Wednesday, August 7, 2013

ஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 2)

எப்படி இருந்தது "ஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 1) ?!" நிறைய பேர் அதை பாராட்டி எழுதி இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வாங்க, இந்த வாரம் நாம் சங்கு சக்கரம், புஸ்வானம் எப்படி தயாரிக்கிறாங்க, வெடி திரி எப்படி செய்யறாங்க, வெடி மருந்து கலப்பது என்றெல்லாம் பார்ப்போம். சிவகாசியில் நிறைய இது போன்ற வெடி தொழிற்சாலைகள் இருக்கின்றன, இதை மூன்று வகையாக பிரிக்கின்றனர்
  1. கலெக்டர் லைசென்ஸ் - இரண்டு அறைகள் வரை இருக்கும் 
  2. மெட்ராஸ் லைசென்ஸ் - பத்து அறைகள் வரை இருக்கும் 
  3. நாக்பூர் லைசென்ஸ் - நாற்பது அறைகள் வரை இருக்கலாம்.
இதற்க்கு மேல் சென்றால் அது இன்னொரு தொழிற்சாலையாக இருக்கும் ! இந்த நாக்பூர் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே நீங்கள் பெரிய பெரிய வெடிகளை தயாரிக்க முடியும். இங்கு எல்லா வெடிகலுமே கைகளால் தயாரிக்கபடுபவைதான், நிறைய பேர் இதில் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்துவது கண்டு எழுதி இருந்தீர்கள், ஆனால் இன்று சட்டம் கடுமையாக இருப்பதால் அவர்களை எல்லாம் எடுப்பதில்லை என்பது நான் கண்கூடாக கண்ட ஒன்று ! இன்று நிறைய பாதுகாப்பு முறைகள் செய்து வைத்திருப்பதை காணலாம், ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அதெல்லாம் இல்லை என்று சொல்ல கேட்டபோது சந்தோசமாக இருந்தது. ஒரு பட்டாசு ஆலையை தொடங்குவதற்கு கட்டடங்கள் தரச்சான்று, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று ஆகியவற்றை பெற்று, மாவட்ட வருவாய் அலுவலருக்கு (டி.ஆர்.ஓ) விண்ணப்பிக்க வேண்டும். டி.ஆர்.ஓ., அந்த இடத்தை ஆய்வு செய்து பட்டாசு தயாரிப்பதற்கு மூலப்பொருளான சல்ஃபர் எனப்படும் வெடி உப்பை பயன்படுத்த லைசன்ஸ் வழங்குவார். 15 கிலோ சல்ஃபர் வரை டி.ஆர்.ஓ., லைசென்ஸ் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த லைசென்ஸை 2 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். டி.ஆர்.ஓ., லைசென்ஸை அடிப்படையாக கொண்டு 200 கிலோ சல்ஃபர் பயன்படுத்திக்கொள்ள சென்னையில் உள்ள இணை முதன்மை வெடி பொருள் அலுவலரும், 200 கிலோவுக்கு மேல் நாக்பூர் முதன்மை வெடி பொருள் கட்டுப்பாட்டு அலுவலரும் லைசென்ஸ் கொடுக்கிறார்கள். ஆனால் எல்லா பட்டாசு ஆலைகளுக்கும் அடிப்படை லைசென்ஸ் டி.ஆர்.ஓ., லைசென்ஸ்தான். அதுபோல் பட்டாசு சில்லரை விற்பனைக்கும் டி.ஆர்.ஓ.,தான் லைசென்ஸ் வழங்க வேண்டும்.



நான் ஆர்வமாய் பார்த்தும், கேட்டும், அவர்களோடு சில சமயம் வேலை செய்து பார்த்தும் இருந்ததை நிறைய பேர் கண்டனர்..... உங்களுக்கு எதற்கு இந்த வேலை என்று திட்டியவர்களும் உண்டு, ஆனால் அது ஒரு அருமையான அனுபவம் என்பதை மறக்க முடியாது. நான் சங்கு சக்கரம் செய்யும் ஒரு அறைக்கு சென்றேன். அவர்களுக்கு குச்சி குச்சியாக நூறு மருந்து அடைக்கப்பட்ட ஒரு பண்டல் ஒரு பெட்டியில் வந்து விடுகிறது. அதற்க்கு மேலே கீழே இருக்கும் படத்தில் காணப்படுவது போல பேப்பர் ஒட்டுகின்றனர். கோந்து, பேப்பர்.... ஆனால் இவர்கள் அதை செய்யும்போது மெசின் தோற்றுவிடும் போங்கள் ! எனக்கு ஒரு வாய்ப்பு அளித்து இந்த வேலையை செய்தவர் ஒதுங்க, நான் இரண்டு செய்வதற்குள் கையெல்லாம் கோந்து ஒட்டி கொண்டு இருந்தது ! இதை ஒட்டி காய வைத்தவுடன், இரு அட்டையின் இடையில் சுற்றி பசை போட்டு விடுகின்றனர், இப்போது உங்கள் சங்கு சக்கரம் தயார் !




