Friday, April 25, 2014

ஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)

சென்ற வாரத்தில் எனது அத்தையிடமிருந்து போன் வந்தது, அவரது பிறந்த ஊர் மானாமதுரை என்பதால் இந்த மானாமதுரை மண்பானை (பகுதி - 1) படித்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் ஒரு குழந்தையை போல அவரது ஊரின் பெருமையையும், பெயர் காரணம் என்று பகிர்ந்துகொண்டார். இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியின் வெற்றி இதன் மூலம் தெரிந்தது, நான் கஷ்டப்பட்டு சேகரித்த விஷயம் அந்த ஊரில் பிறந்தவர்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது கண்டு மகிழ்ந்தேன் ! இந்த பகுதியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் !சரி, வாருங்கள் இந்த வாரம் பானை செய்வதை பற்றி இன்னும் விரிவாய் பார்ப்போம் !!

பானை சுடலாம் வாருங்கள் !
பானை செய்வதை பற்றி பார்க்கும் முன்பு இந்த ஊருக்கு ஏன் இந்த பெயர் வந்தது, எதனால் இங்கு மண் பானை செய்பவர்கள் அதிகம் என்று காணலாமா ? சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை, ஐவகையாக வகைப்படுத்தினர். அவை குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பனவாகும். மருத நிலத்தை, வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர்.    வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருதநில மக்கள் மள்ளர் எனப்பட்டனர், மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர். இன்றைய மதுரை வைகை நதி பாய்ந்த பகுதி, இதனால் விவசாய நிலங்கள் அதிகம் இருந்ததால் மதுரை என்ற பெயர் மருதை என்பதன் மரூஉச் சொல் என பலர் கருதுகின்றனர். மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் இந்த மானாமதுரையின் இயற்பெயர் 'வானர வீரமதுரை', அது மருவி இன்றைய பெயர் வந்துள்ளது. வேளாண்மை செய்து வாழ்ந்து வந்த இவர்களில் ஒரு பிரிவினர் மண்ணை மூலப்பொருளாகக் கொண்டு பொருட்கள் செய்ததால் ‘குசவர்கள்’  என்று அழைக்கப்பட்டு இன்று குயவர்கள் ஆயினர்.
 

களிமண் ஒருவகையான மண் வகையாகும். பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும். நீர் வளம் மிக்க பகுதிகளில் தோண்டினால் இது கிடைக்கும். மானாமதுரை பகுதிகளில் கிடைக்கும் இந்த களிமண்ணில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் செய்யும் பானைகள் சீக்கிரம் சூடாகும் என்கின்றனர், அது போலவே இங்கு செய்யும் கடம் அந்த இரும்பு தன்மையினால் நல்ல இசையை கொடுக்கிறதாம். களிமண்ணுடன் ஆற்றங்கரைகளில் இருந்து கிடைக்கும் பசை தன்மையுள்ள குறுமண்ணை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்துதான் மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. ஆறு, குளங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை ஈர பதத்துடன் ஒரு சாக்கு போட்டு  வைக்கின்றனர். அதனுடன் சிறிது குருமணல் சேர்த்து  அந்த  காலத்தில் காலால் மிதித்து சரியான பதத்திற்கு கொண்டு  வருகின்றனர்.   முதலில் வெயிலில் அந்த மண்ணை காய வைத்து, பின்னர் அதில் குருமணல் கலந்து தண்ணீர் ஊற்றி காய வைத்து, பின்னர் அதை காலால் மிதித்து, எந்த மணல் கட்டிகளும் இல்லாமல் செய்கின்றனர். கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும், கால் வலிக்கும் வேலை, அதை சுலபமாக்க இன்று மெசின் வந்து விட்டது ! மண்ணை கொட்டி பட்டனை தட்டினால் பதமான மண் தயார் !!
 

மண் இப்படிதான் விற்க்கபடுகிறது....
 

எல்லாம் களிமண்...... விரைவில் அற்புத பானைகளாய் !!
 
மண்ணை பிசைந்து பதத்திற்கு கொண்டு வரும் யந்திரம்.....

