Tuesday, June 11, 2013

செல்ல மறந்த இடங்கள்.....!?

சென்ற வாரம் எனது நண்பனது வீட்டிற்க்கு சென்றிருந்தேன், அவனது மகன் மகா சுட்டி, அதுவும் கேள்விகளால் துளைத்து எடுப்பான். அன்று அவன் செவ்வாய் கிரகத்தை பற்றி படம் வரைந்து கொண்டிருந்தான், ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு கேள்வி வரும் அவனிடமிருந்து, "அங்கிள், செவ்வாய் கிரகம் எவ்வளவு தூரத்தில் இருக்கு ?", எனக்கு பதில் தெரியாமல் விழிக்கும்போது நண்பன் அங்கிருந்து பதில் சொல்வான். இப்படியாக என்னை சுமார் அறுபது எழுபது கேள்விகளில் இருந்து காத்திருப்பான், அப்போது அங்கு வந்த அவனது அம்மா, நண்பனை அதட்டி எல்லாவற்றிற்கும் நீ பதில் சொல்லாதே, அவனை தேடி கண்டுபிடிக்க சொல் என்றவுடன், எனது நண்பன் அவனது மகனிடம் திரும்பி "இன்டர்நெட் சென்று கூகிள் என்று டைப் செய், அதில் உனது கேள்வியை டைப் செய்தால் பதில் நொடியில் வரும்" என்று சொல்லி அவனது மொபைலில் இருந்து அதை செய்து காட்டியபோதுதான் இத்தனை நேரம் வரை அவன் செவ்வாய் கிரகத்தை பற்றி சொல்லிய பதில் எல்லாம் இதில் இருந்துதான் என்று தெரிந்தது. இதை பார்த்த அவனது அம்மா, நீ இதை இப்படி அறிந்து கொள்ள சொல்ல கூடாது, லைப்ரரி அழைத்து கொண்டு போ என்றார், அவனாக ஒரு கேள்விக்கு விடை அறிய போய் பல கேள்விகளை உருவாக்கும் களஞ்சியம் லைப்ரரி என்று சொல்லிவிட்டு, என்னிடம் திரும்பி நீங்க கடைசியா எப்போ லைப்ரரி போனீங்க என்று கேட்க்க "அதானே !!" என்று என்னை நான் கேட்டுக்கொண்டேன். வாழ்க்கையில் நமது பெற்றோர் பல இடங்களுக்கு கூட்டி சென்று இருக்கின்றனர், ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் சில இடங்களை நாம் மறந்து விட்டோம், இது போல் நாம் செல்லாத இடங்கள் எத்தனை என்று மனம் அப்போது பட்டியல் இட்டபோது மலைக்க வைத்தது, ஒரு மிக பெரிய உண்மை !ஒரு இடம்......நம் வீடு என்பது நாம் தங்கும் இடம், அதை போலவே நம் வாழ்வில் ஒரு சில இடங்கள் நமது நினைவை விட்டு அகலாது அல்லவா ? உதாரணமாக நீங்கள் நீச்சல் கற்று கொண்ட கிணறு, நாடார் பெட்டி கடை, நூலகம் என்று நாம் பல மனிதர்களை பார்த்து பழகிய இடங்கள் அல்லவா அது. "என்ன சார் உங்க பையனா..... எந்த கிளாஸ் படிக்கிற தம்பி ?" என்று உங்களது கன்னம் தடவி விசாரித்த சில இடங்களை நினைத்து பாருங்கள், வெட்கப்பட்டு நீங்கள் உங்களது பெற்றோரின் பின்னே ஒளிந்த அந்த இடங்களுக்கு எல்லாம் உங்களது குழந்தைகள் சென்று இருக்கிறார்களா ? இதுதான் அருங்காட்சியகம் என்று சொல்லி அழைத்து சென்று நமது வரலாறை காட்டிய உங்களது அப்பா உங்களுக்கு காட்டிய உலகை நீங்கள் உங்களது மகனுக்கு காட்டியது உண்டா ?யோசித்து பாருங்கள், சில இடங்கள் இன்று நாம் அரிதில் செல்லும் இடமாகிவிட்டது.......நூலகம், டீ கடை, அருங்காட்சியகம், டிக்கெட் ரிசர்வேஷன் கவுன்ட்டர், காய்கறி மார்க்கெட், போஸ்ட் ஆபிஸ், பேங்க், முனிசிபாலிட்டி ஆபீஸ், போடாநிக்கல் கார்டன், புராதன கோவில்கள், குலதெய்வம் கோவில், ஊர் திருவிழா, அரசு பொருட்காட்சி, சர்கஸ், ஊர் கல் மண்டபங்கள், ஆறு, குளம், குட்டை, கிணறு, பால்காரர் வீடு என்று அந்த பட்டியல் ரொம்பவே நீளம் இல்லையா ? சிறிது யோசித்து பார்த்தால் புரியும் அந்த சுகமும், நாம் அதை இழந்து வரும் வேதனையும்.........உதாரணமாக போஸ்ட் ஆபிசை எடுத்துக்கொள்ளுங்கள், சிறு வயதில் உங்களது தந்தை அங்கு அழைத்து சென்று சொல்லி கொடுத்ததை, ஸ்டாம்ப் வாங்கி அதை எச்சில் தடவி ஒட்டி, அதை உங்களது கைகளாலேயே போஸ்ட் பாக்ஸில் போட செய்தபோது நீங்கள் ஒரு பெரிய சாதனை செய்து விட்டதை போல உங்களது தந்தையை பார்த்ததும், அவர் உங்களது தலை தடவி மகிழ்ந்ததையும் ! இன்று.....எந்த கொரியர் ஸ்பீடா போகும் என்று நினைத்து, அதை கொண்டு அவர்களிடம் கொடுக்கிறோம், அதை எனது மகன் பார்க்கிறான், இதில் நான் என்ன சொல்லி தருவது ??

