Monday, September 23, 2013

பட்டிக்காட்டை தேடி ஒரு பயணம் !!

சென்ற வாரம் எனது சொந்தத்தில் ஒரு கல்யாணம் வைத்திருந்தனர், அதில் பங்கேற்க எனது குடும்பத்துடன் சென்றேன். மாப்பிள்ளை தனது சொந்த ஊரில்தான் கல்யாணம் வேண்டும் என்று கேட்டதால் அருப்புக்கோட்டையில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருந்த நீராவி என்னும் ஊருக்கு சென்றோம். செல்லும் பாதை சிறிது நன்றாக இருந்தாலும், அந்த ஊருக்கு வழி கேட்டு செல்வதில் நிறைய பிரச்னையை சந்தித்தோம். முடிவில் அந்த ஊருக்குள் நுழைந்து கல்யாண மண்டபம் எங்கே என்று கேட்டபோது கிழக்கே ஒரு அரை கல்லு போய், வடக்கே திரும்பினா என்று சொன்ன அந்த மகானுபாவன் சொன்ன வழியில் சென்றேன்...... அவர் வழியே செல்லவில்லை என்றாலும் கண்டு பிடிக்கும் அளவுக்கு அந்த சாலை ஊர் கடைசியில் இருந்த மண்டபதில்தான் முடிந்தது ! திருமணம் முடிந்தபின் கிராமத்தை சுற்றி பார்க்க கிளம்பலாம் என்று கிளம்பினோம், நன்றாக தெருவுக்கு போடப்பட்ட சிமெண்ட் ரோடு, மின்சார வசதி, கேபிள் டிவி, சுத்தமான குடிநீர் குழாய்கள், சாக்கடைகள் என்று எல்லாமும் இருந்தது கிராமத்தில். அப்போது எனக்கு வரும் வழியில் பார்த்த சினிமா போஸ்டர் ஆன "வருத்தபடாத வாலிபர் சங்கம்" யாபகம் வந்தது, அதில் "இது ஒரு கிராமத்து காதல் கதை....." என்று எழுதி இருந்தது. ஆஹா, அருப்புக்கோட்டை என்பதே ஒரு கிராமம், அதில் இருந்து இவ்வளவு தூரம் தள்ளி இருப்பது ஒரு குக்கிராமம், அப்படியென்றால் கண்டிப்பாக படங்களில் வருவதுபோல இங்கு செல்போன் சிக்னல் எல்லாம் கிடைக்காதே என்று எடுத்து பார்த்தல்...... புல் சிக்னல் ! அப்படியென்றால் கிராமம் என்பதற்கு என்ன அளவீடு, பட்டிக்காடு என்றால் என்ன என்று எண்ண தொடங்கியது மனது. இன்று நாம் எல்லோரும் ஒரு கிராமத்திற்கு போய் அங்கு செட்டில் ஆக வேண்டும் என்று ஆசைபடுகிறோம், அப்படியென்றால் அந்த கிராமத்தில் என்ன இருக்கும் ? சினிமாவில் காண்பிக்கும் கிராமம் இன்று இருக்கிறதா, கிராமம் என்றால் நமது மனதில் வருவது என்ன, கிராமத்தில் இருந்தால் நிம்மதியாக இருக்கும் என்பது உண்மையா, கிராமத்திற்கும் பட்டிக்காடு என்பதற்கும் வித்யாசம் என்ன, எதை வைத்து இது கிராமம் என்று சொல்லபடுகிறது ?
 
 
 
