Wednesday, December 31, 2014

கடல் பயணங்கள் அவார்ட் 2014 !!

2014ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந்த ஆண்டாக இருந்தது. இந்த வருடத்தில்தான் எனது பதிவுகள் நிறைய பேர் திரும்பி பார்க்கும் வண்ணம் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த வருடத்தில் நான் இந்த பதிவுலகத்தில் ரசித்த விஷயங்கள், என்னை பாதித்த விஷயங்கள், நான் சந்தித்த அற்புத மனிதர்கள் என்று சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றியது !! அவார்ட் என்று சொன்னாலும் இது நான் படித்த, ரசித்த விஷயங்கள் பற்றிய ஒரு தொகுப்பே தவிர, அது வரிசைபடுதுவதல்ல எனலாம். இவர்களது பதிவுகளை நீங்களும் சென்று வாசித்தால் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் ! இந்த பதிவுகள் என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இயங்குபவர்கள் பற்றியது, இவர்கள் தங்களது நேரத்தில் இருந்து சிறிது எடுத்து இப்படி எழுதுகிறார்கள், இவர்களின் மீது இந்த அவார்ட் சிறிது வெளிச்சம் பாய்ச்சினால் நான் சந்தோசமடைவேன் !!

 கடல் பயணங்கள் அவார்ட் 2014

 இது போன்று அவார்ட் என்று கொடுக்கும்போது ஒரு சந்தோசம் இருந்தாலும், சில நண்பர்கள் அவர்களுடைய பதிவுகளை குறிப்பிடவில்லையே என்று கோபித்து கொள்வதும் நடக்கும். ஆனாலும், இதை அவர்கள் என்னை புரிந்து கொள்வார்கள் / புரிந்து வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்......

"தேவியர் இல்லம்" ஜோதிஜி (http://deviyar-illam.blogspot.com/)...... இவரது புத்தகம் டாலர் நகரம் என்பது மூலம் இவரது தளத்திற்கு சென்று படிக்க ஆரம்பித்தேன். 2013ம் வருடம் சென்னை பதிவர் சந்திப்பில் இவருடன் பேசி மகிழ்ந்தேன், இன்று வரை நல்ல நண்பர். எந்த வித தயக்கமும் இல்லாமல் இவருடன் உரையாடும் அளவுக்கு ஒரு எளிய மனிதர். இவரது ஒவ்வொரு பதிவுகளும் உண்மையை உரைப்பவை, இவரது பதிவுகளை படித்துவிட்டு சிலசமயங்களில் நான் ஆழ்ந்த யோசனைக்கு சென்றது உண்டு. இவரது பதிவுகளை அனைவரும் படிக்கும் வண்ணம் இலவச மின் நூலாகவும் தருகிறார்...... பயத்தோடு வாழ பழகி கொள், வெள்ளை அடிமைகள், ஈழம் வந்தார்கள் மின் நூல்கள் நான் ரசித்தவை. இன்று அவர் எழுதி வரும் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் என்பது தவறாமல் படிக்கும் ஒன்று.
 இவருக்கு.....


பதிவுகள் எழுதுவது என்பதே கடினம் என்னும் நிலை இன்று உள்ளது, பதிவுகள் என்பது ஒருவரை பிரதிபலிப்பது. இந்த பதிவுகள் படிக்கும் வரை இது ஒருவரால் மட்டுமே எழுதப்பட்டது என்று நினைத்து வந்தேன், ஆனால் நண்பர்கள் சேர்ந்து ஒரு பத்திரிக்கையை போல எழுதி வருவது என்பது "எங்கள் blog (http://engalblog.blogspot.in/)" என்னும் தளம். இதில் எளிமையான நடையில் பதிவுகள் எழுதி வருபவரில் எனது நண்பர் என்று உரிமையுடனும், பெருமையுடனும் திரு.ஸ்ரீராம் அவர்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இதில் வரும் நம்பிக்கை மனிதர்கள் என்பது மிகவும் விரும்பி படிக்கும் ஒன்று. இந்த தளம் சில மாற்றங்களை சந்தித்தால், இந்த இணைய உலகில் கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் என்பது எனது கருத்து. இவருக்கு.....
 
 


பதிவுலகில் பிரதிபலன் பாராமல் பதிவுகள் எழுதுபவர்கள் பலர், ஆனாலும் சில விஷயங்கள் எல்லோருக்கும் பயன் தரும் ஒன்று. இணையத்தில் எந்த ஒரு புத்தகங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும் என்று தேடினாலும் இங்கு செல்லலாம் எனலாம், சில நேரங்களில் ஆச்சர்யம் தரும் அளவுக்கு புத்தகங்களை PDF வடிவில் தருகிறார். நாவலோ, பத்திரிக்கையோ எதுவானாலும் இங்கு இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்....... பொழுதுபோக வில்லை என்றால் இங்கு சென்று புத்தகங்கள் படிப்பது எனது பொழுதுபோக்கு. உங்களது சேவை தொடரட்டும் ஒரத்தநாடு கார்த்திக்  (http://orathanadukarthik.blogspot.in/). இவருக்கு......



***********************************************************************************


 
இதில் சில பதிவர்கள் / பதிவுகளை நான் அவார்ட் என்று வகை படுத்த விரும்பவில்லை,ஏனென்றால் இவர்களது பதிவுகள் எல்லாம் விருதுகளுக்கு அப்பாற்பட்டது என்பது என் கருத்து. எப்போதும் நான் அவர்களின் பதிவுகளை வாசித்து விடுவேன்.... அவர்களை நான் இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன் !!


சங்கவி சதீஷ்
காணாமல் போன கனவுகள் ராஜி
ராஜராஜேஸ்வரி
கோவை ஆவி
ஆரூர் மூனா செந்தில்
திண்டுக்கல் தனபாலன்
ரமணி - யாதோ ரமணி
தேன் மதுர தமிழ் கிரேஸ்
வா மணிகண்டன்
ஜாக்கி சேகர்
கேபிள் சங்கர்
கார்த்திக் நீலகிரி
அதிஷா
ஆலிலை
பழனி கந்தசாமி ஐயா
சிவகாசிக்காரன்
இனியவை கூறல்
இன்றைய வானம்
நாஞ்சில் மனோ
மெட்ராஸ் பவன் சிவகுமார்
துளசி கோபால்
தமிழ்வாசி பிரகாஷ்
பாவா ஷரீப்
அமுதா கிருஷ்ணா
பட்டா பட்டி
பால கணேஷ்
புலவர் ராமானுஜம்
ஜெயதேவ் தாஸ்
அஜீமும் அற்புதவிளக்கும்
பாஸ்கரன் - உலக சினிமா ரசிகன்
வடுவூர் குமார்
செம்மலை ஆகாஷ்
சீனு திடம் கொண்டு போராடு
இக்பால் செல்வன்
அண்ணாமலையான்
குட்டன்
ஸ்கூல் பையன்
கும்மாச்சி தக்குடு
பந்து
நாடிநாராயணன்
மணி என்பாட்டை
ராஜா மாதேவி
கிருஷ்
குரங்கு பெடல்
வல்லி சிம்ஹன்
அன்புடன் அருணா
கோபாலகிருஷ்ணன்
காட்டான் பழனி கந்தசாமி
ஸாதிகா
வருண்
முருகானந்தம்
முனைவர்.இரா .குணசீலன்
தேவா SP
ராஜ்
ராஜேஷ்
அசோக்
விச்சு
காரிகன்
இக்பால் செல்வன்
ரங்குடு
ஜீவன்
சிவம்
வடுவூர் குமார்
கோமதி அரசு ***********************************************************************************
இந்த வருடத்தில் நிறைய பதிவுகள் படித்திருக்கிறேன், ஆனாலும் இன்று என்னுடைய பதிவுகளையே ஒரு வாசகரின் நிலையில் இருந்து திரும்பி பார்க்கும்போது நான் சென்ற பயணங்கள், உண்ட உணவுகள், ஊர் ஸ்பெஷல் என்று நிறைய இருந்தாலும், வெகு சில என் மனதிற்கு நெருக்கமானவையாகவும், மிகவும் விரும்பியதாகவும் இருந்தது. நீங்கள் என் பதிவுகளை முழுமையாக இந்த வருடத்தில் படித்து இருக்கவில்லை என்றாலும் இதை கண்டிப்பாக படித்துவிடுங்கள்..... ஏனென்றால் இதெல்லாம் முத்துக்கள் !!



