Tuesday, May 27, 2014

அறுசுவை - வீணா ஸ்டோர் இட்லி, பெங்களுரு

அறுசுவை என்ற இந்த பகுதியில் நான் எழுதியதை படித்து, நிறைய பேர் சென்று வந்து சொல்லும்போது சந்தோசமாக இருக்கிறது, இந்த வாரம் ஒரு மிக  சிறிய கடை, ஆனால் கூட்டம்  அள்ளும் இடம் !! பெங்களுருவில் இட்லிக்கு புகழ் பெற்றது "பிராமின்ஸ்  காபி  பார்" என்னும் இடம், இதை பற்றி எனது முந்தைய பதிவுகளில் எழுதி  இருந்தேன், அதற்க்கு அடுத்து இட்லிக்கு புகழ் பெற்றது என்பது இந்த "வீணா  ஸ்டோர் இட்லி" !! மல்லேஸ்வரம் பகுதியில் பன்னிரெண்டாவது தெருவில் இருக்கும் மிக சிறிய கடை, ஆனால் மிக சுவையான இட்லி !! சுவை என்று வந்துவிட்டால் நடிகர்கள், அரசியல்வாதிகள் என்று எல்லோரும் வரும் இடம் என்று இதை சொல்லலாம். சுவை சரியாக இருந்தால் ஒரு சிறிய கடையாயினும் எவ்வளவு வியாபாரமும் நடக்கும் என்பதற்கு இது உதாரணம் ! மிகவும் சிறிய மெனு, ஆனால் எல்லோரும் முதலில் சொல்வது இட்லிதான் !

 


இந்த கடையை கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை, யாரை கேட்டாலும் வழி சொல்கிறார்கள். மெயின் ரோட்டில் கடை, பிளாட்பாரத்தில் ஏழை பணக்காரன் என்று வித்யாசம் இல்லாமல் கியூவில் நின்று சாப்பிடுகிறார்கள். என்ன வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டே அடுத்தவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தால் எல்லாரது கையிலும் இட்லி இருக்கிறது, அப்போதே மனது என்ன நினைத்தாலும், வாய் உங்களது முறை வந்தவுடன் இட்லி என்று சொல்லிவிடும் ! கேட்டவுடன் வாழை மட்டையில் செய்த தட்டில் இரண்டு இட்லி வைத்து அதன் மேலே தேங்காய் சட்னி வைத்து தந்து விடுகிறார்கள், சாம்பார் எங்கே என்று யாரும் கேட்பதில்லை !

 


பொதுவாக நமது ஹோடேல்களில் எல்லாம் இட்லிக்கு சாம்பாரை மேலே ஊற்றிவிட்டு, கொஞ்சம் கெட்டியாக சட்னியை ஓரத்தில் வைப்பார்கள். சாம்பாரில் ஊறிய இட்லி என்னதான் சுவை என்றாலும், தண்ணீராய் வைத்த தேங்காய் சட்னியை இட்லி மேலே ஊற்றி அதன் சுவையை பார்த்து இருக்கிறீர்களா ? தேங்காய் சட்னியை இட்லியின் மேலே ஊற்றியவுடன் காரம் இருக்கும் அந்த தண்ணீரை அந்த இட்லி உறிஞ்சிவிட, இப்போது மேலே வெள்ளையாய் தேங்காயும், அங்கங்கே பச்சையாய் தெரியும் அரைத்த கார மிளகாயும் இட்லிக்கு இப்போது ஆடையை போர்த்தி இருக்கும். ஒரு வாய் பியித்து வைக்க, சாம்பாரில் ஊற வைத்து தின்றால்தான் இட்லி சுவைக்கும் என்று சொன்னவன் பொய்யன் என்று தோன்றும் ! முதலில் இட்லியின் மேல் இருக்கும் தேங்காயும், மிளகாயும் ஒரு சுவையை கொடுக்கும், அடுத்த கடிக்கு இட்லி இவ்வளவு சாப்ட் ஆக இருக்குமா என்னும் அளவு அளவான காரத்துடன் ஒவ்வொரு முறை மெல்லும்போதும் சுவையை அள்ளி கொடுக்கும், மதுரையிலும் இது போலவே ஆவி பறக்க தண்ணி சட்னியை ஊற்றி கொடுப்பார்கள். அதிகாலையில் உடம்பை குறைக்க வாக்கிங் செல்பவர்கள் இங்கு வந்து இரண்டு ப்ளேட் இட்லி வாங்கி சாப்பிடுவதை நீங்கள் பார்க்கலாம்...... வாக்கிங் உடம்பிற்கு, இட்லி மனதிற்கு !

