Tuesday, March 18, 2014

அறுசுவை (சமஸ்) - ஆண்டவர் கடை அசோகா அல்வா, திருவையாறு

சென்ற வாரத்தில் நான் பகிர்ந்த "புத்தூர் அசைவ சாப்பாடு" பதிவுக்கு ஏகப்பட்ட  பாராட்டு !! இதன் மூலம் சமஸ் அவர்களுக்கு எவ்வளவு தூரம் ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பது தெரிந்தது. இந்த வாரம் திருவையாறு..... தஞ்சாவூர் மாவட்டத்தில்,தஞ்சாவூர் நகரத்தில் இருந்து வடக்கே 13 கி.மி. தொலைவில் பெரம்பலூர் -மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை 226 ல் திருவையாறு அமைந்துள்ளது. திருவையாறில் அசோகா அல்வா என்பது உலக பிரசித்தம். யாரிடம் கேட்டாலும் இங்கே கிடைக்கும் என்று சொல்கிறார்கள், அப்படி சொல்லும்போதே அங்கே ஆண்டவர் கடைன்னு ஒன்னு இருக்கு அங்க போய் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு எச்சிலை ஒரு மிடறு விழுங்குகின்றனர், சொல்லும்போதே வாய் ஊருகிறது அவர்களுக்கு. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்பது கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும், ஆனால் அசோகா அல்வாவோ ஆரஞ்சு கலரில் சுண்டி இழுக்கும்..... சுவையும் இருட்டு கடை அல்வாவை போலவே சுண்டி இழுக்கும் !!
ஆண்டவர் கடை அசோகா அல்வாவை பற்றி திரு. சமஸ் அவர்கள் எழுதி உள்ளதை படிக்க இங்கே சொடுக்கவும்...... அசோகா அல்வா !
திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளக பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான தியாகராஜ சுவாமிகள் நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், தியாகராஜ ஆராதனை விழா என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாற்கள் நடைபெற்று வருகிறது. இதற்க்கு அடுத்து என்ன பேமஸ் என்று கேட்டால் அசோகா என்று ஊரே சேர்ந்து சொல்கிறது. திருவையாறு சென்று தெற்கு வீதி போய் கண்ணை மூடி கொண்டு நடந்தால் உங்களது மூக்கே வாசனை பிடித்து அழைத்து செல்கிறது ! தலைமுறை தாண்டி இந்த கடையில் அந்த அசோகா அல்வாவின் சுவையை மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
அதை பற்றி விரிவா பார்க்கும் முன், அசோகா அல்வா என்பது என்ன என்று ?!  கோதுமை அல்வாவின் அழகான தங்கச்சி என்று சொல்லலாம்..... சும்மா ஆரஞ்சு கலரில், பளபளன்னு நெய்யில் உடம்பெல்லாம் மின்ன, அங்க அங்க வறுத்த முந்திரியும், திராட்சையும் எட்டி பார்க்க, கோதுமையும் பாசி பருப்பும் சேர்ந்து அதை வழுவழுவென்று ஆக்கி இருக்க, என்ன அல்வா தண்ணியில் மிதந்துகிட்டு இருக்கு என்று நினைக்கும்படியாக நெய்யை அவ்வளவு விட்டு ஒரு வாய் போட்டாலே சும்மா ஜிவ்வுன்னு உச்சியில் இருந்து உள்ளங்கால்வரை அந்த இனிப்பு ஓடும் ஒன்றுதான் அசோகா அல்வா !!
 