அறுசுவை -ஐயப்பா தோசை கடை, மதுரை
அறுசுவை (சமஸ்) - ஆண்டவர் கடை அசோகா அல்வா, திருவையாறு
அறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு

ஊரும் ருசியும் - ராமசேரி இட்லி !

எண்ணங்கள் - ஓடி ஓடி ஒரு ஹாலிடே !!
சாகச பயணம் - நடுக்காடு...டென்ட்... பயம் (பாகம் - 1) !!
உலக பயணம் - தண்ணீருக்குள் ஒரு உலகம் !!

நான் ரசித்த கலை - பாட்டில் மணல் ஓவியம், துபாய்
சோலை டாக்கீஸ் - சாப்பிடும் கேரட்டில் இசை கருவி !!
உயரம் தொடுவோம் - புர்ஜ் கலீபா, துபாய்

சிறுபிள்ளையாவோம் - டென்ட் கொட்டகை !!
ஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் ! (பகுதி - 1)

திரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 !!

****************************************************************************************************

என்னதான் அவார்ட் என்று கொடுத்தாலும், வாங்கி கொண்டாலும் பதிவுலகில் நண்பர்கள் என்பது வரமே. அதுவும் பதிவர் சந்திப்பில் நிறைய பதிவர்களை சந்தித்த அந்த அனுபவம், எல்லோரிடமும் பேசியது என்பது சந்தோசம் கொடுத்தது. எனது பதிவை வாசித்து, எழுத உற்சாகம் ஊட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள் ! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! இனி எல்லாம் சுகமே..... ஜெயமே !!
 


Labels : Suresh, Kadalpayanangal, Blogger award, best blog, I love blog, 2014, list of blogs, Year end blogging, eve of new year blog 

Tuesday, December 30, 2014

புதிய வருடம்.... புதிய பகுதிகள் !! - 2015

கடல்பயணங்கள்......... இந்த பயணம் உங்களுக்கு வாழ்க்கையின் மீது ஆர்வத்தையும், பிரமிப்பையும், காதலையும் வரவழைக்கும் ! தேடல் என்பது ஒரு மனிதனுக்கு இல்லாவிட்டால் வாழ்வில் சுவாரசியம் என்பது இல்லாமல் போய் விடும், ஒவ்வொரு வருடமும் இந்த தேடல் அதிகமாகி வருகிறது, மனதில் கேள்விகள் எழ எழ அதை தேடிய இந்த நீண்ட பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பயணத்திலும் இந்த உலகம் மிகவும் பெரியது என்ற எண்ணமும், நான் மிக சிறியவன் என்ற எண்ணமும் வந்து வந்து போகிறது !!



மாற்றம் என்பதுதான் இந்த வாழ்க்கையில் மாற்றம் இல்லாதது என்ற வரிகள் மிகவும் உண்மையே இல்லையா, கடல்பயணங்கள் தளமும் இதற்க்கு விதிவிலக்கா என்ன ? ஆனால், இந்த மாற்றம் நீங்கள் இந்த தளத்தை புதிதாக பார்ப்பதற்கு மட்டும் இல்லை, புதிதாக உணரவும்தான் ! சென்ற வருடத்தில் நீங்கள் படித்த பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்ததா, அப்படியென்றால் இந்த வருடம் இன்னும் புதிதாக, இன்னும் புதுமையாக, இன்னும் சுவாரசியமாக தேடல் இருந்தால் எப்படி இருக்கும் ?! இந்த வருடம் இந்த புதிய தேடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்..... உங்களுக்கு ஆச்சர்யங்களும், சந்தோசங்களும் காத்திருக்கிறது எனலாம் !





உணவு வேட்டை :

வேட்டை என்பது பசிக்கு சாப்பிடுவது, நிறுத்தி நிதானமாக திட்டம் போட்டு நடத்துவது. மிருகங்கள் பசியோடு இருக்கும்போது பார்த்து இருக்கின்றீர்களா, மெதுவாக மிக மெதுவாக தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும், வேட்டையாடி முடித்தவுடன் நிதானமாக ருசித்து ரசித்து சாப்பிடும்.... அது போலவே, எல்லோரும் சாதாரணமாக பார்க்கும் ஒரு உணவு, அதை ஊர் / உலகம் முழுவதும் தேடி தேடி சாப்பிட்டால் எப்படி இருக்கும் ? அந்த உணவை இப்படி எல்லாம் சுவைகலாமா என்று ஆச்சர்யபடுதினால் எப்படி இருக்கும் ? அதன் அடி முதல் தலை வரை தேடி தேடி சாப்பிட்டு பார்த்தால் எப்படி இருக்கும் ? வருடம் முழுவதும் இந்த உணவை தேடி தேடி அலைந்து, அதை உங்களுக்கு பந்தி பரிமாறினால் எப்படி இருக்கும்........ அவ்வளவு தகவல்கள், சுவாரசியங்கள், ஆச்சர்யங்களுடன் இந்த பகுதி வரும். பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி பூ போல, இந்த உணவு வேட்டை பதிவுகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பதிவிடப்படும்........ ஆனால், தேடல் மிக மிக ஆழமாக !!




ஊர் ஸ்பெஷல் :

இந்த பகுதியில் இதுவரை ஏட்டளவில் மட்டுமே இருந்து வரும் ஒரு ஊரின் பெருமையை, சென்று கேட்டு எழுதி வருகிறேன். இதை நீங்கள் விரும்பி படிப்பது கண்டு மகிழ்கிறேன்.... அதை இன்னும் சுவாரசியபடுத்தினால் எப்படி இருக்கும் ?! சில விஷயங்கள் அழிந்து விட்டன என்று நம்பும் சிலருக்கு, அது இன்னும் அழியவில்லை என்று ஆச்சர்யபடுதினால் எப்படி இருக்கும்....... உதாரணமாக உறையூர் சுருட்டு, சென்னிமலை போர்வை, கல்லிடைகுறிச்சி அப்பளம் என்று அது செய்யப்படும் விஷயத்தையும், அதன் தற்போதைய நிலைமையையும் படம் பிடித்து காட்டலாமே. ஆச்சர்யங்கள் மிகுந்த இந்த பயணங்களில், உங்களையும் இனி கை பிடித்து கூட்டி சென்றால் எப்படி இருக்கும் ?!

 


அடையும் கூடு :

ஒரு மனிதனுக்கு முக்கிய தேவை என்பது உணவு, உடை மற்றும் தங்கும் இடம் ! இதில் உணவு பற்றி தேடி செல்லும்போதும், குடும்பத்துடன் எங்கேயாவது செல்லும்போதும் தங்கும் இடம் இன்றியமையாதது. உணவை பற்றி தேட எவ்வளவு நேரம் செலவளிக்கிறேனோ, அதே அளவு தங்கும் இடத்தை தீர்மானிப்பதர்க்கும் செலவழிக்கிறேன். மலைகளின் நடுவே ஒரு மர வீடு, ஆற்றின் நடுவே ஒரு ரூம், ஐந்து நட்சத்திர ஹோட்டல், அரண்மனை போன்ற ஹோட்டல், சிறு குடிசையில் தங்கல், கோவில் பார்த்த வீதிகள் கொண்ட ரூம், ரோட்டு ஒர தங்கும் விடுதிகள் என்று ஆச்சர்யபடுத்தும் விவரங்களை பகிரவே இந்த தளம்..... அடையும் கூடு.... ஆம், நாம் எல்லோரும் கூடு அடையும் பறவைகள்தானே ?!


