எனது பதிவுகளை படிப்பவர்கள் என்னிடம் பேசும்போது "எங்க ஊருல ஒரு கையேந்தி பவன் இருக்கு, அங்க சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும், ஆனா நீங்க அங்க எல்லாம் போவீங்களோ என்னமோ அப்படின்னுதான் சொல்லலை." என்று சொல்வார்கள், அவர்களிடமே ஏன் அப்படி நினைத்தீர்கள் என்று கேட்டால் நீங்கள் உலகை சுற்றுகிறீர்கள், நீங்கள் சாப்பிடும் பதிவுகளை பார்த்தால் நீங்கள் இப்படி எல்லாம் சாப்பிடுவீர்களோ என்று தோன்றியது என்பார்கள். நான் செல்லும் பயணங்களில் கிடைத்ததை சாப்பிடுபவன், கிடைத்த இடத்தில் தங்குபவன், கிடைக்கும் சாப்பாட்டில் என்ன இருக்கிறது உயர்வும், தாழ்வும் !! இதற்க்கு முன்பும் கையேந்தி பவன் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன், ஆனால் அது பெங்களூரில் இருப்பதால் பெரியதாகி விடாது ! சரி.... வாருங்கள் இந்த வாரம் ஒரு அருமையான சாப்பாட்டை பற்றி பார்ப்போம். சமீபத்தில் மதுரையில் ஒரு இடத்தில் பத்து ரூபாய் சாப்பாடு, அதுவும் அண்ணா பேருந்து நிலையம் அருகில் கிடைக்கிறது என்ற தகவல் கிடைத்தது, கேட்கவே ஆச்சர்யமாக இருந்தது.... இன்று பஸ் ஸ்டான்ட் அருகில் ஒரு உணவகம் இருந்தால், ஒரு சாப்பாடு என்பது அறுபது ரூபாய்க்கு குறையாது, தயிர் சாதமே இன்று இருபது ரூபாய் ஆகிறது, இப்படி இருக்கும்போது எப்படி இவ்வளவு குறைந்த விலையில் என்று தோன்றியது !!

வீட்டில் ஒரு உணவகத்திற்கு செல்கிறோம் என்று சொன்னபோது எந்த இடம் என்று கேட்டார்கள், அண்ணா பேருந்து நிலையம் அருகில் பத்து ரூபாய் சாப்பாடு என்றபோது அந்த இடத்தில் சாப்பாட்டின் தரம் எப்படி இருக்குமோ, அந்த உணவகம் எவ்வளவு பெரியதாக இருக்கும், யார் யார் எல்லாம் அங்கு சாப்பிட வருவார்களோ, எவ்வளவு சுகாதாரமோ, என்ன தண்ணியோ என்றெல்லாம் அச்சப்பட்டனர். பொதுவாக எல்லோரும் பத்து ரூபாய்க்கு சாப்பாடு என்றவுடன் நினைக்கும் கேள்விகள்தான், நமது வயிற்றுக்கு ஒற்றுக்கொளுமோ என்னவோ என்று கவலைபடுவார்கள்தான். ஆனால், எனக்கு நம்பிக்கை இருந்தது, பல பல வருடங்களாக இப்படி குறைந்த விலையில் சாப்பாடு கொடுக்கும் இவர் தரம் இல்லையென்றால் இவ்வளவு காலம் இருந்து இருக்க முடியாது என்று, ஆகவே எங்களது தேடல் ஆரம்பம் ஆனது ! முதலில் அண்ணா பேருந்து நிலையம் சென்று காரை பூக்கடை ஒன்றில் நிறுத்தி பத்து ரூபாய் சாப்பாடு எங்கே கிடைக்கும் எனும்போது எங்களை ஏற இறங்க பார்த்தனர், காரில் வந்து ஏன் இப்படி என்பதுபோல !!


ஆகவே காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, நடந்து சென்று பல கடைகளில் விசாரித்து இடத்தை கண்டு பிடித்தோம். பல பெரிய கடைகளுக்கு இடையில் ஒரு சிறிய அறையும், முன்னே போடப்பட்டு இருந்த கூரையும்தான் கடை. அந்த கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. உட்கார இடம் கிடைக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து கடைசியில் உள்ளே இருக்கும் சிறிய ரூமில் அண்ணே இங்க வாங்க என்று இடம் கொடுத்தனர். உட்கார மிக சிறிய ஸ்டூல், சுவற்றில் இருந்து ஒரு சிறிய இலை போடும் அளவே இருந்த சாப்பாட்டு மேஜை, நடக்கும் இடத்தின் நடுவே பெரிய சட்டியில் சாப்பாடும், அதன் கீழே பார்சல் சாப்பாடு கேட்பவர்களுக்கு கட்டி வைக்கப்பட்ட பொட்டலங்களும் இருந்தது. மொத்தத்தில் பார்த்தால் அந்த கடையில் இருந்தது மர அலமாரி, பெஞ்ச் மற்றும் சாப்பாட்டு பாத்திரங்கள் ! உட்கார்ந்தவுடன் ஒருவர் சிறிய இலையை போடுகிறார், தண்ணீர் தெளிக்க என்று ஒரு பிளாஸ்டிக் டம்பளரில் கொடுத்தார்.
