Tuesday, July 2, 2013

சாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....!! (பாகம் - 2)

சென்ற வாரம், இந்த சுரங்கத்தில் இறங்குவது வரை பார்த்தீர்கள். அது உங்களது ஆர்வத்தை தூண்டியிருக்கும், இந்த பதிவை அவ்வளவு வேலை பளுவிலும் எழுதுவது எனது நண்பர் சந்தோஷ் அவர்களுக்காக, அவர் உரிமையுடன் சீக்கிரம் அடுத்த பாகம் எழுதுங்கள் என்றதால் ! சுரங்கத்தில் நீங்கள் இறங்கியவுடன் உங்களை தாக்குவது என்பது வெப்ப காற்று. ஒவ்வொரு சுரங்க தொழிலாளியும் அவர்களுடன் தண்ணீர், சாப்பாடு, கருவிகள், பாதுகாப்பு சாதனங்கள் என்று கொண்டு செல்ல வேண்டும். முதலில் ஒரு இடத்தில் எல்லோரும் காத்திருக்க வேண்டும், அங்கு அவர்களது அடையாள அட்டையை கொடுத்து விட்டு உள்ளே செல்ல வேண்டும். அந்த காத்திருக்கும் இடம்தான் கீழே நீங்கள் காண்பது. இதுதான் மருத்துவமனையும் கூட !

சுரங்கத்தின் உள்ளே.....பயணம் ஆரம்பம் !

இதுதான் மருத்துவமனை !

சுரங்கம்.....வெள்ளை அடிக்கப்பட்டு 

இங்குதான் லிப்ட் வர வெயிட் செய்ய வேண்டும் 

இந்த சுரங்கம் தோண்டுவது என்பது எளிதில்லை...... முதலில் டைனமைட் கொண்டு பாறைகளை பிளப்பார்கள், இது எப்போதும் வேலை முடிந்து எல்லோரும் மாலையில் வெளியே வந்தவுடன் நடக்கும், அவர்கள் அடுத்த நாள் காலை வரும்போது தூசி எல்லாம் அடங்கி பாறைகள் வெட்டி எடுக்க ரெடியாக இருக்கும். பாறைகளை பிளக்கும்போது தூசி வந்தால் அதை உறிஞ்சி எடுக்க வேண்டும், இல்லையென்றால் அதை உள்ளே வேலை செய்யும் எல்லோரும் சுவாசித்து அவர்களது நுரையீரல்களில் தூசி படிந்து சீக்கிரமே செத்து போவார்கள். இப்படி கிளம்பும் தூசியை கிளம்பாதவாறு தடுக்க, பாறைகளை உடைக்கும்போது தண்ணீரை உபயோகிக்கின்றனர். இதனால் தூசி கிளம்புவது தடுக்கப்படும், பின்னர் இந்த தண்ணீரை உறிஞ்சி வெளியே எடுக்க ஒரு மெசின் உண்டு. உடைக்கும்போது சரி, அந்த பாறைகளை கையாளும்போது வரும் தூசி.......சுவாசிக்கத்தான் வேண்டும் !

மோட்டார் வைத்து இங்குதான் தண்ணீர் உள்ளே வரும், வெளியேறவும் செய்யும் 



மோட்டார் மற்றும் பைப் 

டைனமைட் வைக்கும் பெட்டி 

சுரங்கத்தின் சுவர்....மஞ்சளாய் இருப்பது தங்கம் ! 
சரி டைனமைட் வைத்து பாறையை தகர்த்து விட்டு அடுத்த நாள் காலையில் உள்ளே செல்கிறீர்கள், அந்த சிறிய குகையில் உளியை வைத்து பாறையை பிளந்து பாருங்கள்......அந்த சத்தம் உங்களது காதுகளில் ரத்தத்தை வரவழைக்கும். இப்போதெல்லாம் இந்த குகைகளில் எல்லாம் மெசின் கொண்டு பாறையை பிளக்கிறார்கள், அப்படி ஒரு மெசின்தான் நீங்கள் கீழே பார்ப்பது. அவர்கள் அதை ஆன் செய்யும்போது எல்லோரும் காதை மூடி கொள்ளுங்கள் என்று சொல்லியும், அந்த ஒரு சில நொடிகளுக்கு எங்களால் சத்தத்தை தாங்க முடியவில்லை என்றால், அங்கு தினமும் வேலை செய்பவர்களுக்கு ? இந்த சத்தத்தில் காதலி பஞ்சு கொண்டு அடைத்து கொண்டு வேலை செய்யும் இவர்களை பாறை சில சமயங்களில் மூடும்போது அடுத்தவர் பார்த்து கத்தினாலும் கேட்க்காதாம், இதனால் நிறைய விபத்துக்கள் எல்லோரும் பார்க்கவே நடக்குமாம் !


இதுதான் பாறையை உடைக்கும் யந்திரம் 

இப்படி உடைக்கப்பட்ட பாறைகள் சிறிய ட்ராலி மூலம் மேலே கொண்டு செல்ல படுகிறது. தினமும் ஒவ்வொரு சுரங்க டீமுக்கும் இத்தனை ட்ராலி வெளியே அனுப்ப வேண்டும் என்ற இலக்கு உண்டு. இதனை கணக்கு செய்ய 100 துளைகள் கொண்ட ஒரு மர தகடும், அதில் குத்த ஒரு ஊசியும் உண்டு. ஒவ்வொரு ட்ராலியும் 1000 கிலோ எடை கற்களை தாங்கும். ஆக, ஒரு நாளில் அவர்கள் சுமார் ஒரு லட்சம் கிலோ கற்களை வெளியே அனுப்புவார்கள் ! ஒரு ட்ராலியில் இருக்கும் 1000 கிலோ கல்லில் இருந்து சுமார் 4 கிராம் தங்கம் மட்டுமே எடுக்க முடியும் என்று அவர்கள் சொன்னபோது எனக்கு தலை சுற்றியது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியென்றால் நீங்கள் சுமார் அரை பவுனில் மோதிரம் போட்டிருந்தால், அது ஆயிரம் கிலோ கல்லை கையில் வைத்திருப்பதற்கு சமம் !!

வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் இதன் மூலம்தான் மேலே செல்லும் 


100 துளைகள் கொண்ட தகடு, ஓர் துளை என்பது 1000 கிலோ கல் அனுப்பபடுகிறது என்பதற்கு அடையாளம் 

அவர்கள் ஒரு இடத்திற்கு கூட்டி சென்று வெடி வைத்து பாறையை தகர்த்து விட்டு, பின்னர் வந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று கேட்பவர்கள் இங்கே பாருங்கள் என்றனர். கீழே நீங்கள் பார்க்கும் படங்கள் அதை சொல்லும் ! சிறியதும் பெரியதுமாக பாறைகள் தெரியும் இந்த இடத்தில்தான் அவர்கள் முதுகு வளைந்து வேலை செய்வார்கள் என்று நினைக்கும்போது மனது வலித்தது.


வெடி வைத்து தகர்த்தபின் உள்ளே பாறைகள் இப்படிதான் இருக்கும் !

இப்படி சுரங்கத்தை எதுவரை தோண்டுவார்கள்......அந்த பாறைகளில் தங்கம் என்பது தெரியாதவரை ! இப்படி அவர்கள் தோண்டும்போது சுரங்கத்தை நேராக தோண்ட வேண்டும் என்று கீழே உள்ள படத்தில் பார்ப்பது போல சிகப்பு நிறத்தில் கோடு போட்டுக்கொண்டே போவார்கள். இது சற்றே அவர்கள் நேரே செல்கிறார்கள் என்று காட்டும். இப்படி இந்த தளத்தில் சுரங்கம் தோண்டி தங்கம் இல்லையென்றால் சுமார் 35 டிகிரி கோணத்தில் வெடி வைத்து சில நூறு அடிகள் சென்று அடுத்த சுரங்கத்தை இதுபோல தோண்டுவார்கள். கீழே செல்ல செல்ல பிரணாவாயு குறையும், பிரஷர் அதிகரிக்கும், கடும் சூடாய் இருக்கும்.



தங்கம் வெட்டி எடுக்கும் பணியில்.....!

இவர்களுக்கு சவால் என்பது சுரங்கத்தில் சில சமயங்களில் லிப்ட் வேலை செய்யாதபோது மேலே வருவதுதான். அந்த காலத்தில், லிப்ட் வேலை செய்யவில்லை என்றால் அதன் உதிரி பாகம் வந்து சரி செய்வதற்கு பத்து நாட்கள் வரை கூட ஆகும், அப்போது 4000 அடி ஆழத்தில் இருந்து வெளி வருவதற்கு என்று ஒரு அவசர வழி என்பது இருந்தாலும், மேலே வருவதற்குள் நுரை தள்ளி விடும் என்பதால் சில நேரங்களில் அந்த பத்து நாட்களும் கூட அவர்கள் அங்கேயே இருப்பார்களாம், அவர்களுக்கு சாப்பாடு எல்லாம் அந்த ஓடாத லிப்ட் வழியினில் கயிறு கொண்டு அனுப்புவார்களாம். சரி கற்களை எடுத்தாகிவிட்டது, இனி அதை தங்கமாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போமா.....சரி சுரங்கத்தினுள் சென்று வந்து களைப்பாகி இருப்பீர்கள், வாருங்கள் சற்று ஓய்வு எடுத்துவிட்டு தொடர்வோம்.

Labels : Suresh, Kadalpayanangal, Saagasa payanam, Thangam, Gold mine tour

9 comments:

  1. ஆயிரம் கிலோ கல் = அரை பவுன் மோதிரம்...!

    ஒரு லட்சம் கிலோ கற்களை வெளியே அனுப்புவது உட்பட எவ்வளவு சிரமமான வேலைகள்... அங்கு வேலை செய்பவர்களை நினைத்தால் மனம் கலங்குகிறது...

    உங்களின் சாகச பயணங்கள் இனிதே தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார், ஆம் ஒரு கிராம் தங்கம் எடுக்க அவர்கள் படும் பாடு பார்த்தால் எல்லோருக்கும் இருக்கும் அந்த தங்க மோகம் குறையும்.....

      Delete
  2. தங்கம் வெட்டி எடுப்பதை பற்றியான அற்புதமான கட்டுரை... நிறைய விளக்கங்களுடன் எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்...

    இனி தங்கத்தை பார்க்கும் போதெல்லாம் சுரங்க ஞாபகம் வரவைக்கும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சதீஷ்......தங்களது வருகைக்கும், கருத்திற்கும்.

      Delete
  3. படிக்கவே மூச்சு இரைச்சுவிடும் போல இருக்கின்றது சுரங்கப்பயணம். தொளிலாளர்களை நினைத்தால் :(

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மாதேவி, அவர்களது உழைப்பை சுரண்டுவதற்கு என்றே ஒரு கூட்டம் அங்கு இருந்தது !

      Delete
  4. I don't like to wear gold last 5 years :))) after read this in my life I never ever wear gold.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருஷ்ணா..... இந்த பதிவு உங்களிடமிருந்து நிறைய வார்த்தையை வாங்கியது கண்டு, அது எந்த அளவு உங்களை பாதித்திருக்கிறது என்று புரிகிறது !

      Delete
  5. Really I appreciate your work. To go around and write in an interesting manner is an art. I appreciate you for the best writings.

    ReplyDelete