Monday, January 27, 2014

ஊர் ஸ்பெஷல் - போடி ஏலக்காய் (பகுதி - 2)

சென்ற வாரத்தில் ஊர் ஸ்பெஷல் - போடி ஏலக்காய் (பகுதி - 1) படித்த நிறைய பேர் "இதுதான் ஏலக்காய் செடியா !!" என்று ஆச்சர்யப்பட்டது கண்டு மகிழ்ந்தேன். வாங்க இந்த வாரம் இன்னும் விரிவாக பார்ப்போம். செப்டம்பர் முதல் ஜனவரி வரை ஏலக்காய் வரத்து அதிகமாக இருக்கும். முதலில் கிழங்குடன் கூடிய ஏலக்காய் தட்டையை வைத்தபிறகு 18 முதல் 24 மாதங்கள் கழித்து ஏலக்காய் சாகுபடி செய்ய முடியும். அதன்பிறகு 45 முதல் 60 நாட்கள் இடைவெளிவிட்டு வருடத்திற்கு ஆறு முறை ஏலக்காய் அறுவடை செய்யலாம். ஓர் ஏக்கருக்கு சுமார் 500-600 கிலோ ஏலக்காய் (உலர்த்தப்பட்ட ஏலக்காய்) கிடைக்கும். கூலி ஆட்களின் சம்பளம், களையெடுப்பு, மருந்து அடிப்பு என ஓர் ஏக்கருக்கு வருடத்தின் பராமரிப்பு செலவு சுமார் 1.20-1.50 லட்சம் ரூபாய் ஆகும். முதல் மூன்று முறை அதிகமாகவும், அடுத்த மூன்று சாகுபடிகளில் முன்பு கிடைத்ததைவிட கிடைக்கும் ஏலக்காயின் அளவு குறைவாகவும் இருக்கும். சென்ற வாரம் ஏலக்காயை செடியில் இருந்து பறித்து இருந்தோம், இப்போது அதை  காய வைக்க வேண்டும். ஏலக்காயை காய வைக்க வேண்டிய மெசின் சுமார் ஒன்றரையில் இருந்து இரண்டு லட்சம் வரை ஆகிறது. வெளியில் கொடுத்து காய வைத்தால் ஒரு கிலோவிற்கு பத்து ரூபாய் கேட்ப்பார்கள். சிறிய ஏலக்காய் தோட்டம் உடையவர்கள் இப்படி வெளியில் கொடுத்து காய வைப்பார்கள், பெரிய தோட்டம் உடையவர்கள் அவர்களாகவே ஒன்றை அமைத்து கொள்வார்கள்.

