Wednesday, June 19, 2013

அமெரிக்கா நியூயார்க் கலியபெருமாள் இந்திரன் !!?

சென்ற வாரத்தில் நான் எனது நண்பனது வீட்டிற்க்கு அவனது மகளின் பிறந்தநாள் என்பதால் குடும்பத்துடன் சென்றிருந்தேன், அன்று பல நண்பர்களும் வந்து இருந்ததால் அன்றைய மாலை பொழுது நன்கு கழிந்தது. கேக் எல்லாம் வெட்டி பாட்டு, மேஜிக் ஷோ, விருந்து என்று நன்றாக இருந்தது, அது முடிந்து எங்களது நண்பர்களின் ஜமா தொடங்கியது, அப்போது எனது நண்பனின் தந்தை எங்களை கடந்தபோது அவர்களிடம் எங்களை அறிமுகபடுத்த தொடங்கினான். ஒவ்வொருவரையும் இவன் பெங்களுரு, இவன் மும்பை, இவன் சென்னை, கோயம்புத்தூர் என்று எங்களின் பெயரின் முன்னே போட்டு அறிமுகபடுத்த, அவருக்கு எங்களில் பலரையும் தெரியும் என்பதால் "அப்போ, மனோஜ் என்ன செய்யறான்......அவன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறான் என்று சொன்னார்கள்" என்று சொல்ல, நாங்கள் ஒவ்வொருவரையும் சிங்கப்பூர் சரவணன், அமெரிக்கா மணிகண்டன், ஜெர்மனி சபரி, ஆஸ்திரேலியா பிரதீப், லண்டன் சந்தீப் என்று அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தோம், அருமையாக கழிந்தது அந்த பொழுது ! முடிவில் நாங்கள் சொல்லி கொண்டு கிளம்பியபோது அவர் என்னிடம் "உங்களுக்கு எந்த ஊரு ? "என்று கேட்டார் நான் " பெங்களுரு அங்கிள்"என்று சொல்ல அவர் மையமாக தலையாட்டி விட்டு "பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களுரா ?" என்று கேட்க நான் இல்லை திருச்சி என்றேன், அப்போ திருச்சின்னு பெருமையா சொல்ல வேண்டியதுதானே என்று சிரித்தார், அப்போதுதான் தோன்றியது என்றிலிருந்து எனது ஊர் பெங்களுரு ஆனது என்று, நமது ஊர் பெயரின் பெருமை எல்லாம் மறைந்து அந்த அடையாளம் எல்லாம் தொலைந்து  போன நாளை நினைத்து ! இன்று வாழும் பெங்களுருவும், சுற்றும் நாடுகளும் எனது கிளைகள்தானே அன்றி, எனது வேர் தொடங்கிய இடம் என்பது திருச்சிதானே, அப்புறம் ஏன் நான் எனது வேர்களின் விசாரிப்புக்கு நான் கிளைகளின் ஜாதகம் தருகிறேன், வேர்கள் அழுக்கானது என்பதாலா ??!


நண்பர்களின் பெயருக்கு அடுத்து நமக்கு தெரிவது அவர்களின் ஊர் பெயர்தானே ?! சில ஊர் பெயர்களை சொன்னால் உங்களுக்கு அவர்களின் பெயர் நினைவில் வரும், உதாரணமாக வளையபட்டி, குன்னக்குடி, லால்குடி, காரைக்குறிச்சி, பரமக்குடி, செம்மங்குடி, பட்டுக்கோட்டை, பாபநாசம்,....... ஜெயராமன் என்று சொன்னால் கூட யார் அவர் என்று கேட்பீர்கள், ஆனால் லால்குடி என்று சொன்னால் நீங்கள் ஜெயராமன் என்று முடிப்பீர்கள் இல்லையா ? நான் ஊர் ஸ்பெஷல் பதிவுகள் எழுதும்போது ஊர் பெயர் சொன்னால் அதன் சிறப்புகள் நிச்சயமாய் உங்களுக்கு தெரியும் இல்லையா.......உதாரணமாக மணப்பாறை முறுக்கு, சிவகாசி வெடி, திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலைமிட்டாய் என்று ! இந்த ஊர்களின் பெயர்கள் எல்லாம் சொல்லும்போது நீங்கள் அந்த ஊர்காரராய் இருந்தால் பெருமை படுவீர்களா இல்லையா ? பின்னே தம்பிக்கு எந்த ஊரு என்று கேட்க்கும்போது அமெரிக்கா என்று சொன்னால் எப்படி ? இவ்வளவு ஏன் பதிவர்கள் எல்லோருக்கும் தெரிந்த திண்டுக்கல் தனபாலன் சார் அவரது ஊரின் பூட்டுக்கு அடுத்து உங்களுக்கு தெரியும்தானே ?