நாங்கள் சென்று இருந்தபோது ஊருக்குள் நுழையும்போதே ஆண்டவர் கடை எங்கே இருக்கு என்று கேட்கவும், நேரா போய் வலது பக்கம் திரும்புங்க என்றனர். அப்புறம் என்று கேட்க, அவரோ அவ்வளவுதான் அங்கேதான் கடை என்றபோது நக்கல் செய்கிறாரோ என்று தோன்றியது, ஆனால் திருவையாறு என்ற சிறிய ஊரில் அவர் சொல்வது சரிதான் என்று தோன்றியது..... ஆண்டவர் கடை அசோகா அல்வா என்று பெரிய மஞ்சள் நிற போர்டு வரவேற்றது. உள்ளே நுழைந்தவுடன் கடை முதலாளி பெரிய புன்னகையுடன் வரவேற்றார். மிக சிறிய கடை, பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட இடம் இருக்கிறது. உள்ளே நுழைந்து அசோகா என்றவுடன் கும்பகொனது பசும்பச்சை வாழைஇலையில் ஆரஞ்சு வர்ணத்தில் நெய் ஓடும் அசோகாவும் காரத்திற்கு என்று சிறிது மிக்ஸ்ச்சரும் என்றும் வந்து உங்களது முன் இருக்கும்போதே நாக்கில் காவிரி ஆறு போல எச்சில் கரைபுரண்டு ஓடுவதை உணரலாம். ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டவுடன் "என்ன ஆச்சு.... அசோகா அல்வா வந்தது, கையில் எடுத்தேன், கொஞ்சமே கொஞ்சம் எடுத்து வாயில வைச்சேனா.........அப்புறம் அந்த ருசி மட்டும்தான் வாயில இருக்கு, அல்வாவை காணோம்" என்று நீங்கள் யோசிக்கும்போது, அடுத்த வாய் உணர்ந்து வைக்கும்போதுதான் தெரியும் நெய் சொட்ட சொட்ட எடுத்து வாயில் வைத்தவுடன் அது வழுக்கி கொண்டு வயிறு நோக்கி அரை நொடியில் பயணித்து இருந்ததை !! இதில் எழுதியது எல்லாம் எதுகை மோனைக்காக இல்லை நண்பர்களே...... உண்மை அதுதான் !
கொஞ்சம் கொஞ்சமாக உங்களது இலையில் அல்வா குறைய குறைய நீங்கள் சங்கீதம் கேட்காமலேயே போதையுடன் உட்கார்ந்து இருப்பீர்கள்.... பின்னே ஒரு கை அல்வாவிற்கு ஒரு கை நெய் சேர்த்து செய்தால் வேற என்னதான் செய்யும், அடுத்து மிச்சர் எடுத்து வாயில் போட்டாலும் அது இனிக்கத்தான் செய்கிறது ! இது சாப்பிட்டு விட்டு நீங்கள் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு வேறு எதை தின்றாலும் வயிறு புல் என்றே தோன்றிக்கொண்டு இருக்கும், ஆகவே உணவு வேளையில் இதை சாப்பிடாமல் இருப்பது உத்தமம் ! ஒரு கை அசோகா அல்வாவை சாப்பிட்டு அகோரி பாபா போல நெய் வாசத்தில் மயங்கி மலை பாம்பு போல எல்லோரும் சரிந்து இருக்க மெதுவாக எப்படியோ எழுந்து இலையை எடுக்க இலைக்கு கீழே நெய் அந்த டேபிளில் ஒட்டி இருந்தது....... அடேய் நான் இலை மேலே வைத்துதானே சாப்பிட்டேன் என்று உங்களுக்கு சந்தேகம் வரும், ஆனால் அந்த அசோகா அல்வாவை இலையும் அல்லவா சேர்ந்து சாப்பிட்டு இருக்கிறது !! முடிவில் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அல்வா பார்சல் வாங்கிவிட்டு வண்டி பக்கத்தில் வந்து நடக்க முடியாமல் அந்த அசோகா அல்வாவின் மயக்கத்தில் ......"இந்தா வண்டி சாவி........ யாரு வண்டியை ஓட்டறாங்க, கையை தூக்குங்க" என்று சொல்ல அல்வா எங்களின் கைகளை கட்டி போட்டு இருந்தது அப்போது !
அசோகா அல்வா செய்யும் முறை : 
  • பாசிபருப்பு(பயற்றம் பருப்பு) : ஒரு கப்
  • கோதுமை மாவு : ஒரு கப்
  • மைதாமாவு : இரண்டு டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை : மூன்று கப்
  • நெய் : ஒன்றரை கப்
  • ஏலக்காய் பொடி : கால் டேபிள் ஸ்பூன்
  • முந்திரி : 50 கிராம்
  • திராட்சை : 20 கிராம்
  • ஆரஞ்சு கேசரி பவுடர் : ஒரு சிட்டிகை
 பாசி பருப்பை வாசனை வரும் வரை வெறும் வாணலியில் வறுத்து கழுவி வைக்கவும் ஒரு பாத்திரத்தில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நிதானமான தீயில் வேகவிடவும் இன்னொரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் நெய்யை விட்டு அதில் முந்திரி திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும் அந்த நெய்யில் கோதுமை மைதா மாவுகலவையை சேர்த்து வறுக்கவும், நிதானமான தீயில் கை விடாமல் கிளறி வறுக்க வேண்டும். ஒரு கட்டத்தில் மாவு பொன்னிறமாகி நன்கு வாசனை வரும் இந்த பதத்தில் வேகவைத்த பருப்பை சேர்த்து கிளறவும். பருப்பு நன்கு மசிந்து மாவுடன் கலக்கும் போது சர்க்கரையையும் கேசரி பவுடரையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தின் ஓரம் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையும் ஏலக்காய் பவுடரும் மீதமுள்ள நெய்யும் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான அசோகா அல்வா சிரமமின்றி தயார்.

 கடை விலாசம் :

திருவையாறு பஸ்ஸ்டான்ட் மிக அருகிலேயே கடை, யாரை கேட்டாலும் சொல்வார்கள். தெற்கு வீதியில் கடை உள்ளது. கும்பகோணம் செல்லும் ரோட்டில் செல்ல வேண்டும்.
கடையின் மெனு கார்ட் :  

Labels : Suresh, Kadalpayanangal, Samas, Arusuvai, Andavar kadai, Ashoka alwa, Asoka alwa, Alva, Moong dal alwa, Thiruvaiyaaru, Tanjore special

