Wednesday, February 26, 2014

ஊர் ஸ்பெஷல் - பாலவநத்தம் சீரணி மிட்டாய்

இந்த வருட ஆரம்பத்தில் சொன்னதுபோல இந்த ஊர் ஸ்பெஷல் பயணத்தில்  இதுவரை யாரும் அறியாத பல ஊரின்  சிறப்பையும் சொல்வேன் என்று சொல்லி இருந்தேன் அல்லவா.... அதில் ஒன்றுதான் இந்த பாலவநத்தம் சீரணி  மிட்டாய் !! ஒரு ஊரின் பெருமை என்பது அந்த ஊரில் வசிப்பவர்களுக்கே தெரியாது என்பதுதான் சோகம். அதை தேடி செல்வதும், சரியான ஆள்களை பிடித்து விஷயம் வாங்குவதும், தெரியாத நேரத்தில் சென்று கடையின் முன் வெயிலில் காத்திருப்பதும், பேசவே மாட்டேன் என்னும் சிலரை  பேட்டி எடுப்பதும் என்று ஒவ்வொரு ஊர் ஸ்பெஷல் பயணமும் கடினமான ஒன்று...... அப்படிதான் இந்த  பாலவநத்தம் சீரணி மிட்டாயும் !! என்  சொந்தங்கள்  இருக்கும்  ஊரில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும், நான் அங்கு அடிக்கடி சென்று வருவது இல்லை என்பதால் இதுவரை எத்தனை முறை பாலவநத்தம் ஊரை கடக்கும்போதும் தெரியவில்லை. இந்த முறை ஒரு பாட்டியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் சப்பு கொட்ட சொன்ன போதுதான் தெரிந்தது....... அந்த பயணத்தில் தெரிந்தது அழியும் ஒரு ஊரின் சிறப்பு !!
 
விருதுநகருக்கும் அருப்புக்கோட்டைக்கும் இடையில் இருக்கும் ஊர்தான் பாலவநத்தம். மிக சிறிய ஊர், ஒரு தெரு, அதுதான் அந்த ஊரின் கடைதெரு. அங்கு நூறு கடைகள் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் அதில் பத்து கடைகள் இந்த சீரணி மிட்டாய் கடை. அந்த ஊரில் இருப்பவர்கள் சும்மா இருக்கும்போது எல்லாம் இதை மென்று கொண்டு இருக்கிறார்கள், பஸ் நிறுத்தத்தில் பேருந்து நிற்கும்போது டிரைவரிடம் சொல்லிவிட்டு அம்மாக்கள் கீழே இறங்கி அவசர அவசரமாக இந்த சீரணி மிட்டாயை வாங்குவதை கவனிக்கலாம். இன்று சாக்லேட் யுகத்தில் இது அழிந்து கொண்டு வருகிறது என்பது அவர்களிடம் பேசும்போது தெரிந்தது.
 
சீரணி மிட்டாயில் இரண்டு வகை உண்டு........வெல்ல சீரணி, கருப்பட்டி சீரணி. அதையே கறுப்பு மற்றும் வெள்ளை சீரணி மிட்டாய் என்றும் சொல்கிறார்கள். இன்று கருப்பட்டியை மக்கள் அதிகம் விரும்புவதில்லை என்பதால் 
வெல்ல சீரணி மற்றும் சக்கரை சீரணி கிடைக்கிறது. கிராம மக்களின் ஜாங்கிரி என்று இதைச் செல்லமாகச் சொல்கிறார்கள். சின்ன வளையங்களாகச் சுற்றி இனிப்பில் முக்கி எடுத்தால் அது ஜிலேபி. பெரிய சைஸில் நீளமான டிசைனில் இருந்தால் அதுதான் சீரணி மிட்டாய். சீரணி மிட்டாயை ஒரு வாரம்வரை வெச்சிருந்து சாப்பிடலாம் கெட்டுப்போகாது என்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு கடைக்கும் ஒரு டிசைன் இருக்கிறது..... ஒரு கடையில் சீரணி  மிட்டாய் மெலிதாக இருந்தால், இன்னொரு கடையில் பெரிதாக இருக்கிறது. இந்த ஊரில் சீரணியின் சுற்றை வைத்தே இது இந்த கடை சீரணி என்று சொல்லி விடுகிறார்கள் !!
அங்கு பெயர் பலகையே இல்லாத பழமையான கடை ஒன்று இருக்கிறது, யாரிடம் கேட்டாலும் அந்த கடை சீரணி வாங்குங்க என்றனர். நடந்து சென்று அந்த கடையில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் வெறும் சீரணி மட்டுமே !! கால் கிலோ கொடுங்க என்று கேட்டவுடன் சுற்றி வைத்து இருக்கும் சீரணியில் இருந்து பியித்து எடுக்கிறார், அதில் இருந்து வெல்ல பாகு கொட்ட இங்கு எச்சில் ஊருகிறது !! முடிவில் பேப்பரில் போட்டு கொடுத்தவுடன் ஒரு வாய் வைக்கும்போது நமது திருவிழா காலங்கள் நினைவுக்கு வருகிறது....... அங்கு சுற்றி வைக்கப்பட்டு இருக்கும் பீமவிலாஸ் புஷ்டி அல்வா கடையில்  தூண் போல வைக்கப்பட்டு இருந்த காலங்களில் ஒரு சீரணி  வாங்கிகொண்டு  சுற்றிய  நாட்கள் எவ்வளவு இனிமையானவை !!
ஜாங்கிரி சாப்பிடும்போது  மெதுமெதுவென்று இருக்கும், இந்த சீரணி என்பது சற்று கடினமாக  இருக்கிறது. கொஞ்ச நேரம் எச்சிலில் ஊறவைத்தால்  மெதுவாகி விடுகின்றது. ஒரு வாய் போட்டதுமே  சொல்லிவிடும் இதை  விடவா சாக்லேட், சிப்ஸ், அல்வா எல்லாம் என்று !! முந்தின காலங்களில் ஊர் முழுக்க இருந்த சீரணி கடைகள் இன்று பத்து மட்டுமே, விரைவில் அது ஒன்று மட்டும் என்று ஆகி காணாமல் போவதற்குள் ஒரு வாய் சாப்பிட்டு பார்த்துவிடுங்கள் ! 

