Wednesday, February 26, 2014

ஊர் ஸ்பெஷல் - பாலவநத்தம் சீரணி மிட்டாய்

இந்த வருட ஆரம்பத்தில் சொன்னதுபோல இந்த ஊர் ஸ்பெஷல் பயணத்தில்  இதுவரை யாரும் அறியாத பல ஊரின்  சிறப்பையும் சொல்வேன் என்று சொல்லி இருந்தேன் அல்லவா.... அதில் ஒன்றுதான் இந்த பாலவநத்தம் சீரணி  மிட்டாய் !! ஒரு ஊரின் பெருமை என்பது அந்த ஊரில் வசிப்பவர்களுக்கே தெரியாது என்பதுதான் சோகம். அதை தேடி செல்வதும், சரியான ஆள்களை பிடித்து விஷயம் வாங்குவதும், தெரியாத நேரத்தில் சென்று கடையின் முன் வெயிலில் காத்திருப்பதும், பேசவே மாட்டேன் என்னும் சிலரை  பேட்டி எடுப்பதும் என்று ஒவ்வொரு ஊர் ஸ்பெஷல் பயணமும் கடினமான ஒன்று...... அப்படிதான் இந்த  பாலவநத்தம் சீரணி மிட்டாயும் !! என்  சொந்தங்கள்  இருக்கும்  ஊரில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும், நான் அங்கு அடிக்கடி சென்று வருவது இல்லை என்பதால் இதுவரை எத்தனை முறை பாலவநத்தம் ஊரை கடக்கும்போதும் தெரியவில்லை. இந்த முறை ஒரு பாட்டியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் சப்பு கொட்ட சொன்ன போதுதான் தெரிந்தது....... அந்த பயணத்தில் தெரிந்தது அழியும் ஒரு ஊரின் சிறப்பு !!
 
விருதுநகருக்கும் அருப்புக்கோட்டைக்கும் இடையில் இருக்கும் ஊர்தான் பாலவநத்தம். மிக சிறிய ஊர், ஒரு தெரு, அதுதான் அந்த ஊரின் கடைதெரு. அங்கு நூறு கடைகள் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் அதில் பத்து கடைகள் இந்த சீரணி மிட்டாய் கடை. அந்த ஊரில் இருப்பவர்கள் சும்மா இருக்கும்போது எல்லாம் இதை மென்று கொண்டு இருக்கிறார்கள், பஸ் நிறுத்தத்தில் பேருந்து நிற்கும்போது டிரைவரிடம் சொல்லிவிட்டு அம்மாக்கள் கீழே இறங்கி அவசர அவசரமாக இந்த சீரணி மிட்டாயை வாங்குவதை கவனிக்கலாம். இன்று சாக்லேட் யுகத்தில் இது அழிந்து கொண்டு வருகிறது என்பது அவர்களிடம் பேசும்போது தெரிந்தது.
 
