Tuesday, December 3, 2013

ஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு

சிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக்கொள்வேன். அதை கையில் வைத்து ஆட்டியபடி எனது அம்மாவுடன் செல்லுவேன். பின்னர் நான் வேலை பார்த்த அலுவலகத்தில் ஒரு முறை புது பிளான்ட் ஓபன் செய்ய பூஜை போட்டபோது வெளிநாட்டில் இருந்து வந்தவரிடத்தில் குத்து விளக்கு ஏற்ற சொன்னபோது அவரது உயரம் இருந்ததை பார்த்து வியந்து விளக்கேற்றினார். இப்படி அவ்வப்போது குத்துவிளக்கு என்பது நமது கலாசாரத்துடனும், என்னுடைய வாழ்க்கையிலும் இருந்து வந்தது. ஆனால், இந்த ஊர் ஸ்பெஷல் பயணத்தில் குத்துவிளக்கை தேடி ஒரு பயணம் போக போகிறேன், அதுவும் அந்த பயணம் எனக்கு பல ஆச்சர்யங்களையும், தகவல்களையும் தர போகிறது என்பது எனக்கு தெரியாது !









இந்த பதிவு எழுதும் வரை எனக்கு குத்து விளக்கு எனும்போது எந்த விதமான உணர்வும் இல்லை, ஆனால் எழுதி முடிக்கும்போது அவ்வளவு விஷயம் தெரிந்து கொண்டேன் எனலாம். உதாரணமாக சிறிதளவு விளக்குகிறேன்..... உங்களுக்கே மலைப்பாக இருக்கும்......

விளக்கு வகைகள் : அகல் விளக்கு, குத்து விளக்கு, சட்ட விளக்கு, நாகாசு குத்துவிளக்கு, நந்தி அடுக்கு விளக்கு, பாவை விளக்கு (சிற்பம்), அஷ்டோத்திர விளக்கு, கிளை விளக்கு, கேரள விளக்கு, தொங்கு விளக்கு, தூண்டாமணி விளக்கு

அதில் ஏற்றப்படும் தீப வகைகள் : தூபம், தீபம், அலங்கார தீபம், நாகதீபம், விருஷ தீபம், புருஷா மிருக தீபம், சூலதீபம், கமடதி (ஆமை) தீபம், கஜ (யானை) தீபம், வியக்ர (புலி) தீபம், சிம்ஹ தீபம், துவஜ (பொடி) தீபம், மயூர (மயில்)தீபம், பூரண கும்ப (5 தட்டு) தீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம்

விளக்கில் பயன்படுத்தும் எண்ணெய்களும் அவற்றின் பலன்களும்:

1. நெய் கடன் தீரும். வருமானம் அதிகரிக்கும். நினைத்தது நடக்கும். கிரகதோஷம் நீக்கும். செல்வம், சுகம் தரும்.
2. நல்லெண்ணெய் நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். நவகிரகங்களின் அருள் உண்டாகும். தாம்பத்ய உறவு சிறக்கும். அனைத்து பீடைகளும் விலகும்.
3. தேங்காய் எண்ணெய் அனைவரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாகும். துணிவு உண்டாகும். மனத்தெளிவு உண்டாகும்.
4. விளக்கெண்ணெய் புகழ் உண்டாகும். குலதெய்வ அருள் உண்டாகும். தேவதை வசியம் உண்டாக்கும். அனைத்து செல்வங்களும் உண்டாகும்.
5. வேப்ப எண்ணெய் கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களின் உதவி கிடைக்கும். இல்லற இன்பம் அதிகரிக்கும்.
6. இலுப்பை எண்ணெய் காரிய சித்தி உண்டாகும்.
7. வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் சகல ஐச்வர்யங்களும் உண்டாகும்.
8. நெய் + வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் செல்வம் சேரும். குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றது.
9.
விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்
பராசக்தி அருள் உண்டாக்கும். மந்திர சித்தி தரும். கிரகதோஷம் நீக்கும்.

குறிப்பு: கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை.

