Tuesday, September 10, 2013

நகரத்து பறவையின் எச்சம்...!!

எனது நண்பர் ஒருவருடன் இன்றும் எஞ்சி இருக்கும் பெங்களுருவின் சில மரங்கள் அடர்ந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது சட்டென்று எனது நண்பர் தனது சட்டையினை உதற ஆரம்பித்தார், என்ன ஏதென்று பார்த்தபோது அவரின் சட்டையின் மேலே ஒரு பறவை எச்சம் இட்டு இருந்தது. அதை ஒரு பேப்பர் கொண்டு துடைத்து எறிந்து விட்டு அந்த பறவையினை சபிக்க ஆரம்பித்தார் நண்பர். அப்படியே நடந்து எங்களது வண்டியை எடுக்க பார்கிங் இடத்திற்கு வந்து வண்டியினை எடுத்தபோது எனது நண்பர் "இவ்வளவு வண்டி இருக்கே, இது மேலே எல்லாம் எச்சம் போட்டு இருக்கா பாரு.... அதுக்கு என்னோட சட்டைதான் கிடைச்சதா ?!"என்று ஆதங்கத்துடன் கேட்ட போது எனக்கு சிரிப்பு வந்தது, ஆனால் சிறிது யோசித்து அங்கு இருந்த வண்டிகளை எல்லாம் நோட்டம் விட்டபோது அங்கு வெகு சில வண்டிகளில் மட்டுமே எச்சங்கள் இருந்தன. சில வண்டிகள் வருட கணக்கில் நிறுத்தியதை போல அவ்வளவு தூசி, ஆனால் அதன் மேலும் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் பறவை எச்சங்கள் இருந்தனவே ஒழிய, அதிகம் இல்லை. பல வருடங்களுக்கு முன் எனது சைக்கிளை மரத்தினடியில் நிறுத்தி விட்டு சென்று, மாலையில் எடுக்க வந்தால் சீட், இன்னும் பிற பகுதிகளில் எல்லாம் பறவையின் எச்சங்கள் இருக்கும், இன்று மரத்தினடியில் நிறுத்தப்பட்ட எந்த ஒரு வண்டியிலும் இந்த பறவையின் எச்சம் இல்லையே, பறவைகள் பட்டினி கிடக்கின்றதா, இல்லை அவற்றுக்கு வயிற்று கோளாறு வருவதில்லையா, இல்லை அவைகள் மரத்தினில் அமர்வதில்லையா அல்லது இன்று அந்த பறவைகள் இல்லையா ?! அன்று இருந்த சிட்டு குருவி, புறா, காக்கா என்று இருந்த பறவைகள் எல்லாம் எங்கு போனது ? எதை தின்றாலும் தத்தி தத்தி முன்னால் வந்து ஏக்கமாக தலையை சாய்த்து பார்த்த அந்த காக்கைகள் எல்லாம் இன்று ஷாப்பிங் மால் முன்னால் உட்கார்ந்து தின்னும்போது வருவதில்லையே ? சாம்பல் நிறத்தில் நமது முன் வந்த அந்த சிட்டு குருவிகள் லேகியத்தில் மட்டுமே இன்று இருக்கிறதா என்ன ? நாம் பார்த்து ரசித்த பறவைகள் எல்லாம் இன்று எங்கு சென்றன என்று உங்களுக்கு தெரியுமா ?





நமக்கு தெரிந்த, பழகிய பறவை இனங்கள் என்று நினைத்து பார்த்தால்.......சிட்டு குருவி, மைனா, காக்கா, புறா, மரம் கொத்தி, கிளி, காடை, கௌதாரி, மயில், கழுகு, ஆந்தை, கருடன், குயில், லவ் பர்ட்ஸ், தவிட்டு குருவி என்று வெகு சில வகைகளே இருக்கின்றன. இந்த பறவைகள் எல்லாம் நாம் நமது வீட்டின் ஜன்னலின் வெளியே தினமும் பார்ப்பவையாக இருந்தன, கடைசியாக எந்த பறவை இனத்தை நீங்கள் பார்த்தீர்கள், அதுவும் எங்கு என்று யாபகம் இருக்கிறதா ?! எனக்கு தெரிந்து நான் தினமும் பார்த்த காக்கைகள் இன்று என்றோ ஒரு முறை பார்க்கும் உயிரினமாகிவிட்டது ! புலி, சிங்கங்களை எல்லாம் நாம் வாரத்திற்கு ஒரு முறையாவது நாம் டிவி விளம்பரங்களில் பார்த்து கொண்டிருக்கிறோம், ஆனால் காக்கைகளையும், மைனாக்களையும் ?! வனத்தில் வாழும் உயிரனங்களை நாம் சென்று பார்க்க முடியாது என்று ஜூ உருவாக்கினோம், இன்று இந்த பறவைகளை பார்க்கவும் ஒரு ஜூ உருவாக்க வேண்டுமா ?!







