கடந்த மாதம் காரில் ஒரு சிறிய பயணம் நண்பருடன் சென்று இருந்தேன். வழியில் கார் சிறிது மக்கர் செய்ததால் தாமதம் ஆகி, சென்னை சென்று
சேருவதற்கு அதிகாலை ஒரு மணி ஆனது. சென்னைக்கு உள்ளே நுழையும் முன் ஒரு டீ கடையில் டீ வாங்கி சாப்பிட்டு ரிலாக்ஸ் செய்தோம். அங்கிருந்து கிளம்பும்போது ஒரு காரில் ரோட்டு ஓரத்தில் குழந்தைகளுடன் கையை பிசைந்து நின்று கொண்டு இருந்த ஒருவரை பார்த்து, அந்த நேரத்தில் அவரின் காரும் மக்கர் செய்ததை அறிந்து புல் செய்து ஒரு ஹோடேலில் சேர்த்தோம், பின்னர் அங்கிருந்து கிளம்பி கோயம்பேடு வழியாக வரும்போது காய்கறி லாரிகளில் இருந்து நல்ல வாசனையுடன் காய் இறங்கி கொண்டு இருந்தது. ஒரு வழியாக வீடு சேர்வதற்குள் என்னுடைய வீட்டில் இருந்தும், நண்பரின் வீட்டில் இருந்தும் சுமார் ஐம்பது முறையாவது போன் வந்து இருக்கும். வீட்டினுள் நுழைந்தவுடன் நண்பரின் மனைவி "இந்த ராத்திரியில் ஏன் இப்படி சுத்தறீங்க, வெளியிலே எவ்வளவு கொலை, கொள்ளை தெரியுமா, பதறி போயிட்டோம்.... அண்ணா நீங்களாவது சொல்ல கூடாதா" என்று சரியான திட்டு. அவரின் பதட்டத்தை சிரித்துக்கொண்டே ரசித்தாலும், எப்போதிருந்து இந்த இரவு என்பது ஒரு பயம் கொள்ளும்படியாக ஆனது என்று யோசித்தது மனது. இரவினில் பயணம் எனும்போது மனதில் ஒரு திடுக்கிடலும், அதுவே பகலில் என்னும்போது ஒரு நிம்மதியும் வருவது ஏன் ? இரவு அவ்வளவு கொடியதா ? இரவினில் வெளியில் செல்வதென்றால் அவ்வளவு பயமா ? இரவு அவ்வளவு அழகு இல்லையா ? இரவு பாதுகாப்பானது இல்லையா என்ன ? சற்றே கண் மூடி நினைத்து பாருங்கள்..... இன்று இரவு உங்களை ஒரு நண்பர் வெளியே அழைக்கிறார், உங்களது முதல் எண்ணம் என்னவாக இருக்கும் ? உங்களது வீட்டில் என்ன சொல்வார்கள் ?
சிறு வயதில் இருந்தே இரவென்றால் சாத்தான்கள் நடமாடும், வெளியே சென்றால் திரும்பி வர முடியாது, சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் எல்லாமே இரவினில்தான் நடக்கும் என்று நிறைய மனதினில் வளர்த்துவிட்டார்கள். குடும்பமாக வெளியில் சென்றால் ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பஸ்தனுக்கும் ஒரு விதி ஏற்படுத்திக்கொண்டார்கள். சிறு வயதில் பொருட்காட்சி கூட்டி சென்று பாதி சுற்றி முடிக்கும் முன்னேயே இரவாகிவிட்டது கடைசி பஸ் சென்று விடும் என்று நான் அழ அழ என்னை கூட்டி சென்ற தந்தையிடம் அப்படி என்ன இரவு நம்மை செய்துவிடும் என்று கேட்க முடியவில்லை. ஒரு புது வருடம் பிறக்கும் சமயத்தில் நண்பர்களுடன் மழை பெய்து கொண்டு இருந்த அந்த நிமிடத்தில் "ஹாப்பி நியூ இயர்" என்று தொண்டை கிழிய கத்திக்கொண்டு பெசன்ட் நகர் பீச்சில் இருந்து நடந்து சென்ற அந்த இரவினில் மனதில் பயம் எதுவும் இல்லை..... அந்த இரவினில் கிடைத்த சந்தோசத்தை, எனது நண்பனை பஸ் ஏற்றிவிட பாரி முனை சென்றுவிட்டு பஸ் கிடைக்காமல் ஆட்டோ எங்களை சுற்றி கொண்டு கெட்ட வார்த்தையால் எங்களிடம் இருந்த பணத்தினை பிடுங்க முயன்று அதில் நாங்கள் தப்பி வந்த அந்த இரவு பயத்தினை விதைத்தது. யோசித்து பார்த்தால், இரவினை விட பகலில்தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது, அப்போதுதான் இடித்து விட்டு வண்டியை நிறுத்தாமல் செல்கிறார்கள், பிக் பாக்கெட் செய்கிறார்கள் !
