Friday, August 30, 2013

சாகச பயணம் - பாம்புகளுடன் ஒரு நாள் !

பாம்பு...... இதை சொன்னாலே படையும் நடுங்கும் ! நான் சிறு வயதில் இருந்து கிராமத்தில் இருந்ததால், அதுவும் காட்டுக்குள் வீட்டை கட்டி இருந்ததால் பாம்பை பார்த்து என்றும் அவ்வளவாக பயந்தது கிடையாது !! ஆனாலும், ஒரு முறையாவது பாம்பை பார்த்துக்கொண்டே இருப்பதை விட, அதை தொட்டு தூக்கி கொஞ்ச வேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருந்தது. முதல் முறையாக பாங்காக், தாய்லாந்து சென்று இருந்த போது அங்கு இருந்த ஜூவில் ஒரு பெரிய மலைப்பாம்பை தோளில் போட்டு போட்டே எடுத்தேன், அதற்கே உள்ளுக்குள் உதறல் எடுத்தது. இந்த முறை எனது அனுபவம் வித்யாசம் !



பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.

 
இந்த முறை சிங்கப்பூரில் சென்டோஸா தீவு சென்று இருந்தபோது, அண்டர் வாட்டர் வேர்ல்ட் அருகினில் ஒருவர் பாம்பை வைத்து இருந்தார். சரி, அங்கிருந்த பாம்பை பிடித்துக்கொண்டு இருக்கிறார் போல இருக்கிறது என்று இருந்தபோது, ஒரு சின்ன போர்டில் போட்டோ வித் ஸ்நேக் என்று 20 வெள்ளி எழுதி இருந்தது. நாமதான் "ஸ்நேக்" பாபுவாச்சே..... உள்ளுக்குள் நடுங்கினாலும் ஒரு முறையேனும் இந்த பாம்பை தோளில் போட வேண்டும் என்ற ஆசையினால் சென்றேன். முதலில் ஒரு பாம்பை எனது தோளில் போட்டார், நானும் அது என்னை சுற்றி சுற்றி வர அதன் வழு வழுப்பு மேனி மீது பட பட ஒரு மாதிரி இருந்தது. முடிவில் அது எனது தோளை நன்கு சுற்றியபோது சிவன் போல போஸ் எல்லாம் கொடுத்தேன்..... அப்போதுதான் அந்த பாம்பின் சொந்தக்காரர், நான் ரொம்ப ரசிக்கிறேன் (உள்ளுக்குள் எடுத்த உதறல் எல்லாம் உங்களுக்கு என்ன தெரியும் ?!) என்று இன்னொரு பாம்பையும் எனது தோளில் போட்டு விட்டு "திஸ் இஸ் ப்ரீ.....!" என்று என்னை பார்த்து சிரித்தான் மகா பாவி..!!


 
ஒரு பாம்பிர்க்கே உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்று கொண்டு இருந்த என்னை, பாவி இன்னொரு பாம்பையும் தோளில் போட்டு விட்டதாலும், என்னை பலரும் அங்கு நின்று பார்த்துக்கொண்டு இருந்ததாலும், வடிவேலு செய்யும் முக பாவனையில் நின்று கொண்டு இருந்தேன். அது சரி, போட்டதுதான் போட்டான் ஒரு சின்ன பாம்பாக போட கூடாதா, நல்ல பெரிய மலை பாம்பாக போட்டு விட்டு போய் விட்டான்.... கொஞ்ச நேரம் அவன் ஆளையே வேற காணோம், என்னவென்று பார்த்தால், அவன்தான் அங்கு சோடா கடை வேறு போட்டு இருக்கிறான், இது சைடு பிசினஸ் ! மனதில் நொந்துக்கொண்டே அவன் வரும் வரை காத்திருந்து பாம்பை எடுத்து விட்டவுடன்...."ஓ... இட் இஸ் சோ நைஸ் !" என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆனேன்.

 
என்ன அதுக்குள்ள முடிஞ்சு போச்சுன்னு கிளம்பரீன்களா.... இருங்க, நம்ம பகுதிக்கு வந்தா புதுசா ஒரு விஷயமாவது உங்களுக்கு சொல்லணுமின்னு நினைச்சிருக்கேன், அப்படியே போனா எப்படி ? "பாம்பு மசாஜ்" பற்றி தெரியுமா ? ரஷ்யாவிலும், இஸ்ரேல் நாடுகளிலும் இது மிகவும் பிரபலம். சின்ன, பெரிய பாம்புகளை உங்களது உடலில் விட்டு மசாஜ் செய்வார்களாம், வாங்களேன் நாமளும் இப்படி ஒரு மசாஜ் செய்துகிட்டு வரலாம் !?
 