தேவைப்படும் பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1/2 கிலோ

உளுந்து - 50 கிராம்.

சுக்கு- 1 டீஸ்பூன்.

வெல்லம்- 3/4 கிலோ

செய்முறை:
'' பச்சரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து இட்லி மாவு பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். வெல்லத்தை சுடுதண்ணீரில் கரைத்து வெல்லப்பாகு தயாரித்துத் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பெரிய சைஸ் துளை போடப்பட்டு இருக்கும் துணியில் அரிசி மாவை வைத்துக் கொதிக்கும் எண்ணெயில் முறுக்கு பிழிவதுபோல் பிழிய வேண்டும். நன்றாக வெந்ததும் வெல்லப்பாகில் 10 நிமிடங்கள் ஊறவைத்து வெளியே எடுத்தால் கருப்பு சீரணி ரெடி. வெள்ளை சீரணி மிட்டாய் தயாரிப்பதும் இதே முறையில்தான். ஆனால், கருப்பு சீரணிக்கு வெல்லம் என்றால், வெள்ளை சீரணிக்கு சீனியை வைத்து சீனிப்பாகு தயாரித்து அதில் ஊறவைத்து எடுக்க வேண்டும்!

Labels : Oor special, Palavanatham, Seerani, mittai, Suresh, Kadalpayanangal, District Special, Virudhunagar 

Tuesday, February 25, 2014

அறுசுவை - மண்பானை உணவகம், வத்தலகுண்டு

என்னதான் ஸ்டார் ஹோட்டல் போய் சாப்பிட்டு வந்தாலும் அல்லது பீசா, பர்கர் என்று சாப்பிட்டாலும் நம்ம ஊரு மண் மணக்கும் மண்பானை சமையலுக்கு இருக்கும் சுவையே தனி !! வெகு நாட்களாக மண் மணம் கமழும் ஒரு உணவகம் செல்ல வேண்டும் என்று இருந்தோம், சென்ற வாரத்தில் தேனிக்கு செல்ல வேண்டி இருந்தது, மதிய நேரம் ஆனதால் வத்தலகுண்டு சென்று சாப்பிடலாம் என்று இருந்தோம். ஆனால், வழியில் சாலைபுதூர் என்னும் ஊரை தாண்டும்போது இருபக்கங்களிலும் மண்பானை சமையல் என்று உணவகங்கள் இருந்தபோது மனது சட்டென்று சாப்பிடவேண்டும் என்று அடம் பிடித்தது. வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கு எந்த கடையில் சுவை நன்றாக இருக்கும் என்று விசாரித்துவிட்டு நாங்கள் ஒரு கடையை தேர்ந்தெடுத்தோம் !


உள்ளே நுழையும்போதே ஒரு மண் பானையில் சோறு வெந்து கொண்டு இருக்க, இன்னொரு பானையில் இருந்து சோற்றை இறக்கி கொண்டு இருந்தனர். உள்ளே நுழைந்து இலையை சுத்தம் செய்தவுடன் மண்பானையில் இருந்து சூடாக சாப்பாட்டை இலையில் வைத்தனர். சாதரணமாக வீட்டில் சமைக்கும் சாதம் வெள்ளை வெளேரென்று இருக்கும், ஆனால் இங்கு மண்பானையில் சமைபதனால் சாதம் சற்று பழுப்பாக இருக்கிறது, ஆனால் சுவை அருமை என்றுதான் சொல்லவேண்டும். அடுத்து ஒரு சட்டியில் இருந்து கோழி கொழம்பு ஊற்றி அந்த மண் பானையில் செய்த நாட்டு கோழி குழம்பை எடுத்து வைக்க வயிறு கபகப என்று பசிக்க ஆரம்பித்தது. இங்கு மட்டன் குழம்பும், சில நேரங்களில் மீன் குழம்பும் கிடைக்கிறது !!