Monday, March 17, 2014

அறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு

சமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு திருச்சியில் காலை உணவாக பார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை சாப்பிட்டோம், அடுத்து என்ன என்று என்னோடு வந்தவர்கள் பார்க்கையில் அடுத்து சிதம்பரம் சீர்காழி இடையில் இருக்கும் புத்தூர் ஜெயராம் கடையில் அசைவ சாப்பாடு என்று சொல்லியவுடன் என்னுடன் வந்த நான்கு பேரும் ஒரு மதிய உணவுக்கு அவ்வளவு தூரம் (170 km) செல்லவேண்டுமா என்று பயங்கர கடுப்பு, நான் இதற்க்கு முன் இந்த உணவகத்தை பற்றி வந்த பதிவுகளை படித்து இருந்ததினால் கண்டிப்பாக இங்கு செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். முடிவில் எல்லோரும் என்னுடன் வந்தாலும் வழியெல்லாம் எனக்கு திட்டுதான் ! அப்படி என்ன அசைவ சாப்பாடு கிடைக்கிறது அங்கே ? எல்லோரும் புகழ்ந்து எழுதும் அளவுக்கு அவ்வளவு சுவையா ? பதிவுகளை பார்க்கும்போது அது அவ்வளவு பெரிய உணவகமாகவும் தெரியவில்லையே ? என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் இருந்தது...... ஆனால் முடிவாக அங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு திரும்பும்போது என்னுடன் வந்தவர்கள் சொன்னது, "அப்படியே சிதம்பரத்தில் தங்கிட்டு நாளைக்கும் இங்கே சாப்பிட்டு ஊருக்கு போகலாமே ?" என்பதுதான். பதிவு எழுதவேண்டுமே என்று சொல்லவில்லை..... உண்மையிலேயே அவ்வளவு ருசியான அசைவ சாப்பாட்டை இதுவரை நான் வாழ்வில் உண்டதில்லை !புத்தூர் ஜெயராம் ஹோட்டல் என்ற ஹோட்டல் தேடி வழியில் யாரை கேட்டாலும் இப்படி போகணும் என்று வழி சொல்கிறார்கள். மெயின் ரோட்டிலேயே கடை, தவற விட்டு விடுவோமோ என்ற பயமே வேண்டாம்..... சாப்பாடு நேரத்தில் சென்னை - நாகப்பட்டினம் ரோட்டில் சென்றால் எங்கு இருபுறமும் திடீரென்று வகை வகையாக கார், பஸ் என்று வரிசை கட்டி நிற்கிறதோ அப்போது நீங்கள் புத்தூர் ஜெயராம் கடைக்கு அருகில் நெருங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். இறங்கி நடந்து சென்றால் ஒரு குடிசை போட்ட கடையின் வெளியே ஏக்கமாக கும்பல் கும்பலாக மனிதர்கள் நின்று கொண்டிருந்தால் அதுதான் கடை !! நீங்கள் உள்ளே நுழைந்து இத்தனை பேருக்கு உட்கார இடம் வேண்டும் என்று சொல்லவே கால் மணி நேரம் ஆகும், அந்த அளவுக்கு கியூவில் நிற்கிறார்கள். பின்னர் ஒரு இடம் காலியாக போகிறது என்று குரல் வந்தவுடன் நேரே சென்று சாதத்திற்கு தயிர் போட்டு சாப்பிடும் ஆளுக்கு பின்னால் தேவுடு காக்கவேண்டியதுதான். இவ்வளவு ருசியா, ரசித்து ருசித்து சாப்பிடும் ஆள் சாமானியமாக எந்திரிக்க மாட்டார்கள், திரும்பவும் ரசம் என்று ஆரம்பிப்பவர்களும் இருக்கிறார்கள், அப்போது ரத்த களரி ஆகாமல் இருக்க பிராத்திக்க வேண்டியதுதான். நாங்கள் இப்படி ஒருவரது பின்னால் நின்று கொண்டு இருக்க, எங்கே நமக்காக அவர் சீக்கிரம் எழுந்து விடுவாரோ என்று பரிதாபப்பட்டு "பாஸ்.... மெல்லவே சாப்பிடுங்க, நோ பிராப்ளம்" என்று சொல்ல, அவரோ "ஹலோ, இந்த சாப்பாடு சாப்பிட சென்னையில் இருந்து வந்திருக்கேன், மெதுவாத்தான் சாப்பிடுவேன்" என்று சொல்ல நாங்கள் வேறென்ன செய்ய.... முழித்தோம் !!

முடிவில் இடம் கிடைத்தவுடன், சுற்றி பார்த்தால் ஒரு கூறை போட்ட கடை. கடையின் முன்னாலே அசைவம் கல்லில் போட்டு செய்வதால் அதில் ஏற்படும் புகை பாதி உள்ளேதான் வருகிறது, உள்ளே பேன் என்பது பெயருக்குத்தான் வெக்கையில் வேர்த்து வடிகிறது. இலையை போட்டவுடன் ஒருவர் சாதம் வைக்க, இன்னொருவர் "சிக்கன் லெக் பீஸ், இறால், மீன் இருக்கு.... என்ன வேண்டும்" என்று கேட்க எல்லாவற்றிலும் ஒன்று என்று ஆர்டர் செய்துவிட்டு நான் என்னுடன் வந்தவர்களை பார்க்க, அவர்கள் மிரட்சியுடன் "என்ன நடக்குது இங்க..... இவ்வளவு பேர் கியூவில் நிற்கிறாங்க, அப்படி என்ன ருசி" என்று கேட்டுவிட்டு சாதத்தில் இறால் குழம்பை போட்டு ஒரு வாய் வைக்க, அடுத்து அங்கே பேச்சே இல்லை ! அடுத்து எங்களுக்கு வந்த இறால், மீன் என்று கிடைத்ததை எல்லாம் வைத்து குழம்பை ஊற்றி சாப்பிட்டு கொண்டு இருந்தோம். ரசத்தில் இறால் போட்டு, கெட்டி தயிரில் இறால் போட்டு என்று செம வேகத்தில் சாப்பிட்டோம். உண்மையை சொல்வதென்றால் அவர்கள் செய்து இருந்த குழம்பில் அவ்வளவு ருசி, அதனுடன் இறால் மிதமாக காரபொடியும், பெப்பர், வெங்காயம் எல்லாம் போட்டு வறுத்து இருந்ததால் அவ்வளவு சுவை. எந்த பதிவு எழுதும்போதும் எனக்கு நாக்கு ஊறியதில்லை.... ஆனால் இந்த பதிவு எழுத உட்கார்ந்ததில் இருந்து நாக்கு ஊருகிறது என்றால் நீங்கள் புரிந்து கொள்ளல்லாம். சமஸ் சார்...... உங்க புத்தகம் படித்ததில் இது ஒன்னே ஒன்னு போதும் போங்க ! நாங்கள் தயிர் போட்டு சாப்பிடும்போது எங்களது பின்னே இடம் பிடிக்க நின்றவர் "மெதுவா சாப்பிடுங்க, ஒன்னும் அவசரமில்லை......" என்றபோது இந்த முறை நான் "மெதுவாதான் சாப்பிடுவேன், இந்த சாப்பாடிற்காக பெங்களுருவில் இருந்து வந்திருக்கேன் சார் " என்றபோது நான் எப்படி அப்போது முழித்தேன் என்று இப்போது அவர் முகத்தில் பார்த்தேன் !! :-)

முடிவில் சாப்பிட்டு விட்டு நடக்க முடியாமல் நடந்து வெளியில் வந்தபோது அங்கு இறால் மற்றும் சிக்கன் தயாராகி கொண்டு இருந்தது. முதலில் மலையை போல வெங்காயம் போட்டு, அதன் மேலே குழம்பு ஊற்றி, பின்னர் வீட்டிலேயே கையால் அரைத்த பொடிகளை கலந்து, வேக வாய்த்த இறாலை மேலே போட்டு கலக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க இங்கே பசியோடு வெளியே இருந்தவர்களுக்கு நாக்கில் நீர் ஊறியதை நீங்கள் பார்க்கலாம்.


