Tuesday, February 11, 2014

சிறுபிள்ளையாவோம் - பானை செய்வோம் !

ஒவ்வொருக்குள்ளும் ஒரு குழந்தை போல வாழ நினைக்கும் மனம் இருக்கிறது என்பது நான் சென்ற வாரங்களில் பகிர்ந்து இருந்த சேமியா ஐஸ் மற்றும் மாட்டு வண்டி பயணத்தில் தெரிந்தது ! நிறைய பேர் என்னிடம் போனில் பேசும்போது இதையெல்லாம் நான் செய்ய நினைத்து இருக்கிறேன் என்றும், பம்பரம் பற்றி எழுதுங்கள், சில்லாங்கல் பற்றி எழுதுங்களேன் என்று யோசனையும் கொடுத்தனர். ஒவ்வொன்றாக வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் !! சிறு வயதில் வீட்டில் உண்டியல் வாங்குவதற்கு என்று எனது அம்மா பானை விற்கும் இடத்திற்கு அழைத்து சென்றதுதான் மண் பாண்டங்களை பார்த்த முதல் அனுபவம். பின்னர் வெயில் காலத்தில் சில்லென்று நீர் வேண்டும் என்று ஒரு நாளில் திடீரென்று வீட்டில் முளைத்தது ஒரு மண் பானை, அதில் இருந்த குளிர்ந்த தண்ணீர் எப்படி வந்தது என்று ஒரு கேள்வி எழுந்தது. பின்னர் ஒரு நாளில் ஊருக்கு வெளியில் இருந்த குயவரின் வீட்டிற்க்கு பொங்கலுக்கு மண் பானை வாங்க எனது அப்பா அழைத்து சென்ற போது ஒரு சிறிய சக்கரத்தில் மண்ணை வைத்து சுற்றி அழகாய் பானையை உருவாகிய அந்த கணம்தான் எனது முன் ஒரு அதிசயம் நிகழ்கிறது என்று நினைத்த கணம்....... இன்றளவிலும் அது அதிசயமாகத்தான் இருக்கிறது என்பதுதான் நிஜம் !!



சமீபத்தில் ஒரு ரிசார்டிற்கு சென்று இருந்த போது ஒரு ஓரத்தில் பானை செய்து கொண்டிருந்தார் ஒரு முதியவர். நானும் எனது மகனும் ஒரு சேர கண்களை விரித்து பார்த்துக்கொண்டிருந்தோம், என்ன இருந்தாலும் அது இன்னும் அதிசயம்தானே. ஒரு சிறிய சக்கரம், அதை கம்பு கொண்டு வேகமாக சுற்றிவிட்டு அதன் மீது சிறிது மண்ணை வைத்துவிட்டு அவரது கைகளின் விரல்கள் நடத்தும் ஆச்சர்யம், அதிசயம்..... அடடா ராக்கெட் விடுவதை கூட நான் இவ்வளவு அறிவியல் பார்வையோடும், அதிசயத்தோடும் பார்த்ததில்லை. அழகான பானை உருவானவுடன் அதை அப்படியே வெட்டி எடுத்து காய்வதற்கு ஓரமாக வைக்க எனக்கும் அப்படி செய்ய வேண்டும் என்று மனம் குழந்தையின் குதூகலத்துடன் குதிக்க ஆரம்பித்தது  !!



மெதுவாக அவருடன் பேச்சு கொடுத்துக்கொண்டே நானும் ஒரு பானை செய்து பார்க்கட்டுமா என்று ஆசையாக கேட்க, முதலில் மறுத்தாலும் பின்னர் சரியென்றார். பானை செய்வதற்கு முன் ஒரு சிறிய வகுப்பு எடுத்தார்...... பானை செய்வதற்கு விரல்கள் நன்றாக வளைய வேண்டும், வேகத்திற்கு ஏற்ப விறுவிறுவென்று பானையை சரி செய்ய தெரிந்து இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் சொல்ல ஆரம்பிக்க கம்ப்யூட்டரில் அதகளம் செய்யும் நமக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று ஒரு மிதப்பில் சரி சரியென்று தலையை ஆட்டினேன். முதலில் ஒரு குச்சியை அந்த சக்கரத்தின் நடுவில் விட்டு விறுவிறுவென்று சுற்ற ஆரம்பிக்கிறார், அந்த குச்சியை வாங்கி நான் சுற்ற சக்கரம் அதன் அச்சை விட்டு ஓடி விடும் அளவுக்கு கன்னா பின்னாவென்று ஆடிக்கொண்டு சுற்ற ஆரம்பித்தது கண்டு அவரது வயிற்றில் பீதியை கிளம்பியது என்பது கண்களில் நன்கு தெரிந்தது !! 

கோழி பிடிக்கலை.... பானைதான் செய்யறேன் !

ஹீ ஹீ என்று அசடு வழிந்துக்கொண்டு அடுத்தது என்ன என்று அவரை பார்க்க, பானை செய்யும்போது நிற்க வேண்டிய கோணம் பற்றி விவரித்தார். நன்றாக முதுகு வளைந்து அவர் குனிந்துக்கொண்டு செய்வதை பார்த்தபோது சாதரணமாக தெரிந்தாலும் நான் அடுத்து அதை செய்தபோதுதான் முதுகு வலிக்கும்போது புரிந்தது ! கட்டை விரலை வைத்து உள்ளே அழுத்தம் கொடுத்து வெளியில் அந்த பானையை வடிவம் கொடுக்க முயற்சிக்க அது வளைந்து நெளிந்து கொண்டு சென்றது !! முடிவில் நான் பானை செய்து முடித்து கைகளில் எடுத்தபோது பிக்காசோ வரைந்த ஒரு மாடர்ன் ஆர்ட் போல இருந்தது..... நான் ஒரு சீட்டில் பானை என்று எழுதி ஒட்டி வைத்தால் ஒழிய யாரும் அதை பானை என்று நம்ப மாட்டார்கள் என்று எனக்கு நன்கு தெரிந்தது.

