப்பு !! நாங்கள் சூப் செய்து முடித்தவுடன், அந்த இடத்திலேயே பெப்பர் சிக்கன் கிரேவி செய்ய தொடங்கினோம்.....முடிவில் அந்த சிக்கனே எழுந்து வந்து ஏற்கனவே செத்த என்னை ஏண்டா திரும்பவும் கொல்றே என்று சண்டை பிடித்தது.
பஞ்ச் லைன் :

சுவை -  எல்லா வகைகளும் மிகவும் நன்றாக இருந்தது, அந்த சுவையை விட நீங்கள் அங்கு சமைக்க ட்ரை செய்து அடிக்கும் ஆனந்த கூத்துதான் முக்கியம் !

அமைப்பு - சிறிய இடம், மெயின் ரோட்டில் இருப்பதால் பார்கிங் வசதி கம்மி, வேண்டுமானால் பக்கத்தில் இருக்கும் தெருக்களில் பார்கிங் உபயோகித்து நடந்து வரவேண்டும். உள் அலங்காரம் நன்றாக செய்து இருக்கின்றனர்.

பணம் - சற்று ஜாஸ்திதான், ஆனால் சுவைக்கும், அந்த அனுபவத்திற்கும் கொடுக்கலாம் ! 

சர்வீஸ் - நல்ல சர்விஸ், புதிதாக திறந்து இருப்பதால் நன்கு கவனிக்கின்றனர்.

அட்ரஸ் :மெனு கார்டு :

அவர்களிடம் சில பேக்கேஜ் இருக்கிறது, 599 ரூபாய் கொடுத்தால் அங்கு இருக்கும் பப்பெட் எதையும் நீங்கள் சாப்பிடலாம், 799 ரூபாய்க்கு பப்பெட் மற்றும் அல்கஹோல் இல்லாமல் ட்ரிங்க்ஸ் எவ்வளவு வேண்டும் என்றாலும், 1099 ரூபாய்க்கு பப்பெட் மற்றும் அல்கஹோல் ட்ரிங்க்ஸ் உடன் !
 

Labels : Kadalpayanangal, Suresh, Arusuvai, you cook, different concept restaurant, barbecue 

Friday, June 21, 2013

உலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்கா

 கொழும்பு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது இங்கு நடப்பது போல அங்கு தமிழர்களுக்கு நடக்குமோ என்பதுதான். நான் அங்கு தங்குவதற்கு முன்பு ஆயிரம் முறை யோசித்தேன் எனலாம். இங்கு புத்த பிக்குகள் தாக்கப்பட்ட பிறகு சிறிது பதட்டம் இருந்தது, இதனால் நாங்கள் அங்கு செல்லும்போது ஏதாவது நிகழ்ந்தால் என்ன செய்வது என்று பயம் வேறு, ஆனால் இந்த பதிவில் நான் அங்கு கண்ட உண்மை நிலையை சொல்ல வேண்டும் என்று ஆசைபடுகிறேன். மற்ற பதிவுகளில் சுற்றி பார்க்கும் இடங்களை பற்றி நன்கு விவரமாய் சொல்கிறேன் ! முதலில் கொழும்புவில் இறங்கியவுடன் அன்றைய இரவில் கல்லி பேஸ் என்னும் இடத்திற்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. கொழும்பு என்பது ஏர்போர்ட்டில் இருந்து பல மைல் தூரத்தில், ஏர்போர்ட் இருக்கும் இடம் நீர் சூழ்ந்து இருப்பதால் அது நீர் கொழும்பு என்று சொல்லபடுகிறது. மெயின் கொழும்பு நகரம் தூரம் அதிகம்.ராஜபக்ஷே அங்கு ஒரு ஹீரோவாக கொண்டாடபடுகிறார் என்பது கண்ணால் கண்ட உண்மை. சீனாவில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் அவர் கொண்டு வரும் திட்டங்கள் கொழும்புவில் நன்கு தெரிகிறது, அது மட்டும் இல்லாமல் மக்கள் நல திட்டங்களும் தினமும் ஒன்றாக செயல்படுத்தபடுகிறது. அங்கு தினகரன் பேப்பரில் ராஜபக்ஷேவின் பொன் முத்துக்கள் என்று தினமும் ஒன்று வரும், சிந்துபாத் கதை போல ! அங்கு தமிழ் என்பது எங்கும் காணலாம். தெரு பலகைகள், கடைகள், தமிழ் படங்கள், அரசாங்க கட்டிடங்கள் என்று எங்கும் சிங்களம் முதலிலும், தமிழ் இரண்டாம் இடத்திலும், ஆங்கிலம் மூன்றாம் இடத்திலும் எங்கும் காணும்படியாக இருக்கிறது.