விளக்கின் திரிகளும் அவற்றின் பலன்களும்:

இலவம் பஞ்சுத்திரி சுகம் தரும்.
தாமரைத்தண்டு திரி முன்வினை நீக்கும். செல்வம் சேரும். திருமகள் அருள் உண்டாகும்.
வாழைத்தண்டு திரி மக்கட்பேறு உண்டாகும். மன அமைதி உண்டாகும். குடும்ப அமைதி உண்டாகும். தெய்வ சாபம் மற்றும் முன்னோர் பாவம் நீங்கும். குழந்தைப்பேறு உண்டாகும்.
வெள்ளெருக்கு திரி செய்வினை நீங்கும். ஆயுள் நீடிக்கும். குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாகும்.
பருத்தி பஞ்சுத்திரி தெய்வ குற்றம், பிதுர் சாபம் போக்கும். வம்சம் விருத்தியாகும்.
வெள்ளைத்துணி திரி அனைத்து நலங்களும் உண்டாகும்.
சிவப்பு துணி திரி திருமணத்தடை நீக்கும். மக்கட் பேறு உண்டாகும்.
மஞ்சள் துணி திரி எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். அம்பிகையின் அருள் உண்டாகும். வியாதிகள் நீங்கும். செய்வினை நீங்கும். எதிரிகள் பயம் நீங்கும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும். மங்களம் உண்டாகும்.
பட்டுத்துணி திரி எல்லா சுபங்களும் உண்டாகும்.

இப்படி நான் சொல்லிக்கொண்டே போகலாம், நீங்கள் இன்னும் இதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஆன்மிகசுடர் தளத்திற்கு செல்லலாம் !


அரை அடி முதல் ஆறு அடி வரை......

இத்தனை வகைகளும் குத்துவிளக்குதான்....!!

நாச்சியார்கோவிலில் உற்பத்தி செய்யப்படும் குத்துவிளக்குகள் அனைத்தும் ஐந்து முக அமைப்பு கொண்டது. கேரளாவில் உற்பத்தியாகும் விளக்குகள் நான்கு முக அமைப்பை கொண்டது. ஐந்து முக அமைப்பும், நாகாசு வேலைப்பாடும் கொண்டதால் நாச்சியார்கோவில் குத்துவிளக்குக்கு வீடுகள் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் தனி மகத்துவம் உண்டு. நாச்சியார்கோவில் குத்துவிளக்கு அரை அடி முதல் 7 அடி உயரம் வரை வடிவமைக்கப்படுகிறது. பித்தளையே குத்து விளக்குத் தயாரிப்பில் பயன்படும் மரபுவழியான உலோகமாகும். பித்தளை என்பது செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம். வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. பித்தளை ஓரளவுக்குத் தங்கத்தை ஒத்த மஞ்சள் நிறம் உடையது. இதன் காரணமாகப் பல்வேறு அலங்காரத் தேவைகளுக்கு இவ்வுலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இளக்கத்தன்மை மற்றும் அதன் ஒலியியல் இயல்புகள் காரணமாகப் பித்தளை பல்வேறு இசைக்கருவிகள் செய்வதற்கும் பயன் படுகின்றது. இந்தியாவிலும் பாத்திரங்கள், விளக்குகள், மற்றும் பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் பித்தளையில் செய்யப்படுகின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே பித்தளையை மனிதன் அறிந்திருந்தான். உண்மையில் துத்தநாகம் பற்றி அறிவதற்கு முன்னமே பித்தளை பற்றிய அறிவு மனிதனுக்கு இருந்தது. செப்பையும், கலமைன் எனப்படும் துத்தநாகத்தின் தாதுப்பொருளையும் சேர்த்து உருக்கிப் பித்தளை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மாமண்டூர் (ஆரணி பக்கம்) மட்டுமே இந்த பித்தளையின் மூல பொருட்கள் கிடைக்கின்றன, தூத்துக்குடியில் சில இடங்களிலும் கிடைப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது. இந்த பித்தளையை தயாரித்து அதை டியுப் போன்று இங்கு வருகிறது, அதை இந்த நாச்சியார் கோவிலில் உருக்கி குத்துவிளக்கை செய்கிறார்கள்.