முன்பெல்லாம் சென்னை என்பது மட்டுமே நகரம் என்று கொள்ளப்படும், நான் பிறந்து வளர்ந்த திருச்சி எல்லாம் சிறிது கிராமம் போலதான், அதை விட்டு சற்று தள்ளி இருந்த எல்லாமே பட்டிக்காடு ! இன்று திரும்பி பார்த்தால்....... அருப்புக்கோட்டை என்பது டவுன், நீராவி என்ற 30 கிலோமீட்டரில் இருக்கும் ஊர் என்பது கிராமம், மதுரை என்பது நகரம்...... எங்கெங்கு திரும்பினும் ஷாப்பிங் மால், தியேட்டர், தங்க நகை கடை என்று ஜொலிக்கிறது மதுரை, அப்போது சென்னை என்பது என்ன....... சூப்பர் நகரமா ?! அப்போ நியூயார்க், சிகாகோ, லண்டன், டோக்யோ என்பதெல்லாம் நகரம் என்று சொல்லிவிட முடியுமா ?! தொழில்நுட்ப வளர்ச்சியில் நேற்றைய கிராமங்கள் எல்லாம் நகரங்கள் ஆகியது, இன்றைய கிராமம் நகரம் ஆகி கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை. எனது கேள்விக்கு விடை தேடி நாங்கள் நீராவியில் இருந்து கமுதி வரை கண்ணில் பட்ட கிராமங்கள் எல்லாம் விசாரித்து சென்றோம், முடிவு என்பது ஆச்சர்யபடுதியது, அதிர்ச்சியும் கொடுத்தது !
 
 
 


ஒரு இடத்தை கிராமம் என்று எப்படி சொல்கிறோம்..... மின்சாரம், டிவி, கேபிள் டிவி, நல்ல காற்று, சுத்தமான குடிநீர், சாக்கடை வசதி என்று இருக்கும் கிராமத்தில் மருத்துவமனை என்பது ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, ஆனால் ஒரு அனுபவமான மருத்துவர் பக்கத்து தெருவிலேயே இருக்கிறார் கிராமத்தில், நகரத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மருத்துவமனை இருந்தாலும் பத்து கிலோமீட்டர் செல்லும் நேரம் எடுக்கிறது. பஸ் வந்து செல்வது என்பது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறைதான், ஆனால் நகரத்திலேயே இப்படிதானே இருக்கிறது........ நாம் ஒரு மணி நேரம் நின்றால்தான் நிற்க இடம் கிடைக்கும் பஸ் கிடைக்கிறது. நிறைய பேங்க், ATM என்று எங்கும் இருக்கிறது..... ஆனால் போடுவதற்கு அல்லது எடுப்பதற்கு பணம் இல்லையே, ஆனால் கிராமத்தில் ஒவ்வொரு மூதாட்டியின் சுருக்கு பையிலும் பத்து ரூபாயாவது இருக்கிறது. நாற்று நடுவது, களை பறிப்பது எல்லாம் கிராமத்தில் செய்கிறார்கள் என்றால் அது அவர்களுக்கு தொழில்.... நாம் அதை அதிசயமாக பார்த்தால் அவர்கள் நகரத்து வாகனங்களை பார்த்து அதிசயிக்கின்றனர்.  வகை வகையாக திங்க, ஷாப்பிங் செய்ய என்று நிறைய இடம் உண்டு...... ஆனால் பொதுவாக நாம் வாங்குவது எல்லாம் தேவைக்கு அதிகமே, யோசித்து பாருங்கள் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து துணி எடுப்பவர்கள் எல்லாம் திருவிழா போல அவ்வளவு மகிழ்ச்சியுடன் ஷாப்பிங் செய்வதை, நாம் அப்படியா செய்கிறோம் ? அப்புறம் என்ன வித்யாசம் கிராமத்திற்கும், நகரத்திற்கும் ?! கிராமத்தில் இருக்கும் செட்டியார் கடையில் கடன் வைத்து, அன்றைய காய் அல்லது பருப்பு வாங்கலாம், ஆனால் நகரத்தில் ஒரு டீ கடையில் உங்களால் கடன் சொல்ல முடிகிறதா ? யோசித்து பார்த்தால் கிராமத்தில் எல்லாமே கிடைப்பது போல இருக்கிறது........!!
 
 

