Thursday, October 17, 2013

கடல் பயணங்கள் - ஓய்வு வாரம் !

கடந்த வாரம் முதல் வேலை பளு அதிகம்...... ஒரு மிக முக்கியமான ப்ரொஜெக்டில், சிங்கப்பூரில் இருப்பதால் அதிகாலையில் இருந்து இரவு வரை அதை நன்றாக முடிக்க வேண்டும் என்று உழைத்து வருகிறேன்.

இதனால் அடுத்த வெள்ளி வரை பதிவுகள் எதுவும் போட முடியாமல் இருக்கிறேன். தினமும் எனது பதிவுகளை வாசிப்பவர்கள் நிறைய பேர் எனது தளத்திற்கு வந்து வந்து செல்வதால், இந்த செய்தியை தெரிவிப்பது என்பது அவர்களுக்கு நன்றி சொல்வதாகவும், அவர்களின் சிரமும் எதிர்பார்ப்பும் சற்று குறையும் அல்லவா !

எப்போதுமே ஒரு ஓய்வு என்பது நம்மை புதுப்பித்து கொள்ளவே என்பதற்காகத்தான், இந்த சிறு ஓய்வு கடல் பயணத்தை அடுத்த தளத்திற்கும், இன்னும் மெருகேற்றவும் உதவும் !

நன்றி நண்பரே....... மீண்டும் சிந்திப்போம், விரைவில் !

Thursday, October 10, 2013

ஒரு நெகிழ்வான தருணம்.....

வாழ்வின் சில தருணங்கள் நமது கர்வத்தையும், நாம் கற்று வைத்து இருந்ததையும் அழித்து...... நீங்கள் இன்னும் முட்டாள்தான், இன்னும் இந்த அழகான வாழ்வை புரிந்துக்கொள்ளவில்லை என்று தலையில் தட்டும், அது போன்ற ஒரு தருணத்தை இங்கே பகிர்ந்தே ஆக வேண்டும் என்று நினைத்தேன். இன்று திருமணம் என்பது நமது அந்தஸ்தை காட்டுவதாகவும், பகட்டை வெளிபடுதுவதாகவும் அமைத்திருக்கிறது. ஒரு வாரம் முன்பிருந்தே, என்ன நகை போடுவது, எதை அணிவது, காரில் போகலாமா, என்று ஆயிரம் கேள்விகள் வருகிறது. இதுவரை நான் எத்தனையோ திருமணங்களுக்கு சென்றிருந்தாலும், சமீபத்தில் நான் சென்ற ஒரு திருமணம் எனது மனதை செதுக்கி, வாழ்வில் அற்புதமான தருணங்கள் பணத்தால் ஆனதில்லை, அது அன்பினால் மட்டுமே ஆனது என்று புரியவைத்தது.
 
 

எனது மேலாளரின் மகளுக்கு சென்னையில் திருமணம் என்று பத்திரிக்கை வைத்தார். எங்களது அலுவலகமே ஒரு முறை எழுந்து அடங்கியது ! அவர் பொதுவாகவே வசதியானவர், பரம்பரை சொத்துக்கள் வேறு, அதனால் இந்த திருமணம் ஒரு ஆடம்பர விழா போலவே இருக்கும் என்பது நிச்சயம். எல்லோரும் அவருக்கு என்ன செய்வது, அவரிடம் இல்லாதது என்ன, எப்படி செல்வது, யார் கூட வருகிறார்கள் என்று ஒரு பட்டிமன்றம் வைக்க தயாரானார்கள். நான் அந்த வாரமே வேலை நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால், எனது நண்பரிடம் என்னையும் எதிலும் 
சேர்த்துக்கொள்ள சொல்லிவிட்டேன். திரும்ப வந்து பார்த்தால்....எல்லோரும் 
ஒவ்வொரு குழு அமைத்து இருந்தனர், நானும் எனது நண்பரும் 
மட்டுமே தனித்து விடபட்டிருந்தோம். ஆகையால், நாங்கள் எங்கள் வழியில்
செல்வதாக முடிவானது......ஆண்டவன் எதற்கு இந்த சூழ்நிலையை 
உருவாக்கினான் என்று  முடிவில் தெரிந்தபோது மனது சந்தோசமானது !
 