ஊரும் ருசியும் :

சில வாரங்களாக இந்த பகுதியை எழுதி வந்தாலும், இந்த வருடத்தில் இது இன்னும் பொலிவு பெற இருக்கிறது. திரு.வெ.நீலகண்டன் எழுதிய "எந்த ஊரில் என்ன ருசிக்கலாம் ?" என்ற புத்தகம் படித்தேன், அதில் சொல்லி இருந்தது அனைத்தையும் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என்றாலும் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ருசி உண்டு என்பதை அறிய முடிந்தது, உதாரணமாக நாகர்கோவில் முந்திரிகொத்து, சேலம் தட்டுவடை செட், காரமடை காரமுறுக்கு என்று அந்த ஊருக்கு என்று ஒரு சுவை இருக்கிறது, இதை ஊர் ஸ்பெஷல் பகுதியில் எழுத முடியாது, ஏனென்றால் அது அந்த அளவுக்கு பிரபலம் இல்லை...... இதனால் ஒவ்வொரு ஊரின் சுவை மிகுந்த, தனித்த அடையாளம் கொண்ட ருசிகளை இதன் மூலம் பகிர நினைக்கிறேன். இந்த பகுதி, நீங்கள் செல்லும் ஊருக்கு நாக்கிற்கு வழி காட்டும் !!


நான் ரசித்த பதிவுகள் :

நான் பதிவுகள் எழுத ஆரம்பித்தபோது, அன்று நல்ல பதிவுகளை எழுத வேண்டும் என்று தேடி செய்தேனோ அதையேதான் இன்றும் செய்கிறேன். ஆனால், அன்று அதை படித்தவர்கள் மிகவும் குறைவு, எனது பதிவுகளை பார்த்துவிட்டு மற்ற பதிவர்கள் தங்களது தளங்களில் என்னையும் எனது தளத்தையும் அறிமுகபடுத்தினார்கள். இது என்னை உற்சாகமூட்டியது, எழுதவும் தூண்டியது. அது போலவே, நான் படிக்கும் பதிவுகளில் நான் ரசித்தவற்றை பதிவு செய்ய எண்ணம். இது எனது பதிவுகளை விரும்பும் வாசகர்களுக்கு வேறு வேறு நல்ல பதிவுகளை அறிமுகம் செய்தது போல இருக்குமே. புதிய வருடத்தில் இருந்து சுவையான, நல்ல, விரும்பக்கூடிய பதிவுகளை இந்த தளத்தில் அறிமுகம் செய்வேன்...... படித்து மகிழுங்கள் !!

முக்கியமான விஷயம் 
 

என்னை சந்திக்கும் பலரும், எதாவது ஒரு ஊருக்கு சென்று அங்கு என்ன நல்ல உணவு இருக்கு என்று தேட முற்படும் போது எனது வலைத்தளத்தில் சட்டென்று முடிவதில்லை என்று குறைப்பட்டுக்கொண்டனர். அது மட்டும் இல்லாமல், தளத்தில் இன்னும் சில குறைகளையும் கூறி அதை சரி செய்ய முடியுமா என்றனர்....... விரைவில், இந்த தளம் புதிய வடிவத்தை எடுக்கும், தேடுதல் இன்னும் எளிமையாக்கப்பட்டு உங்களது எல்லா கருத்துக்களும் இந்த தளத்தை அழகாக்க போகிறது !! ஒரு சிறு மாற்றம், பெரும் சந்தோசத்தை தரும் ! 


இது வரை எழுதி வந்த பகுதிகளான அறுசுவை, அறுசுவை(சமஸ்), சிறுபிள்ளையாவோம், மற்றும் அனைத்தும் மெருகேரியும், அழகாகவும், புது பொலிவும் பெற இருக்கிறது ! இந்த மாற்றம் ஒரு சந்தோசமான மாற்றம்தானே ! இதன் மூலம் பல புதிய நண்பர்களையும், பழைய நண்பர்களுடன் இன்னும் நெருக்கமாகவும் உதவும் என்று எண்ணுகிறேன்......... புதிய வருடம்... புதிய உதயம் !!

Labels : Suresh, Kadalpayanangal, New year, New resolution, New topics, Others, Matravai, Enjoy reading, food map

Monday, December 29, 2014

சந்தித்த கேள்விகள்...... 2014 !!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை..... ஒவ்வொரு கேள்விகளும், அதற்க்கான விடைகளும் நம்மை அடுத்த தளத்திற்கு அழைத்து செல்கின்றன. என்னுடைய பதிவுகளை படிக்கும் பலரும் என்னை சந்திக்கும்போதோ, அல்லது தொடர்ப்பு கொள்ளும்போதோ கேட்க்கும் சில கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். இதில் சில கேள்விகள் எப்போதும் நான் எதிர்கொள்பவை.......... பதிவுகள் எழுத ஆரம்பித்ததில் இருந்து இது என்னை தொடர்ந்து வருகிறது, இதனால் நான் எதிர்கொண்ட கேள்விகளை தொகுத்து அதற்க்கான விடைகளை அளித்தால் என்ன என்று தோன்றியது. இந்த கேள்விகள், நீங்கள் என்னை கேட்க்க நினைத்து இருந்தால்.... இதோ விடை !!




எப்படி பதிவு எழுத ஆரம்பிச்சீங்க ?

பதிவுலகம் என்று இருப்பது தெரிந்ததே 2011ம் ஆண்டுதான், சினிமா பார்க்க வேண்டும் என்று நினைத்தால் ஆனந்த விகடன் விமர்சனம் பார்த்துவிட்டு செல்லும் ஒரு சராசரி மனிதன் நான், சில நேரங்களில் விகடனில் விமர்சனம் வருவதற்கு இரண்டு வாரங்கள் கூட ஆகும். அப்போது போர் அடிக்கும்போது நன்றாக இருக்கும் என்று நினைத்து சென்ற படங்கள் மரண மொக்கையாக இருக்கும். இதனால், விமர்சனம் படித்துவிட்டே போகவேண்டும் என்று நினைத்து கூகிள் கொண்டு தேடி பார்க்க, திரு.கேபிள் சங்கர் அவர்களது தளம் கண்ணில் பட்டது. அவரது விமர்சனம் பிடித்து இருந்தது, சாப்பாட்டு கடை வாயில் எச்சில் வரவழைத்தது, கொத்து பரோட்டா, சினிமா வியாபாரம் என்று சுவாரசியமாக இருக்க, பின்னர் பதிவுகளை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன். 24-ஜூன்-2012 அன்று ஆபீசில் அதிகம் வேலை இல்லை, அப்போது பதிவுகள் எப்படி எழுதுவது என்று படித்து பார்த்து, ஒரு "கன்னி" முயற்சியில் ஆரம்பித்ததுதான்............ கடல் பயணங்கள் ! இன்று நான் படித்து சுவைத்து அனுபவித்த பதிவர்களை பார்ப்பதிலும், ஒரு அளவிற்கு என்னுடைய பதிவுகள் அவர்களுக்கு தெரிந்தும் இருப்பது எனது சிறிய வெற்றி எனலாம் !



நீங்கள் மிகவும் ரசித்து எழுதும் பதிவு எது ? எதனால் அது உங்களுக்கு பிடிக்கும் ?

பொதுவாக சொல்வதென்றால், நான் ரசிக்காத எதையும் பதிவாக எழுதுவதில்லை இதனால் எனது எல்லா பதிவுகளுமே எனக்கு பிடித்தது எனலாம். உண்மையாக சொல்வதென்றால்...... ஊர் ஸ்பெஷல், அறுசுவை(சமஸ்), சிறுபிள்ளையாவோம், சாகச பயணம் ஆகிய பகுதிகள் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. இந்த பகுதிகளுக்காக நான் தேடி செல்லும்போது என்னை நானே மறக்கிறேன், நான் அதிகம் தெரிந்து கொள்கிறேன், எனது கர்வம் அழிகிறது என்பதனால் எனக்கு இது பிடித்தது என்று சொல்லலாம்.