நான் கல்லூரியில் படிக்கும்போது நகரத்தில் பிறந்து வளர்ந்த நண்பன் ஒருவன் எனது ஊருக்கு வரும்போது எல்லாம் வயல் வெளிகளுக்கு போய் வருவோம், அப்போதெல்லாம் அவன் நாற்று நடுவதை அருகில் சென்று பார்ப்பான், எனக்கு அது தினமும் காணும் காட்சியால் தூரத்தில் இருப்பேன். பல நாட்கள் இப்படி இருக்க, ஒரு நாள் எனது அருகில் வந்து "மச்சி, இங்க அசலூர் என்று ஒரு ஊர் இருக்குதா, அங்க என்னைய போல ஒருத்தன் இருக்கான் போல...."என்றான். நான் விழிக்க, அவனை கடந்து சென்ற எனது ஊர்க்காரர், என்ன தம்பி புதுசா இருக்குது....அசலூரா என்று கேட்க, அவனோ இல்லைங்க நான் அறியலுர்காரன் என்று சொல்லிவிட்டு என்னை பார்க்க, அப்போதுதான் தெரிந்தது அவன் கிராமத்து பாஷையான அசலூர் = வெளியூரா என்று கேட்க்க அவனோ அதை ஒரு ஊர் பெயராகவே கருதிவிட்டான் என்பது ! இன்றும் அவன் எங்களுக்கு அசலூர்காரன்தான் !! ஒரு ஊர் பெயர் என்பது எத்தனை எத்தனை சிந்தனைகளை தூண்டி விடுகிறது....அது மட்டும் இல்லை, பெரியவர்கள் ஊர் பெயரை கொண்டே அந்த மனிதர்களின் குணங்களை சொல்லி விடுவார்கள் தெரியுமா ?! கோயம்புத்தூர் என்றால் நக்கல், மதுரை என்றால் பாசகார பயலுக, ராமநாதபுரம் என்றால் கோவம் ஜாஸ்தி (வெயில் ஜாஸ்தி இருக்கும் என்பதாலாம்) என்று எல்லாம் சொல்வார்கள்.




பலர் ஊர் பெயர் கேட்டால் நகரத்தின் பெயரையே சொல்வார்கள், உதாரணமாக பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஆட்டையாம்பட்டியாக இருந்தாலும், எந்த ஊர் என்று கேட்டால் சேலம் என்று சொல்வார்கள், கவனித்து இருக்கிறீர்களா ? உதாரணமாக, எந்த ஊர் என்றால் சேலம், சேலத்தில் எங்கே என்றால் கொஞ்சம் வெளியே, நரசிங்கபுரம் என்பார்கள், அப்படியா அங்க எங்கே என்றால், முடிவில் ஆட்டையாம்பட்டி கிராமம் என்று நெளிந்து கொண்டே சொல்வார்கள். நகரத்தில் வாழ்வதுதான் பெருமையா என்ன ? கிராமத்தில் இருந்து வந்தேன் என்று சொல்வதாலும், அந்த ஊரின் பெயர் சொல்வதாலும் என்ன குறைச்சல் என்று தெரியவில்லை, இன்று நகரத்தில் வாழும் ஒவ்வொருவரும் கிராமத்தில் இருந்து வந்தவர்களே, இன்றும் குலதெய்வ கோவில் என்பது கிராமத்தில்தான் உள்ளது, திருவிழா என்றால் நகரத்தில் இருந்து ஓடும் மனிதன்தான் இன்றைய நகரத்து மனிதன். நான் நகரத்தில் பிறந்தவன், நகரத்தில் வாழ்பவன் என்று சொல்லும் அனைவருக்கும் குலதெய்வ கோவில் என்பது ஒரு கிராமத்தில்தான் இருக்கிறது என்பது உங்களுக்கு புரிந்தால், நகரம் என்பது கிராமத்து மக்கள் சேர்ந்து உருவாக்கிய ஒரு கிராமம்தான் என்பது உங்களுக்கு எளிதில் புரியும்.