 

பெங்களூரில் இருந்து காரில் நானும் எனது நண்பரும் இரண்டு நாட்களுக்கு முன்பே தயாரானோம், நகை, உடை என்று நாங்கள் எங்களது செல்வாக்கை காட்டி இருந்தோம். மொய் வைப்பதற்கு என்று ஆளுக்கு ஆயிரம் ரூபாய் எடுத்துகொண்டோம். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு மிக பெரிய திருமண மண்டபம், முழுவதும் குளு குளு வசதியுடன், பார்கிங் என்று பிரமாண்டம் எல்லா இடத்திலும். பையன் லண்டனில் சாப்ட்வேர் இன்ஜினியர், அதனால் நிச்சயம் செய்வதற்கு முன்னரே ஒரு வாரம் விடுமுறையில் வந்திருந்து அவளுக்கு எல்லா பரிசினையும் கொண்டு வந்திருந்தான், தினமும் வீடியோவில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர், ஹனி மூனிற்கு சுவிட்சர்லாந்த் செல்ல திட்டம்  என்று அங்கிருந்த ஒருவர் சொல்லிகொண்டிருந்தார். மேடையில் எவரையும் நெருங்க விடவில்லை, மணபெண், பையன் குடும்பத்தினர் மட்டுமே, மற்ற எல்லோரும் தூரத்தில் இருந்து பார்க்க மட்டுமே அனுமதி. கையில் கொண்டு சென்றிருந்த மொய் பணம் கொடுக்கலாம் என்றால், எனது மேலாளர் அது எல்லாம் வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். முடிவில் எங்களை அவர் கண்டு கொண்டாரா என்பதே சந்தேகமாக இருந்தது.....நண்பரும் நானும் அந்த பகட்டில் இருந்து கழட்டி கொண்டு வந்தோம், மனது பாரமாக இருந்தது.
 
 

காரில் வந்து உட்கார்ந்து எங்கே செல்லலாம் என்று யோசித்தபோது கையில் பட்டது அந்த கல்யாண பத்திரிக்கை. நேற்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒருவரை சந்திக்க சென்றிருந்தபோது வழியில் சந்தித்த வேறு ஒரு மனிதர் கொடுத்த பத்திரிக்கை ! ஒரே பக்கம் அச்சடிக்கப்பட்டது, காகிதம் மிகவும் சுமார் என்பது பார்த்தாலே தெரிந்தது. பத்திரிக்கையை எனது கையில் திணித்த அந்த தருணத்தை நினைத்து பார்த்தேன்...

வெயிலுக்கு இளநீர் சாப்பிடலாம் என்று நானும் எனது நண்பரும் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது, தூரத்தில் இருந்து 50 ~ 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வேகநடையில் வந்து "நீங்க சுரேஷ் சார்தான...?" என்று கேட்டபோது அவரை மேலிருந்து கீழ் பார்த்தேன். அவர் நான் எட்டு வருடத்திற்கு முன் வேலை செய்த கம்பெனியில், வேலை பார்த்த செக்யூரிட்டி / வாட்ச்மேன் திரு.சாமிபிள்ளை. அயராத உழைப்பாளி, நேர்மையானவர். அவரை கண்டு ஆச்சர்யம் ஆகி குசலம் விசாரித்து கொண்டிருந்தபோது, சட்டென்று ஒரு கல்யாண பத்திரிக்கையை எனது கையில் திணித்தார், என்னோட மகளுக்கு கல்யாணம், பக்கத்தில் இருக்கிற திருநீர்மலையிலே என்றும், கண்டிப்பாக வரவேண்டும் என்று கோரிக்கை வைத்த பத்திரிக்கை. அவர் முன் தூக்கி எறிய மனம் இல்லாமல் காரில் வைத்திருந்தது.....இப்பொழுது எனது கையில் ! நண்பரை பார்த்தேன், சரி அப்படியே கோவிலுக்கு போகலாமா....மனசே சரியில்லை என்று கிளம்பினோம்.
 

