Thursday, July 11, 2013

வீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க !!

என்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது குரலில் இருந்த பதட்டத்தை புரிந்துகொண்டு அவனை நேரில் சந்தித்து பேச முடிவு செய்தேன். அவன் கிளம்புவதற்கு ஒரு நாள் முன்பு அவனது வீட்டிற்க்கு சென்றிருந்தேன். அவனிடம் எல்லாவற்றையும் விளக்கிவிட்டு எதை எடுத்துக்கொள்ளலாம், எதை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தேன். காலையில் சென்ற நான், மதியத்திற்கு மேல் வரை அவனோடு இருந்தேன். அவனது அப்பா அங்கும் இங்கும் ஓடி அவனுக்கு வேண்டியதை வாங்கி வந்தார், அம்மா மட்டும் சமையல் அறையில் இருந்து வெளியே வரவில்லை என்பதை கவனித்தேன். முடிவில் நான் கிளம்பும் சமயம், அவனது அம்மா சிறிய பொட்டலங்களாக எடுத்துக்கொண்டு வந்து எனது நண்பனிடம், "பாப்பு, உனக்கு பிடிக்குமேன்னு சீடை, முறுக்கு, அதிரசம், தட்டை, கொஞ்சமா பால்கோவா கூட பண்ணியிருக்கிறேன், வெளியிலே சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதே, இதை சாப்பிடு" என்று கொடுக்க, அவனோ "அம்மா இப்போ இது எல்லாம் MTR மற்றும் எல்லா பிராண்ட்களிலும் வெளிநாட்டிலேயே கிடைக்கிறது, இது எல்லாம் வேண்டாம்" என்று கத்த, அவர் முகம் சுண்டி விட்டது. கண்களில் நீருடன் அங்கிருந்து வெளியேறினார், நான் அவனிடம் என்ன எடுத்து சொல்லியும் விடு என்று கூறி சென்றான். முடிவில் நான் சொல்லி கொண்டு விடைபெறும்போது அவனது அம்மா தனியே என்னிடம் "தம்பி, வெளிநாட்டில் இது எல்லாம் கிடைக்குமா ? அவனுங்க கண்ட எண்ணையில சமைப்பாங்க இல்ல..... நீ கொஞ்சம் எடுத்து சொல்லேன், இந்த வீட்டு பலகாரங்கள் வெளியே கிடைத்தாலும் அது இது போல வராதுன்னு......என்ன புள்ளையோ இதுல அன்பையும் சேர்த்து சமைக்கிரோம்மின்னு ஏன் இந்த கால குழந்தைகளுக்கு தெரியமாட்டேன் என்கிறது" என்கிறபோது சட்டென்று எனது கண்ணில் இருந்து வழிந்த நீரை துடைக்க தடுமாறினேன்....... கடைசியாக உங்கள் அம்மா எள்ளு சீடை செய்தது எப்போது என்று உங்களுக்கு தெரியுமா ?