பஞ்ச் லைன் :

சுவை - இதுவரை இப்படி ஒரு அசைவ சாப்பாடு சாப்பிட்டதில்லை என்ற சுவை ! சாப்பிட்டு பார்க்க வேண்டிய ஒன்று !

அமைப்பு - மெயின் ரோட்டில் கடை, ரோட்டின் இரண்டு பக்கமும் பார்க் செய்து கொள்ளலாம். நடந்து கடைக்கு போகவே நேரம் ஆகும்.... அவ்வளவு கார் பார்க் செய்து இருப்பார்கள் !

பணம் - இறால் விலை ரொம்பவே கம்மி, சுவைக்கு முன்னே கொடுக்கலாம் என்று தோன்றும் !

சர்வீஸ் - நல்ல சர்விஸ். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நன்கு கவனித்து அனுப்புகிறார்கள்.

ஞாயிறு கடை விடுமுறை, சனிக்கிழமை அமாவாசை விடுமுறை.
மதியம் 12:30 இருந்து மாலை நான்கு மணி வரை (சில நேரங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் மூன்று மணிக்கே காலி)

அட்ரஸ் :

சென்னை - நாகப்பட்டினம் ஹைவேயில் புத்தூர் என்னும் கிராமம். கொள்ளிடம் ஆற்றில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் நடுவில்.
மெனு கார்டு :
Labels : Suresh, Kadalpayanangal, Samas, Sappaattu puraanam, Puthur jayaram, Asaiva saappaadu, best non veg, hotel, amazing food, mouth watering

நகரத்து மண் சாலை.....!!

சென்ற வாரத்தில் எனது உறவுக்காரர் ஒருவர் இங்கு பெங்களுருவில் இருக்கிறார், அவரை பார்க்க சென்று இருந்தேன். அவரது மூன்று வயது மகள் சப்பாத்தி மாவை வைத்து உருட்டி விளையாடி கொண்டு இருந்தாள். அது கொஞ்சம் போர் அடிக்க ஒரு சிறிய டப்பாவை எடுத்துக்கொண்டு வீட்டின் நடுவே வந்து, ஒரு பேப்பர் போட்டு அந்த டப்பாவை திறக்க நான் ஆவலோடு என்ன செய்கிறாள் என்று பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் அந்த டப்பாவில் இருந்து ஆற்று மணலை அந்த பேப்பரில் கொட்டி மணல் வீடு கட்ட நான் திகைத்து போய் இருந்தேன். அப்போது அங்கு வந்த நண்பனிடம் திகைப்புடன் என்ன இது என்று கேட்க, குழந்தைகள் மணலில் விளையாடுவதை மிகவும் விரும்புகிறார்கள் ஆனால் நமக்கெல்லாம் எங்கே நேரம் இவர்களை மண்ணில் கொண்டு போய் விளையாட விட, அது மட்டும் இல்லாமல் இப்போது ரோட்டிலோ, பீச்சிலோ கிடைக்கும் மணலில் விளையாண்டால் சொரிய ஆரம்பித்து விடுகின்றனர், இந்த மண் நான் எனது மேற்பார்வையில் எனது ஊரில் ஆற்றில் இருந்து கொண்டு வந்த சுத்தமான மண், அதை இங்கு வைத்து விளையாடினால் அவர்களுக்கு பொழுது போகும் அல்லவா என்று கேட்க அவனது மகள் என்னிடம் "அங்கிள்..... இங்க பாருங்க மணல் வீடு கட்டி இருக்கிறேன்"என்று காட்ட நான் கைகளை தட்டி சூப்பர் என்று சொல்லிவிட்டு வந்தேன். வீட்டிற்க்கு திரும்பும் வழியில் எந்த இடத்தில் மண் இருக்கிறது என்று பார்த்துக்கொண்டே வந்தேன், எங்கெங்கும் தார் ரோடு மற்றும் கான்கிரீட் கட்டிடங்கள், மண் என்பது அங்கங்கு தட்டுபட்டாலும் அது மிகவும் அசுத்தமாக இருந்தது. நாமெல்லாம் வளர்ந்தபோது தெருவில் இறங்கினாலே மண் கிடைக்குமே, இந்த காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியில் ஒவ்வொரு தெருவும் தார் ரோடு, கான்கிரீட் என்று வளர்ந்தது ஒரு வளர்ச்சி என்று கூறுவதா, இல்லை அவர்களை இயற்கையின் இடத்தில் இருந்து வெகு தூரம் அழைத்து செல்கிறோம் என்று எடுத்துக்கொள்வதா ?! மண் என்பது உண்மையில் அழுக்கா இல்லை மனம் சுத்தபடுத்தும் ஒன்றா ? மண்ணில் விளையாடினால் உடம்புக்கு வியாதிகள் வருமா இல்லை விளையாடாமல் இருந்தாலா ? மண்ணில் சுத்தமான மண், சுத்தம் இல்லாதது என்று இருக்கிறதா இல்லை மனிதர்கள்தான் அதை கெடுக்கின்றார்களா ? குழந்தைகள் மண்ணில் விளையாடினால் அடிக்கின்றோமே, அது என்ன மிக பெரிய ஒரு குற்றமா ? நீரை உறிஞ்சும் மண் சாலைகளை தார் சாலைகளாக்குவது நமது நிரந்தர சௌகரியமா இல்லை நிரந்திர சாபமா ? இப்படி நிறைய நிறைய கேள்விகள்......