எங்களது கார் கோவில் முன்பு நிறுத்திவிட்டு மண்டபம் எங்கே என்று பத்திரிக்கையை பார்த்தால் அதில் மொட்டையாக திருநீர்மலை என்று மட்டுமே இருந்தது, தலையை சொறிந்துகொண்டு நின்றுந்தபோது....
"சார்...சார்...வாங்க" என்று குரல் வந்தது. சாமிபிள்ளை அவர்கள் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்து கொண்டிருந்தார், நீங்க வருவீங்கன்னு நினைக்கலை என்று முகம் முழுவதும் சந்தோசத்துடன். அவரை நாங்கள் பார்த்து எங்கே மண்டபம் என்றால்....என் வசதிக்கு அதெல்லாம் முடியுமா சார், இதோ கோவிலுக்கு முன்னதான் கல்யாணம் என்றபோது சட்டென்று எழுந்து அடங்கியது அந்த குளு குளு வசதியுடன் இருந்த கல்யாண மண்டபத்தின் அலங்காரம். மாப்பிள்ளை ஆட்டோ ஓட்டறார், ஏதோ என் வசதிக்கு தாலிக்கு தங்கம் வாங்கினேன். இதோ மாலை, ரெண்டு பாத்திரம், பாய் தலையணை....அவ்வளவுதான் என்றபோது எனது மேலாளர் வீட்டு திருமணத்தில் இருந்த பாத்திரபண்டங்கள் எண்ண முடியாமல் தவித்ததும், மகளுக்கு தலையிலிருந்து கால் வரை போட்டிருந்த தங்கமும் நினைவுக்கு வந்தது. அங்கு வந்திருந்தது மொத்தமே 15 பேர்தான் இருப்பார்கள், மாப்பிளையின் நண்பர்கள் ஸ்கூல் சவாரி முடிந்தவுடன் வருவார்கள் என்றார்.
 
 

மாப்பிளையிடம் எங்களை அறிமுகபடுத்தினார், அவரிடத்தில் எப்படி இருக்கீங்க, நிச்சயம் எப்படி எங்க நடந்திச்சு என்றபோது அவர் கொட்ட ஆரம்பித்த தகவல்கள் எங்கள் ஆடம்பரத்தின் முதுகில் சுளீரென்று தாக்கியது.... நிச்சயம் முடிந்தவுடன் அவர் கஷ்டப்பட்டு உபயோகித்த போன் ஒன்றை வாங்கி தந்து, அதில் தெரியாமல் அழுத்தி காசு போனதால், வீட்டுக்கு தெரியாமல் பார்க்க போனது, கடையில் வாங்கிய ஸ்வீட் கொடுத்தது, மல்லிகைபூ கொடுத்தது, கண்ணாடி வளையல் போட்டு விட்டது, டீ கடையில் இருந்து கொண்டு நேயர் விருப்பமாக பாட்டு போடுங்கள் என்று காதல் பரிமாறியது என்று சுவாரசியமாக சொன்னார். முடிவில் அவர் கட்டிய மஞ்சள் தாலியில் தேடி கண்டுபிடிக்கும் படியாக இருந்த தங்கம் அந்த மணமகளின் புன்னகைக்கு முன்பு சற்று குறைவாகத்தான் மின்னியது. முடிவில் அங்கு இருந்த பரோட்டா கடையில் எல்லோருக்கும் சாப்பாடு என்று கூட்டி சென்று எங்களுக்கு "சாருக்கு முறுகலா ஒரு தோசை....." என்று சாமிபிள்ளை சந்தோசமாக சொன்னபோது எனக்கு கண்ணீர் முட்டியது. முடிவில் கை கழுவி கொண்டு நான் அங்கு தராமல் வைத்திருந்த மொய் பண கவரை கையில் வைத்திருந்து என் நண்பரை பார்த்தபோது, அவர் அதை சட்டென்று என்னிடமிருந்து வாங்கி சாமிபிள்ளையிடம் கொடுத்தார். திறந்து பார்த்த அவர் "ஐயோ, என்ன சார் இவ்வளவு பணம்" என்று கண்ணை அகலமாக திறக்க......என்னால் சொல்ல முடியவில்லை, வெகு நாட்களாக பணம் தேடி ஓடி கொண்டு இருக்கும் என்னை, அவர் வாழ்வில் சில நிமிடங்களில் பணம் தாண்டி நிறைய இருக்கிறது என்று புரிய வைத்ததை.
 