இன்னொரு கேள்வி எனது மனதை சுற்றி என்பது..... அது ஏன் எல்லா குத்து விளக்கும் கீழே தட்டை, ஒரு தண்டு பின்னர் மேலே எண்ணை ஊற்றி வைப்பது அதன் மேலே ஒரு அன்னபட்சி என்று. குத்து விளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது என்பர். இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ - மலை மகள். இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும் என்பது வழக்காகும். இது ஆன்மீக விளக்கம்....... ஒரு பெரியவரிடத்தில் கேட்டபோது, முந்தைய காலத்தில் எல்லாம் மண் விளக்குதான். அதை தரையில்தான் வைக்கவேண்டியதாக இருந்தது. அதை பிடிப்பதற்கு சிரமம், அதிகம் குனிய வேண்டி இருக்கிறது எனும்போது அதை மாற்றி அமைக்கும்போது பரந்த அடி பாகமும், தண்டு பகுதி பிடிப்பதற்கும், மேல் பகுதி விளக்கு ஏற்றுவதற்கும் என்று ஆனது என்றார், அதன் மேல் பாகத்தில் அன்னபட்சி என்பது அழகுக்காக என்றார். நம்பலாம் என்று தோன்றியது !

இதுதான் அச்சு..... இதை மண்ணில் வைத்து அச்சு எடுப்பார்கள்.

இப்படிதான் உருக்கி அச்சில் ஊற்றி எடுக்கின்றனர் !

குத்து விளக்கு செய்யும்போது மிகவும் முக்கியம் என்பது அதன் டிசைன். அது முடிவு ஆனவுடன் அச்சு செய்கிறார்கள். அடி பாகம், நடு பாகம், மேல் பாகம் மற்றும் அன்ன பட்சி டிசைன் என்று நான்கு அச்சு செய்து கொள்கின்றனர். முதலில் மண்ணை (ஸ்பெஷல் மண்) ஒரு சமதளமாக ஆக்கி அதில் இந்த அச்சை வைத்து எடுக்கின்றனர். அச்சு நன்கு பதிந்தவுடன் வெளியே எடுத்து அதை போலவே அடுத்த பாகம் செய்கின்றனர். பின்னர் இரண்டு பாகங்களையும் சேர்த்து விடுகின்றனர். இப்போது பித்தளையை உருக்க வேண்டும் ! பித்தளை என்பது இவர்களுக்கு பல வழிகளில் கிடைக்கிறது..... ஒன்று உடைந்த பித்தளைகள் (ஸ்க்ராப்), பித்தளை ராட் அல்லது பார் என்று. இதைதான் உருக்கி அந்த அச்சின் உள்ளே ஊற்றுகின்றனர்.

இதுதான் அச்சில் இருந்து எடுத்தது......!

களத்தில் இருந்து நேரடியாக இந்த செய்தியை தருவது......உங்கள் !

அச்சில் இருந்து இப்பதான் சார் சூடாக எடுத்து இருக்கிறாங்க !
இப்படி அச்சின் உள்ளே ஊற்றிய அந்த பித்தளையை சிறிது நேரத்திலே வெளியே கவிழ்த்து எடுத்து விடுகின்றனர். இதன் மூலம் உள்ளே பித்தளை கோட்டிங் மட்டுமே இருந்து வெற்றிடம் இருக்கும். இப்படி எடுக்கப்படும் பித்தளை பார்ப்பதற்கு பழைய சாமான் போல இருப்பதை பாருங்கள் ! இதன் அடுத்த கட்டம் என்பது மெருகேற்றுவது. மெசின் மூலம் மேலே இருக்கும் அழுக்கு போன்றதை எடுக்க எடுக்க அதன் பளபளப்பு நன்கு தெரிய ஆரம்பித்தது. இப்படி ஒவ்வொரு பாகத்தையும் அவர்கள் எனக்காக மெருகெற்றுவதை பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது. அந்த பகுதி முடிந்தவுடன் நான் அதை கையில் வாங்க முற்பட்டேன்..... கையை கிழித்துவிட்டது !

என்ன சும்மா பளபளன்னு வருதா !

