Tuesday, March 18, 2014

அறுசுவை (சமஸ்) - ஆண்டவர் கடை அசோகா அல்வா, திருவையாறு

சென்ற வாரத்தில் நான் பகிர்ந்த "புத்தூர் அசைவ சாப்பாடு" பதிவுக்கு ஏகப்பட்ட  பாராட்டு !! இதன் மூலம் சமஸ் அவர்களுக்கு எவ்வளவு தூரம் ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பது தெரிந்தது. இந்த வாரம் திருவையாறு..... தஞ்சாவூர் மாவட்டத்தில்,தஞ்சாவூர் நகரத்தில் இருந்து வடக்கே 13 கி.மி. தொலைவில் பெரம்பலூர் -மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை 226 ல் திருவையாறு அமைந்துள்ளது. திருவையாறில் அசோகா அல்வா என்பது உலக பிரசித்தம். யாரிடம் கேட்டாலும் இங்கே கிடைக்கும் என்று சொல்கிறார்கள், அப்படி சொல்லும்போதே அங்கே ஆண்டவர் கடைன்னு ஒன்னு இருக்கு அங்க போய் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு எச்சிலை ஒரு மிடறு விழுங்குகின்றனர், சொல்லும்போதே வாய் ஊருகிறது அவர்களுக்கு. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்பது கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும், ஆனால் அசோகா அல்வாவோ ஆரஞ்சு கலரில் சுண்டி இழுக்கும்..... சுவையும் இருட்டு கடை அல்வாவை போலவே சுண்டி இழுக்கும் !!
ஆண்டவர் கடை அசோகா அல்வாவை பற்றி திரு. சமஸ் அவர்கள் எழுதி உள்ளதை படிக்க இங்கே சொடுக்கவும்...... அசோகா அல்வா !
திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளக பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான தியாகராஜ சுவாமிகள் நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், தியாகராஜ ஆராதனை விழா என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாற்கள் நடைபெற்று வருகிறது. இதற்க்கு அடுத்து என்ன பேமஸ் என்று கேட்டால் அசோகா என்று ஊரே சேர்ந்து சொல்கிறது. திருவையாறு சென்று தெற்கு வீதி போய் கண்ணை மூடி கொண்டு நடந்தால் உங்களது மூக்கே வாசனை பிடித்து அழைத்து செல்கிறது ! தலைமுறை தாண்டி இந்த கடையில் அந்த அசோகா அல்வாவின் சுவையை மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
அதை பற்றி விரிவா பார்க்கும் முன், அசோகா அல்வா என்பது என்ன என்று ?!  கோதுமை அல்வாவின் அழகான தங்கச்சி என்று சொல்லலாம்..... சும்மா ஆரஞ்சு கலரில், பளபளன்னு நெய்யில் உடம்பெல்லாம் மின்ன, அங்க அங்க வறுத்த முந்திரியும், திராட்சையும் எட்டி பார்க்க, கோதுமையும் பாசி பருப்பும் சேர்ந்து அதை வழுவழுவென்று ஆக்கி இருக்க, என்ன அல்வா தண்ணியில் மிதந்துகிட்டு இருக்கு என்று நினைக்கும்படியாக நெய்யை அவ்வளவு விட்டு ஒரு வாய் போட்டாலே சும்மா ஜிவ்வுன்னு உச்சியில் இருந்து உள்ளங்கால்வரை அந்த இனிப்பு ஓடும் ஒன்றுதான் அசோகா அல்வா !!
 
