Monday, March 17, 2014

நகரத்து மண் சாலை.....!!

சென்ற வாரத்தில் எனது உறவுக்காரர் ஒருவர் இங்கு பெங்களுருவில் இருக்கிறார், அவரை பார்க்க சென்று இருந்தேன். அவரது மூன்று வயது மகள் சப்பாத்தி மாவை வைத்து உருட்டி விளையாடி கொண்டு இருந்தாள். அது கொஞ்சம் போர் அடிக்க ஒரு சிறிய டப்பாவை எடுத்துக்கொண்டு வீட்டின் நடுவே வந்து, ஒரு பேப்பர் போட்டு அந்த டப்பாவை திறக்க நான் ஆவலோடு என்ன செய்கிறாள் என்று பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் அந்த டப்பாவில் இருந்து ஆற்று மணலை அந்த பேப்பரில் கொட்டி மணல் வீடு கட்ட நான் திகைத்து போய் இருந்தேன். அப்போது அங்கு வந்த நண்பனிடம் திகைப்புடன் என்ன இது என்று கேட்க, குழந்தைகள் மணலில் விளையாடுவதை மிகவும் விரும்புகிறார்கள் ஆனால் நமக்கெல்லாம் எங்கே நேரம் இவர்களை மண்ணில் கொண்டு போய் விளையாட விட, அது மட்டும் இல்லாமல் இப்போது ரோட்டிலோ, பீச்சிலோ கிடைக்கும் மணலில் விளையாண்டால் சொரிய ஆரம்பித்து விடுகின்றனர், இந்த மண் நான் எனது மேற்பார்வையில் எனது ஊரில் ஆற்றில் இருந்து கொண்டு வந்த சுத்தமான மண், அதை இங்கு வைத்து விளையாடினால் அவர்களுக்கு பொழுது போகும் அல்லவா என்று கேட்க அவனது மகள் என்னிடம் "அங்கிள்..... இங்க பாருங்க மணல் வீடு கட்டி இருக்கிறேன்"என்று காட்ட நான் கைகளை தட்டி சூப்பர் என்று சொல்லிவிட்டு வந்தேன். வீட்டிற்க்கு திரும்பும் வழியில் எந்த இடத்தில் மண் இருக்கிறது என்று பார்த்துக்கொண்டே வந்தேன், எங்கெங்கும் தார் ரோடு மற்றும் கான்கிரீட் கட்டிடங்கள், மண் என்பது அங்கங்கு தட்டுபட்டாலும் அது மிகவும் அசுத்தமாக இருந்தது. நாமெல்லாம் வளர்ந்தபோது தெருவில் இறங்கினாலே மண் கிடைக்குமே, இந்த காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியில் ஒவ்வொரு தெருவும் தார் ரோடு, கான்கிரீட் என்று வளர்ந்தது ஒரு வளர்ச்சி என்று கூறுவதா, இல்லை அவர்களை இயற்கையின் இடத்தில் இருந்து வெகு தூரம் அழைத்து செல்கிறோம் என்று எடுத்துக்கொள்வதா ?! மண் என்பது உண்மையில் அழுக்கா இல்லை மனம் சுத்தபடுத்தும் ஒன்றா ? மண்ணில் விளையாடினால் உடம்புக்கு வியாதிகள் வருமா இல்லை விளையாடாமல் இருந்தாலா ? மண்ணில் சுத்தமான மண், சுத்தம் இல்லாதது என்று இருக்கிறதா இல்லை மனிதர்கள்தான் அதை கெடுக்கின்றார்களா ? குழந்தைகள் மண்ணில் விளையாடினால் அடிக்கின்றோமே, அது என்ன மிக பெரிய ஒரு குற்றமா ? நீரை உறிஞ்சும் மண் சாலைகளை தார் சாலைகளாக்குவது நமது நிரந்தர சௌகரியமா இல்லை நிரந்திர சாபமா ? இப்படி நிறைய நிறைய கேள்விகள்......