சிறுபிள்ளையாவோம் பகுதியில் டென்ட் கொட்டகை, மட்டை ஊறுகாய் என்று சுவைப்பதெல்லாம் இந்த வயசுக்கு தேவையா ? உங்களது அலுவலகத்தில் இருப்பவர்கள் இதை பார்த்தால் சிரிக்க மாட்டார்களா ?

உடம்புக்குதானே வயதாகிறது, மனதுக்கு இல்லையே ! உண்மையை சொல்லுங்கள் உங்களது வாழ்க்கையில் எந்த பகுதி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்டால் எதை சொல்வீர்கள்...... மனதில் கவலை இல்லாமல் அலைந்த அந்த சிறு பிராயதைதானே. இன்று லட்சம் கொடுத்து கார் வாங்கினாலும் வராத அந்த சந்தோசம், அன்று ஒரு புளிப்பு மிட்டாய்க்கே வந்ததா இல்லையா ? இந்த பகுதிகள் எழுத நான் அதிகம் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை, உள்மனதில் இருக்கும் ஆசைகள் வடிவம் எடுக்கின்றன எனலாம்.

அலுவலகம் என்பது நான் செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுக்கிறது, நான் எப்படி இருக்கிறேன் என்பதை பார்த்து அல்ல. எனது வாழ்வில் அலுவலகம் ஒரு பகுதி, ஆனால் வாழ்க்கை அதையும் தாண்டியது அல்லவா. அது மட்டும் இல்லாமல்..... நான் எனக்காக வாழ்கிறேன், அடுத்தவரை அதற்காக இம்சிப்பதில்லை. இன்று வரை, எனது பதிவுகளை அலுவலகத்தில் எல்லோருமே ரசிக்கிறார்கள், யாருமே குறை சொன்னதில்லை......... எல்லோரும் நண்பர்களே !!




எப்படி ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு இவ்வளவு விஷயம் சேகரிக்கிறீர்கள் ? இதனால் உங்களுக்கு லாபம் என்ன ?

லாப நஷ்டம் பார்த்து சில விஷயங்களை செய்ய முடியாது, குழந்தையை வளர்க்கும்போது அதில் என்ன லாபம் வரும் என்றா யோசிக்கிறோம் ! இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி என்பது எனது மனதுக்கு நெருக்கமானது, தகவல் தொழில்நுட்ப துறையில் இருந்துக்கொண்டு இப்படிப்பட்ட இடங்களுக்கு செல்லும்போது பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது, வாழ்க்கையை பற்றிய புரிதல் கிடைக்கிறது. முக்கியமாக இதுவரை ஏட்டளவில் மட்டுமே இருந்து வந்த ராஜபாளையம் நாய், பத்தமடை பாய், ஊத்துக்குளி வெண்ணை என்று பல விஷயங்களை அது ஏன் பிரபலம் அந்த ஊர்களுக்கு, அது எப்படி உருவாகிறது / செய்யப்படுகிறது என்பதனை எனது அனைத்து சக்திகளையும் திரட்டி செய்கிறேன், இது கண்டிப்பாக ஆவணபடுத்தப்பட வேண்டிய விஷயங்கள்......... அதில் எனது சிறிய பங்களிப்பு அவ்வளவே ! இது இன்று வெகு சிலராலேயே படிக்கப்படுகின்றது என்பது வருத்தம் தந்தாலும், ஒரு நாள் இது எல்லோராலும் விரும்பி படிக்கப்படும்....... நம்பிக்கை இருக்கிறது, அதுதானே வாழ்க்கை !!



ஊர் ஸ்பெஷல் பகுதி போட்டோ பார்த்தால் எல்லாவற்றையும் முயன்று பார்த்துவிடுகிறீர்கள் போலும் ? நிஜமாகவா அல்லது வெறும் போஸ் ?மட்டுமா ?!

இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு செல்லும் போது நான் அங்கு வெறும் போட்டோ மட்டும் எடுத்துக்கொள்வதில்லை, அவர்களோடு பேசுகிறேன், அவர்களின் தொழிலை சுமார் ஒரு மணி நேரமேனும் செய்கிறேன், அவர்களோடு சாப்பிடுகிறேன். இது என்னை உலகத்தை உணர வைக்கிறது.... பெங்களுருவில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்துக்கொண்டு உலகத்தில் என்ன நடந்தாலும் எனக்கு கவலை இல்லை என்று இருந்தவனை, இப்படி செல்லும் பயணங்கள் அவர்களின் வாழ்க்கையை உணர வைக்கிறது, அது எல்லாவற்றையும் நான் எழுதுவதில்லை. உதாரணமாக சொல்வதென்றால், சுமார் 1000 ரூபாய் கந்து வட்டி வாங்கி கஷ்டப்பட்ட ஒரு முதியவருக்கு அதை திருப்பி செலுத்த அவர் என்னை கைகூப்பி தொழுத கண்ணீர், சேற்றில் நடந்து நாற்று நடும்போது குத்திய அந்த நெருஞ்சி முள், விருதுநகர் பரோட்டாவிற்கு மாவு பிசைந்தது, குமாரபாளையம் லுங்கி செய்யும் இடத்தில் பேசிய எல்லோருக்கும் காதில் இருந்த பிரச்சனை (காது குத்தும் அந்த மெசின் ஓசை), சின்னாளபட்டி சேலை அயன் செய்தபோது அந்த அயன் பாக்ஸ் தூக்கிய தோளின் வலி, மானாமதுரையில் மண் பானை செய்ய கூன் போட்டு உட்கார்ந்த அந்த தருணம், பவானி ஜமுக்காளம் செய்ய அந்த குழியினுள் உட்கார்ந்த அந்த வலி,  நாச்சியார் கோவில் குத்துவிளக்கு செய்யும்போது அங்கு இருந்த தூசி, கும்பகோணம் வெற்றிலை செடியில் வெற்றிலை பறிக்க ஏறியது (இறங்கி காலில் அடி வாங்கியது), சிவகாசி வெடி பார்க்க அவர்களுடன் தூக்கு வாளியில் சோறு கட்டிக்கொண்டு சென்றது, நாமக்கல் கோழி முட்டையை பிரசவிக்கும் கோழியின் வலி உணர்ந்த அந்த தருணம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு பதிவிலும் எனது உழைப்பும், வலியும் இருக்கிறது......... அது வெறும் போட்டோ போஸ் இல்லை என்பது அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.




நல்ல சாப்பாட்டு ராமனா இருக்கீங்க... எப்படி இப்படி சாப்பிட முடியுது ? உங்க உடம்பை பார்த்தாலே தெரியுது, குறைங்க...... பார்த்து எதாவது வியாதி வந்துட போகுது ?

இந்த கேள்விக்கு பதில் சொல்லி, சொல்லி அலுத்துவிட்டேன் எனலாம். சாப்பிடுவதற்கும், ருசிப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது, ஒரு உணவு நன்றாக இருக்கிறது என்பதற்காக இரண்டு அல்லது மூன்று வாங்கி உண்பதற்கும், அந்த ஒரு உணவையே ஒவ்வொரு பருக்கையையும் ருசித்து உண்பதற்கும் வித்யாசம் உண்டு. நான் பதிவுலக நண்பர்களுடன் சாப்பிட செல்லும்போது எப்போதும்  அட,என்ன அவ்வளவுதானா.... நான் நிறைய சாப்பிடுவீங்கன்னு நினைச்சேன் என்பார்கள், அது எனது உருவத்தை பார்த்து என்றாலும் அது ஜீன் சம்மந்தபட்டது, எனது தந்தை தாத்தா எல்லோரும் அப்படி இருந்து விட்டதால் நானும் அப்படியே. நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன் என்பதை இதன் மூலம் உரக்க சொல்லி கொள்கிறேன், எனது ஆரோக்கியத்திற்கு பிராத்திக்கும் நண்பர்களாகிய நீங்கள் இருக்கும்போது வருத்தம் எதற்கு !