சிறுவயதில் ஒவ்வொரு வீட்டின் முன்னேயும் சிறு இடம் விட்டு இருக்கும், அதில் அவர்களுக்கு பிடித்த செடிகளை நட்டு வைப்பார்கள். அந்த செடிகள் எப்படி வளர்கிறது என்று பிடுங்கி பார்க்க அம்மாவிடம் இருந்து உதை விழும். சிறிது தாண்டி தெருவுக்கு சென்றால் அப்போது எல்லாம் எல்லா தெருவும் மண் தெருதான். அதுவும் மழை பெய்தவுடன் ஒரு வாசனை கிளம்பி மனதை குடையும், சிறிது அந்த தெரு மண்ணை எடுத்து வாயில் வைக்க அவ்வளவு சுவையாக இருக்கும். பிள்ளைகளுக்கு கண் பாடுவிட்டது என்றால் அம்மா நான்கு வீதி சேரும் இடத்தின் மண் எடுத்துவந்து சுற்றி போடுவார்கள் ! முதல் முதலாக ஆற்றுக்கு கூட்டி சென்றபோது இதுவரை செம்மண்ணை பார்த்து இருந்து அன்று கையில் எடுத்தால் பொன்னிறமாக மின்னும் ஆற்று மணலில் மலை போன்று கட்டியது இன்றும் நினைவில் இருக்கும் ஒன்றல்லவா ! அதே ஆற்றில் சிறிது தோண்ட கிடைக்கும் களிமண்ணை உருட்டி உருட்டி உருவம் கொண்டு வந்தது எவ்வளவு சந்தோசம். இப்படி மண் பார்த்து வளர்ந்த நாம் இன்று குழந்தைகளுக்கு மண்ணில் விளையாண்டால் அரிக்கும் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம் ?மண்ணில் எத்தனை வகை இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா...... செம்மண், களிமண், வண்டல் மண், கரிசல் மண், ஆற்று மண், கடல் மண், குறு மண், புழுதி மண் என்று பல வகை இருக்கிறது. இதில் எத்தனை வகை மண்ணில் நீங்கள் விளையாடி இருக்கிறீர்கள் ? செம்மண்ணை வாயில் வைத்து சுவைத்து இருக்கிறீர்களா, அதுவும் தென்னை மரத்தின் அடியில் தண்ணீர் ஊற்றி விட்டு சென்றவுடன் மேலே படியும் அந்த நைஸ் செம்மண் எவ்வளவு சுவை :-) ஆற்று மண்ணில் கோட்டை கட்டியதும், புழுதி மண்ணில் உருண்டு விளையாடியதும், கடல் மண்ணில் கால் புதைய நடந்ததும், கரிசல் காடு மண்ணின் நிறம் கண்டு அதிசயித்தும், களிமண்ணில் பிள்ளையார் செய்து வைத்ததும் என்று இந்த மண் நமது வாழ்வோடு எவ்வளவு விதமாக கலந்து இருந்தது. இன்று நெடுந்து உயரமாக இருக்கும் ஒவ்வொரு அடுக்கு மாடி கட்டிடங்கள் இடத்தில் பிளே ஏரியா என்று விளையாடும் இடம் ஒன்று உண்டு, அங்கு சுத்தமான ஆற்று மணலை கொட்டி வைத்து இருக்கின்றனர், அதில் விளையாடிய குழந்தைகளை ஐயோ  எவ்வளவு அழுக்கு என்று திட்டி கூட்டி செல்கிறார்கள்...... அப்ப நாம தெருவில் இருந்த புழுதி எல்லாம் வீட்டிற்க்கு கொண்டு வருவோமே, அதுவெல்லாம் என்னங்க ?!
பொதுவாக அந்த கால குழந்தைகளுக்கு ஸ்கூல் யூனிபார்ம் என்று பார்த்தால் அது வெள்ளை நிற மேல் சட்டை, கால் சட்டை மட்டும் பல கலரில் இருக்கும். எந்த நாளிலும் அது மண் கறை இல்லாமல் திரும்பியது இல்லை என்று உங்களுக்கு தெரியுமே ! இன்று பெற்றோர்கள் எல்லாம் என் பையன் ஸ்கூலில் இருந்து யூனிபார்ம் அழுக்கு ஆகாமல் வருகிறான் என்று பெருமையாக சொல்வதை கேட்டால் வருத்தமாக இருக்கிறது. குழந்தைகள் விளையாடும் இடம் என்பது பள்ளியும், வீடும். பள்ளிகள் இன்று விளையாட்டு மைதானம் என்பது கொஞ்சமாகவும், அந்த விளையாட்டு மைதானமும் கான்கிரீட் தளமாக பெருமையாக மின்னுகிறது. தனி வீடாக இருந்தால் கணவனும், மனைவியும் வேலைக்கு செல்வதால் இருக்கும் சொற்ப இடத்தில் தோட்டம் வைக்க இடம் இல்லாமல் தொட்டி செடிகள் முளைத்து விட்டன, செடிகளும் சீக்கிரம் வளர வேண்டும் என்று உரம் என்ற பேரில் பூச்சி கொல்லிகளை கொட்டி விடுகிறோம். அடுக்கு மாடி கட்டிடங்களில் வசிப்பவர்கள் விளையாடும் இடம் என்ற பேரில் சிறிய இடத்தில் சுத்தமான மண்ணை கொட்டி, அதில் விளையாடும் குழந்தைகளையும் மண்ணில் விளையாடுற என்று திட்டி தீர்க்கின்றனர். மண் எந்த இடத்தில் அல்லது நேரத்தில் இந்த கால குழந்தைகளுக்கு நண்பன் ஆகிறது என்று பார்த்தால் எங்குமே இல்லை என்பதுதான் நிதர்சனமே. அந்த காலத்தில் கையை கழுவு என்று அம்மா ஆயிரம் முறை சொன்னாலும் அடுத்த முறை நமக்கு மறந்து போகும், வெளியே இருந்து வந்தவுடன் அழுக்கு கைகளில் குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து குடிப்போம், இன்றைய குழந்தைகள் வெளியில் இருந்து வந்தவுடன் லைப்பாய் எங்கே என்று கேட்டு கைகளை கழுவுவது நல்லதா இல்லை கெட்டதா........ விடை தெரியாத கேள்வி இல்லையா ?!இந்த நகரத்தில் கிடைக்கும் வசதிகள் அதிகம், குழந்தையின் படிப்பில் இருந்து செல்வம் வரை இது அதிகம் தரும், ஆனால் எல்லாவற்றையும் செயற்கை வகைகள் மறைத்துவிடும், ஷாப்பிங் மால் செல்லும் இன்றைய குழந்தைகள் அங்கு இருக்கும் செயற்கையில் மனதை தொலைத்து விடகூடாது. இன்று எல்லா குழந்தைகளின் சொந்தங்களும், பாட்டி தாதாக்களும் நகரில் இடம்பெயர்ந்த பின்னர் அல்லது அவர்களது கிராமத்து வீடுகள் நகரத்தின் கரங்களுக்குள் வந்த பிறகு இந்த மண் தொட்டு விளையாடுவது குறைந்தும், மறைந்தும் போய்விட கூடும். அடுத்த முறை குழந்தைகளை நகரத்தின் வெளியே இருக்கும் கோவிலுக்கு கூட்டி செல்வோமே, வெளியூர் செல்லும்போது பயணத்தில் சிறிது நேரத்தை ஒரு தென்னந்தோப்பில் செலவழிப்போமே, ஒரு ஞாயிறு காலையை வயல் தேடி சென்று களிப்போமே, ஒரு வருடத்தின் ஒரு பொழுதை ஒரு கிராமத்தில் செலவழிப்போமே, செடிகளை மட்டுமே இயற்க்கை என்று சொல்லி வளர்க்கும் இந்த நகரத்தில் இருந்து மரம் என்றும் ஒன்று உண்டு என்று காட்டுவோமே, மினெரல் வாட்டர், காய்ச்சிய குடிநீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்று சொல்லி வளர்த்த நாமே ஒரு ஓடை நீரை பருக வாய்ப்பு கொடுப்போமே, முள் குத்தாத நகரத்து சாலைக்கே செருப்பு போடா வேண்டும் என்று சொல்லும் நாம் அவர்களது கால்களுக்கு மண்ணின் ஸ்பரிசத்தை கொடுப்போமே, இந்த உலகத்தில் எல்லாமே பணம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்று ஷாப்பிங் மால்களில் கற்று கொண்டதை பழம் தரும் மரங்களை காட்டி இலவசமாகவும் கிடைக்கும் என்றும் சொல்வோமே, நகரத்தின் நச்சுக்காற்றையே சுவாசித்து வந்த குழந்தைகளுக்கு சுத்தமான காற்றின் சுவையை காண்பிப்போமே, சேறும் சகதியும் மிதித்து விளையாடி கறை நல்லது என்று சொல்வோமே, புழுதிக்கும் அழுக்குக்கும் உள்ள வித்யாசத்தை சொல்லி கொடுப்போமே, ஒரு மணல் கோட்டை கட்டி அதில் ஆனந்தமாய் வாழ்வோமே....... அடுத்த முறை நகரத்தின் சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் செல்லும்போது சிறிது சாலைகள் இல்லா ஊருக்கும் சென்று வருவோமே, அது நமக்கு ஒரு புதிய வாழ்வையே கற்று தரும் !!

