Wednesday, April 16, 2014

அறுசுவை - மதுரை சந்திரன் மெஸ் அயிரை மீன் கொழம்பு !

கடந்த வாரம் முழுவதும் "வலைச்சரம்" ஆசிரியர் பணி மற்றும் அலுவலக வேலைகள் என்று ஒரு மாதமாக இந்த பக்கம் வரமுடியாமல் இருந்தது. இதற்க்கு இடையில் நண்பர்கள் பலரும் போன் செய்து என்ன ஆச்சு என்று விசாரித்தது கண்டு மகிழ்ச்சி, நெகிழ்ந்து போனேன் ! இன்றில் இருந்து நமது ஆட்டத்தை ஆரம்பிப்போம் வாருங்கள் !! மதுரை சென்றால் என்ன சாப்பிடலாம் என்று முடிவு செய்துவிட்டால் போதும், எங்கு சாப்பிடலாம் என்பதற்கு எவரை கேட்டாலும் சொல்வார்கள். அதில் மதுரை அயிரை மீன் கொழம்பு சாப்பிடவேண்டும் என்று முடிவெடுத்து விட்டு, யாரை கேட்டாலும் தல்லாக்குளம் சந்திரன் மெஸ் போங்கள் என்று சொல்லும் அளவுக்கு இது பேமஸ் !மதிய நேரத்தில் நல்ல பசியுடன் உள்ளே நுழைந்தோம். உட்கார்ந்தவுடன் நல்ல தலை வாழை இலை போட்டு தண்ணீர் தெளிக்க, பக்கத்தில் டேபிளில் இருந்து வந்த வாசம் மூக்கை துளைத்தது. சாப்பாடு சொல்லிவிட்டு காத்திருக்க சுட சுட சாதம் இலையில் விழ, உடனே கூட்டு, பொரியல் என்று இலையில் அடுத்து வந்தது. பசிக்கு சிறிது எடுத்து வாயில் வைக்க, உப்பும் புளியும் சரியான விதத்தில் போட்டு இருந்தது அந்த கூட்டு-பொரியலில் ! அடுத்து மதுரைக்கே உரித்தான மட்டன் சுக்கா வறுவல் ஒன்று சொல்ல அது இலையில் விழுந்து ஒரு வாய் எடுத்து வைக்க என்னதான் சுவையாக இருந்தாலும், சூடாக இல்லை என்பது ஒரு குறை !அடுத்து என்ன குழம்பு சொல்லலாம் என்று யோசிக்க ஒருவர் வந்து, மட்டன், சிக்கன், நண்டு, மீன், அயிரை மீன் குழம்பு என்று சொல்ல முதலில் மட்டனில் இருந்து ஆரம்பித்தோம் ! நல்ல பதமான மசாலா அரைத்து போட்டு, நன்கு வெந்த இளம் ஆட்டு இறைச்சியை பூ போல வருமாறு குழம்பு செய்து இருந்தனர். அதை மட்டன் சுக்காவுடன் சாப்பிட டபுள் ஜமாய் என்று இருந்தது ! அடுத்து வந்த சிக்கன் குழம்பும் நாட்டு கோழி குழம்பு போல அரைத்து விடப்பட்டு இருந்தது. என்னதான் சாப்பிட்டாலும் ஒரு ஆம்பலேட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்ற ஒரு நண்டு ஆம்பலேட் சொன்னோம். நண்டில் இருந்த பஞ்சு போன்ற கறியை மட்டும் எடுத்து இரண்டு முட்டையை உடைத்து போட்டு, மஞ்சளும், சின்ன வெங்காயமும் சேர்த்து, சிறிது பச்சை மிளகாய் சேர்த்து, அதிகம் முறுகலாக இல்லாமல் வந்தது எங்கள் இலைக்கு !! அடுத்து மதுரையின் ஸ்பெஷல் என்று சொல்லப்படும் அயிரை மீன் குழம்பை கேட்டோம்..... ஒரு வாளியில் இருந்து (எக்ஸ்ட்ரா காசு இதுக்கு !!) எடுத்து, வேணுமா வேணுமா என்று கேட்டு கேட்டு ஊற்றினார். வெள்ளை சாதத்தில் சிறு சிறு மீன்கள் முட்கள் இல்லாமல் மசாலாவுடன் இருக்க, முதல் வாய் எடுத்து வைத்தபோதே தெரிந்தது ஏன் மதுரை அயிரை மீன் குழம்பு என்று சொல்கிறார்கள் என்று. ஒவ்வொரு கவளம் சாதத்திற்கும் நறுக் நறுக் என்று மீன் கடிபட, காரத்துடன் அந்த சாதம் சுவையை அதிகரிக்க செய்தது.அடுத்து வயிற்றில் இடம் இல்லை என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது, நண்டு குழம்பை முன்னே கொண்டு வந்து நீட்டினார். மனம் வேண்டாம் என்று கதறினாலும், வாய் சரி ஒரு கரண்டி விடுங்க என்று சொல்லி கட்ட ஆரம்பித்தது. முடிவில் சிறிது ரசம், கொஞ்சமாக தயிர் என்று விட்டு மதுரை மட்டன் சுக்காவை ஆட்டத்தில் சேர்த்து முடித்தோம். நல்ல பசி நேரத்தில் சென்று இப்படி சாப்பிட்டு நிறைய நாள் ஆகிவிட்டது, அதனால் எந்திரிக்க தான் முடியவில்லை !! மதுரையில் இப்படி ஒரு அசைவ சாப்பாட்டை மிஸ் செய்ய வேண்டாம்..... பறப்பது, நடப்பது, தவழ்வது, நீந்துவது என்று எல்லாமும் இருக்கிறது !!