 

 

இதை தவிர காரா பாத், கேசரி பாத், அவலக்கி பாத், பிசிபேளா பாத், பொங்கல் என்று வகை வகையாகவும் இருக்கிறது. இந்த சட்னியை தொட்டு இட்லி தின்பவர்கள் இட்லியை விட்டு விட்டு சட்னியை மட்டும் குடிப்பவர்களாக இருகின்றார்கள், அவர்களுக்காகவே ஒரு ஆளை வெளியில் உட்கார வைத்து சட்னி ஊற்றுகிறார்கள், அப்படியென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் !!



பஞ்ச் லைன் :

சுவை - ஒரு நல்ல இட்லி சாப்பிட வேண்டும் என்றால் நீங்கள் இங்கு தாரளமாக செல்லலாம் !

அமைப்பு - சிறிய உணவகம், பார்கிங் வசதி இல்லை ! நின்றுக்கொண்டேதான் சாப்பிடவேண்டும் !
பணம் - எல்லாம் கம்மிதான் என்றே தோன்றியது, சுவைக்கு கொடுக்கலாம் சார் !

சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள். கூட்டம் அதிகம் என்றாலும் அவர்கள் பாஸ்ட் ஆக சர்வீஸ் செய்கிறார்கள் !

அட்ரஸ் :




 
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Veena store, Bangalore, Bengaluru, Best idli, Best Idly, Malleshwaram

Thursday, May 22, 2014

ஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் ! (பகுதி - 2)

சென்ற வாரம் சேலம் மாம்பழம் (பகுதி - 1)-இல் மாம்பழம் பற்றி நிறைய விஷயத்தை தெரிந்து கொண்டீர்களா, அதை பற்றி வந்த கருத்துக்கள் எல்லாம் என்னை உற்சாகம் கொள்ள செய்தன ! அந்த மாங்காய்கள் தோட்டத்தில் காய்ந்தவுடன் என்ன ஆகின்றன என்று  இந்த பகுதியில் பார்ப்போமே. மாந்தோட்டம் என்பது கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் பகுதிகளில் எங்கு திரும்பினாலும் காணலாம். சிறு தோட்டங்களை வைத்து இருப்பவர்கள் இந்த மாங்காய்களை டன் கணக்கில் வியாபாரிகளிடம் விற்று விடுகின்றனர், அல்லது அவர்கள் அந்த தோட்டத்தை குத்தகைக்கு விட்டு விடுகின்றனர். பொதுவாக இந்த மாம்பழம் சீசன் வந்தவுடன் அந்த தோட்டத்தை ஒருவர் குத்தகைக்கு எடுத்துக்கொள்வார், அந்த குத்தகை சீசன் முடியும்வரை அந்த தோட்டத்தில் விளைவது எல்லாம் அவருக்கே ! குத்தகை எடுக்க வருபவர் கண்களால் பார்த்தே அந்த தோட்டத்தில் எத்தனை டன் மாம்பழங்கள் கிடைக்கும் என்று கணக்கு போட்டு விடுவார் !!

நாக்கில் எச்சில் இப்போவே ஊறுது.....!!
 

மாங்காய் ஊறுகாய்..... இந்த வாரம் !!
 
