Wednesday, July 31, 2013

அறுசுவை - கோயம்புத்தூர் "அரிசி மூட்டை" உணவகம்

பெயரை பார்த்தவுடன் இது ஒரு கிண்டல் பதிவு என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள் ! கோயம்புத்தூர் மக்களுக்கு நக்கல் சிறிது அதிகம் என்று கேள்விபட்டிருக்கிறேன், ஆனால் அதை இன்றுதான் நேரில் பார்த்தேன் ! கோவை நேரம் ஜீவாவையும், கோவை ஆவி, உலக சினிமா ரசிகன், எழில் மேடம் அவர்களை எல்லாம் சந்தித்துவிட்டு, என்னுடைய நண்பர்களுடன் ஒரு நல்ல உணவகத்திற்கு சாப்பிட போக வேண்டும் என்று நினைத்தபோது ஒரு நண்பன் அரிசி மூட்டைக்கு போகலாம் என்று சொன்னபோது அது ஒரு உணவகத்தின் பெயர் என்று தெரியாமல் முழித்தோம். பெயரே வித்யாசமாக இருக்கிறது என்று நினைத்தால், உணவகத்தின் உள்புறமும், மெனுவும் கூட வித்தியாசம்தான் !



முதலில் நுழைந்தவுடன் கண்ணில் படுகிறது வெளியே பரோட்டா மாஸ்டர் செப் உடையுடன் ஹாப் பாயில் போடுவது ! அதை கடந்து செல்லும்போது உள்ளே AC போட்டு சுத்தமாக டேபிள் எல்லாம் இருந்தது கண்டு ஆச்சர்யம். பின்னர் அவர்கள் கேள்வி எதுவும் கேட்க்காமல் மெனு கார்டுக்கு முன்பு சூடாக ரசம் கொண்டு வைத்தவுடன் புருவம் உயரத்தான் செய்கிறது. பின்னர் மெனு கார்டு கொடுக்கும்போது என்ன கார்டு பாதிதான் இருக்கு, மீதி எங்கே என்று தேட ஆரம்பிக்கிறோம், முடிவில் மெனுவே அவ்வளவுதான் எனும்போது ஆச்சர்யம்தான் !


நாங்கள் அங்கு சென்று இருந்தபோது நல்ல பசி என்பதால் பரோட்டா, கோழிக்கறி சால்னா ஆர்டர் செய்துவிட்டு அடுத்து என்ன என்று பார்த்தபோது மிக சில ஐட்டமே இருந்தது ஏமாற்றமே (ஆனால் எல்லாமே சுவையாக இருந்தது கண்டு மகிழ்ச்சி !) முடிவாக மனதை தேற்றிக்கொண்டு, கோழி மிளகு வறுவல், கோழிகால் பிரட்டல், தோசை, கலக்கி என்றெல்லாம் ஆர்டர் செய்து நிமிர்வதற்குள் தட்டில் சூடாக பஞ்சு போன்ற பரோட்டா வந்து விழுந்தது, அதன் மேலே சால்னா ஊற்றி ஒரு வாய் எடுத்து வைத்தால் அப்படியே கரைந்தது ! பின்னர் வந்த கோழி மிளகு வறுவலுடன் தோசையை பியித்து வைத்தபோது சும்மா அதிருதில்ல என்று தோன்றியது ! பின்னர் வந்த கொத்துபரோட்டா எல்லாம் நிமிடத்தில் காணமல் போனது ! கோழிகால் பிரட்டலில் நன்கு வேக வைத்தகோழியின் மீது நல்ல காரசாரமான சால்னா ஊற்றி சூடாக வைத்தபோது...... ம்ம்ம்ம்ம் !!


 

 முடிவில் எல்லாவற்றையும் காலி செய்துவிட்டு நிமிர்ந்தபோது ஒரு நல்ல உணவகம் என்று தோன்றுவதை தவிர்க்க முடியாது !




பஞ்ச் லைன் :

சுவை -   பரோட்டாவும் சால்னாவும் பின்னி எடுக்கிறது போங்கள்! வெகு சில ஐட்டங்கள்தான் ஆனால் நல்ல சுவை !

அமைப்பு - சிறிய இடம், மெயின் ரோட்டில் இருப்பதால் பார்கிங் வசதி இருக்கிறது, நல்ல உள் அமைப்பு  !

பணம் - நல்ல சாப்பாடிற்கு கொடுக்கலாம் பாஸ்! !

சர்வீஸ் - நல்ல சர்விஸ், வெகு சில சப்ளையர் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தால் இதையே எதிர் பார்க்க முடியாது.

அட்ரஸ் :

கோவை அவினாசி ரோட்டில் இருக்கிறது.




