Tuesday, January 7, 2014

ஊர் ஸ்பெஷல் - சிவகாசி பிரிண்டிங் (பகுதி - 2)

சென்ற பகுதியில் (சிவகாசி பிரிண்டிங் - பகுதி - 1), என்னை திருப்பி போட்டு புரட்டி எடுத்ததை சொல்லி இருந்தேன்..... யாபகம் இருக்கிறதா ?! ம்ம்ம்ம்..... அதுபோலவே என்னை இந்த முறையும் நிறைய கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்கவே எனக்கு பயமாக இருந்தது எனலாம். ஆனாலும், உங்களுக்காக (?!!) கேள்வி கேட்டேன்...... எனது மனதில் இருந்த முக்கியமான கேள்வி, எப்படி ஒவ்வொரு வருடமும் வரும் பண்டிகையை சிவகாசி முழுக்க ஒரே மாதிரி தெரிந்து கொள்கிறார்கள் என்பது. அதாவது நமக்கெல்லாம் காலேண்டர் வந்த பிறகுதான் தீபாவளி எப்போது என்று தெரியும், அவர்களுக்கு எப்போது தெரியும் என்பது. இவர்களுக்கு ஒரு பொதுவான ஒரு சங்கம் இருக்கிறது, அங்கு ஒவ்வொரு வருடமும் எந்த நாள், எந்த பண்டிகை, எது நல்ல நேரம் என்று பல பல வருடங்களுக்கு குறித்து வைத்துக்கொண்டு எல்லா பிரிண்டிங் இடங்களுக்கும் மெயில் சென்று விடுகிறது. சில காலேண்டர் வட மாநிலங்களுக்கும் செல்வதால் அவர்களுக்கும் தனியாக அவர்களது பண்டிகையை போட்டு பிரிண்ட் செய்கின்றனர். நான் அடுத்த ஐந்து வருட தீபாவளி நாளை குறித்து வைதுக்கொண்டேனே :-)



சரி, சென்ற முறை ஆப் செட் பிரிண்டிங் பற்றி விரிவாக பார்த்தோம். அதில் முக்கியம் என்பது இந்த பிரிண்டிங் டெம்ப்லேட். அதை அலுமினியத்தில் எப்படி செய்கிறார்கள் என்பதை எல்லாம் நான் பார்த்ததை எல்லாம் நான் எழுதினால் இந்த பதிவு ஒரு புத்தகம் போடும் அளவு வந்துவிடும் என்பதால் அது எப்படி இருக்கும் என்ற படம் மட்டும் இப்போது போதும். அந்த அலுமினியம் பிரிண்டிங் டெம்ப்லேட்டில் கடவுள் படங்கள் கருப்பு வெள்ளையில்தான் இருந்தன..... மனிதனும் மேசினும்தான் அதற்க்கு சாயத்தை பூசுகின்றனர் !! இவ்வளவு பிரிண்டிங் செய்கிறார்களே அவர்களுக்கு இந்த கலர் எல்லாம் கலக்க எவ்வளவு பெரிய இடம் வேண்டும் என்று யோசித்தால் அவர்கள் காண்பித்த இடம் ரொம்பவே சிறியது !!

அலுமினியம் டெம்ப்ளேட்...... இதுதான் காலெண்டரை உருவாக்குகிறது !

இந்த படங்கள் எல்லாம் அந்த கருப்பு வெள்ளை அலுமினியம் டெம்ப்ளேட் உருவாக்கியதுதான் !

கடவுளுக்கு கலர் சேர்ப்பது இதுதான் !
அடுத்தது, பிரிண்டிங் மெசின் ரெடி, அது ப்ரிண்டும் ஆகி விட்டது, அதை நூறு நூறாக பிரிக்க வேண்டும்..... அதை மெசின் கொண்டு சிலர் எண்ணுகின்றனர், ஆனால் சிவகாசியில் இன்றும் எல்லோரும் கைகளால்தான் எண்ணுகின்றனர். எச்சில் எல்லாம் தொட்டு எண்ணினால் நாக்கு கையோடு வந்துவிடும் என்பதால் அவர்கள் எண்ணும் முறையை பார்க்க முடியுமா என்றபோது அவர் என்னை கூட்டி கொண்டு சென்றார். பேப்பரை சற்று மடக்கி, பத்து பத்தாக எண்ணி, அதை நூறு வந்தவுடன் சரேலென்று மடக்கி எடுத்து வைக்கின்றனர்...... இந்த வாக்கியத்தை நான் எழுதி முடிப்பதற்குள் அவர் சுமார் ஐந்தாயிரம் வரை முடித்து விடுகின்றார் என்றால் அவரின் வேகத்தை பாருங்கள் !