சரி, இவ்வளவு தேடுகின்றோமே முதலில் கிராமம் என்றால் நமக்கு என்ன தோன்றுகிறது என்று பார்ப்போமே என்று நாங்கள் உட்கார்ந்து பேசினோம் (மிகுந்த நகைசுவையாக இருந்தது சிலர் சொன்னதை எல்லாம் கேட்டு !!).......... கிராமத்தில் வயல் இருக்கும், பம்ப் செட் போட்டு தண்ணீர் இறைப்பார்கள், வீடுகள் இருக்கும் தெரு குறுகலாக இருக்கும், சந்து பொந்து என்று வீடுகளுக்கு நடுவில் இருக்கும், வயதான பாட்டி இருப்பார்கள், பெண்கள் எல்லாம் பாவாடை தாவணி அணிந்து இருப்பார்கள், அங்கு ஒரு பண்ணையார் இருப்பார், நாடார் பெட்டி கடை இருக்கும், வெட்டி பயல்கள் டீ கடையிலேயே இருப்பார்கள், பால்காரர் மாடுகளை ஓட்டி செல்வார், புல்லெட் வண்டியில் கிராமத்து மைனர் வருவார், பூசாரி பேய் ஓட்டுவார், அங்கு ஒரு ஆலமரம் இருக்கும், பஞ்சாயத்து நடக்கும், ஓடை இருக்கும், நல்ல காற்று இருக்கும், பஸ் வசதி இருக்காது, பாம்பு கடித்தால் எல்லோரும் கட்டிலில் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள், மருத்துவமனை ஊருக்குள் இருந்து 10 கிலோமீட்டர் இருக்கும், பிள்ளைகள் எல்லாம் ஒரோன்னு ஒன்னு என்று படிக்கும் பள்ளிக்கூடம், ஆடுகள், மாடுகள் என்று பட்டியல் மிகவும் நீளம்........ யோசித்து பார்த்தால், மிருகங்கள், தண்ணீர், ஆலமரம், வயல் என்பதை தவிர்த்து பார்த்தால் நகரங்களிலும் எல்லாமும் இருக்கிறது எனலாம் இல்லையா.
 

 
 
 
 
 
இப்படி கிராமம் தேடி அலையும்போது முதலில் நான் மின்சாரம், செல்போன் டவர் இரண்டும் இல்லாமல் எங்கேயாவது இருக்கிறதா என்று பார்த்தேன். என்னிடம் வோடபோன், நண்பரிடம் ஏர்செல் இருந்தது..... சில இடங்களில் எனக்கு புல் டவர், சில இடங்களில் அவருக்கு, இதனால் செல்போன் டவர் இல்லாமல் கிராமம் என்பது இல்லை. அடுத்து மின்சாரம், எல்லா கிராமத்திற்கும் மின்சாரம் இருந்தது, சொன்னால் நம்பவே மாட்டீர்கள் சில கிராமங்களில் சோலார் மின்சாரம் எல்லாம் இருந்தது ! எல்லா வீட்டிலும் இன்வேர்ட்டர் இருந்தது...... எப்படி இதெல்லாம் என்று கேட்டதற்கு டிவி என்று பதில் வந்தது. இப்படி தேடி சென்ற போது, மின்சார வசதி எல்லாம் இருந்த இடத்தை எல்லாம் கிராமம் என்று சொல்ல முடியாமல் இங்கு பட்டிக்காடு என்று எங்கு இருக்கிறது என்று கேட்டதற்கு என்னை மேலும் கீழும் பார்த்தனர், சிலர் இந்த தம்பிக்கு என்னவோ ஆச்சு என்றனர் ! அவர்கள் வாழும் அந்த ஊருதான் கிராமம், பட்டி காடு !! இப்படி அருப்புக்கோட்டையில் காண முடியாததை, திண்டுக்கல்லில் தேடி பார்த்தேன்........ மேலகவுண்டன்புதூர் என்னும் ஊரில் ஆலமரம் இருந்தது, ஆனால் பஞ்சாயத்து எல்லாம் இல்லை. முடிவில் ஒரு சில வீடுகள் மட்டுமே இருக்கும் கிராமம் பார்க்கலாம் என்று சென்றதில் பொன்ராம்பட்டி என்னும் ஊரில் சுமார் இருபதே வீடுகள் இருந்தது, ஆனால் அங்கும் எல்லா வசதியும் இருந்தது !
 