மெனு கார்டு :




Labels : Arusuvai, Coimbatore, Arisi mootai, Suresh, Kadalpayanangal, different restaurant

Tuesday, July 30, 2013

ஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 1)

சிவகாசி என்றால் எல்லோருக்கும் தெரியும் வெடி பேமஸ் என்று, ஆனால் அதை இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக தேடி அலையும்போது நான் பட்ட பாடு இருக்கிறதே !! முதலில் ஒரு நண்பர் மூலம் வெடி பாக்டரி பற்றி கேள்விப்பட்டு அங்கு பார்க்க போனேன், அங்கு எனது கேமரா மூலம் போட்டோ எடுக்க கூடாது என்று சொல்லி விட்டனர். பின்னர் அங்கிருந்தே இன்னொரு நண்பர் மூலம் இந்த வெடி பாக்டரி சுற்றி பார்க்க அனுமதி வாங்கினேன். பொதுவாக வெடி பாக்டரி என்றால் நிறைய விதி இருக்கிறது. அது ஊரை விட்டு தள்ளி இருக்க வேண்டும், பழங்கால கோவில்கள் பக்கத்தில் இருக்க கூடாது, சல்பர் அதிகம் இருக்கும் இடம் இருக்க கூடாது என்று பல விதிகள். இதனால் இந்த பாக்டரி ஆள் அரவம் இல்லாமல் இருக்கும் ஒரு இடத்தில், மனித நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியில் இருந்தது, இப்போதெல்லாம் அதிகமாக ரைட் வருகிறது என்பதால் எனது காரை பார்த்தவுடன் பரபரத்தது அந்த பகுதி ! ரொம்ப முக்கியமான விஷயம், இந்த ப்ளாக் சுமார் மூன்று பகுதிகளாவது வரும்...... 

பகுதி - 1 : எல்லோரும் விரும்பும் சரம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று
பகுதி - 2 : வெடி மருந்து கலப்பது, திரி தயாரிப்பு, புஸ்வானம், பென்சில்
பகுதி - 3 : வியாபாரம், பேக்கேஜ், பொதுவான சிரமங்கள், புது வெடிகள் தயாரிப்பு

வாருங்கள் நாம சரம் எப்படி தயாராகிறது என்று பார்ப்போம் !


இந்த பயணத்தின் முடிவில் வெடியை பற்றி நான் நினைத்து வைத்தது எல்லாம் மாறியது எனும் அளவுக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பொதுவாக வெடி என்பது வெடிக்கும்போது சத்தம், ஒளி மற்றும் வெப்பம் ஆகியவற்றை வெளிபடுத்த வேண்டும். இதன் கலவை என்பது ஒன்றுதான், ஆனால் அதை மிக்ஸ் செய்யும் விதத்தை பொறுத்து வெடி மாறும், உதாரணமாக அதிகமாக ஒளி வேண்டும் என்று அந்த வெடி மருந்து போட்டால் அது புஸ்வானம், அதிகமான சத்தம் வேண்டும் என்று அந்த மருந்து போட்டால் அது லட்சுமி வெடி ! இதன் கலவை என்பது ஒன்றுதான், ஆனால் கலக்கும் விதம்தான் அது என்ன வெடி என்பதை தீர்மானிக்கிறது ! இதை கலக்குபவர்கள் எல்லாம் டிகிரி படித்து விட்டு வருவதில்லை........ கேள்வி ஞானம் வைத்து செய்வதால்தான் விபத்து நேர்கிறது ! பொதுவாக இந்த வெடி தயாரிக்கும் இடம் பார்த்தால் ஒரு சிறிய அறையில் நான்கு கதவு கொண்ட இடம், இதுவே வெடி மருந்து தயாரிப்பு அல்லது மிக்சிங் ஆகா இருந்தால் அதை சுற்றி ஒரு சுற்று சுவர் (ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அது அடுத்த இடத்திற்கு 
பரவாமல் தடுக்க ) அவ்வளவுதான். அரசாங்கத்தின் விதிப்படி ஒவ்வொரு அறையும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருக்க வேண்டும், கீழே உள்ள படத்தில் தெரியும் ஒவ்வொரு அறையும் வெடி செய்யும் இடம் !
வெடி பாக்டரியின் தோற்றம்..... ஒவ்வொரு அறையும் இப்படி தள்ளிதான் இருக்கும் !

சரி, நாம் சரம் செய்வதை பார்ப்போம் வாருங்கள் ! இந்த சரம் எல்லாமே சிகப்பு கலர் தாளில்தான் வரும் (அது ஏன், சிகப்பு மட்டும் என்பதற்கு அவரிடம் விளக்கம் இல்லை...... சிகப்புதான் என்கிறார், தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் !) அந்த தாள் ஓட்டுவது என்பது வெளியே ஒரு இடத்தில செய்கிறார்கள். ஒரு பெரிய டியுப் போன்று தாளில் செய்து காய வைக்கின்றனர். அது நன்கு காய்ந்த பின் ஒரு குறிப்பிட்ட அளவில் பெரிய கட்டர் கொண்டு கத்தரிக்கின்றனர். நீங்கள் அங்கு சென்று பார்க்கும்போதுதான் தெரியும் அது மழை போல பொழியும் ! முடிவில் அதை ஒரு வட்டமான தாளில் சுருட்டி கட்டி விடுகின்றனர், இப்படி கட்டப்பட்ட வட்டமான இடத்தில் 1000 வெடிகள் வரை இருக்கும் !