Labels : Suresh, Kadalpayanangal, Ennangal, Thoughts, moments

Wednesday, October 9, 2013

சாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 2)

சென்ற வாரத்தில் ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 1) பார்த்தீர்கள், எப்படி இருந்தது ?! பொதுவாக எந்த மிருக காட்சி சாலை சென்றாலும் மிருகங்கள் எல்லாம் கூண்டுக்குள் அல்லது வெளியே வர முடியாதபடி இருக்கிறது என்று நம்பிக்கை இருக்கும், அதனால் நீங்கள் அமைதியாக செல்லலாம். ஆனால், இங்கு மிருகங்கள் சுகமாக திரிவதால், எந்த நேரத்தில் என்ன செய்யும் என்று தெரியவில்லை என்பதுதான் நிஜம், அந்த த்ரில் இந்த சபாரியில் இருக்கிறது என்று கண்டிப்பாக சொல்லலாம் ! நான் சென்ற வாகனத்தின் டிரைவர், ஒரு இடத்தில் (பாதுகாப்பான இடம்தான்) நிறுத்தி இயற்க்கை உபாதையை கழிக்க சென்று விட்டு வரும்போது, முன்னே இருந்த ஒரு காருக்கு சென்று என்னவோ பேசிவிட்டு வந்தார், அவர்கள் உடனே அந்த காரின் பின்னே இருந்த டயரை கழட்டி உள்ளே போட்டனர், வந்தவரிடம் விசாரித்தபோது சில சமயங்களில் சிங்கங்கள் அதில் தொங்கி கொண்டே விளையாடும், இதனால் அதன் வெயிட் தாங்காமல் கதவு பியித்து கொண்ட நிகழ்வு எல்லாம் உண்டு, அதனால் அவர்களை எச்சரித்தேன் என்றபோது சிறிது நடுக்கமாகதான் இருந்தது !  

 
 
எல்லா இடத்திலும் நுழையும்போது எந்த விதமான உணர்வும் எழவில்லை, ஆனால் இந்த வெள்ளை சிங்கம் பார்க்க போகும்போது மட்டும் மனதில் ஒரு ஆர்வம் எழுந்தது. சென்ற வாரத்தில் அந்த வெள்ளை சிங்கம் இடத்தில நிறுத்தி, அங்கு வளர்ந்து இருந்த காய்ந்த புல்லுக்கு இடையில் தெரிந்தும் தெரியாமல் இருந்த வெள்ளை சிங்கத்தை எண்ண ஆரம்பித்து இருந்ததை சொல்லி இருந்தேன் அல்லவா...... சுமார் பதினைந்து சிங்கங்கள் அங்கே ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தது. சில சிங்கங்கள் நாங்கள் வந்த வாகனத்தை சோம்பலுடன் பார்த்து படுத்துக்கொண்டது. எங்களை போல நிறைய பேர் இப்படி வண்டியின் உள்ளே இருந்து போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர் ! அதை முடித்த பின்பு பிரவுன் சிங்கம் பார்க்க கிளம்பினால் எளிதில் கிடைக்கவில்லை, கடைசியில் ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தவரை பார்த்து படம் எடுத்துக்கொண்டோம். எழுந்து நின்றபோது அதன் கம்பீரம் ஆளை அசத்துகிறது !
 
 
 
 

பின்னர் தூரத்தில் நெருப்பு கோழிகளும், மான் இனங்களும் இருந்தது கண்டு அங்கு விரைந்தோம். நாங்கள் செல்லும் வழியிலேயே ஒரு நெருப்பு கோழி வாக்கிங் சென்று கொண்டு இருந்தது. எங்களது வண்டி மிக நெருக்கத்தில் சென்றபோது ஜன்னல் கதவை திறந்து நான் எடுத்த போட்டோ பாருங்கள். எங்களை திரும்பி பார்த்தாலும், ஒன்றும் செய்யாமல் விட்டது ! அப்படியே அது போல நிறைய நெருப்பு கோழிகள் இருந்த இடத்தை அடைந்து அது செல்ல சண்டைகள் போட்டதை பார்க்க ஆனந்தமாக இருந்தது.