பேப்பரை இப்படிதான் எண்ணுகின்றனர் !
என்னை சுற்றி பார்த்தால் எங்கெங்கும் லக்ஷ்மி, பெருமாள், பிள்ளையார், அல்லா, ஜீசஸ், குருநானக் என்று கடவுள்கள் இறைந்து கிடந்தார்கள். ஒவ்வொன்றும் பிரிண்ட் செய்து முடித்துவிட்டு அதை பிரித்து வைத்து, அழகாக அடுக்கி இருந்தனர். எங்கெங்கு காணினும் கலர் கலராக கடவுளடா....!! ஒரு வெள்ளை தாள் நொடியில் கடவுளாக மாறும் வித்தையை பார்ப்பது என்பது கண்கொள்ளா காட்சி !




சிதறி கிடக்கும் கடவுள்கள் !

இந்த வருடம் சிறப்பாய் அமையவேண்டும் என்று கடவுள்களுடன் நான் !
என்னதான் காலேண்டர் பார்க்க வந்து இருந்தாலும், அங்கு பார்வையை ஓட்டியபோது இப்போதிருந்தே ஸ்கூல் புத்தகங்களும், சிறுவர்களுக்கான படங்களும் அங்கு அச்சடிக்கப்பட்டு வருகின்றது என்பது புரிந்தது. அவர்களோடு பேசியதில் இந்த தொழிலில் எப்போதும் ஏதேனும் வேலை இருந்து கொண்டே இருக்கும் என்பதும், ஒரு சில மாதங்கள் மட்டும் (மே, ஜூன்) மாதங்களில் மட்டும் சிறிது வேலை பளு குறைவாக இருக்கும் என்பது புரிந்தது. மற்ற வேளைகளில் காலேண்டர், டயரி, பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், லேபிள் என்று பல வகைகள் அச்சிடப்பட்டு கொண்டே இருக்கும் என்றார்.



சரி, காலேண்டர் அச்சு அடித்தாகி விட்டது, பிரித்தும் விட்டார்கள், அடுத்தது...... தரம், ரகம் வாரியாக மூட்டை கட்டி கேட்டவர்களுக்கு அனுப்பவேண்டியதுதான் பாக்கி ! கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் அதில் சில சிக்கல்களும் இருக்கிறது. எங்களிடம் இரண்டு லக்ஷ்மி காலெண்டரை காட்டி இதில் என்ன வித்யாசம் காண்கிறீர்கள் என்றார், எனது கண்களுக்கு இரண்டுமே ஒன்றாகத்தான் தெரிந்தது !! ஆனால், உண்மை என்பது..... பேப்பர் குவாலிட்டி, பிரிண்ட் மை, கட் செய்த விதம் என்று அவர் ஒவ்வொன்றாக விளக்கியபின்தான் அதன் வித்யாசம் தெரிந்தது. இதில் எதையாவது மாற்றி அனுப்பினால் நஷ்டம்தான் ! காலேண்டர் எல்லாம் ஒழுங்காக அடுக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியீடு கொடுத்து, ஒவ்வொன்றையும் ஒழுங்காக பார்சல் செய்து, அன்று லோடு ஏற்றி முடித்தவுடன் ஒரு பெருமூச்சு வரும் பாருங்கள்...... அதுதான் உங்களின் அடுத்த வருடத்தை சிறப்பாக ஆக்குகிறது !!


காலேண்டர் படங்கள் ரெடியாக இருக்கு வேண்டுமா !