சரம் டியுப் !

சரம் சரமாக கட் செய்யபடுகிறது !


கட் செய்யப்பட்ட சரம் இப்படிதான் வட்டமாக அடுக்கப்பட்டு வரும் !

இந்த வெடி மருந்து என்பதில் பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் மற்றும் அலுமினியம் பவுடர் கலக்கின்றனர். இதில் கலர் வருவதற்கு சோடியம் நைட்ரேட் மற்றும் கெமிக்கல் உப்புக்கள் கலக்கின்றனர், ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு கலவை, கீழே இருக்கும் சார்ட் பார்த்தால் உங்களுக்கே புரியும். முன்பே சொன்னது போல இந்த கலவையை இவர்கள் தங்களது வாழ்வின் அனுபவங்களின் மூலமே செய்கின்றனர். சில வெடிகள் புஸ் ஆவது இதனால்தான். வெடியின் அமைப்பை என்றாவது உன்னித்து கவனித்து இருக்கின்றீர்களா ?! கீழே இருக்கும் படத்தை பாருங்கள், ஒவ்வொன்றாக விளக்குகிறேன் !

கலர் கலராம் காரணமாம் !
வெடியின் அமைப்பு !

மேலே இருக்கும் வெடி படத்தை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ! ஒரு சின்ன வெடியில் என்ன என்ன இருக்கும் என்று பார்ப்போமா ? 
  •  வெடி டியுப்
  • கீழே மண் கொண்டு அடைக்கப்படும்
  • வெடி மருந்து
  • வெடி திரி - திரி, மருந்து, பேப்பர்
  • அதை அடைக்கும் மண் 
 இப்போ நமக்கு பண்டில் பண்டிலாக பேப்பர் வந்து விட்டது, அதில் வெடி மருந்து உள்ளே போட்டால் அடுத்த வழியாக வந்து விடுமே, ஆகவே அதை களிமண் மற்றும் பசை கலவை கொண்டு அடைக்க வேண்டும். ஒருவர் களிமண் கலவை தயார் செய்ய, இன்னொருவர் சரசரவென்று ஒரு பக்கத்தை மட்டும் அடைத்து வெயிலில் காய வைக்கின்றார் ! அது காய்ந்து முடிந்தவுடன் இன்னொரு பெண்மணி அதனுள்ளே மருந்தை அடைத்து அடைத்து தயார் செய்கின்றார்.

வெடியின் அடி பாகம் களிமண்ணினால் அடைக்கப்படும் !

அடைக்கப்பட்டதை காய வைக்கின்றனர், அருகில் அதில் மருந்து உள்ளே அடைக்கின்றனர் !

சரம், இப்போது வட்டமாக !!

இப்போது வெடி எல்லாம் ரெடி, அதற்க்கு திரி ? இது தயார் ஆகும் விதம் பற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன், இல்லையென்றால் இந்த பதிவு ஒரு தீபாவளி மலர் போல ஆகிவிடும் ! இப்போது திரி ரெடி என்று வைத்து கொள்வோம், அதை சரியானபடி கட் செய்வார்கள், அதைதான் கீழே பார்க்கிறீர்கள்.

சின்ன திரி, பெரிய வேலை !
இப்போ திரி ரெடி, வெடி ரெடி. இப்போது இது இரண்டையும் இணைக்க வேண்டும். வெடி மருந்து நிரப்பப்பட்ட டியூபில் இந்த திரியை இணைக்க இவர்கள் முதலில் திரியை தண்ணீரும் சில கெமிக்கல் கலக்கப்பட்ட ஒன்றில் திரியின் ஒரு முனையை நனைக்கின்றனர் (கீழே உள்ள படத்தில் அந்த அம்மாவிற்கு பக்கத்தில் ஒரு டப்பாவில் கருப்பாக தெரிகிறது பாருங்கள் !), பின்னர் அதை சாரா சரவென்று வெடியின் உள்ளே சொருகுகின்றனர். இதை அவர்கள் செய்யும் வேகத்தை பார்த்தால் மெசின் கூட இவ்வளவு வேகத்தில் செய்யாது என்றுதான் உங்களுக்கு தோன்றும் !
மருந்து அடைக்கப்பட்ட சரம்..... திரிக்கு வெயிடிங் !
திரியை உள்ளே போட்டாச்சு !
மேலே சொன்னது முடிந்தவுடன் அதை காய வைத்து அந்த வட்டமாக சுற்றப்பட்ட காகிதத்தை எடுத்தால் மலை மலையாக வெடி ரெடி ! கீழே பாருங்கள், எவ்வளவு வெடி என்று..... அப்படியே எடுத்து வெடிக்க வைக்க வேண்டும் என்று தோன்றவில்லை !


