Thursday, September 19, 2013

ஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை

இசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் !. இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு ஊருக்கும் போகும்போதும் அங்கு பிரபலமாக இருக்கும் பொருட்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த முறை தஞ்சை செல்வதற்கு முன் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து சென்று இங்கு வீணை பிரபலம் என்று தெரிந்தது கொண்டேன், அதை செய்யும் இடம் சென்று பார்க்க வேண்டும் எனும்போது அதற்க்கு இவ்வளவு தூரம் கஷ்டப்பட வேண்டும் என்று அப்போது தெரியாமல் போனது. இன்று இசை என்பது கீ போர்டு, டிரம்ஸ் என்று ஆகிவிட்ட பிறகு இந்த வீணையின் மவுசு குறைந்து விட்டது. இன்று தஞ்சாவூரில் இப்படி வீணை செய்பவர்கள் என்பது மிகவும் குறைவு, இதனால் வீணை எங்கு கிடைக்கும் என்று கேட்டதற்கு ஆள் ஆளுக்கு எங்களை அலையவிட்டனர் ! ஒரு கட்டத்தில் வெறுத்து போய் தஞ்சாவூரில் யார் வீணை பேமஸ் என்று சொன்னது என்று காண்டாகி இருந்தேன்...... முடிவில் ஒரு பெரியவரின் மூலம் ஒரு முகவரி கிடைத்தது ! (இந்த பதிவை நீங்கள் முழுமையாக படிப்பீர்களா என்பது சந்தேகமே, அவ்வளவு ஆராய்ச்சி செய்து, கேட்டு இருக்கிறேன்..... ஆனால் தஞ்சாவூரின் வீணை பற்றிய பெருமையை நான் பதிவு செய்திருக்கிறேன் என்பது எனக்கு சந்தோசமே !!)


பலா மரத்தினில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வீணையின் பகுதி 




17ஆம் நுற்றாண்டில் தஞ்சையில் அரசர் இரகுநாத மன்னர் காலத்தில் முதன் முதலில் வீணை செய்யப்பட்டது. ஆகவேதான் தஞ்சாவூர் வீணை என்றும் இரகுநாதவீணை என்றும் பெயர் பெற்றது. மீன், மடியல், படகு போன்ற வெவ்வேறு வடிவங்களில் வீணைகள் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ள வீணைகள் வாயிலாக அறிந்துக் கொள்ள முடியும். இதன் வாயிலாக வீணைகள் காலத்தின் சூழலுக்கு ஏற்ப மாறுபட்டும் தொழில் நுணுக்கத்துடனும் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அறியலாம்.

ஒரு பலா மரத்தில் இருந்து ஆறு அல்லது ஏழு வீணை செய்யலாம் 





நான் வீணை வாசிக்கட்டுமா ?!

சுமார் 40 வருடங்கள் விளைந்த பலா மரத்தின் அடி மரத்தில்தான் வீணை செய்யப்படுகிறது. வாகை மரத்திலும் வீணை செய்யப்படுகிறது. இருப்பினும் பலா மரத்தில் செய்வதே சிறந்ததாகும். வீணை செய்வதற்கு முக்கியமான பலாமரத்தை மொத்தமாக பண்ருட்டியில் இருந்து வாங்குகிறார்கள். ஒரு பெரிய பலா மரத்தில் இருந்து ஐந்து அல்லது ஆறு வீணைகள் செய்யலாமாம். வீணைக்கு செயற்கையாக வண்ணம் தீட்டுவதில்லை. பலாமரம் பால்வகை மரம். நாளாக நாளாக அதுவே மெருகேரும். புதிய வீணையின் எடை மரம் காயும்போது குறையத் தொடங்கும். அப்போது சுருதி சுத்தமாக இருக்கும். ஒரு வீணையை செய்து முடிக்க சுமார் 20 நாட்கள் ஆகும்.

இப்படி குடைந்து எடுத்து வீணையின் உருவம் கொடுப்பார்கள் 


வேலைபாடு அதிகமாக அதிகமாக காசு ஜாஸ்தி !