 
Labels : Saagasa payanam, adventure, snake, suresh, kadalpayanangal, day with snake

Thursday, August 29, 2013

டெக்னாலஜி - எக்சோ ஸ்கெலடன்

நாம் வாழ்வில் இதுவரை மனிதன் இவ்வளவுதான் செய்ய முடியும் என்று இருந்ததை எல்லாம் இந்த டெக்னாலஜி உடைத்து வருகிறது. உதாரணமாக, ஒரு மனிதனால் இவ்வளவுதான் எடை தூக்க முடியும் என்று இருந்ததை இன்று ஒரு ஒல்லி பிச்சான் கூட சுமார் நூறு கிலோ வரை சாதரணமாக தூக்க முடியும் என்று வந்து விட்டது, விரைவில் இந்த டெக்னாலஜி கொண்டு நமது பாட்டி இமயமலை கூட ஏறி செல்ல முடியும் ! என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா ? உங்களுக்கு இந்த எக்சோ ஸ்கெலடன் (Exoskeleton) பற்றி தெரிய வந்தால் புரிந்து கொள்வீர்கள்.



2007ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு புதிய ரோபோட் போன்ற ஒன்றை டெஸ்ட் செய்யும்போது அதை வீடியோ எடுத்து வெளியே விட்டதில்தான் இது உலகத்திற்கு தெரிந்தது. இன்றைய ராணுவ வீரர்கள் எவ்வளவு ஆயுதங்கள் தாங்கி செல்கிறார்களோ, அவ்வளவு அவர்களுக்கு பாதுகாப்பு, அது மட்டும் இல்லாமல் அவர்கள் தொலை தூரத்திற்கு இப்படி தூக்கி சென்றால் அவர்களால் நன்கு போர் செய்ய முடியாமல் போகும், அதனால் ஒரு கருவி, சும்மா மாட்டி கொள்வது போல இருந்தால், அது நீங்கள் சாதரணமாக நடப்பது போல செய்தால் போதும், அந்த கருவி எல்லா எடையையும் எடுத்து கொள்ளும் என்று இருந்தால் எப்படி இருக்கும், அதற்க்கு விடையே இது. இதன் முன்னேற்றமான கற்பனைதான் iron man படம் ! இந்த வீடியோ பாருங்கள், நீங்கள் ஆச்சர்யபடுவது உறுதி !

 
 
Labels : Suresh, Kadalpayanangal, Technology, Exoskeleton
 

Wednesday, August 28, 2013

அறுசுவை - பெங்களுரு "சட்னி சாங்"

முந்தைய ஒரு பதிவில் திணற திணற தின்போம் என்று ஒன்று வந்தது யாபகம் இருக்கிறதா...... அவருக்கு அண்ணன் அல்லது தாத்தா என்று இந்த "சட்னி சாங்" பற்றி சொல்லலாம் ! பேரை கேட்க்கும்போதே என்ன இது இந்தியன் பெயராக சட்னி இருக்கிறது, சாங் எனும்போது அது சீன பெயராக இருக்கிறதே என்று தோன்றியது, ஆனால் சென்றவுடன்தான் தெரிந்தது அது எல்லா உணவும் கலந்த ஒரு புப்பெட் என்று. ரேடியோ, பேப்பர் என்று எங்கு பார்த்தாலும் இதை பற்றிய விளம்பரம் வரும், பல முறை படித்து படித்து எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று தோன்றியது, அதனால் ஒரு சுபயோக சுபதினத்தில் கிளம்பினோம் ! இது பெங்களுரு MG  ரோட்டில்.... ட்ரினிட்டி சர்கிள் இருந்து செல்லும்போது செயின்ட் மார்க்ஸ் ரோடுக்கு முன் ஒரு லெப்ட் கட் வருவதில் சிறிது தூரம் சென்றால் இருக்கிறது.



 
 


 
உள்ளே நுழைந்து உட்கார்ந்தவுடன் கண்ணில் படுவது உங்கள் முன்னே இருக்கும் கலர் கலர் சட்னி.....உப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு என்று எல்லா வகையிலும் ஒரு சட்னி ! பின்னர் என்ன செய்வது என்று திரும்பி பார்த்தால் உங்களுக்கு தலை சுத்துவது நிச்சயம் ! முதலில் சாட் கவுன்ட்டர் சென்று என்ன இருக்கிறது என்று பார்த்தால் பானி பூரி, சமோசா சாட், மசாலா பூரி என்று அடுக்கி கொண்டே சென்றார். நான் என்ன சொல்வது என்று யோசித்து கொண்டிருக்கும்போதே இங்க பாருங்க மோமோ கூட இருக்குது என்றபோது தலையை சுற்றியது. முடிவில் சமோசா சாட் வாங்கி வந்து ஒரு வாய் சாப்பிட்டு பார்த்தபோது அருமையாக இருந்தது. எல்லா சாட் வகைகளிலும் பொறுமையாக, நன்றாக, கவனம் எடுத்து சுவை சேர்கின்றனர் !
 
