Thursday, October 10, 2013

ஒரு நெகிழ்வான தருணம்.....

வாழ்வின் சில தருணங்கள் நமது கர்வத்தையும், நாம் கற்று வைத்து இருந்ததையும் அழித்து...... நீங்கள் இன்னும் முட்டாள்தான், இன்னும் இந்த அழகான வாழ்வை புரிந்துக்கொள்ளவில்லை என்று தலையில் தட்டும், அது போன்ற ஒரு தருணத்தை இங்கே பகிர்ந்தே ஆக வேண்டும் என்று நினைத்தேன். இன்று திருமணம் என்பது நமது அந்தஸ்தை காட்டுவதாகவும், பகட்டை வெளிபடுதுவதாகவும் அமைத்திருக்கிறது. ஒரு வாரம் முன்பிருந்தே, என்ன நகை போடுவது, எதை அணிவது, காரில் போகலாமா, என்று ஆயிரம் கேள்விகள் வருகிறது. இதுவரை நான் எத்தனையோ திருமணங்களுக்கு சென்றிருந்தாலும், சமீபத்தில் நான் சென்ற ஒரு திருமணம் எனது மனதை செதுக்கி, வாழ்வில் அற்புதமான தருணங்கள் பணத்தால் ஆனதில்லை, அது அன்பினால் மட்டுமே ஆனது என்று புரியவைத்தது.
 
 

எனது மேலாளரின் மகளுக்கு சென்னையில் திருமணம் என்று பத்திரிக்கை வைத்தார். எங்களது அலுவலகமே ஒரு முறை எழுந்து அடங்கியது ! அவர் பொதுவாகவே வசதியானவர், பரம்பரை சொத்துக்கள் வேறு, அதனால் இந்த திருமணம் ஒரு ஆடம்பர விழா போலவே இருக்கும் என்பது நிச்சயம். எல்லோரும் அவருக்கு என்ன செய்வது, அவரிடம் இல்லாதது என்ன, எப்படி செல்வது, யார் கூட வருகிறார்கள் என்று ஒரு பட்டிமன்றம் வைக்க தயாரானார்கள். நான் அந்த வாரமே வேலை நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால், எனது நண்பரிடம் என்னையும் எதிலும் 
சேர்த்துக்கொள்ள சொல்லிவிட்டேன். திரும்ப வந்து பார்த்தால்....எல்லோரும் 
ஒவ்வொரு குழு அமைத்து இருந்தனர், நானும் எனது நண்பரும் 
மட்டுமே தனித்து விடபட்டிருந்தோம். ஆகையால், நாங்கள் எங்கள் வழியில்
செல்வதாக முடிவானது......ஆண்டவன் எதற்கு இந்த சூழ்நிலையை 
உருவாக்கினான் என்று  முடிவில் தெரிந்தபோது மனது சந்தோசமானது !
 
 

பெங்களூரில் இருந்து காரில் நானும் எனது நண்பரும் இரண்டு நாட்களுக்கு முன்பே தயாரானோம், நகை, உடை என்று நாங்கள் எங்களது செல்வாக்கை காட்டி இருந்தோம். மொய் வைப்பதற்கு என்று ஆளுக்கு ஆயிரம் ரூபாய் எடுத்துகொண்டோம். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு மிக பெரிய திருமண மண்டபம், முழுவதும் குளு குளு வசதியுடன், பார்கிங் என்று பிரமாண்டம் எல்லா இடத்திலும். பையன் லண்டனில் சாப்ட்வேர் இன்ஜினியர், அதனால் நிச்சயம் செய்வதற்கு முன்னரே ஒரு வாரம் விடுமுறையில் வந்திருந்து அவளுக்கு எல்லா பரிசினையும் கொண்டு வந்திருந்தான், தினமும் வீடியோவில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர், ஹனி மூனிற்கு சுவிட்சர்லாந்த் செல்ல திட்டம்  என்று அங்கிருந்த ஒருவர் சொல்லிகொண்டிருந்தார். மேடையில் எவரையும் நெருங்க விடவில்லை, மணபெண், பையன் குடும்பத்தினர் மட்டுமே, மற்ற எல்லோரும் தூரத்தில் இருந்து பார்க்க மட்டுமே அனுமதி. கையில் கொண்டு சென்றிருந்த மொய் பணம் கொடுக்கலாம் என்றால், எனது மேலாளர் அது எல்லாம் வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். முடிவில் எங்களை அவர் கண்டு கொண்டாரா என்பதே சந்தேகமாக இருந்தது.....நண்பரும் நானும் அந்த பகட்டில் இருந்து கழட்டி கொண்டு வந்தோம், மனது பாரமாக இருந்தது.
 