நாங்கள் சென்று இருந்தபோது ஊருக்குள் நுழையும்போதே ஆண்டவர் கடை எங்கே இருக்கு என்று கேட்கவும், நேரா போய் வலது பக்கம் திரும்புங்க என்றனர். அப்புறம் என்று கேட்க, அவரோ அவ்வளவுதான் அங்கேதான் கடை என்றபோது நக்கல் செய்கிறாரோ என்று தோன்றியது, ஆனால் திருவையாறு என்ற சிறிய ஊரில் அவர் சொல்வது சரிதான் என்று தோன்றியது..... ஆண்டவர் கடை அசோகா அல்வா என்று பெரிய மஞ்சள் நிற போர்டு வரவேற்றது. உள்ளே நுழைந்தவுடன் கடை முதலாளி பெரிய புன்னகையுடன் வரவேற்றார். மிக சிறிய கடை, பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட இடம் இருக்கிறது. உள்ளே நுழைந்து அசோகா என்றவுடன் கும்பகொனது பசும்பச்சை வாழைஇலையில் ஆரஞ்சு வர்ணத்தில் நெய் ஓடும் அசோகாவும் காரத்திற்கு என்று சிறிது மிக்ஸ்ச்சரும் என்றும் வந்து உங்களது முன் இருக்கும்போதே நாக்கில் காவிரி ஆறு போல எச்சில் கரைபுரண்டு ஓடுவதை உணரலாம். ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டவுடன் "என்ன ஆச்சு.... அசோகா அல்வா வந்தது, கையில் எடுத்தேன், கொஞ்சமே கொஞ்சம் எடுத்து வாயில வைச்சேனா.........அப்புறம் அந்த ருசி மட்டும்தான் வாயில இருக்கு, அல்வாவை காணோம்" என்று நீங்கள் யோசிக்கும்போது, அடுத்த வாய் உணர்ந்து வைக்கும்போதுதான் தெரியும் நெய் சொட்ட சொட்ட எடுத்து வாயில் வைத்தவுடன் அது வழுக்கி கொண்டு வயிறு நோக்கி அரை நொடியில் பயணித்து இருந்ததை !! இதில் எழுதியது எல்லாம் எதுகை மோனைக்காக இல்லை நண்பர்களே...... உண்மை அதுதான் !
கொஞ்சம் கொஞ்சமாக உங்களது இலையில் அல்வா குறைய குறைய நீங்கள் சங்கீதம் கேட்காமலேயே போதையுடன் உட்கார்ந்து இருப்பீர்கள்.... பின்னே ஒரு கை அல்வாவிற்கு ஒரு கை நெய் சேர்த்து செய்தால் வேற என்னதான் செய்யும், அடுத்து மிச்சர் எடுத்து வாயில் போட்டாலும் அது இனிக்கத்தான் செய்கிறது ! இது சாப்பிட்டு விட்டு நீங்கள் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு வேறு எதை தின்றாலும் வயிறு புல் என்றே தோன்றிக்கொண்டு இருக்கும், ஆகவே உணவு வேளையில் இதை சாப்பிடாமல் இருப்பது உத்தமம் ! ஒரு கை அசோகா அல்வாவை சாப்பிட்டு அகோரி பாபா போல நெய் வாசத்தில் மயங்கி மலை பாம்பு போல எல்லோரும் சரிந்து இருக்க மெதுவாக எப்படியோ எழுந்து இலையை எடுக்க இலைக்கு கீழே நெய் அந்த டேபிளில் ஒட்டி இருந்தது....... அடேய் நான் இலை மேலே வைத்துதானே சாப்பிட்டேன் என்று உங்களுக்கு சந்தேகம் வரும், ஆனால் அந்த அசோகா அல்வாவை இலையும் அல்லவா சேர்ந்து சாப்பிட்டு இருக்கிறது !! முடிவில் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அல்வா பார்சல் வாங்கிவிட்டு வண்டி பக்கத்தில் வந்து நடக்க முடியாமல் அந்த அசோகா அல்வாவின் மயக்கத்தில் ......"இந்தா வண்டி சாவி........ யாரு வண்டியை ஓட்டறாங்க, கையை தூக்குங்க" என்று சொல்ல அல்வா எங்களின் கைகளை கட்டி போட்டு இருந்தது அப்போது !
அசோகா அல்வா செய்யும் முறை : 
  • பாசிபருப்பு(பயற்றம் பருப்பு) : ஒரு கப்
  • கோதுமை மாவு : ஒரு கப்
  • மைதாமாவு : இரண்டு டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை : மூன்று கப்
  • நெய் : ஒன்றரை கப்
  • ஏலக்காய் பொடி : கால் டேபிள் ஸ்பூன்
  • முந்திரி : 50 கிராம்
  • திராட்சை : 20 கிராம்
  • ஆரஞ்சு கேசரி பவுடர் : ஒரு சிட்டிகை
 பாசி பருப்பை வாசனை வரும் வரை வெறும் வாணலியில் வறுத்து கழுவி வைக்கவும் ஒரு பாத்திரத்தில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நிதானமான தீயில் வேகவிடவும் இன்னொரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் நெய்யை விட்டு அதில் முந்திரி திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும் அந்த நெய்யில் கோதுமை மைதா மாவுகலவையை சேர்த்து வறுக்கவும், நிதானமான தீயில் கை விடாமல் கிளறி வறுக்க வேண்டும். ஒரு கட்டத்தில் மாவு பொன்னிறமாகி நன்கு வாசனை வரும் இந்த பதத்தில் வேகவைத்த பருப்பை சேர்த்து கிளறவும். பருப்பு நன்கு மசிந்து மாவுடன் கலக்கும் போது சர்க்கரையையும் கேசரி பவுடரையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தின் ஓரம் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையும் ஏலக்காய் பவுடரும் மீதமுள்ள நெய்யும் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான அசோகா அல்வா சிரமமின்றி தயார்.

 கடை விலாசம் :

திருவையாறு பஸ்ஸ்டான்ட் மிக அருகிலேயே கடை, யாரை கேட்டாலும் சொல்வார்கள். தெற்கு வீதியில் கடை உள்ளது. கும்பகோணம் செல்லும் ரோட்டில் செல்ல வேண்டும்.