இது மாடர்ன் பானை சார் !

என்னதான் நாம கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லும் ரகம் இல்லையா, அடுத்து அவர் பானை செய்து முடித்தவுடன் எனது கைகளில் கொடுக்க அதை கைகளில் ஏந்தி நான் கொடுத்த போஸ் கீழே !!

வெற்றி, வெற்றி, வெற்றி..... காசியப்பன் பாத்திர கடை எங்க இருக்கு ?!

எவ்வளவு பானை செய்திருக்கிறேன் பாருங்கள் !
தூரத்தில் இருந்து பார்க்கும்போது அட இவ்வளவுதானா என்று தெரிந்தாலும், அதை செய்து பார்க்கும்போதுதான் கஷ்டமும், அதன் கலை நயமும் தெரிகிறது. வெறும் கை விரல்களை கொண்டு பல விதமான பானை வடிவங்கள், விளக்குகள், உண்டியல், சட்டி என்று செய்பவரை பார்த்தபின் நாம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு செய்யும் வேலைக்கு சற்றும் சளைத்ததில்லை இது என்று புரிந்து கர்வம் அழிந்தது. சிறிது தூரம் சென்று திரும்பி பார்க்கும்போது இன்னமும் அந்த ஆச்சர்யம் மனதில் இருந்து அகலவில்லை...... பானை என்றுமே ஒரு அதிசயம்தானே !!




பானை அவர் செஞ்சது..... போஸ் மட்டும் என்னுது !!

Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, Childhood, Paanai, pottery, potter, kuyavan

14 comments:

  1. "அவர்கள் எப்படி அவ்வளவு அழகாக, வேகமாக செய்கிறார்கள்...?" என்று எப்போது நினைத்தாலும் வியப்பு தான்... நடுநடுவே கோடுகள் போடுவதும் அற்புதமாக இருக்கும்...

    விட்டது போங்க... கர்வம் விட்டது போங்க... அது தானே வேண்டும்... ஹா... ஹா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்.... இப்படி ஒவ்வொரு செயலிலும் கர்வம் அழிந்துக்கொண்டே வருகிறது என்பதுதான் நிஜம் !

      Delete
  2. தூரத்தில் இருந்து பார்க்கும்போது அட இவ்வளவுதானா என்று தெரிந்தாலும், அதை செய்து பார்க்கும்போதுதான் கஷ்டமும், அதன் கலை நயமும் தெரிகிறது.

    ஏனோ நந்தவனத்தில் ஓர் ஆண்டி -பாட்டு நினைவுக்கு வந்தது ..!

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்.... ஆமாம் ஆண்டி பாட்டு நினைவுக்கு வந்தது சரி, ஆனால் என்னை ஆண்டியாக்கி விடவில்லையே ?! :-)

      Delete
  3. பானை செய்பவர் ஒருவர் என் நண்பர்! பலமுறை அவர் செய்யும் பானைகளை பார்த்து வியந்தது உண்டு! இந்த தொழில் நசிவடைந்து வருவது வேதனையான ஒன்று. இளைய தலைமுறைகள் இந்த தொழிலில் ஆர்வம் காட்டவில்லை! நண்பரின் மகன்கள் படித்து வேலை செய்ய போய்விட்டனர். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சுரேஷ்...... தமிழ்நாட்டில் தரமான பானைகள் செய்யும் மாவட்டம் எது தெரியுமா. விரைவில் எதிர்பாருங்கள் ஊர் ஸ்பெஷல் பகுதியில்.... நிறைய நிறைய கதைகள் இருக்கிறது !

      Delete
  4. பானை செய்வதை நானும் ஆச்சர்யமா பார்ப்பேன். செஞ்சுப்பார்க்க ஆசைதான். ஆனா, வெட்கம் தடுப்பதால இதுவரை யாரையும் கேட்டதில்ல.

    ReplyDelete
    Replies
    1. பானை பிடித்தவள் பாக்கியசாலி..... சீக்கிரம் செய்யுங்க !!

      Delete
  5. செஞ்சது சொப்பா!? இல்ல பானையா!? இல்ல உங்க கைல பானை சொப்பு மாதிரி தெரியுதா!?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.... ரெண்டாவது சொன்னது சரிதான் போல இருக்கு ! நன்றி !

      Delete
  6. நலிவடைந்த தொழில்களில் இதுவும் ஓன்று. மக்கள் உடையாத அலுமினிய பத்திரங்களை பயன்படுத்த கொண்டு இருக்கும்போது பொங்கல் பண்டிகைகள் தான் இந்த தொழிலை மறையாமல் வைத்து இருக்கிறது என்றால் மிகையாகாது. நல்ல அனுபவம் , ரசித்தேன் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீநி....... கால மாற்றத்தில் அழிந்து கொண்டு வரும் ஒன்றில் இதுவும் அடக்கம்.

      Delete
  7. நல்லபகிர்வு. "தஞ்சாவூர்மண்எடுத்து...... பாடல்நினைவுக்குவந்தது

    பானை சட்டி., எனக்கும்பிடித்தமானது சிலநாட்களில் சட்டியில் கறிசமைப்பேன்.

    ReplyDelete