Friday, July 5, 2013

ஊர் ஸ்பெஷல் - சாத்தூர் காராசேவு

சாத்தூர் காரசேவு பிரபலம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? இன்று தமிழ்நாட்டில் எந்த மூலையிலும் ஒரு பொருள் பிரபலமாகிவிட்டால் அதன் கிளை அங்கு தொடங்கப்படும், உதாரணமாக திருநெல்வேலி இருட்டு கடை அல்வா, மணப்பாறை முறுக்கு என்று.....ஆனால் எங்கேயாவது சாத்தூர் காரசேவு கிடைக்கும் என்று பார்த்து இருக்கிறீர்களா ? பொதுவாக, ஒரு ஊரில் ஒரு பொருள் பிரபலம் என்றால் அந்த ஊரில் எங்கு திரும்பினாலும் அந்த பொருளை பார்க்க முடியும், உதாரணமாக நெல்லை அல்வா, மதுரை ஜிகர்தண்டா, சிவகாசி பிரிண்டிங் என்று. ஆனால் சாத்தூருக்கு நான் இதுவரை இரண்டு முறை காராசேவு செய்முறை பார்க்க சென்றிருந்தேன், முதல் முறை சென்றபோது அங்கு இருந்த ராஜம் ஸ்வீட்ஸ் என்ற கடையில் சென்று இதன் செய்முறை பார்க்க வேண்டும் என்றபோது என்னை எதற்கு என்று பார்த்தனர். எனது ஆர்வத்தையும், இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி எழுதுவதையும் சொன்னபோது அவர்கள் சொன்னது "இப்போவெல்லாம் யார் சார் இந்த சேவு வாங்குறாங்க, பாருங்க நாங்க கூட கொஞ்சமாகத்தான் செய்கிறோம்" என்று. ஊருக்குள் சென்று பல கடைகள் தேடியும் இப்படி காரசேவு கடைகள் கிடைக்கவில்லை, மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினேன்.
 
 
 
 
இதை சொல்லி வருத்தப்பட்டபோது எனது விருதுநகர் நண்பர் ஒருவர் சொன்னது ஷண்முக நாடார் கடை. இந்த கடையில் சேவு என்பது அவ்வளவு பிரபலம், ஆனால் ஊருக்குள் அதை ஒரு பெரிய விஷயமாகவே சொல்லவில்லை கடந்தமுறை. இந்த முறை இந்த காரசேவுக்காகவே 500 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டேன். இந்த முறை இதை விடகூடாது என்று முடிவெடுத்தேன். சிரமத்திற்கிடையே நான் அந்த சண்முக நாடார் கடைக்கு சென்றேன், அவர்களது சேவு தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்ற போது அவர்களுக்கு மிகுந்த சந்தோசம், ஆனால் இதற்க்காகவா வந்தீர்கள் என்ற கேலி பார்வை வேறு !
 
 
காரசேவுக்கு இந்த ஊர் பிரபலம் என்பதெல்லாம் ஒரு காலம். 1990களில் கூட இந்த ஊர்களில் காரசேவுக்கு என்று ஒரு கூட்டம் உண்டு, வெளியூர்களில் இருந்து எல்லாம் மக்கள் வரும்போது வாங்கி செல்வார்கள் என்று அவர் சொன்னபோது மகிழ்ச்சியா இருந்தது. பின்னர் எல்லோரும் அதை செய்ய ஆரம்பித்ததாகவும், ஆனால் பேராசையால் நிறைய செய்துவிட்டு, அதை விற்க முடியாதபோது அடுத்த நாள் போடுவதில் கலந்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்போது இந்த காரச்சேவு பற்றி அவர்களுக்கு தப்பான அபிப்பிராயம் வந்து இதன் பெயர் கேட்டு போனதாகவும் சொன்னார். அவர்கள் கடையில் இந்த காராசேவு ஒரு குறிப்பிட்ட அளவு மற்றும் செய்வதாகவும், மீதமிருந்தால் அதை அடுத்த நாள் விற்ப்பனைக்கு உபயோகிப்பதில்லை என்று சொன்னபோது அந்த கடை ஏன் இன்றளவும் பிரபலம் என்று தோன்றியது.
 

 

 
ஒரு ஊர், சில மனிதர்களின் பேராசையால் அதன் தனித்துவத்தை இழந்துவிட்டது என்றே தோன்றியது. இன்று அந்த ஊருக்குள் எங்கு திரும்பினாலும் பாஸ்ட் புட் கடைகள், ஆனால் காராச்சேவு என்பதை தேடி கண்டு பிடிக்க வேண்டி உள்ளது. பொதுவாக நான் இந்த ஊர் ஸ்பெஷல் தேடி எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு எந்த மனிதரை கேட்டாலும் எங்கு நன்றாக இருக்கும் என்று பொறுமையாக சொல்வார்கள், ஆனால் சாத்தூரில் அது இல்லை. நிறைய மக்களுக்கு அதெல்லாம் ஒரு காலம் என்றே பதில் சொல்லினர். ஆனாலும், இன்று இந்த சண்முக நாடார் கடை உள்ளது, அதுவும் பாஸ்ட் புட் கடையாக மாறும் முன் சென்று அந்த சுவையை அனுபவிதிடுங்கள் !
 
 
 
சாத்தூர் காரசேவு செய்யும் முறை......
 