சிறுவயதில் ஒவ்வொரு வீட்டின் முன்னேயும் சிறு இடம் விட்டு இருக்கும், அதில் அவர்களுக்கு பிடித்த செடிகளை நட்டு வைப்பார்கள். அந்த செடிகள் எப்படி வளர்கிறது என்று பிடுங்கி பார்க்க அம்மாவிடம் இருந்து உதை விழும். சிறிது தாண்டி தெருவுக்கு சென்றால் அப்போது எல்லாம் எல்லா தெருவும் மண் தெருதான். அதுவும் மழை பெய்தவுடன் ஒரு வாசனை கிளம்பி மனதை குடையும், சிறிது அந்த தெரு மண்ணை எடுத்து வாயில் வைக்க அவ்வளவு சுவையாக இருக்கும். பிள்ளைகளுக்கு கண் பாடுவிட்டது என்றால் அம்மா நான்கு வீதி சேரும் இடத்தின் மண் எடுத்துவந்து சுற்றி போடுவார்கள் ! முதல் முதலாக ஆற்றுக்கு கூட்டி சென்றபோது இதுவரை செம்மண்ணை பார்த்து இருந்து அன்று கையில் எடுத்தால் பொன்னிறமாக மின்னும் ஆற்று மணலில் மலை போன்று கட்டியது இன்றும் நினைவில் இருக்கும் ஒன்றல்லவா ! அதே ஆற்றில் சிறிது தோண்ட கிடைக்கும் களிமண்ணை உருட்டி உருட்டி உருவம் கொண்டு வந்தது எவ்வளவு சந்தோசம். இப்படி மண் பார்த்து வளர்ந்த நாம் இன்று குழந்தைகளுக்கு மண்ணில் விளையாண்டால் அரிக்கும் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம் ?



மண்ணில் எத்தனை வகை இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா...... செம்மண், களிமண், வண்டல் மண், கரிசல் மண், ஆற்று மண், கடல் மண், குறு மண், புழுதி மண் என்று பல வகை இருக்கிறது. இதில் எத்தனை வகை மண்ணில் நீங்கள் விளையாடி இருக்கிறீர்கள் ? செம்மண்ணை வாயில் வைத்து சுவைத்து இருக்கிறீர்களா, அதுவும் தென்னை மரத்தின் அடியில் தண்ணீர் ஊற்றி விட்டு சென்றவுடன் மேலே படியும் அந்த நைஸ் செம்மண் எவ்வளவு சுவை :-) ஆற்று மண்ணில் கோட்டை கட்டியதும், புழுதி மண்ணில் உருண்டு விளையாடியதும், கடல் மண்ணில் கால் புதைய நடந்ததும், கரிசல் காடு மண்ணின் நிறம் கண்டு அதிசயித்தும், களிமண்ணில் பிள்ளையார் செய்து வைத்ததும் என்று இந்த மண் நமது வாழ்வோடு எவ்வளவு விதமாக கலந்து இருந்தது. இன்று நெடுந்து உயரமாக இருக்கும் ஒவ்வொரு அடுக்கு மாடி கட்டிடங்கள் இடத்தில் பிளே ஏரியா என்று விளையாடும் இடம் ஒன்று உண்டு, அங்கு சுத்தமான ஆற்று மணலை கொட்டி வைத்து இருக்கின்றனர், அதில் விளையாடிய குழந்தைகளை ஐயோ  எவ்வளவு அழுக்கு என்று திட்டி கூட்டி செல்கிறார்கள்...... அப்ப நாம தெருவில் இருந்த புழுதி எல்லாம் வீட்டிற்க்கு கொண்டு வருவோமே, அதுவெல்லாம் என்னங்க ?!