ஒரு ஊரின் பெயர் என்பது தந்தையின் பெயருக்கு அடுத்து பெருமையாய் சொல்ல வேண்டிய ஒன்று, ஆனால் இந்த காலத்தில் தந்தையின் பெயரே சொல்வதற்கு கூச்சப்படும் இந்த நகரவாசி, ஊர் பெயரை சொல்லவா போகிறான் ? ஒரு கிராமத்திற்கு நீங்கள் சென்றீர்கள் என்றால் சண்முகம் மகனா, அவன் இப்போ சீமையில போய் நல்லா இருக்கிறான் என்று பெருமையாய் சொல்லி பார்த்திருப்பீர்கள். ஆனால் அதே நபர் அந்த சீமையில் நான் அந்த கிராமத்தை சேர்ந்தவன் என்று பெருமையாய் சொல்லி இருக்கிறாரா என்ன ? பெயரின் பின்னே அந்த ஊர் பெயர் எல்லாம் போட வேண்டாம், ஆனால் அந்த ஊரை பெருமையாய் சொன்னால் நமது அந்த போலி கௌரவம் குறைந்து குறைந்து விடும் என்று நீங்கள் நினைத்தால் அடுத்த முறை தாயின் பெயரையும் மாற்றி சொல்ல முடியுமா என்று முயன்று பாருங்கள் !


Labels : Suresh, Kadalpayanangal, Ennangal, Why shame of telling your village name, birth place

14 comments:

  1. அட போங்க சார்.... நன்றி நன்றி...

    நீங்கள் சொல்வது போல் தொழில் விசயமாக வாரம் ஒரு முறை சேலம் செல்வதுண்டு... (இளம்பிள்ளை, ஜலகண்டபுரம்) ஆனால் ஆட்டையாம்பட்டி உள்ளவர்கள் தனது ஊர் பெயரை சொல்வதில்லை... (சிலரைத் தவிர...)

    முடிவில் நச்...........!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தனபாலன் சார் ! உண்மைதான் நான் கண்டவற்றை எழுதினேன்........

      Delete
  2. அந்த ஊரை பெருமையாய் சொன்னால் நமது அந்த போலி கௌரவம் குறைந்து குறைந்து விடும் என்று நீங்கள் நினைத்தால் அடுத்த முறை தாயின் பெயரையும் மாற்றி சொல்ல முடியுமா என்று முயன்று பாருங்கள்/

    /அருமையாகச் சொன்னீர்கள்
    மதுரைக்குள் எங்கள் ஊரைக் கேட்கையில்
    அவனியாபுரம் எனச் சொல்வேன்
    வெளியூர் எனில்மதுரை எனச் சொல்வேன்
    அப்ப்டிச் சொல்லவிவில்லையெனில் அவர்கள்
    திருமப ஒரு கேள்வி கேட்க வேண்டிவரும் என்பதால்
    படங்களுடன் பகிர்வு அருமை
    தொடர வாழ்த்துக்கள்


    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் ! உங்களது கருத்து மிக சரி, ஆனால் உள்ளூரில் இருப்பவர்களே நான் சென்னை, பெங்களுரு என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் வருத்தமான விஷயம்.

