Monday, March 10, 2014

அறுசுவை - அப்சலூட் பார்பிக்யூ, பெங்களுரு

கோவை ஆவி என்று அன்புடன் அழைக்கப்படும் பதிவர் ஆனந்த் விஜயராகவன் அவர்கள்  அவரது புத்தக வெளியீடிர்க்கு அழைக்க பெங்களுரு வந்து இருந்தார். நானும் எல்லா முயற்சியும் செய்து பார்த்தும் கடைசி நேரத்தில் செல்ல முடியாமல் போனது இன்று வரை வருத்தமே...... என்னதான் சீனு, ஆவி, ஸ்கூல்பையன், பாலகணேஷ் சார் எல்லாம் நம்மை கண்டுக்கமாட்டேன் (நானெல்லாம் பிரபல பதிவர் இல்லையே.... அதனால் இருக்கும் !!) என்றாலும் நம்ம ஊருக்கு வந்து இருக்கும் ஆவியை வரவேற்று அவரை ஒரு நல்ல உணவகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து நிறைய பேரிடம் விசாரித்து கடைசியில் இந்த உணவகத்தை தேர்ந்தெடுத்தேன். ஆவி அமெரிக்காவில் இதை எல்லாம் அனுபவித்து இருந்தாலும், இந்த உணவகம் அவருக்கு பிடித்திருந்தது என்பது அவரது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் தெரிந்தது !!பெங்களுருவில் "பார்பிக்யூ நேஷன்" என்று ஒரு உணவகம் திறந்தபோது எல்லோரும் அதை பற்றியே பேசி வந்தார்கள். இதனால் அவர்கள் விலையை ஏற்றி ஏற்றி சுமார் ஒரு ஆளுக்கு இன்று ஆயிரம் ரூபாய் வரை வந்து விட்டது. தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த இந்த உணவகத்தை அடக்கவே வந்து இருக்கிறது இந்த அப்சலூட் பார்பிக்யூ (Absolute Barbeque) !! பார்பிக்யூ என்பது பச்சை மாமிசத்தை கிரில் செய்து சாப்பிடுவது, அமெரிக்காவில் காரை எடுத்துக்கொண்டு வெட்டவெளியில் இது போல பார்பிக்யூ செய்து சாபிடுவது என்பது மிகவும் பிரபலம். அதை இங்கு கொண்டு வந்தபோது பச்சை மாமிசம் இல்லாமல் வேக வைத்த மாமிசத்தை உங்களது முன் இருக்கும் அடுப்பில் சுட்டு தருகிறார்கள் ! முதலில் நுழைந்தவுடன் உங்களுக்கு தேவையான பிரைடு ரைஸ் அல்லது நூடில் எடுத்து கொள்ளலாம் என்றவுடன் நாங்கள் அந்த கவுன்டர் சென்றோம். எங்களுக்கு முன் பல வகைகள் இருந்தன....... ஒரு டீ குடிக்கும்போதே சக்கரை கம்மி, முக்கால் கிளாஸ், டீ தண்ணி தூக்கலா, கொஞ்சம் லைட்டா என்றெல்லாம் டீ மாஸ்டரை குழப்புவோம், இந்த குழப்பம் தெரிந்தோ என்னவோ எல்லாவற்றையும் அட்டையில் எழுதி வைத்து இருக்கிறார்கள் !!


உங்களது முன் இருக்கும் சிறு சிறு பள்ளங்களில் வாத்து, முயல், சிக்கன், மட்டன், பிரான், மீன் என்றெல்லாம் பல வகைகள் இருக்கின்றன. அதை தேர்ந்து எடுத்து எவ்வளவு வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, இன்னும் பிற சமையல் பொருட்கள் போட வேண்டும் என்று சொல்ல நமக்கு ஒருவர் அதை ஒரு சிறிய தட்டில் எடுத்து போடுகிறார். பின்னர் என்ன சாஸ் வேண்டும் என்று கேட்க நமக்கோ தக்காளி சாஸ்தானே என்று  தோன்றினாலும் இந்த உலகத்தில் இன்னும் நிறைய வகையான  தக்காளி  சாஸ் கிடைக்கிறது என்பதே இங்குதான் தெரிகிறது.......  மெக்ஸிகோ தாங்கோ, இந்தியன் டிக்கா, இத்தாலி என்று வகை வகையாக இருக்க முடிவில் இங்கி பிங்கி போட்டு ஒன்றை தேர்ந்தெடுக்க, அடுத்து என்ன வகை பொடி போட வேண்டும் என்று கேட்க நமக்கு சுர்ரென்று அந்த பசி நேரத்தில் "ஏண்டா..... இதுக்கு அப்புறம் நானே போய் சமைக்கணுமா, எவ்வளவு எண்ணை ஊத்தணும் என்றெல்லாம் சொல்லணுமா ? " என்றெல்லாம் மனதில் ஓடுகிறது. இருந்தாலும் அதையும் சொல்ல பின்னர் எங்கள் கைகளுக்கு ஒரு டோகேன் வருகிறது..... நாம் போய் உட்கார பின்னால் வருமாம் !! நாங்கள் சொன்னதை ஒரு பெரிய பரோட்டா போடும் கல்லில் கொட்டி அதை வதக்க இங்கே பசி வயிற்ரை கிள்ள ஆரம்பித்தது !! 


