Thursday, March 13, 2014

ஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்

இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்போது நிறைய செய்திகளும், அனுபவங்களும் கிடைக்கிறது. ஒரு சில ஊரில் அங்கு விளையும் பொருள் சிறப்பாக இருக்கும் உதாரணமாக போடி ஏலக்காய். ஒரு சில ஊரில் அங்கு செய்யும் பொருட்கள் புகழ் பெற்றதாக இருக்கும், உதாரணமாக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. ஒரு சில ஊரில் தின்பண்டங்கள் அருமையாக இருக்கும், உதாரணமாக திருநெல்வேலி அல்வா, பாலவநத்தம் சீரணி. சில ஊர்களில் வழிபாட்டு தளங்கள் பிரபலமாக இருக்கும்...... அந்த வரிசையில் வேளாங்கண்ணி என்றதும் உங்களது நினைவுக்கு வருவது என்பது அந்த இரட்டை கோபுரங்கள் உடைய மாதா கோவில் அல்லவா !! வாருங்கள் அந்த ஊரினை பிரபலமாக்கிய அந்த வழிபாட்டு தளத்தை பற்றி காணலாம்.  

 


 

  
 
ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி போகிறோம் என்றவுடன் எல்லோரும் எங்க அந்த சர்ச் போறோமா என்று கேட்டனர், அந்த அளவுக்கு வேளாங்கண்ணி என்றால் இந்த மாதா கோவில் என்றாகிவிட்டது ! இந்த ஆலயத்தை தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் என்று அழைக்கின்றனர், இது நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும். இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். கிபி 1560ல் அன்னை கன்னி மரியா இந்த வேளாங்கன்னியில் காட்சி தந்ததாகவும், 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினாலும்  இங்கே ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று. அம்மூன்று புதுமைகள்: , தயிர் விற்ற முடவனுக்கு கால் நலமடைந்தது, போர்த்துகீச மாலுமிக்கு கடும் புயலில் கரை வந்தடைய உதவியது.
 


 
புதுமை - 1 : இடைய சிறுவனுக்கு காட்சி தந்தது :
 
அந்த காலகட்டத்தில், பண்ணையார் ஒருவருக்கு பால் கொண்டு சென்ற இந்து சிறுவனுக்கு வேளாங்கண்ணி குளத்தின் அருகே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றி, தனது மகனுக்கு பால் வழங்குமாறு கேட்டார். அன்னையின் விண்ணக அழகால் மெய்சிலிர்த்த அவன் குழந்தை இயேசுவுக்கு பால் கொடுத்தான். பால் குறைந்ததால் பண்ணையார் சிறுவனை திட்டித்தீர்த்தார். சிறிது நேரத்தில் அதிசயமாக சிறுவன் கொண்டு வந்த பானையிலிருந்து பால் பொங்கி வழிந்தோடியது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அனைவரும் சிறுவன் கண்ட விண்ணகத் தாயைக் காண மிகவும் ஆசைப்பட்டனர்.
 

புதுமை - 2 : மோர்  விற்ற முடவனுக்கு கால் நலமடைந்தது :

தனது மகனுக்காக மனதுருகி செபித்த ஒரு தாயின் வேண்டுதலுக்கு பதிலளிக்கும் வகையில் மரியன்னை மீண்டும் காட்சி அளித்தார். நடுத்திட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக் கொண்டிருந்த கால் ஊனமுற்ற சிறுவன் ஒருவனுக்கு அன்னை மரியா தோன்றினார். `மகனே, எழுந்து நாகப்பட்டினத்தில் உள்ள செல்வந்தரிடம் சென்று ஒரு ஆலயம் கட்ட சொல்' என்ற அன்னையின் வார்த்தைகளைக் கேட்ட சிறுவன் அதிர்ந்து போனான். `அம்மா, என்னால் எப்படி நடக்க முடியும்?' என்றான் சிறுவன். `உன்னால் முடியும்' என்றார் அன்னை. அவன் எழுந்தான், நடந்தான், அங்கு ஓடத் தொடங்கியவன் செல்வந்தரின் வீட்டில் போய்தான் நின்றான். அன்னையின் புகழ் சுற்றுப் புறமெங்கும் பரவ, அன்னை செல்வந்தருக்கு காட்டிய இடத்தில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது.புதுமை - 3 :போர்த்துகீச மாலுமிக்கு கடும் புயலில் கரை  :