பஞ்ச் லைன் :

சுவை - மட்டன், சிக்கன், மீன், நண்டு என்று பல வகைகளில் சுவை.....அதுவும் அந்த அயிரை மீன் குழம்பை மிஸ் செய்ய வேண்டாம் !

அமைப்பு - நல்ல பெரிய உணவகம், பார்கிங் வசதி சற்று தள்ளி இருக்கிறது.

பணம் - மெனு கார்டை பாருங்களேன், சிறிது அதிகம் போன்று தோன்றினாலும் வித விதமான அயிட்டம் !!

சர்வீஸ் - நல்ல சர்விஸ், கேட்டு கேட்டு வைக்கிறார்கள். கூட்டம் அதிகமாக இருக்கிறபோது நீங்கள் இதையே எதிர்பார்க்க முடியாது !

அட்ரஸ் :

Bypass Rd, Tallakulam, Madurai, Tamil Nadu 625002, India
தல்லாக்குளம் கிரௌண்ட் கொஞ்சம் பக்கத்தில் இருக்கிறது இந்த சந்திரன் மெஸ்.


மெனுகார்ட் :Label: Suresh, Kadalpayanangal, Arusuvai, Mess, Madurai, Chandran mess, Ayirai meen, Fish curry, Asaiva saappaadu, full meals

26 comments:

 1. பறப்பது, நடப்பது, தவழ்வது, நீந்துவது என்று எல்லாத்தையும் முடித்து விட்டு நாம் தவழ்ந்து செல்ல வேண்டியது தான்... எக்ஸ்ட்ரா காசை விடுங்க... இரண்டு வாளி வைத்து விட்டு போக வேண்டியது தானே...?! ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா, நீங்கள் சொல்வது சரி சார், நான் கடைசியில் தவழ்ந்து செல்லத்தான் யோசித்தேன் ! தங்கள் வருகைக்கு நன்றி !

   Delete
 2. ஹா ஹா சூப்பர்... அதென்ன முதல் மரியாதை மீன் குழம்பு?

  ReplyDelete
  Replies
  1. முதல் மரியாதை மீன் கொழம்பு தெரியாதா, வாங்க பாஸ் இந்த முறை பதிவர் திருவிழாவில் சாப்பிட்டுவிடலாம் !

   Delete
  2. https://www.youtube.com/watch?v=Pa-i_G1lfJw

   Delete
 3. முதல் மரியாதையில ராதா வச்சு கொடுக்க சிவாஜி சாப்பிடுவாரே அந்த குழம்பா ???

