Tuesday, July 30, 2013

ஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 1)

சிவகாசி என்றால் எல்லோருக்கும் தெரியும் வெடி பேமஸ் என்று, ஆனால் அதை இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக தேடி அலையும்போது நான் பட்ட பாடு இருக்கிறதே !! முதலில் ஒரு நண்பர் மூலம் வெடி பாக்டரி பற்றி கேள்விப்பட்டு அங்கு பார்க்க போனேன், அங்கு எனது கேமரா மூலம் போட்டோ எடுக்க கூடாது என்று சொல்லி விட்டனர். பின்னர் அங்கிருந்தே இன்னொரு நண்பர் மூலம் இந்த வெடி பாக்டரி சுற்றி பார்க்க அனுமதி வாங்கினேன். பொதுவாக வெடி பாக்டரி என்றால் நிறைய விதி இருக்கிறது. அது ஊரை விட்டு தள்ளி இருக்க வேண்டும், பழங்கால கோவில்கள் பக்கத்தில் இருக்க கூடாது, சல்பர் அதிகம் இருக்கும் இடம் இருக்க கூடாது என்று பல விதிகள். இதனால் இந்த பாக்டரி ஆள் அரவம் இல்லாமல் இருக்கும் ஒரு இடத்தில், மனித நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியில் இருந்தது, இப்போதெல்லாம் அதிகமாக ரைட் வருகிறது என்பதால் எனது காரை பார்த்தவுடன் பரபரத்தது அந்த பகுதி ! ரொம்ப முக்கியமான விஷயம், இந்த ப்ளாக் சுமார் மூன்று பகுதிகளாவது வரும்...... 

பகுதி - 1 : எல்லோரும் விரும்பும் சரம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று
பகுதி - 2 : வெடி மருந்து கலப்பது, திரி தயாரிப்பு, புஸ்வானம், பென்சில்
பகுதி - 3 : வியாபாரம், பேக்கேஜ், பொதுவான சிரமங்கள், புது வெடிகள் தயாரிப்பு

வாருங்கள் நாம சரம் எப்படி தயாராகிறது என்று பார்ப்போம் !


இந்த பயணத்தின் முடிவில் வெடியை பற்றி நான் நினைத்து வைத்தது எல்லாம் மாறியது எனும் அளவுக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பொதுவாக வெடி என்பது வெடிக்கும்போது சத்தம், ஒளி மற்றும் வெப்பம் ஆகியவற்றை வெளிபடுத்த வேண்டும். இதன் கலவை என்பது ஒன்றுதான், ஆனால் அதை மிக்ஸ் செய்யும் விதத்தை பொறுத்து வெடி மாறும், உதாரணமாக அதிகமாக ஒளி வேண்டும் என்று அந்த வெடி மருந்து போட்டால் அது புஸ்வானம், அதிகமான சத்தம் வேண்டும் என்று அந்த மருந்து போட்டால் அது லட்சுமி வெடி ! இதன் கலவை என்பது ஒன்றுதான், ஆனால் கலக்கும் விதம்தான் அது என்ன வெடி என்பதை தீர்மானிக்கிறது ! இதை கலக்குபவர்கள் எல்லாம் டிகிரி படித்து விட்டு வருவதில்லை........ கேள்வி ஞானம் வைத்து செய்வதால்தான் விபத்து நேர்கிறது ! பொதுவாக இந்த வெடி தயாரிக்கும் இடம் பார்த்தால் ஒரு சிறிய அறையில் நான்கு கதவு கொண்ட இடம், இதுவே வெடி மருந்து தயாரிப்பு அல்லது மிக்சிங் ஆகா இருந்தால் அதை சுற்றி ஒரு சுற்று சுவர் (ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அது அடுத்த இடத்திற்கு 
பரவாமல் தடுக்க ) அவ்வளவுதான். அரசாங்கத்தின் விதிப்படி ஒவ்வொரு அறையும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருக்க வேண்டும், கீழே உள்ள படத்தில் தெரியும் ஒவ்வொரு அறையும் வெடி செய்யும் இடம் !
வெடி பாக்டரியின் தோற்றம்..... ஒவ்வொரு அறையும் இப்படி தள்ளிதான் இருக்கும் !