Friday, March 14, 2014

சோலை டாக்கீஸ் - வினோதமான ட்ரம்ஸ்

பதிவுகள் எழுதும் நண்பர்கள் தான் ரசித்த இசையை, பாடல்களை யுடியூப் வழியாக பகிரும்போது அதை ரசிப்பவன் நான். கடல்பயணங்கள்  தளத்திலும்  ஆரம்பத்தில் நான் இளையராஜா, ரகுமான் பாடல்களை "சோலை  டாக்கீஸ்" என்ற தலைப்பில் பகிர்ந்துக்கொள்ள ஆரம்பித்தேன். ஒரு முறை  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர் சென்று இருந்தபோது விக்டோரியா  மார்க்கெட்டில் சுற்றி கொண்டு இருக்கும்போது ஒரு இசை தவழ்ந்து வந்தது, மனதை என்னவோ செய்தது . சென்று பார்த்தபோது ஒரு தெரு கலைஞன் ஒரு வினோதமான வாத்தியத்தில் வாசித்து கொண்டு இருந்தான், ஆனால் அதில் இருந்து வந்த இசை அற்புதம் எனலாம், உங்களை அப்படியே கட்டி போடும் இசை ! நான் மீண்டும் சோலை டாக்கீஸ் எழுத ஆரம்பிக்கும்போது ஒன்று மட்டும் புரிந்தது...... உலகத்தில் பல வகையான இசை இருக்கிறது, இளையராஜாவும் - ரகுமானும் மட்டுமே இல்லை என்பது. கடல்பயணங்கள்  தளத்தில் பகிரும் ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை, அதில் உலகம் முழுவதும் சுற்றும் எனக்கு பல வகையான இசையை கேட்க்கும் வாய்ப்பு அமைகிறது, அதை இங்கே பகிர்ந்தால் என்ன என்பதே. கண்டிப்பாக நீங்கள் இந்த இசையை கேட்டீர்கள் என்றால் புதுமையாகவும், மனதை கொள்ளை கொள்ளுமாறும் இருக்கும் என்பதற்கு நான் கேரன்டி !! வாருங்கள் வாரவாரம் ஒரு புது இசையை கேட்போம்......டேனியல் வாபெஸ் (Daniel Waples) ........ நம்ம ஊரில் கிடைக்கும் இட்லி வேக வைக்கும் தட்டின் மூடி போன்ற ஒன்றை கொண்டு நீங்கள் அதியற்புதமான இசையை உண்டாக்க முடியுமா ?! இவரால் முடிகிறது !! லண்டனில் பிறந்து வளர்ந்த இவர் தெருவில் ஒரு சிறிய ஸ்டூலில் உட்கார்ந்துக்கொண்டு இந்த சிறிய இசை கருவியை வைத்துக்கொண்டு நிகழ்த்தும் இசை ஜாலம் மனதை மயக்கும். மெதுவாக ஆரம்பிக்கும் இசை ஒரு நீர்வீழ்ச்சி போன்று, காட்டாறு போன்று நிகழ ஆரம்பிக்கும்போது உங்களுக்கு அது புது அனுபவமாக இருக்கும்.
 