   

அம்மியில் அரைத்து எடுத்த மசாலாவில் நாட்டு கோழி போட்டு குழம்பு வைத்து, அதை மண் பானையில் செய்த பொன்னி அரிசி சோற்றில் போட்டு சாப்பிட...... அட அட என்ன சுவை ! உண்மையிலேயே வீட்டில் சமைக்கும் குழம்பிற்கும், இப்படி மண் பானையில் செய்யும் குழம்பிற்கும் வித்யாசம் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். முதல் வாய் வைக்கும்போதே அந்த சுவையில் ஒரு விதமான மயக்கும் விஷயம் இருக்கிறது என்று எண்ண தோன்றுகிறது என்பது நிஜம்.இதை சாப்பிடும்போதே பக்கத்து இலைக்கு ஒரு பெரிய பணியாரம் போன்று ஒன்று போவதை கண்டு என்ன என்று கேட்க, அது கரண்டி ஆம்பலேட் என்று சொல்ல நமக்கும் ஒன்னு என்றோம். சிறு வயதில் எல்லாம் குழியான கரண்டியில் அம்மா முட்டையை உடைத்து ஊற்றி பெப்பர் போட்டு கொடுக்க, வெளியே மொறு மொருவென்றும் நடுவில் கொஞ்சம் வெந்தும் வேகாமலும் வரும் அந்த நினைவு வந்தது, இன்று அப்படி எல்லாம் செய்யாமல் முட்டையை உடைத்து ஊற்றி விடுகிறார்கள் !! முடிவில் எனது இலைக்கு கரண்டி ஆம்பலேட் வந்தது, அதை நிறுத்தி நிதானமாக பார்த்து ரசித்துவிட்டு குழம்பு ஊற்றி சாதத்திற்கு தொட்டு சாப்பிட...... தேவாமிர்தம் போங்கள் !!முடிவில் சாப்பிட்டு முடித்து வெளியே வரும்போது ஒரு பெரிய ஏப்பமும், நிம்மதியும் வருகிறது. வத்தலகுண்டு போகும் வழியில் நிறைய தென்னம் தோப்புக்கள் வருகிறது, ஒரு சிறிய துண்டு எடுத்து சென்றால் போட்டு ஒரு ஒரு மணி நேரம் அசரலாம்......... சொர்க்கமே தெரியும் !!

Labels : Arusuvai, Suresh, Kadalpayanangal, Manpaanai, Clay pot, Pot, Different food

Wednesday, February 19, 2014

அறுசுவை - பர்மா இடியாப்ப கடை, மதுரை

இடியாப்பம்..... இது நமது தமிழ்நாட்டில் அவ்வளவாக பேமஸ் இல்லை என்று சொல்லலாம். எந்த ஹோட்டல் சென்றாலும் இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பாடு, வெண்பொங்கல், பூரி என்றுதான் இருக்கும். பஞ்சு போன்ற, வெள்ளையாய், நூல் போல இருக்கும் இடியாப்பம் அதற்க்கு தொட்டு கொள்ள குருமா அல்லது தேங்காய் பால் எல்லாம் கொடுக்கும் ஹோட்டல் என்பது மிகவும் குறைவே ! சிறு வயதில் அம்மா இடியாப்பம் செய்து அதற்க்கு தேங்காய் பால் ஊற்றி அதன் மேலே சீனி போட்டு சிறிது தேங்காய் துருவலையும் மேலே போட்டு  தரும்போது, ஒவ்வொரு வாய் எடுத்து வைக்கும்போதும் இருந்த அந்த சுவை இன்றும் நினைவுக்கு வரத்தானே செய்கிறது ?! இப்படி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் இடியாப்பம் இன்று மதுரையில் பிரபலமாக இருப்பது கண்டு அதிசயித்தேன்..... மிக பெரிய அதிசயம் என்பது இங்கு வெறும் இடியாப்பம் மட்டும்தான் !! கடை பெயரே.... "பர்மா இடியாப்ப கடை" !!சமீபத்தில் மதுரை சென்று இருந்த போது, மாலை நேரத்தில் சிறிது பசித்தது. பஜ்ஜி, போண்டா என்று எதாவது சாப்பிடலாமா என்று யோசித்தபோது என்னை வாங்க வித்யாசமா உங்களுக்கு ஒரு கடை காண்பிக்கிறேன் என்று கூட்டி சென்றார் எனது நண்பர்....... வண்டியை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தால் "பர்மா இடியாப்ப கடை" என்று போர்டு. கடையின் முன் ஒரு பெரிய தட்டில் வெள்ளை வெள்ளையென இடியாப்பம் மலை போல அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சுமார் மூன்று பேர் பெரிய பெரிய இட்லி தட்டுக்களில் இடியாப்ப மாவை சுற்றி கொண்டு இருந்தனர். இவ்வளவு இடியாப்பத்தை பார்த்த எனக்கு நாக்கும் ஊறி, மயக்கமும் வந்தது !