பொதுவாக அந்த கால குழந்தைகளுக்கு ஸ்கூல் யூனிபார்ம் என்று பார்த்தால் அது வெள்ளை நிற மேல் சட்டை, கால் சட்டை மட்டும் பல கலரில் இருக்கும். எந்த நாளிலும் அது மண் கறை இல்லாமல் திரும்பியது இல்லை என்று உங்களுக்கு தெரியுமே ! இன்று பெற்றோர்கள் எல்லாம் என் பையன் ஸ்கூலில் இருந்து யூனிபார்ம் அழுக்கு ஆகாமல் வருகிறான் என்று பெருமையாக சொல்வதை கேட்டால் வருத்தமாக இருக்கிறது. குழந்தைகள் விளையாடும் இடம் என்பது பள்ளியும், வீடும். பள்ளிகள் இன்று விளையாட்டு மைதானம் என்பது கொஞ்சமாகவும், அந்த விளையாட்டு மைதானமும் கான்கிரீட் தளமாக பெருமையாக மின்னுகிறது. தனி வீடாக இருந்தால் கணவனும், மனைவியும் வேலைக்கு செல்வதால் இருக்கும் சொற்ப இடத்தில் தோட்டம் வைக்க இடம் இல்லாமல் தொட்டி செடிகள் முளைத்து விட்டன, செடிகளும் சீக்கிரம் வளர வேண்டும் என்று உரம் என்ற பேரில் பூச்சி கொல்லிகளை கொட்டி விடுகிறோம். அடுக்கு மாடி கட்டிடங்களில் வசிப்பவர்கள் விளையாடும் இடம் என்ற பேரில் சிறிய இடத்தில் சுத்தமான மண்ணை கொட்டி, அதில் விளையாடும் குழந்தைகளையும் மண்ணில் விளையாடுற என்று திட்டி தீர்க்கின்றனர். மண் எந்த இடத்தில் அல்லது நேரத்தில் இந்த கால குழந்தைகளுக்கு நண்பன் ஆகிறது என்று பார்த்தால் எங்குமே இல்லை என்பதுதான் நிதர்சனமே. அந்த காலத்தில் கையை கழுவு என்று அம்மா ஆயிரம் முறை சொன்னாலும் அடுத்த முறை நமக்கு மறந்து போகும், வெளியே இருந்து வந்தவுடன் அழுக்கு கைகளில் குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து குடிப்போம், இன்றைய குழந்தைகள் வெளியில் இருந்து வந்தவுடன் லைப்பாய் எங்கே என்று கேட்டு கைகளை கழுவுவது நல்லதா இல்லை கெட்டதா........ விடை தெரியாத கேள்வி இல்லையா ?!



இந்த நகரத்தில் கிடைக்கும் வசதிகள் அதிகம், குழந்தையின் படிப்பில் இருந்து செல்வம் வரை இது அதிகம் தரும், ஆனால் எல்லாவற்றையும் செயற்கை வகைகள் மறைத்துவிடும், ஷாப்பிங் மால் செல்லும் இன்றைய குழந்தைகள் அங்கு இருக்கும் செயற்கையில் மனதை தொலைத்து விடகூடாது. இன்று எல்லா குழந்தைகளின் சொந்தங்களும், பாட்டி தாதாக்களும் நகரில் இடம்பெயர்ந்த பின்னர் அல்லது அவர்களது கிராமத்து வீடுகள் நகரத்தின் கரங்களுக்குள் வந்த பிறகு இந்த மண் தொட்டு விளையாடுவது குறைந்தும், மறைந்தும் போய்விட கூடும். அடுத்த முறை குழந்தைகளை நகரத்தின் வெளியே இருக்கும் கோவிலுக்கு கூட்டி செல்வோமே, வெளியூர் செல்லும்போது பயணத்தில் சிறிது நேரத்தை ஒரு தென்னந்தோப்பில் செலவழிப்போமே, ஒரு ஞாயிறு காலையை வயல் தேடி சென்று களிப்போமே, ஒரு வருடத்தின் ஒரு பொழுதை ஒரு கிராமத்தில் செலவழிப்போமே, செடிகளை மட்டுமே இயற்க்கை என்று சொல்லி வளர்க்கும் இந்த நகரத்தில் இருந்து மரம் என்றும் ஒன்று உண்டு என்று காட்டுவோமே, மினெரல் வாட்டர், காய்ச்சிய குடிநீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்று சொல்லி வளர்த்த நாமே ஒரு ஓடை நீரை பருக வாய்ப்பு கொடுப்போமே, முள் குத்தாத நகரத்து சாலைக்கே செருப்பு போடா வேண்டும் என்று சொல்லும் நாம் அவர்களது கால்களுக்கு மண்ணின் ஸ்பரிசத்தை கொடுப்போமே, இந்த உலகத்தில் எல்லாமே பணம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்று ஷாப்பிங் மால்களில் கற்று கொண்டதை பழம் தரும் மரங்களை காட்டி இலவசமாகவும் கிடைக்கும் என்றும் சொல்வோமே, நகரத்தின் நச்சுக்காற்றையே சுவாசித்து வந்த குழந்தைகளுக்கு சுத்தமான காற்றின் சுவையை காண்பிப்போமே, சேறும் சகதியும் மிதித்து விளையாடி கறை நல்லது என்று சொல்வோமே, புழுதிக்கும் அழுக்குக்கும் உள்ள வித்யாசத்தை சொல்லி கொடுப்போமே, ஒரு மணல் கோட்டை கட்டி அதில் ஆனந்தமாய் வாழ்வோமே....... அடுத்த முறை நகரத்தின் சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் செல்லும்போது சிறிது சாலைகள் இல்லா ஊருக்கும் சென்று வருவோமே, அது நமக்கு ஒரு புதிய வாழ்வையே கற்று தரும் !!