 
அதை முடித்துவிட்டு, அடுத்து ஸ்டார்ட்டர் வகை என்னவென்று பார்க்கலாம் என்றபோது அதுவே சுமார் பன்னிரெண்டு வகை இருந்தது. பொதுவாக இது போன்ற பப்பெட் முறை செல்லும்போது ஸ்டார்ட்டர் என்று நான்கோ இல்லை ஐந்தோ வைத்திருப்பார்கள். அதில் ஒன்று இரண்டுதான் நமக்கு பிடிக்கும், ஆனால் இங்கேயோ இத்தனை வகைகளில் சுமார் நான்காவது நமக்கு பிடிக்கும் போல இருந்தது ! அதுவும் வெள்ளரி சாலட் நாக்கில் நீர் ஊற வைத்து மீண்டும் ஒரு முறை என்று பல முறை என்னை ஈர்த்தது !

 
 
 
இதை சாப்பிட்டு முடிக்கும்போதே வயிறு புல் என்று இண்டிகேட்டர் காட்டியது. அதனால் சிறிது ரெஸ்ட் விட்டு, மெயின் கோர்ஸ் என்ன என்று பார்க்க கிளம்பியவுடன் அங்கேயே மயங்கி விழ பார்த்தேன் எனலாம் ! இடது பக்கம் வெஜிடேரியன் உணவுகள் என்று சுமார் பதினைந்து வகைகள், நான் வெஜ் என்று சும்மார் பத்து வகைகள் என்று இரண்டு பக்கமும் பார்த்தவுடன் வயிறு புல், ஆனாலும் படிக்கும் உங்களுக்கு சில தகவல்கள் சேர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மட்டும் எல்லாவற்றிலும் சிறிது டேஸ்ட் செய்தேன். தந்தூரி சிக்கன், சிக்கன் டிக்கா, பிஷ் மலபார் கறி, மட்டன் ரோஸ்ட் என்று நான் வெஜ் வகைகளில் சிலவும், மலாய் கோப்தா, வெஜ் ரைஸ் என்றும் முதல் ரவுண்டு ஆரம்பம் ஆகியது...... என்ன சூப் மறந்திட்டேனா, அங்க என்னப்பா சத்தம்  ?!

 

 
 
இப்படி எழுதி கொண்டிருந்தால் இந்த பதிவே பாகம் - 2 என்று வெளியிடவேண்டி வரும், ஆகையால் அடுத்த ஸ்பெஷல் என்னவென்று பார்ப்போம். அங்கு சாங் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தேடியதில் சில உணவு சீன உணவாக இருந்தாலும், அங்கு வைத்து இருந்த சீன டீ எல்லோரையும் கவர்ந்தது. சீனர்கள் வெந்நீரில் டீ தூள் போட்டு குடிப்பார்கள், அதையே இங்கு அருமையாக வைத்திருந்தனர். ஒரு காட்டு காட்டிவிட்டு, டெசெர்ட் வகைகளை பார்க்க ஜிலேபி, குலப்ஜமூன், ஐஸ் கிரீம், சாக்லேட், கேக் என்று அது ஒரு பத்து வகை இருந்தது. எல்லாவற்றிலும் சில எடுத்து டேஸ்ட் செய்துவிட்டு மலை பாம்பு போல எல்லோரும் உட்கார்ந்திருந்தோம் !
 

 
 
மொத்தம் 54 வகை உணவுகள் இருந்தன, அன்லிமிடெட் உணவு என்பதற்கு அர்த்தம் தெரிய வேண்டும் என்றால் இங்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டும். ஆனால் செல்வதற்கு முன் ஒரு இரண்டு நாட்கள் பச்சை தண்ணி பல்லில் படாமல் உபவாசம் இருந்தால் நலம் ! 



 
பஞ்ச் லைன் :

சுவை - ஏகப்பட்ட வகைகள், எல்லாமே நல்ல சுவை......எல்லா சுவையிலும் உணவு இங்கே உண்டு !

அமைப்பு - நல்ல பெரிய உணவகம், வேலேட் பார்கிங் வசதி உண்டு !
 
பணம் - ஒரு ஆளுக்கு சுமார் 600 ரூபாய் வரை வருகிறது !

சர்வீஸ் - நல்ல சர்விஸ், பப்பெட் முறை என்பதால் நீங்களே எடுத்து கொள்ளலாம். நான், ரோட்டி எல்லாம் கேட்டால் உங்களது டேபிளுக்கு வருகிறது.

அட்ரஸ் :

HM Eleganza, 31, Museum Road, MG Road Area, Bangalore


 




மெனு கார்டு :

மெனு தினமும் மாறுகிறது, ஆனால் கண்டிப்பாக உங்களது நாவு ஊரும் ஒரு மெனு என்று சொல்லலாம். சுமார் 54 வகை உணவுகள்......
 