ஏலக்காயை பற்றிய செய்திகளுடன்.....உங்கள் !!
ஏலக்காய் உலர்த்தும் ரூம்
இதன் மேலேதான் ஏலக்காயை போடுவார்கள், கீழ் இருந்து வெப்பம் வரும் 
இதுதான் கீழ் இருக்கும் பகுதி, வெப்பம் இதன் மூலம் மேலே செல்லும் 
இது எப்படி வேலை செய்கிறது என்று ஆர்வமாக கேட்க, என்னை அவர் கூட்டி சென்று காண்பித்தார். நான்கு அல்லது ஆறு சதுர அடியில் ஒரு பெரிய செவ்வக வடிவ இடம் ஒன்று இருக்கிறது, இதன் உள்ளே சுமார் 1800 ~ 2000 கிலோ வரை ஏலக்காயை போட்டு காய வைக்கலாம். ஐந்து கிலோ நீங்கள் பறித்த ஏலக்காயை போட்டால் உங்களுக்கு சுமார் ஒரு கிலோ மட்டுமே நீங்கள் இப்போது கடையில் வாங்கும் வகையான ஏலக்க்காயாக கைக்கு கிடைக்கும். அதை அப்படி ஆக்க அவர்கள் அந்த அறையை சூடு படுத்துகின்றனர். ஏலக்காயை வலை போல இருப்பதில் கொட்டுகின்றனர், பின்னர் கீழே இருந்து வெப்பத்தை சீராக, மெதுவாக செலுத்துகின்றனர்...... சுமார் 30 ~ 36 மணி நேரம் வரை இப்படி செலுத்த வேண்டும் ! இந்த வெப்பத்தில் அந்த காய் சுருங்கி, உள்ளே இருக்கும் விதையை சுருக்கி உங்களுக்கு அந்த ஏலக்காய் கிடைக்கிறது !
ஏலக்காய் உலர்த்தும் எந்திரம்
இதுதான் வலை, இதைதான் ஏலக்காய் பிரித்து போட பயன்படுத்துவார்கள் !
 பெரும்பாலும் சிறு தோட்டம் உடையவர்கள்தான் இங்கே வருகிறார்கள், அல்லது பெரிய தோட்டம் வைத்து இருப்பவர்கள் பல விதமான ஏலக்காய் பயிரிட்டு கொண்டு வரும்போது அதை இப்படி ஒரே தொட்டியில் போடா முடியுமா என்று நீங்கள் நினைத்தால்...... அருமை, நீங்கள் கடல்பயணங்கள் படித்து முன்னேறி விட்டீர்கள் என்று அர்த்தம் :-).  ஒவ்வொரு ஏலக்காய் வகையை போட்டவுடன் அவர்கள் அதன் மேல் ஒரு சீட்டில் உங்களது பெயர் அல்லது ஏலக்காய் வகையை எழுதி மேலே போடுகின்றனர். பின்னர், அதன் மேலே ஒரு வலையை போடுகின்றனர் (படத்தை பாருங்கள் புரியுமே !). இதனால் ஏலக்காய் மிக்ஸ் ஆவது தடுக்கபடுகிறது. சரி, இதற்க்கு வெப்பம் எங்கு இருந்து வருகிறது என்று பார்ப்போமா ?!
இந்த இடத்தில்தான் விறகு போட்டு எரிப்பார்கள்.... இந்த வெப்பம் மேலே செல்லும்
விறகு ரெடி.... ஏலக்காய் ரெடியா !
விறகு போட்டாச்சு.... ஏலக்காய் இங்கதான் போடணுமா :-)
கீழே ஒரு சிறிய விறகு எரிக்கும் இடம், அதனில் இருந்து வரும் வெப்பத்தினை ஊதி தள்ள ஒரு மோட்டார் அவ்வளவுதான் !!  வெறும் இரண்டு அல்லது மூன்று விறகு மட்டுமே எடுத்து போட வேண்டும். 45 ஃபாரன் ஹீட் வெப்பத்தைச் செலுத்தி சுமார் 36 மணி நேரம் வரை இந்த வெப்பத்தை தந்து ஏலக்காயாக மாற்றுகிறது. நான் அங்கு தயாராக இருந்த அடுத்த அடுப்பில் விறகு எடுத்துபோட்டு பற்ற வைத்து என்று ஒரு ஏலக்காய் விவசாயியாக
மாறி விட்டேன் போங்கள் ! இப்படி வெளியே வரும் ஏலக்காயில் அதனது பூவும், காம்பும் இருக்கும், அதை நீக்குவதற்கு என்று ஒரு சிறிய மெசின் இருக்கிறது, அதில் போட்டு சுற்ற சுற்ற அவை எல்லாம் நீங்கி வெறும் ஏலக்காய் மட்டும் வெளியில் வரும் !
ஏலக்காய் பூ !!
ஏலக்காயில் இருந்து காம்பு, பூவை பிரித்து எடுக்கும் எந்திரம்
சரி கட்டிய மூட்டையை அப்படியே விற்ப்பனைக்கு எடுத்து செல்லலாமா ? செல்லலாம், ஆனால் அங்கு தரம் சோதனை போடப்பட்டு உங்களுக்கு ஒரு சீட்டு தருவார்கள். ஏலக்காய் தரம் பிரிப்பதற்கு கிலோவுக்கு 8 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏலக்காயை ஆன்லைன் டிரேட் செய்ய கலர் என்பது முக்கியமாக இருப்பதால் கலர் வாரியாகவும் ஏலக்காயைப் பிரிக்க மெஷின் வந்துவிட்டது. இருப்பு வைக்கும் குடோன்கள் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 60 கிலோ ஏலக்காய் மூட்டையை சாதாரண குடோன் களில் வைக்க வருடத்திற்கு 22.85 ரூபாய் கட்டணம். கோல்டு ஸ்டோரேஜ் என்றால் 54 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் அன்றைய ஏலக்காய் மார்க்கெட் விலையில் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். பிரீமியம் அன்றைய மார்க்கெட் விலையில் 100 ரூபாய்க்கு 0.05 பைசா. அதோடு, அந்த மூட்டையில் இருந்து சிறிது எடுத்து நீங்கள்  ஏலக்காய் சந்தையில் ஏலம் விட கொடுப்பார்கள். அதை எப்படி சோதனை செய்கிறார்கள், அதை எப்படி செய்ய வேண்டும், எதை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்றெல்லாம் நான் கற்றுக்கொண்டதை போட்டால் நீங்கள் பதினைந்தாம் வாய்ப்பாட்டை படிப்பது போல இருக்கும் என்பதால், அதன் படங்களை மட்டும் பாருங்களேன் !
ஏலக்காயை தரம் சோதனை செய்யும் இடம்..... ஊசி கொண்டு பிளந்து பார்ப்பார்கள் !
சொன்னா நம்புங்க..... இதுதான் தரமான ஏலக்காய் !!