நாங்கள் முதன் முதலில் சென்ற இடம் ஸ்ரீ பொன்னம்பலேஸ்வரர் ஆலயம். இங்கு தமிழ் மக்கள் சாமி கும்பிட கும்பல் கும்பலாக வந்தாலும் அவர்கள் முகத்தில் ஒரு பயத்தை காண முடிகிறது என்பது எனது கண்களில் கோளாறா அல்லது உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த ஆலயத்தில் நமது தமிழ்நாட்டில் இருப்பது போல  மாவிலக்குகள் ஏற்றபடுகிறது, தேர் வெளியே நிற்கிறது ! தமிழர்கள் அங்கு பாதுகாப்பாகதான் இருப்பதாக தோன்றுகிறது, ஆனால் வடக்கில் அப்படியா என்றால் எனக்கு தெரியவில்லை. அடுத்து நாங்கள் சில புத்த ஆலயங்களுக்கு சென்றோம், சிங்கள மக்கள் புத்த மதத்திற்கு மிகுந்த மரியாதை தருகிறார்கள் என்பது கண்கூடாக காண முடிந்தது. கொழும்புவில் சுற்றி பார்க்க அதிகமான இடம் இல்லை எனலாம். புத்த கோவில்கள், ஒரு ஜூ, பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியம், பார்க் மற்றும் பீச் மட்டுமே உள்ளது. இரண்டு நாட்கள் தங்கி இருந்தால் நீங்கள் எல்லாவற்றையும் சுற்றி பார்க்கலாம், நீங்கள் கண்டி சென்றால் இன்னும் இரண்டு நாட்கள் சுற்றி பார்க்கலாம். இப்போது சுற்றுலாவிற்கு இலங்கை அரசு அதிகம் செலவு செய்வதை நீங்கள் அங்கு பார்க்கலாம். அங்கு இருக்கும் கார்பரேஷன் கட்டிடம், பார்க், ரோடு என்று எல்லாமே புதுபிக்கபடுகிறது, இதை பற்றி மக்கள் மகிழ்ச்சியாக பேசி கொள்வதை பார்க்க முடிகிறது. இந்தியா இலங்கைக்கு உதவுவதை மக்கள் ஏற்றுக்கொண்டாலும், சீனாவில் இருந்தும் உதவிகள் வருவதை மக்கள் எத்ரிபர்க்கின்றனர். ராஜபக்ஷே ஒவ்வொரு திட்டத்திலும் அவரது பெயரும், படமும் இருக்குமாறு பார்த்துக்கொள்வதை நீங்கள் பார்க்கலாம். நிறைய இடங்களில் ப்ளெக்ஸ் பேனரில் சிரிப்பதை தமிழகத்தில் இருந்துதான் கற்று கொண்டிருக்கிறார் போல இருக்கிறது !அங்கு சுற்றி பார்ப்பதற்கு நம்ம ஊர் ஆட்டோ மீட்டர் போட்டு இருக்கிறது, நீங்கள் பயப்படாமல் ஏறி இடம் சொன்னால் அழைத்து போகிறார்கள். கீழே இருக்கும் படத்தில் ஆட்டோ டிரைவரின் தலைக்கு மேலே மீட்டர் பார்க்கலாம். சுற்றும்போது மறக்காமல் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியம் சென்று வாருங்கள், மேட்ச் நடக்காதபோதும் அங்கு சென்று அந்த கரகோஷத்தை மனதில் அனுபவிக்கலாம் ! அதை தவிர புத்த கோவில்களை மற்றும் சுதந்திர தின சதுக்கத்தை மறக்கமால் பார்க்கவும். இதை தவிர நீங்கள் நீர் கொழும்பு சென்றால் நிறைய கடைகள், பப் இருக்கிறது. எதுவும் வாங்க வேண்டுமென்றால் நீங்கள் அங்கு துணி வாங்கலாம், அது எல்லாமே சீப். அதை தவிர ஓவியங்களும் மிகவும் குறைவான விலை !


 முடிவில் நாங்கள் அங்கு இருந்து கிளம்பும்போது, மற்ற எல்லா நகரத்தை போல அந்த நகரமும் இருந்தது எனலாம். ஈழம் என்ற வார்த்தையை எடுத்தாலே அந்த மக்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தது உண்மை ! வடக்கில் ஒரு மாற்றம் நிகழ்கிறது என்பது அவர்கள் சொல்லும் ஒரு செய்தி, மக்கள் கொல்லப்பட்டது குறித்தும், அங்கு தமிழர்களின் கதி குறித்தும் ஒரு பெருத்த மௌனம் நிகழ்கிறதை காண முடிந்தது.......ஒன்று மட்டும் நிச்சயமாக புரிந்த உண்மை......ராஜபக்ஷே அங்கு ஒரு ஹீரோ.

Labels : Suresh, Kadalpayanangal, Colombo, srilanka, ulaga payanam, payanam, world tour