என்ன இருக்கிறது என்று வாய் வரை வந்த கேள்வியை அடக்கியது அங்கு இருந்த இடியாப்பங்கள்.... வெறும் இடியாப்பம் மட்டுமே இங்கு ! நாங்கள் யோசிக்கும் பொழுதிலேயே சுமார் இருபது பேர் வரை அங்கு வந்து சாப்பிட்டும், பார்சல் செய்து கொண்டும் செல்கிறார்கள். இரண்டு இடியாப்பங்கள் வேண்டும் என்று கேட்க ஒரு தட்டில் வைத்து எனது மூஞ்சியை பார்த்தார்..... பக்கத்தில் இருந்த நண்பர் "தேங்காய் பாலா, குருமாவா ? " என்று கேட்க முதலில் தேங்காய் பால் என்றேன். சரசரவென்று இடியாப்பத்தின் மேலே சிறிது ஊற்றி ஜீனி தூவி கொடுக்கின்றனர். முதல் வாய் எடுத்து வைத்தவுடனேயே சிறு வயதில் சாப்பிட்ட யாபகம் வருகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக சிக்கலை பிரித்து இடியாப்பம் சாப்பிட்டு முடித்தவுடன் இன்னும் கொஞ்சம் என்று மனம் விரும்ப ஆரம்பிப்பது நிஜம் !இந்த முறை இரண்டு இடியாப்பம் வாங்கி விட்டு, குருமா ஊத்துங்க என்றேன். இடியாப்பத்திற்க்கு சிறு வயதில் அம்மா நேற்று வைத்த வத்தகுழம்பு ஊற்றுவார்கள், அவ்வளவு அருமையாக இருக்கும். இங்கு கேரட், பீன்ஸ் என்று போட்டு சற்று மசாலா தூக்கலாக புளி சிறிது விட்டு குழம்பு ஊற்றும் போது அதன் வாசனையே உங்களை அசத்தும், இடியாப்பத்தை பியித்து சிறிது கொழம்பு தொட்டு சாப்பிட இந்த முறை தேங்காய் பாலை விட நன்றாக இருப்பதாக தோன்றும் ! அட...... ஒரு இடியாப்பதில்தான் எத்தனை சுவையை வைத்திருக்கிறான் ஆண்டவன் :-)


அடுத்த முறை செல்லும்போது மதுரையில் மறக்காமல் இங்கு சென்று வாருங்கள், இடியாப்பம் மட்டும் விற்றால் போணியாகாது என்று என்னும் உணவகங்களுக்கு மத்தியில் இடியாப்பம் சுவையுடன் விற்கும் இந்த கடை நிச்சயம் ஒரு அதிசயம்தான் ! அள்ளும் கூட்டத்திற்கு இடையில் வேர்வையுடன் வாங்கி உண்டாலும் மனதில் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது !!


பஞ்ச் லைன் :

சுவை - ஒரே வகைதான்..... இடியாப்பம், தொட்டு கொள்ள குருமா அல்லது தேங்காய் பால் ! பஞ்சு போன்ற இடியாப்பம் சுவையோ சுவை !!

அமைப்பு - மெயின் ரோடு, சிறிய கடை, ஆறு மணிக்கு மேலே திறக்கிறார்கள் இரவு வரை இருக்கிறது, வண்டியை பார்க் செய்வது சிரமமாக இருக்கிறது.

பணம் - ஒரு இடியாப்பம் பத்து ரூபாய் என்று நினைவு, சுவையில் மறந்துவிட்டேன் !

சர்வீஸ் - நல்ல சர்விஸ். கூட்டம் அதிகமாக இருக்கிறபோது நீங்கள் இதையே எதிர்பார்க்க முடியாது !

இந்த கடைக்கு எதிரே ஒரிஜினல் பர்மா இடியாப்ப கடை என்று ஒரு சிறிய கடை உள்ளது, அங்கே இது போல கூட்டம் இல்லை.

அட்ரஸ் :
மதுரை மிஷன் ஆஸ்பத்திரி எதிரே இருக்கிறது, மேப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Burma Idiyaappam, Madurai, Special, Hot, Spicy, Tasty