தோட்டத்தில் மே முதல் வாரத்தில் இருந்து மாங்காய் உருவாகிறது, அதை பறித்து ஒரு லாரியில் போட்டு அனுப்புகின்றனர். இதை ஊறுகாய் போடவும், பழ கூழ் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். கிருஷ்ணகிரி, தருமபுரி சுற்றிலும் புட் ப்ராசசிங் தொழிற்சாலைகள் நிறைய இருக்கின்றன. சீசன் வரும்போது இந்த தொழிற்சாலைகளை ஊறுகாய் கம்பனிகளும், பெரிய கம்பனிகளும் குத்தகைக்கு எடுத்துக்கொள்கின்றன, எத்தனை டன் ப்ராசஸ் செய்கிறார்களோ அத்தனைக்கு இவ்வளவு பணம் என்று இந்த புட் ப்ராசசிங் தொழிற்சாலைக்கு கிடைக்கும் ! மாங்காய் தோட்டம் பார்க்க வேண்டும் என்றபோது அதை நான் சென்ற வருடமே பார்த்துவிட்டேன், ஆனால் இந்த மாங்காய் / மாம்பழங்களை என்ன செய்கிறார்கள் என்று பார்க்க ஒரு வருடமாக அலைந்துக்கொண்டு இருந்தேன். இந்த புட் ப்ராசசிங் தொழிற்சாலைகள் அது செய்யும் முறைகளை எல்லோருக்கும் காட்டுவதில்லை, என்னதான் முயன்றும் சென்ற வருடம் முடியாமல் போனது. இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்தே முயற்சியை ஆரம்பித்தேன், எந்த தொழிற்சாலையும் ஆமாம் என்று சொல்லவில்லை, கடைசியில் ஒரே ஒரு தொழிற்சாலையில் மாங்காய் அல்லது மாம்பழம் பிராசஸ் செய்வதை பார்க்க முடியாது, ஆனால் காலையில் வந்தால் அது தயாராகும் முன் பார்க்க முடியும் என்றனர்..... ஜாக்பாட் !!

இப்படிதான் மாங்காய் தொழிற்சாலைகளுக்கு வரும்....!!


ஒரு கூடை என்பது சுமார் 25 கிலோ !! அப்போ இங்க எவ்வளவு இருக்கும் ?!
 

பெங்களுருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு ஐந்து மணிக்கு புறப்பட்டேன், காலை எட்டு மணி அளவில் அங்கு உண்டுவிட்டு அவரையும் பிக் அப் செய்துக்கொண்டு குண்டும் குழியுமான சாலையில் பயணம் செய்து ஒரு புட் ப்ராசசிங் தொழிற்சாலை ஒன்றை அடைந்தோம். அங்கு ஒரு பெரிய லாரியில் மாங்காய்கள் இறங்கி கொண்டு இருந்தது. ஒரு பிளாஸ்டிக் கூடையில் அள்ளி அள்ளி அடுக்கி கொண்டு இருந்தனர், இந்த கூடையில் சுமார் 25 கிலோ மாம்பழங்கள் வரை இருக்கும். ஊறுகாய் போடுவதாக இருந்தால் அப்படியே அடுத்த கட்டத்திற்கு செல்லும், மாம்பழ கூழ் செய்வதாக இருந்தால் அது பழுக்க வைக்கும் இடத்திற்கு செல்லும் ! இப்போது ஊறுகாய் போடுவதை பார்க்கலாமா ?!

சுத்தம் என்பது இங்கே முக்கியம்..... யாராய் இருந்தாலும் கால், கைகளை கழுவி, பிளாஸ்டிக் கையுறை, தலையுரையை மாட்ட வேண்டும் !!

உள்ளே நுழையும் முன் உங்களது கால்களில் இருக்கும் கடைசி அழுக்கையும் எடுக்க வேண்டும் !!