 
 
 
பின்னர் ஆப்ரிக்காவில் மிகவும் பிரபலமான காண்டா மிருகம் பார்க்க வண்டியை எடுத்தோம். காண்டா மிருகங்கள் அவ்வளவாக வேகமாக நகராமல் இருக்கும், இதனால் எல்லோரும் எல்லா மிருகத்தை பார்த்தபின் மெதுவாகத்தான் அந்த இடத்தை அடைகின்றனர். நான் சென்று இருந்த போது சாப்பாடு நேரம், அங்கு மந்தை மந்தையாக காட்டெருமை கூட்டமும், காண்டா மிருகமும் இருந்தது. பெரிய காண்டா மிருகம் மெதுவாக போட்டதை சாப்பிட்டு இருக்க, சின்ன காண்டா மிருகம் ஒரு காட்டெருமை உடன் சண்டை போட்டு கொண்டு இருந்தது மிகவும் வேடிக்கை. ஆப்ரிக்காவில் இந்த காண்டா மிருக கொம்புகள் மருத்துவ குணம் உள்ளது என்று கருதபடுவதால், இதை கொள்பவர்கள் அதிகம், இதனால் அதை எதிர்ப்பவர்கள் காண்டா மிருகம் கொம்பை போலவே பிளாஸ்டிக்கில் சிகப்பு நிறத்தில் காருக்கு முன்னே வைத்து கொண்டு செல்வதை பார்க்கலாம் ! இப்படி பார்த்துக்கொண்டே செல்லும்போது, காரின் கதவை திறந்து கீழே இறங்கி போட்டோ எடுக்க வேண்டும் என்றபோது டிரைவர் என்னை எச்சரித்தார், இதனால் கதவை மட்டும் திறந்து கொண்டு கீழே இறங்காமல் ஒரு போஸ் !
  
 
அடுத்து நாங்கள் சென்றது மிகவும் த்ரில்லிங் ஆன இடம் ........ சரி, அதை அடுத்த பகுதியில் பார்ப்போமே ! அதுவரை இந்த காட்சிகளை ரசிதிருங்களேன் !!
 
 

 
 Labels : Suresh, Kadalpayanangal, Africa, Safari, Thrilling, Adventure, trip

Tuesday, October 8, 2013

அறுசுவை - வானம் தொட்டு ஒரு பீர் !!

இந்த பதிவுலகத்தில் நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கின்றனர், இப்போதெல்லாம் நிறைய பேர் போன் செய்து பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது, அப்படி எனது பதிவுகளை படித்து நல்ல நண்பரான வினோத் அவர்களுடன் சிங்கப்பூரில் ஒரு நாள் பார்த்து பேசலாம் (இன்னொரு இனிய நண்பரும் இருக்கிறார், ஆனால் பதிவில் பெயர் சொல்ல வேண்டாம் என்று இனிய கட்டளை !) என்று விருப்பப்பட்டேன். இவர் மாரத்தான் ஓடுவதில் வல்லவர் ! ஒரு இனிய மாலை பொழுதில் அவரை சந்திக்க சென்றேன். ஒரு பீர் அடித்தாலே நான் எல்லாம் பத்து மாடி பறக்கும் எபக்ட் கிடைக்கிறது என்பவன். அவருடன் இரவு உணவு அருந்தி கொண்டு இருக்கும்போது பாஸ், வாங்க உங்களை ஒரு இடத்திற்கு கூட்டி செல்கிறேன், நீங்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றார்..... உண்மைதான் அது !சிங்கப்பூர் நண்பர் வினோத்......!
 