பறவையின் கூடுகள் என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று இல்லையா ? எல்லா பறவை கூடுகளும் ஒரு தேர்ந்த டிசைன் செய்து கட்டப்பட்டு இருக்கும். தூக்கனாங் குருவி கூடு பார்த்து இருக்கிறீர்களா..... அவ்வளவு ஆச்சர்யமாக கட்டப்பட்டு இருக்கும்.  எல்லா தூக்கனாங் குருவியும் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரி கட்டபடுகிறதே, அது எப்படி என்று யோசித்து இருக்கிறீர்களா, எங்கு இருந்து கற்று கொள்கிறது அதை. சில பறவையின் கூடுகளில் அவ்வளவு ஆச்சர்யமாக மெத்து மெத்தென்று தேங்காய் நாறு எல்லாம் போடபட்டு இருக்குமே..... அதை போன்ற ஒன்றை நாம் கடைசியாக பார்த்தது எப்போது ? இன்று நகரத்தில் இருக்கும் மரங்கள் சொற்பமே, அதில் பறவையின் கூடை தேடி பார்த்து இருக்கிறீர்களா, உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் ! இந்த பறவைகள் எல்லாம் இன்று எங்கு தங்களது கூடுகளை கட்டுகின்றனவோ ? இந்த பறவைகள் எல்லாம் நகரத்திற்கு வெளியே சென்று இன்று தங்களது கூடுகளை கட்டுகின்றன என்று வைத்துக்கொண்டால்..... பறவைகள், புழுக்கள், பூச்சிகள் எல்லாம் வாழ முடியாத இந்த நகரத்தில் மனிதன் மட்டும் வாழ முடியுமா என்ன ? பறவையின் கூடுகள் எல்லாம் இயற்கையான பொருட்களால் செய்து கொள்ளும் என்று இன்றும் நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை நீங்கள் இன்றே மாற்றிக்கொள்ளுங்கள்...... இன்று நகரத்து குப்பைகளில் பிளாஸ்டிக் என்பது அதிகம், அதனால் இன்றைய நகரத்து பறவைகளின் கூடுகளில் எல்லாம் பிளாஸ்டிக் அதிகம் !!





இதை எழுதும்போது சில கேள்விகள் மனதில் எழுகின்றன...... மரமே இல்லாத நகரத்தில் மரம் கொத்தி பறவைகள் எதை கொத்தும், எதையும் பகிர்ந்து உண்ணும் காக்கைகளே நகரத்தின் உணவு பஞ்சத்தில் தனியே உண்ணுமோ, புறாக்களின் கூடுகள் இன்று பதினெட்டாவது மாடியில் இருக்குமோ, காக்காவின் கூட்டில் முட்டையிடும் குயில்கள் இன்று எங்கு சென்று தேடும் காக்கையின் கூடுகளை, காடைகள் எல்லாம் இன்று அசைவ ஹோடேலில் ஸ்பெஷல் மெனு லிஸ்டில், உண்ண வேண்டிய கனிகள் எல்லாம் சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும்போது கிளிகள் எல்லாம் "அம்மா தாயே...."என்று பிச்சை கற்க்குமோ, கோழி குஞ்சுகளை எல்லாம் ஆயிரம் அடியில் பறக்கும் கழுகு கண்களுக்கு தெரியும் என்றைய மொழி கொண்ட கழுகுகள் எல்லாம் இன்றைய பிராய்லர் கோழிகள்.... கூண்டுகளின் உள்ளே இருப்பதை பற்றி என்ன நினைக்கும், இரவுகளையும் பகலாக்கும் வெளிச்சம் கொண்ட நகரத்தில் ஆந்தைக்கு பகல் எது இரவு எது என்பது தெரியுமா, லவ் செய்பவர்களை எல்லாம் துரத்தி கற்பழிக்கும் நகரத்தில் லவ் பேர்ட்ஸ் எல்லாம் தங்கள் பெயர் காரணம் கண்டு சிரிக்குமோ, எந்த ஊரிலும் கோவிலே உயரமாக இருக்க வேண்டும் என்ற பழமொழிகளை பொய்யாக்கும் நகரத்தின் பெரிய கட்டிடங்களுக்கு இடையில் கோயிலை தேடித்தான் சுற்றுகிறதோ கருடன் ? எல்லோருக்கும் இருக்க ஒரு அடி நிலம் வேண்டும், மனிதன் இறக்கும்போது புதைக்க ஆறடி இடம் வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் நாம் இந்த சிறிய பறவைகள் எல்லாம் வாழ ஒரு கால் அடி நிலம் அல்ல..... மரம் இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லையே ?!