சீரணி மிட்டாயில் இரண்டு வகை உண்டு........வெல்ல சீரணி, கருப்பட்டி சீரணி. அதையே கறுப்பு மற்றும் வெள்ளை சீரணி மிட்டாய் என்றும் சொல்கிறார்கள். இன்று கருப்பட்டியை மக்கள் அதிகம் விரும்புவதில்லை என்பதால் 
வெல்ல சீரணி மற்றும் சக்கரை சீரணி கிடைக்கிறது. கிராம மக்களின் ஜாங்கிரி என்று இதைச் செல்லமாகச் சொல்கிறார்கள். சின்ன வளையங்களாகச் சுற்றி இனிப்பில் முக்கி எடுத்தால் அது ஜிலேபி. பெரிய சைஸில் நீளமான டிசைனில் இருந்தால் அதுதான் சீரணி மிட்டாய். சீரணி மிட்டாயை ஒரு வாரம்வரை வெச்சிருந்து சாப்பிடலாம் கெட்டுப்போகாது என்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு கடைக்கும் ஒரு டிசைன் இருக்கிறது..... ஒரு கடையில் சீரணி  மிட்டாய் மெலிதாக இருந்தால், இன்னொரு கடையில் பெரிதாக இருக்கிறது. இந்த ஊரில் சீரணியின் சுற்றை வைத்தே இது இந்த கடை சீரணி என்று சொல்லி விடுகிறார்கள் !!
அங்கு பெயர் பலகையே இல்லாத பழமையான கடை ஒன்று இருக்கிறது, யாரிடம் கேட்டாலும் அந்த கடை சீரணி வாங்குங்க என்றனர். நடந்து சென்று அந்த கடையில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் வெறும் சீரணி மட்டுமே !! கால் கிலோ கொடுங்க என்று கேட்டவுடன் சுற்றி வைத்து இருக்கும் சீரணியில் இருந்து பியித்து எடுக்கிறார், அதில் இருந்து வெல்ல பாகு கொட்ட இங்கு எச்சில் ஊருகிறது !! முடிவில் பேப்பரில் போட்டு கொடுத்தவுடன் ஒரு வாய் வைக்கும்போது நமது திருவிழா காலங்கள் நினைவுக்கு வருகிறது....... அங்கு சுற்றி வைக்கப்பட்டு இருக்கும் பீமவிலாஸ் புஷ்டி அல்வா கடையில்  தூண் போல வைக்கப்பட்டு இருந்த காலங்களில் ஒரு சீரணி  வாங்கிகொண்டு  சுற்றிய  நாட்கள் எவ்வளவு இனிமையானவை !!
ஜாங்கிரி சாப்பிடும்போது  மெதுமெதுவென்று இருக்கும், இந்த சீரணி என்பது சற்று கடினமாக  இருக்கிறது. கொஞ்ச நேரம் எச்சிலில் ஊறவைத்தால்  மெதுவாகி விடுகின்றது. ஒரு வாய் போட்டதுமே  சொல்லிவிடும் இதை  விடவா சாக்லேட், சிப்ஸ், அல்வா எல்லாம் என்று !! முந்தின காலங்களில் ஊர் முழுக்க இருந்த சீரணி கடைகள் இன்று பத்து மட்டுமே, விரைவில் அது ஒன்று மட்டும் என்று ஆகி காணாமல் போவதற்குள் ஒரு வாய் சாப்பிட்டு பார்த்துவிடுங்கள் ! 

தேவைப்படும் பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1/2 கிலோ

உளுந்து - 50 கிராம்.

சுக்கு- 1 டீஸ்பூன்.

வெல்லம்- 3/4 கிலோ

செய்முறை:
'' பச்சரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து இட்லி மாவு பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். வெல்லத்தை சுடுதண்ணீரில் கரைத்து வெல்லப்பாகு தயாரித்துத் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பெரிய சைஸ் துளை போடப்பட்டு இருக்கும் துணியில் அரிசி மாவை வைத்துக் கொதிக்கும் எண்ணெயில் முறுக்கு பிழிவதுபோல் பிழிய வேண்டும். நன்றாக வெந்ததும் வெல்லப்பாகில் 10 நிமிடங்கள் ஊறவைத்து வெளியே எடுத்தால் கருப்பு சீரணி ரெடி. வெள்ளை சீரணி மிட்டாய் தயாரிப்பதும் இதே முறையில்தான். ஆனால், கருப்பு சீரணிக்கு வெல்லம் என்றால், வெள்ளை சீரணிக்கு சீனியை வைத்து சீனிப்பாகு தயாரித்து அதில் ஊறவைத்து எடுக்க வேண்டும்!

Labels : Oor special, Palavanatham, Seerani, mittai, Suresh, Kadalpayanangal, District Special, Virudhunagar 

24 comments:

  1. வெல்லப் பாகு சொட்டுவது இனிப்புடன் இங்கே தெரிகிறது...! ஹிஹி...

    செய்முறை விளக்கத்திற்கும் நன்றி...

    இந்தத் தொழிலில் எதிர்ப்பார்த்த வருமானம் இல்லை என்பதால், ஊரில் வசிப்பவர்களுக்கே தெரியவில்லை போலும்...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான், நிறைய பேர் இதை விட்டு விலகுகிறார்கள். நன்றி, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் !

      Delete
  2. வணக்கம் செய்முறையைப்பற்றியும் எழுதியது பதிவின் தரத்தை மேம்படுத்துகிறது நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார், உங்களது வலைபதிவும் எழுத்தும் அபாரம் !

      Delete
  3. antha tharaasu 4to la, kadaikaararu ennango seiraru kaiya wacchu

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் நமக்கு எதுக்கு... சீரணி மிட்டாய் நல்லா இருந்துச்சா அப்படின்னு மட்டும் பார்ப்போமே !! நன்றி !