ஒரு பீர் அடிக்க வேண்டும் என்றால் நமது ஊரில் எல்லாம் டாஸ்மாக் சென்று அந்த இருட்டில் எல்லாவற்றையும் மிதித்து கொண்டு செல்ல வேண்டும், பெங்களுருவில் சில பப் சென்றால் காதை கிழிக்கும் இசையுடன் அந்த பீரை குடித்து முடிக்கும் முன் உங்களுக்கு காதில் வலி வரும்..... ஆனால் முதல் முறையாக வினோத் அவர்கள் என்னை வாங்க பாஸ் என்று அல்பிரஸ்கோ (Alfresco) பார் ஒன்றிற்கு கூட்டி சென்றார். அதாவது, வானம் உங்களை தடவ, சில்லென்று வீசும் காற்று உங்களது முகத்தை அறைய, தங்கமாய் ஜொலிக்கும் நகரத்தை அந்த இனிய மாலை வேளையில் ஒரு பீர் கையில் இருக்க ஒரு மிக பெரிய கட்டிடத்தின் மொட்டை மாடியில் பேசி கொண்டே சாப்பிடுவது அல்பிரஸ்கோ (Alfresco) பார் என்கிறார்கள். பெங்களுருவில் UB சிட்டி என்னும் இடத்தில skyye என்னும் பார் இது போல் உள்ளது ! உலகிலேயே இதுதான் மிக உயரமான இடத்தில இருக்கும் பார் என்பது இதன் சிறப்பு !
முதலில் கீழ் தளத்தில் உள்ளே நுழையும்போது என்ன வேண்டும் என்று கேட்டு பத்து மடங்கு பீர் விலையை வாங்கி கொண்டனர். பின்னர் லிப்ட் உள்ளே நுழைந்து 62வது மாடியில் இறங்கும் போது காது ரெண்டும் கொய் என்று இருந்தது. அதுதான் மொட்டை மாடி பார் என்று நினைத்து கொண்டு இருக்கும்போது இன்னொரு சிறிய லிப்டில் உங்களை ஏற்றி விடுகிறார்கள், அது மொட்டை மாடி சென்று திறக்கும்போதே உங்களுக்கு அந்த இசையும், குளிர்ந்த காற்றும் இதம் தருமாறு வீசுகிறது. அங்கு இருந்து பார்க்கும்போது வானம் மிக தெளிவாக இருப்பதாக பட்டது (இருங்க.... நான் இன்னும் பீர் சாப்பிடவே இல்லை !!). அங்கு இருந்து பார்த்தபோது சிங்கப்பூர் அந்த இரவின் வெளிச்சத்தில் மிக அமைதியாக இருந்தது. வினோத் வந்து ஒரு பீரை கையில் கொடுத்து விட்டு சியர்ஸ் சொல்ல, முதல் மடக்கு உள்ளே இறங்கும்போதே அந்த சூழலும், பிரமிப்பும் அகல மறுக்கிறது. உலகிலேயே உயரமான ஒரு பாரில் இப்படி பீர் சாப்பிடுகிறோம் என்ற நினைப்பே கிக் தருகிறது.

 

 


சிங்கப்பூரின் அழகிய தோற்றம்....இரவினில்.......

 
 
மெல்லிய காற்று உங்களை தழுவ, சிங்கப்பூரின் ஒரு உயரமான கட்டிடத்தில் இப்படி நண்பருடன் பீர் சாப்பிட்டு இருக்கும் பொழுதுகள் எல்லாம் எவ்வளவு அருமை என்று சொல்ல வேண்டுமா ?! இது போன்ற நட்புகளை அறிமுகபடுத்தும் பதிவுலகத்திற்கு எத்தனை நன்றி சொல்வது ! பீர் சாப்பிட்டாலும் இங்க இப்படி சாப்பிடனும் பாஸ்........ மறக்காம போயிட்டு வாங்க.

 

 
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Alfresco bar, Singapore, Beer

Friday, October 4, 2013

ஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)

சென்ற வாரம் "கரூர் திரைசீலை (பகுதி - 1)" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர், எல்லோருக்கும் மிக்க நன்றி ! இவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி போய் எழுதும் பதிவுகளை ரசிப்பீர்களோ என்று நினைத்தேன், உங்களது ஆதரவு என்னை மேலும் இது போல எழுத தூண்டுகிறது !! சரி வாருங்கள் இந்த வாரம் நாம் அந்த திரைசீலையை எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம். சென்ற வாரம் ஒரு நூல் எந்த அளவு வாங்க வேண்டும், அது எப்படி வரும், அதை எப்படி ஒரு கோன் வடிவில் சுற்றுகிறார்கள் என்று பார்த்தோம். இந்த வாரம் வாருங்கள் ஒரு திரைசீலை எப்படி தயாராகிறது என்று பார்க்கலாம். இப்படி கோன் போன்று சுற்றப்பட்ட நூல் ஒரே அளவுள்ளதாக இருப்பது என்பது மிகவும் முக்கியம். ஒரு திரைசீலையின் அளவு பொறுத்து எவ்வளவு நூல் வேண்டும் என்பது முடிவாகும்.
ஒரு திரைசீலை எப்படி தயாராகிறது என்று நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். திரைசீலை என்பது குறுக்கும் நெடுக்குமாக செல்லும் நூல், அந்த குறுக்கும் நெடுக்கும் என்பதை இங்கே வார்ப் (Warp) மற்றும் வெப்ட் (Wept) என்கிறார்கள். இதில் டிசைன் என்பது எந்த இடத்தின் நூலை மேலே தூக்குகின்றோமோ, அதில் இந்த குறுக்கே செல்லும் நூல் மேலே தெரியும், மற்ற இடங்களில் அது கீழே சென்று விடும். இதனால்தான் திரைசீளைகளில் ஒரு புறம் மங்கலாக தெரியும் பூ வேலைபாடுகள், திருப்பி பார்க்கும்போது நன்றாக பளிச்சென்று தெரியும். இந்த வெப்ட் என்னும் நூலை (குறுக்கு நூல்) கொண்டு செல்வது ஷட்டில் (shuttle) எனப்படும். இவ்வளவு இப்போதைக்கு தெரிந்தால் போதும்.


