Monday, July 29, 2013

சாகச பயணம் - தசாவதாரம் புகழ்.....செக்வே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் !

ஹாலிவுட் படங்கள் மற்றும் தசாவதாரத்தில் எல்லாம் இந்த வண்டி வரும். பார்ப்பதற்கு மிகவும் புதுமையாக இருக்கும், இதை எப்படி ஓட்டுகிறார்கள் என்று ஆச்சர்யம் வரும், எனக்கு இதை ஓட்டுவதற்கு ஒரு வாய்ப்பு வந்தபோது நிஜமாகவே வானுக்கும், மண்ணுக்கும் மனம் குதித்தது ! பலருக்கு இதன் பெயர் என்னை போலவே தெரியாது இருக்கும்...... இது செக்வே எலெக்ட்ரிக் வெஹிகிள் என்பார்கள். இது இரண்டு வீல் கொண்ட, தானாகவே சமநிலை செய்து கொள்ளும், மின்சாரத்தில் இயங்க கூடிய ஒரு வாகனம். எனது சிங்கப்பூர் பயணத்தின்போது எதேச்சையாக செந்தோசாவிற்கு சென்றிருந்தேன், அங்கு இது இருந்தது ! யாராவது தசாவதாரத்தில் எங்கே இது வருகிறது என்று யோசித்தால்.... கமலிடம் அந்த ரகசிய போர்முலாவை விற்க சொல்லி பேசி கொண்டே செல்லும் அந்த காட்சியில் இதை அவர்கள் ஓட்டுவார்கள் !


முதலில் இதற்க்கு பணம் செலுத்திவிட்டு நானும் எனது மனைவியும் ஒரு டூயட் பாடலாம் என்று அவரவர்க்கு ஒரு வண்டி எடுத்துக்கொண்டோம். இதை எப்படி இயக்க வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிட அவகாசத்தில் சொல்லி கொடுக்கின்றனர், பின்னர் இன்னும் ஐந்து நிமிடம் அதை ஒரு சிறிய பாதையில் இயக்க வேண்டும். நீங்கள் அதை சரியாக செலுத்த முடியும் என்ற நம்பிக்கை வரும்போது மட்டுமே அவர்கள் அதை ஒரு தூரமான பாதையில் பயணிக்க அனுமதிக்கின்றனர். வழக்கம்போலவே சோதனை எலியாக (?!) எனது மனைவியை முதலில் அந்த வாகனம் ஓட்டும் பயிற்சிக்கு அனுப்பிவிட்டு நான் தூரத்தில் இருந்து கவனித்தேன் ! முகத்தில் மரண பயத்துடன் அவர் தடுமாறி விழ, அந்த ட்ரெய்னரோ மீண்டும் மீண்டும் பயபடாதீர்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். முடிவில் அவரது காலில் வண்டியை ஏற்றிவிட்டு அதில் இருந்து விழுந்தபோது இங்கு எனக்கு வயிற்றில் பயத்தில் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது ! அந்த மகானுபாவன் என்னிடம் வந்து சார், உங்க மனைவி ரொம்ப பயபடுறாங்க, இந்த வாகனத்தை ஓட்டுவதற்கு அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, நீங்க வேணுமின்னா ரெண்டு ரவுண்டு போயிட்டு வாங்களேன் என்றார்...... அப்போது எனது மனைவி தாலியை வெளியே எடுத்து கண்ணில் ஒற்றி கொண்டிருந்தார் !