  ReplyDelete
  Replies
  1. அதேதான்…. கவிதை கவிதை நடு நடுவுல நண்டு குழம்பு, மட்டன் குழம்பு எல்லாம் சேர்துகிடுங்க ! :-)

   Delete
 4. காலங்காத்தால இந்தப் பதிவை ஏன் படிச்சோம்னு இருக்கு...பசிக்க ஆரம்பிச்சிடுச்சு...

  ReplyDelete
  Replies
  1. இதை விட பெரிய பாராட்டு எனக்கு இருக்க முடியாது சகோதரி !

   Delete
 5. நான் அங்கு சாப்பிட்டிருக்கிறேன். சுவையான உணவகம்தான், ஆனால் அவர்களின் விலைக்கேற்ற சுவையாக கருத முடியாது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே !

   Delete
 6. மீன் குழம்ப பார்க்கும் போதே எச்சி ஊருதே...

  ReplyDelete
  Replies
  1. நன்றி மகேஷ் பிரபு, இன்னைக்கே செய்திட வேண்டியதுதானே !

   Delete
 7. Welcome Back Anna ...! நீங்கள் விவரித்த விதத்திலே சாப்ட்ட திருப்தி..

  மதுரை அயிர மீன மனசுல வச்சிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மனசுல வைச்சிக்கோ, ஆமாம் அந்த புத்தூர் பொண்ணு என்ன ஆச்சு…… நாங்க எல்லாம் உன்னோட கல்யாண சாப்பாட்டுக்கு வெயிட்டிங் !

   Delete
 8. வலைச்சரம் ஆசிரியர்க்கு எனது பணிவான வணக்கம் ...அவ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. பெஞ்சுமேல ஏறி நில்லு, ஆமாம் நான் ஆசிரியராக்கும் !

   Delete
 9. நானும் அங்கு சாப்பிட்டிருக்கின்றேன் . அவர்கள் விலை அதிகம் .
  விலைக்கு ஏற்ற சுவை கிடையாது .
  ஒரு மாறுதலுக்காக அங்கு சாப்பிட விரும்புபவர்கள் அங்கு போகலாம் .
  சுவையும் வேண்டும் பட்ஜெட் ஐ இடிக்க கூடாது என்று நினைப்பவர்கள் அங்கே போகாதீர்கள் ..
  உங்களுக்கு வேறு கடைகள் இங்கே உள்ளன .

  மிக சுவையாக நியாயமான விலையில்

  பரந்தாமன் சங்கர்

  ReplyDelete
  Replies
  1. @பரந்தாமன் சங்கர் and @Suresh Kumar..
   நான் ஐரோப்பா - இல் இருக்கிறேன் .மதுரை யில் நல்ல சுவையான நான்-veg ஹோட்டல் , உணவகம் (பாமிலி உடன் செல்வதற்கு ) சிபாரிசு பண்ணுங்களேன் .I am coming home in 2 weeks!

   Thanks
   Sundar

   Delete
  2. நன்றி பரந்தாமன் சங்கர், தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
  3. சுந்தரம்-ஜி, தங்களுக்கு தகவல் கிடைத்ததா இல்லை தரட்டுமா ?

   Delete
 10. Replies
  1. நன்றி சகோதரி, இன்னைக்கு வீட்டில் மீன் கொழம்பா !

   Delete
 11. @ Sundaram T
  Sundaram, there are number of choices - the choice depends upon whether it is for lunch or dinner. If it is for dinner, let your first choice be konar kadai - simmakal stop. if it is lunch let it be chandran mess. (the logic being chandran mess functions only for lunch and konar specializes for dinner). For other choices you can also glance நாங்க…… தின்னு கெட்ட மதுர பரம்பர @ http://vaarththai.wordpress.com/2012/06/30/ you can take a printout of it and try as many as you wish :) (Kindly Note even though the list may appear exhaustive, it is not complete)

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி நண்பரே, எல்லோருக்கும் உதவும் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete
 12. நன்றி கிருஷ்ணா !

  ReplyDelete