முன்னர் எல்லாம் தீபாவளி என்றாலே பலகாரம்தான். ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே என்ன ஸ்வீட், காரம் என்று முடிவு எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதில் சிறு வயதில் நான் பலகார லிஸ்டில் தேன் மிட்டாய், பாப் கார்ன், குச்சி மிட்டாய், ஜவ்வு முட்டாய் என்றெல்லாம் சேர்ப்பேன், அம்மாவும் கண்டிப்பாக என்று சொல்லுவார் ! தினமும் அம்மா மாவு அரைக்க வேண்டும் என்று சொல்ல, அப்பா அதை அரைத்து வர என்னை கூட்டிக்கொண்டு மாவு மில் செல்வார், கலவையான வாசனையுடன் அதை அரைத்து முடிந்து வீட்டிற்க்கு வர, அம்மா அப்பாவிடம் ச்சே கூட்டமா இருந்தா திரும்பி வர கூடாதா, நான் கூட நாளைக்கு போய் இருப்பேன் இல்லை என்று சொல்லும்போது அப்பா...அப்போ உனக்கு மட்டும் கால் வலிக்காதா என்று கேட்ட நாட்கள் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. ஒரு நாள் ஸ்கூல் முடிந்து வீட்டிற்க்கு வரும்போது வீட்டு சமையல் அறையில் இருந்து நல்ல வாசனை வந்தது, பின்னாலேயே எனக்கு சுட சுட முறுக்கு. இப்படி தீபாவளி வரை தினமும் வீட்டிற்க்கு வரும்போது சில பலகாரங்கள் ரெடியாக இருக்கும். பக்கத்து வீட்டில் இருந்து நண்பன் கொண்டு வருவதை பார்த்து அது வேண்டும் என்று அடம் பிடித்து, என்னதான் அம்மா திட்டினாலும் அடுத்த நாள் அது எனது கையில் இருக்கும் அந்த தருணம் சொல்லும் அம்மாவின் அன்பை ! இப்படி அன்பு கொண்டு குழைத்த வீட்டு பலகாரம் கடைசியாக எப்போது செய்தார் அம்மா ? என்றிலிருந்து தீபாவளிக்கு ஸ்வீட் கடையில் வாங்க ஆரம்பித்தோம் ? எந்த நாளில் இருந்து அதிரசம், முறுக்கு என்பது கடையில் விற்கும் பொருள் என்று ஆனது ?



எல்லோருக்கும் தெரிந்தது இந்த எள்ளு சீடை. அதை உருட்டி எண்ணையில் போட்டால் உள்ளே இருக்கும் ஈர பதத்திற்கு வெடிக்கும். ஒரு தீபாவளி மாதத்தில் அம்மா எல்லாவற்றையும் ரெடி செய்து விட்டு நான் பக்கத்தில் உட்கார்ந்திருக்க சீடையை எண்ணையில் போட அது துப்பாக்கி சுடுவது போன்று வெடித்தது. என் மீது இரண்டு சொட்டு எண்ணை மட்டுமே தெரித்தது, அதுவும் சூடு ஏறாத எண்ணை...... நான் ஐயோ அம்மா என்று கத்த, எனது அம்மா துள்ளி குதித்து எனக்கு பர்னால் தடவி விட்டு என்னை டிவி பார்க்க சொல்லி திட்டி வெளியே அனுப்பினார். முடிவில் எனக்கு தட்டு நிறைய சீடை வந்தபோது ருசித்து சாபிட்ட நான் இன்று வரை அந்த சீடை வெடித்து அம்மாவின் கைகளில் எத்தனை கொப்புளங்கள் இருந்தது என்று அறிய முயலவில்லை ! அப்பா செய்த உதிர்ந்த குலாப்ஜாமூன், அம்மா செய்த உப்பு தூக்கலான தட்டை, இருவருமே சேர்ந்து செய்த ஒட்டாத மைசூர் பாகு, சேர்த்து சேர்த்து இருந்த காராபூந்தி, புஸ்தகம் பார்த்து செய்த சாக்லேட் பர்பி, வெகுவாக கோந்து போன்று ஒட்டிய அல்வா, உடைந்து கிடந்த தேன்குழல், பெயரிலேயே யோசிக்க வைக்கும் சோமாஸ், காரம் ஜாஸ்தியாய் போன காரசேவு, சதுரமாக செய்த ரவா லட்டு என்று ஒவ்வொரு பலகாரமும் சில நினைவுகளை உங்களுக்கு கொண்டு வரவில்லை ?! அதை செய்யும்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று இன்று நினைத்து பாருங்கள்...... எவ்வளவு அருமையான நினைவுகள் ?!