 
இந்த இசை கருவியின் பெயர் ஹேங் (hang) என்கிறார்கள், இங்கிலாந்தில் முன்பொரு காலத்தில் உபயோகபடுதபட்டது இது, இன்று இதை வாசிப்பவர்களில் சிலரில் இவரும் ஒருவர் !! கீழே இருக்கும் படம் இதில் எப்படி இசை உருவாகிறது என்பதை சொல்லும்....... அட என்று சொல்ல வைக்கிறது இல்லையா !!
 
 
 

 
Labels : Suresh, Kadalpayanangal, Daniel Waples, Hang, amazing music, instrument, music, wow

Thursday, March 13, 2014

ஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்

இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்போது நிறைய செய்திகளும், அனுபவங்களும் கிடைக்கிறது. ஒரு சில ஊரில் அங்கு விளையும் பொருள் சிறப்பாக இருக்கும் உதாரணமாக போடி ஏலக்காய். ஒரு சில ஊரில் அங்கு செய்யும் பொருட்கள் புகழ் பெற்றதாக இருக்கும், உதாரணமாக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. ஒரு சில ஊரில் தின்பண்டங்கள் அருமையாக இருக்கும், உதாரணமாக திருநெல்வேலி அல்வா, பாலவநத்தம் சீரணி. சில ஊர்களில் வழிபாட்டு தளங்கள் பிரபலமாக இருக்கும்...... அந்த வரிசையில் வேளாங்கண்ணி என்றதும் உங்களது நினைவுக்கு வருவது என்பது அந்த இரட்டை கோபுரங்கள் உடைய மாதா கோவில் அல்லவா !! வாருங்கள் அந்த ஊரினை பிரபலமாக்கிய அந்த வழிபாட்டு தளத்தை பற்றி காணலாம்.  

 


 

  
 
ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி போகிறோம் என்றவுடன் எல்லோரும் எங்க அந்த சர்ச் போறோமா என்று கேட்டனர், அந்த அளவுக்கு வேளாங்கண்ணி என்றால் இந்த மாதா கோவில் என்றாகிவிட்டது ! இந்த ஆலயத்தை தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் என்று அழைக்கின்றனர், இது நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும். இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். கிபி 1560ல் அன்னை கன்னி மரியா இந்த வேளாங்கன்னியில் காட்சி தந்ததாகவும், 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினாலும்  இங்கே ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று. அம்மூன்று புதுமைகள்: , தயிர் விற்ற முடவனுக்கு கால் நலமடைந்தது, போர்த்துகீச மாலுமிக்கு கடும் புயலில் கரை வந்தடைய உதவியது.
 


 
புதுமை - 1 : இடைய சிறுவனுக்கு காட்சி தந்தது :
 
அந்த காலகட்டத்தில், பண்ணையார் ஒருவருக்கு பால் கொண்டு சென்ற இந்து சிறுவனுக்கு வேளாங்கண்ணி குளத்தின் அருகே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றி, தனது மகனுக்கு பால் வழங்குமாறு கேட்டார். அன்னையின் விண்ணக அழகால் மெய்சிலிர்த்த அவன் குழந்தை இயேசுவுக்கு பால் கொடுத்தான். பால் குறைந்ததால் பண்ணையார் சிறுவனை திட்டித்தீர்த்தார். சிறிது நேரத்தில் அதிசயமாக சிறுவன் கொண்டு வந்த பானையிலிருந்து பால் பொங்கி வழிந்தோடியது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அனைவரும் சிறுவன் கண்ட விண்ணகத் தாயைக் காண மிகவும் ஆசைப்பட்டனர்.
 

புதுமை - 2 : மோர்  விற்ற முடவனுக்கு கால் நலமடைந்தது :

தனது மகனுக்காக மனதுருகி செபித்த ஒரு தாயின் வேண்டுதலுக்கு பதிலளிக்கும் வகையில் மரியன்னை மீண்டும் காட்சி அளித்தார். நடுத்திட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக் கொண்டிருந்த கால் ஊனமுற்ற சிறுவன் ஒருவனுக்கு அன்னை மரியா தோன்றினார். `மகனே, எழுந்து நாகப்பட்டினத்தில் உள்ள செல்வந்தரிடம் சென்று ஒரு ஆலயம் கட்ட சொல்' என்ற அன்னையின் வார்த்தைகளைக் கேட்ட சிறுவன் அதிர்ந்து போனான். `அம்மா, என்னால் எப்படி நடக்க முடியும்?' என்றான் சிறுவன். `உன்னால் முடியும்' என்றார் அன்னை. அவன் எழுந்தான், நடந்தான், அங்கு ஓடத் தொடங்கியவன் செல்வந்தரின் வீட்டில் போய்தான் நின்றான். அன்னையின் புகழ் சுற்றுப் புறமெங்கும் பரவ, அன்னை செல்வந்தருக்கு காட்டிய இடத்தில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது.புதுமை - 3 :போர்த்துகீச மாலுமிக்கு கடும் புயலில் கரை  :

