Thursday, April 24, 2014

மறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 2)

சென்ற பகுதியான "கப்பல் கட்டுவோம் (பகுதி -1)"இல் கப்பலின் வெளி கட்டமைப்பு எப்படி செய்யபடுகிறது என்று பார்த்தோம். வாருங்கள் இந்த வாரம் இந்த கப்பலின் மேல் பகுதி மற்றும் டர்பைன் பகுதிகளை பார்ப்போம் ! கப்பல் செய்யும்போது இரும்பினால் செய்யப்படும், இதில் சூட்சமம் என்பது எவ்வளவு அலை அடித்தாலும் கவிழ கூடாது. இதை மட்டும் தெரிந்து கொண்டால் அந்த பகுதியில் கப்பல் செய்வதற்கு இவர்தான் பிதாமகன், ஆகையால் புயலின் நடுவே சிக்கி கவிழாமல் கரைக்கு வரும் மீனவர்களின் படகுகளை செய்பவர்கள் இங்கு தெய்வமாகவும், பிதாமகர்களாகவும் கொண்டாடுகிறார்கள் ! ஒரு கப்பல் உருவாவதை பார்க்கும்போது அதன் மீது பிரமிப்பு ஏற்படுகிறது.


ஒரு கப்பல் செல்வதற்கு துடுப்பு அல்லது என்ஜின் தேவை, அந்த எஞ்சின் ஒரு காற்றாடி போல இருக்கும் ஒன்றை சுழற்றும், அது தள்ளும் நீரை ரட்டர் எனப்படும் ஒரு பலகையை கொண்டு திசையை தீர்மானிக்கலாம் ! மேலே இருக்கும் படத்தை பார்த்தாலே ஒரு சிறிய படகிற்கு ஆளுயர காற்றாடி தேவை என்பதை அறியலாம். துரு பிடிக்காமல் இருக்க இதை தாமிரத்தில் செய்கிறார்கள். கீழே இருக்கும் படத்தில் ரட்டர் எப்படி இருக்கும் என்பதை காணலாம், இது கப்பலின் சுக்கானுடன் இணைக்கபட்டிருக்கும். நீங்கள் திருப்பும் திசைக்கு எதிர் திசையில் இந்த ரட்டர் திரும்பும் !


சரி கீழ் பகுதியில் எல்லாம் பார்த்தாகிவிட்டது, வாருங்கள் மேலே செல்லலாம். ஒரு கப்பலை கீழே இருந்து பார்க்கும்போது சிறியதாக தெரிவது போல இருந்தாலும் மேலே ஏறும்போதுதான் எவ்வளவு பெரியது என்று தெரிகிறது. ஒரு ஏணி மூலம் மேலே ஏற ஏற அது வானத்திற்கே ஏறுவது போல தோன்றுகிறது. ஒரு வழியாக மேலே சென்று பார்த்தால் எல்லாமே மரத்தில் இருக்கிறது ! இந்த கப்பலின் கீழ் பகுதி இரும்பினால் ஆகி இருந்தாலும், மேல் பகுதி முழுவதும் வாகை மரத்தினால் செய்து இருக்கிறார்கள். முதலில் கப்பலில் மேல் தளம் அமைக்கின்றனர். இதில் இரண்டு இடத்தில் மூடி போட்டு இருக்கின்றனர். பின் பகுதியில் இருக்கும் இடம் எஞ்சின் வைக்கும் இடம், சிறிது தள்ளி இருப்பது மீன் சேமிக்கும் இடம். இதில் ஐஸ் எல்லாம் போட்டு பிடிக்கும் மீன்களை பாதுகாப்பாக வைத்து இருப்பார்கள் !




மேல் தளம் முடிந்தவுடன் கப்பலை செலுத்தும் அறையும், அதன் கீழே இவர்கள் உறங்கவும், சமைக்கவும் உள்ள அறை இருக்கிறது. வெகு சிறிய அறைகள், அதில் கப்பலின் சுக்கான் உடன் எஞ்சின் கட்டுப்பாடு பகுதிகள் எல்லாம் அமைக்கின்றனர். இதை கண்ணாடி கொண்டு மூடி, எவ்வளவு காற்று அடித்தாலும் தாங்குமாறு செய்கின்றனர். எந்த மழையும், புயலும் அடித்தாலும் இந்த அறையில் உள்ளே இருக்கும்போது நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்கள் என்கிறார் இதை செய்பவர். பொதுவாக வலையை போட்டுவிட்டு இந்த அறைக்கு முன்னே இருக்கும் கூரையின் நிழலில் உறங்குவதும், சீட்டு விளையாடுவதும் நடக்குமாம். ஒருவர் சமைக்க, இன்னொருவர் சுத்தம் செய்ய, ஒருவர் இளைப்பாற என்று வேலைகளை பகிர்ந்து கொள்வார்களாம். எப்படி சுற்றி ஒன்றுமே இல்லாமல் இருக்கும் கடலை பார்த்துக்கொண்டு நாட்கணக்கில் இருப்பீர்கள் என்பதற்கு, அதில் என்ன இருக்கு என்று பதில் !!




முடிவில் எல்லாமும் முடிந்தவுடன், முதலில் கப்பல் நன்றாக மிதக்கிறதா என்று பார்க்க, அதை ஒரு சிறிய படகு இழுக்கும் ஒன்றில் வைத்து பூஜை செய்து கடலில் தள்ளுகின்றனர். அது மிதக்க ஆரம்பித்த பிறகு சிறிது தூரம் ஓட்டி சோதிக்கின்றனர். பின்னர் எங்கெங்கு தண்ணீர் உள்ளே புகுகின்றது என்று சோதித்து குறித்து வைத்துக்கொண்டு அதை கரைக்கு கொண்டு வருகின்றனர். எல்லாமும் முடிந்தபின், அதை விருப்பமான கலர் கொண்டு பெயிண்ட் செய்கின்றனர். அதன் பின்னர் நமது தேசிய கொடியை பறக்க விட்டு அதை கடலில் இறக்கியபின் நாம் பார்த்த அந்த பிரமாண்டமான கப்பலா இவ்வளவு சிறியதாக தெரிகிறது என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை !! ஒரு படகை இதுவரை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு இன்று அதை செய்வதை பார்த்தது மிகவும் சந்தோசம் அளித்தது.


Labels : Suresh, Kadalpayanangal, Marakka mudiyaa payanam, memorable journey, kappal kattuvom, boat making, how it is made

10 comments:

  1. படங்கள் அனைத்தும் அருமை... பிரமிப்புடன் ரசித்தேன்...

    ReplyDelete
  2. அட்டகாசம். தொழிற்நுட்ப பகுதியில் நுழையாதது பலரை கவரும். :-)

    ReplyDelete
  3. கப்பல்ன்னாலே பிரமிப்பு. கப்பல் கட்டும் இடம் இன்னும் பிரமிப்பைத் தருது சகோ!

    ReplyDelete
  4. வணக்கம்
    அண்ணா.

    அறிய முடியாத தகவல்கள் அறிந்தேன்.....தேடலுக்கு எனது பாராட்டுக்கள்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. வணக்கம்
    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. படங்களும் தகவல்களும் அட்டகாசம் போங்க....

    ReplyDelete
  7. ஸ்வாரசியமான தகவல்கள் மற்றும் படங்கள். நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  8. சிறப்பான பகிர்வு...

    ReplyDelete