பின்னர் இந்த மண்ணை பானை செய்யும் அந்த சக்கரத்தின் நடுவில் வைத்து சுற்றுவார்கள். இன்று அதை மெசின் செய்கிறது ! இந்த பானை செய்வதற்கு நன்றாக வளையும் விரல் வேண்டும்..... இடது கை ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் முதலில் மண்ணில் ஒரு குழி செய்து அதை மேலே எழுப்ப வேண்டும், இதை செய்யும்போதே வலது கையில் அந்த பானையை பாலிஷ் செய்ய வேண்டும் ! அது மட்டும் இல்லை, இந்த பானை செய்ய அவர்கள் குத்த வைத்து வெகு நேரம் உட்கார்ந்து இருக்க வேண்டும், இதனால் கால்களில் ரத்த ஓட்டம் தடைபட்டு கால் மரத்து விடும் ! நான் அவரிடம் ஒரு மணி நேரம் வரை பயிற்சி எடுத்து ஒரு பானை செய்தேன், ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது முறை தோற்று இருப்பேன் !! இந்த நுட்பத்தை இன்றைய தலைமுறை இளைஞர்கள் கற்று கொள்ளாமல் வேறு வேலைகளுக்கு செல்வதால் பானை செய்ய ஆட்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது, அதனால் பானை, தொட்டி, விளக்கு என்றெல்லாம் செய்ய மெசின் வந்து விட்டது, தெரியாதவர்களும் செய்யலாம் !! என்றாவது நீங்கள் பானை செய்பவரை பார்த்தால் அவர்களது கையை பாருங்கள், சிறு ரேகைகள் அனைத்தும் அழிந்து இருக்கும்....... அவர்களது எதிர்காலத்தை எந்த ஜோசியரும் கணிக்க முடியாது, அவர்களது வாழ்க்கையை போலவே !

மண்ணை உள்ளே போடு, லீவரை இழு..... பூந்தொட்டி தயார் !!
 
சிறு பூந்தொட்டி தயாரிக்கும் யந்திரம் !

 
தொட்டி செய்ய டை, தொட்டிகள் பக்கத்தில்......
 
தொட்டி செய்து காய வைத்திருக்கிறார்கள்.....

தொட்டி தயார்........
 
மண் பானை செய்யும் மண் சுத்தமானதாகவும், கெட்டித் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த வகையான மண் எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை. அதனால் இந்த மண் கிடைக்கும் இடத்தில் இருந்து விலை கொடுத்து வாங்கி வந்து மண் பானை செய்கின்றனர். மண் பானை செய்ய வல்லம்படுகை, கொள்ளிடம், முட்லூர் போன்ற வெளியூர்களில் இருந்து ஒரு டிராக்டர் மண் 1,500 ரூபாயிக்கு வாங்கி வரப்படுகிறது. பதப்படுத்த பயன்படும் மணல் ஒரு டிராக்டர் 1,000 ,ரூபாய். இதனைச் சுடுவதற்கு வைக்கோல், விராட்டி என அதிக செலவு பிடிக்கிறது. ஒரு ட்ராக்டர் மண் மூலம் சுமார் 750 பானைகள் வரை செய்யப்படும். பானை செய்து நெருப்பில் வைத்து சுட்ட பின்னர் ஒரு பானை 40 ரூபாய் வரை விற்பனை செய்தாலும் போதிய லாபம் கிடைக்கவில்லை என மண் பானை தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.


மண் பானையில் வைக்கும் தண்ணீர் எப்படி சில்லென்று இருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா ?! பானை செய்யும்போது அடியில் சிறிது சதுரம் போல் தட்டி விட்டால் நாம் தரையில் வைப்பதற்கு சௌகரியம் அல்லவா, ஏன் உருண்டையாகவே இருக்கிறது ? மண் பானை செய்யும்போது வெளியில் மட்டுமே ஒரு அட்டையோ அல்லது பேப்பர் கொண்டு பாலிஷ் செய்கிறார்களே, அதை ஏன் உள்ளே செய்வதில்லை ? என்ன கேள்வி சரிதானே..... அதற்க்கு விடை வாருங்கள் அடுத்த பகுதியில் பார்ப்போம், அதுவரை மண் பானையில் என்னவெல்லாம் செய்யலாம் என்று கீழே இருக்கும் படங்கள் பாருங்களேன் !