சரம் இப்போது ரெடி சார் ! வெடிக்க வரீங்களா !

இந்த ஒத்தை வெடியை இப்போது பூவை போல பின்னினால் சரம் ரெடி ! ஒரு வெடியை எடுத்து பெண்கள் தலை பின்னுவதை போல பின்ன ஆரம்பிக்கின்றனர். எனக்கும் சொல்லி கொடுத்து அதை நான் உட்கார்ந்து பின்ன ஆரம்பித்தேன், அவர்கள் ஒரு முழம் சரம் பின்னி முடித்தபோது நான் அப்போதுதான் பத்து வெடிகளை முடித்திருந்தேன் ! கை எல்லாம் வெடி மருந்து என்று வேடிக்கையாக இருந்தது எனக்கு ! கீழே இருக்கும் படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும் அவர்கள் வேலை செய்யும் முறை.

எத்தனை முழம் சரம் வேண்டும் சொல்லுங்க....


சரம் சரமாக சரம் ரெடி, அடுத்து அதை பக்காவாக பேக் செய்ய வேண்டுமே ! அதற்கும் ஒரு ரூம் இருந்தது. உள்ளே ஒரு ஆள் அந்த வெடிகளை எல்லாம் எடுத்து பண்டில் கட்டி கொண்டிருந்தார். அவருடன் உட்கார்ந்து நானும் 15 நிமிடத்தில் ஒரு பண்டில் கட்டினேன், அவரோ அதற்குள்ளாக வெறும் 20 பண்டில்தான் கட்டினார் என்றால் பாருங்களேன் ! இந்த பண்டில் கட்ட பாக்ஸ், அதை செய்யும் முறை, அதை சேமிக்கும் இடம் என்று எல்லாம் அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன் ! சரி உங்களுக்கு எத்தனை முழம் சரம் வேண்டும் என சொல்லுங்கள்...... அட சொல்லுங்கண்ணே சொல்லுங்க !!
பாக்கெட் போடலாம் வாங்க......


Labels : Oor special, Sivakasi, Fire works, crackers, Suresh, Kadalpayanangal

Monday, July 29, 2013

சாகச பயணம் - தசாவதாரம் புகழ்.....செக்வே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் !

ஹாலிவுட் படங்கள் மற்றும் தசாவதாரத்தில் எல்லாம் இந்த வண்டி வரும். பார்ப்பதற்கு மிகவும் புதுமையாக இருக்கும், இதை எப்படி ஓட்டுகிறார்கள் என்று ஆச்சர்யம் வரும், எனக்கு இதை ஓட்டுவதற்கு ஒரு வாய்ப்பு வந்தபோது நிஜமாகவே வானுக்கும், மண்ணுக்கும் மனம் குதித்தது ! பலருக்கு இதன் பெயர் என்னை போலவே தெரியாது இருக்கும்...... இது செக்வே எலெக்ட்ரிக் வெஹிகிள் என்பார்கள். இது இரண்டு வீல் கொண்ட, தானாகவே சமநிலை செய்து கொள்ளும், மின்சாரத்தில் இயங்க கூடிய ஒரு வாகனம். எனது சிங்கப்பூர் பயணத்தின்போது எதேச்சையாக செந்தோசாவிற்கு சென்றிருந்தேன், அங்கு இது இருந்தது ! யாராவது தசாவதாரத்தில் எங்கே இது வருகிறது என்று யோசித்தால்.... கமலிடம் அந்த ரகசிய போர்முலாவை விற்க சொல்லி பேசி கொண்டே செல்லும் அந்த காட்சியில் இதை அவர்கள் ஓட்டுவார்கள் !