அந்த காலத்தில், இந்தியாவுக்கு பாய்மரக் கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் சிலர் நடுக் கடலில் வீசியப் புயலில் சிக்கிக் கொண்டனர். என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த அவர்கள், அன்னை மரியாவிடம் உதவி கேட்டனர். `அம்மா, நாங்கள் கரை சேரும் இடத்தில் உமக்கு ஒரு ஆலயம் கட்டுவோம்' என்றும் வாக்குறுதி அளித்தனர். மரியன்னையின் உதவியால் புயல் அடங்கி கடல் சீற்றம் ஓய்ந்தது. கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் வேளாங்கண்ணியில் பாதுகாப்பாக கரை இறங்கினர். அன்று செப்டம்பர் 8ந்தேதி, தேவமாதாவின் பிறந்த நாள். தங்களை பத்திரமாகக் கரை சேர்த்த அன்னைக்கு நன்றியாக, வேளாங்கண்ணியில் இருந்த சிறிய ஆலயத்தை பெரிதாக கட்டி எழுப்பினர். கலை வண்ணமிக்க பீங்கான் ஓடுகளால் ஆலயப் பீடத்தை அலங்கரித்தனர். தங்கள் கப்பலின் பாய்மரத் தூணை ஆலயக் கொடிமரமாக நட்டினர். அதில்தான் இன்றளவும் அன்னையின் கொடி பறந்து கொண்டிருக்கிறது. போர்ச்சுக்கீசியர்கள் கரை சேர்ந்த நாளான மாதாவின் பிறந்த நாளிலேயே வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

 
நாங்கள் சென்று இருந்தது ஒரு ஞாயிற்று கிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது. அந்த கோவில் நோக்கி செல்லும் சாலை குறுகலானது என்பதால் அங்கும் இங்கும் என்று வாகனங்கள் நகர முடியாமல் திணறியது. மெதுவாக எங்களது வாகனத்தை பார்க் செய்துவிட்டு கோவிலுக்கு நடந்து வரும் வழியிலேயே ஒரு இடம் வித்யாசமாக பட்டது, அங்கு பெரிய பெரிய பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பாத்திரங்கள் வாடகைக்கு கிடைக்கிறது, அங்கு இருக்கும் பெரிய தங்கும் இடங்களில் மக்கள் இந்த பாத்திரங்களை வைத்து சமைத்து கொண்டு இருந்தனர் !! வேளாங்கண்ணி  நோக்கி வந்து கொண்டு இருக்கும்போதே நிறைய தங்கும் விடுதிகள் உங்களது கண்களுக்கு தெரிய ஆரம்பித்துவிடும், எல்லா அளவிலும் விடுதிகள் கிடைக்கின்றன. மெதுவாக ஆலயம் நோக்கி நடக்கும்போது கண்ணை கூசும் வகையில் வெள்ளை கலரில் அந்த ஆலயம் பளிச்சென்று தெரிகிறது. ஞாயிறு மாஸ் என்று கூட்டம் நின்று கொண்டும், நடந்து கொண்டும் அங்கு இருந்தனர். தூரத்தில் இருந்து நாங்கள் காமெராவை ஜூம் செய்து வேளாங்கண்ணி அன்னையை தரிசித்துக்கொண்டோம்.
 
 
 
1771ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. ஏராளமான அற்புதங்கள் நடந்ததால் சமயம், இனம், மொழி கடந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் திருத்தலமாக மாறியது. இந்த ஆலயத்தின் அற்புதங்களுக்கும், புகழுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் வேளாங்கண்ணி திருத்தலக் கோவிலை 1962 நவம்பர் 3ஆம் நாள் "இணைப் பெருங்கோவில்" (minor basilica என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் "பெருங்கோவில்" நிலைக்கு உயர்த்தப்பட்டதன் 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.
 
 
மெதுவாக அங்கிருந்து பீச் நோக்கி நடக்க ஆரம்பித்தபோது அங்கு இருந்த படக்காட்சி சாலை, கட்டிடங்கள் என்று நிறைய கடக்க வேண்டி இருந்தது. இங்கு வரும் பலரும் இந்த அன்னையை வணங்கினால் நன்மை நடக்கும் என்று நம்புவது தெரிகிறது. அந்த ஆலயத்தின் பின் பகுதியை அடையும்போது வெப்ப காற்று முகத்தில் அறையும்போது பீச் பக்கத்தில் இருக்கிறது என்பது புரிகிறது. பீச் செல்லும் வழியெங்கும் கடைகள், கடைகள், கடைகள்தான் ! ஒவ்வொரு கடையிலும் ஒரு விலை வைத்து விற்கின்றனர். நான் ரசித்தது என்பது அங்கு கிடைக்கும் மெலுகுவர்திகலைதான். விதவிதமாக கலராக கிடைக்கிறது, வித்தியாசமாகவும் இருக்கிறது.