Wednesday, February 12, 2014

ஊர் ஸ்பெஷல் - பவானி ஜமுக்காளம்

இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் இதுவரை வெறும் வார்த்தைகளாக மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்த ஒவ்வொரு ஊரின் சிறப்பையும் நேரில் சென்று பார்த்து அதன் இன்றைய நிலைமையையும், அது உருவாகும் விதத்தையும் கொடுத்து வருகிறேன், அதை நீங்கள் விரும்பி படிக்கிறீர்கள் என்பதே இன்னும் இதுபோல் தேடி செல்ல தூண்டுகிறது ! இந்த வாரம் பவானி ஜமுக்காளம் !! சிறு வயதில் அப்பா வீட்டிற்க்கு ஜமுக்காளம் வாங்க போகும்போது என்னையும் கூட்டி சென்றார், அப்போது ஜமுக்காளம் விற்பவரிடம் "என்னப்பா பவானி ஜமுக்காளம் மாதிரி நல்லா உழைக்குமா ?" என்று கேட்டது நினைவுக்கு வந்தது இந்த பதிவுக்கு செல்லும்போது. யாரிடம் கேட்டாலும் இந்த ஊர் ஜமுக்காளம் நன்கு உழைக்கும், எவ்வளவு வருடம் ஆனாலும் கிழியாது என்றெல்லாம் சொல்லுவார்கள், நான் அதை நேரில் கண்டேன் என்பதே சந்தோசம் ! வாருங்க பவானி செல்லுவோம்..... ஜமுக்காளம் வாங்க !!
பவானி இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும். இது காவிரி ஆறும் பவானி ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ் பெற்றவை. பவானி கைத்தறி தரை விரிப்பு என்பவை பவானி கைத்தறி ஜமக்காளம், பவானி கைத்தறி ஜமுக்காளம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. இத்தரை விரிப்புகள் (படுக்கை விரிப்புகள்) மிகவும் தடிமனானவை. வண்ண வண்ண நிறங்களில் கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகளுடன் திகழ்பவை. சாயம், நெசவு, வடிவமைப்பு எல்லாம் ஒரு கைவினை மரபைப் பின்பற்றி தயாரிக்கப்படுகின்றன. பவானி சுற்று வட்டாரத்தில் குருப்பநாய்க்கான்பாளையம், சேத்துநாம்பாளையம், பெரிய மூலப்பாளையம் பகுதியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஜமக்காளத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பவானி சுற்று வட்டாரத்தில் தினமும் ஆயிரக்கணக்கில் ஜமுக்காளம் தயார் செய்யப்படுகிறது.
ஜமுக்காளம் செய்வதை பார்க்க வேண்டும் என்று பவானி சென்றபோது எந்த தெருவில் நுழைந்தாலும் தறி ஓடிக்கொண்டு இருந்தது. வீட்டின் முன் பெரிய நூல்களாய் கட்டி இருப்பதை பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது. மெதுவாக அவர்களுடன் பேசியதில் இருந்து....... ஜமக்காள உற்பத்தி செய்ய, 2க்கு 10, 2க்கு 6 மற்றும் 10ம் நெம்பர் நூல் பயன்படுத்தப்படுகிறது. ஜமுக்காளத்தில் காட்டன், அக்ரலின், ஆட்ஸ் சில்க் என மூன்று ரகங்கள் தயாரிக்கப்படுகிறது. பவானி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், பவானி கூடுதுறைக்கு செல்லும் வழியில் இயங்குகிறது. இச்சங்கத்தில் மொத்தம், 1,292 பேர் உறுப்பினராக உள்ளனர். இவர்களிடம் மொத்தம், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகள் மூலம் ஜமுக்காளம் உற்பத்தி செய்யப்படுகிறது. பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மொத்தம், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன.ஜமுக்காளம் செய்யும் தறிக்கு சென்றபோது ஆச்சர்யமாக இருந்தது..... அங்கு இருவர் உட்கார்ந்து ஜமுக்காளம் நெய்து கொண்டு இருந்தனர் ! பொதுவாக போர்வை, புடவை என்பதெல்லாம் நெய்வதற்கு ஒருவர் மட்டுமே போதும், ஆனால் இந்த ஜமுக்காளங்கள் எல்லாம் பெரிய சைசில் இருந்தால் இருவர், சில சமயத்தில் மூவர் கூட செய்வார்களாம். அது மட்டும் இல்லை, ஜமுக்காளத்தில் உபயோகபடுத்தபடும் நூல்கள் மிகவும் தடிமனாக இருப்பதால், தறியில் போட்டு அடிக்கும்போது எவ்வளவுதான் வேகமாக அடித்தாலும் அந்த நூல் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் செல்வது கடினமாக இருந்ததை பார்க்க முடிகிறது. அது மட்டும் இல்லை ஒவ்வொரு முறையும் ஜமுக்காளத்தின் ஓரத்தில் அந்த நூலை சரியாக சுற்றுகின்றனர், இல்லையென்றால் அது பிரிந்துவிடும் என்று !பவானியில் தயாராகும் ஜமுக்காளங்கள் மிகவும் கண்ணை பறிக்கும் வண்ணங்களில் இருக்கும், அதற்க்கு இங்கு இடப்படும் சாயமும், பவானி நீரும் என்கின்றனர். ஜமுக்காளம் என்பது பல சைஸ்களில் கிடைக்கிறது, பொதுவாக  28க்கு 72 இஞ்ச், 34க்கு 72 இஞ்ச், 40க்கு 78 இஞ்ச், 38க்கு 78 இஞ்ச், 50க்கு 90 இஞ்ச், 60க்கு 90 இஞ்ச், 61க்கு 90 இஞ்ச் என்ற அளவில் ஜமுக்காளம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜமுக்காளம் என்று சொன்னாலே அதில் வரும் அந்த நேர்த்தியான கலர் கோடுகள்தான் நமக்கு நினைவுக்கு வரும், ஒவ்வொன்றும் பட்டை பட்டையாக ஒவ்வொரு கலரும் ஒரு சைசில் வரும், அது என்ன விதமான விதி என்று அறிந்துக்கொள்ள நிறைய முயன்றும் எனக்கு புரியவில்லை. அவர்கள் சொன்னதில் இருந்து அது எல்லாமே மன கணக்கு மட்டும் என்றும் அது புத்தகத்திலோ அல்லது எங்குமோ குறித்து வைத்துக்கொள்ள படவில்லை என்று புரிந்தது. இன்று நவீன மெசின் கொண்டு ஜமக்காளத்தில் பூ, படம் என்றெல்லாம் செய்கிறார்கள் !
ஜமுக்காளம் இரண்டுக்கு 10 நூல், 10ம் நம்பர் நூல், உல்லன் நூல் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படுகிறது. இரண்டுக்கு 10 நூல் ஒரு கட்டு சென்றாண்டு 300 ரூபாயாக இருந்தது; இன்று 340 ரூபாயாக அதிகரித்துள்ளது. 10ம் நம்பர் நூல் 360 ரூபாயாக இருந்தது, இன்று 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. நூல் சாயமேற்ற கட்டுக்கு 60 ரூபாய் செலவாகிறது. ஜமுக்காளங்களை கைத்தறியில் உற்பத்தி செய்வோருக்கு 100 ரூபாய், 150 ரூபாய் தருகிறார்கள்.ஆனி, ஆடி மாதத்தில் ஜமுக்காள விற்பனை மிகவும் குறைவாக இருந்தது. ஆவணி துவங்கி ஒரு வாரமாகிவிட்டது; தற்போது சீஸன் ஆரம்பித்துவிட்டது. பவானியில் இருந்து குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் கைத்தறி ஜமுக்காளங்கள் ஏற்றுமதியாகிறது.


