Wednesday, January 29, 2014

சிறுபிள்ளையாவோம் - சேமியா ஐஸ் !!

வாழ்க்கையில் மிக சிறந்த பகுதி என்பது நமது குழந்தை பருவம்தானே. நமக்கு வயது ஆக ஆக நாம் என்னதான் வளர்ந்தாலும் மனதில் அந்த குழந்தைப்பருவம் மட்டும் மாறாமல் இருக்கும் இல்லையா !! நான் என்னதான் வெளிநாடு, பல இடங்கள் சென்றாலும் அதில் எல்லாம் கிடைக்காத சந்தோசம் ஒரு குச்சி ஐஸ் பார்த்ததும் கிடக்கிறது என்பதுதான் உண்மை. எவ்வளவோ உணவகங்கள் சென்று ருசியாக நிறைய உணவு உண்டு இருந்தாலும் இருந்தாலும் ஒரு பஞ்சு மிட்டாய் கிடைக்கும்போது நிறைய சந்தோசம் கிடைப்பது நிஜம் இல்லையா. இப்படி நான் சென்ற பயணத்தில் சிறுபிள்ளை ஆகி இருந்திருக்கிறேன்...... சமீபத்தில் எனது நண்பனுடன் சென்னையில் சென்று கொண்டு இருந்தபோது, வழியில் ஒரு பிலிம் துண்டு கிடந்தது, அதை நான் எடுப்பதற்குள் அவன் எடுத்து கொண்டு விட்டான். சிறிது தூரம் நடக்க இருவரும் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தோம்..... பின்னர் நான் அவனிடம் "மச்சான்..... என்ன படம்ன்னு பாருடா"என்று சொல்ல, அவனோ "ஹீ, ஹீ...... நானே பார்க்கனுமின்னு நினைச்சேன் மச்சி !!" என்று சொல்ல ஒரு ஐந்து நிமிடம் நாங்கள் அந்த ஆர்வத்தில் சிறு குழந்தைகளாகி இருந்தோம் !! இந்த பதிவை படிக்கும்போது அந்த ஒரு சில நிமிடங்கள் உங்களது குழந்தை பருவத்தை நினைத்தால், வெட்கத்தை மீறி அதை அனுபவித்து பார்த்தால் அதுதான் பதிவிற்கு கிடைத்த வெற்றி !!


சேமியா ஐஸ்...... இன்று என்னதான் விதவிதமாக ஐஸ்கிரீம் கிடைத்தாலும், அன்று கிடைத்த சேமியா ஐஸ் போல ஆகுமா ! சிறு வயதில் அந்த ஐஸ் விற்கும் ஆள் வீதியினில் கத்திக்கொண்டே நுழையும்போதே இங்கே காது விடைக்க ஆரம்பிக்கும். ஐஸ்......ஐஸ்......சேமியா ஐஸே....என்று வண்டியை தள்ளிக்கொண்டு வரும்போது அம்மாவை ஒரு ஏக்க பார்வை பார்ப்பேன். அவர் முறைத்துக்கொண்டே அதெல்லாம் கிடையாது என்று சொல்லும்போது கண்ணில் தண்ணீர் எட்டி பார்க்கும், அதை பார்த்த பின்னர் அம்மா, சரி இன்னைக்கு மட்டும்தான் எனும்போது பூம் பூம் மாடை விட வேகமாக தலை தானாக ஆட ஆரம்பிக்கும் !! அவரை விட வேகமாக வெளியே சென்று "ஐஸ்.... ஐஸ்..... இங்க வாங்க"என்று கூப்பிட, அவன் என்னை நோக்கி வர வர...... கடவுளே நேரில் வருவது போல இருக்கும் அந்த கணம் !!