30 comments:

  1. அருமையான பதிவு... மண்ணை தொடும் குழந்தைகளை அடிக்கும் போது நமக்கு வலிக்கிறது.

    மண்ணுக்குள்ளே போகும் மனிதன் மண்ணை நேசிப்பதில்லை ! !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்து மிக சரியே பொன்சந்தர் ! வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  2. கவித்துவமான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு நன்றி ரமணி சார் !

      Delete
  3. Replies
    1. தமிழ் மணத்தில் ஓட்டு அளித்தமைக்கு நன்றி ரமணி சார் !

      Delete
  4. Replies
    1. நன்றி சதீஷ்….. உங்களது பதிவுகளும் சூப்பர் !

      Delete
  5. மண்ணின் ஸ்பரிசத்தை கொடுக்கும் அருமையான பகிர்வுகள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி, உங்களது கருத்துக்கள் என்னை உற்சாகம் கொள்ள செய்கிறது !

      Delete
  6. அருமையான பதிவு சார். வித்தியாசமாக இருக்கின்றது. இப்படி தான் பதிவுகள் வரவேண்டும்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜேஷ் சார் ! நீங்கள் இந்த பதிவை மிகவும் ரசித்தது கண்டு மகிழ்கிறேன் !

      Delete
  7. LIKE YOUR PREVIOUS ONE OF THE ARTICLE ABOUT NIGHT VISIT,
    THIS IS ALSO VERY TRUE AND VERY NEAR TO OUR FEELINGS
    MUTHU KUMAR

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்துக்குமார், நீங்கள் எனது முந்தைய பதிவுகளையும், இந்த பதிவையும் ரசித்தது கண்டு மகிழ்ச்சி ! தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  8. நாம் கண்டு அனுபவிச்ச சொர்க்கத்தை நம் பிள்ளைகள் கை நழுவ விட்டது புரியுது சகோ! நாம் அனுபவைச்சவைகளை நாமே நம் பிள்ளாஇகளுக்கு கொடுக்காம தடைக் கற்களாய் இருக்கோம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை புரிந்தது கண்டு மகிழ்ச்சி, இதைதான் நானும் சொல்ல நினைத்தேன். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  9. சரியாக சொன்னிர்கள் ! மேலும் மண்ணின் மீது நமது உடல் படும் பொழுது, விளையாட்டாக இருந்தாலும் தோட்ட வேலையாக இருந்தாலும் சரி, நமது உடல் மற்றும் மனது சரி சம நிலை அடைகிறது, இதனால் தான், we were used to live with "NO TENSION, NO FEAR & NO STRESS"

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் பாபு, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

      Delete
  10. மண் மணக்கும் பதிவு! அத்தனையும் உண்மை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, மணம் கமழும் வாழ்த்துக்கள் !

      Delete
  11. மிகவும் அருமையான கருத்துகள்..இயற்கையை ரசித்து விளையாட பிள்ளைகளை அனுமதிக்க வேண்டும்..அதற்கு தேவையானவற்றைச் செய்யவும் வேண்டும்..
    ஆனாலும் பல விசயங்களை இழந்துவிட்டோம் என்ற நிலை வருத்தம் தருகிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ்…. இயற்கையை அழிக்கத்தான் இன்று நினைக்கிறோம் என்பதுதான் உண்மை !

      Delete
  12. வழக்கமாக வரும் பதிவல்ல இது... நியாயமான கோபமும் ஆதங்கமும் புரிகிறது...

    இது போல் மேலும் தொடர எனது அன்பான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் !

      Delete
  13. மண்வாசனை நல்லபகிர்வு. பலதையும் இழந்துவிட்டோம் என்பது உண்மை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மாதேவி !

      Delete
  14. kids immune system develops acquired immunity against common microbs when they are playing on ground. Otherwise they will be very sensitive to these microbs and all the times fall sick.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, நீங்கள் சொல்லும் விளக்கமும் சரிதான் !

      Delete
  15. இனிய நினைவலைகள் :))

    ReplyDelete