வெளிநாடு செல்லும்போதும் இந்த இரவுகள் நிறைய பிரச்னையை உண்டு பண்ணும் ! ஒன்பது மணிக்குள் திரும்பிவிட வேண்டும் என்று பார்க்கும்போது அப்போதுதான் அங்கு உள்ளவர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடும்...... ஒரு முறை நியூயார்க் நகரத்தில் சாப்பிட வேண்டும் என்று எட்டு மணிக்கு கிளம்பினோம். அதை முடித்து விட்டு குடி, கும்மாளம் என்று டைம்ஸ் ஸ்கொயர் செல்லும்போது மணி அதிகாலை இரண்டு, அப்போது அந்த இடம் எப்படி இருந்தது என்று நினைக்கிறீர்கள் ? மனிதர்கள் அவ்வளவு உற்சாகத்துடன் நடமாடிக்கொண்டு இருந்தனர். அரை குறை ஆடையுடன் பெண்கள் அங்கு பவனி வந்தாலும் அவர்களின் கண்களில் பயம் கொஞ்சமும் இல்லை. ஜப்பானில் அதிகாலை நான்கு மணிக்கு ட்ரைன் பிடிக்க ஸ்டேஷன் சென்று இருந்தேன், நான் மட்டுமே அங்கு இருந்தேன் அந்த குளிரிலும் வேர்த்து கொட்டியது. அப்போது அழகின் உருவம் என்று சொல்லும் விதமாக ஒரு பேரிளம் பெண் குட்டை பாவாடையுடன் அங்கு வந்தபோது அவள் என்னை கண்டு பயப்படவில்லை, ஆனால் நான் பயந்தேன் !! வெளிநாட்டில் ஒவ்வொரு இரவிலும் பகலை விட உற்சாகமாக இருக்கின்றனர். நியூயார்க் நகரை தூரத்தில் இருந்து அந்த இரவினில் பார்த்தபோது பகலில் பார்த்ததை விட அழகு என்றுதான் சொல்ல வேண்டும்.... அது போல உங்களது நகரத்தை இரவினில் நீங்கள் பார்த்ததுண்டா ?
உங்களது எந்த வயதில் இரவினை பற்றிய பயம் தொலைந்தது என்று யாபகம் இருக்கிறதா ? சிறு வயதில் அம்மாவின் புடவை தலைப்பை பிடித்துக்கொண்டு ஒன்னுக்கு சென்ற இரவில் இருந்து, வெளிச்சம் இல்லாத சாலையில் பயணிப்பது வரை இரவு என்பது பயத்தை விதைத்துக்கொண்டே இருக்கிறது, இல்லையா ? ஆனாலும், ஒரு பொழுதில் அந்த இரவினை எதிர்க்கொண்டு அதில் ஒன்றுமே இல்லை என்று தெரிந்து கொண்டது எந்த கணம் ? எனக்கு யோசித்து பார்த்தால், நான் வீட்டை விட்டு வெளியில் வந்து கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது ஹாஸ்டலில் இருந்து சுவர் ஏறி குதித்து ரஜினி படம் பார்க்க சென்ற அந்த இரவுதான் முதல் முதலாக என்னை இரவின் மீது காதல் கொள்ள செய்தது. பயமில்லாமல் நண்பர்களுடன் நடந்து கொண்டே பேசி சிரித்த அந்த இரவுகள், எத்தனை பகலிலும் நாங்கள் சிரித்து மகிழ்ந்து இருந்ததை விட இன்றும் யாபகம் இருக்கும் ஒன்று. பகலில் ஆள் இல்லாத சாலையை பார்த்து வராத பயம் அதே சாலையை இரவினில் கடக்க பயப்பட வைப்பது வினோதம்தான் !!