எனது அம்மா, என்னை நோக்கி என்ன ஐஸ் வேணும் என்று கேட்க "சேமியா ஐஸ்மா"என்று சொன்னவுடன்  அவன் அந்த பெட்டியின் சிறு துவாரத்தில் கையை விட்டு வெளியே எடுக்க சிகப்பும், மஞ்சளுமாக குச்சியில் இருக்கும் அந்த தேவாமிர்தம் வெளியே வர, அம்மா அப்போது பார்த்து எவ்வளவு என்று கேட்க, அந்த ஐஸ் வண்டிக்காரன் ரெண்டு ரூபா என்று சொல்ல, என்னது ரெண்டு ரூபாயா என்று சொன்னவுடன் எனது கைகளுக்கு வர இருந்த அந்த ஐஸ் சிறிது தூரத்தில் நின்ற அந்த கணத்தில் எனது மனதில் இருந்த திகில் வேறு எந்த திகில் படத்திலும் பார்த்து இருந்தது கிடையாது. "ரெண்டு ரூபாய்க்கு ஐஸ் வேணுமா..."என்று எனது அம்மா எனது தலையை தட்ட, நான் ஏக்கமாக அவரை பார்ப்பேன். முடிவில் அவர், சேலையில் முடித்து வைத்திருக்கும் காசை எடுத்து அவனின் கையில் கொடுக்க கொடுக்க, எனக்கு அந்த சேமியா ஐஸ் கையில் வந்த தருணத்தில் கிடைத்த அந்த சந்தோஷத்தில்....... ஐஸ் வண்டிக்காரனிடம் "நாளைக்கும் வருவீங்களா..."என்று கேட்க, அம்மாவோ "வருவாரு, வருவாரு..... வந்தா காலை ஒடிப்பேன்" என்று என்னை பார்த்து சொல்ல, அடுத்த நாள் பக்கத்து தெருவில் மட்டும் சத்தம் மிக மெலிதாக கேட்க்கும் ஐஸ்......ஐஸ்......சேமியா ஐஸே....!!



அந்த சேமியா ஐசை ஆசை தீர முதலில் பார்ப்போம், அடுத்து ஒரு நக்கு நக்குவோம்....... அந்த சுவை மூளைக்கு சென்று அடைந்தவுடன், வேக வேகமாக அந்த முனையை மட்டும் ம்ம்ம்ம்ம்..... என்று விறு விறுவென்று சாப்பிட, அப்போதுதான் வாயில் ஒரு சுவையின் மாறுதலை கவனிப்போம். சேமியா...... ஐஸ் கிரீம் உடன் சேமியா சேர்க்கலாம் என்று கண்டு பிடித்தவன் ஒரு மகானுபாவன் என்றுதான் சொல்ல வேண்டும். கொஞ்சம் கொஞ்சம் அந்த ஐஸ் கரைய கரைய சேமியா வெளியில் வர அதை சுவைக்கும் முன் அது எப்படி எப்படி எல்லாம் சுருண்டு இருக்கும் என்று கவனிப்போம். முடிவில் ஐஸ் மற்றும் சேமியா தின்று முடித்தவுடன் நாக்கை கண்ணாடியில் பார்த்துவிட்டு அம்மாவிடம் ஓடி போய்...... "அம்மாமாமாமா..... நாக்கு பாரேன் எவ்வளவு கலரா இருக்குதுன்னு...."என்று சொன்ன அந்த கணம் மிகவும் இனிமையானது இல்லையா.

கடைசியாக என்று நீங்கள் சேமியா ஐஸ்கிரீம் சாப்பிட்டீர்கள் ??..... ஒரு சேமியா ஐஸ் வாங்கி சுவைத்து பாருங்கள், சுமார் இருபது வருடம் வேகமாக பின்னால் சென்று இருப்பீர்கள் !!

Labels : Suresh, Kadalpayanangal, Childhood, Sirupillaiyaavom, Semiya ice, ice, Old days, once upon a time, village ice

20 comments:

  1. நான் ஐஸ் எக்கசக் சக்கமாய் வாங்கி சாப்பிடுவேன், பள்ளியில் எனக்கு ஐஸ் லீடர் என்று பெயரே உண்டு. அது கெடுதி, தொடை நோய் வரும் அது இதுன்னு ஆசிரியர் சொல்லுவார், நாம் கத்தில் போட்டுக் கொண்டதேயில்லை.


    அந்த ஆலமரம் கவுண்டமணி இளநீர் விற்ற இடம் மாதிரியே இருக்கு!!

    ReplyDelete
    Replies
    1. உங்களது சிறு வயது நினைவுகளை இந்த பதிவு கிளப்பி விட்டது கண்டு மகிழ்கிறேன் ! நன்றி !
      என்னதான் சொன்னாலும் அந்த ஐஸ் சுவைக்காக நாம் எந்த வியாதியையும் தாங்குவோம் !