 

காரில் வந்து உட்கார்ந்து எங்கே செல்லலாம் என்று யோசித்தபோது கையில் பட்டது அந்த கல்யாண பத்திரிக்கை. நேற்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒருவரை சந்திக்க சென்றிருந்தபோது வழியில் சந்தித்த வேறு ஒரு மனிதர் கொடுத்த பத்திரிக்கை ! ஒரே பக்கம் அச்சடிக்கப்பட்டது, காகிதம் மிகவும் சுமார் என்பது பார்த்தாலே தெரிந்தது. பத்திரிக்கையை எனது கையில் திணித்த அந்த தருணத்தை நினைத்து பார்த்தேன்...

வெயிலுக்கு இளநீர் சாப்பிடலாம் என்று நானும் எனது நண்பரும் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது, தூரத்தில் இருந்து 50 ~ 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வேகநடையில் வந்து "நீங்க சுரேஷ் சார்தான...?" என்று கேட்டபோது அவரை மேலிருந்து கீழ் பார்த்தேன். அவர் நான் எட்டு வருடத்திற்கு முன் வேலை செய்த கம்பெனியில், வேலை பார்த்த செக்யூரிட்டி / வாட்ச்மேன் திரு.சாமிபிள்ளை. அயராத உழைப்பாளி, நேர்மையானவர். அவரை கண்டு ஆச்சர்யம் ஆகி குசலம் விசாரித்து கொண்டிருந்தபோது, சட்டென்று ஒரு கல்யாண பத்திரிக்கையை எனது கையில் திணித்தார், என்னோட மகளுக்கு கல்யாணம், பக்கத்தில் இருக்கிற திருநீர்மலையிலே என்றும், கண்டிப்பாக வரவேண்டும் என்று கோரிக்கை வைத்த பத்திரிக்கை. அவர் முன் தூக்கி எறிய மனம் இல்லாமல் காரில் வைத்திருந்தது.....இப்பொழுது எனது கையில் ! நண்பரை பார்த்தேன், சரி அப்படியே கோவிலுக்கு போகலாமா....மனசே சரியில்லை என்று கிளம்பினோம்.
 

எங்களது கார் கோவில் முன்பு நிறுத்திவிட்டு மண்டபம் எங்கே என்று பத்திரிக்கையை பார்த்தால் அதில் மொட்டையாக திருநீர்மலை என்று மட்டுமே இருந்தது, தலையை சொறிந்துகொண்டு நின்றுந்தபோது....
"சார்...சார்...வாங்க" என்று குரல் வந்தது. சாமிபிள்ளை அவர்கள் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்து கொண்டிருந்தார், நீங்க வருவீங்கன்னு நினைக்கலை என்று முகம் முழுவதும் சந்தோசத்துடன். அவரை நாங்கள் பார்த்து எங்கே மண்டபம் என்றால்....என் வசதிக்கு அதெல்லாம் முடியுமா சார், இதோ கோவிலுக்கு முன்னதான் கல்யாணம் என்றபோது சட்டென்று எழுந்து அடங்கியது அந்த குளு குளு வசதியுடன் இருந்த கல்யாண மண்டபத்தின் அலங்காரம். மாப்பிள்ளை ஆட்டோ ஓட்டறார், ஏதோ என் வசதிக்கு தாலிக்கு தங்கம் வாங்கினேன். இதோ மாலை, ரெண்டு பாத்திரம், பாய் தலையணை....அவ்வளவுதான் என்றபோது எனது மேலாளர் வீட்டு திருமணத்தில் இருந்த பாத்திரபண்டங்கள் எண்ண முடியாமல் தவித்ததும், மகளுக்கு தலையிலிருந்து கால் வரை போட்டிருந்த தங்கமும் நினைவுக்கு வந்தது. அங்கு வந்திருந்தது மொத்தமே 15 பேர்தான் இருப்பார்கள், மாப்பிளையின் நண்பர்கள் ஸ்கூல் சவாரி முடிந்தவுடன் வருவார்கள் என்றார்.
 