டேய்..... சொன்னா கேட்க மாட்டியா..... உன்னையெல்லாம் @#$%ˆ&& என்று அன்பாக சொன்ன எனது பயிற்சியாளர் 
அவர் பயிற்சியில் சொன்னது என்பது இதுதான்....... வண்டி சுயமாகவே சமநிலை செய்து கொள்ளும், அதனால் நீங்கள் விழ வாய்ப்பே இல்லை. இந்த ஹாண்டிலை முன்னே சிறிது சாய்த்தால் வண்டி முன்னே போகும், எவ்வளவு சாயகின்றீர்களோ அது அவ்வளவு வேகமாக போகும், பின்னால் சாய்த்தால் வண்டி வேகம் குறையும், முழுதுமாக பின்னால் இழுத்தால் வண்டி நின்று விடும் ! மண்டையை ஆட்டி ஆட்டி நான் கேட்கவும், அவர் நான் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்து விட்டு, என்னை அதில் ஏற்றி விட்டு எங்கே கொஞ்சமாக முன்னே அந்த ஹாண்டிலை சாயுங்கள் என்று சொல்ல, நான் பார்முலா 1 கார் பந்தயத்தில் காரை செலுத்துவதை போல செய்யவும், வண்டி விசுக்கென்று என்னை முன்னே இழுத்து சென்றது (நல்ல வண்டிதான், என்னுடைய எடையை நன்கு இழுத்தது :-) ), அவர் ஜாக்கி சான் ஸ்டைலில் ஓடி வந்து அதை நிறுத்தினார். பின்னர் ஒரு ஐந்து நிமிடத்திற்கு அவர் கொடுத்த பயிற்சியில் எனக்கு நம்பிக்கை வந்தது. அவர் என்னை அந்த நீளமான பாதையில் செல்ல சொன்னபோது, நான் திரும்பி எனது மனைவியை தேடினேன்.......... எனது கண்களுக்கு அவர் அப்போது மஞ்சள் புடவை கட்டி, வேப்பிலையை கையில் வைத்து கொண்டு, முன்னே பொங்கல் பானையும், அதற்க்கு சிறிது தள்ளி பூ குழியும் (தீ மிதி) இருந்தது போல தெரிந்தது பிரமைதான் என்று நான் அதை முடித்து விட்டு வந்தபோது தெரிந்தது.

நான் அந்த பாதையை தேந்தெடுத்து எனது மனைவிக்கு டாட்டா காண்பிக்கவும் அதில் எனது சமநிலையை இழந்தேன், ஓடி வந்த அந்த பயிற்சியாளர் என்னை தாங்கி பிடித்து மனதினுள்ளே "நீ என்ன லண்டனுக்கா போற, இங்கே போயிட்டு ஓடி வந்திட போற, அதுக்கு எதுக்கு இந்த பில்ட்-அப்"என்று கூறிக்கொண்டே, என்னை சதா பாணியில் "போய்யா..... போ"என்று அன்பாக அனுப்பி வைத்தார். நான் அந்த மரதினிடையே இருந்த பாதையில் செல்ல ஆரம்பித்தபோது எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது....... எனக்கு முன் ஒருவர் மெதுவாக செல்லும் வரை !! அவரை பார்த்தவுடன், அவரை விட நான் நன்றாக ஒட்டுவதாக நினைத்துக்கொண்டு கொஞ்சம் ஸ்பீட் கொடுத்து அவரை தாண்டி நான் செல்ல, பெருமையாக நான் திரும்பி ஒரு லுக் விட, என்னை புரட்டி தள்ளியது அந்த வண்டி ! வண்டியிலிருந்து கீழே நான் விழவில்லை என்றாலும் அது ப்ரேக் பிடிக்காத தண்ணி லாரி போல ஓடியது என்பதுதான் நிஜம் !
நல்லாதானே போய்கிட்டு இருந்தது என்று அவர் என்னை பார்க்க..... நான் ஹி ஹி என்று சொல்லிவிட்டு எனது அந்த சாகச பயணத்தை தொடங்கினேன். முதல் ரவுண்டு முடியும் கோடு வந்தது, நான் எனது மனைவி இப்போது தீ எல்லாம் மிதித்துவிட்டு கண்ணில் நீர் வர காத்திருப்பார் என்ற எண்ணத்தில் நான் தேடினால், அவர் பொறுமையாக அங்கு கிடைத்த பஞ்சு மிட்டாயை ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தார்..... அப்போ சத்தியமா அது பிரமைதான் என்று புரிந்தது ! நான் எனது இரண்டாவது ரவுண்டுக்கு தயார் ஆனேன், எனது பயிற்சியாளர் இவன் இன்னுமா இருக்கான் என்று பார்த்து சிரிக்க நான் மெதுவாக அந்த பஞ்சுமிட்டாயை பார்த்துக்கொண்டே செல்ல ஆரம்பித்தேன் !
முடிவில் நான் எனது இரண்டாவது ரவுண்டு முடித்து வெற்றி கோட்டை தொடும்போது எனது பயிற்சியாளர் என்னை ஆர்வமாக வரவேர்ப்பதை பார்க்கவும் ! :-) உண்மையாக சொல்வதென்றால்...... இந்த பயணம் மிகவும் அருமையாக இருந்தது. மிகவும் இலகுவாக, நடந்து போவதை விட சொகுசாக பயணிக்க இது நல்ல வாகனம் எனலாம். இதை ஓட்ட தெரிந்துவிட்டால் நீங்கள் கண்டிப்பாக விரும்புவீர்கள் ! நான் வெற்றி களிப்புடன் எனது இந்த சாகச பயணத்தை முடித்துவிட்டு எனது மனைவியிடம் வந்தபோது, அவர் வெகு சாதாரணமாக என்னங்க இந்த வண்டியில் டபிள்ஸ் எல்லாம் போக முடியாதா என்று கேட்க்க எனது மண்டைக்குள் வொய் திஸ் கொலைவெறி என்ற பாடல் பாடியது நிஜம் !