பணியார சட்டி, தோசை சட்டி, ஆப்ப சட்டி....... மண்ணில் செய்தது !!

ஒரு தரம்.... ரெண்டு தரம்.... மணி அடிச்சாச்சு !

இது எல்லாமே மண் பானையில் செய்தது தான் !!

Labels : Oor Special, District Special, Suresh, Kadalpayanangal, Manamadurai, Clay pot, ManPaanai, Paanai, Clay

17 comments:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  2. அவர்களது எதிர்காலத்தை எந்த ஜோசியரும் கணிக்க முடியாவிட்டாலும், வாழ்வு சிறக்கட்டும்... அற்புதமான படங்களுடன் விளக்கம்...

    நன்றி...

    ReplyDelete
  3. மண்ணால் ஆன பூஜை மணியை இன்னிக்குதான் பார்க்கிறேன். படங்கள்லாம் அற்புதம். பூந்தொட்டி, அகல்லாம் செய்ய மெஷின் வந்துட்டுதா!? அப்படியாவது இந்தத் தொழில் அழியாம இருந்தா சரிதான். பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான பகிஎவுகள்..

    ReplyDelete
  5. மண் பாண்டங்கள் மீது எனக்கு எப்பவுமே ஒரு தனி ஆசை..பதிவு விலாயாரியாக விளக்குகிறது.அருமை

    ReplyDelete
  6. மண்ணில் மணி! உடைந்து போகாதோ.... தயாரிப்புச் செலவைப் பார்த்தால் அவர்கள் விற்கும் விலைக்கு அவர்களுக்கு என்ன பெரிதாக லாபம் கிடைக்கும் என்று தோன்றுகிறது! விரல்களின் மாயத்தில் உருவாகும் பானைகள் எனக்கும் எப்போதும் ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.

    ReplyDelete
  7. வணக்கம்
    சுயதொழில் வாழ்க்கையின் வெற்றிப்பாதை ...... நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.. அண்ணா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. வணக்கம்
    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. மண்பாண்ட தொழில் மறைந்து வரும் வேளையில் இதை சிறக்கவைக்க ஓர் சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வணக்கம்

    கவிதையாக என் பக்கம் வாருங்கள் அன்போடு
    எப்போது ஒளிருமட வசந்த காலம்......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. பானை மற்றும் செம்பு தண்ணீரே "சுத்தமான" நீர். மக்கள் இப்போது அதை உணர்திருக்கிரர்கள். தற்பொழுது ஒரு தண்ணீர் மன் பானை 100-150 விற்கிறது. நாம் இதன் புழக்கத்தையும், முழு பயனையும் உணர்ந்து அதிகரிதொமேன்றல் இந்த தொழலில் மட்டும் அல்ல நமது ஆரோக்கியம்மும் மேம்படும்

    ReplyDelete
  12. பல விஷயங்களையும் ஆராய்ந்து வருகிறீர்கள் நண்பா... கலக்குங்க...

    ReplyDelete
  13. மண்ணில் தான் எத்தனை எத்தனை பொருட்கள் செய்கிறார்கள். ஆனாலும் உழைப்பிற்கேற்ற ஊதியம், லாபம் கிடைப்பதில்லை எனும்போது வருத்தம்.... தொடர்கிறேன்.

    ReplyDelete
  14. விரிவான அலசல் சுரேஷ் ... அடுத்த பகுத்திக்காக ஆவலுடன் ...

    ReplyDelete
  15. மண் பொருட்களை பார்க்கவே சந்தோஷமாய் இருக்கிறது.வாழ்த்துக்கள்,கூடவே அங்கு ஒரு கதையும் கிடைக்குமே?

    ReplyDelete
  16. மானாமதுரை மண்ணின் பெருமையை கூறிய உங்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  17. பானையின் பெயர்க my phone nember 8860986088

    ReplyDelete