 |
கல்லாவில் உட்கார்ந்து இருக்கும் பெரியவர்தான் இந்த சேவையை செய்வது.... நீங்கள் நீடூழி நோயின்றி வாழ வேண்டும் ஐயா ! |
தண்ணீர் தெளித்த இலையில் பொன்னி அரிசியில் வெள்ளை வெளேரென்று சாதம் ஒரு கப் பரிமாறப்பட்டது, எக்ஸ்ட்ரா சாதம் ஐந்து ரூபாய், ஆனால் உங்களுக்கு அந்த ஒரு கப் சாதமே போதும் என்று தோன்றும். அவரைக்காய் வெங்காயம் போட்ட சாம்பார் பருப்புடன் கொஞ்சம் தண்ணியாக ஊற்றினார்கள், அதனுடன் வாழைக்காய் பொரியலும் கொஞ்சம் ஊறுகாயும் ! பிசைந்து ஒரு கவளம் வாயில் கண்ணை மூடி எடுத்து வைத்தால் உங்களுக்கு நீங்கள் ஒரு பெரிய ஹோட்டல் உள்ளே உட்கார்ந்து இருப்பது போலவே தோன்றும், அவ்வளவு அருமை. அடுத்து மூன்று ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்தால் வத்தல் குழம்பும், பன்னிரண்டு ரூபாய்க்கு முட்டை குழம்பும் ஊற்றுகிறார்கள். அதன் பின்னர் நல்ல ரசமும், பெருங்காயம் ஜாஸ்தி போட்ட மோரும் ஊற்றுகிறார்கள். பொரியல் மற்றும் ஊறுகாய் அடுத்த ரவுண்டு கொஞ்சம் வருகிறது. சுவை அந்த பணத்திற்கு மிகவுமே அதிகம் எனலாம் !
 |
பசியை போக்க வேற என்ன வேண்டும் சார்..... அமிர்தம் இது ! |
நன்றாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்து கை கழுவும்போது அடுத்த கடையில் லெமன் ரைஸ் 25 ரூபாய் என்று ஒட்டி இருந்தனர், அதை ஒருவர் வாங்கி தின்று கொண்டு இருந்தார். அந்த கடைக்கு இரு நண்பர்கள் செல்லும்போது, ஒருவர் பத்து ரூபாய் சாப்பாடு என்று கண்ணில் பட்டு வா இங்கே செல்லலாம் என்று அவரை கூப்பிட, அவரோ ஐயோ, அது சுத்தமா இருக்காது, எந்த அரிசியோ என்றெல்லாம் சொல்லி அவரை நெட்டி தள்ளி கூட்டி சென்றார்........ திருப்தியான ஒரு ஏப்பம் விட்டு நினைத்துக்கொண்டேன், சில நேரங்களில் மனிதர்களையும், பொருட்களையும் பணம் மட்டுமே முடிவு செய்கிறதே அன்றி அதன் தன்மையோ, மனதோ அல்ல என்று !! அடுத்த முறை மதுரை செல்ல நேர்ந்தால் மறக்காமல் தைரியமாக இங்கு செல்லலாம், சுவையான சாப்பாடு குறைந்த விலையில் தயார் !!
பஞ்ச் லைன் :
சுவை - பத்து ரூபாய் சாப்பாடு எப்படி இருக்குமோ என்று அஞ்ச தேவை இல்லை, நல்ல சுவையான சாப்பாடு, நம்பி செல்லலாம் !
அமைப்பு - சிறிய உணவகம், பஸ் ஸ்டான்ட் சுற்றி பார்கிங் செய்ய கொஞ்சம் கஷ்டம்தான். வெயிலில் உள்ளே பேன் எல்லாம் கிடையாது !
பணம் - சாப்பாடு பத்து ரூபாய், முட்டை குழம்பு பன்னிரண்டு ரூபாய், புளி குழம்பு மூன்று ரூபாய்.
சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள். வார்த்தைக்கு வார்த்தை அண்ணா, சார் என்று கூப்பிட்டு எதையும் கேட்டு கேட்டு செய்கிறார்கள்.
அட்ரஸ் :
மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் கடை இருக்கிறது. கடைக்கு பெயர் என்று எதுவும் கிடையாது, பத்து ரூபாய் சாப்பாடு போடும் கடை என்றால் எல்லோரும் வழி சொல்கிறார்கள்.
மெனுகார்ட் :
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, 10 rupees meals, super meals, low cost meals, Tasty, Madurai, Anna Busstand