சரி, நாம் சரம் செய்வதை பார்ப்போம் வாருங்கள் ! இந்த சரம் எல்லாமே சிகப்பு கலர் தாளில்தான் வரும் (அது ஏன், சிகப்பு மட்டும் என்பதற்கு அவரிடம் விளக்கம் இல்லை...... சிகப்புதான் என்கிறார், தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் !) அந்த தாள் ஓட்டுவது என்பது வெளியே ஒரு இடத்தில செய்கிறார்கள். ஒரு பெரிய டியுப் போன்று தாளில் செய்து காய வைக்கின்றனர். அது நன்கு காய்ந்த பின் ஒரு குறிப்பிட்ட அளவில் பெரிய கட்டர் கொண்டு கத்தரிக்கின்றனர். நீங்கள் அங்கு சென்று பார்க்கும்போதுதான் தெரியும் அது மழை போல பொழியும் ! முடிவில் அதை ஒரு வட்டமான தாளில் சுருட்டி கட்டி விடுகின்றனர், இப்படி கட்டப்பட்ட வட்டமான இடத்தில் 1000 வெடிகள் வரை இருக்கும் !

சரம் டியுப் !

சரம் சரமாக கட் செய்யபடுகிறது !


கட் செய்யப்பட்ட சரம் இப்படிதான் வட்டமாக அடுக்கப்பட்டு வரும் !

இந்த வெடி மருந்து என்பதில் பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் மற்றும் அலுமினியம் பவுடர் கலக்கின்றனர். இதில் கலர் வருவதற்கு சோடியம் நைட்ரேட் மற்றும் கெமிக்கல் உப்புக்கள் கலக்கின்றனர், ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு கலவை, கீழே இருக்கும் சார்ட் பார்த்தால் உங்களுக்கே புரியும். முன்பே சொன்னது போல இந்த கலவையை இவர்கள் தங்களது வாழ்வின் அனுபவங்களின் மூலமே செய்கின்றனர். சில வெடிகள் புஸ் ஆவது இதனால்தான். வெடியின் அமைப்பை என்றாவது உன்னித்து கவனித்து இருக்கின்றீர்களா ?! கீழே இருக்கும் படத்தை பாருங்கள், ஒவ்வொன்றாக விளக்குகிறேன் !

கலர் கலராம் காரணமாம் !
வெடியின் அமைப்பு !

மேலே இருக்கும் வெடி படத்தை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ! ஒரு சின்ன வெடியில் என்ன என்ன இருக்கும் என்று பார்ப்போமா ? 
 •  வெடி டியுப்
 • கீழே மண் கொண்டு அடைக்கப்படும்
 • வெடி மருந்து
 • வெடி திரி - திரி, மருந்து, பேப்பர்
 • அதை அடைக்கும் மண் 
 இப்போ நமக்கு பண்டில் பண்டிலாக பேப்பர் வந்து விட்டது, அதில் வெடி மருந்து உள்ளே போட்டால் அடுத்த வழியாக வந்து விடுமே, ஆகவே அதை களிமண் மற்றும் பசை கலவை கொண்டு அடைக்க வேண்டும். ஒருவர் களிமண் கலவை தயார் செய்ய, இன்னொருவர் சரசரவென்று ஒரு பக்கத்தை மட்டும் அடைத்து வெயிலில் காய வைக்கின்றார் ! அது காய்ந்து முடிந்தவுடன் இன்னொரு பெண்மணி அதனுள்ளே மருந்தை அடைத்து அடைத்து தயார் செய்கின்றார்.

வெடியின் அடி பாகம் களிமண்ணினால் அடைக்கப்படும் !

அடைக்கப்பட்டதை காய வைக்கின்றனர், அருகில் அதில் மருந்து உள்ளே அடைக்கின்றனர் !

சரம், இப்போது வட்டமாக !!

இப்போது வெடி எல்லாம் ரெடி, அதற்க்கு திரி ? இது தயார் ஆகும் விதம் பற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன், இல்லையென்றால் இந்த பதிவு ஒரு தீபாவளி மலர் போல ஆகிவிடும் ! இப்போது திரி ரெடி என்று வைத்து கொள்வோம், அதை சரியானபடி கட் செய்வார்கள், அதைதான் கீழே பார்க்கிறீர்கள்.

சின்ன திரி, பெரிய வேலை !
இப்போ திரி ரெடி, வெடி ரெடி. இப்போது இது இரண்டையும் இணைக்க வேண்டும். வெடி மருந்து நிரப்பப்பட்ட டியூபில் இந்த திரியை இணைக்க இவர்கள் முதலில் திரியை தண்ணீரும் சில கெமிக்கல் கலக்கப்பட்ட ஒன்றில் திரியின் ஒரு முனையை நனைக்கின்றனர் (கீழே உள்ள படத்தில் அந்த அம்மாவிற்கு பக்கத்தில் ஒரு டப்பாவில் கருப்பாக தெரிகிறது பாருங்கள் !), பின்னர் அதை சாரா சரவென்று வெடியின் உள்ளே சொருகுகின்றனர். இதை அவர்கள் செய்யும் வேகத்தை பார்த்தால் மெசின் கூட இவ்வளவு வேகத்தில் செய்யாது என்றுதான் உங்களுக்கு தோன்றும் !
மருந்து அடைக்கப்பட்ட சரம்..... திரிக்கு வெயிடிங் !
திரியை உள்ளே போட்டாச்சு !
மேலே சொன்னது முடிந்தவுடன் அதை காய வைத்து அந்த வட்டமாக சுற்றப்பட்ட காகிதத்தை எடுத்தால் மலை மலையாக வெடி ரெடி ! கீழே பாருங்கள், எவ்வளவு வெடி என்று..... அப்படியே எடுத்து வெடிக்க வைக்க வேண்டும் என்று தோன்றவில்லை !