Labels : Arusuvai, Amazing buffet, south indian, suresh, kadalpayanangal, buffet

Tuesday, August 27, 2013

ஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 3)

சென்ற இரு பகுதிகளில் சிவகாசி வெடி தொழிற்சாலை, வெடி தயாரிப்பு, திரி தயாரிப்பது, வெடி மருந்து என்று பார்த்தீர்கள் இல்லையா ?! இந்த வாரம் வாருங்கள் புது வெடி தயாரிப்பு, பட்டாசு வியாபாரம், தொழில் போட்டிகள் என்று நிறைய பார்க்கலாம். முந்தைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்..... பகுதி - 1, பகுதி - 2 . வானம் பார்த்த கரிசல்காட்டு பூமியான விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பிரதானம். வேறு தொழில்கள் இன்றி தவிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரமே இந்த பட்டாசு தொழில்தான். சிவகாசியை சேர்ந்த காகா சண்முகநாடார், அய்யநாடார் ஆகிய இருவர்தான் கடந்த 1923 ஆம் ஆண்டு சிவகாசியில் முதன் முதலில் தீப்பெட்டி தொழிற்சாலையை ஆரம்பித்தவர்கள். அதுவரை இந்தியாவில் பட்டாசு என்றாலே என்னவென்று தெரியாத நிலை. சீனா மட்டும்தான் அப்போது பட்டாசு தொழிலில் கொடி கட்டி பறந்தது. வறண்ட பூமியான சிவகாசியில் இருந்தால் பிழைக்க முடியாது என்று நினைத்த பள்ளி நண்பர்கள் சண்முகநாடார், அய்யநாடார் ஆகிய இருவரும் பிழைப்புக்காக கொல்கத்தா சென்றனர். அங்கு தீப்பெட்டி தொழிலை கற்றுக்கொண்டு சிவகாசி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை ஆரம்பித்தனர். பிறகு அவர்களது பார்வை பட்டாசு தயாரிப்பு மீது திரும்பியது.




சீனாவில் பட்டாசு தயாரிப்பை ‘சும்மா’ பார்வையிட சென்ற அவர்கள், குளிர் பிரதேசமான சீனாவில் பட்டாசுகளை காய வைப்பதற்கு நாள் கணக்கில் நேரம் விரயமாவதை கண்டனர். அவர்களுக்கு அப்போதுதான் அந்த ஐடியா பிறந்தது. வறண்ட பூமியான சிவகாசி பகுதியில் பட்டாசை தயாரித்தால், கொளுத்தும் வெயிலில் ரொம்ப சீக்கிரம் பட்டாசு தயாரிக்கலாமே என்ற எண்ணம் வந்தது. உடனே சீனாவில் தங்கி பட்டாசு தொழிலை கற்ற அவர்கள், சிவகாசியில் சின்னதாக பட்டாசு தொழிலை தொடங்கினர். முதன் முதலாக அவர்கள்
தயாரித்தது சின்ன அளவிலான ‘சீனி’ வெடியைத்தான். பிறகு என்ன சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிப்பு தொழில் சக்கை போடு போட ஆரம்பித்தது. அடுத்தடுத்து இவர்களது வாரிசுகளும் இதே பட்டாசு தொழிலில் இறங்க, இப்போது சிவகாசியில் பட்டாசு தொழில் ஆலமரம் போல் பல கிளைகள் பரப்பி விருட்சமாகி நிற்கின்றது. இப்போது சின்னதும், பெரியதுமாக 750க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியில் இருந்து இந்தியாவுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பட்டாசுகள் ஏற்றுமதியாகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் பட்டாசு தயாரிப்பில் சிவகாசிக்குத்தான் 2வது இடம். ஒவ்வொரு ஆண்டும் 1,200 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
 
 

 
இப்படி வந்த வெடிகளுக்கும், தீபெட்டிக்கும் பேப்பர் தேவைப்பட்டது..... அது லேபல் ஆக பிரிண்ட் செய்யப்பட்டது, இதனால் சிவகாசி பகுதிகளில் பிரிண்டிங் கொடி கட்டி பறந்தது, இன்றும் பறக்கிறது. (சிவகாசி பிரிண்டிங் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம் !!). ஒரு பட்டாசு தொழிற்சாலையில் நிரந்தர வேலையில் இருப்பவர்கள் இருந்தாலும், சீசன் டிமாண்ட் பொருத்து காண்ட்ராக்ட் தொழிலாளிகளும் இருக்கிறார்கள். பொதுவாக வெடி செய்யும்போது அந்த ரூமில் நான்கு பேருக்கு அதிகமாக இருக்க கூடாது, செல் போன் வைக்க கூடாது என்றெல்லாம் விதிகள் இருப்பினும், அவர்களின் அறியாமையால் அதை செய்யும்போது வெடி விபத்து நிகழ்கிறது. சிவகாசியில் பெரிய வெடி தொழிற்சாலைகள் பல விபத்து தடுத்தல் சாதனங்கள், ஸ்ட்ரிக்ட் சட்டங்கள் என்று இருந்தாலும், அந்த கம்பெனியில் வேலை பார்த்து வெளியில் வரும் சிலர் சொந்தமாக தொழில் செய்ய ஆசைப்பட்டு சிறிய முறையில் இதை செய்ய ஆரம்பிக்கும்போது இப்படி நிறைய வெடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
 
 
 
 