எந்த இரவு உங்களது வாழ்க்கையில் மறக்க முடியாததாக இருந்தது என்று யாபகபடுத்தி பாருங்கள்....... சட சடவென்று உங்களுக்கு யாபக அடுக்குகளில் இருந்து வந்து விழுகிறதா ? நீங்கள் கொண்டாடிய அந்த பிறந்தநாள், உங்களுக்கு பிடித்த நடிகரின் படத்திற்கு டிக்கெட் எடுக்க கால் கடுக்க நின்றது, காதல் வந்த அந்த இரவு, பரீட்சை ரிசல்ட் வர தவித்திருந்த இரவு, வெளியூர் சென்ற அப்பா வர காத்திருந்த அந்த இரவு, நண்பர்களுடன் குடித்துவிட்டு எதெற்கு என்று தெரியாமல் விழுந்து விழுந்து சிரித்த இரவு, ப்ராஜெக்ட் முடிக்க வேண்டும் என்று யோசித்து யோசித்து மூளை குழம்பிய இரவுகள், தீபாவளி அன்று இரவு சென்ற பேருந்து பயணம், நமது எத்ரிகாலம் என்ன என்று யோசித்த இரவுகள், கடல் பார்த்து கழித்த இரவுகள், முதல் வெளிநாட்டு பயணம் செல்ல விமானத்திற்கு காத்திருந்த இரவு, பைக் எடுத்துக்கொண்டு சிலுசிலுவென்று காற்றை கிழித்துக்கொண்டு சென்ற இரவு, ஆபரேஷன் செய்துவிட்டு வலியில் தூங்க முடியாத அந்த இரவு, மனைவி பிரசவம் என்று வலியில் துடித்திருந்த இரவு, நைட் ஷிப்ட் முடித்துவிட்டு பசித்திருக்க உணவு தேடி அலைந்த அந்த இரவு, பரீட்சைக்கு படித்த அந்த நீண்ட இரவு, புத்தாண்டு கொண்டாட்டத்தில் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்ற போன் வந்து மனதில் சோர்வுடன் பயணம் செய்த இரவு என்று பல பல இரவுகள் உங்களுக்கு இருந்திருக்கலாம் இல்லையா. இப்படி ஏதாவது ஒரு பகலை சொல்ல முடியுமா..... சட்டென்று யாபகத்திற்கு வர மறுக்கிறது இல்லையா ? நாம் செலவழித்த பல பகல்கள், பல பல நினைவுகளை கொண்டு இருந்தாலும் சில இரவுகள் மட்டும் ஏன் ரொம்பவே ஸ்பெஷல்...... பயமுறுத்தும் இரவுகள் எப்படி இவ்வளவு அருமையான நினைவுகளை கொண்டு இருக்கிறது !
யோசித்து பார்க்கும்போது இந்த உலகமும், இரவும் என்றும் மாறவில்லை. நமது மனதில் நாம் வளர்த்துக்கொண்டு இருக்கும் பயம்தான் அந்த இரவை ரசிக்க விடாமல் செய்கிறது என்று தோன்றுகிறது. இவ்வளவு சிறப்புகளை, நினைவுகளை இரவுகள் நமக்கு அளிதிருக்கும்போது...... யோசித்து பாருங்கள் ஒரு வருடத்தில் நீங்கள் எத்தனை இரவுகளை கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறீர்கள் ? எந்த பௌர்ணமி இரவினில் இளையராஜா பாடல் கேட்டு கண்ணில் நீர் வழிய இருந்து இருக்கிறீர்கள், உயிர் நண்பனின் வீட்டு கதவை தட்டி பிறந்தநாளுக்கு கேக் கொடுத்து இருக்கிறீர்கள், அலைகளின் ஓசையை கேட்டு கொண்டே கடலில் கால் நனைத்து நடந்து இருக்கிறீர்கள் ? கொண்டாட நமக்கு ஆயிரம் காரணமிருந்தும் எல்லாமே பகலில் மட்டும்தான் என்ற மனோபாவம் ஏன்....... இரவின் மீது நாம் இன்னும் கொண்டிருக்கும் பயமா ?!