அடுத்து நான் சென்றது பூந்தொட்டி தயாரிக்கும் அறை ! சிறு வயதில் இது மரம் போன்று வெளிச்சத்தை அள்ளி தெளிப்பதை கண்டு ஆச்சர்யபட்டிருக்கிறேன். இன்று அதன் ஒவ்வொரு செய்முறையும் அறியும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பூந்தொட்டியில் மருந்து கலவை என்பது முக்கியம். இதில் இரண்டு விதமான மருந்து கலக்கின்றனர், ஒன்று உள்ளே பிரஷர் உருவாக்கி சிறிய துவாரத்தின் வழியே சிறு சிறு பட்டாணி உருண்டை போன்ற கலர்களை உருவாக்கும் கலவையை மேலே கொண்டு செல்வது, இரண்டு அந்த பட்டாணி உருண்டை போன்ற அந்த கலர்களை உருவாக்கும் கலவை. நான் சென்று இருந்தபோது அந்த கலவையை செய்து கொண்டிருந்தனர், தூரத்தில் இருந்து பார்க்க முடிந்தது. அந்த கலவையை சிறு கோன் போன்ற ஒன்றின் ஒரு முனையை அடைக்கின்றனர். இன்னொருவர் அந்த கோன் உள்ளே மருந்து கலவையை வைத்து இடித்து அதன் மேலே ஒரு அட்டையை வைத்து அடைக்கின்றார். பின்னர் அது முடிந்தவுடன், இன்னொருவர் அதன் மேலே பளபளக்கும் காகிதத்தை மேலே சுற்ற, உங்களது பூந்தொட்டி தயார் !







இப்படி எல்லாவற்றையும் பார்த்து விட்டு நடக்கும்போது ஒரு இடத்தில் கருப்பாக கயிறு தொங்க விட்டு இருந்தனர். என்ன என்று ஆர்வத்துடன் விசாரித்தபோது அது பட்டாசு திரி தயாரிப்பு என்று தெரித்தது. பொதுவாக திரிகள் சிவகாசியை சுற்றி இருக்கும் கிராமத்தில் வீடுகளில் செய்யப்படும். இன்று பலரும் நகரங்களை நோக்கி நகர்வதால், இன்று இந்த திரிகளை சில பட்டாசு தொழிற்சாலைகளே தயாரிக்கின்றன. முதலில் பெரிதாக வெட்டப்பட்ட நூல்களை நன்கு காய வைக்கின்றனர். அதை சிக்கல் இல்லாமல் பிரித்து வைக்கின்றனர். இந்த திரியினை வெடி மருந்துகளில் முக்கி எடுக்க வேண்டும், இந்த மருந்து சீக்கிரம் தீ பற்றும் விதமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். இரண்டு கம்புகளுக்கு இடையில் இதை முதலில் வைக்கின்றனர், பின்னர் அதன் மேலே மருந்தை போட்டு இந்த கயிற்றை சுற்றுகின்றனர். இதனால் மருந்து சரியாக பரவுகிறது. இதன் மேலே பேப்பர் ஒட்டி அதை கத்தரித்தால் திரி ரெடி !




இது போல் நிறைய வகை பட்டாசுகளை பார்த்தேன், சில நேரங்களில் இந்த பட்டாசுகளை செய்தும் பார்த்தேன். நான் பார்த்த பட்டாசுகளை எல்லாம் எழுதினால் அதுவே ஒரு ஐந்து பதிவு வரை வரும் ! எங்கோ ஒரு கருவேலம் காட்டினுள்ளே இது போன்ற ஒரு அறையில் இருந்து தயாராகும் பட்டாசுகள் நமது முகத்தில் புன்னகையை வரவைக்கின்றன. இதுவரை படங்களையே பார்த்த நீங்கள் இன்னும் இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.......அடுத்த வாரத்தில் பட்டாசு வியாபாரம், புது பட்டாசு செய்வது என்று நிறைய பார்க்கலாம் !


Labels : Oor special, Sivakasi, Vedi, fire crackers making, suresh, kadalpayanangal

9 comments:

  1. அறியாத தகவல்கள், படங்களைப் பார்த்தால் பணியாட்களை நினைத்து மனம் வேதனைதான் படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் இளகிய மனதை கண்டு சிலிர்க்கிறேன் மனோ ! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  2. எங்கோ ஒரு கருவேலம் காட்டினுள்ளே இது போன்ற ஒரு அறையில் இருந்து தயாராகும் பட்டாசுகள் நமது முகத்தில் புன்னகையை வரவைக்கின்றன.

    ஆர்வமாக நிறைய தகவல்கள் அறியச்செய்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே...... பட்டாசு சத்தமும், ஒளியும் தரும் அந்த புன்னகைகள் அவர்களை சந்தோசமடைய செய்யும் !

      Delete
  3. குழந்தை தொழிலாளர்கள் இல்லைன்னு சொல்லுறதே கொஞ்சம் ஆறுதல். என்னதான் லைசென்ஸ்ல கலெக்டர், மெட்ராஸ், நாக்பூர், அது இதுன்னு இருந்தாலும் உயிரை பணயமா வச்சுதானே பட்டாசு தயாரிக்குறாங்க. நான் பட்டாசை வெடிச்சே பல காலம் ஆச்சு. பிள்ளைங்க ஆசைக்காக வாங்கி குடுப்போம். பசங்களும் வளர்ந்துட்டாங்க. இனி விளக்கி சொல்லி அவங்களையும் வெடிக்காம இருக்க சொல்லனும்.

    ReplyDelete
    Replies
    1. பட்டாசு வெடிப்பது என்பது மகிழ்ச்சி அளித்தாலும், இது இன்று ஒரு பெரிய பிசினஸ் ஆக நடக்கிறது. இன்றைய சட்டங்கள் பாதுகாப்பு முறைகளை நன்கு இருக்க வைக்கிறது, இதனால் விபத்துக்கள் குறைந்தாலே சந்தோசம்தான் ! நன்றி !

      Delete
  4. Replies
    1. ஸ்டே ஹாப்பி என்று சொல்வீர்கள் என்றல்லவா எதிர்பார்த்தேன் ! நன்றி !

      Delete
    2. always happy :-) but sometime only information...!

      Delete