தஞ்சையில் இரண்டு வகையான வீணைகள் தயாரிக்கின்றார்கள். 1) ஒரே மரத்துண்டில் குடம், தண்டி, யாளித்தலை ஆகிய பாகங்களைச் செதுக்கிச் செய்யப்படும் வீணை ஏகாண்ட வீணை என்று பெயர். 2) குடம், தண்டி, யாளித்தளை ஆகியவைகளை தனித்தனியே செய்து ஒன்றாகப் பொருத்தி செய்யப்படும் வீணையை ஒட்டு வீணை அல்லது சாதா வீணை என்று பெயர். சாதாரண வீணை (சரஸ்வதி வீணை), ஏகாந்த வீணை, கார்விங் வீணை, உட்கார்விங் வீணை, விசித்திர வீணை, ருத்திரவீணை ஆகிய வகைகள் உள்ளன. இதில் விசித்திர வீணை என்பது கோட்டுவாத்தியம் எனவும் அழைக்கப்படும். இந்த வகை வீணை அரிது. இந்த வகை வீணை இசைப்பவர்களும் அரிது. இப்போது விசித்திரவீணை, ருத்திர வீணை போன்றவைகளும் அரிதாகிவிட்டன.

வீணைக்கு பாலீஷ் செய்கிறார்கள் 



ஒரு வீணை உருவாகிறது !




கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப்பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை அல்லது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை எனப் பல வகைப் பெயர்களால் குறிப்பிட்டு அழைக்கப்படினும் யாவும் ஓரே வகையான வீணையே ஆகும். பொதுவாக சாதாரண மக்களால் வீணை வாசித்தல் எனக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டாலும், வீணை மீட்டல் என்றே கட்டுக்கோப்பான வகையில் வரையறுத்துக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது. தஞ்சாவூர் வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாகவும் விளங்குகின்றது. அதே சமயம் மைசூர் வீணையானது அலங்கரிப்பிலும், வடிவமைப்பிலும் குறைந்ததாகவும், முன்குடமானது அளவில் பெரியதாகவும் விளங்குகின்றது. அவ்வாறே தஞ்சாவூர் வீணையின் (சரஸ்வதி வீணை) மற்றுமொரு உற்பத்தி பூமியாக திருவானந்தபுரம் விளங்குகின்றது. திருவானந்தபுர வீணை எடையில் குறைவானதாகவும் நீளத்தில் கூடியதாகவும் விளங்குகின்றது. தஞ்சாவூர் வீணை (சரஸ்வதி வீணை), மைசூர், மற்றும் திருவானந்தபுரம், ஆகிய இடங்களை உற்பத்தி மையமாகக் கொண்டு விளங்குவதுடன் அடிப்படையில் அதன் அலங்கரிப்பு, உருவ வடிவமைப்பு என்பன மாற்றம் பெற்ற போதும் அதன் பாவனை, நுட்பவியல், நுணுக்க வடிவமைப்பு என்பன வற்றில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை.

வீணையின் பாகங்கள்....

வீணை வாங்கலியோ வீணை....




வீணையின் அளவு 41/4 அடி. வெளிக்கூடு அகலம் 14 1/2 அங்குலம். எடை சராசரியாக 7 கிலோவில் இருந்து 9 கிலோ வரை இருக்கும். அதில் குடம், மேற்பலகை, தண்டி, வளைவுமூடி மேல் உள்ள மாடச்சக்கை, சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் போன்ற பாகங்கள் உள்ளன. வீணையில் 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் அமைக்கப்பட்டு இருக்கும். வாசிப்பு தந்திகள் சாரணி, பஞ்சமம், மந்தரம், அநுமந்தரம் ஆகியவையாகும். சுருதி தந்திகள் பக்கசாரணி, பஞ்க பஞ்சமம், ஹெச்சு சாரணி ஆகியவை. தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டு இருக்கும். குடம் உள்ள பக்கம் பெரிதாகவும், யாளி முனைப்பக்கம் சிறியதாகவும் காணப்படும். தண்டியின் இரு பக்கத்திலும் மெழுகுச்சட்டங்கள் இருக்கும். அவற்றின் மேல் 2 ஸ்தாயிகளை தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினால் செய்யப்பட்டிருக்கும். யாளி முகத்திற்கு அருகில் இருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும், பயன்படுகிறது. 4 வாசிப்பு தந்திகள் லங்கர்களின் நுனியில் உள்ள வளையங்களில் முடியப்பட்டு குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டு இருக்கும். நாகபாசத்தில் சுற்றப்பட்டு இருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியை செம்மைபடுத்த பயன்படும். வளையங்களை நாகபாசபக்கமாக தள்ளினால் சுருதி அதிகரிக்கும்.