Labels : Night, scary night, amazing night, Suresh, kadalpayanangal, scared

Labels : Night, scary night, amazing night, Suresh, kadalpayanangal, scared
வித்யாசமான சிந்தனை. யோசித்துப்பார்த்தால், இரவில் பகலில் நமக்கு எளிதில் கிடைக்கும் வசதிகள் கிடைப்பதில்லை என்ற காரணம் மட்டுமே மிஞ்சுகிறது. ஒரு ஆர்வக் கோளாறு பஸ் டிரைவர் காலை மூன்று மணிக்கே ஊரிலிருந்து சென்னை சேர்ந்து சென்று, பஸ் ஸ்டாண்டிலிருந்து வீடு செல்ல டவுன் பஸ்க்கு இரண்டு மணி நேரம் காத்திருந்த போது, நண்பர்களுடன் வெளியே சென்றபோது நாங்கள் சென்ற இரண்டு ஸ்கூட்டர் (ஸ்டெப்னி இருந்த) / ஒரு மோட்டார் சைக்கிளில் , மோட்டார் சைக்கிள் மட்டும் பஞ்சர் ஆகி ஒரு மணி நேரம் இரவில் அலைய நேரிட்டபோது, சென்னை வெய்யில் இரவில் கரண்ட் போய் , குழந்தை அழுதபோது குழந்தையை எடுத்துக்கொண்டு டூ வீலரில் குழந்தை தூங்கும்வரை சுற்றிய போது, வந்த எரிச்சல் தான் ஞாபகம் வருகிறது!
ReplyDeleteஆனாலும் இரவு அழகு! பகலில் இந்த இடமா அவ்வளவு நெரிசலாய் இருந்தது என்று வியக்கும் அளவு அமைதியாக இருக்கும். இரவில் சாலையிலேயே உறங்கும் பலரை பார்க்க பாவமாக இருக்கும். எந்த அளவு சின்ன சின்ன கஷ்டங்களை நாம் பெரிது படுத்திக்கொண்டு கவலைப்படுகிறோம் என இருக்கும்!
இதைதான் நான் எதிர்பார்த்தேன் பந்து...... உங்களது நினைவுகளை கிளறி, நாம் ஒரே மாதிரி வாழ்வதை உரைப்பதே இந்த பதிவின் நோக்கம், அது நிறைவேறியது கண்டு மகிழ்ச்சி.... உண்மையில் இரவு ஒரு சொர்க்கம் !
Deleteஇப்படியெல்லாம் கூட சிந்திப்பீர்களா சுரேஷ்?
ReplyDeleteஹா ஹா ஹா..... சிந்திப்பதற்கு என்ன தடை ஆவி, நான் சொல்லும் விஷயம் உண்மையா இல்லையா !
Deleteஅருமையான அலசல் அண்ணா...! வித்தியாசமான சிந்தனையும் கூட..!
ReplyDeleteநியுயார்க் போன்றும் ஜப்பான் போன்றும் இரவை ரசிக்க எனக்கும் ஆசைதான். என்ன செய்ய போன வாரம் இரவு நண்பன் ஒருவனை வெறும் 5000 போனுக்காக ஒரு ரவுடி கும்பல் அடி பின்னிடாங்க..!
ஆனந்த்...... நீ சொல்வது உண்மைதான், எல்லா இடத்திலும் இரவு ஒன்றுதான், ஆனால் மனிதர்கள் அதை நன்றாகவும், மோசமாகவும் ஆக்குகிறார்கள் !
Deleteஅதிகப்பட்சம் உள்ளூரில் 10.45க்கு தனியே வீட்டிற்கு வந்து உள்ளேன்.(ஒரு முறை).இன்னமும் என் அம்மா இரவில் 8 மணிக்கே நான் எங்காச்சும் போயிட்டு வர லேட்டானால் என் மகன்களை நொய் நொய்ன்னு அம்மா ஃபோன் செய்தாளா என்று கேட்டு கொண்டே இருப்பார்கள்.