எப்படி இப்படிப்பட்ட பயணங்களுக்கு நேரம் கிடைக்கிறது ?

எல்லோரும் தவறாமல் என்னை கேட்க்கும் கேள்வி இது ! சிறு வயதில் இருந்தே, ஒரு தேடலுடன் ஓடிக்கொண்டு இருப்பேன், அதைதான் இப்போதும் செய்துக்கொண்டு இருக்கிறேன்.  இந்த கேள்வியை படிக்கும்போதெல்லாம், மனதில் பதிந்த இந்த செய்தியைத்தான் நினைத்துக்கொள்வேன்....... கமல் படபிடிப்பில் இருந்த போது, அங்கு ஸ்டில்ஸ் எடுத்துக்கொண்டு இருந்த போட்டோகிராபரிடம் எனக்கு இன்னைக்கு எடுத்த போட்டோவில் கொஞ்சம் பிரிண்ட் போட்டு தர முடியுமா என்றாராம், அவரும் சரி என்று விட்டு அடுத்த நாளில் அது முடியவில்லை, அதற்க்கு அடுத்த நாளும் முடியவில்லை.... பின்னர் கமலை பார்த்தாலே ஒளிந்து ஓட ஆரம்பித்தார், ஒரு நாள் கமல் அவரை அழைத்து நான் போட்டோ கேட்டேனே என்ன ஆச்சு என்று கேட்க்க, போட்டோகிராபர் தன்னிடம் டைம் இல்லை என்று சொல்ல, கமலோ நினைச்சு பாருங்கள், நான் படம் நடிக்கிறேன், அடுத்த படத்தின் கதையை கேட்க்கிறேன், விழாக்களுக்கு செல்கிறேன், வீட்டிற்க்கு நேரம் ஒதுக்குகிறேன், போன் அட்டெண்ட் செய்கிறேன், இலக்கியவாதிகளை சென்று பார்க்கிறேன் இது எல்லாமே உங்களை போன்று எனக்கும் இருக்கும் 24 மணி நேரத்தில்தானே, என்று கேட்க........ நான் நினைத்து பார்த்தேன், அவரே இவ்வளவு செய்யும்போது நான் கொஞ்சமாவது எனது நேரத்தை பயனுள்ளதாக செய்ய வேண்டாமா ?! நேரம் இல்லை என்பது ஒரு சாக்குதானே தவிர உண்மை இல்லை !



அது சரி, எப்படி பதிவுகள் எழுத நேரம் கிடைக்கிறது ? எங்களுக்கெல்லாம் நேரமே இல்லாமல் கஷ்டப்படுகிறோம் !

உங்களை போலவே நானும் நேரமில்லை என்று ஒரு காலத்தில் குறைபட்டு கொண்டவன்தான். அது போலவே, உங்களை போல குழந்தையை ஸ்கூல் சென்று விட்டு விட்டு, வீட்டிற்க்கு காய் வாங்கி கொடுத்து, பேங்க் - கேஸ் -ஆதார் கார்டு என்று அலைந்து வாங்குவது, வீட்டில் வேலை செய்யாத பொருளை தூக்கிக்கொண்டு ரிப்பேர் செய்ய ஆள் தேடுவது, டிராபிக் ஜாமில் சிக்கி, கம்பெனி சென்று நேரம் காலம் கிடைக்காமல் உழைப்பது, திரும்பி வந்து குழந்தைகளுடன் விளையாடுவது, குடும்பத்தினரை வெளியில் கூட்டி செல்வது, பணத்தேவை, துரோகம், பார்ட்டி, சந்தோசம், நல்ல மனிதர்களின் சிநேகம், கிரெடிட் கார்டு தேவையா என்னும் தொல்லைகள், சில நொடி மென்சோகங்கள், கூத்தாடும் மனது என்று நானும் ஒரு மனிதன்தான் !! இதற்க்கு இடையில்தான் உங்களை சந்தோசப்படுத்தும் பதிவுகள் எழுதுவது, அதற்க்கான பயணம் மேற்கொள்வது, சிறுபிள்ளையாகி கோன் ஐஸ் தின்பது, புதிதாக என்ன டெக்னாலஜி வந்துள்ளது என்று பார்ப்பது, பேஸ்புக் சென்று அப்டேட் செய்வது, நண்பர்களின் பதிவுகளை படித்து அவர்களுக்கு பின்னூட்டம் இடுவது, புதிய நண்பர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது, புத்தகங்கள் படிப்பது, படம் பார்ப்பது, புது முயற்சிகள் யோசிப்பது, எனக்கு பிடித்த பாடல்கள் கேட்பது, இயற்கையை ரசிப்பது, உடற்பயிற்சி என்று நேரம் ஒதுக்கி கொள்கிறேன் ! ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் உங்களுக்கு என்று ஒரு மணி நேரம் இல்லாமலா போய்விடும்....... யோசித்து பாருங்கள், உங்களிடம் ஒருவர் நீங்கள்தான் அவரின் படத்தின் ஹீரோ ஆனால் சிக்ஸ் பேக் வேண்டும் என்றால் அன்றே ஜிம்மில் பழியாய் கிடக்க மாட்டீர்கள், எங்கிருந்து திடீரென்று வருகுது அந்த நேரம் !! உங்களுக்கு பிடித்ததை செய்ய நினைத்தால், நேரம் உங்களது முன் வந்து நிற்காதா என்ன ?!



அது என்ன எல்லா பதிவிலும் உங்களது புகைப்படங்கள், கண்ணு பட்டுவிட போகிறது ?

நான் பதிவு ஆரம்பிக்கும் முன்பு பல பதிவுகளை படித்து வந்தேன், அதில் பல பதிவுகள் எங்கோ ஒரு இடத்தில் இருந்து சுட்டு இங்கு போடப்பட்டு இருக்கும், அல்லது அந்த பதிவுகளை படித்தவுடன் அவர் அதை அனுபவித்துதான் எழுதி இருக்கிறாரா என்று தோன்றும். எப்போதுமே ஒரு விஷயத்தை நீங்கள் அனுபவித்து விட்டு, பின்னர் எழுதினால் அதில் இருக்கும் நம்பகத்தன்மையும், படிப்பவர்க்கு வரும் ஒரு பீலிங்ம் நன்றாக இருக்கும் என்பது நான் படித்த பதிவுகளில் இருந்து கற்ற உண்மை. நான் பதிவு எழுத ஆரம்பிக்கும்போது அந்த விஷயத்தை நான் உண்மையிலேயே முயன்று பார்த்துவிட்டுதான் எழுதுகிறேன் என்று நிரூபிக்க எனது புகைப்படத்தை அதனோடு போட்டேன், இன்று அதுவே பழக்கம் ஆகி விட்டது. நானும் உங்களைபோல் ஒருவன்தான், கையேந்தி பவனில் இருந்து ஸ்டார் ஹோட்டல் வரை சாப்பிடுகிறேன், இருந்தும் என்னிடம் பேசியவர்களுக்கு தெரியும்...... நான் எவ்வளவு எளிமையானவன் என்று, இதனால் கண்ணு பட்டுவிட போகிறது என்பதை விட என்னை விரும்புபவர்கள் அதிகம் இருக்கலாமே !



இவ்வளவு பயணம் செய்யும் உங்களை வீட்டில் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் ? திட்டுக்கள் எல்லாம் கிடையாதா ?!
 
