Tuesday, April 22, 2014

அறுசுவை - இயற்க்கை உணவு, கோயம்புத்தூர்

இயற்க்கை உணவு.... இதை சொல்லும்போதே பச்சை பசேல் என்று புல்லும், வேக வைத்த அல்லது பச்சை காய்கறிகளும் மட்டுமே நினைவில் வரும். எனது மனைவி வேறு விகடனில் ஆறாம் திணை படித்ததில் இருந்து கொள்ளு சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, பொன்னங்கன்னி தெரியுமா அது கிட்னியை பார்த்துக்கும் என்று ஏகத்துக்கும் எனக்கு ஹெல்த் டிப்ஸ் அள்ளி வழங்குவார், சமயத்தில் ஆபீஸ் போகும்போது டிபன் ரெடியா என்று கேட்க சில சமயங்களில் அப்படியே பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து விட்டு சென்று விடுங்கள் என்று சொல்லி விடுவாரோ என்ற பயமெல்லாம் வரும். இது எல்லாம் சேர்த்து இந்த இயற்க்கை உணவு என்பதையே ஒரு மாதிரி நினைத்து கொள்ள வைத்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊட்டி வந்தேன், கீழே இறங்கும்போது கோயம்பத்தூரில் ஏதாவது சாப்பிடலாம் என்று தோன்றியது. ( அங்கு நம்ம கோயம்புத்தூர் பதிவர்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்று ஆவல் இருந்தாலும் என்னுடன் நண்பர்கள் இருந்த காரணத்தாலும், நேரமின்மையாலும் சந்திக்க இயலவில்லை ) என்ன சாப்பிடலாம் என்று யோசித்ததில் ஒரு மாற்றத்திற்கு இயற்க்கை உணவு சாப்பிடலாம் என்று தோன்றியது. தேடியதில் கிடைத்ததுதான் இந்த நளன் உணவகம் ! அப்படி என்னதான் இருக்குது என்று பார்க்க சென்று, எல்லாமே நல்லா இருக்கே என்று எண்ணம் தோன்றியது நிஜம் !!





தேடி திரிந்து இயற்க்கை உணவகம் ஒன்று கண்டு பிடித்து சென்றோம், உள்ளே நுழையும்போதே பக்தி மனம் கமழும் பாட்டு, சுத்தமான மேஜை, நன்கு குளித்து உடுத்திய புன்னகையுடன் சர்வர் என்று வித்யாசமாக இருந்தது. என்ன இருக்கு என்று பார்க்க, ஒருவர் மெனு கார்ட் எடுத்து நீட்டினார்...... முதலில் கண்ணில் பட்டது என்பது திணை பொங்கல், கீரை சூப். இரண்டையும் ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்து இருக்க, மனதில் அது எப்படி இருக்குமோ என்ற பயம் இருந்தது உண்மை. எதுக்கும் சைடில் சேப்டிக்கு என்று நமக்கு தெரிந்த உணவு ஒன்று ஆர்டர் செய்யலாமா என்று யோசித்தோம்.... என்னதான் திணை பொங்கல் கொஞ்சம் சாப்பிட முடியாமல் இருந்தாலும், ஒரு இட்லிக்கு ஒரு வாய் பொங்கல் என்று சாப்பிடலாம் இல்லையா ?! அதனால், அவசர அவசரமாக அவரை கூப்பிட்டு இட்லி வடை என்று சொன்னோம், சரி என்று சென்றவர் பொங்கலை எடுத்து வந்து வைக்க, நாங்கள் இட்லிக்கு காத்திருக்க, அவரோ பொங்கலை சாப்பிட்டுவிட்டால் கொண்டு வரலாம் என்று இருக்க, எங்களது ராஜதந்திரம் தெரியாமல் கொஞ்ச நேரம் ஓடியது. பொங்கலை வைத்தும் இன்னும் சாப்பிடவில்லையே என்று அவர் கேட்க, நாங்கள் இட்லி வந்தால்தான் சாப்பிடுவோம் என்று அடம் பிடித்தோம் !





முடிவில் கலங்கிய தண்ணீரை போல இருந்த கீரை சூப் ஒரு வாய் வைக்க சிறிது மூலிகை வாசனை அடித்தது உண்மை. அதில் கொஞ்சம் பெப்பர் போட்டு குடிக்க, வெஜ் சூப் போன்று அருமையாக இருந்தது. அடுத்து கடவுளை வேண்டிக்கொண்டு திணை பொங்கலை எடுத்து வாயில் வைக்க, நமது வென்பொங்கலுக்கும் இதுக்கும் வித்யாசம் தெரியவில்லை. எண்ணை அதிகம் இல்லாமல், கருவேப்பில்லை அதிகமாக போட்டு, அங்கங்கு மிளகு போட்டு அதில் சட்னியும் சாம்பாரும் கொஞ்சமாக விட்டு சாப்பிட திவ்யமாக இருந்தது..... நிஜம் சார் ! எங்களை பரிதாபமாக பார்த்துக்கொண்டு இருந்தது நம்ம இட்லி வடை.

திணை பொங்கல்........இட்லி வடை !
 