 இந்த அறைக்கு நுழையும் முன்பு நீங்கள் கால் கைகளை நன்கு கழுவ வேண்டும்,  அதன் பின்னர் ஒரு சிறு குழியில் நல்ல தண்ணீர் இருக்கும் அதில் உங்களது கால்களை நனைத்து உள்ளே செல்ல வேண்டும்.... அவ்வளவு சுத்தம் !! உள்ளே நுழையும்போது வெளியில் இறக்கி வைத்த மாங்காய்களை இப்போது கன்வேயரில் போட்டு இரு பக்கத்தில் இருந்தும் ஆட்கள் கூடை மாங்காய்களை தண்ணீர் கொண்டு நன்கு கழுவி ஒரு கன்வேயரில் கொட்டுகின்றனர், அங்கு பழங்கள் தேர்வு செய்யப்பட்டு, தரம் பிரிக்கப்படுகின்றன. பழ ஈக்களை நீக்கவும், பூஞ்சைப் புள்ளிகள் இல்லாதிருக்கவும் சுடுநீர் மற்றும் சுடுகாற்றினால் பதப்படுத்தப்பட்டு, 12 பாகை C க்கு அதிகமான வெப்பநிலையில் வைக்கப்படுகின்றன. இதற்கு குறைவான வெப்பநிலையில், மாம்பழத்தோல் கறுத்து அழுகத் துவங்கிவிடும். இப்படி சுத்தபடுதப்பட்ட மாங்காய்களை ஒரு பெரிய அரிவாள் மனையில் சரசரவென்று பெரிய பெரிய துண்டுகளாக போட்டு, மாங்கொட்டைகளை மட்டும் தனியாக எடுக்கின்றனர். அதன் பின்னர் இந்த அறுத்த மாங்காய்களை மெசினில் போட்டு சிறு சிறு துண்டுகளாக ஆக்குகின்றனர் !

கூடையில் இருக்கும் மாங்காயை இங்கே கொட்ட வேண்டும், இது சுத்தபடுதப்படும்.
 
இந்த கன்வேயரில் வரும் மாங்காயை இரண்டு பக்கங்களில் இருந்தும் ஆட்கள் காம்பு, கழிசல் நீக்குவார்கள் !

 

மாங்காயை பின்னர் இந்த அரிவாள் மனையில் பெரிய துண்டுகளாக வெட்டுகின்றனர்.... பயங்கர ஷார்ப் சார் !

சிறு சிறு துண்டுகளாக மெசினில் வெட்டப்படும் மாங்காயை இந்த டிரம்மில் ஊற வைக்கின்றனர்.

இது நடக்கும்போதே இன்னொரு இடத்தில் மிளகாய் போடி, உப்பு என்று மிக்ஸ் செய்கின்றனர். அந்த ரூம் போய் பார்த்தால் எங்குமே உப்பும், மிளகாய் பொடியும் சரசரவென்று கலக்கபடுகின்றது. அதன் கலவை ரகசியத்தை பகிர்வதற்கு அங்கு யாரும் ரெடியாய் இல்லை ! அதை ரூ பெரிய பிளாஸ்டிக் டிரம்மினில் சரியான விகிதத்தில் ஊற்றுகின்றனர், அதை மாங்காய் அறுக்கும் இடத்திற்கு கொண்டு வந்து அந்த மாங்காய்களை உள்ளே போட்டு, மூடி அதை உருட்டி விடும்போது உப்பும் மிளகாய்த்தூளும் மாங்காயும் கலந்து விடும், அதை 36 முதல் 48 மணி நேரம் வரை ஊற வைத்து லாரியில் ஏற்றி விடுகின்றனர், அது பாக்கிங் இடத்திற்கு சென்று பாக்கெட்களிலும், பாட்டிலிலும் வந்து..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று சுவையாய் உங்களது நாக்கை சப்புக்கொட்ட வைக்கிறது !!

உப்பும், மிளகாய் தூளும் மூட்டைகளில் !!

உப்பும், மிளகாய்த்தூளும் கலக்கும் மெசின்.......

இதுதான் ஊறுகாய் ஊற வைக்கும் டிரம்...... இது போதுமா உங்களுக்கு ?! :-)
 
இந்த வாரத்தில் நீங்கள் பார்த்தது என்பது ஊறுகாய், அடுத்த வாரம் வாருங்கள் இனிப்பாக மாம்பழ கூழ் பற்றி பார்க்கலாம். இன்னும் நிறைய மாம்பழ அதிசயம் இருக்கிறது !!

Labels : Suresh, Kadalpayanangal, Mango, Pickles, How mango pickles are made, factory, oor special, District special

 

Tuesday, May 20, 2014

ஊரும் ருசியும் - மதுரை ஸ்பெஷல் உணவுகள் (பகுதி - 1) !!