உண்மையை சொல்வதானால், எனக்கு கிடைத்த மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என்பது வரம் என்பேன். எனது துணைவியார் முதலில் என்ன இது என்று நினைத்தாலும் நான் இந்த பதிவிற்காக படும் கஷ்டம் அவர் மட்டுமே அறிவார். நான் எடுக்கும் முயற்சிகளை ஊக்கப்படுத்தி, என் சிறுகுழந்தைதனத்தை ரசித்து என்னுடன் பயணிக்கும் இவருக்கு என்றுமே நான் கடமைபட்டுள்ளேன்....... நன்றி என்ற வார்த்தை மிகவும் சிறியது, என்னுடைய காதலை எப்படி வெளிபடுதினாலும் அது சிறிதாகத்தான் இருக்கும்.

வீட்டில் நான் எழுதும் பதிவுகளை வைத்து நடக்கும் சுவாரசியங்கள் அநேகம், உதாரணமாக..... ஒரு முறை வீட்டில் சமைத்து வைத்துவிட்டு சாப்பிடுங்கள் என்று சொல்ல, நான் சிறிது நேரம் ஆகும் என்று சொன்னேன். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, நானே எடுத்து போட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன், சாப்பிடும்போது புத்தகம் படித்துக்கொண்டு இருந்தேன், முடித்து விட்டு செல்ல எனது தந்தை வந்து சாப்பிட்டு பார்த்தவர் "ஐயோ, சாப்பாட்டில் உப்பே இல்லை"என்று சொல்ல எனது மனைவி வந்து சுவைத்து பார்த்துவிட்டு "இந்த மனுஷனுக்கு விவஸ்தையே இல்லை, ஊரெல்லாம் போய் சாப்பிட்டு வந்து அங்க உப்பு ஜாஸ்தி, இங்க காரம் கம்மின்னு எழுத வேண்டியது, ஆனால் வீட்டு சாப்பாட்டில் என்ன நல்லா இல்லைன்னு சொல்ல தெரியலை. இவரு எழுதறதையும் நாலு பேரு படிக்கிறாங்க, அவங்களை நாலு வார்த்தை கேட்கறேன் நானு..... "என்று சுமார் கால் மணி நேரம் அர்ச்சனை !! வீட்டுக்கு வீடு வாசப்படி !



இந்த பதிவுலகில் கிடைத்த மிக பெரிய சந்தோசம் என்று எதை சொல்வீர்கள் ?

யாரோ ஒருவர் போன் செய்து நான் உங்க பதிவை விரும்பி படிக்கிறேன், நல்லா எழுதறீங்க என்று சொல்லும்போது எங்களை இணைத்த இந்த பதிவுலகத்தைதான் நினைத்து பார்ப்பேன். ஒரு புத்தகத்தில் என்னுடைய எழுத்துக்கள் வருவது என்பது வேறு, இந்த பதிவுலகம் என்பது வேறு. ஒரு விஷயத்தை தேடி பார்க்கும் ஆர்வம் இருப்பவர்கள் இந்த பதிவுகளை பற்றி அறிந்து படிக்க ஆரம்பிக்கின்றனர், ஆகவே இங்கு உருவாகும் நட்பு என்பது ஆத்மார்த்தம் ஆனது என்பது எனது கருத்து !

இன்று உலகின் எந்த மூலைக்கு சென்று நான் வந்திருக்கிறேன் என்றாலும், என்னை பார்க்க, எனது பதிவுகளை விரும்பி படித்த நண்பர்களை சந்திக்க முடிகிறது. இவர்கள் எல்லோரும் எதையும் எதிர் பார்க்காமல் வருபவர்கள். பார்க்கும்போது இந்தாங்க கோவில் பிரசாதம், உங்களுக்கு பிடிக்குமே என்று வாங்கி வந்தேன், எங்க வீட்டிற்க்கு சாப்பிட வரணும், நானே செய்தது இந்தாங்க, நான் எழுதிய புத்தகம், உங்களோடு ஒரு போட்டோ எடுத்துக்கலாமா, வரப்ப ஒரு போன் பண்ணுங்க ப்ளீஸ், இந்தாங்க உங்க குழந்தைக்கு என்று அன்பை மட்டுமே பரிமாறிக்கொள்ளும் நட்பு என்பது ஒரு வரம், அதை இந்த பதிவுலகம் தந்து இருக்கிறது என்பதே எனது மிக பெரிய சந்தோசம் !!

அது போலவே இன்றைய பதிவுலகத்தில் பதிவர்கள் பலரும் நல்ல தோழமையுடன் இருக்கின்றார்கள். நான் மிகவும் விரும்பும் பதிவர்களான ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் அவர்களை முதலில் சந்தித்தபோது தாங்கள் பெரிய பதிவர்கள் என்ற பந்தா எதுவும் இல்லாமல் மிகவும் நட்புடன் பழகுகின்றனர். பலரும் பதிவுகளை பாராட்டி போன் செய்து பேசுகின்றோம். அன்றைய காலம் போல் ஈகோ என்பது இல்லாமல் பழகும் விஷயம் ஒரு ஹிமாலய சந்தோசம் !!
 


அப்போ, இந்த பதிவுலகில் சந்தித்த வருத்தங்கள் ஏதாவது ?

ஒரு ஊருக்கு செல்கிறோம், அதுவும் ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு விஷயம் சேகரிக்க செல்கிறேன் என்றால் என்னுடைய நேரத்தை, பணத்தை செலவழித்து செல்கிறேன். சில நேரங்களில் அந்த ஊரில் இருக்கும் நண்பர்கள் (பதிவை படிக்கும் நண்பர்கள் அல்லது எனது பால்ய கால நண்பர்கள்) சிலரிடம் அந்த விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் கொஞ்சம் உதவ முடியுமா என்று கேட்க்க, வாங்க பார்த்துக்கலாம் என்பார்கள். பல முறை பேசி, உறுதி செய்தபின் அங்கு சென்று போன் செய்ய ஒன்று போனை எடுக்க மாட்டார்கள், இல்லையென்றால் கடைசி நேரத்தில் முடியவில்லை என்று சாக்கு சொல்வார்கள். இதை குறை சொல்ல முடியாது, அவர்கள் சொல்லி வைத்த இடத்தில் என்ன நடந்ததோ, ஆனால் அங்கு இருக்கும்போது சந்திக்க கூட வரமாட்டார்கள். அவர்களின் ஊருக்கு, அவரின் அழைப்பை ஏற்று சென்று அவர்கள் சந்திக்க வராமல் சென்ற சம்பவங்கள் நிறையவே உண்டு !! அது மட்டும் அல்ல, அப்படி நடு தெருவில் தவிக்க விட்ட நண்பர்கள் பின்னர் போன் செய்து வருத்தம் தெரிவித்ததில்லை என்பது மிகவும் காயப்படுத்தப்பட்ட ஒரு விஷயம் !



2015ம் பதிவுலகில் கனவு அல்லது நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்பது என்ன ?

அது மிகவும் நீளமானது....... ஆனால் அது நிறைவேற வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது !

  • பதிவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு டூர் செல்ல வேண்டும் 
  • எல்லா பதிவர்களின் சிறந்த படைப்பை கொண்டு ஒரு புத்தகம் வர வேண்டும் 
  • அடுத்த பதிவர் திருவிழாவில் எல்லா பதிவர்களையும் சந்தித்து பேச வேண்டும் 
  • என்னுடைய பதிவுகளை புத்தகமாக வெளியிட வேண்டும் 
  • இன்று எல்லா பதிவர்களின் தொடர்ப்பு எண், விலாசம், அவரின் புகைப்படம் என்று இருக்கும் ஒரு இடம் என்பது இல்லை, அதற்க்கு ஒரு முயற்சி எடுக்க வேண்டும் 
  • புத்தக திருவிழாவிற்கு செல்ல வேண்டும் 
  • ஒரு அமைதியான வயல் வெளியின் நடுவே ஒரு நாள் தங்க வேண்டும் 
  • நான் விரும்பும் பதிவர்களின் வீடுகளுக்கு சென்று பேச வேண்டும் 
  • ஒரு டிவி பேட்டி கொடுக்க வேண்டும் !
இப்படி நிறைய நிறைய ஆசைகள் ! பார்ப்போம், இது நிறைவேறுகிறதா என்று :-)

 
இந்த ஆண்டு பதிவர் திருவிழா சென்றது, அங்கு நிறைய பதிவர்களை பார்த்தது, புதிய நண்பர்கள் கிடைத்தது என்று சந்தோசமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல், பதிவுகளும் நிறைய படித்தேன். சிலரது பதிவை படித்து நிறைய சந்தோசமும் ஆச்சர்யமும் பட்டிருக்கிறேன். இனி வரும் ஆண்டும் நல்ல ஆண்டாக அமைய வேண்டும், இன்னும் நிறைய நண்பர்களையும், புதிய வாய்ப்புகளையும் அமைய பெற வேண்டும். உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Labels : Suresh, Kadalpayanangal, Others, Questions faced, Questions, Answers, 2014, The questions I faced, New year, What you want to ask, ask me

Wednesday, December 24, 2014

திரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 !!