      Delete
  2. கிராமத்து சூழலை அழகா படம் பிடிச்சு போட்டு இருக்கீங்க. சேமியா ஐஸ் குழந்தை அனுபவம் ரசணையான ருசியான அனுபவம். பைசா வோட மதிப்பும் போயாச்சு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலாகுமரன், உங்களது மகள் வரைந்த படங்கள் மிகவும் அருமை..... உங்களை இன்று குழந்தை ஆக்கியதா இந்த பதிவு :-)

      Delete
  3. எனக்கு பிடித்தது பால் ஐஸ் தான்! எழுத்தில் டைம் மெஷினில் என்னை இழுத்துப் போய்விட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, அதையும் ருசித்தேன் விரைவில் பதிவிடுகிறேன் !

      Delete
  4. அடப் போங்க... இனிய நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்... நன்றி...

    இப்போது இந்த சேமியா ஐஸ் போல பல வகைகள் வீதியில் கொண்டு வருவது குறைந்து விட்டது... ஒரே ஒருவர் மட்டும் இங்கு வருகிறார்... அப்போது மனம் முழுவதும் கொண்டாட்டம் தான்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார், உங்களது ஒவ்வொரு கருத்துக்களும் எனக்கு சேமியா ஐஸ் சாப்பிட்டது போல மகிழ்ச்சியை தருகிறது !

      Delete
  5. @ jayadev dass. தொடை நோயா... மெர்ஸிலாயிட்டேன். ஓ..தொண்டை நோயா

    ReplyDelete
    Replies
    1. \\தொடை நோயா... மெர்ஸிலாயிட்டேன். ஓ..தொண்டை நோயா \\ Google Transliteration நம்மை சாகடிக்குது!! எப்படி காதில் என்பது கத்தில் என்றாகிவிட்டது!!

      Delete
    2. சரி சரி சண்டை வேண்டாம்.... புலவர்களிடத்தில் விவாதம் இருக்கலாம், நக்கல் கூடாது :-)

      Delete
  6. எனக்கு சேமியா ஐஸை விட கிரேப், மேங்கோ ஐஸ்தான் பிடிக்கும். ஆனா, நாம சின்ன வயசா இருக்கும்போது ஐஸ் ரெண்டு ரூபாவா வித்தது!? நான் அம்பது காசுக்கு கிடைக்கும், பழைய நோட்டு, குவார்ட்டர் பாட்டில், அலுமினிய, இரும்பு, பிளாஸ்டிக் சாமான்களுக்கும் ஐஸ் கொடுப்பாங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி...... இந்த பதிவு உங்களது மனம் கவர்ந்தது கண்டு மகிழ்கிறேன் !

      Delete
  7. அந்த சேமிய வோட ஐஸ் ஐ ஒரு கடி கடித்தால் ஒரு sponge பீலிங் வருமே!!! அடடா !!!!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்லும்போது அந்த பீலிங் திரும்ப வருது பாபு !

      Delete
  8. hmm.. your post takes me to those golder periods..oh, yes, the ice person used to come twice in a week (only!) .. and it was a much needed item during summer..we had this ice may times after playing under the hot sun and we got cold very immediately. even we know that we get cold we never afraid to buy that because it gave a wonderful taste when we sweating..I never had such a wonderful feeling now a days with those pricy icecreams!

    Kumar kannan

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி குமார் கண்ணன் ! நீங்கள் இதுபோல ரசித்ததுதான் இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றி..... அந்த காலம் போல வருமா !

      Delete
  9. சேமியா ஐஸ் பொதுவாக சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மட்டுமே வரும். அதனால் இந்த ஐஸ் நாக்கில் கலர் பிடிக்காது. கருப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிறத்தில் வரும் சேமியா அல்லாத ஐஸ் நன்றாக நாக்கில் பிடிக்கும்.... வாங்கியதும் ஒரு சிறு துண்டு கடித்துவிட்டு அது கரையும் வரை நாக்கில் வைத்திருப்பேன். குளிர் தாங்க முடியாமல் அதை இடத்தும் வலதுமாக மாற்றிக்கொண்டே இருப்பேன். இறுதியில் அது முழுமையாகக் கரைந்து தொண்டையில் இறங்கும் சுகம் இருக்கிறதே... அஹா...

    ஒரு இருபது இருபத்தைந்து வருடம் பின்னோக்கிப் போய்ட்டேன் பாஸ்....

    ReplyDelete
    Replies
    1. என்னது ஸ்கூல் பையன் அப்படின்னு பேர் வைச்சிகிட்டு இருபத்தைந்து வருடம் பின்னால் சென்றால் அப்போது என்ன வயதிருக்கும் உங்களுக்கு :-)
      நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை, அந்த உணர்வு கொடுக்கும் சந்தோசமே வேற !

      Delete