பதிவை படிப்பபவர்களில் பெரும்பாலும் கேட்க்கும் கேள்வி என்பது அந்த ஊரில் என்ன சாப்பிட நல்லா இருக்கும் என்பது. எந்த ஒரு ஊருக்கும் ஒரு பண்டம் இருக்கும், அதன் சுவை என்பது மண்ணும், மக்களையும் சார்ந்தது. உதாரணமாக மணப்பாறை சென்றால் அரிசி முறுக்கு சாப்பிடாமல் வரக்கூடாது,  அந்த அளவுக்கு அந்த ஊரும் முறுக்கும் கலாசாரத்தில் பின்னி பிணைந்து உள்ளது ! சிரமம் என்னவென்றால் சில ஊர்களில் கிடைக்கும் பண்டம் அந்த ஊர்காரர்களுக்கே தெரிவதில்லை என்பதுதான் சோகமே. இப்படி ஊரையும் அந்த உணவுகளை சுவைத்து உங்களுக்கும் சொல்லுவதே இந்த கட்டுரையின் நோக்கம்……. அதை எந்த ஊரில் இருந்து ஆரம்பிப்பது என்று மிக பெரிய கேள்வி இருந்தது. சென்னை, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில் என்று எந்த ஊரை நினைத்தாலும் அந்த ஊரின் ஒரு பண்டம் மட்டுமே யாபகம் வந்தது, ஆனால் மதுரையை நினைத்தவுடன் ஏகப்பட்டது நினைவுக்கு வந்தது. இரவு ஆனாலும் சூடாக இட்லி எடுத்துப்போடும் ஊர் ஆயிற்றே, அங்கிருந்தே இந்த பயணத்தை ஆரம்பிப்போமே !!


மதுரைகாரங்க என்று சொல்லும்போதே அவர்களின் பாசமும், அந்த ஊரின் சுவையும்தான் யாபகம் வரும். தல்லாகுளம் பக்கம் சென்றால் அம்மா மெஸ், குமார் மெஸ், சந்திரன் மெஸ் என்று அசைவ உணவு ராஜ்ஜியம், பெரியார் நிலையம் சென்றால் கொத்து பரோட்டாவும் மட்டன் சுக்காவும் மூக்கை துளைக்கும், விளக்கு தூண் பக்கம் ஜிகர்த்தண்டா என்று ரகளையாக இருக்கும். இந்த பகுதியில் உங்களுக்கு தெரிந்ததும், தெரியாததும் என்று கலவையாக பார்க்கலாம் வாங்க…..


தென்னங்குருத்து :

தென்னை மரத்தில் குருத்து விடும்போதே வீடுகளில் அமர்க்களம் ஆரம்பமாகிவிடும், அதுவும் அந்த குருத்து வெடித்து வெள்ளையாய் பூக்கள் வந்து அது இளநீர் ஆகும் அந்த இயற்க்கை வித்தையை என்ன சொல்வது. மதுரையில் எந்த பக்கங்களிலும் ஒரு சைக்கிளில் வெள்ளையாய் தென்னங்குருத்தை வைத்து சுற்றிக்கொண்டு இருப்பார்கள். பத்து ரூபாய்க்கு ஒரு பேப்பரில் கை நிறைய சின்ன சின்னதாக கொடுப்பார்கள். இன்று எதை சாப்பிட்டாலும் சால்ட், பெப்பர், பொடி என்று தூவி எக்ஸ்ட்ரா சுவை தேடும் நாம் இயற்க்கை சுவை என்ன என்பதை இந்த தென்னங்குருத்து சாப்பிட்டு தெரிந்துக்கொள்ளலாம். முதல் வாய் எடுத்து வைக்கும்போதே அந்த சுவை உங்களுக்கு புதிதாக இருக்கும் !! எல்லா இடத்திலும் இது கிடைத்தாலும் வண்டியூர் தெப்பக்குளம் பக்கம் மாலைகளில் கிடைக்கும் இது ! வித்தியாசமான உணவை தேடி சுவைத்து எழுதும்போது எல்லாம் திரு. ரமணி ஐயா அவர்கள் இப்படி மதுரை வரும்போது தன்னை அழைக்கும்படி சொல்லி இருந்தார், எப்படி நான்  பகுதிகளை எழுதுகிறேன் என்று பார்க்க வேண்டும் என்று பிரியபட்டார், ஆகவே மதுரையின் நாயகனுடன் இந்த வார பவனி !!