முதலில் இதற்க்கு பணம் செலுத்திவிட்டு நானும் எனது மனைவியும் ஒரு டூயட் பாடலாம் என்று அவரவர்க்கு ஒரு வண்டி எடுத்துக்கொண்டோம். இதை எப்படி இயக்க வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிட அவகாசத்தில் சொல்லி கொடுக்கின்றனர், பின்னர் இன்னும் ஐந்து நிமிடம் அதை ஒரு சிறிய பாதையில் இயக்க வேண்டும். நீங்கள் அதை சரியாக செலுத்த முடியும் என்ற நம்பிக்கை வரும்போது மட்டுமே அவர்கள் அதை ஒரு தூரமான பாதையில் பயணிக்க அனுமதிக்கின்றனர். வழக்கம்போலவே சோதனை எலியாக (?!) எனது மனைவியை முதலில் அந்த வாகனம் ஓட்டும் பயிற்சிக்கு அனுப்பிவிட்டு நான் தூரத்தில் இருந்து கவனித்தேன் ! முகத்தில் மரண பயத்துடன் அவர் தடுமாறி விழ, அந்த ட்ரெய்னரோ மீண்டும் மீண்டும் பயபடாதீர்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். முடிவில் அவரது காலில் வண்டியை ஏற்றிவிட்டு அதில் இருந்து விழுந்தபோது இங்கு எனக்கு வயிற்றில் பயத்தில் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது ! அந்த மகானுபாவன் என்னிடம் வந்து சார், உங்க மனைவி ரொம்ப பயபடுறாங்க, இந்த வாகனத்தை ஓட்டுவதற்கு அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, நீங்க வேணுமின்னா ரெண்டு ரவுண்டு போயிட்டு வாங்களேன் என்றார்...... அப்போது எனது மனைவி தாலியை வெளியே எடுத்து கண்ணில் ஒற்றி கொண்டிருந்தார் !

டேய்..... சொன்னா கேட்க மாட்டியா..... உன்னையெல்லாம் @#$%ˆ&& என்று அன்பாக சொன்ன எனது பயிற்சியாளர் 
அவர் பயிற்சியில் சொன்னது என்பது இதுதான்....... வண்டி சுயமாகவே சமநிலை செய்து கொள்ளும், அதனால் நீங்கள் விழ வாய்ப்பே இல்லை. இந்த ஹாண்டிலை முன்னே சிறிது சாய்த்தால் வண்டி முன்னே போகும், எவ்வளவு சாயகின்றீர்களோ அது அவ்வளவு வேகமாக போகும், பின்னால் சாய்த்தால் வண்டி வேகம் குறையும், முழுதுமாக பின்னால் இழுத்தால் வண்டி நின்று விடும் ! மண்டையை ஆட்டி ஆட்டி நான் கேட்கவும், அவர் நான் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்து விட்டு, என்னை அதில் ஏற்றி விட்டு எங்கே கொஞ்சமாக முன்னே அந்த ஹாண்டிலை சாயுங்கள் என்று சொல்ல, நான் பார்முலா 1 கார் பந்தயத்தில் காரை செலுத்துவதை போல செய்யவும், வண்டி விசுக்கென்று என்னை முன்னே இழுத்து சென்றது (நல்ல வண்டிதான், என்னுடைய எடையை நன்கு இழுத்தது :-) ), அவர் ஜாக்கி சான் ஸ்டைலில் ஓடி வந்து அதை நிறுத்தினார். பின்னர் ஒரு ஐந்து நிமிடத்திற்கு அவர் கொடுத்த பயிற்சியில் எனக்கு நம்பிக்கை வந்தது. அவர் என்னை அந்த நீளமான பாதையில் செல்ல சொன்னபோது, நான் திரும்பி எனது மனைவியை தேடினேன்.......... எனது கண்களுக்கு அவர் அப்போது மஞ்சள் புடவை கட்டி, வேப்பிலையை கையில் வைத்து கொண்டு, முன்னே பொங்கல் பானையும், அதற்க்கு சிறிது தள்ளி பூ குழியும் (தீ மிதி) இருந்தது போல தெரிந்தது பிரமைதான் என்று நான் அதை முடித்து விட்டு வந்தபோது தெரிந்தது.





நான் அந்த பாதையை தேந்தெடுத்து எனது மனைவிக்கு டாட்டா காண்பிக்கவும் அதில் எனது சமநிலையை இழந்தேன், ஓடி வந்த அந்த பயிற்சியாளர் என்னை தாங்கி பிடித்து மனதினுள்ளே "நீ என்ன லண்டனுக்கா போற, இங்கே போயிட்டு ஓடி வந்திட போற, அதுக்கு எதுக்கு இந்த பில்ட்-அப்"என்று கூறிக்கொண்டே, என்னை சதா பாணியில் "போய்யா..... போ"என்று அன்பாக அனுப்பி வைத்தார். நான் அந்த மரதினிடையே இருந்த பாதையில் செல்ல ஆரம்பித்தபோது எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது....... எனக்கு முன் ஒருவர் மெதுவாக செல்லும் வரை !! அவரை பார்த்தவுடன், அவரை விட நான் நன்றாக ஒட்டுவதாக நினைத்துக்கொண்டு கொஞ்சம் ஸ்பீட் கொடுத்து அவரை தாண்டி நான் செல்ல, பெருமையாக நான் திரும்பி ஒரு லுக் விட, என்னை புரட்டி தள்ளியது அந்த வண்டி ! வண்டியிலிருந்து கீழே நான் விழவில்லை என்றாலும் அது ப்ரேக் பிடிக்காத தண்ணி லாரி போல ஓடியது என்பதுதான் நிஜம் !