 
 



நகரத்தில் வாழும் நாம் இங்கு எல்லா வசதியும் இருக்கிறது என்று மார் தட்டி கொண்டாலும், கிராமத்திலும் இன்று அந்த வசதிகள் இருக்கிறது. நான் சென்று இருந்த ராமசாமிபட்டியில் ஒரு பெரியவருடன் பேசியதில் மனம் தெளிந்தது....... கிராமத்திலும், நகரத்திலும் இருக்கும் வித்யாசம் ஒன்றுதான், அது டெக்னாலஜி, ஜாதி. மருத்துவமனை தூரம் என்பதால் எல்லோரும் உடலை கவனிக்கின்றனர் இங்கு, கவர்மெண்ட் பள்ளி படிப்பு பத்தாது என்று இன்டர்நெட்டில் தேடி படிக்கின்றனர், பஸ் அதிகம் இல்லை என்று அவர்கள் ஒன்று நடக்கின்றனர் இல்லை டைம் பார்த்து சென்று விடுகின்றனர். இப்படி இல்லாதது கண்டு ஏங்குவது விட்டு, இருப்பது கண்டு மகிழ்கின்றனர் என்பது எனக்கு கண்கூடாக தெரிந்தது. அவர்களது வீட்டில் மைக்ரோவேவ் ஓவன் இல்லை, LED டிவி இல்லை, ஆப்பிள் சாதனங்கள் இல்லை...... ஆனால் மற்ற எல்லாம் இருந்தது. சமயத்தில் ஊரில் இருந்து வருபவர்களிடம் இன்றைய பிள்ளைகள் கிராமத்தில் இருந்தா வர என்று சொல்லி எள்ளுவதை பார்த்திருக்கிறேன், அவர்களுக்கு என்ன தெரியும் அங்கு இருக்கும் வசதிகள் !
நான் சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவரிடம் விடைபெற்றபோது, என்னிடம் அவர் எங்கு செல்கிறீர்கள் என்றபோது நான் "பட்டி(கட்டிட)காடு செல்கிறேன் பெரியவரே......." என்று மட்டும் எனது மனது சொல்லிவிட்டு உடம்பு அங்கிருந்து நகர்ந்தாலும், மனது அந்த இடத்தை விட்டு நகரவில்லை ! சமயத்தில் எதை விற்று எதை பெறுகிறோம் என்பதே தெரியவில்லை.........இப்போ சொல்லுங்கள், கிராமம் என்றால் என்ன ?!
 
 
 

Labels : Suresh, Kadalpayanangal, Ennangal, thoughts, real village, village, city, difference

25 comments:

  1. வணக்கம்
    புதுவிதமான தேடுதல். அதனை பதிவாக தந்ததற்க்கு நன்றி.

    தொடருங்கள்.
    http://astrovanakam.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜேஷ் சார் ! உங்களுடன் அன்று பேசியதில் எனக்கு மிகவும் சந்தோசம், விரைவில் உங்களை சந்திக்க ஆவல் !

      Delete
    2. மிகவும் அருமை, அழகான கருத்துகளை திறம்பட சொல்லியுள்ளீர்கள்

      Delete
  2. மற்ற பதிவுகளிருந்து வித்தியாசமான ஆழ்ந்த சிந்தனை... பாராட்டுக்கள்... படிப்பதற்கும் சந்தோசமாக ரம்மியமாக இருந்தது... அதுவே கிராமம்...

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பிடித்தது கண்டு மகிழ்ச்சி, என்ன இருந்தாலும் கிராமம் கிராமம்தான் ! நன்றி தனபாலன் சார் !

      Delete
  3. வித்தியாசமான தேடல் அறிவியல் உலகத்தை சுருக்கி விட்டது சுரேஷ்... ஆனால் அத்தனையும் நகரத்தில் வாழும் உறவுகளால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது...எல்லா வசதிகளும் கிராமத்திலும் , நகரத்திலும் என்றாலும் கிராமத்தில் அனைவரும் உறவுகள் ...யாரைக் கேட்டாலும் யாரையும் தெரியும் நகரத்தில் அடுத்த வீட்டில் வசிப்பவர் யாரெனத் தெரியாது?

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் சகோதரி...... இந்த பெரிய நகரத்தில் பக்கத்துக்கு வீட்டில் வசிப்பவர் யார் என்பது தெரியாது என்பது ஒரு சோகமே ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  4. வித்தியாசமான அருமையான பகிர்வு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்..... இந்த கிராமம் பற்றிய பதிவுகள் எல்லாமே மனதை தூண்டுகின்றன என்பது ஆச்சர்யம்தான், நமது மனதினுள் இந்த கிராமம் அவ்வளவு தூரம் சென்று உள்ளது !