அவிச்ச டீ :

நம்ம ஊர் டீ கடைகளில் ஒரு பெரிய தாமிர பாய்லர் இருக்குமே, யாபகம் இருக்கா…. இன்று அதெல்லாம் பழங்கதை ஆயிற்று. பொதுவாக அந்த பாய்லரில் இருந்து சுட சுட நீர் எடுத்து அதை வைத்துதான் டீ தூள் போட்டு நம்ம டேஸ்டுக்கு டீ போடுவார் மாஸ்டர். ஆனால் மதுரையில் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம் அவிச்ச டீ என்று கிடைக்கிறது. அதே தாமிர பாய்லர், ஆனால் ஷேப் வித்தியாசமாக இருக்கிறது !! அதில் தண்ணீருடன் டீ தூளும் போட்டு நன்கு கொதிக்க வைக்கிறார்கள், இதனால் டீ தூளின் சுவை அந்த தண்ணீரில் இறங்கி இருக்க, கேட்டவுடன் நன்கு கொதிக்க வைத்த பாலில் கொஞ்சம் கொஞ்சமாக டீ தண்ணீரை இறக்கி……. அதை ஒரு வாய் வைக்க அந்த ருசி சற்று புதிதாகத்தான் இருக்கிறது !!







முள் முருங்கை வடை :

மதுரையில் பெரியார் நிலையம் அருகே இருக்கும் கூடல் அழகர் கோவில் பக்கம் சென்றால் ரோட்டின் ஓரத்தில் ஒரு வடை கடை இருக்கும். வடை, பஜ்ஜி, போண்டா என்று எல்லாமும் சூடாக கிடைக்கும். எல்லாமும் தக தகவென்று ஜொலிக்கும்போது நடுவில் பச்சை கலரில் ஒன்று எட்டிப்பார்த்துக்கொண்டு இருக்கும்..... அதுதான் முள் முருங்கை வடை !! வித்யாசமாக இருக்கிறதே என்று ஒன்றை வாங்கி சுவைதுப்பார்த்தால் தெரியும் என்ன வித்யாசம் என்று. முள் முருங்கை என்ற மூலிகை செடியின் இலையை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணையில் பொறிக்க உப்பலாக கிடைக்கும் ஒன்றுதான் இந்த வடை. இதன் மேலே பருப்பு பொடி தூவி, ஒவ்வொரு கடியிலும் பஜ்ஜியின் சுவையுடன் சாப்பிட அருமையாக இருக்கிறது. கூடல் அழகர் கோவில் தாண்டி சென்றால் எல்லா பஜ்ஜி கடைகளிலும் சிறியதும் பெரியதுமாக கிடைக்கிறது இந்த வடிகள் !!






விளக்குத்தூண் ஜிகர்த்தண்டா :

மதுரையில் எங்கு திரும்பினாலும் ஜிகர்தண்டா கிடைக்கும், ஆனால் விளக்குத்தூண் பக்கம் கிடைக்கும் ஜிகர்தண்டா சாப்பிட்டால்தான் உண்மையான ஜிகர்தண்டா என்றால் என்னவென்று தெரியும். கடல்பாசி, பால், ஐஸ், ஐஸ் கிரீம் என்று எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து கொடுக்க ஒரு வாய் வைத்தாலே ஜிவ்வென்று இருக்கும் இங்கு. நான் மதுரை செல்லும்போது தல்லாக்குளம் பகுதியிலும், அண்ணா பேருந்து நிலையத்திலும் இதை குடித்தபோது ஜிகர்தண்டாவின் சுவை அவ்வளவாக கவரவில்லை, ஆனால் இந்த விளக்குத்தூண் பகுதியில் கிடைக்கும் ஜிகர்தண்டா சுவைத்தால் நீங்கள் அதற்க்கு அடிமையாகாமல் இருக்கமாட்டீர்கள் !






இந்த வாரம் இது போதும்.... உங்களுக்கு இப்போதே ஏப்பம் வந்து இருக்கும், அடுத்த வாரம் இன்னும் நிறைய மதுரை ஸ்பெஷல் பார்க்கலாமே !