மினிமம் சைஸ் ஜமுக்காளம் 175 ரூபாய், அதற்கு அடுத்த சைஸ் 250 ரூபாய், 360 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. உல்லன் ஜமுக்காளம் விலை மற்ற ஜமுக்காளத்தை காட்டிலும் இரு மடங்காக விற்கப்படுகிறது. உல்லன் ஜமுக்காளம் ஆர்டர் பெற்றால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.பவானியில் இருந்து தினமும் குறைந்தபட்சம் 500 ஜமுக்காளம் மற்ற இடங்களுக்கு செல்கிறது.
Labels : Suresh, Kadalpayanangal, Oor special, District, Bhavani, Jamukaalam, Jamukalam, Bedsheet, Entha ooril enna sirappu

Tuesday, February 11, 2014

சிறுபிள்ளையாவோம் - பானை செய்வோம் !

ஒவ்வொருக்குள்ளும் ஒரு குழந்தை போல வாழ நினைக்கும் மனம் இருக்கிறது என்பது நான் சென்ற வாரங்களில் பகிர்ந்து இருந்த சேமியா ஐஸ் மற்றும் மாட்டு வண்டி பயணத்தில் தெரிந்தது ! நிறைய பேர் என்னிடம் போனில் பேசும்போது இதையெல்லாம் நான் செய்ய நினைத்து இருக்கிறேன் என்றும், பம்பரம் பற்றி எழுதுங்கள், சில்லாங்கல் பற்றி எழுதுங்களேன் என்று யோசனையும் கொடுத்தனர். ஒவ்வொன்றாக வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் !! சிறு வயதில் வீட்டில் உண்டியல் வாங்குவதற்கு என்று எனது அம்மா பானை விற்கும் இடத்திற்கு அழைத்து சென்றதுதான் மண் பாண்டங்களை பார்த்த முதல் அனுபவம். பின்னர் வெயில் காலத்தில் சில்லென்று நீர் வேண்டும் என்று ஒரு நாளில் திடீரென்று வீட்டில் முளைத்தது ஒரு மண் பானை, அதில் இருந்த குளிர்ந்த தண்ணீர் எப்படி வந்தது என்று ஒரு கேள்வி எழுந்தது. பின்னர் ஒரு நாளில் ஊருக்கு வெளியில் இருந்த குயவரின் வீட்டிற்க்கு பொங்கலுக்கு மண் பானை வாங்க எனது அப்பா அழைத்து சென்ற போது ஒரு சிறிய சக்கரத்தில் மண்ணை வைத்து சுற்றி அழகாய் பானையை உருவாகிய அந்த கணம்தான் எனது முன் ஒரு அதிசயம் நிகழ்கிறது என்று நினைத்த கணம்....... இன்றளவிலும் அது அதிசயமாகத்தான் இருக்கிறது என்பதுதான் நிஜம் !!சமீபத்தில் ஒரு ரிசார்டிற்கு சென்று இருந்த போது ஒரு ஓரத்தில் பானை செய்து கொண்டிருந்தார் ஒரு முதியவர். நானும் எனது மகனும் ஒரு சேர கண்களை விரித்து பார்த்துக்கொண்டிருந்தோம், என்ன இருந்தாலும் அது இன்னும் அதிசயம்தானே. ஒரு சிறிய சக்கரம், அதை கம்பு கொண்டு வேகமாக சுற்றிவிட்டு அதன் மீது சிறிது மண்ணை வைத்துவிட்டு அவரது கைகளின் விரல்கள் நடத்தும் ஆச்சர்யம், அதிசயம்..... அடடா ராக்கெட் விடுவதை கூட நான் இவ்வளவு அறிவியல் பார்வையோடும், அதிசயத்தோடும் பார்த்ததில்லை. அழகான பானை உருவானவுடன் அதை அப்படியே வெட்டி எடுத்து காய்வதற்கு ஓரமாக வைக்க எனக்கும் அப்படி செய்ய வேண்டும் என்று மனம் குழந்தையின் குதூகலத்துடன் குதிக்க ஆரம்பித்தது  !!மெதுவாக அவருடன் பேச்சு கொடுத்துக்கொண்டே நானும் ஒரு பானை செய்து பார்க்கட்டுமா என்று ஆசையாக கேட்க, முதலில் மறுத்தாலும் பின்னர் சரியென்றார். பானை செய்வதற்கு முன் ஒரு சிறிய வகுப்பு எடுத்தார்...... பானை செய்வதற்கு விரல்கள் நன்றாக வளைய வேண்டும், வேகத்திற்கு ஏற்ப விறுவிறுவென்று பானையை சரி செய்ய தெரிந்து இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் சொல்ல ஆரம்பிக்க கம்ப்யூட்டரில் அதகளம் செய்யும் நமக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று ஒரு மிதப்பில் சரி சரியென்று தலையை ஆட்டினேன். முதலில் ஒரு குச்சியை அந்த சக்கரத்தின் நடுவில் விட்டு விறுவிறுவென்று சுற்ற ஆரம்பிக்கிறார், அந்த குச்சியை வாங்கி நான் சுற்ற சக்கரம் அதன் அச்சை விட்டு ஓடி விடும் அளவுக்கு கன்னா பின்னாவென்று ஆடிக்கொண்டு சுற்ற ஆரம்பித்தது கண்டு அவரது வயிற்றில் பீதியை கிளம்பியது என்பது கண்களில் நன்கு தெரிந்தது !! 