உங்களது முன் ஒரு சிறிய அடுப்பு கொண்டு வந்து வைக்கிறார்கள், அதன் மேலே குத்தி வைத்த கறி வந்து வைக்க அதன் மீது எண்ணையை தடவி, காரம் தடவி அந்த அடுப்பின் மீது வைக்க கறி வேக ஆரம்பிக்கிறது.... அதற்குள் மீன் வேண்டுமா, சிக்கன் வேண்டுமா என்று வந்து கேட்க எங்களது வேட்டை ஆரம்பம் ஆனது. ஒவ்வொரு வாய் வைக்கும்போதும் அதன் சுவை அருமை என்று சொல்ல தோன்றுகிறது. ஒவ்வொரு கறியையும் நன்றாக வேகவைத்து அதில் நாம் உப்பு, காரம் போட்டு அந்த தீயில் மிதமாக வாட்டி எடுக்கையில் அந்த வாசனையே பசியை தூண்டுகிறது, முடிவில் பொன்னிறம் வந்து அந்த சூடு பறக்க ஒரு வாய் எடுத்து வைக்க "ஆஹா.... என்ன ருசி" என்று தோன்றியது. முடிவில் நாங்கள் சொன்ன சிக்கன் நூடில்ஸ் மற்றும் பிரான் ரைஸ் வர ஒரு வாய் எடுத்து வைத்தவுடன் ஏதோ ஒன்று குறைவது போல தோன்றியது, ஆனாலும் என்னவென்று தெரியவில்லை...... வீட்டில் சென்று இதை சொல்ல எனது மனைவியும் அம்மாவும் சேர்தாற்போல "நல்லா நாங்க சமைச்சி குடுக்கிரதையே உப்பு குறைச்சல், காரம் அதிகம் அப்படின்னு சொல்வீங்க, இதுல நீங்க அளவு சொல்லி அவன் சமைச்சதுல என்ன குறைன்னு தெரியலையாம். சுடுதண்ணி வைக்க சொன்னாலே அடுப்பு பத்த  வைக்காம, இன்னும் தண்ணி சூடு கம்மியாதான்  இருக்குன்னு சொல்ற  ஆளுதானே....." என்று சொல்ல சொல்ல நாம காரம் அளவு சொல்லி செய்ஞ்ச அந்த பிரான் ரைஸ் நல்லாதானே இருந்தது என்று தோன்றியது !! :-) 


அவ்வளவுதானா என்று அப்போதே நிரம்பி இருந்த வயிறை தடவி கொண்டே உட்கார்ந்து இருக்க, வேற என்ன இருக்கு என்று முழித்து இருக்கும்போது எங்கள் அருகில் வந்து சார், அங்க பாருங்க இன்னும் நிறைய இருக்கு என்று சொல்ல, அங்கே சென்றால் அதுதான் மெயின் சாப்பாடு, நாங்கள் இதுவரை சாப்பிட்டது எல்லாம் ஸ்டார்டர்ஸ் என்று சொல்ல.... நாங்கள் முழித்தோம். அடுத்து ஆவி ஒரு தட்டு எடுத்துக்கொண்டு கிளம்ப, தட்டில் மீண்டும் பல வகை பதார்த்தங்கள் எதார்த்தமாக நிரம்பின. அங்கு கண்ணாடிக்கு அந்த பக்கம் நான், பட்டர் நான், குல்ச்சா, ரோட்டி என்றெல்லாம் தயாராகிறது என்பது தெரிந்தது, அதையும் சிறிது வாங்கி கொண்டு எங்களது இடத்திற்கு திரும்பினோம். ஆவியுடன் அவரது ஆவிப்பாவை பற்றி பேசிக்கொண்டே அவரது புத்தகத்திற்கு வாழ்த்து சொன்னேன்..... கையும், வாயும் அதன் வேலையை கச்சிதமாக செய்து கொண்டு இருந்தது !
எல்லாம் முடிஞ்சது என்று நினைக்க, கொஞ்சம் ஸ்வீட் ஆக சாப்பிடலாம் என்று செல்ல அங்கு ஒரு ஸ்வீட் கடையே இருந்தது. ஆவியும் நானும் கொஞ்சமே கொஞ்சம் மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். நாமெல்லாம் ஐஸ் கிரீம் வைத்தாலே நாக்கில் எச்சில் ஊற எடுப்போம், இதில் இங்கு ஐஸ் கிரீமில் வித்தை செய்து கொண்டு இருந்தார். நீங்கள் கேட்கும் முந்திரி, செர்ரி இன்னும் பல பல வகைகளை ஐஸ் கிரீமில் நன்றாக கலந்து, உங்களுக்கு தரும்போது சுவைக்கு சுவை ஊட்டினார் என்று தோன்றும் !! முடிவில் ஆவியும் நானும் எடுத்துக்கொண்டு வந்ததை பலர் திரும்பி திரும்பி பார்ப்பதாக தெரிந்தாலும் அதெல்லாம் பிரமை என்றே தோன்றியது.