கடையின் மெனு கார்ட் :  





Labels : Suresh, Kadalpayanangal, Samas, Arusuvai, Andavar kadai, Ashoka alwa, Asoka alwa, Alva, Moong dal alwa, Thiruvaiyaaru, Tanjore special

32 comments:

  1. ச் ச் ச்... தலை கிர் கிர்... ஹிஹி...

    அசோகா அல்வா செய்யும் முறைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா, நன்றி தனபாலன் சார், உங்களோடு இது போல் ஒரு பயணம் செய்ய வேண்டும் !

      Delete
  2. அல்வா எந்த ரூபத்தில் என்ன ருசியில் இருந்தாலும் பிடிக்கும் எனக்கு. ருசியாய் இருந்துவிட்டால்!? திருவையாறு பக்கம் போகும்போது ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி, நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய கடைதான் இது !

      Delete
  3. இங்க எச்சில் ஊருதய்யா...

    ReplyDelete
    Replies
    1. அந்த எச்சில் காவிரி ஆறு போல இங்கே வருகுதையா…… நன்றி சதீஷ் !

      Delete
  4. அல்வா கொடுத்ததுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நான் கொடுத்த அல்வாவை மகிழ்ச்சியோடு ஏற்று கொண்டதற்கு நன்றி ! :-)

      Delete
  5. இந்த கடைக்கு ஆறு முறை போயிருக்கேன். நான் வீட்டில் செய்யும் அசோகா அல்வாவிற்கு ஆரஞ்ச் கலர் போடாமல் செய்வேன். பாசிபருப்பு கலரிலேயே விட்டுவிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆறு முறையா, கொடுத்து வைத்தவர் நீங்கள் !

      Delete
  6. படமெல்லாம் சூப்பரா போட்டு சூப்புக் கொட்ட வைச்சிட்டீங்களே! ஈஸ்வரா நான் என்ன செய்வேன்?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, உடனே அந்த கடைக்கு போய் ரெண்டு கிலோ அல்வா பார்சல் வாங்கி எனக்கு அனுப்ப சொல்லி ஈஸ்வரன் சொல்றார் :-)

      Delete
  7. WHAT IS THE DIFFERENCE BETWEEN HALWA AND ASOKA

    ReplyDelete
    Replies
    1. கேசரியின் அக்கா , அல்வாவின் தங்கை

      Delete
    2. சாமி, நீங்க ஏன் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் பார்க்கிறீங்க…… பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராய கூடாது :-)

      Delete
  8. தஞ்சாவூர் பாம்பே ஸ்விட் ஸ்டால்ல அசோகா கிடைக்கும் அருமையா இருக்கும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே, நீங்கள் சொல்வதும் சரிதான் ஆனால் இது பாரம்பரிய கடை…. நீங்களும் ரசிப்பீர்கள் !

      Delete
  9. அசோகா அல்வாவினைச் செய்யும் முறையைப் பகிர்விட்டமைக்கு
    மிக்க நன்றி சகோதரரே .

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்…..

      Delete
  10. இருபது வருடம் முன்பு தற்செயலாக இந்த கடை அல்வாவை சாப்பிட்டு திகைத்து போனேன். அருகில் உள்ள எவர்சில்வர் கடையில் இதற்காகவே ஒரு பாத்திரம் வாங்கி ஐந்து கிலோ அல்வா வாங்கினோம்.

    ReplyDelete
    Replies
    1. இதை நான் மிகவும் ரசித்தேன்……. எனக்கு இது தோனலையே ! நன்றி நண்பரே !

      Delete
  11. தயிர் சாதம் supero சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. தயிர் சாதமா…… ஹலோ பாஸ் நீங்க சரியான அட்ரஸ் வந்து இருக்கீங்கதானே !

      Delete
  12. Very good post with super pictures. Makes me to try this immediately but have to wait until June.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கார்த்திக், விரைவில் சாப்பிட வாழ்த்துக்கள் !

      Delete
  13. CHENNAI LA IRUDHUKONDU EN OORUIN PERUMAYA PADIKUM POTHU ASOHA SUVAI THERIKIRATHU

    ReplyDelete
    Replies
    1. நன்றி கங்கா….. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  14. இப்பவே சாப்பிட்ட திருப்தி!!!
    இவ்வாண்டு தாயகம் வரும்போது, இந்த(க் கடை) அசோகாவை
    சுவைத்திட வேண்டும்... இறை நாட்டம்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, விரைவில் தாயகம் வந்து இதை சுவைக்க வாழ்த்துக்கள் !

      Delete
  15. Replies
    1. முடிக்க முடியலையா ! :-)

      Delete
  16. ஜெகதீஷ், நெய் வடியறது மட்டும்தான் தெரியுதா, எச்சில் வடியறது தெரியலையா !

    ReplyDelete