கோழி பிடிக்கலை.... பானைதான் செய்யறேன் !

ஹீ ஹீ என்று அசடு வழிந்துக்கொண்டு அடுத்தது என்ன என்று அவரை பார்க்க, பானை செய்யும்போது நிற்க வேண்டிய கோணம் பற்றி விவரித்தார். நன்றாக முதுகு வளைந்து அவர் குனிந்துக்கொண்டு செய்வதை பார்த்தபோது சாதரணமாக தெரிந்தாலும் நான் அடுத்து அதை செய்தபோதுதான் முதுகு வலிக்கும்போது புரிந்தது ! கட்டை விரலை வைத்து உள்ளே அழுத்தம் கொடுத்து வெளியில் அந்த பானையை வடிவம் கொடுக்க முயற்சிக்க அது வளைந்து நெளிந்து கொண்டு சென்றது !! முடிவில் நான் பானை செய்து முடித்து கைகளில் எடுத்தபோது பிக்காசோ வரைந்த ஒரு மாடர்ன் ஆர்ட் போல இருந்தது..... நான் ஒரு சீட்டில் பானை என்று எழுதி ஒட்டி வைத்தால் ஒழிய யாரும் அதை பானை என்று நம்ப மாட்டார்கள் என்று எனக்கு நன்கு தெரிந்தது.

இது மாடர்ன் பானை சார் !

என்னதான் நாம கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லும் ரகம் இல்லையா, அடுத்து அவர் பானை செய்து முடித்தவுடன் எனது கைகளில் கொடுக்க அதை கைகளில் ஏந்தி நான் கொடுத்த போஸ் கீழே !!

வெற்றி, வெற்றி, வெற்றி..... காசியப்பன் பாத்திர கடை எங்க இருக்கு ?!

எவ்வளவு பானை செய்திருக்கிறேன் பாருங்கள் !
தூரத்தில் இருந்து பார்க்கும்போது அட இவ்வளவுதானா என்று தெரிந்தாலும், அதை செய்து பார்க்கும்போதுதான் கஷ்டமும், அதன் கலை நயமும் தெரிகிறது. வெறும் கை விரல்களை கொண்டு பல விதமான பானை வடிவங்கள், விளக்குகள், உண்டியல், சட்டி என்று செய்பவரை பார்த்தபின் நாம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு செய்யும் வேலைக்கு சற்றும் சளைத்ததில்லை இது என்று புரிந்து கர்வம் அழிந்தது. சிறிது தூரம் சென்று திரும்பி பார்க்கும்போது இன்னமும் அந்த ஆச்சர்யம் மனதில் இருந்து அகலவில்லை...... பானை என்றுமே ஒரு அதிசயம்தானே !!
பானை அவர் செஞ்சது..... போஸ் மட்டும் என்னுது !!

Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, Childhood, Paanai, pottery, potter, kuyavan

Monday, February 10, 2014

அறுசுவை - 24K தங்கம் தூவி ஒரு காபி !

ஒரு முறை வெளிநாட்டில் ஒரு காப்பியின் விலை சுமார் நான்காயிரம் என்று பார்த்தேன், அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்தபோது அதை தங்க கோப்பையில் தருகிறார்கள் அத்தோடு உலகின் மிக சிறந்த காப்பி கொட்டையில் இருந்து சுட சுட தருவதால் இவ்வளவு ஆகிறது என்று அந்த ஸ்டார் ஹோடேலில் சொன்னபோது....... ம்ம்ம்ம்ம் வாழ்வு என்று நினைத்தேன், ஆனால் சாப்பிடவில்லை !! இந்த முறை மதுரை சென்று இருந்தபோது பெரியார் நிலையத்தில் இருந்து சுமார் 15 நிமிட தூரத்தில் இருந்த பெத்தானியாபுரம் பக்கத்தில், பப்பீஸ் என்னும் ஒரு ஆடம்பர பேக்கரி இருந்ததை பார்த்தேன். உள்ளே நுழைந்து வீட்டிற்க்கு சிலவற்றை வாங்கப்போன போது ஒரு போஸ்டர் கண்ணில் பட்டது...... 24k தங்கம் சேர்த்து ஒரு காபி என்று !! கண்ணில் மின்னியது அந்த தங்கம், சரி ஒரு கப் சொல்லலாம் என்று மனம் குதிக்க ஆரம்பித்தது !