Labels : Segway ride, Sentosa, Singapore, Suresh, Kadalpayanangal, Saagasa payanam, adventure ride

20 comments:

 1. ஹா... ஹா... சாகச பயணத்தை ரசித்தேன் - எழுத்து நடையையும்... ஆனாலும் உங்கள் "நேர்மை" பிடிச்சிருக்கு...! ஹிஹி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நேர்மையா சொல்லிட்டேனே ஒழிய, வீட்டில் எல்லாம் பறக்குது ! ஓங்கி ஒரு அடி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் சார்....... எங்க வீடு லேடி சிங்கம் ! :-)

   Delete
 2. ஹைய்யோ!!!!

  சூப்பர்!


  சிங்கை ஏர்ப்போர்ட்டில் பார்த்திருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், இந்த பயணமே தனி அனுபவம். நியூஜீ வந்து இதில் அப்படியே சுற்றி பார்த்தா ! நன்றி மேடம் !

   Delete
 3. நல்லதொரு சொகுசு பயணம்...


  நாங்கள் படத்தில் பார்ப்பதை எல்லாம் நீங்கள் எங்களுக்க வலைப்பதிவின் மூலம் விருந்தாக வைப்பது மிக்க மகிழ்ச்சிங்க...

  ReplyDelete
  Replies
  1. தங்களது மனம் திறந்த பாராட்டிற்கு மிக்க நன்றி சதீஷ் !

   Delete
 4. ஹா ஹா ஹா நல்ல பயணம் சார்... நம்ம ஊரு நடை வண்டிக்கு மோட்டார் மாட்டுனாப்ல இருக்கு

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பரே...... ஹை - டெக் நடை வண்டி என்றும் சொல்லலாம் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 5. இந்த வண்டியை நான் தசாவதாரம் படத்துல பார்த்திருக்கேன். சயிண்டிஸ்ட் கம; மற்றும் அவர் ஆட்கள்லாம் இந்த வண்டிலதான் போவாங்க.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க...... இப்போ ஜப்பானில் டொயோட்டா இதை போலவே ஒன்றை தயாரித்து வருகிறது !

   Delete
 6. பயணம் மிகவும் அருமையாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 7. இந்த வண்டி பேரே இப்போ தான் தெரிஞ்சிகிட்டேன்

  ஹீ ..ஹீ ..அண்ணா... லிப்ட் கெடைக்குமா..?

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக ஆனந்த், லிப்ட் என்ன வண்டியே கிடைக்கும்...... தம்பி ஆனந்த்க்கு ஒரு வண்டி பாஆஆஆஆஆஆஆஆஆஆஆர்செல் ! நன்றி !

   Delete
 8. Replies
  1. ஹலோ...... இந்த குசும்புதானே வேணாம் ! ரெண்டு சக்கர வண்டிதானே ஓட்டினேன் ! நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 9. Replies
  1. வாங்க கிருஷ்ணா, ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம்...... நன்றி !

   Delete
 10. நிஜமாகவே சாகசப் பயணம்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி கருண் ! தங்கள் வருகைக்கும்....கருத்திற்கும்....!

   Delete