நல்லாதானே போய்கிட்டு இருந்தது என்று அவர் என்னை பார்க்க..... நான் ஹி ஹி என்று சொல்லிவிட்டு எனது அந்த சாகச பயணத்தை தொடங்கினேன். முதல் ரவுண்டு முடியும் கோடு வந்தது, நான் எனது மனைவி இப்போது தீ எல்லாம் மிதித்துவிட்டு கண்ணில் நீர் வர காத்திருப்பார் என்ற எண்ணத்தில் நான் தேடினால், அவர் பொறுமையாக அங்கு கிடைத்த பஞ்சு மிட்டாயை ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தார்..... அப்போ சத்தியமா அது பிரமைதான் என்று புரிந்தது ! நான் எனது இரண்டாவது ரவுண்டுக்கு தயார் ஆனேன், எனது பயிற்சியாளர் இவன் இன்னுமா இருக்கான் என்று பார்த்து சிரிக்க நான் மெதுவாக அந்த பஞ்சுமிட்டாயை பார்த்துக்கொண்டே செல்ல ஆரம்பித்தேன் !




முடிவில் நான் எனது இரண்டாவது ரவுண்டு முடித்து வெற்றி கோட்டை தொடும்போது எனது பயிற்சியாளர் என்னை ஆர்வமாக வரவேர்ப்பதை பார்க்கவும் ! :-) உண்மையாக சொல்வதென்றால்...... இந்த பயணம் மிகவும் அருமையாக இருந்தது. மிகவும் இலகுவாக, நடந்து போவதை விட சொகுசாக பயணிக்க இது நல்ல வாகனம் எனலாம். இதை ஓட்ட தெரிந்துவிட்டால் நீங்கள் கண்டிப்பாக விரும்புவீர்கள் ! 



நான் வெற்றி களிப்புடன் எனது இந்த சாகச பயணத்தை முடித்துவிட்டு எனது மனைவியிடம் வந்தபோது, அவர் வெகு சாதாரணமாக என்னங்க இந்த வண்டியில் டபிள்ஸ் எல்லாம் போக முடியாதா என்று கேட்க்க எனது மண்டைக்குள் வொய் திஸ் கொலைவெறி என்ற பாடல் பாடியது நிஜம் !

Labels : Segway ride, Sentosa, Singapore, Suresh, Kadalpayanangal, Saagasa payanam, adventure ride

Saturday, July 27, 2013

த்ரில் ரைட் - ஹை ரோலர்

கடந்த முறை இந்த த்ரில் ரைட் பகுதியை ஆரம்பித்தபோது இதை நீங்கள் விரும்பி படிப்பீர்களா என்று சந்தேகம் இருந்தது, ஆனால் இதை படித்து விட்டு திகிலுடன் இருந்ததை உங்களது கமெண்ட் சொல்லியது ! சிலர் இந்த ரைட் எல்லாம் போகமலேயே வாந்தி எடுத்ததாக சொல்லியது கண்டு எனக்கு டர் ஆனது ! சரி, இந்த வாரம் வாங்க ஹை ரோலர் பற்றி பார்ப்போம் !


பார்பதற்கு சாது போல இருந்தாலும், ஆரம்பித்தவுடன் உங்களை சுற்றி விடும் பாருங்கள்..... அப்புறம் இறங்கும்போது நமது உடலில் இருக்கும் பாகங்கள் எல்லாம் அதன் அதன் இடத்தில் எல்லாம் இருக்கிறதா என்று நீங்கள் பார்க்க வேண்டி வரும் அளவுக்கு உங்களை குலுக்கி எடுத்து விடும். இது எல்லாம் இந்தியாவிற்கு வந்தால் நீங்க இதில் ஏறுவீங்களா ?!







Labels : Thrill ride, Suresh, Kadalpayanangal, Amazing rides, scary ride, high roller

Friday, July 26, 2013

அறுசுவை - பெங்களுரு நேச்சுரல் ஐஸ் கிரீம்

பெங்களுருவில் நல்ல சாப்பாடு, டிபன் கிடைத்தாலும் சில நேரங்களில் அதையும் தாண்டி ஒரு நல்ல ஐஸ் கிரீம் கிடைத்தால்...... சான்சே இல்லை ! எப்போதும் நாம் சாப்பிட போகும் இடத்திலேயே வெண்ணிலா ஐஸ் கிரீம் ஒரு ஸ்கூப் என்று சொல்லி சோம்பேறித்தனமாக வாங்கி சாப்பிடும் நான், இந்த முறை ஒரு டின்னர் சாபிட்டுவிட்டு குடும்பத்துடன் இரவு சுமார் பத்து மணிக்கு  இந்த நேச்சுரல் ஐஸ் கிரீம் பார்லர் சென்றேன். நல்ல கூட்டம் இருந்ததே இந்த கடை மிகவும் பேமஸ் என்பதற்கு சான்று !