 
பட்டாசு செய்வதற்கும், பேக் செய்வதற்கும் என்று பண்டில் பண்டிலாக வந்து இறங்கும் பேப்பரில் கலர் கலராய் சிரிக்கும் மத்தாப்பு வர்ணத்தில் வேலை செய்யும் இந்த ஆட்கள் எல்லோருக்கும் சம்பாதிக்க இந்த பகுதியில் இதை விட்டால் வேறு தொழில் தெரியாது. பட்டாசு தொழிற்சாலைகள் ஊருக்கு மிகவும் வெளியே (நான் சென்றபோது ஊரில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது !!) இருப்பதனால், காலையிலேயே சாப்பாடு கட்டி கொண்டு வந்து அந்த பொட்டல் வெளியில் மருந்தின் வாடையில் அவர்கள் வயிற்ருக்கு வேலை செய்வதை பார்த்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்படி இவர்கள் செய்யும் பட்டாசுகள் இங்கே 100 ரூபாய்க்கு வாங்கி சுமார் 300 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். பொதுவாக இந்த பட்டாசுகளுக்கு எப்போதுமே மார்க்கெட் இருக்கிறது, தீபாவளி சமயங்களில் அதிகம் !



 
புது பட்டாசு.....பொதுவாக பட்டாசு என்றால் சரம், பூந்தொட்டி, சங்கு சக்கரம், லட்சுமி வெடி என்று சில வகைகள் இருக்கும், ஆனால் இன்று நிறைய புதிய பட்டாசு வகைகள் வருகின்றன கவனிக்கீர்களா ?! இப்படி புதிய பட்டாசுகளை அறிமுகபடுதுவதில் இங்கு போட்டி அதிகம். இங்கு படிக்காத விஞ்ஞானிகள் நிறைய இருக்கின்றனர் என்பதை நான் அங்கு இருந்தபோது நேரிலேயே பார்த்தேன் ! ஒரு புதிய பட்டாசு ஐடியா வந்ததுமே, முதலாளியிடம் சென்று சொல்லி, அதை டெஸ்ட் செய்து பின்னர் அதை விற்ப்பனைக்கு கொண்டு வருகின்றனர். உதாரணமாக நான் அங்கு இருந்தபோது, ஒரு வெடி மேலே போகணும், முதலில் சிகப்பு கலர் மழை, பின்னர் இன்னும் கொஞ்ச தூரம் சென்று பச்சை கலரில் வெடிக்கனும் என்று சொன்னேன். உடனே ஒரு குழல் எடுத்து முதலில் ஒரு மருந்து, அதன் மேலே இன்னொரு சிறிய குழாய் போட்டனர். முதலில் இதை பற்ற வைக்கும்போது கீழே போட்ட மருந்து வெடித்து இந்த சிறிய குழாயினை மேலே போக வைக்கிறது. பின்னர் அந்த சிறிய குழாயில் இரண்டு வகை மருந்தை மிக்ஸ் செய்து ஒரு பக்கம் அடைத்து விட்டு, பின்னர் மண் கொண்டு நடுவில் மூடுகின்றனர். பின்னர் அடுத்த பகுதியில் இன்னொரு விதமான மருந்து கொண்டு அடைத்தனர். இந்த சிறிய குழாய் தூக்கி வீசப்படும்போது, அதில் ஒரு திரி பற்றுகிறது, இதனால் முதலில் ஒரு பகுதி வெடித்து சிவப்பு மழை வரும், அது முடியும்போது மீண்டும் அது வெடித்து அந்த இன்னொரு பகுதியான குழாயை தூக்கி மேலே அடிக்க, அது பச்சை மழையை பொழிகிறது. சுமார் இரண்டு மணி நேரத்தில் புது வெடி ரெடி !! ஆனால் இது விற்பனைக்கு வரும்போது வெடிக்கு பெயர், இன்னும் நிறைய டெஸ்டிங், இன்னும் மெருகெத்துவது, பாக்கிங் என்று நிறைய இருக்கிறது ! என்ன..... நான் அந்த வெடியை வெடித்தேனா என்று கேட்கிறீர்களா ? நான் அங்கு இருந்து வரும்போது எனக்கு பரிசே அதைதான் கொடுத்தார்கள், வீட்டிற்க்கு வந்து வெடித்தேன் !

 
இவ்வளவு சிறப்பு கொண்ட சிவகாசி வெடிக்கு எதிரி என்பது மழையும், விபத்தும்தான் ! மழை நேரத்தில் வெடி மருந்தை காய வைக்க முடியாது, விபத்து ஏற்படும்போது அந்த பகுதியில் இருக்கும் எல்லா வெடி தொழிற்சாலைக்கும் செக்கிங் நடக்கும், நிறைய புதிய விதிமுறைகள் வரும் என்று சிரமங்கள் வரும். எவ்வளவு இருந்தாலும் இவர்கள் இந்த வெடியின் மூலம் பலரின் முகத்தில் புன்னகையை வரவைக்கின்றனர் என்பது நிச்சயமான உண்மை. இந்த வருட தீபாவளிக்கு புதுசா ஒரு வெடி போடலாம் வாங்க....!!
 