      Delete
  3. Visit : http://veeduthirumbal.blogspot.com/2013/06/blog-post_19.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன் சார் ! மற்றவர்களை பாராட்டி மகிழ ஒரு மனம் வேண்டும், அதை உங்களிடம் என்றும் காண்கிறேன். வீடு திரும்பலில் எனது பதிவு பற்றி திரு. மோகன் அவர்கள் போட்டதற்கு உடனே எனது தளத்தில் தெரியபடுத்தி என்னை மகிழ்ச்சி கடலில் நிஜமாகவே திக்கு முக்காட வைத்து விட்டீர்கள், இதற்க்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். உங்களது போன் நம்பர் தயவு செய்து கொடுங்களேன்.......

      Delete
  4. நீங்க சொன்ன கருத்துல எனக்கு கொஞ்சம் உடன்பாடு இல்லை. நானும் சில சமயம் எங்க ஊரான மலையாம்பட்டியை சொல்றது இல்லை. அதுக்கு காரணம் எங்க ஊர் அவ்வளவா யாருக்கும் தெரிஞ்சிருக்காது. அதுவே ராசிபுரம் அல்லது சேலம்னா சுலபமா புரிஞ்சிப்பாங்க. சரியான இடம் சொல்ல சொல்லி கேக்கறவங்களுக்கு எங்க கிராமத்து பேரை சொல்லுவேன். உள்ளூர்ல கேட்டா எங்க கிராமத்து பெயரையும், வெளியூர்ல சொல்லும்போது ராசிபுரம்ன்னோ அல்லது சேலம்ன்னோ சொல்லுவேன்.

    எனக்கு தெரியல, நீங்க சொல்ற மாதிரியான ஆட்களை நான் சந்திச்சதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, உங்களது கருத்துக்கு மிகவும் நன்றி, அதை நான் ஏற்று கொள்கிறேன்.....அதே நேரம் இந்த பதிவு நான் உணர்ந்து, அனுபவித்த ஒன்று. நாம் சந்திக்கும் மனிதர்கள் எல்லாம் நமது ஊரை சேர்த்தவர்கள் இல்லை, இந்த பத்து வருடத்தில் நான் சந்தித்த மனிதர்களிடம் திருச்சி என்ற எனது ஊரையும், நான் இருக்கும் பெங்களுருவையும் வார்த்தை சிக்கனதுக்காக சொல்லி இருக்கிறேன்......ஆனால் இன்று நினைத்து பார்த்தால் நான் ஏன் அந்த சிக்கனத்தை கடை பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனது ஊரை பெருமையாக சொல்லவும், அதை அடுத்தவரிடம் எங்கு இருக்கிறது என்று சொல்லவும் சில நொடிகளை நாம் செலவழிக்க மறுக்கிறோம் என்பதே எனது பதிவில் இருக்கும் ஆதங்கம்....... நண்பரே தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  5. Replies
    1. நன்றி கிருஷ்ணா..... நீங்கள் சொல்வது போல இதுதான் ரியல் ஆக இருக்கிறது இன்று !

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. ஆமா அண்ணா .., பல வருசமா நாடோடியா வாழ்ந்துட்டேன் இப்போ என் சொந்த ஊரு எதுன்னு எனக்கே மறந்து போச்சி ...

    ஊரும் பேரும் ரொம்ப முக்கியம்னு சொல்லுற உங்க கருத்த நான் ஒத்துக்குறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்களது கருத்துக்கு மிக்க நன்றி ஆனந்த், நீங்கள் தற்பொழுது பெங்களூரில் இருப்பதாக சொன்னீர்களே...... சந்திக்க இயலுமா ?

      Delete
    2. மிக்க மகிழ்ச்சி அண்ணா....கூடிய விரைவில் சந்திக்கலாம் அண்ணா

      Delete