 
நாங்கள் வேளாங்கண்ணி செல்லும்போது வழியில் வண்டியை நிறுத்தி எங்கு சாப்பாடு நன்றாக இருக்கும் என்று கேட்டதற்கு எல்லோரும் வேளாங்கண்ணி தவிர எங்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றனர். ஆனால் கூட வந்த எல்லோரும் கடலுக்கு பக்கத்தில் வேளாங்கண்ணி இருப்பதால் மீன் கிடைக்கும், அங்கேயே சாப்பிடலாம் என்றனர், அது எவ்வளவு தவறு என்பதை அங்கு சாப்பிடும்போது தெரிந்தது. நிறைய கடைகளில் பல விதமான மீன் கிடைக்கிறது, அதை வெறும் தோசை கல்லில் புரட்டி போட்டு தருகின்றனர், விலையும் மிகவும் ஜாஸ்தி, சுவை என்பது சுத்தமாக இல்லை. நீங்கள் வேளாங்கண்ணி செல்வதாக இருந்தால் சாப்பாடு வழியில் இருக்கும் சில ஊர்களிலேயே சாப்பிட்டு விடவும்.
 


  
Labels : Suresh, Kadalpayanangal, Velankanni, Nagapattinam, Church, Mathaa, Matha, Oor special
 

33 comments:

 1. நன்றி அண்ணா..! மீண்டும் மகிழ்ந்தேன் ....!

  ReplyDelete
  Replies
  1. நீ அந்த பயணத்தில் எங்களோடு பயணித்தது மிகவும் மகிழ்ச்சி ஆனந்த்! நன்றி !

   Delete
 2. வணக்கம் பக்தி ஸ்பெஷல் ஆரம்பித்துவிட்டீர்களா? உண்மையில் வேளாங்கண்ணியில் மட்டும் சாப்பிடவே கூடாது. நான் பட்டு தெரிந்து இருக்கிறேன். பதிவுக்கு நன்றி சார்

  ReplyDelete
  Replies
  1. ஆன்மிக பதிவு எல்லாம் இல்லை, ஊரின் பெருமை இந்த கோவில் அதனால் எழுதுகிறேன். உங்களோடு ஒரு ஆன்மிக பயணம் போக வேண்டும் ! நன்றி, தங்கள் வரவுக்கும், கருத்திருக்கும் !!

   Delete
 3. அற்புதமான கோவில்... ஒரு வருடம் முன்பு சென்று வந்தோம்... (பல) பேருந்துகள் பயணத்தையும் மறக்க முடியாது...!

  அருமையான படங்களுடன் சிறப்பாக சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார், எத்தனை முறை சென்றாலும் அலுக்காத கோவில்தான் இது !

   நன்றி, தங்கள் வரவுக்கும், கருத்திருக்கும் !!

   Delete
 4. \\அந்த ஆலயத்தின் பின் பகுதியை அடையும்போது வெப்ப காற்று முகத்தில் அறையும்போது பீச் பக்கத்தில் இருக்கிறது என்பது புரிகிறது. பீச் செல்லும் வழியெங்கும் கடைகள், கடைகள், கடைகள்தான் ! ஒவ்வொரு கடையிலும் ஒரு விலை வைத்து விற்கின்றனர்.\\
  உண்மையில் பீச்சுக்கு எதிரில் இருக்கிறதே அதுதான் முன்பகுதிக் கோவில். பின் புறம் இருக்கும் பெரிய கோவிலை இப்போது, சில ஆண்டுகளுக்கு முன்னால்தான் கட்டினார்கள். நீங்கள் போட்டிருக்கும் இரண்டாவது படத்தில் உள்ள மாதா காட்சியளிக்கும் திருத்தலம்தான் அங்கு கட்டப்பட்ட முதல் திருத்தலம்.

  நீங்கள் சொல்லியிருப்பதுபோல் அங்கு நல்ல சாப்பாடு கிடைப்பதில்லை என்பது முழுக்க முழுக்க உண்மை. அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து அருமையான சாப்பாடு செய்து எடுத்துவந்து அங்கே தங்கியிருப்பவர்களுக்கு மிகக் குறைந்த விலைக்குத் தந்து செல்வார்கள் என்று என் அம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன். எழுபதுகளில் எனக்கு விபரம் தெரிந்தநாட்களில் முதன் முறையாக வேளாங்கண்ணிக்குச் சென்றிருந்தபோது இதனை அங்கே நேரடியாகக் காணவும் முடிந்தது. அதற்கப்புறம் எல்லாமே வியாபார மயமாகிவிட்டதில் அத்தனையும் போயே போச்!
  கொஞ்ச நாட்கள் முன்புவரை கோவில் கேண்டீனில் நல்ல தரமான சாப்பாடு கிடைத்துக்கொண்டிருந்தது. இப்போது அங்கேயும் நன்றாக இல்லை. எல்லாவற்றிலும் ஒரே மண்.
  Sea gate போன்ற ஒரு சில உயர்தர ஓட்டல்களில் மட்டும் ஓரளவு நல்ல சாப்பாடு கிடைக்கிறது அதிக விலையில்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அமுதவன் சார் ! நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை, தெரியாத தகவல்களும் கூட. ஒரு கோவில் வியாபார தளமாவது செல்பவர்களுக்கு நிறைய கஷ்டத்தை கொடுக்கிறது என்பது தெரிந்தது. இந்த தளத்திற்கு வருபவர்களுக்கு உங்களது கருத்து பயன் அளிக்கும் !