      Delete
  5. ஹா ஹா ஹா உங்கள் தேடலில் கிராமமே நகரமாகிப் போனதா..1 என்னால் ஒன்று சொல்ல முடியும் நகரம் நரகம் ஆகிப் போனாதால் கிராமம் என்பது சொர்க்கம் ஆகிவிட்டது...

    ReplyDelete
    Replies
    1. என்ன அருமையான வார்த்தை சொன்னீர்கள் சீனு...... உண்மைதான் ஒரு நரகத்தில் சந்தோசமாக வாழ்கிறோம் என்ற எண்ணத்துடனேயே எல்லோரும் ! நன்றி !

      Delete
  6. நகரம் என்னும் நரகத்தில் இருந்துகொண்டு பல சொர்க்கங்களை இழந்து கொண்டிருக்கிறோம்... உண்மையில் கிராமம் என்ற ஒன்று இல்லவே இல்லை...

    ReplyDelete
    Replies
    1. இந்த தகவல் தொழில் நுட்ப உலகில் ஆம் நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே.....! நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  7. கிராமம் பற்றி வித்தியாசமான பதிவு.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...... தங்களது கருத்து எனக்கு மகிழ்ச்சி அளித்தது !

      Delete
  8. நகரத்திற்கும் கிராமத்திற்கும் உள்ள பெரிய வித்தியாசம் மனசு கிராமத்தில் இருக்கும் அன்யோன்யம் நகரத்தில் இல்லை. பக்கத்து பிளாட் காரனை தெரியாது. நாயர் கடை டீ யின் சுவை மாலின் டீ க்கு உண்டா ?. என் ஊர் எனும் இறுமாப்பு என் நகரம் என சொல்லும் போது இருக்குதா? வெளி நாட்டிற்கு குடி பெயர்ந்தவர்களை தன் கிராமத்திற்கு செல்லவேண்டும் என்ற ஆசையை கொடுப்பது எது? பட்டிகாட்டை தேடி சிந்தனை களை தூண்டிவிடும் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலாகுமரன் சார்....... நீங்கள் சொல்வது போல எல்லா சுவையும் இருந்தும் அதில் வாழாமல் நகரத்திற்கு அல்லவா எல்லோரும் தேடி வருகிறார்கள். கிராமம் என்பது எல்லோரது மனதிலும் இருக்கிறது என்பது இங்கு கருத்து சொன்ன எல்லோரிடத்திலும் தெரிந்தது !

      Delete
  9. பட்டிக்காட்டை தேடி ஒரு பயணம் !!
    Super :)))

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருஷ்ணா...... எனது எல்லா பதிவையும் விரும்பி படித்து, அதற்க்கு நீங்கள் அளிக்கும் கருத்துக்கு மிகவும் நன்றி !

      Delete
  10. பதிவிற்க்கு பதிவு வித்யாசம். கலக்குகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...... நீங்கள் அளிக்கும் உற்சாகம்தான் காரணம். நீங்கள் இது போல் இடும் கருத்துக்கள்தான் என்னை எழுத தூண்டுகிறது !

      Delete
  11. தமிழ் மணத்தில் ஓட்டு அளித்ததற்கு மிக்க நன்றி சார் !

    ReplyDelete
  12. என் அப்பாவுக்கு அரசாங்க வேலை கிடைத்து இந்த நீராவிலதான் தன் வாழ்க்கையை தொடங்கினார். அந்த ஊர் தலைவரான சுப்ரமணி என்னை வளர்த்தவர். இந்த ஊரில் இருக்கும்போதுதான் நான் பிறந்து 4 வயது வரை வளர்ந்தேன். அந்த ஊரை விட்டு வந்து 34 வருசம் ஆகியும் இன்றும் நல்லது கெட்டதுகளுக்கு எங்களுக்கு தகவல் வரும். அப்பா போய் வருவார்.

    ReplyDelete
    Replies
    1. அது அருமையான ஊர், ஆனால் அது கிராமம் என்ற களையை இழந்து வருகிறது என்பது தெரிந்தது. அது மாப்பிள்ளை ஊர் என்பதால் எனக்கு அதை பற்றி அதிகம் தெரியவில்லை........ஆனாலும் நீங்கள் அதை மிஸ் செய்கிறீர்கள் என்பது புரிகிறது !

      Delete
  13. Nandri Mr. Suresh kumar, your all posts are reading very interesting.

    ReplyDelete