கீரை சூப் 


அடுத்து கரிசலாங்கண்ணி தோசை ஒன்றும், தானிய தோசை ஒன்றும் சொன்னோம். பொங்கலை சாப்பிட்டதில் இவர்கள் செய்யும் முறை பிடித்து இருந்தது, அதனால் இந்த முறை தோசை வந்தபோது பயம் இல்லை. கீரை தோசையில் கீரையை நன்றாக அரைத்து தோசை மாவில் நன்றாக கலந்து பொன்னிறமாக கொடுத்தனர், அது போலவே தானிய தோசையையும். ஒரு வாய் பியித்து வைக்கும்போதே கீரையின் சுவை தெரிகிறது. எந்த கசப்பும் இல்லை, சுவைதான் அதிகம். முடிவில் மூலிகை டீ சாப்பிட்டு எந்திரிக்கும்போது எப்போதும் இவ்வளவு சாப்பிட்டு மலை பாம்பு போல பீல் செய்யும் நான், அன்று அப்படி பீல் செய்யவில்லை என்பதை நன்கு உணர்ந்தேன். நாம் சாப்பிடும் பீசா பர்கரை விட இந்த இயற்க்கை உணவுகள் மிகவும் சுவையானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.... இனி என் ஓட்டு இயற்க்கை உணவிற்கே !!

கரிசலாங்கண்ணி தோசை

தானிய தோசை

என்ன.... கொம்பு ஏதேனும் முளைசிருக்குதா அப்படின்னு பார்க்குறீங்களா ?! :-)

பஞ்ச் லைன் :

சுவை - பல வகை இருக்கிறது..... பொதுவாக எல்லோருக்கும் இருக்கும் பயம் என்பது சுவை எப்படி இருக்குமோ என்று, இது நமது மற்ற உணவு வகை போன்றே சுவை தருகிறது, ஆனால் ஹெல்தி !!

அமைப்பு - மெயின் ரோட்டில் இருந்து கொஞ்சம் தள்ளி கடை, சிறிய உணவகம், பார்கிங் வசதி இருக்கிறது.

பணம் - உடம்பிற்கு கெடுதல் இல்லாமல் இருக்கும் உணவிற்கு எவ்வளவும் கொடுக்கலாம், ஆனால் இங்கு எல்லாமும் மற்ற ஹோட்டல் போன்றே விலை, எதுவும் அதிகம் இல்லை !

சர்வீஸ் - நல்ல சர்விஸ். கூட்டம் அதிகமாக இருக்கிறபோது நீங்கள் இதையே எதிர்பார்க்க முடியாது !


அட்ரஸ் :

699, கொங்கு நகர்,
அல்வேனியா ஸ்கூல் எதிரில்,
திருச்சி ரோடு,
ராமநாதபுரம்,
கோவை

போன் : 0422 - 2323 797, 87540 33503



 மெனு கார்டு :



 
Labels : Suresh, Kadalpayanangal, Iyarkkai unavu, healthy food, natural food, coimbatore, Arusuvai


11 comments:

  1. அஜினமோட்டோ வும் ஆயில் சேர்த்த உணவை ஒரு பிடி பிடித்த நீங்கள் உரம் போட்டால் வளராத சிறு தானிய பொங்கல் சாப்பிட ஏற்பட்ட பயம் கொஞ்சம் ஓவர் போலத்தான் தெரியுது.

    ReplyDelete
  2. நல்ல அறிமுகம். தானிய தோசை பார்க்க நன்றாக இருக்கிறது. தோசைக்கு தரும் சாம்பாரில், சட்னியில் என்ன 'இயற்கை' விசேஷம்?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நன்று !!! இதுபோன்ற அறிமுகங்கள்தான் தேவை.. இவை எல்லாம் ஒரு காலத்தில் நாம் பாரம்பரியமாய் உண்ட தானியங்களும் கீரைகளும் தான் .. நாம் தான் மாடர்ன் கலாச்சாரத்தில் அனைத்தையும் தொலைத்துவிட்டு , துரித உணவுகளின் பின்னல் சென்று துரிதமாகவே சென்று விட கடும் பிரயத்தனம் செய்கிறோம் ...

    ReplyDelete
  5. கரிசிலாங்கண்ணி தோசை செய்முறை கேட்டு வந்திருக்கலாமோ!!

    ReplyDelete
  6. இயற்கை உணவுகள் நாக்கில் நீரை வரவழைத்தன! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. விகடனில் ஆறாம் திணை படித்தமைக்கும் பாராட்டுக்கள்... இனி ஓட்டு இயற்கைக்கே - தேர்தலிலும்... ஹிஹி...

    ReplyDelete
  8. அருமை அருமை...!

    ReplyDelete
  9. Even though we live in Coimbatore itself we are able to know about this type of hotels only through blogs written by members.Thanks for your information and we are going to try this very soon

    ReplyDelete
  10. சிறப்பான உணவகமாக இருக்கிறது..... கோவை விசிட் செய்யும் போது செல்ல வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.

    ReplyDelete
  11. இதே போல் சேலம்-கோயம்புத்தூர் highways இல் ஒரு உணவகம் உள்ளது. ஆனால் அதன் பெயர் நியாபகம் இல்லை

    ReplyDelete