இது தனியாக செதுக்கி பொருத்தப்படும் யாழி தலை......





இவ்வீணையில் மீட்கப்படும் நான்கு தந்திகளும் முறையே, சாஸ்திரிக ரீதியில் நான்கு பெயர்களைக் கொண்ட தந்திகளாக அமைந்துள்ளன. அவை முறையே அனுமந்திரம், மந்திரம், பஞ்சமம், மற்றும் சாரணய் ஆகும். மூன்று தாள தந்திகளைக் கொண்டதாக அமையும் தந்திகள் முறையே பக்க சாரணி, பக்க பஞ்சமம் மற்றும் தீ வீர சாரணி ஆகிய சிறப்புப் பெயர்கள் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றன. வீணை தயாரிப்பில் நுட்பமான வேலை 'சுரஸ்தானம்' அமைப்பதுதான். இசை ஞானம் உள்ளவர்களால்தான் இதை செய்ய முடியும்.



வலது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வீணையின் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள- சுருதித்தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப் படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல் களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொள்வார்கள். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன் னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி கீழ் தண்டில் உள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார். தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது காலில் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.



தஞ்சாவூரில் தயாராகும் வீணைகள் ஒவ்வொன்றும் 4,500 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வீணைகள் 8,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய்வரை விலை போகிறது. இவ்வீணையின் அலங்கரிப்பு மற்றும் வேலைப்பாடுகளுக்கு யானைத் தந்தமும், மான் கொம்பும் பயன்படுவது குறிப்பிடத்தக்கது.



நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ....... சொல்லடி சிவசக்தி...... தஞ்சாவூர் வீணை வாசிப்பவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள், இதை சீக்கிரம் அரும்காட்சியகத்தில் பார்க்கும் நாள் வரலாம் !

Labels : Oor special, Tanjore veena, Thanjavur, veenai, suresh, kadalpayanangal, district special

56 comments:

  1. எவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடு... நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார், இந்த வீணையில் நிறைய நுணுக்கமான வேலைபாடுகள் இருக்கின்றன, அதை செதுக்கும்போது பார்த்தால் அருமையாக இருந்தது. நன்றி !

      Delete
  2. தஞ்சாவூரின் வீணை பற்றிய பெருமையை
    பதிவு செய்திருப்பதற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிகண்டன்...... எலேக்ட்ரோனிக் இசை கருவிகள் வந்ததில் இருந்து இதற்க்கு மவுசு குறைந்து விட்டது !

      Delete
  3. சுரேஷ்,

    உங்க பதிவுகளின் ராணி இந்த வீணைப் பதிவு!!!! வாசிக்கும்போதே (ஐ மீன் பதிவை) மனம் நிறைந்து வழிஞ்சது!

    முழுவீணையும் ஒரே மரத்தண்டில் குடைந்து செய்கிறார்களா!!! அமேஸிங்!!!

    என்ன ஒரு உழைப்பு! அதான் வீணை பேசுது போல!

    எனக்கு வீணைப் பைத்தியம் உண்டு. ஆசைக்காக ஒரு குட்டிவீணை அலங்காரப்பொருளா வாங்கி வச்சுருக்கேன்:-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்..... இந்த வீணை பதிவை எனது பதிவுகளின் ராணி என்று சொன்னதில் மனம் நிறைந்தது, இவ்வளவு தூரம் சென்று தேடி சேகரித்த விஷயத்திற்கு உங்களது கருத்து மகிழ்ச்சியை கொடுத்தது, நன்றி !

      Delete
  4. wav.... அட்டகாசமான பதிவு... தஞ்சை என்றால் தலையாட்டி பொம்மை தான் பேமஸ் என்று கேள்விப்பட்டு இருக்கேன்.. பட் வீணையும் புகழ்பெற்றது என்பதை இன்று தான் அறிந்தேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சதீஷ்.... இந்த பதிவை விரும்பி, பாராட்டி, முகபுத்தகத்தில் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி !

      Delete
  5. அருமையான பதிவு. சில நாட்களுக்கு முன் வித்யா சுப்ரமணியனின் ராக ரசிகா PODCASTல் வீணை எப்படி செய்கிறார்கள் என்பது பற்றி சுருக்கமாகச் சொல்லியிருந்தார். இப்போது உங்கள் விரிவான பதிவு மேலும் புதிய தகவல்களை தருகிறது. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்.... எனது இந்த பதிவு உங்களது மணம் கவர்ந்தது கண்டு மகிழ்ந்தேன். இது போன்ற கருத்துக்கள்தான் என்னை இப்படி முயற்சி செய்து எழுத தூண்டுகிறது !

      Delete
  6. எங்கள் ஊர் பெருமையை பதிவாக்கி இருக்கிறீர்கள், நன்றி. நீங்கள் வீணை செய்யும் இடத்தை காண இவ்வளவு அலைந்திருக்க வேண்டாம். சிவகங்கை பூங்காவின் வாசலில் அந்த வழி செல்பவர்கள் காணும்படியாக வாசலில் வைத்து செய்து கொண்டு இருப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. சுலபமாக சொல்லி விட்டீர்கள் ஆரூர் மூனா..... நான் வீணை செய்வதை பார்ப்பதற்கு மட்டுமே தஞ்சை சென்று இருந்தேன், ஆகையால் நிறைய தேடி அலைந்தேன். தஞ்சை ஓவியத்திற்கும் இந்த கதைதான் நடந்தது ! நன்றி நண்பரே !

      Delete
  7. அருமை பதிவை படித்ததும் உள்ளுக்குள் உறங்கும் வீணை ஆசை விழித்துக் கொண்டது

    ReplyDelete
    Replies
    1. அதை நான் இந்த பதிவின் வெற்றி என்று எடுத்துக்கொள்ளலாமா ?! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  8. //ஒரு பலா மரத்தில் இருந்து ஆறு அல்லது ஏழு வீணை செய்யலாம் //

    ஒரு பலா பழத்தை பத்து பேர் சாப்பிட முடியும் போது, ஒரு பலா மரத்தில் ஏழு வீணை செய்ய முடியாதா?

    ReplyDelete
    Replies
    1. எப்படி, எப்படி, எப்படி இப்படியெல்லாம் சிந்தனை செய்யறீங்க ?! பின்னுறீங்க போங்க ! :-)

      Delete
  9. அழிந்து வரும் ஒரு கலையை ஆராய்ந்து அழகாக பதிவு செய்த உம்மை "வீணை" சுரேஷ் என்றும் இனி உலகம் அழைக்கட்டும்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி விஜய்...... இந்த பட்டம் கூட நல்லாத்தான் இருக்கு !

      Delete
  10. நானும் தஞ்சை மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்டிருந்த போதிலும் மிகச்சிறிய காலமே வீணை கற்றுக்கொண்ட போதிலும் இந்த அளவு மெனக்கெட்டு விஷயம் சேர்க்க முயன்றதில்லை.
    சூப்பர் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருணா..... இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது ஊரில் பிரபலமாக இருக்கும் ஒன்றை தேடி பிடித்து போட்டு வருகிறேன். அதை நீங்கள் விரும்பியது கண்டு மகிழ்கிறேன், நன்றி !

      Delete
  11. வீணை வாசிக்க தெரிய விட்டாலும் அந்த இசைக்கு நான் அடிமை....இப்போது வீணை செய்வது பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி.....அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜா.... தங்களது வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  12. Replies
    1. நன்றி மோகன்-ஜி, இந்த ஒரு வார்த்தையே எனக்கு நிறைய உற்சாகம் கொடுக்கிறது. இது போல மேலும் முயற்சி எடுத்து இது போல எழுத தூண்டுகிறது !

      Delete
  13. அருமையான பதிவு.நானும் முன்னொரு காலத்திலே இந்த இடத்துக்கெல்லாம் போயிருக்கேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..... தங்களது வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  14. மிக நுணுக்கமான தகவல்களுடன் பதிவு
    மிக மிக அருமை.வீணை குறித்து இதுவரை
    அறியாத பல தகவல்களை தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்..... உங்களுக்கு இந்த பதிவு பிடித்தது கண்டு மகிழ்ச்சி !