 

மாப்பிளையிடம் எங்களை அறிமுகபடுத்தினார், அவரிடத்தில் எப்படி இருக்கீங்க, நிச்சயம் எப்படி எங்க நடந்திச்சு என்றபோது அவர் கொட்ட ஆரம்பித்த தகவல்கள் எங்கள் ஆடம்பரத்தின் முதுகில் சுளீரென்று தாக்கியது.... நிச்சயம் முடிந்தவுடன் அவர் கஷ்டப்பட்டு உபயோகித்த போன் ஒன்றை வாங்கி தந்து, அதில் தெரியாமல் அழுத்தி காசு போனதால், வீட்டுக்கு தெரியாமல் பார்க்க போனது, கடையில் வாங்கிய ஸ்வீட் கொடுத்தது, மல்லிகைபூ கொடுத்தது, கண்ணாடி வளையல் போட்டு விட்டது, டீ கடையில் இருந்து கொண்டு நேயர் விருப்பமாக பாட்டு போடுங்கள் என்று காதல் பரிமாறியது என்று சுவாரசியமாக சொன்னார். முடிவில் அவர் கட்டிய மஞ்சள் தாலியில் தேடி கண்டுபிடிக்கும் படியாக இருந்த தங்கம் அந்த மணமகளின் புன்னகைக்கு முன்பு சற்று குறைவாகத்தான் மின்னியது. முடிவில் அங்கு இருந்த பரோட்டா கடையில் எல்லோருக்கும் சாப்பாடு என்று கூட்டி சென்று எங்களுக்கு "சாருக்கு முறுகலா ஒரு தோசை....." என்று சாமிபிள்ளை சந்தோசமாக சொன்னபோது எனக்கு கண்ணீர் முட்டியது. முடிவில் கை கழுவி கொண்டு நான் அங்கு தராமல் வைத்திருந்த மொய் பண கவரை கையில் வைத்திருந்து என் நண்பரை பார்த்தபோது, அவர் அதை சட்டென்று என்னிடமிருந்து வாங்கி சாமிபிள்ளையிடம் கொடுத்தார். திறந்து பார்த்த அவர் "ஐயோ, என்ன சார் இவ்வளவு பணம்" என்று கண்ணை அகலமாக திறக்க......என்னால் சொல்ல முடியவில்லை, வெகு நாட்களாக பணம் தேடி ஓடி கொண்டு இருக்கும் என்னை, அவர் வாழ்வில் சில நிமிடங்களில் பணம் தாண்டி நிறைய இருக்கிறது என்று புரிய வைத்ததை.
 
Labels : Suresh, Kadalpayanangal, Ennangal, Thoughts, moments

26 comments:

  1. ஒரே நாளில் இருவேறான திருமணங்கள்... அந்த வசதி படைத்தவர்களின் திருமணத்தில் அன்பு என்பது துளியும் இல்லாமல் போனது வருத்தமே.... அவர்கள் தங்கள் பகட்டைக் காட்டுவதற்காகவே திருமணம் செய்கிறார்கள் போலும்... சாமிபிள்ளையின் அன்புக்கு ஒரு சல்யூட்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.... உண்மைதான் இரு வேறான திருமணங்கள், மனதை நெகிழ்த்தியது உண்மை !

      Delete
  2. உண்மை. இப்படித்தான் எளிய முறையில் நடக்கும் திருமணங்கள் மேலே ஒரிஜனல் சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்டவை!!!!