சமீபத்தில்தான் புத்தாண்டு கொண்டாடியது போல இருக்கிறது, அதற்குள் இந்த வருட கடைசி வந்து விட்டது ! சற்றே திரும்பி பார்க்கும்போது இந்த ஆண்டு பல சந்தோசங்களை கொடுத்து இருக்கிறது, படிப்பினையையும் கொடுத்து இருக்கிறது....... அதுவும் பதிவுலகில் இந்த ஆண்டு நிறைய நண்பர்களை பெற்றுள்ளேன் என்று சந்தோசமாக இருக்கிறது. எனது எழுத்துக்களையும், என்னையும் உரிமையுடன் தலையில் குட்டியும், கொண்டாடியும் என்று இந்த ஆண்டு ஒரு நல்ல ஆண்டாகவே இருந்தது, அதற்க்கு நான் எடுத்த முயற்சியை நினைத்து பார்த்தால், நான்தான் இப்படி ஊர் சுற்றினேனா, நானா இப்படியெல்லாம் பதிவுகள் எழுதி இருக்கிறேன் என்று ஆச்சர்யமாக இருக்கிறது !! வாருங்களேன், என்னோடு சற்றே திரும்பி பார்த்துவிட்டு வரலாம்.......


கடல் பயணங்கள்........ ஒரு புதிய விடியலை நோக்கி !!

***************************************************************************************************************************************
பதிவுலகில் நண்பர்கள் என்பது வரம், அதுவும் நண்பர்கள் மனதில் நினைப்பதை பகிர்ந்து கொள்வதும் அல்லது அவர்களது தளத்தில் என்னுடைய தளத்தை அறிமுகம் செய்வதும் என்று இருக்கும்போது மனதில் ஆனந்தமாக இருந்தது...... இதே ஆனந்தத்தை நான் இது போல் அறிமுகம் செய்து இருக்கிறேனா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது, ஆகவே இந்த ஆண்டு முதல் என்னுடைய பதிவுகளில் நான் பார்த்து, ரசித்த பதிவுகளை அறிமுகபடுத்த போகிறேன், இது பலருக்கும் சென்று அடைந்து அவர்களும் ஆனந்திககலாமே !! இதோ பதிவர்களின் அன்பு அவர்களது எழுத்துக்களில்......

நண்பர் சௌந்தர் ராமன் அவர்கள், என்னுடைய பதிவுகளில் இருந்து எடுத்த புகைப்படங்களை "உன் சமையலறையில்" படத்தின் பாடலோடு இணைத்து ஒரு வீடியோ செய்து இருந்தார்....... அதை காண இங்கே சொடுக்கவும்....... "இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது....."
அதை பற்றி நான் எழுதிய பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்...... பதிவு 







என்னுடைய பேவரிட் பதிவுலக ஜாம்பவான் "திரு. ஜாக்கி சேகர்" அவர்களை பெங்களுரு வந்த போது சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, வெகு இயல்பாக உண்மையுடன் பழக கூடிய நண்பராக அதன் பின்னர் மாறினார் (அவரின் நண்பராக நான் என்று சொல்லலாம் !!). அவரோடு அன்று விடைபெறும்போது ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன், அதை தனது பதிவுகளில் போட்டு என்னுடைய வலைதளத்தையும் குறிப்பிட்டது இந்த வருடத்தின் மிக பெரிய சந்தோசம் எனலாம்........ அதை படிக்க இங்கே சொடுக்கவும் "பெங்களுரு டேஸ்"


முதன் முதலில் நான் படித்த பதிவே திரு.கேபிள் சங்கர் அவர்களதுதான்,  அதன் பின்னரே இந்த பதிவு உலகம் அறிமுகம் ஆனது. அவரது சாப்பாட்டு கடை பதிவுக்கும், சினிமா விமர்சனத்துக்கும் நான் ரசிகன், அவரை சந்திக்க மாட்டோமா என்று ஆவலோடு காத்துக்கொண்டு இருந்த நேரம் இந்த ஆண்டு நிறைவேறியது. அதுவும் அவருடன், அவர் ஆர்டர் செய்த உணவை அவரோடு உண்டது சந்தோசமான அனுபவம் !


எப்படியாவது இந்த பதிவர் சந்திப்பில் இவரை சந்திக்க வேண்டும் என்று ஆவலோடு இருந்தது திரு.கணேஷ் பாலா அவர்களுக்காக. கோவை ஆவியும், ஸ்கூல் பையன், திடம் கொண்டு போராடு சீனுவும் இவரை பற்றி வாரத்திற்கு ஒருமுறையாவது முகநூல் பக்கத்தில் ஏதாவது செய்தி போட்டுக்கொண்டு இருப்பார்கள், இதனால் ஆவல் இன்னும் அதிகம் ஆனது. பதிவர் சந்திப்பில் இவரை சந்தித்தபோது எந்த பந்தாவும் இல்லாமல் உரிமையோடு உரையாடி, இன்று எனக்கும் இவர் அன்பு "வாத்தியார்". நான் 500'வது பதிவு போடும்போது அதை அழகு செய்ய ஒரு பேனர் வேண்டும், எப்படி செய்வது என்று கேட்க போன் செய்ய, மூன்று விதமான கண்களை பறிக்கும் பேனரை அனுப்பி அன்பினால் என்னை திக்கு முக்காட செய்தார்...... அவரது முகநூல் பக்கத்தில் என்னை பற்றி பகிர்ந்தபோது !


"மெட்ராஸ் பவன்" சிவகுமார்..... இவரை மதுரை பதிவர் சந்திப்பில் சந்தித்து இருந்தேன், இன்று வரை அதிகம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனாலும் இவரது நகைச்சுவையான பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன். இவர் தனது தளத்தில் என்னுடைய கடல்பயணங்கள் பற்றி எழுதி இருந்ததை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். நல்ல நண்பரும், ரசிகருமான இவரை நேரில் சந்திக்க எப்போதும் ஆவலாய் இருக்கிறேன்.
அவரது பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்...... மெட்ராஸ் பவன் 


பதிவுலகில் இவரை தெரியாதவர்கள் என்பது மிக மிக குறைவே, நான் இதுவரை எழுதி வருவதற்கு காரணமும் இவரே. என்னுடைய பேட்டி மதுரை தினமலர் இதழில் வந்து இருக்கிறது என்று தெரிந்தவுடனே எனக்கு அதிகாலையில் போன் செய்து வாழ்த்தி, எல்லா தளத்திலும் இதை பதிவு செய்த அற்புத மனிதர். நான் திண்டுக்கல் செல்லும்போது எல்லாம் தவறாமல் சென்று பார்த்து வருவேன்.... அவர் முகநூளில் அந்த பத்திரிக்கை செய்தியை பகிர்ந்த போது எழுதியது !