ஒரு சில காட்சிகள் எல்லாம் நமக்கு சாதாரணம் ஆகி விட்டது, ஆனால் சிறிது சிந்தித்து பார்த்தால் மட்டுமே, அல்லது ஒரு பறவையாக இருந்தால் மட்டுமே அதன் கஷ்டம் புரியுமோ என்னவோ..... உதாரணமாக கரண்ட் கம்பியில் இளைப்பாறும் காக்கைகள், லைட் கம்பத்தில் கூடு கட்டும் பறவைகள், தார் ரோட்டின் சூடில் தத்தி தத்தி செல்லும் பறவைகள், சாக்கடை நீரில் வெப்பத்தை தணிக்க சிறகு உலர்த்தும் பறவைகள், சாலையின் குழிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை தாகத்திற்கு பருகும் பறவைகள், மழை பெய்யும்போது காரின் அடியில் தஞ்சமடையும் பறவைகள், தன் இணை என்று எண்ணி பைக் கண்ணாடி கொத்தும் குருவிகள், கூடு கட்ட பிளாஸ்டிக் அல்லது பேப்பரை குப்பையில் கொத்தும் பறவைகள், குப்பை தொட்டியை கிளரும் பறவைகள், வாகனங்களுக்கு இடையில் ஒடிந்த காலுடன் தத்தி திரியும் பறவைகள் என்றெல்லாம் இருக்கும் காட்சிகள் எல்லாம் சாதாரணமாக இருந்தாலும், நிஜம் என்னவென்றால் அதுவும் இந்த நகரத்தில் உணவு தேடி உழைக்கும் ஒரு ஏழை ஜாதிதான்........ இந்த நகரத்திற்கு பொருள் சம்பாதிக்க தேடி வந்தது என்பது நமது முடிவு, ஆனால் பறவைகள் ?


Labels : Ennangal, City birds, Suresh, Kadalpayanangal, thoughts, birds


23 comments:

  1. வீட்டுக்கு வரும் ஒரே ஒரு பறவையை அதன் செயல்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தால் கவலைகள் பறந்து போய்விடும். நம் வாழ்க்கை அழகாகும்.

    ReplyDelete
    Replies
    1. அழகாக சொன்னீர்கள் ஜோதிஜி....... ஒரு பறவை கொத்தி கொத்தி தின்னும் அழகை நாள் எல்லாம் பார்த்து ரசிக்கலாம், ஆனால் நகரத்தில் இன்று பறவையே அரிதாகி விட்டதே...!! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  2. என்னுள் நெடு நாளாய் இருக்கும் ஆதங்கம்
    அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    சூரிய உதயத்தையும் பௌர்ணமி நிலவையும்
    சினிமாவில் கண்டு ரசிப்பது மாதிரி
    பறவைகளையும் கண்டு ரசிக்கும் நிலை
    வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
    மனம்கவர்ந்த பகிர்வு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்...... நீங்கள் சொல்வது போல் இது நிறைய பேருக்கு இருக்கும் ஆதங்கம்தான், ஆனால் பொருள் தேடி ஓடும் இந்த உலகத்தில் அதை நினைத்து பார்க்க எனது இந்த பதிவு உதவி இருக்கும் என்று நம்புகிறேன் !

      Delete
  3. Replies
    1. தமிழ் மணத்தில் ஓட்டு அளித்து இந்த பதிவை பாராட்டியதற்கு மிக்க நன்றி !

