Wednesday, June 12, 2013

சாகச பயணம் - தண்ணீரில் இறங்கும் விமானம்

இதுவரை விமான பயணத்தில் எல்லாம் தரையில் இறங்கி இருக்கிறேன், ஆனால் இதுவரை தண்ணீரில் இறங்கும் விமான பயணம் போனதில்லை. அதை இந்த முறை மாலைதீவில் முயன்று பார்க்க நினைத்தேன். ஹாலிவுட் படங்களில் எல்லாம் தண்ணீரை கிழித்துக்கொண்டு இறங்கும் விமானத்தை பார்க்கும்போது வியப்பாக இருக்கும், அதை ஒரு முறையேனும் முயன்று பார்க்க வேண்டும் என்று நினைத்து, ஒரு இனிய நாளில் அந்த வாய்ப்பு வந்தது. அதுவும் வானத்தில் இருந்து மாலைதீவின் அழகை ரசித்துக்கொண்டு இந்த விமான பயணம், என் ஆனந்ததிற்கு கேட்கவும் வேண்டுமா என்ன ?




 
மிக சிறிய விமானம், மொத்தமே பன்னிரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும். மாலைதீவில் சில தீவுகள் படகில் சென்றால் ஒரு நாள் வரை ஆகும் தூரத்தில் உள்ளது. அங்கு செல்ல இந்த ஏர் டாக்ஸி என்னும் இந்த சிறிய வகை விமானத்தை உபயோகிக்கின்றனர். இதில் பயணம் செய்ய இடம் கிடைப்பது குதிரை கொம்பு !! என்னுடைய தொடர் நச்சரிப்பால் ஒரு தீவில் பயணிகளை இறக்கி விட செல்பவர்களுடன் சேர்ந்து பயணம் செய்து திரும்பவும் சென்ற இடத்திற்கே திரும்ப வேண்டும் என்பது ஏற்பாடு, டபுள் ஜாக்பாட் !! எல்லா விமான பயணத்தை போலவே இங்கேயும் விதிமுறைகள். முடிவில், எங்களை விமானத்தில் ஏற கூட்டி சென்றனர்.
 
 
மற்ற எல்லா விமான பயணத்திலும், விமானி வெள்ளை பான்ட் , ஷர்ட் அணிந்துக்கொண்டு சூ போட்டிருப்பார். இங்கோ வெள்ளை சட்டையும், டவுசரும் போட்டு செருப்புடன் விமானி எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். வேகமாக சென்று விமானிக்கு பின் இருக்கையில் அமர்ந்துக்கொண்டேன். அப்போதுதானே விமானியின் பார்வையில் எல்லாம் பார்க்க முடியும். மற்ற விமானம் போல விமானியின் அறைக்கு கதவெல்லாம் இல்லை !
 


 
 வெகு சில நிமிடங்களில் இந்த விமானம் மேலே எழும்பியது. இது சிறிய விமானம் என்பதால் காதை பிளக்கும் ஓசை, ஆனால் சிறிது நேரத்தில் பழகி விடுகிறது. கொஞ்சம் மேலே சென்றவுடன் கீழே காட்சிகள் தெரிய ஆரம்பிக்கிறது, மாலதீவுகள் !! சிறிய சிறிய தீவுகள், மேலிருந்து பார்க்கும்போது கடல் அந்த தீவை சுற்றி இளம் பச்சை வண்ணத்தில் என்று அற்புதமான காட்சி. கடவுள் எவ்வளவு அழகான உலகத்தை படைத்திருக்கிறார் என்பது மேலிருந்து பார்க்கும்போதுதான் தெரிகிறது.
 


 
சிறிது நேரத்தில் நாங்கள் இறங்க வேண்டிய தீவு தெரிய ஆரம்பிக்கிறது. கடலின் நடுவே பச்சையாய் மரங்கள் சூழ்ந்து தெரியும் அந்த தீவில் சிறிது தள்ளி மிதக்கும் இடம் ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். அதில் தண்ணீரை கிழித்துக்கொண்டு அந்த விமானம் தரை இறங்க, மனதில் சந்தோசத்துடன் கீழே இறங்கினேன். சுற்றிலும் கடல், இதமான காற்று என்று எங்கோ ஒரு மூலையில் நான் இருக்கிறேன் என்று நினைத்தபோது விமானம் கண்டு பிடித்த அந்த சகோதரர்களுக்கு நன்றி சொல்ல தோன்றியது !

 
 
 
 Labels : Suresh, Kadalpayanangal, Adventure trips, Saagasa payanam, air taxi, maldives

11 comments:

  1. ரசிக்க வைக்கும் அனுபவம்...

    நாங்களும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார், உங்களுக்கு இந்த பதிவு பிடித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.....தங்களது கருத்திற்கு நன்றி !

      Delete
  2. சூப்பர் அண்ணா.... ஏர் டாக்சில சார்ஜ்லாம் எப்படி அண்ணா,

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கு மிக்க நன்றி ஆனந்த், அங்கு ஒருவருக்கு 80 USD சார்ஜ் செய்தனர், ஆனால் இங்கு கொழும்புவில் சென்றபோது இதில் பாதிதான். இப்போது கேரளாவில் இது போல் தொடங்கி உள்ளனர்.......சென்று வந்து உங்களது பதிவை போடுங்கள்.

      Delete
  3. வியக்கவைக்கும் இனிய பயணம் ...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்.......தங்களது வருகையும், கருத்தும் என்னை மகிழ்ச்சி கொள்ள செய்தது.

      Delete
  4. வாவ்... அற்புதமான அனுபவம்...

    கூடவந்தது போல் உணர்வு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சதீஷ், உங்களது அஞ்சறை பெட்டி போல இதுவும் ஒரு அனுபவம் !

      Delete
  5. Replies
    1. தங்களது வருகைக்கு நன்றி கிருஷ்ணா, அங்கு நிறைய ரிசார்ட் இருந்தது நான் மெயின் தீவில் ஹோட்டலிலும், எம்புடு வில்லேஜ் ஒன்றிலும் தங்கினேன். உங்களுக்கு மேலும் விவரம் வேண்டுமென்றால் என்னை அழைக்கலாமே.

      Delete
  6. இந்தப் பதிவும் அறிமுகம் --> http://veeduthirumbal.blogspot.com/2013/06/blog-post_19.html

    ReplyDelete