சரம் இப்போது ரெடி சார் ! வெடிக்க வரீங்களா !

இந்த ஒத்தை வெடியை இப்போது பூவை போல பின்னினால் சரம் ரெடி ! ஒரு வெடியை எடுத்து பெண்கள் தலை பின்னுவதை போல பின்ன ஆரம்பிக்கின்றனர். எனக்கும் சொல்லி கொடுத்து அதை நான் உட்கார்ந்து பின்ன ஆரம்பித்தேன், அவர்கள் ஒரு முழம் சரம் பின்னி முடித்தபோது நான் அப்போதுதான் பத்து வெடிகளை முடித்திருந்தேன் ! கை எல்லாம் வெடி மருந்து என்று வேடிக்கையாக இருந்தது எனக்கு ! கீழே இருக்கும் படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும் அவர்கள் வேலை செய்யும் முறை.

எத்தனை முழம் சரம் வேண்டும் சொல்லுங்க....


சரம் சரமாக சரம் ரெடி, அடுத்து அதை பக்காவாக பேக் செய்ய வேண்டுமே ! அதற்கும் ஒரு ரூம் இருந்தது. உள்ளே ஒரு ஆள் அந்த வெடிகளை எல்லாம் எடுத்து பண்டில் கட்டி கொண்டிருந்தார். அவருடன் உட்கார்ந்து நானும் 15 நிமிடத்தில் ஒரு பண்டில் கட்டினேன், அவரோ அதற்குள்ளாக வெறும் 20 பண்டில்தான் கட்டினார் என்றால் பாருங்களேன் ! இந்த பண்டில் கட்ட பாக்ஸ், அதை செய்யும் முறை, அதை சேமிக்கும் இடம் என்று எல்லாம் அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன் ! சரி உங்களுக்கு எத்தனை முழம் சரம் வேண்டும் என சொல்லுங்கள்...... அட சொல்லுங்கண்ணே சொல்லுங்க !!
பாக்கெட் போடலாம் வாங்க......


Labels : Oor special, Sivakasi, Fire works, crackers, Suresh, Kadalpayanangal

10 comments:

 1. சிகப்பு கலர் தாள் - Danger...!

  படங்களுடன் விளக்கம் அருமை...

  பல விபத்துகள் நடக்கிறது என்பது தான் ஞாபகம் வருகிறது... விபத்துகள் தவிர்க்க என்னென்ன முன்னேற்பாடுகள் செய்துள்ளார்கள் என்பதையும் விளக்கமாக பதிவிடவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் தனபாலன் சார், ஆனால் இன்று இதைவிட எல்லாம் பயங்கரமான வெடிகள் எல்லாம் வந்துவிட்டன, ஆனால் இது மட்டும் சிகப்பு நிறத்தில்.

   கண்டிப்பாக அதை பற்றி விரிவாக எழுதுகிறேன். நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 2. Becouse 'RED' is the symbol of 'DANGER'. That why they are using red colour for crackers.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாதன் ! ஆனால் இந்த சரம் தவிர இன்னும் பல பல வெடிகள் அபாயகரமானவை, உதாரணமாக பாம்.... ஆனால் அது மட்டும் ஏன் பச்சை கலரில் !

   Delete
 3. குழந்தை தொழிலாளர்கள் தான் சிவகாசியின் அவமானம்...

  ReplyDelete
  Replies
  1. இப்போது சட்டம் கடுமையாக இருக்கிறது, அங்கு இருந்தவரை நான் குழந்தை தொழிலாளர்களை பார்க்கவில்லை..... ஆனால் மறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம் ! நன்றி நண்பரே... தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் !

   Delete
 4. Replies
  1. நன்றி நாடோடி பையன், தங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி !

   Delete
 5. Red paper = child labor blood :(

  ReplyDelete
  Replies
  1. நன்றி கிருஷ்ணா... சுருக்க சொன்னாலும், சுருக்கென்று சொன்னீர்கள் !

   Delete