பொதுவாக ஐஸ் கிரீம் என்றாலே வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி, பட்டர் ஸ்காட்ச், சாக்லேட் என்று ஒரு லிஸ்ட் உண்டு. வெகு சில கடைகளில் மட்டும் அவர்களே புதிய பிளேவரில் ஐஸ் கிரீம் செய்வார்கள், ஆனால் எல்லா நேரத்திலும் அந்த சுவை ஒரே போல் இருப்பதில்லை..... வெகு சில கடைகளை தவிர்த்து. இந்த நேச்சுரல் ஐஸ் கிரீம் கடையில் உண்மையான பழங்களைகொண்டு, அதன் சுவையிலேயே ஐஸ் கிரீம் தயார் செய்வதுதான் சிறப்பு !



வெகு சுத்தமான கடை, உட்காருவதற்கு அதிகமாக இடம் இல்லை. நிறைய பேர் ஐஸ் கிரீம் வாங்கிக்கொண்டு நின்று கொண்டே சாபிடுகின்றனர் ! பார்க்கும்போது கலர் கலராக இருக்கும் ஐஸ் கிரீமில் ஒன்றை செலக்ட் செய்து கையில் வாங்கியவுடனேயே நாக்குஊற ஆரம்பிக்கும், ஒரு வாய் வைத்தவுடன் உங்களுக்கு முதலில் தெரிவது அந்த பழத்தின் சுவைதான் ! மற்ற புகழ் பெற்ற ஐஸ் கிரீம் பிராண்டில் எல்லாம் ஸ்ட்ராபெர்ரி சுவை வாங்கினால் அந்த சுவை தெரிந்தாலும், அந்த பழத்தில்இருக்கும் சற்று புளிப்பு தெரியாது, ஆனால்இங்கு ஸ்ட்ராபெர்ரி சிறிய துண்டாக அங்கங்கு சிதறி கிடக்கும், வாயில் வைத்தவுடன் அந்த ஐஸ் கிரீம் சுவையும், அந்த பழம் வாயில் சிக்கும்போது அதன் சுவையும் கிடைக்கும்போது அலாதிதான் !



 1984ம் வருடம், காமத் என்பவரால் இது தொடங்கப்பட்டு இன்று இந்தியா முழுவதும் சக்கை போடு போடுகிறது ! ஆரம்பத்தில் இவர் தனது தந்தையின் பழகடையில் இருந்து பழங்களை பற்றியும், அவரது அண்ணனிடம் இருந்து ஐஸ் கிரீம் பற்றியும் கற்று கொண்டு, இரண்டையும் சரியாக கலந்து இன்று நேச்சுரல் ஐஸ் கிரீம் உருவாக்கினார் ! இந்த ஐஸ் கிரீம் எல்லாம் மார்க்கெட்டில் இருக்கும் ஐஸ் கிரீம் மெசினில் வைத்து செய்யமுடியாது (பழம் எல்லாம் போடுவதால்...) அதனால் இவரே ஒரு மெசின் கண்டுபிடித்து, அது பழங்களைபோடும்போது அதில் இருக்கும் தோல், கொட்டை எல்லாம் எடுக்கும் அளவுக்கு உருவாக்கியுள்ளார் ! நன்றி காமத்...... நல்ல சுவையான ஐஸ் கிரீம் தருவதற்கு !


பஞ்ச் லைன் :

சுவை - அருமையான பழங்களின் சுவை கொண்ட ஐஸ் கிரீம் ! செயற்கை சாயம் எல்லாம் எதுவும் கலக்காமல்..... ஆரோக்கியமானது !

அமைப்பு - சிறிய இடம், மெயின் ரோட்டில் இருப்பதால் பார்கிங் வசதி கம்மி, கூட்டம் அதிகம் !

பணம் - கம்மிதான், ஒரு ஸ்கூப் முப்பது ரூபாயில் இருந்து கிடைக்கிறது ! !

சர்வீஸ் - நல்ல சர்விஸ், கூட்டம் அதிகமாக இருந்தால் இதையே எதிர் பார்க்க முடியாது.

அட்ரஸ் :

இங்கே கிளிக் செய்தால் முழுமையான அட்ரெஸ் கிடைக்குமே...... நேச்சுரல் ஐஸ் கிரீம் !


மெனு கார்டு :

மெனு கார்டு படிக்க இங்கே சொடுக்கவும்........... மெனு கார்டு 



Labels : Bangalore, Bengaluru, Arusuvai, Natural ice cream, best ice cream, Suresh, Kadalpayanangal

Thursday, July 25, 2013

உலக பயணம் - ஜப்பானின் எரிமலை மீது....!!