ஒரு எட்டடி கொண்ட திரைசீலை தயாராகிறது என்றால் அதற்க்கு சுமார் மூவாயிரம் நூல் (அடி கணக்கு அல்ல..... ஒவ்வொரு நூலாக மூவாயிரம்) வேண்டும். அது முடிவானவுடன், அதை ஒரு யந்திரத்தின் உதவியுடன் ஒரு ரோலரில் சுற்றுவார்கள். இதைதான் வார்ப் என்கிறோம், இதில் மிக முக்கியமானது எந்த நூலும் அறுந்து விட கூடாது. மெதுவாக இதை சுற்றுவார்கள். எவ்வளவு அடி சுற்றுகிறோமோ அத்தனை அடி துணி கிடைப்பதால், மிகவும் கவனமாக சுற்றுவார்கள்.
இதற்க்கு பின்னர் இந்த நூலை மெசினில் கொண்டு சேர்க்க வேண்டும். அதை அப்படியே மெசினில் எடுத்து விட முடியாது. ஒவ்வொரு நூலும் சரியான துளை வழியாக கொண்டு செல்ல வேண்டும், அதை ஐ (eye) என்பார்கள். இந்த துளை வழியாக மூவாயிரம் நூலையும் கொண்டு செல்ல வேண்டும்...... ஒவ்வொரு நூலுக்கும், ஒவ்வொரு துளை ! இந்த வேலை ரொம்ப கஷ்டம்...... சில நேரங்களில் நாள் கணக்கில் கூட செய்வார்கள் !
இதை செய்து முடித்தவுடன், இந்த துளை இருக்கும் சட்டத்தை அப்படியே தூக்கி மெசினில் பொருத்தி விடுவார்கள். இப்போது, அந்த நூலை அடுத்த பகுதியில் இருக்கும் ஒரு உருளையில் நன்கு பிணைத்து விட வேண்டும். இப்போது நெடுக்கு நூல் ரெடி, குறுக்கு நூல் எப்படி செய்வது ?! நூலை குறுக்கே எடுத்து செல்வது ஷட்டில் எனப்படும் ஒரு சாதனம். பொதுவாக இந்த குறுக்கு நூலை எவ்வளவு சீக்கிரம் எடுத்து செல்கிறோமோ, அவ்வளவு விரைவாக துணி கிடைக்கும். உதாரணமாக, கைகளின் மூலமாக நீங்கள் இந்த நூலை இடையில் நுழைத்து எடுத்து சென்றால் இரண்டு நிமிடம் ஆகலாம், அதுவே ஒரு மெசின் மூலம் செய்தால் இரண்டு நொடி ஆகலாம்....... இந்த இரண்டு நொடி கூட மிகவும் அதிகம் இப்படிப்பட்ட தொழிற்சாலைகளில் !! ஆகவே நிறைய நிறைய டெக்னாலஜி வந்து இருக்கிறது...... Single rigid, Double rigid, Telescope, Projectile, Air jet, Water jet என்று நிறைய தொழில் நுட்பம் இருக்கிறது, ஒவ்வொன்றிலும் இந்த குறுக்கு நூல் செலுத்தும் டைம் மிகவும் கம்மி, இதன் பயன் என்பது ஒரு மீட்டர் துணி செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதுதான். நாம் இந்த ஷட்டில் முறையில் செய்யப்படும் துணிகளை பார்க்கும்போது, அதன் உள்ளே ஒரு நூல் இருக்கும், அதை வெளியே தனியே எடுத்து சுற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் இப்படி நூல் மாற்ற வேண்டும், இப்போது அதற்கும் ஆட்டோமாடிக் வந்து விட்டது !