போடியில் மூன்று நாட்கள், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புத்தடியில் நான்கு நாட்கள் என வாரத்தின் ஏழு நாட்களுமே ஏலக்காய் சந்தை இயங்கி வருகிறது. திங்கள் காலை போடியில் உள்ள சி.பி.ஏ. வளாகத்தில் 10 மணிக்கு ஏலக்காய் விளைவிப்போர் சங்கம் (Cardamom Planters Association)மூலம் ஆரம்பமாகிறது முதல் சந்தை. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொருநாள் சந்தையை நடத்துகிறது. முடிவாக, ஞாயிற்றுக்கிழமை அன்று கேரளா கார்டமம் பிராஸஸிங் அண்ட் மார்க்கெட்டிங் கம்பெனி லிமிடெட் நிறுவனம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் விடுவதோடு முடிகிறது. விடுமுறை உள்ள நாட்கள் தவிர எல்லா நாட்களிலும் ஏலக்காய் சந்தை இதேபோல நடக்கிறது.
ஏலக்காய் சங்கம்.....
ஏலக்காய் மூட்டை ரெடி.....உங்களுக்கு எவ்வளவு வேணும் ? என்னது அம்பது கிராமா !!


ஏலமிடுவதற்கான விலை நிர்ணய அளவு (பிட்டிங் பிரைஸ்) என்பது குறைந்தபட்சம் 2 - 9 ரூபாய் வரை என்று இருக்கிறது. வியாபாரிகள் ஏலக்காயின் தரம், கலர், எடை மற்றும் சுத்தம் போன்றவற்றை கவனித்து வாங்குவார்கள். ஏலக்காய் 8.5 மில்லி மீட்டர், 8 மில்லி மீட்டர், 7.5-8 மில்லி மீட்டர், 6.8-7.5 மில்லி மீட்டர் மற்றும் 5.8-6.8 மில்லி மீட்டர் என பல வகைகளில் இருக்கிறது. விவசாயிகள் கொண்டுவரும் ஏலக்காயின் தரம் பார்த்து வாங்கி அதை அளவு மற்றும் தரத்துக்கு தக்கபடி பிரித்து சுத்தம் செய்து, ஐந்து கிலோ கொண்ட பைகளாக கட்டி, அதை ஐம்பது கிலோ கொண்ட ஒரு மூட்டையாகக் கட்டி விற்பனை செய்வார்கள். சரி, இந்த அளவு தகவல் போதுமா, இல்லை இன்னுமும் வேணுமா....... என்ன மயக்கம் வருதா ?! தம்பி, அண்ணனுக்கு சூடா ஏலக்காய் டீ ஒன்னு போடு !!
Labels : Suresh, Kadalpayanangal, Elaichi, Yelakkai, Bodi, Bodinayakanur, Oor special, How it is 

19 comments:

  1. ஏலக்காய் டீ சாப்பிட்டே ஆகவேண்டும்
    ஏலக்காய்க்கு பின் இவ்வளவு செய்திகளா
    அசந்துவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயக்குமார் சார்..... இந்த அளவு உங்களை எனது பதிவு கவர்ந்தது கண்டு மகிழ்கிறேன் !

      Delete
  2. ஒவ்வொன்றையும் நன்றாகவே அலசி காயப்போட்டு விடுறீங்க. நல்லாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்...... உங்களது டாலர் நகரம் புத்தகம் எட்டு திக்கும் அவார்ட் அள்ளுகிறது கண்டு மகிழ்கிறேன் !

      Delete
  3. விளைவதில் ஆரம்பித்து விற்பது வரை தகவல்கள்... g+ share நன்றி...

    பதினைந்தாம் வாய்ப்பாட்டை மறுபடியும் படிக்க வேண்டும்... ஹிஹி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.... நன்றி தனபாலன் சார். பதினைந்தாம் வாய்ப்பாடு கற்று கொண்டீர்களா !!

      Delete
  4. கலக்கல் போங்கள் ! ! ! ஏலக்காய் வாசம் இங்கு வரை வீசுகிறது

    ReplyDelete
    Replies
    1. நன்றி பொன்சந்தர்....... உங்களது புகைப்படங்களை போலவே உங்களது கருத்தும் எனக்கு மகிழ்ச்சியை தந்தது !

      Delete
  5. Thanks for the detailed information. I have a request as a reader, Please write about pori (stuffed rice) industry as well. Thanks.

    Kumar Kannan

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குமார் கண்ணன், அடுத்த முறை செல்லும்போது இதை தேடி பிடித்து உங்களுக்காக பதிவிடுகிறேன் !

      Delete
  6. சாதாரணமாக கடையில் வாங்கும் ஏலக்காயில் இத்தனை விசயங்களா? அறிந்துகொண்டேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சுரேஷ் !

      Delete
  7. ஏலக்காயை பற்றிய தகல்கள் சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி.... உங்களது பெயர் என்னை கவர்ந்தது ! வருகைக்கு நன்றி !

      Delete
  8. இது போல் எல்லா விசயங்களையும் பகிருங்கள்
    வாழ்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்..... கண்டிப்பாக பகிர்கிறேன், வருகைக்கு நன்றி !

      Delete
  9. நன்றி நண்பரே !

    ReplyDelete
  10. உங்களைப் பற்றி திண்டுக்கல் தனபாலன் கூகிள் + பக்கத்தில் அறிந்து கொண்டேன். ரசனையான மனுசன் சார் நீங்க.

    ReplyDelete
  11. ஏலக்காய் நிலம் 2 ஏக்கர் விலைக்கு இருந்தால் தெரியப்படுத்தவும்

    ReplyDelete