ReplyDeleteஉண்மைதான், அவர்கள் கவலை படும்படி இரவுகள் இருக்கிறதே என்ன செய்ய, ஆனால் உண்மையில் இரவு அவ்வளவு அருமை !
Deleteரசிக்க வைக்கும் சிந்தனை... சொன்னவைகளில் சிலது உண்மை தான்... வளர்த்த / வளர்ந்த விதம் அப்படி இருக்கலாம்... ஆனாலும் அமைதியான இரவில் பிடித்த பாடல்கள் கேட்பது சொர்க்கம் தான்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
உண்மைதான் தனபாலன் சார், அதுவும் உங்களது பதிவுகளில் பகிரும் பாடல்கள் எல்லாம் அசத்தும் ரகம் !
Deleteவித்தியாசமான சிந்தனை. பகலில் கிடைக்கும் வசதிகள் இரவில் கிடைக்காததால் நாம அதை வெறுக்கிறோம்ன்னு நினைக்குறேன்
ReplyDeleteமக்கள் நடமாடினால் வசதிகள் வந்துவிடும்...... ஆனால் நடமாடவே விடமாட்டேன் என்கிறார்களே !
Deleteஅமெரிக்கா, ஜப்பான் போன்ற பொருளாதரத்தில் முன்னேறிய நாடுகளில் இரவு இனிமையானதுதான்.அங்கு நைட் லைப் என்ற அம்சமும் உண்டு . வறுமை இருக்கும் நாடுகளில் இரவு என்பது சற்று பயம் தரக்கூடியது.இரவை ரசித்து அருமையாக எழுதியுளிர்கள்
ReplyDeleteநன்றி சார்..... மிக சரியாக சொல்லி இருக்கின்றீர்கள். ஆனால், நான் சென்று வந்த நாடுகளிலும் வறுமை இருந்தது, ஆனால் அவர்கள் தனி மனித சுதந்திரத்தை கெடுப்பதில்லை என்பதுதான் சரி என்று நினைக்கிறேன். ஏனென்றால் நியூயார்க் நகரத்தில் அதிகாலையில் நடமாடும்போது அவரவர் அவர்களது வழியில் சென்றோம்......
Deleteபகிர்வு ரசனை. நிலாஒளியில் இரவு அருமையான படம்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி !
Deleteபகலை விட இரவு அழகுதான்! இரவு பயணங்கள் இப்போதுதான் அடிக்கடி மேற்கொண்டுவருகிறேன்! அருமையான சிந்தனை! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
ReplyDeleteநன்றி சுரேஷ், இந்த பதிவு உங்களுக்கு பிடித்தது கண்டு மகிழ்ச்சி !
Deleteசிறு வயதில் பகலில் பயமில்லை, இரவில் மையிருட்டில் பேய்களும் பிசாசுகளும் ஒளிந்துகொண்டு நம்மை கவனிக்கிறதோ என்ற உணர்வு வந்ததுண்டு... இப்போது ஹிஹி... நாமே பேய்...
ReplyDeleteஹா ஹா ஹா..... இன்றும் அந்த பயம் ஓரத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை !
Deleteரசனை.....நண்பர்களோடு இரவு 1.00 மணிக்கு டி அறுந்ததிய இரவு, தீபாவளிக்கு முதல் நாள் இரவு என சுகமான நினைனவுகள்......
ReplyDeleteநன்றி பிரேம்குமார்......தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !
Deletestay Relax :)
ReplyDeleteநன்றி கிருஷ்ணா !
DeleteONE OF YOUR BEST ARTICLE SURESH
ReplyDeleteநன்றி சொல்வதற்கு வார்த்தைகள் விழவில்லை உங்களது கருத்துக்கள் கண்டு. உங்களது மனதை அந்த அளவு இந்த பதிவு தொட்டது கண்டு மகிழ்ச்சி, உங்களது மனம் திறந்த பாராட்டு இன்னும் என்னை இதுபோல எழுத தூண்டுகிறது !
Delete