      Delete
  4. ஆனால் காக்கைகளையும், மைனாக்களையும் ?! வனத்தில் வாழும் உயிரனங்களை நாம் சென்று பார்க்க முடியாது என்று ஜூ உருவாக்கினோம், இன்று இந்த பறவைகளை பார்க்கவும் ஒரு ஜூ உருவாக்க வேண்டுமா ?!

    பறவைப்பார்வை சிந்தனை அருமை..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிகண்டன் ! அந்த நாள் வெகு சீக்கிரம் வருமோ என்னவோ !

      Delete
  5. படங்கள் அத்தனையும் அருமை.

    நகர மைய பகுதியில் இப்போதெல்லாம் பறவைகளைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால் நான் வசிக்கும் சென்னை புறநகர் பகுதியில் இப்போதும் நகரத்தில் காணக்கிடைக்காத பல பறவைகளை- சில மிகச் சிறியவை - நிறைய காண முடிகிறது. ஆனால் கையில் காமராவுடன் மொட்டை மாடியில் நிற்கும்போது ஒன்றும் வராது. அதுபோலவே பட்டாம்பூச்சிகள், வண்டுகள், தும்பி, வெட்டுக்கிளி என பலவற்றையும் பார்க்க முடிகிறது. சுமார் நாற்பதாண்டுகால நரக - சாரி நகர வாழ்க்கைக்குப் பிறகு இந்த புறநகர் வாசம் மனதுக்கு இனிமையாகத்தான் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வரம் வாங்கி வந்து இருக்கிறீர்கள் ஜோசப்........ நீங்கள் சொன்னது போல நகர வாழ்க்கை என்பது இன்று நரக வாழ்க்கையாக இருக்கிறதே !

      Delete
  6. படமும், தகவலும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி !

      Delete
  7. அருமையான கட்டுரை. சில நாட்களாகசிட்டுக்கிருவி மற்றும் மயில் அதிகமாகி வருகின்றன- TPR joseph சொன்னதைப்போல, it may be because they reduce Mobile tower radiation, Welcome sight. !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி பாபு.......!!

      Delete
  8. தேவையான பதிவு!! அருமையான படத்தேர்வு!! அருமை!!! தொடருங்கள். வாழ்த்துக்கள் -எஸ்.ஏ.சரவணக்குமார்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சரவணன்....... உங்களது பாராட்டு எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது, இன்னும் இது போல எழுத தூண்டுகிறது !

      Delete
  9. மிக அவசியமான கட்டுரை....பறவைகளும், பட்டான்பூச்சிகளும் இல்லை என்றால் பூக்களுக்கு இடையான மகரந்த சேர்க்கை தடைபெறும் மேலும் விதைகளின் வீரியம் இழக்கும்.. பிறகு இந்த உலகில் மனிதன் வாழ முடியாது என்பதை எப்போது புரிந்து கொள்ளபோகிறோம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜா...... ஆம் நீங்கள் சொல்வது சரிதான், இன்றைய மீடியா உகத்தில் எல்லாம் தெரிந்து இருந்தும் நாம் இதை போல் செய்வதுதான் வருத்தம் அளிக்கிறது !

      Delete
  10. மனதில் சோகத்தையும், சுமையையும் ஏற்படுத்தும் படங்கள். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்வது என்ன என்று நெருட வைக்கும் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜா.... உண்மைதான் இந்த பதிவுகள் எழுதும்போது எனக்கும் அந்த வருத்தம் இருந்தது !

      Delete
  11. இந்த நகரத்திற்கு பொருள் சம்பாதிக்க தேடி வந்தது என்பது நமது முடிவு, ஆனால் பறவைகள் ? stay Real !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருஷ்ணா..... அந்த கடைசி வரிகள் உங்களது மனம் தொட்டது என்பது நீங்கள் அதை இங்கு பகிர்ந்ததன் மூலம் தெரிகிறது !

      Delete
  12. இந்த பதிவை எழுதியதற்கு மிக்க நன்றி.., படிக்கும் பொழுதே கண்ணீர் தான் வருகிறது... எங்களால் முடிந்தவரை பறவைகளுக்கு (கிளிகள், காக்கா, அணில்) உணவு (பழம், தானியம்) கொடுத்து வருகிறோம். இயற்கையை அழித்து பணத்தை தேடும் இந்த சமுதாயம் என்று மாறுமோ... என்று காத்து கொண்டு இருக்கிறோம்.

    ReplyDelete