கடலைமாவு - 2 கப் ( 400 கிராம்)
பச்சரிசிமாவு - 2 தே கரண்டி
வெண்ணை - 5 தே கரண்டி
காரப் பொடி - 1 தே கரண்டி
வெள்ளைப்பூண்டு - 4 பல்
மிளகு - 1 தே கரண்டி
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்க்கு

செய்முறை :

முதலில் பூண்டு மற்றும் பெருங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
மிளகைப் பொடி செய்துக் கொள்ளவும்.
வெண்ணை,உப்புத,காரப்பொடி,கடலைமாவு, அரிசிமாவு, அரைத்து வைத்திருக்கும் விழுது, மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் காராச் சேவு தேய்க்கும் கரண்டியில் சிறுது மாவை வைத்து நன்றாக அழுத்தி தேய்த்துக் கொள்ளவும்.
மற்றொரு கரண்டியால் சேவை திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய வைக்கவும். இதே போல் எல்லா மாவையும் பொரித்து எடுக்கவும். மாவை சற்று இறுக்கமாக பிசைந்து கொண்டால்தான் தேய்ப்பதற்கு வசதியாக இருக்கும். தளர்வாக இருந்தால் தேய்க்கும் போது பூந்தி போன்று முத்துமுத்தாக விழுந்துவிடும். காரசேவுக்கு என்றே அச்சு பலகைகள் உள்ளன. அது இல்லையெனில் சற்று பெரிய ஓட்டைகள் உடைய பெரிய அளவிலான சாரணியை இதற்கு பயன்படுத்தலாம்.
காரசேவு நீள நீளமாக விழ வேண்டும். அதற்கு கெட்டியான மாவினை சாரணி மீது வைத்து முதலில் கையினால் நேராக, மேலிருந்து கீழ், அழுத்தவேண்டும். மாவு நீளமாக வெளிவரும். குறிப்பிட்ட நீளம் வந்தவுடன், மேலே மாவினை முன்னோக்கி தள்ளினால், நீளமாக வெளிவந்த மாவு துண்டுகளாகி விழும். இதுதான் காரசேவு பிழிவதற்கான முறை.
 
 
என்ன மொறு மொறு காரச்சேவு சாப்பிடனுமா, அப்போ சாத்தூர் போகலாமா ?
 
Labels : Suresh, Kadalpayanangal, Oor special, Sattur, Sathur, Karachevu, Kaaraachevu, Chevu

18 comments:

  1. 500 கிலோமீட்டர் பயணம் செய்ததோடு இல்லாமல், செய்யும் முறையையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... பாராட்டுக்கள்...

    ஆர்வம் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இதை படித்த நண்பர் ஒருவர் என்னிடம் நிஜமாகவே 500 கிலோமீட்டர் இந்த காராசேவுக்கு பயணம் செய்தேனா என்று கேட்டார், ஆமாம் என்றவுடன் எனது ஆர்வத்தை விட அவர் என்னிடம் சென்று வந்த கணக்கு கேட்டபோது, சில நேரங்களில் பணத்தால் மட்டுமே நமது மகிழ்ச்சி அளப்பது கண்டு வருத்தம் ஏற்பட்டது. அந்த கணத்தில்..... காராசேவை வாயில் போட்டபோது இருந்த மகிழ்ச்சியை எப்படி வார்த்தைகளில் வெளிபடுத்துவது ?! தங்களது கருத்துகளுக்கு நன்றி தனபாலன் சார் !

      Delete
  2. Replies
    1. நீங்கள் சொன்ன ஊர் கீலஈரலா ??! இன்னும் கொஞ்சம் விவரம் தாருங்களேன்......

      Delete
  3. சாத்தூர் போகும்ப்போதெல்லாம் எதோ ஒரு கடையில் ரெகுலரா அப்பா வாங்கி வருவார்

    ReplyDelete
    Replies
    1. நல்லா பாருங்க மேடம், அது சண்முக நாடார் கடை காராசேவாக இருக்க போகிறது :-)

      Delete
  4. வாவ்...

    சாத்தூரில் இருக்கும் நண்பர் ஊருக்கு சென்று வரும் போதெல்லாம் வாங்கி வருவார் அது எந்த கடை என்று தெரியாது ஆனால் சுவையாக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சதீஷ் ! உங்களது ஊர் ஸ்பெஷல் என்று எதை சொல்வீர்கள் ?

      Delete
  5. ஒரு பதிவுக்கும்
    ஒரு சிறப்பை
    மிகச் சிறப்பாகச் சொல்ல தாங்கள்
    எடுத்துக்கொள்ளும் அசுர முயற்சியும்
    மலைக்கவைக்கிறது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களது மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி ! உங்களது இந்த பாராட்டுக்கள்தான் என்னை இந்த தேடல் கொள்ள வைக்கிறது சார் !

      Delete
  6. Replies
    1. தங்களது ஓட்டுக்கு மிக்க நன்றி !

      Delete
  7. Replies
    1. நன்றி கிருஷ்ணா !

      Delete
  8. வெகு விரைவில்,சாத்தூர் சண்முகம் அண்ணாச்சி கடைக்குப்போய் காரச்சேவு வாங்கப்போகிறேன்.
    சுவையான தகவல்களை மொறுமொறு சுவையுடன் தருவதற்கு நன்றி நண்பா.
    தொடருங்கள் உங்கள் சேவையை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் ! உங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  9. உங்கள் கட்டுரைக்கு பாராட்டுக்கள், ஆனால் நீங்கள் கூறுவது போல் சாத்தூர்மக்கள் பாஸ்ட்புட் வகைகளுக்கு அடிமையானவர்கள் இல்லை.அவர்களின் தினசரி வாழ்க்கைமுறையில் ஏதேனும் ஒருவேளையில் ரசஞ்சாதத்திற்கு சேவு, பால்சோத்துக்கு பக்கடா என இந்த பலகாரங்கள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

    ReplyDelete
  10. நன்றி நண்பா படத்தில் காரசேவு போடுவது என் அண்ணன் கருப்பசாமி அவர்கள் தான்

    ReplyDelete