Labels : Suresh, Kadalpayanangal, Oorum Rusiyum, Special foods, Madurai, Mouth watering, Thennanguruthu, Jigarthanda, mulmurungai vadai, Avicha tea

Monday, May 19, 2014

அறுசுவை - CTR மசாலா தோசை, பெங்களுரு

பெங்களுரு உணவகத்தை பற்றி எழுதி நிறைய நாள் ஆகிவிட்டது என்று இங்கு இருந்த நண்பர்கள் குறைபட்டு கொண்டனர். பெங்களுருவில் புகழ் பெற்றது என்று சொல்லப்படும் பிராமின்ஸ் காபி இட்லி, MTR மசாலா தோசை, வித்யார்தி பவன் மசாலா தோசை எல்லாம் எழுதி ஆகிவிட்டது, இனி என்ன கடையை விட்டு வைத்து இருக்கிறோம் என்று தேடினால் CTR எனப்படும் சென்ட்ரல் டிபன் ரூம் என்னும் கடையின் மசாலா தோசையை பற்றி உருகி உருகி எழுதி இருந்தனர். ஒரு ஞாயிறு காலையில் இது யாபகம் வர வண்டியை எடுத்துக்கொண்டு சென்றாகி விட்டது !! எல்லாம் உங்களுக்காகத்தான் என்று நான் சொல்லவும் வேண்டுமா ?!


இந்த கடையை கண்டு பிடிப்பது மிகவும் எளிது, மல்லேஸ்வரத்தில் மார்கோசா ரோட்டில், ஏழாவது கிராஸ் ரோட்டில் இருக்கிறது இந்த உணவகம். நெருங்கும்போதே ரோட்டின் இரண்டு பக்கத்திலும் கார் நின்று கொண்டு இருப்பதை பார்த்தால்,  நெருங்கி விட்டீர்கள் என்று அர்த்தம் ! இன்னும் சற்று நெருங்கி செல்லும்போது பைக் அதிகம் நின்று கொண்டு இருந்தாலோ, அல்லது ஒரு இடத்தில் அதிகம் ஆட்கள் கால் கடுக்க நின்று கொண்டு இருந்தாலோ அதுதான் CTR எனப்படும் சென்ட்ரல் டிபன் ரூம் !! சில உணவகங்களுக்கு செல்லும்போது இடம் கிடைப்பது என்பது கடினம், நீங்கள் கால் கடுக்க நின்று கொண்டு இருக்க வேண்டும், அப்படி நிற்கும்போது உள்ளே இருந்து வரும் மணம் ஒரு வெறியை தூண்டக்கூடியது, அதுவும் பசியோடு இருக்கும் பட்சத்தில் கொலைவெறியை தூண்டும் என்பது எனது அனுபவத்தில் உணர்ந்தேன்.



முடிவில் ஒரு இடம் கிடைத்து நானும் எனது மனைவியும் அமர்ந்த பின்னர் பக்கத்து டேபிளுக்கு கண்கள் செல்ல, அங்கு மொறு மொறுவென்று தோசை வந்து அதனை சுவைத்துக்கொண்டு இருக்க, வாசனை வேறு மூக்கை துளைக்கவும், ரெண்டு மசாலா தோசை என்று ஆர்டர் செய்து விட்டோம். அப்புறம் என்று சர்வர் கேட்க முதலில் அதை கொண்டு வாங்க என்று சொன்னோம், அவர் ஏன் அப்புறம் என்று கேட்டார் என்பது அங்கு மசாலா தோசை விறு விறுவென்று வந்தாலும் அடுத்த டேபிளுக்கு போவதை பார்த்து தெரிந்தது. எங்களுக்கு பத்து நிமிடம் ஆகியும் வரவில்லை, பின்னர் ஏக்கத்துடனும், பசியுடனும் இட்லி மற்றும் கேசரி ஆர்டர் செய்து அதை உண்டு முடித்தபின்தான் வந்தது !! இட்லியை சாம்பார் தொட்டு சாப்பிடும்போதுதான் தெரிந்தது நான் கேசரியை ஆர்டர் செய்து இருக்க வேண்டாம் என்று, அவ்வளவு இனிப்பு...... சாம்பாரில் !