      Delete
  4. எனக்கு வெல்லச் சீரணிதான் பிடிக்கும். அருப்புக்கோட்டையில் ஒரு கடையில் நல்லா இருக்கும்ன்னு எங்களுக்காக அப்பா வாஞ்கி வருவார். அடுத்த வாரம் அப்பா அருப்புக்கோட்டை போகப்போறங்க. நானும் அடுத்த வார புதன் கிழமையில சீரணி சாப்பிடுவேன். நாங்களும் ஃபோட்டிஓ எடுத்து பிளாக்ல போடுவொமில்ல!

    ReplyDelete
    Replies
    1. வெல்ல சீரணி இப்போது கிடைப்பதில்லை இங்கே, கருப்பட்டி சீரனியும்.


      உங்களது பேட்டியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.


      நன்றி !

      Delete
  5. எங்க ஊரிலும் கிடைக்கும்... ஆனா வெள்ளை (சர்க்கரை) மிட்டாய் மட்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஸ்கூல் பையன் அவர்களே, உங்களது பயணத்தில் சொல்லுங்களேன் நானும் வருகிறேன்.


      தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  6. வணக்கம்

    மிக அழகாக சொல்லிஉள்ளீர்கள்.... இந்த வெல்லப்பாகுவை எங்கள் ஊரில் சொல்வார்கள் (தேன் குழல் என்று)அழைப்பார்கள் ... இறுதியில் செய்முறை விளக்கமும் அருமை....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தேன்குழல்தான் சீரணி நண்பரே...... அதன் சுவை அருமையோ அருமை.


      தங்களது கருத்துக்கு நன்றி !

      Delete
  7. விருதுநகரில் உள்ள ஆரோக்கியராஜ் மிட்டாய் கடையும் "சீரணியில்" பிரபலமான கடை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிவா, என்ன இருந்தாலும் ஊர் ஸ்பெஷல் அதனால் அங்கேயே சென்றேன் !

      Delete
  8. ரவுண்டு கட்டி அடிக்கிறிங்க சுரேஷ் சூப்பர் ...

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் இல்லை பிரேம், எல்லாம் உங்களுக்காகத்தானே !! நன்றி !

      Delete
  9. சீரணி மிட்டாய் நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மாதேவி..... தங்களின் வருகையும், கருத்தும் சீரணியின் இனிப்பை விட சந்தோசம் தருகிறது !

      Delete
  10. நம்ம ஊர் பக்கமும் நல்லா இருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க கிருஷ்ணா, அடுத்த முறை நாம ரெண்டு பேரும் போகலாம் !

      Delete
  11. அருப்புகோட்டையில் முனியாண்டி மிட்டாய் கடை சீரணி, பால்பன் மற்றும் மிச்சர் பிரசித்தம். இங்கு கிடைக்கும் மிச்சர் போல் வேறு எங்கும் கிடைக்காது

    ReplyDelete
    Replies
    1. பாஸ், எங்க சொந்த ஊரே அருப்புக்கோட்டைதான்...... அடுத்த முறை போய் வரும்போது எழுதுகிறேன். தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !

      Delete
  12. வணக்கம்.......................உங்களின் பயணக் கட்டுரைகள் மிக அற்புதம்.................அந்த வகையில் சீரணி மிட்டாய்.....................ஆனால் கருப்பட்டிமிட்டாயில் இருக்கும் சுவை வெல்ல மிட்டாயில் இல்லை என்றே தோன்றுகின்றது..................வெல்ல மிட்டாயில் சாயம் சேர்ப்பதால் அப்படி இருக்கலாம்..................நன்றி....................ஆலயம் எஸ் ராஜா

    ReplyDelete
  13. வணக்கம்.......................உங்களின் பயணக் கட்டுரைகள் மிக அற்புதம்.................அந்த வகையில் சீரணி மிட்டாய்.....................ஆனால் கருப்பட்டிமிட்டாயில் இருக்கும் சுவை வெல்ல மிட்டாயில் இல்லை என்றே தோன்றுகின்றது..................வெல்ல மிட்டாயில் சாயம் சேர்ப்பதால் அப்படி இருக்கலாம்..................நன்றி....................ஆலயம் எஸ் ராஜா

    ReplyDelete