 
 
 

 
Labels : Oor special, sivakasi, crackers, fire works, suresh, kadalpayanangal, fire

Monday, August 26, 2013

சாகச பயணம் - சொகுசு கப்பல் "ஸ்டார் க்ரூஸ்"

சென்ற முறை சொகுசு பஸ் பற்றி எழுதியதற்கு நிறைய பேர் கமெண்ட் செய்து இருந்தனர், இந்த முறை சொகுசு கப்பலை பார்க்கலாம் வாங்க ! நிறைய முறை கப்பலில் சென்று இருக்கிறேன், ஆனால் சொகுசு கப்பல் என்பது எல்லாம் அமெரிக்காவில் மட்டுமே இருக்கிறது என்று நினைத்திருந்தபோது சிங்கப்பூரில் இப்படி ஒரு கப்பல் இருக்கிறது என்பது தெரிந்தது. சிறிய படகுகளில் சென்று இருந்தாலும் ஒரு கப்பலுக்குள் உலகம் இருப்பது போன்ற தோற்றத்தை இந்த சொகுசு கப்பல்கள் தருகின்றன. இதில் நான்கு நாட்கள் பயணம் செய்ய முடிவெடுத்து ரிசர்வ் செய்துவிட்டு ஆவலுடன்
காத்திருந்தேன், அந்த காத்திருப்பு வீண் போகவில்லை என்றே சொல்ல வேண்டும் !






இந்த பயணத்தில் எனக்கு மிகவும் பிடித்தது என்பது நான் பர்ஸ் மற்றும் இதர பொருட்கள் எதையும் கப்பலுக்குள் நுழைந்ததற்கு பிறகு கொண்டு செல்ல வேண்டாம் என்பது. எப்போதும், எந்த பயணத்திலும் பர்ஸ், கிரெடிட் கார்டு, பணம் என்று என்னிடம் இருக்கும், ஆனால் இங்கு உள்ளே நுழையும்போது ஒரு கார்டு கொடுக்கின்றனர், அதை அந்த கப்பலுக்குள் இருக்கும் எந்த கடையிலும், உணவகத்திலும் பயன்படுத்தலாம், நாம் இறங்கும் முன் செட்டில் செய்தால் போதும், இதனால் எந்த பயமும் இல்லாமல் சுற்றலாம் ! முதலில் உள்ளே நுழைந்தவுடன் உங்களை பிரமிக்க வைப்பது எட்டு மாடி சென்று வரும் லிப்ட் மற்றும் உள் அலங்காரங்கள் ! நாம் கப்பலுக்குள் இருக்கிறோமா இல்லை ஏதாவது ஹோட்டெலா என்று நிச்சயம் வியப்பு வரும் !

 
 
உள்ளே தியேட்டர், நீச்சல் குளம், ஜிம், சிறிய கோல்ப் மைதானம், பல்வேறு உணவகங்கள், பெரிய அரங்கம், மசாஜ், காற்று வாங்க இடம் என்று பலவும் உண்டு. பொழுதுபோக்க உணவு தயார் செய்யும் பயிற்சி, இசை கச்சேரி, இரவானால் பெரிய ஷோ, குழந்தைகளை மகிழ்விக்க பொம்மை மனிதர்கள், டிஸ்கோ டான்ஸ் இடம், நூலகங்கள், கம்ப்யூட்டர் கேம்ஸ், கேசினோ என்று நிறைய உண்டு. நாங்கள் உள்ளே நுழைந்ததில் இருந்து சிறிது நேரம் கூட அட இந்த கப்பலில் எப்படி நான்கு நாட்களை கடத்த போகிறோம் என்று கவலை பட விடவில்லை. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது இருந்தது !








 
தங்கும் அறைகள் கொடுக்கும் காசுக்கு ஏற்ப பெரிதாக இருக்கின்றன. கடலை பார்த்த ரூம் என்பது கொஞ்சம் காஸ்ட்லி ! தங்குவது, சாப்பிடுவது மற்றும் எல்லா பொழுதுபோக்கும் இலவசம் என்பதுதான் நீங்கள் கொடுக்கும் காசுக்கு ஆறுதல். இந்த நான்கு நாட்கள் பயணத்தில் மலேசியாவும், தாய்லாந்து ஆகிய இரண்டு இடங்களில் காலையில் இருந்து மாலை வரை இந்த கப்பல் நிற்கும், அப்போது நீங்கள் இறங்கி சுற்றி பார்த்துவிட்டு வரலாம், மாலைக்குள் நீங்கள் திரும்ப வில்லை என்றால் அப்புறம் என்ன..... பொடி நடைதான் !!
 






 
எனக்கு இந்த பயணத்தில் மிகவும் பிடித்தது என்பது போன் மற்றும் எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்த சுதந்திரமும்தான். எப்போதும் பேஸ்புக், மெயில், ஆபீஸ், அழைப்புகள் என்று இருந்த என்னை நான் எனது குடும்பம் மட்டும் என்றும், சிறு குழந்தைபோல ஓடி விளையாடி மகிழவும் வைத்தது இந்த பயணம். காலையில் எழுந்து மேல் தளத்திற்கு சென்று அதிகாலை காற்றை அனுபவித்துக்கொண்டே காபி குடிக்கும் சுகம் இருக்கிறதே.... சொர்க்கம்தான் போங்கள் ! சில நேரங்களில் துணையுடன் கடலில் தோன்றுவதும், மறைவதுமான சூரிய காட்சிகள் உங்களை நிச்சயம் மெய் மறக்க செய்யும் என்பது நிச்சயம்.