அதை பற்றி கடையில் வேலை பார்ப்பவர்களை கேட்டபோது அந்த போஸ்டர் ஒட்டியது பற்றி அவர்களுக்கே தெரியவில்லை, சற்று முன்புதான் அதை செய்திருக்கிறார்கள். நம்மை ஆண்டவன் இதை சாப்பிடவே அனுப்பி இருக்கிறான் போல என்று முடிவு செய்து அதை சாபிடாமல் போகமாட்டேன் என்று அடம் பண்ணவும், அவர்கள் சென்று மேனேஜரை கூட்டி வந்தனர். அவரோ அது இப்போதுதான் வந்து இறங்கி இருக்கிறது இன்னும் யாருக்குமே அது தெரியாது என்று சொல்லி, அதை நாளையில் இருந்து ஆரம்பிக்கிறோம் என்று சொன்னவுடன் நான் தரையில் காலை உதைத்து அழும் குழந்தையை போல அந்த காபி குடிக்காமல் அங்கிருந்து கிளம்பமாட்டென் என்று சொல்ல அந்த மேனேஜர் தாடையை சொறிந்து கொண்டு உள்ளே சென்று யாருடனோ பேசி விட்டு வந்தார்...... பின்னே, அந்த காபி குடிச்சு நாம தக தகன்னு MGR போன்று மின்னுவதை தடுக்க வெளிநாட்டில் இருந்து செய்யும் சதி இல்லையா இது !!


முடிவில் அவர் வந்து ஒரு பதினைந்து நிமிடம் ஆகும், என்று சொல்ல நான் அங்கேயே வெயிட் செய்கிறேன் என்றேன்.  சுமார் இருபது நிமிடம் கழித்து ஒரு கோப்பை நிறைய காபி வர மனது குதிக்க ஆரம்பித்தது இங்கு...... அதை சாப்பிட்டவுடன் ரஜினி வெள்ளை ஆனது போல நானும் ஆகிவிடுவேன் என்று மனது முழுக்க நம்பிக்கை ! வெள்ளை கோப்பையில் நுரை ததும்ப என் முன்னால் வைத்தார்கள். அதன் மேலே பள பளவென்று தங்கத்தில் தூள்கள் மின்னியது !! வெறும் தூள்கள் போல் இல்லாமல் நட்சத்திரம், ரவுண்டு என்று ஷேப் இருந்தது. அங்கு இருந்த எல்லோரும் என்னையே பார்க்க நான் அடுத்து செய்தது கண்டு முகம் சுழித்தனர் !!அந்த கோப்பையில் இருந்த காப்பியை ஆனந்தமாக பார்த்து, ஒவ்வொரு தங்க துகள்களையும் மெதுவாக ரசித்து பின்னர் அதை கொடுத்த பிளேட்டில் சாய்த்து சர்ரென்று உறிஞ்ச...... பின்னே தங்கமாச்சே !! எல்லோரும் ஒரு தங்க காபியை இதுவரை இப்படி சாப்பிட்டு பார்த்ததில்லை போலும், ஆனாலும் நான் வெட்கபடாமல் நின்று நிதானித்து சுகமாக ஒவ்வொரு உறிஞ்சளையும் தொடர எனது மேனியில் பளபளப்பு அதிகரித்தது போன்று ஒரு பிரமை :-). என்னதான் நாம டெல்லிக்கு ராஜாவாக ஆனாலும் அப்படி காபி குடிச்சாதான் மகிழ்ச்சி, என்ன நான் சொல்றது ?! ஒரு கோப்பை காபி சுமார் 105 ரூபாய் ஆனது, முடிவில் நான் அங்கு இருந்து கிளம்பி தக தகவென வீட்டுக்கு வந்து நுழைந்தபோது எனது மனைவி "வெளிய சுத்தாதீங்க அப்படின்னா 
கேட்கறீங்களா.... பாருங்க எப்படி கறுத்து போய் வந்து இருக்கீங்க" என்று சொல்ல நான் காபி குடித்ததை அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று இன்றுவரை யோசித்துக்கொண்டு இருக்கிறேன் ! நீங்க அந்த போட்டோவை பார்க்கும்போது நான் கொஞ்சம் கலரா இருக்கிற மாதிரி தெரியலை ?!


பஞ்ச் லைன் :

சுவை - கேக், பேக்கரி வகைகள், சான்ட்விச் என்று நிறைய வகைகள் இருக்கிறது, காபியிலும் இருந்தாலும் தங்கம் தூவிய காபி டாப் !

அமைப்பு - பெரிய கடை, வியர்க்காமல் உட்கார்ந்து சாப்பிடலாம், பார்கிங் இருக்கிறது.

பணம் - இந்த காபி மட்டும் 105 ரூபாய், மற்ற உணவு எல்லாமே சிறிது விலை அதிகம்தான்.

சர்வீஸ் - நல்ல சர்விஸ். கூட்டம் அதிகமாக இருக்கிறபோது நீங்கள் இதையே எதிர்பார்க்க முடியாது !


சரியா பார்த்து சொல்லுங்க வெள்ளையா ஆயிடேனான்னு...... இதுக்கு மேல கிராபிக்ஸ் பண்ணனுமின்னா மின்னல் வரிகள் கணேஷ் சாரைதான் கூப்பிடனும் !! :-)

அட்ரஸ் :

http://puppysbakery.com/

Sivakasi :Madurai :
80, New Road Street,
Sivakasi - 626 123
Ph : 04562 278855
e: sales@puppysbakery.com
224, Theni Main Road
(Near Bell Jumbo),
Madurai - 625 016
Ph : 0452 - 2381177 / 88

No.58, 80 Feet Road,
Annanagar,
Madurai - 625 020.
Ph: 0452 2522270/80


Labels : Suresh, Kadalpayanangal, Puppys bakery, Gold coffee, Gold, concept coffee, kaapi, 24K