கடந்த முறை ஜப்பானின் மவுண்ட் பியூஜி மலை சென்று வந்ததை பற்றி எழுதி இருந்தேன், அது இறந்து போன எரிமலை. நான் அங்கு இருந்தபோது நிறைய முறை நில நடுக்கம் வந்து போனது, அப்போது எல்லாம் எரிமலை வெடித்து சிதறியது என்ற செய்தியும் வரும். ஒரு முறையாவது எரிமலையை பார்த்து ஆகவேண்டும் என்று ஆசை அதிகமானது, அப்படி தேடியபோது எனது ஜப்பானிய நண்பர் சொன்னதுதான் இந்த ஹகோனே ! இன்றும் அந்த எரிமலை கனன்று கொண்டுதான் இருக்கிறது என்றும், அங்கு சென்றால் எரிமலை குழம்பு பார்க்க முடியாவிட்டாலும், அதில் இருந்து வரும் அனலை பார்க்கலாம் என்றவுடன் எங்களது பயணம் தொடங்க ஆரம்பித்தது.

எரிமலைடா நான்...... (பஞ்ச் டயலாக் சார் !)

எரிமலை ஆசிட்ஊற்று !


இங்கு செல்வதற்கு நாங்கள் ஒரு புல்லட் ட்ரைன் எடுத்தோம், பின்னர் அங்கிருந்து ஒரு கேபிள் கார் கொண்டு நாங்கள் அந்த மலை மீது ஏற ஆரம்பித்தபோது எங்களது கால்களுக்கு கீழே மலையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. அது ஏதோ தண்ணீர் புகை என்று நினைத்தபோது, அதுதான் எரிமலை என்றும், பாறையின் இடுக்குகளில் இருந்து அதன் அனல் வெளி வருகிறது எனும்போதுதான், நாங்கள் அந்த எரிமலையின் மீது செல்கிறோம் என்ற பயம் வந்தது ! அந்த இடத்தில இருந்து வரும் நெடியில் அமிலத்தின் தன்மை அதிகம் இருப்பதால், உங்களது தொண்டையில் கிச்-கிச் ஆரம்பிக்கும். சிறிது நேரத்தில் கண்கள் எரிய ஆரம்பிக்கும் !

கேபிள் கார் பயணம் !

வெட்டி எடுத்து ஆராய்ச்சி செய்கிறார்கள்....

நாங்கள் அந்த மலையின் மீது இறங்கியவுடன் பல பகுதிகளில் இருந்தும் புகை வந்து கொண்டு இருந்தது. அது எல்லாமே கீழே எரிமலை குழம்பு கொதித்து கொண்டிருக்கும் இடங்கள், அங்கு நாங்கள் போட்டோ பிடித்து கொண்டிருந்தபோது நிறைய பேர் கையில் ஒரு கருப்பு உருண்டையுடன், அதை பியித்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். எனது நண்பர் அதே போன்ற ஒன்றை கொண்டு வந்தபோதுதான் அது முட்டை என்று தெரிந்தது. முட்டைகளை ஒரு பெரிய கூண்டில் அடைத்து, அதை இந்த எரிமலை அமில தன்மை உடைய தண்ணீரில் முக்கி எடுக்கின்றனர். அது அந்த சூட்டில் கருப்பாக ஆகிறது, அதில் மருத்துவ குணம் இருப்பதால் எல்லோரும் விரும்பி சாபிடுகின்றனர் என்றார், நானும் சூடாக இரண்டு முட்டை சாப்பிட்டேன் ! :-)

எரிமலையில் வேக வைக்கப்பட்ட முட்டை !

அத்தனையும் ஆசிட்தண்ணீர் ! நெடி ரொம்பவே ஜாஸ்தி.....
அங்கு சிறிது தூரத்தில் இப்போதும் தண்ணீர் கொதித்து கொண்டிருக்கும் ஒரு இடத்தை அடைந்தபோது, மூச்சு அடைத்தது. கந்தக நாற்றம் அங்கிருந்த ஒரு குளத்தில் இருந்து வந்தது. அதுதான் எரிமலையின் வெப்பத்தில் இருந்து உருவாகும் நீர் ஊற்று. அங்கு இருந்த பாறையில் எல்லாம் அந்த அமிலத்தன்மை இருந்தது ! அங்கு இருந்து நாங்கள் இயற்க்கை ஏரியான அஷீஏரிக்கு சென்றோம். மலைகள் சூழ்ந்த பகுதியில் இயற்கையிலேயே அமைந்த ஏறி அது, அருமையான காட்சிகள். கீழே இருக்கும் படத்தை பாருங்கள், உங்களுக்கே புரியும்.

அழகான ஏரி.....
முடிவில் அங்கு இருந்து மவுண்ட் பியுஜியை பார்த்து இன்புற்று திரும்பினோம். ஜப்பான் மக்களின் அன்பும், அங்கு பார்த்த இயற்க்கை காட்சியும்மனதை நிறைத்தது. மீண்டும் செல்ல தூண்டும் இடம்.....

டாடா..... பை பை 

Labels : Suresh, Kadalpayanangal, Japan, Hakone, Lava, Lake Ashii