பொதுவாக பயணம் என்பதில் நாம் எல்லோரும் அந்த ஊரில் இருக்கும் புகழ் பெற்ற இடங்களுக்கு சென்று படம் எடுத்து கொள்வது, அந்த ஊரில் இருக்கும் நல்ல ஹோட்டல் சென்று சாபிடுவது என்று இருக்கும். ஆனால் இந்த பயணத்தில் நீங்கள் அந்த கப்பலை விட்டு எங்கும் செல்ல முடியாது (சில நேரங்கள் தவிர...!), ஆகையால் நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், இயற்கையும் என்று இருக்கும் அந்த பொழுதுகள் உண்மையாகவே  அருமையானவை. நான் சென்றிருந்தபோது "கேலக்சி ஆப் தி ஸ்டார்ஸ்" என்னும் ஒரு பகுதியில் இரவினை அனுபவிக்கும் விதமாக மிதமான ஒலியுடனும், ஒளியுடனும் இருந்த ஒரு உணவகம் அருமையிலும் அருமை. ஏதோ சந்திரனில் சென்று நீங்கள் இந்த அண்டத்தை பார்த்து உணவருந்தும் உணர்வு தரும். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு இரவும் ஒரு பெரிய அரங்கத்தில் மனதை மயக்கும் சாகச ஷோ நடைபெறும். நான் சென்று இருந்த நேரம் சீன அக்ரோபடிக் ஷோ மிகவும் நன்றாக இருந்தது !


 


ஒரு பயணம் அதுவும் உங்களது மனதை தொட வேண்டும் என்றால் அது இந்த சொகுசு கப்பல் பயணம்தான் என்பேன். நான்கு நாட்கள் சென்று வர எனக்கு சுமார் 75000 ரூபாய் ஆனது. பணம் அதிகம்தான், ஆனால் அனுபவம் அதை விட பெரிதாக இருந்தது, மகிழ்ச்சியோ மிக மிக அதிகம். உங்களை நீங்கள் சார்ஜ் செய்து கொள்ள வாழ்வில் ஒரு முறை கண்டிப்பாக செல்ல வேண்டிய பயணம் இது !
 


Labels : Star cruise, luxury, adventure travel, suresh, kadalpayanangal, best cruise, singapore

Wednesday, August 21, 2013

மறக்க முடியா பயணம் - யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி - 1)

தீம் பார்க்..... சிறு வயதில் எல்லாம் பொருட்காட்சி பார்த்த நமக்கு, முதல் முதலில் இந்தியாவில் சிறியதாக ஆரம்பித்த பார்க்குகளுக்கு மக்கள் பணம் அதிகம் என்று போக மறுத்தார்கள், இன்று எவ்வளவு பணம் கொடுக்கவும் ரெடி என்று சொல்கிறார்கள் ! இந்தியாவில் இருக்கும் தீம் பார்க்குகளில் வெகு சில மட்டும் நன்கு இருக்கிறது. இப்படி எத்தனையோ தீம் பார்க் வந்தாலும் டிஸ்னி, யுனிவெர்சல் தீம் பார்க்குகள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலம்..... அப்படி என்னதான் இருக்கிறது இதன் உள்ளே என்று நானும் நினைத்திருக்கிறேன், சிங்கப்பூரில் செண்டோசவில் இருக்கும் யுனிவெர்சல் ஸ்டுடியோ சென்று வரும் வரை....!!
 
 
முதன் முதலில் டிஸ்னி ஆரம்பித்து வைத்தது, இன்று ஒவ்வொரு ஹாலிவுட் சினிமா கம்பெனியும் தீம் பார்க் ஆரம்பித்து, அவர்களது படத்தில் ஹிட் அடித்த கேரக்டர்களை கொண்டு தீம் பார்க் ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தவும் செய்கிறார்கள் ! சிங்கப்பூரில் இது போன்ற ஒன்று திறக்க போகிறார்கள் என்று பேச்சு இருந்ததில் இருந்து இங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஒரு ஆளுக்கு சுமார் 74 வெள்ளி (இன்றைய மதிப்பில் சுமார் 3600 ரூபாய் ஆகும்) வரை கொடுத்து ஒரு சிறிய டிக்கெட் கொடுக்கிறார்கள் :-) உள்ளே நுழையும்போதே ஏதோ அமெரிக்கா வந்துவிட்டோமா என்று சந்தேகப்படும் அளவிற்கு ஒரு ஹாலிவுட் தெருவை கண்முன்னே நிறுத்துகிறார்கள்.
 