   Delete
 5. பார்க்க நினைக்கும் கோயில்! சந்தர்ப்பமும் காலமும் ஒத்துழைத்தால் விரைவில் செல்வேன்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே, விரைவில் வாய்ப்பு கிடைத்து சென்று வர வாழ்த்துக்கள் !

   Delete
 6. சுரேஷ், நல்ல சாப்பாடு மட்டும் கிடைத்திருந்தால் பதிவு இன்னும் 4,5 பாராக்கள் அதிகம் ஆகியிருக்கும். என்ன வேளாங்கண்ணி மாதா out of focus ஆகி சாப்பாடு மெயின் focus ஆயிருக்கும். அனால் நல்ல எழுத்து நடை உங்களுக்கு, எனக்கு மிகவும் பிடித்தது இந்த கட்டுரை.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா, என்னை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறீர்கள் ஜெகதீஷ், நீங்கள் சொல்வது உண்மைதான் !

   Delete
 7. புனித பயணம் போயும் சாப்பாட்டு பதிவை விடலியா!?

  ReplyDelete
  Replies
  1. செல்பவர்களுக்கு உதவுமே என்று பார்த்தேன் :-) நன்றி !

   Delete
 8. சில நாட்களுக்கு முன்னர்தான் நண்பர்களுடன் வேலாங்கண்ணி சென்று வந்தேன் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெயக்குமார் சார் ! உங்களது பயண அனுபவத்தை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் !

   Delete
 9. ரொம்ப அருமை சார், தொடர்ந்து உங்களது பதிவை படித்து வருகிறேன், நன்றாக இருக்கிறது. தேனிதான் என் ஊர் வந்தால் சொல்லுங்கள்... cccsankar@gmail.com. நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி சங்கர் ! உங்களை பார்ப்பதற்காகவே ஒரு முறை தேனி வருகிறேன், விரைவில் !

   Delete
 10. மிக அழகாக அன்னையின் திருத்தலம் பயணம் பற்றியும், கோவில் வரலாறு பற்றியும் கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரரே.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே, இந்த திருத்தலம்தான் என்னை இதை பற்றி எழுத வைத்தது என்று நினைக்கிறேன் !

   Delete
 11. It is a fact that the food in vailankanni is too bad & unhealthy...and expensive...Also Bakthi ellaam kooda anga miga miga commercial aayiduchi....

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும். பக்தி இன்று எல்லாமும் தருகிறது !

   Delete
 12. பிரபலமான ஆலயம் பற்றி பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாதேவி, உங்களது வார்த்தைகள் உற்சாகம் கொடுக்கிறது !

   Delete
 13. சார் வேளாங்கண்ணியில் கிடைக்கும் தேங்காய் மிட்டாய் பத்தி எழுதாமல் விட்டு விட்டிர்களே!

  ReplyDelete
  Replies
  1. ஐயோ, இதை பற்றி தெரியாமல் போய் விட்டதே. நண்பரே அதிகம் விவரம் தாருங்களேன் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete
 14. இன்னும் அப்படியே தான் இருக்கா வேளாங்கண்ணி?

  ReplyDelete
  Replies
  1. வடுவூர் குமார், இதில் ஏதும் உள்குத்து இருக்கோ ?! நான் போய் எதுவும் கெடுக்கலை சார் !

   Delete
 15. Sir கோவில் கேண்டீனில் சாப்பாடு (சைவம் & அசைவம்) நன்றாகவும் இருக்கும், பைசாவும் குறைவுதான். அதை தங்கள் கட்டுரையில் பதிவிட மறந்து விட்டீர்கள்.

  ReplyDelete
 16. Sir கோவில் கேண்டீனில் சாப்பாடு (சைவம் & அசைவம்) நன்றாகவும் இருக்கும், பைசாவும் குறைவுதான். அதை தங்கள் கட்டுரையில் பதிவிட மறந்து விட்டீர்கள்.

  ReplyDelete
 17. மாதா காட்சி கொடுத்த ஆதி திருத்தலத்திற்கு பின்புறம் தேங்காய் மிட்டாய் சுடச்சுட செய்து கொடுப்பார்கள் மிகவும் ருசியாக இருக்கும் வேறு எங்கும் வாங்குவதை விட அந்த இடத்தில் சுடசுட வாங்குவது மிகச் சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 18. உங்களின் இந்த பயண கட்டுரையை நான் முகநூலில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்

  ReplyDelete