பார்ஸல் போட்டாச்சு....உங்களுக்கு விரைவில் வரும் !
2014ம் வருடம் பண்டில் பண்டிலாக.....
சரி, இந்த காலேண்டர் எல்லாம் என்ன விலையில் கிடைக்கிறது ? எந்த காலேன்டரும் 1000, 500, 250 என்ற முறையிலேயே விற்க்கபடுகிறது. ஒரே தாளில் வரும் கலர் காலேண்டர் ஒன்று சுமார் 14 ரூபாய் வருகிறது. அதில் உங்களுக்கு சுமார் 30% வரை இங்கு வாங்கும்போது தள்ளுபடி கிடைக்கும். தள்ளுபடி எல்லாம் போக உங்களுக்கு அது பத்து ரூபாய் வரும், ஆனால் கடையில் அதை நாம் முப்பது ரூபாய் வரை வாங்குகிறோம் !! இங்கு வந்து மொத்தமாக நீங்கள் வாங்க நிறைய நல்ல அச்சகங்கள் இருக்கின்றன, எல்லோரும் இன்முகத்துடன் பேசுகின்றனர். சிவகாசி அச்சு தொழிலில் மட்டும் பிரபலம் இல்லை, விருந்தோம்பலிலும் என்று அன்று நாங்கள் செல்லும்போது தெரிந்தது ! சிவகாசியை எல்லோரும் குட்டி ஜப்பான் என்று அழைக்கிறார்கள், இதை எல்லாம் பார்த்தபிறகு இனி ஜப்பானை குட்டி சிவகாசி என்று அழைக்கலாமோ என்று தோன்றுகிறது !

Labels : Oor special, Sivakasi printing, Suresh, Kadalpayanangal, offset printing



18 comments:

  1. வணக்கம்

    சிறப்பாக உள்ளது...தங்களின் தொழில் புதிய ஆண்டில் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்.
    இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்..... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் எனது வாழ்த்துக்களை தெரிவியுங்கள் !

      Delete
  2. ஒரு வெள்ளை தாள் நொடியில் கடவுளாக மாறும் வித்தையை பார்ப்பது என்பது கண்கொள்ளா காட்சி !

    சுவாரஸ்யமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே..... அந்த நொடியில் நீங்கள் ஆச்சர்யபடுவீர்கள் கடவுளை நினைத்தும், டெக்னாலஜி நினைத்தும் !

      Delete
  3. தினமும் காலையில் எழுந்து கிழித்துப் போடும் ஒரு தாளின் பின் எத்தனை உழைப்பிருக்கு!? இனி காலண்டரைப் பார்க்கும்போதெல்லாம் அதுதான் நினைவுக்கு வரும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோதரி..... ஆனால் ஒரு சின்ன தாள் உருவாக நிறைய மெனகெட வேண்டி இருக்கிறது இல்லையா !

      Delete
  4. அருமை... அருமை... வேறு வார்த்தைகளே இல்லை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்...... உங்களை இந்த பதிவு கவர்ந்தது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  5. எல்லாக் கடவுளும் ஒரே இடத்துல அமைதியா இருக்குமிடம் இதுதான் போல. நல்ல பகிர்வு .

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராபர்ட்..... சரியாக சொல்லி இருக்கின்றீகள் !!

      Delete
  6. இந்த வாக்கியத்தை நான் எழுதி முடிப்பதற்குள் அவர் சுமார் ஐந்தாயிரம் வரை முடித்து விடுகின்றார் என்றால் அவரின் வேகத்தை பாருங்கள் // ஸ்ஸப்பா .....

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.... உண்மைதான் அவர் எண்ணிய வேகம் கண்டு மிரண்டு விட்டேன், ஆனால் அவரிடம் அந்த கர்வம் கொஞ்சமும் இல்லையே !

      Delete
  7. காலண்டர் தயாரிப்பதை எளிமையாக புரியும் படி விவரித்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்...... எனக்கே நான் நன்றி சொல்லியது போல ஒரு பீலிங் ! :-)

      Delete
  8. பல படங்களுடன் அசத்தலாக சொல்லியிருக்கிறீர்கள்... சங்கம் வைத்து நாள் நேரம் குறிப்பிடுவது புதிய தகவல்... கலக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. உங்களை விடவா நான் கலக்குறேன்..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே !

      Delete
  9. ஜப்பானை குட்டி சிவகாசி என்று அழைக்கலாமோ...! why not ?

    ReplyDelete
    Replies
    1. அப்போ இன்றில் இருந்து அப்படியே அழைப்போம் !! நன்றி கிருஷ்ணா !

      Delete