      Delete
    2. வாங்க வேண்டும் செய்யும் இடத்தின் முகவரி கிடைக்குமா

      Delete
  15. Replies
    1. தமிழ் மணத்தில் நீங்கள் இந்த பதிவுக்கு அளித்த வோட்டுக்கு மிக்க நன்றி !

      Delete
  16. மிக அருமையான தகவல்கள். உங்கள் உழைப்பு பதிவில் தெரிகிறது. வீணை கற்றுக்கொள்ள நெடுநாள் ஆசை. வீட்டில் வீணை இருக்கிறது. மனைவி கொஞ்சம், மகள் கொஞ்சம் வாசிப்பார்கள். உங்கள் பதிவு என் ஆசையை மீண்டும் கிளறிவிட்டது!

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவு மீண்டும் உங்களை வீணை வாசிக்க தூண்டியது கண்டு மகிழ்ச்சி சார் !

      Delete
  17. Replies
    1. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி கிருஷ்ணா !

      Delete
  18. வீணை காயத்திரி பாடலுடன் வீணை தயாரிப்பு குறித்த விளக்கங்கள் பயனுள்ள விரிவான தகவல். வீணை உருவாக்குபவர்களோடு சேர்ந்து உங்களின் உழைப்பும் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலாகுமரன் சார் ! இந்த உழைப்பை பாராட்டி விரும்பி படித்ததற்கு !

      Delete
  19. பதிவில் எதையெல்லாம் எழுத முடியும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜோதிஜி..... இந்த வார்த்தைகள் நான் தேடி, அலைந்து, கஷ்டப்பட்டு சேகரித்த இந்த தகவல்களுக்கு ஒரு அர்த்தம் தருகிறது. உங்களது வருகையும், கருத்தும் என்னை மகிழ்ச்சி கொள்ள செய்தது, நன்றி !

      Delete
  20. நல்ல பதிவு.. தஞ்சாவூரில் உறவினர்கள் இந்த வேலையில் இருந்தாலும், ஆர்வம் இருப்பினும் மெனக்கெட்டு இவ்வளவு விசயங்களை அறிந்ததில்லை. நல்ல கட்டுரை, வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலாசி, இந்த கட்டுரை உங்களை கவர்ந்தது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  21. வீணை இசை எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைவாக தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி !

      Delete
  22. Good effort. Thaïlande you for your interest. And i want to buy it. Please send the address to venkat_design@yahoo.in

    ReplyDelete
  23. வீணைக்கும், கோட்டுவாத்தியம் எனும் வாத்தியத்துக்குமான வேற்றுமையைக்காண இணையத்தில் தேடும்போது இந்த பதிவு கிடைத்தது.

    அருமையான பதிவு. இவ்வளவு விளக்கமாக, பாகங்களை குறிக்கும் படங்களில் ஆரம்பித்து, அதன் செய்முறையை நேரடியாய் படங்களாய் பதிவு செய்தவரைக்கும் தொகுத்திருக்கும் உங்கள் உழைப்புக்கு நன்றி.

    ReplyDelete
  24. வீணை பற்றி தேடிய போது இது வந்தது.
    பதிவு மிக நன்று.
    மனம் நிறைந்த நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க். 7-8-2015

    ReplyDelete
  25. செய்யும் இடம் எங்கே உள்ளது. அட்ரெஸ்

    ReplyDelete
  26. வீணை நாதம் வெறும் ஒலியல்ல அது சிவனின் கானம் வீணை செய்வோர் ஒருபோதும் வீழ்வதில்லை

    ReplyDelete
    Replies
    1. வீணை தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நான் ஒரு வீணை வாங்க விருப்பபடுகிறேன் போன் நம்பர் வேண்டும்

      Delete
  27. முகவரி மற்றும் போன் நம்பர்

    ReplyDelete
  28. வீணை பற்றி தேடிய பாேது இப்ப
    திவு கிடைத்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
  29. வீணை செய்யும் இடம் எங்கே

    ReplyDelete
  30. சிறந்த பயனுள்ள செம்மை ஆக்கத்திற்கு சிரம் தாழ்த்தி நன்றி நவில்கிறேன்!

    ReplyDelete
  31. Address and phone number needs to purchasing veena

    ReplyDelete
  32. My phone and whatsapp number is 9171572363

    ReplyDelete