பல நேரங்களில் ஒரு சில நல்ல மனிதர்களை பார்ப்பதும் இது போன்ற இடங்களில்தான், ஒரு முறை ரயில்வே ரிசர்வேஷன் கவுன்ட்டரில் நின்று கொண்டிருந்தபோது (அது எல்லாம் பல வருடங்களுக்கு முன்பு...:-( ) அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் பேசி பழகி, பின்னர் இது போன்ற இன்னொரு சந்தர்ப்பங்களில் சந்தித்து சந்தித்து நட்பு வளர்ந்ததை எல்லாம் இன்று காண முடியுமா ? அம்மாவுடன் காய்கறி மார்க்கெட் சென்று அவர் அடித்து பேசி காய்கறி வாங்கும்போது அவரை ஒரு பெரிய ஆளாக நினைத்தது அன்று, இன்று சூப்பர் மார்க்கெட் சென்று சொல்லும் விலையை அப்படியே கொடுத்து வாங்கி வரும்போது எனது மகன் என்ன நினைப்பானோ ?நாம் இன்று நமது குழந்தைகளை கூட்டி செல்லும் இடங்களை நினைத்து பாருங்கள்......தீம் பார்க், இறைச்சி கடை, சூப்பர் மார்க்கெட், துணி கடை, பார்க், ஷாப்பிங் மால், ஏசி ரெஸ்டாரன்ட், ஆளில்லாத பிக்னிக் ஸ்பாட் என்று அவர்களை சாதாரண மனிதர்களிடம் இருந்தும், இந்த நிஜ உலகத்தில் இருந்தும் தள்ளி வைக்கும் இடங்களே. இந்த இடங்கள் அவர்களை எப்படி வளமைபடுத்தும் என்று தெரியவில்லை, முங்கு நீச்சல் அடித்து கற்ற அன்றைய கிணறு இன்றைய நீச்சல் குளம், தெருவோர டீ கடை இன்று காபி ஷாப், ரயில்வே ரிசர்வேஷன் கவுன்ட்டர் என்பது இன்று ஆன்லைன் புக்கிங், போஸ்ட் ஆபீஸ் என்பது கொரியர் கடை என்று இந்த உலகம் மாற ஆரம்பித்து விட்டது. சாதாரண மனிதர்கள் எங்கும் இருந்தும் அவர்களை நாம் பொத்தி பொத்தி வளர்க்கிறோம், ஆனால் அது சரியா ? இப்படியே சென்றால் மிருகங்களுக்கு ஒரு ஜூ இருப்பது போல சாதாரண மனிதர்களுக்கு என்று ஒரு ஜூ வரும் நாள் விரைவில் வரும் போல ?!

நான் மேலே கூறிய இடங்கள் எல்லாம் எல்லா பெற்றோரும் தங்களது குழந்தைகளை கூட்டி சென்ற இடங்கள், ஆனால் எனது அம்மா சிறு வயதில் என்னை உடல் ஊனமுற்றோர் பள்ளி, காது கேளாதோர் பள்ளி, அகதிகள் முகாம், அனாதை விடுதி, முதியோர் இல்லம், அரசு ஆஸ்பத்திரிகள், கலெக்டர் ஆபீஸ், மயானம் என்று சில இடங்களுக்கும் கூட்டி சென்றிருக்கிறார், இந்த இடங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு இன்னொரு உலகமும் இருக்கிறது, நான் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன் என்பது புரிந்தது. இந்த உலகம் பெரியது, ஒவ்வொரு இடமும் பல கலவையான மனிதர்கள் வந்து செல்லும் பகுதி, அந்த இடங்களை நமது குழந்தைகளுக்கும் காண்பிப்போம்...... வெறும் ஷாப்பிங் மால்களை அல்ல !
 

 
Labels : Ennangal, Suresh, Kadalpayanangal, Where the kids now go, place to go
 

9 comments:

 1. இப்படியே சென்றால் மிருகங்களுக்கு ஒரு ஜூ இருப்பது போல சாதாரண மனிதர்களுக்கு என்று ஒரு ஜூ வரும் நாள் விரைவில் வரும் போல ?!

  சிந்திக்கவைக்கும் எண்ணப்பகிர்வுகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி மேடம்.......உங்களை இந்த பதிவு பாதித்தது கண்டு மகிழ்ச்சி !

   Delete
 2. இனிய நினைவுகள் உங்கள் பகிர்வு மூலம் மீட்டியது... முடிவில் சொன்ன கருத்திற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார், உங்களது கருத்துக்கள் என்னை உற்சாகம் கொள்ள செய்து இது போல மேலும் எழுத தூண்டுகிறது !

   Delete
 3. ஆமாம்.. செல்ல மறந்த இடங்களில் என் தளமும் ஒன்றாகி விட்டதோ...?

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும்...அன்பாக தான் அழைத்தேன் நண்பரே... தவறாக எண்ண வேண்டாம்...

   Delete
  2. ஐயையோ...... மன்னிபெல்லாம் எதற்கு, உரிமையுடன் கோவிதுக்கொண்டேன், உங்களது பதிவுகளின் ரசிகன் நான். அதுவும் திருக்குறள் விளக்கத்தை மிகவும் ரசிப்பவன்......

   Delete
 4. Replies
  1. நன்றி கிருஷ்ணா, ஆம் இதுதான் உண்மை என்று அறிந்து கொண்டதற்கும், உங்களது கருத்திற்கும் மிக்க நன்றி !

   Delete