பஞ்ச் லைன் :

சுவை - பல வகைகளில் சுவை.....ஒவ்வொன்றிலும் குறைந்தது மூன்று வகை இருக்கிறது !

அமைப்பு - நல்ல பெரிய உணவகம், பார்கிங் வசதி இருக்கிறது.

பணம் - ஒரு ஆளுக்கு சுமார் அறுநூறு வரை ஆகிறது.

சர்வீஸ் - நல்ல சர்விஸ். கூட்டம் அதிகமாக இருக்கிறபோது நீங்கள் இதையே எதிர்பார்க்க முடியாது !

அட்ரஸ் :

அப்சலூட் பார்பிக்யூ, பெங்களுரு

Absolute Barbecue
3rd Floor, 90/4,
Near Park Plaza Hotel, 
Marathalli outer ring road,
Bangalore - 560037
Karnataka
Ph. No.: 080 67683696
Email: bookmytable.bgl1@absolute-barbecue.com


மெனுகார்ட் :
இது அன்றைய மெனு, தினமும் புதிது புதிதாக ஏதாவது இருக்கும் !
 
 
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Absolute Barbeque, Tasty, Bangalore, Bengaluru18 comments:

 1. //என்னதான் சீனு, ஆவி, ஸ்கூல்பையன், பாலகணேஷ் சார் எல்லாம் நம்மை கண்டுக்கமாட்டேன் // எப்ப வரணும்னு சொல்லுங்க சார் உடனே கிளம்பி வாரேன்..

  உங்கள மாதிரி பிரபல பதிவர சந்திக்க நாங்க கொடுத்து வச்சிருக்கணும் சார்.. என்ன ஆவி கொஞ்சம் முந்திட்டாரு.. :-)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.... சீனு கலக்குறீங்கள் !! அடுத்து சென்னைக்குத்தான் வரேன் ஒரு பிரபல பதிவரை பார்க்க..... அட உங்களைதான் சொன்னேன் !

   Delete
 2. அடேயப்பா ஆவிக்கு என்ன ஒரு சந்தோசம்.... :-)))))

  ReplyDelete
  Replies
  1. அட அது வெட்கம்பா..... பக்கத்து மேஜையில் ஒரு பொண்ணு இருந்துச்சு..... ஐயோ, உளரிட்டேனோ !

   Delete
 3. அதென்ன சொல்லி வச்சாப்ல ரெண்டுபேரும் யுனிபார்ம் போட்டு போயிருக்கீங்க..

  நான் இன்னும் சென்னையில இருக்க பார்பிக்யு நேசனே போனதில்ல.. நமக்கு தெரிஞ்சதெல்லாம் நேசமணி பஸ்ஸு ஒண்ணுதாம்னே ;-)

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் இங்கே வந்து இருக்கணும்...... நாங்க ரெண்டு பெரும் திக் பிரெண்ட்ஸ் ஆகிட்டோம் :-)

   Delete
 4. ஆவியின் சந்தோசமே எனக்கு மனதை நிறைந்(த்)து விட்டது...! ஆனாலும் பசிக்கிறது... ஹிஹி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்களுடனும் இது போல் செல்ல வேண்டும் என்று ஆசை....... சீக்கிரமே நிறைவேறும் என்று நினைக்கிறேன் !

   Delete
 5. பதிவர் ஆனந்த் விஜயராகவன் அவர்கள் அவரது புத்தக வெளியீடிர்க்கு அழைக்க பெங்களுரு வந்து இருந்தார்.
  >>
  எனக்கு ஃபோன்ல கூட அழைப்பு இல்ல. உங்களை நேரில் வந்து கூப்பிட்டாரா!? இருங்க, ஆவிப்பயலை கவனிச்சுட்டு வரேன்.

  ReplyDelete
  Replies
  1. நான் எதுவும் சொல்லலை...... ஆவி ஓடுங்க, அது நம்மை நோக்கிதான் வருது !

   Delete
 6. பெங்களூரில் என்னையும், உங்கள் மருமகப்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போக வேண்டிய இடங்களின் எண்ணிக்கையில் இன்னொன்று கூடி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. இப்படியே போனா மாச கணக்குல தங்கி பார்க்க நிறைய இருக்கு.... சீக்கிரம் வாங்க !

   Delete
 7. ஆவிக்கு செம கவனிப்பு போல....

  ReplyDelete
  Replies
  1. நன்றி கலாகுமரன் சார்....... விருந்தோம்பல் இல்லையா, அப்படிதான் இருக்கும். நீங்க எப்போ வரீங்க ?!

   Delete
 8. Replies
  1. ஹா ஹா ஹா.... அப்போ சாப்பிடலாம் வாங்க !

   Delete