அன்றைய திரைசீலைகள் எல்லாம் பிளைன் முறையில் தயார் செய்யப்பட்டது. இன்று எல்லாவற்றிலும் டிசைன் கேட்பதால், ஜக்கார்ட் முறையில் செய்கிறார்கள்.  ஜக்கார்ட் முறை பற்றி நிறைய சொல்ல வேண்டும் என்று எனக்கு ஆசைதான், ஆனால் இந்த பதிவில் அதை பார்க்காமல், நான் அடுத்து எழுத போகும் "சென்னிமலை போர்வை" பற்ற பதிவில் அதை பற்றி பார்ப்போமே !  இப்போது நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டால் போதும், ஒரு நூல் மேலே கீழே சென்று வரும்போது, குறுக்கே செல்லும் நூல் அப்படி போகும்போது இங்கு துணி உருவாகிறது. நீங்கள் இப்போது போட்டு இருக்கும் ஷர்ட் துணி கூட அப்படி செய்யப்பட்டதுதான். ஒரு திரைசீலை உருவாக எவ்வளவு உழைப்பு தேவை படுகிறது பாருங்கள் !! சரி, வாங்க அதை விற்கும் இடத்திற்கு சென்று பார்க்கலாம் ! 
 
இந்த திரைசீலை தயாரிப்பு, லூம் பற்றி எல்லாம் மேலும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்........ http://www.youtube.com/watch?v=TyhDkd8Iabs
 
சரி, பெரும் தொழிலாக இதை செய்தால் எப்படி இருக்கும், என்பதை காண்பித்தேன், அதையே சிறு தொழிலாக செய்ய முடியுமா, லாபம் இருக்குமா என்று கேட்பவர்களுக்கு, கீழே இருக்கும் படத்தை பாருங்கள்........ நீங்கள் எவ்வளவு திரைசீலை தயாரிக்கிரீர்களோ, எந்த தரத்தில் தயாராகிறதோ அவ்வளவு விலை. ஆகையால், இங்கே கரூரில் வீட்டிற்க்கு வீடு திரைசீலை தயாரிப்பது என்று இருக்கிறது. செய்யும் முறை எல்லாம் ஒன்றுதான் ஆனால் இங்கு சிறிய மெசினில்..... இதனால் ஒரு மீட்டர் செய்வதற்கு சிறிது நேரம் அதிகமாகும் !
 


 
இப்படி அலைந்து திரிந்து திரைசீலை தயார் செய்ததை பார்த்துவிட்டு நான் விடைபெறும் நேரம், நான் அது எப்படி ஏற்றுமதியாகிறது என்று பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன் என்னுடன் ஒருவரை அனுப்பி ஒரு ஏற்றுமதி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார். எப்போது துணிக்கடைக்கு சென்றாலும் சுமார் நூறு அல்லது ஐநூறு திரைசீலைகளை மட்டுமே பார்த்த எனக்கு ஆயிரம் ஆயிரமாய் இப்படி கொட்டி கிடக்கும் திரைசீலைகளை பார்த்ததில் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எல்லா டிசைன், நூல் வகை, கலர் என்று அடுக்கி வைத்து இருந்தனர். அதை பற்றி அவர்களிடம் விரிவாக விவாதித்தேன்...... எப்படி அது சந்தைபடுகிறது, எங்கு செல்கிறது, எப்படி ஆர்டர் கிடைக்கிறது என்றெல்லாம். அதை எல்லாம் இங்கே எழுதினால் அது உங்களுக்கு போர் அடித்து விடும் என்பதால், இதோ இந்த படத்தை பார்த்து கரூர் ஏன் திரைசீலைக்கு பெயர் பெற்று இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் !


 
 
Labels : Oor Special, Karur, Screens, Thiraiseelai, Suresh, Kadalpayanangal, District, Part 2