இந்த வருடம் பத்திரிக்கையில் கடல்பயணங்கள் தளம் அதிகம் பகிரப்பட்டது, இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் திரு.சம்பத் அவர்கள் என்னை தொடர்ப்புக்கொண்டு ஒரு பேட்டி எடுத்தார், அது வந்த பக்கத்தை முகநூளில் பகிர்ந்தபோது என்னுடைய அன்பு நண்பர் திரு.சீனு (திடம் கொண்டு போராடு) மனம் திறந்து எழுதிய வரிகள் என்னை கூச்சப்படுதியதும், சந்தோசபடுதியதும் எனலாம். சீனுவின் பயண கட்டுரைகளை படித்தவர்கள், அவருடனேயே பயணம் செய்வது போல ஒரு உணர்வு தரும், அந்த அளவிற்கு எழுத்து ஆற்றல் உண்டு. பதிவுலகில் ஒரு நல்ல இடம் இவருக்கு காத்திருக்கிறது என்பேன்.


பெங்களுரு நண்பர் திரு.ஜெகதீஷ் அவர்கள் குறும்புடன் செய்து இருந்த ஒரு புகைப்படம், மிகவும் ரசித்தேன் ! இவர் பெங்களுருவில் இருந்தாலும் உணவு பிரியர், என்னை விட இவர்க்கு தகவல் நிறைய தெரிந்து இருக்கிறது, இவர் பதிவு எழுத ஆரம்பித்தால் நானே விரும்பி படிப்பேன், அந்த அளவுக்கு நல்ல ரசிகர், நண்பரும் கூட...... இந்த புகைப்படத்தை போட்டவர், கூட ஒரு ஹீரோயின் போட்டு இருக்கலாம் :-)




***************************************************************************************************************************************
நண்பர்கள் அவர்களுடைய தளத்தில் பாராட்டியது ஒரு சந்தோசம் என்றால், இன்னொரு சந்தோசம் எனது பெயர் முதல் முறையாக, அதுவும் கடல் பயணங்கள் என்ற தளம் பற்றிய செய்தி முதல் முறையாக மூன்று பேப்பரில் வந்து இருந்தது அதுவும் எனது ஸ்பெஷல் பேட்டியுடன். இதை படித்த நிறைய பேர், என்னை முகநூலில் இன்று தொடர்கின்றனர், பலர் போன் மூலம் பாராட்டினர். இது திரு. தமிழ்வாசி பிரகாஷ், திரு.திண்டுக்கல் தனபாலன், திரு.சரவணன் செல்வராஜன் அவர்களது மூலம் கிடைத்த வாய்ப்பு..... நன்றி நண்பர்களே !

28-அக்டோபர்-2014, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தாளில் வந்தது........ நன்றி திரு.சம்பத்  !

09-நவம்பர்-2014 அன்று தினமலர் நாளிதழில் வந்த செய்தி.... நன்றி திரு.எட்வின் !
21-நவம்பர்-2014 அன்று "தி ஹிந்து" தமிழ் நாளிதழில் வெளி வந்த செய்தி.......நன்றி திரு.மகேஷ் !
இந்த செய்திகள் வருவதற்கு முன்பே "ஹாலிடே நியூஸ்" என்னும் மாத இதழில் எழுத முடியுமா என்று கேட்டு என்னை அணுகினார் இந்த பத்திரிக்கையின் இணை ஆசிரியர் திரு.செந்தில்குமார். அவர் கொடுத்த ஊக்கத்தில் அக்டோபர் மாதத்தில் இருந்து பயண அனுபவங்களை எழுதி வருகிறேன்..... படித்து பார்த்து விட்டு சொல்லுங்களேன் !



**************************************************************************************************************************************

 பதிவர் திருவிழா :

ஆபீசில் ஒரு மீட்டிங் நடத்துவதற்கே நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கிறது, இதில் பதிவர் திருவிழா என்பது அதுவும் வேலை பளுவுக்கு இடையில் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று, அதை சாத்தியமாக்கி காட்டினர் மதுரை மைந்தர்கள் !! அந்த பதிவர் திருவிழாவில் நிறைய பதிவர்களை பார்த்தது, பேசியது என்பது சந்தோசமான அனுபவம்.... அதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து நினைத்தே நாள் சென்று விட்டது, ஆனாலும் இங்கே பதிவர்களுடன் எடுத்த போட்டோ இந்த வருடத்தின் ஹிட் சந்தோசம் !!


பதிவர்கள் திரு.பால கணேஷ், திரு.அரசன் அவர்களுடன்.....

பதிவர்கள் திரு.சங்கரலிங்கம், திரு.ஸ்கூல் பையன் உடன்.....

பதிவர்கள் திரு.கோவை ஆவி, திரு.ரூபக் ராம், திரு.சிவகாசிக்காரன் உடன்......

பதிவர் திருமதி. துளசி கோபால் உடன்.....

பதிவர்கள் திரு.சங்கரலிங்கம், திரு.ரமணி அவர்களுடன்.....

பதிவர்கள் திரு.தமிழ்வாசி பிரகாஷ், திரு. கோவை ஆவி, திரு.ஸ்கூல் பையன், திரு.பகவான்ஜி, திரு.கில்லர்ஜி உடன்....

பதிவர்கள் உடன் ஒரு காபி தருணம்..... திரு.மகேந்திரன் அவர்களின் தொகுப்பு அன்று அருமை !!
***************************************************************************************************************************************

பதிவர் சந்திப்பு மட்டும் இல்லாமல், தனி சந்தர்ப்பத்திலும் நண்பர்களை சந்திப்பது அல்லது சக பதிவர்களை சந்திப்பது என்று நடக்கும், அந்த தருணங்கள் மிகவும் அழகானவை. சிரிப்பும், கூத்தும் என்று நடக்கும் அந்த சந்திப்புகள் மிகவும் சந்தோசம் தரும். சில நேரத்தில் பேச்சு சுவாரசியத்தில் போட்டோ எடுக்க மறந்தது உண்டு, அவ்வாறு அமுதா கிருஷ்ணன், சிங்கப்பூர் வினோத் அமிர்தலிங்கம், சிங்கப்பூர் சந்தோஷ், கும்பகோணம் ஆனந்த், பதிவர் சந்திப்பில் ஏராளமான பதிவர்கள், கிரேஸ், குடந்தை சரவணன் என்று நிறைய பேர் உண்டு. போட்டோ எடுத்த சில தருணங்கள்.......

சென்னையில்..... ஸ்கூல் பையன், ஜாக்கி சேகர், நாஞ்சில் மனோ, கோவை ஆவி, "வாத்தியார்" பால கணேஷ் !

சென்னையில்....... "மெட்ராஸ் பவன்" சிவகுமார், கோவை ஆவி !

"திடம் கொண்டு போராடு" சீனு மற்றும் கோவை ஆவியுடன் !
***************************************************************************************************************************************
ஒவ்வொரு ஆண்டும், இந்த பயணத்தில் புது இடங்களையும், நண்பர்களையும் சந்திக்கிறேன். இந்த 2015ம் ஆண்டும் இந்த பயணங்கள் சுவையோடும், அறிவு தேடலோடும், கண்களுக்கும் மனதுக்கும் குளிர்சியோடும், எழுதும் எழுத்துக்கள் இன்னும் செறிவோடும், சந்திக்கும் நண்பர்கள் இன்னும் நெருக்கதோடும் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்....... ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேடலோடு ஆரம்பிக்கிறது, அந்த தேடல் என்னை இயக்குகிறது, அதையே உங்களுடன் பகிர்கிறேன் ! இந்த ஆண்டும் கடல் பயணங்கள் இனிதோடு ஆரம்பிக்க உங்களது வாழ்த்துக்களோடு துடுப்பு போட ஆரம்பிக்கிறேன்........ பயணங்கள் முடிவதில்லை !!

2015ம் ஆண்டு இனிய உதயத்துடன் ஆரம்பிக்கட்டும்.....!!


Labels : Suresh, Kadalpayanangal, Others, Look back 2014, Sweet memories, 2014 achievements, Year end, Eve of the year, end of 2014, What I did in 2014, Blogger.com, Blogger, Memories, Cherishing moments