    39 வருசங்களுக்கு முன் வெறும் 20 ரூபாயில் ஒருகல்யாணம் நடந்து........... இப்பவும் கோயிங் ஸ்டடி: :-)))))

    ReplyDelete
    Replies
    1. வெறும் 20 ரூபாயிலா.... ஆச்சர்யம்தான். இன்று திருமணங்கள் பணத்தில் குளிக்கின்றனவே ! நன்றி !

      Delete
  3. ஏழையின் திருமணத்தில் பகட்டு இல்லாவிட்டாலும் பரிவு இருந்தது புரிந்தது.

    ReplyDelete
    Replies
    1. பரிவு மட்டும் இல்லை சகோதரி, அன்பும் நிறைய இருந்தது......நன்றி !

      Delete
  4. அங்கு பணத்திற்கும் பணத்திற்கும் திருமணம்... இங்கு மனங்கள் இணைகின்றன...

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் சார்........ உண்மைதான் அது ! நன்றி !

      Delete
  5. அருமையான பதிவு
    உங்களுக்கு மட்டுமல்ல
    படித்து முடித்ததும் எங்களுக்கும்
    மனம் மிக நிறைவானதை உணர்ந்தோம்
    நாங்களும் உணரும்படி மிக மிக அருமையாக
    பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்...... உங்களது கருத்து என்னை நெகிழ செய்தது !

      Delete
  6. படித்து முடித்தவுடன் அந்த hoarding இல் இருந்த வாக்கியம் உன்மையில் நடந்தது

    ReplyDelete
  7. நெகிழ்வான தருணம் சுரேஷ்... செம்ம...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சதீஷ்..... சில தருணங்கள் இப்படிதான் நம்மை நெகிழ வைக்கின்றன !

      Delete
  8. படிக்கும்போதே மனசு நெகிழ்ந்து கண்களி கண்ணீர் முட்டியது. அனுபவித்த உங்கள் நிலை நிச்சயம் பரவச நிலைதான். என் அப்பா இதுப்போன்ற பகட்டான திருமணங்களுக்கு போவதை பெரும்பாலும் தவிர்த்து விடுவார். நாம வாந்தாலும் அவங்களுக்கு தெரியாது. வராவிட்டாலும் வருந்த போறதில்லைன்னு சொல்வார். ஆனா, அக்கம், பக்க வீட்டுக்காரர் யார் கூப்பிட்டாலும் முடிந்தவரை அம்மாவும், அப்பாவும் போய் வருவாங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி....... உங்களது தந்தை செய்வது சரிதான், எப்போதுமே எளிமை வென்றுவிடும் !

      Delete
  9. இங்கு மனங்கள் இணைகின்றன

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.....

      Delete
  10. நெகிழ வைத்தது உங்களது அனுபவங்களும் ........எழுத்தும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆனந்த்.......உன்னை நெகிழ வைத்தது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  11. பணம் தாண்டி நிறைய இருக்கிறது என்று புரிய வைத்த நெகிழ்வான தருணம்.....

    ReplyDelete
  12. பணம் தாண்டி பல விஷயங்கள் இருக்கிறது என்பதை அனைவருக்கும் உணர வைப்பது இவை போன்ற சம்பவங்களே.. நெகிழ்வான நிகழ்வுதான்...

    ReplyDelete
  13. //அவர் கட்டிய மஞ்சள் தாலியில் தேடி கண்டுபிடிக்கும் படியாக இருந்த தங்கம் அந்த மணமகளின் புன்னகைக்கு முன்பு சற்று குறைவாகத்தான் மின்னியது.// யதார்தம் ....அழுத்தமான வரிகள். பணம் இருக்கும் இடத்தில் குணம் இருப்பதில்ல உண்மையே.

    ReplyDelete
  14. உங்கள் பதிவுக்கு வரும் போது தான் வார்த்தைகளை கவனத்தோடு படிக்க வேண்டியதாக உள்ளது. இணையத்தில் இது போல யோசிக்க வைக்கும் எழுத்தாளுமை மிக மிக குறைவு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. நீங்கள் தமிழ் மணத்தில் அளித்த ஓட்டு எனக்கு மகிழ்ச்சியை அளித்தது, நன்றி !

    ReplyDelete