குத்துவிளக்கு டெஸ்டிங் 1,2,3.....

இந்த குத்துவிளக்கு போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா !

சின்ன மெசின், சின்ன இடம்...... ஆனா உலக புகழ் பெற்ற குத்துவிளக்குகள் !

கொஞ்சம் கொஞ்சமா ரெடி ஆகுது !

சார்.... இந்த பளபளப்பு போதுமான்னு பாருங்க !
அது முடிந்தவுடன் பாலீஷ் செய்யாமல் விட்டால் கையை கிழிக்குமாம். இதனால் அவர்கள் அதை கொண்டு சென்று பாலீஷ் செய்து எனக்கு தந்தபோது சிறிது நேரத்திற்கு முன்பு நான் பார்த்த பழைய சாமான் போல இருந்ததா இப்போது எனது கையில் பளபளக்கிறது என்று ஆச்சர்யம் மேலோங்கியது. அதை அவர்கள் வாங்கி கீழே கலர் செய்தனர். இந்த கலர் அவர்களுக்கு ஒரு அடையாளம் என்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறியீடு இருக்கிறது என்பதும் புரிந்தது. இப்படி நூற்றுக்கணக்கில் என் முன்பு குத்துவிளக்கு தயாராகி கொண்டு இருந்தது. பின்னர் என்னை அவர்கள் குத்துவிளக்கு கோடௌன் கூட்டி சென்றனர். அதுவரை எப்படி குத்துவிளக்குகளை அடுக்கி வைப்பார்கள் என்பது தெரியாது இருந்தது..... உள்ளே சென்று பார்த்தபோது அழகாக சைஸ் வாரியாக நன்கு அடுக்கி வைத்து இருந்தது கண்டு மகிழ்ந்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறியீடு, அது தொழில் சார்ந்து இருந்தது ! இரண்டு அடிக்கு மேல் உள்ள விளக்குகள் பெரும்பாலும் எடை அளவில் விற்பனையாகிறது. குத்துவிளக்கு ஒரு கிலோ ரூ.600 லிருந்து ரூ.650 வரை விற்பனையாகும்.

இப்படி கலர் கொடுப்பது ஒரு குறியீடு....... இதில் நிறைய சூட்சமம் இருக்குதுங்க !


குத்துவிளக்கு ரெடி...... வாங்குவதற்கு நீங்க ரெடியா !
Labels : Oor Special, Suresh, Kadalpayanangal, Kuthu vilakku, Nachiyar kovil, lamp

35 comments:

  1. குத்துவிளக்குகள் தயாராவது பற்றி வியத்தகு பகிர்வுகள்..
    ஆவலுடன் அறிந்து பிரமித்தோம் ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் ! இந்த விளக்கு உங்களுக்கு ஆச்சர்யம் தந்தது என்பதை உங்களது கருத்தின் மூலன் தெரிந்தது !

      Delete
  2. பிரமிக்கத்தக்க தகவல்கள்.... இவ்வளவு விஷயம் இருக்கா... அருமையான பகிர்வு....

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே....... சின்ன விளக்கில் நமது முன்னோர்கள் எவ்வளவு தத்துவம் வைத்து இருக்கிறார்கள் பாருங்கள் !

      Delete
  3. படங்கள், விளக்கங்கள், அங்கங்கே இணைப்புக்கள் என அசத்தி விட்டீர்கள்... உங்களின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள் பல... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார், நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பாராட்டும் எனது மனதை சந்தோசம் கொள்ள செய்கிறது. பதிவுலகில் நீங்கள் இல்லை என்றால் என்னை போன்ற பதிவர்கள் எல்லாம் ஆரம்பித்தவுடன் வெளியேறிவிடுவார்கள். நன்றி !

      Delete
  4. குத்துவிளக்கின் ஆதி முதல் அந்தம் வரை விரிவா பதிவிட்டமைக்கு நன்றி சுரேஷ்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  5. நாச்சியார் கோவில் குத்துவிளக்கு தயார் செய்யும் நிறுவனம் எனக்குத் தெரிந்து சுமார் 75 வருடங்களுக்கு மேலாக செயல் படுகிறது.