அந்த காலத்தில், இந்தியாவுக்கு பாய்மரக் கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் சிலர் நடுக் கடலில் வீசியப் புயலில் சிக்கிக் கொண்டனர். என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த அவர்கள், அன்னை மரியாவிடம் உதவி கேட்டனர். `அம்மா, நாங்கள் கரை சேரும் இடத்தில் உமக்கு ஒரு ஆலயம் கட்டுவோம்' என்றும் வாக்குறுதி அளித்தனர். மரியன்னையின் உதவியால் புயல் அடங்கி கடல் சீற்றம் ஓய்ந்தது. கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் வேளாங்கண்ணியில் பாதுகாப்பாக கரை இறங்கினர். அன்று செப்டம்பர் 8ந்தேதி, தேவமாதாவின் பிறந்த நாள். தங்களை பத்திரமாகக் கரை சேர்த்த அன்னைக்கு நன்றியாக, வேளாங்கண்ணியில் இருந்த சிறிய ஆலயத்தை பெரிதாக கட்டி எழுப்பினர். கலை வண்ணமிக்க பீங்கான் ஓடுகளால் ஆலயப் பீடத்தை அலங்கரித்தனர். தங்கள் கப்பலின் பாய்மரத் தூணை ஆலயக் கொடிமரமாக நட்டினர். அதில்தான் இன்றளவும் அன்னையின் கொடி பறந்து கொண்டிருக்கிறது. போர்ச்சுக்கீசியர்கள் கரை சேர்ந்த நாளான மாதாவின் பிறந்த நாளிலேயே வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

 
நாங்கள் சென்று இருந்தது ஒரு ஞாயிற்று கிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது. அந்த கோவில் நோக்கி செல்லும் சாலை குறுகலானது என்பதால் அங்கும் இங்கும் என்று வாகனங்கள் நகர முடியாமல் திணறியது. மெதுவாக எங்களது வாகனத்தை பார்க் செய்துவிட்டு கோவிலுக்கு நடந்து வரும் வழியிலேயே ஒரு இடம் வித்யாசமாக பட்டது, அங்கு பெரிய பெரிய பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பாத்திரங்கள் வாடகைக்கு கிடைக்கிறது, அங்கு இருக்கும் பெரிய தங்கும் இடங்களில் மக்கள் இந்த பாத்திரங்களை வைத்து சமைத்து கொண்டு இருந்தனர் !! வேளாங்கண்ணி  நோக்கி வந்து கொண்டு இருக்கும்போதே நிறைய தங்கும் விடுதிகள் உங்களது கண்களுக்கு தெரிய ஆரம்பித்துவிடும், எல்லா அளவிலும் விடுதிகள் கிடைக்கின்றன. மெதுவாக ஆலயம் நோக்கி நடக்கும்போது கண்ணை கூசும் வகையில் வெள்ளை கலரில் அந்த ஆலயம் பளிச்சென்று தெரிகிறது. ஞாயிறு மாஸ் என்று கூட்டம் நின்று கொண்டும், நடந்து கொண்டும் அங்கு இருந்தனர். தூரத்தில் இருந்து நாங்கள் காமெராவை ஜூம் செய்து வேளாங்கண்ணி அன்னையை தரிசித்துக்கொண்டோம்.
 
 
 
1771ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. ஏராளமான அற்புதங்கள் நடந்ததால் சமயம், இனம், மொழி கடந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் திருத்தலமாக மாறியது. இந்த ஆலயத்தின் அற்புதங்களுக்கும், புகழுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் வேளாங்கண்ணி திருத்தலக் கோவிலை 1962 நவம்பர் 3ஆம் நாள் "இணைப் பெருங்கோவில்" (minor basilica என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் "பெருங்கோவில்" நிலைக்கு உயர்த்தப்பட்டதன் 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.
 
 
மெதுவாக அங்கிருந்து பீச் நோக்கி நடக்க ஆரம்பித்தபோது அங்கு இருந்த படக்காட்சி சாலை, கட்டிடங்கள் என்று நிறைய கடக்க வேண்டி இருந்தது. இங்கு வரும் பலரும் இந்த அன்னையை வணங்கினால் நன்மை நடக்கும் என்று நம்புவது தெரிகிறது. அந்த ஆலயத்தின் பின் பகுதியை அடையும்போது வெப்ப காற்று முகத்தில் அறையும்போது பீச் பக்கத்தில் இருக்கிறது என்பது புரிகிறது. பீச் செல்லும் வழியெங்கும் கடைகள், கடைகள், கடைகள்தான் ! ஒவ்வொரு கடையிலும் ஒரு விலை வைத்து விற்கின்றனர். நான் ரசித்தது என்பது அங்கு கிடைக்கும் மெலுகுவர்திகலைதான். விதவிதமாக கலராக கிடைக்கிறது, வித்தியாசமாகவும் இருக்கிறது.

 
நாங்கள் வேளாங்கண்ணி செல்லும்போது வழியில் வண்டியை நிறுத்தி எங்கு சாப்பாடு நன்றாக இருக்கும் என்று கேட்டதற்கு எல்லோரும் வேளாங்கண்ணி தவிர எங்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றனர். ஆனால் கூட வந்த எல்லோரும் கடலுக்கு பக்கத்தில் வேளாங்கண்ணி இருப்பதால் மீன் கிடைக்கும், அங்கேயே சாப்பிடலாம் என்றனர், அது எவ்வளவு தவறு என்பதை அங்கு சாப்பிடும்போது தெரிந்தது. நிறைய கடைகளில் பல விதமான மீன் கிடைக்கிறது, அதை வெறும் தோசை கல்லில் புரட்டி போட்டு தருகின்றனர், விலையும் மிகவும் ஜாஸ்தி, சுவை என்பது சுத்தமாக இல்லை. நீங்கள் வேளாங்கண்ணி செல்வதாக இருந்தால் சாப்பாடு வழியில் இருக்கும் சில ஊர்களிலேயே சாப்பிட்டு விடவும்.
 


  
Labels : Suresh, Kadalpayanangal, Velankanni, Nagapattinam, Church, Mathaa, Matha, Oor special