என்றிலிருந்து நீங்கள் தீபாவளிக்கு பலகாரத்தை வெளியில் இருந்து வாங்க ஆரம்பித்தீர்கள்  ? இன்றைய குழந்தைகள் எல்லாம் தீபாவளி என்றாலே வெளியில் எந்த கடையில் இருந்து ஸ்வீட் வாங்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டது உங்களுக்கு தெரிகிறதா ? அட தீபாவளியை விடுங்கள்..... கடைசியாக அம்மா ஊருக்கு போகும்போது எப்போது உங்களுக்கு வீட்டு பலகாரம் என்று கட்டி கொடுத்தார், அதை என்ன செய்தீர்கள் ? நான் படிக்கும்போது எப்போதும் ஊருக்கு வந்து போகும்போது என்னுடைய பெட்டியில் எனக்கு தெரியாமல், எனக்கு பிடித்த பலகாரம் தொற்றிக்கொள்ளும் ! அதை என் கையில் கொடுத்தால் நண்பர்கள் கேலி செய்கிறார்கள் என்று கத்துவேன் என்று எனக்கு தெரியாமல் எப்படியோ வைத்து விடுவார் எனது அம்மா. காலேஜ் சென்று பெட்டியை திறக்கும்போது அம்மாவின் மீது கோவம் வந்தாலும், அதை பார்த்த நண்பர்கள் முதலில் செய்வது அட வீட்டுல செய்ததா என்று விட்டு நொருக்குவதுதான்  !! இன்று காலேஜ் செல்லும் எனது நண்பரின் மகனுக்கு 500 ரூபாய் கூட கொடுத்து உனக்கு பிடித்ததை வாங்கி சாப்பிடு என்று கொடுக்கிறார்கள்....... அது அம்மாவின் அன்பினால் செய்யப்பட்ட பலகாரங்களை விட சுவையாய் இருக்குமா என்ன ?





இன்று நமக்கு கிடைக்கும் எல்லாமே வீட்டு பலகாரங்களை போல என்றுதான் விற்க்கபடுகிறது, சில இடங்களில் "வீட்டில் செய்த பலகாரத்தை போன்று சுத்தமான, ஆரோக்கியமான...." என்று சொல்லி விற்கிறார்கள், அதில் எங்கேயாவது அன்பான என்ற ஒன்று உண்டா ? அவர்களுக்கே தெரியும் அன்பில் செய்த வீட்டு பலகாரங்கள் எல்லாம் அம்மா மட்டுமே செய்ய முடியும் என்று !! அடுத்த முறை வீட்டில் அம்மாவிடம் சொல்லி ஏதாவது வீட்டு பலகாரம் செய்ய சொல்லி சாப்பிட்டு பாருங்கள், பிறகு தெரியும் வெளியில் விற்கும் பலகாரத்தின் ருசியில் ஒரு மாற்றம் இருப்பதை....... அது அன்பு இல்லாமல் வேறென்ன ?


Labels : Suresh, Kadalpayanangal, Ennangal, Veetu palakaaram, ammavin anbu

23 comments:

  1. உண்மைதான். அந்தக்காலத்தில் கூட்டுக்குடும்பங்களில் எவ்ளோ பலகாரம் செய்தாலும் அவற்றைத் தின்னு தீர்க்க ஆளிருந்தது. பிள்ளைகள் கூட்டம் ஒன்னையும் விட்டு வைக்காது. பண்டிகை நாள் வரை பலகாரம் மிஞ்சி இருக்குமா என்பதே சந்தேகம்தான்.

    இப்ப செஞ்சாலும் தின்ன ஆளில்லையே:(

    பழைய நினைவுகளைக் கிளறிவிட்ட அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. // இப்ப செஞ்சாலும் தின்ன ஆளில்லையே:( //

      இந்த ஒரு வரியிலேயே நமது குடும்ப அமைப்பை பற்றி சொல்லி விட்டீர்கள் ! அருமை !

      நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  2. அன்பின் ருசியை பகிர்ந்த
    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி.... மிக்க நன்றி !