    எனது நெருங்கிய நண்பர் காலம் சென்ற சடகோபன் அவர்கள் இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். அவர் ஜோதிடத்திலும் வல்லுநர்.

    அங்கே தான் என் பெண் திருமணத்திற்கும் குத்து விளக்குகள் வாங்கினோம்.

    சுப்பு தாத்தா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுப்பு சார்...... உங்களுக்கு தெரிந்த பஞ்சலோக சிலை செய்பவர்கள்அங்கு இருந்தால் சொல்லுங்களேன். அதை பற்றியும் எழுத ஆர்வம் !

      Delete
    2. அவர்களுடைய முகவரி கிடைக்குமா சகோ.....

      Delete
  6. Replies
    1. நன்றி ஜெயதேவ் சார் !

      Delete
  7. படங்களும் விளக்கங்களும் அருமை நண்பரே.
    நாச்சியார்கோயில் சென்று இவ்விடங்களைப் பார்த்த அனுபவம் எனக்கும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயக்குமார் சார்...... இந்த இடங்களை பார்க்கும்போது சோழர் காலத்தில் எப்படியெல்லாம் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று ஆச்சர்யம் இருந்தது !

      Delete
  8. குத்துவிளக்குகள் அருமையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  9. விளக்கை பத்தி நல்லா விளக்கீட்டீங்க வாத்தியாரே!!

    ReplyDelete
    Replies
    1. ஆவி..... நல்லா எதுகை மோனையோட வாழ்த்திட்டீங்க போங்க ! நன்றி !

      Delete
  10. நாச்சியார் கோவில் சென்று குத்து விளக்கு வாங்கிய போது அதன் சிறப்பைப் பார்த்து அசந்திருக்கிறேன். ஆனால் இத்தனை அருமையான தகவல்கள், விளக்கங்கள் சொல்லி ஒரேயடியாக அசத்தி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி...... இது போன்ற வார்த்தைகள்தான் இப்படி தேடி சென்று எழுத தூண்டுகிறது !

      Delete
  11. நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம். திருநெல்வேலியில் வாகைக்குளத்தில் தயாராகும் குத்துவிளக்குகள் தாமிரபரணி நல்ல தண்ணியில் விளக்க விளக்க தங்கம் மாதிரி பளபளக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்ற...... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  12. நன்றி
    திருநெல்வேலி வாகை குளம் என்றால் அது தூத்துக்குடி பக்கத்தில் உள்ளதா ?
    அங்கே சென்றால் வாங்கலாமா ?

    ReplyDelete
    Replies
    1. கேள்வி எனக்கா இல்லை அமுதா மேடதிர்க்கா என்று தெரியவில்லை..... ஆனாலும் உங்களது கேள்விக்கு என்னுடைய பதில்........ எனக்கு வாகைகுளம் என்பது எங்கு உள்ளது தெரியாது, நான் ஒரு ஊருக்கு சிறப்பு சேர்க்கும் பொருளை தேடி பயணிப்பவன் ! தங்களுடைய வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  13. பித்தளை உருக்கும் வாணலியை குகை என்று அழைப்பார்கள் .அது கனமாக இருக்கும். எங்கள் பகுதியில் இருந்து வடநாடு முதல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது .ஆனால் அடிப்பகுதியில் நிறம் இருக்காது.நிறம் இருப்பது பழுதுபட்டு இருந்தாலும் தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்..... கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  14. சகோ ரெம்ப நல்ல பதிவு சகோ
    குத்து விளக்கு தயாரிக்கும் இவர்களுடைய
    முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும்
    என்ணுடைய sithikibu@gmail.com என்ற முகவரிக்கு அணுப்பி வையுங்கள் சகோ தயவு செய்து.
    நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  15. I need the address, we are having some old brass and copper vessels which needs to be melted and get done in some form is there any place.
    Thanks, Satish
    please send details to : satishkumaryp@gmail.com

    ReplyDelete
  16. sir please send contact number details

    ReplyDelete
  17. மிகவும் அருமை.

    ReplyDelete