 
 
ஹாலிவுட் ஸ்ட்ரீட் :
 
ஹாலிவுட் என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும் ? படங்கள், மர்லின் மன்றோ, டைனோசர், ஸ்கார்பியன் கிங், கார்ட்டூன் படங்கள் என்று பலவும் நினைவுக்கு வரும். இந்த தெருவில் அமெரிக்கா தெருவில் உள்ளது போல பாப் கார்ன் வண்டிகள், பஞ்சு மிட்டாய், பொம்மைகள், கட்டிடங்கள் என்று எல்லாமே பெரிதாக இருக்கிறது. பளிங்கு போன்ற தரைகள், ஒவ்வொரு கட்டிடத்தின் உள்ளும் கடைகள், பொம்மைகள், உணவகங்ககள் என்று உங்களை அமெரிக்கா அழைத்து செல்கிறது. சில நேரங்களில் திடீரென்று சிலர் ஒரு சிறிய மேடையில் தோன்றி பாப் இசை பாடி ஆடுகின்றனர். அவர்களின் ஒவ்வொரு நடனமும், பாட்டும் எத்தனை நேர்த்தியாய் இருந்தது தெரியுமா ?! கொடுத்த காசு இதற்கே சரியாக போய் விடும் !
 
 

 
மடகாஸ்கர் ரைட் :
 
2005ம் ஆண்டு வெளிவந்த இந்த கார்ட்டூன் படத்தில் ஹீரோ என்பது ஒரு வரிக்குதிரை, சிங்கம், காண்டா மிருகம் மற்றும் ஒட்டக சிவிங்கி ! ஜூவில் இருக்கும் இந்த மிருகங்கள் வெளி உலகத்தை பார்க்க ஆசைபடுகின்றன, இவை தப்பி மடகாஸ்கர் தீவில் ஒதுங்குகின்றன, அங்கு நிகழும் சாகசங்கள்தான் கதை ! ஒரு சிறிய ட்ரைன் போன்ற ஒன்றில் உங்களை உட்கார வைத்து ஒரு குகை போன்ற அமைப்பின் உள்ளே உங்களை கொண்டு செல்கிறார்கள் (டிரைவர் எல்லாம் கிடையாது, எல்லாமே ஆட்டோமாடிக் !), உள்ளே அந்த கதை நிகழ்வதை நீங்கள் பார்க்கலாம்..... பெட்டி உங்கள் மேலே விழுவது போல நகர்வது, மிருகங்கள் ஆடுவது என்று எல்லாமே கலர்புல் !
 



 
 
ஷ்ரெக் அட்வென்ச்சர் :
 
ஷ்ரெக் என்று ஒரு படம் வந்தது யாபகம் இருக்கிறதா ? அந்த படத்தில் வரும் கோட்டையும், ராஜாவும் தான் கதை. இதன் உள்ளே ஒரு தியேட்டர் இருக்கிறது.... இதுவரை 3டி படம் மட்டும் பார்த்தவர்கள், இன்று அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்கிறது இங்கு. 4டி தொழில்நுட்பம் என்பது அந்த படத்தில் நடக்கும் காட்சிகளுக்கு ஏற்ப உங்கள் சீட்டும் அசையும், அங்கு கடலில் தண்ணீர் தெரித்தால் இங்கு உங்கள் மூஞ்சியில் வந்து விழும். உங்களது சீட்டில் எல்லாம் பொருந்தி இருக்கும் ! உதாரணமாக ஷ்ரெக் ராஜா ஒரு ரதத்தில் ஏறி தப்பிக்கிறார், அப்போது ரதம் சாலையில் செல்வதற்கு ஏற்ப உங்களது சீட்டும் மேடு பள்ளத்தில் செல்வது போல குலுங்கும் ! கண்டிப்பாக ஒரு முறை செல்ல வேண்டிய ஒன்று !
 



ஜுராசிக் பார்க் :

இந்த படம் வந்த போது எவ்வளவு உற்சாகத்துடன் பார்த்து இருப்போம், அதை நாம் மீண்டும் அனுபவிக்க இந்த பார்க் செய்து இருக்கிறார்கள். இங்கு நிறைய ரைட் இருந்தாலும் முக்கியமானது தண்ணீரில் படகு போன்ற ஒன்றில் செல்வது. ஒரு வட்ட வடிவ படகில் உங்களை உட்கார வைத்து தண்ணீர் அது செல்லும் வழியெல்லாம் உயிரோடு இருக்கும் டினோசர் போல செட் செய்து அது அசையும் வண்ணம் வைத்து இருக்கின்றனர். காடு போன்ற செட், தண்ணீர் பயணம், ஒரு கட்டிடத்தின் உள்ளே செல்லும்போது அங்கு டினோசர் உங்களை கடிக்க வருவது போல எபக்ட் எல்லாம் வாவ் ரகம் !



 

 
இன்னும் நிறைய நிறைய ரைட் இருக்கிறது, அடுத்த வாரம் வரை பொறுங்கள் ! அதுவரை இந்த ரைட் சென்றதை நினைத்திருங்கள்......
 
Labels : Universal studio, Singapore, Suresh, Kadalpayanangal, ride, adventure, theme park