      Delete
  3. இன்றும் எங்கள் வீட்டில் பெரும்பாலும் பலகாரங்கள் எதுவும் கடையில் வாங்குவதில்லை. வெளிநாடு எடுத்துக்கொண்டு போக வெறுப்பாகும் நண்பர் சென்ற ஒரே மாதத்தில் கடையில் கிடைக்கும் பலகார லட்சணம் தெரிந்து கொள்வார்!
    அன்பு தான் வீட்டு பலகாரங்களின் secret sauce என்பது மிகச்சரி!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் பந்து ! அன்பு என்றும் நிலையானது...... சுவையானதும் கூட !

      Delete
  4. உண்மைதான்
    அன்பில் தோய்ந்து எடுத்த
    பலகாரங்களுக்கு நெய்யில் மிதக்கவிட்டு எடுத்த
    பலகாரங்களாயினும் நிச்சயம் எக்காலத்தும்
    அது ஈடாகவே ஆகாது
    படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் ! உங்களது கவிதைகளை போலவே இந்த வீட்டு பலகாரத்திலும் ஒரு சுவை இருக்கும் !

      Delete
  5. Replies
    1. தமிழ் மணம் ஓட்டிற்கு நன்றி ரமணி சார் !

      Delete
  6. பலகாரம் வீட்டில் சுடுவதும் அதை சுடச் சுட சாப்பிடுவதும் இன்பமான ஒன்று.. அதை பக்கத்து வீட்டில் பெருமை அடிப்பதும் இன்பமான ஒன்று..

    இப்பவெல்லாம் பலகாரம் சுட்டு பலநாள் ஆச்சு...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சதீஷ்..... அதனால்தான் இந்த பதிவு நிறைய பேருக்கு நினைவலைகளை கிளப்பி இருக்கிறது !

      Delete
  7. yes..பலகார அம்மாக்கள் இப்ப ரெஸ்ட் எடுக்க இப்போதையா அம்மாக்களும் அவர்களுக்கு கம்பெனி கொடுத்து கொண்டு இருக்கோம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா........ உண்மைதான் அதுதானே நிஜம் ! ஆனால் இன்றும் அந்த இனிய நாட்கள் அருமை இல்லையா !

      Delete
  8. நான் சின்ன புள்ளையா இருக்கும் போது , அம்மா முறுக்கு செய்யும் போது நான் எண்ணெய் சட்டியவே தள்ளி விட்டுடேன்.

    ஒரு பலகாரம் ஆயிரம் ஆயிரம் நினைவுகளை தருகிறது

    ஒரு தோசையா இருக்கட்டும் , ஒரு கார சேவா இருக்கட்டும், அது ஒரு பலகாரம் என்பதையும் தாண்டி அதை நீங்கள் பார்க்கும் கோணம் என்னை நெகிழ செய்கிறது

    ReplyDelete
    Replies
    1. உங்களது கருத்து இந்த பதிவின் வெற்றியை சொல்கிறது ! ஆமாம், இது நல்ல நினைவலைகளை கிளப்பி இருக்கிறது ! நன்றி ஆனந்த் !

      Delete
  9. இனிய நினைவுகள் மனதில் வந்தன... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார் ! இந்த பதிவில் உங்களது வீட்டு பலகாரமும் அதன் நினைவுகளும் எழுதும்போது நினைவுக்கு வந்தது !

      Delete
  10. Waaaaaat.... Thanabalan Sir u r Late .... Ha ha.😮😮😮

    ReplyDelete
  11. Stay touch with lovable parents & their sweets :)))

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கிருஷ்ணா ! உங்களது கருத்து மிக சரி !

      Delete
  12. சரியாகச்சொன்னீர்கள்.
    கடையில் வாங்கும் பலகாரத்தில் அன்பு நிச்சயம் இருக்காது.
    ‘சுயநலம்’ மட்டுமே இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது கருத்திற்கு மிக்க நன்றி சார் ! உங்களை அன்று கோவையில் சந்தித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி, மீண்டும் சந்திக்க ஆவல் !

      Delete