தோசை வந்தபோது அதன் மேலே ஒரு கரண்டி வெண்ணை வழுக்கி கொண்டு இருந்தது. சும்மா இருந்த தோசையில் இப்போது பாலீஷ் ஏறி போய் தகதகவென்று இருந்தது. பொன்னிறத்தில் தோசை முறுகலாக இருக்கவும் அதை ஒரு கை பியிக்க ஏதோ அட்டையை பியிப்பது போல வந்தது. நம்மூரில் இருக்கும் தோசை எல்லாம் பியித்து கையில் வைத்தால் பூமி நோக்கி விழும், இங்கு மானஸ்தன் போல நிமிர்ந்து இருந்தது. திங்கும்போது எங்கே வாயில் அடிப்பட்டு விடுமோ என்று இருந்தாலும் ஒவ்வொரு வில்லலும் அருமை, அருமை !! கர்நாடகாவில் தோசையின் மீது மையாய் அரைத்த  கார  மிளகாயை தடவுவார்கள், சாப்பிடும்போது அங்கங்கே அது கொடுக்கும் காரம் அமோகம் போங்கள் ! அதுவும் அவர்கள் கொடுத்து இருந்த தேங்காய் மற்றும் கொத்தமல்லி சட்னியில் தொட்டு உண்ணவும் இன்னமும் அருமை ! இப்படியே பியித்து சாப்பிடும்போது திடீரென்று புதையல் பார்த்தது போல தோசையின் நடுவில் மஞ்சளாக மசாலா இருந்தது, உருளை கிழங்கை நன்கு மசித்து மஞ்சள் போட்டு, அதனுடன் கொத்தமல்லி, பச்சை மிளகாய் எல்லாம் போட்டு ஒரு கரண்டி நல்ல ருசியுடன் தோசையினுள் வைத்து இருக்க, தோசையை அதனுடன் உண்ண..... இன்னைக்கு ஞாயிற்று கிழமை அமோகமான நாள் என்று பேப்பரில் போட்டு இருந்ததா என்று பார்க்க வேண்டும் !!








 

பஞ்ச் லைன் :

சுவை - ஒரு நல்ல மசாலா தோசை சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் MTR, வித்யார்தி பவனை அடுத்து இங்குதான்..... ம்ம்ம்ம் சூப்பர் !

அமைப்பு - சிறிய உணவகம், பார்கிங் வசதி கம்மி ! சிறிய இடம் என்பதால் இடம் கிடைப்பதற்கு சில நேரம் நீங்கள் நிற்க வேண்டியதிருக்கும் !

பணம் - எல்லாம் கம்மிதான் என்றே தோன்றியது, பெங்களுருவில் சில இடங்களில் உணவகங்களில் கிடைப்பதை விட கம்மிதான் !

சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள். என்ன மசாலா தோசை கேட்டால் மட்டும் லேட் ஆகிறது !


அட்ரஸ் :

7th Cross, Margosa Road, Malleshwaram, Bangalore


மெனுகார்ட் :
 

கன்னடத்தில்...... படிக்க முடியுமா பாருங்களேன் !
 Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, CTR, Bangalore, Bengaluru, Best masala dosa, CTR masala dosa, Malleshwaram

Wednesday, May 14, 2014

உலக பயணம் - பெங்குயின் பரேடு, ஆஸ்திரேலியா

 ஆஸ்திரேலியா.....  இந்த நாடு எல்லோருக்கும் நிரம்ப தெரியாத ஒன்று என்பதே எனது அனுமானம். டூர் போக வேண்டும் என்று கிளம்புபவர்கள் எல்லாம் சிங்கப்பூர், ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா என்று கிளம்புவார்கள், ஆனால் ஆஸ்திரேலியாவில் இதை விட அழகான இடங்கள் எல்லாம் இருக்கின்றன என்பது நிறைய பேருக்கு மறந்து போகிறது. மெல்போர்ன் நகரம் என்பது கிட்டத்தட்ட இந்த உலகத்தின் கடைசி எனலாம், அங்கிருந்து கூப்பிடு தொலைவில் அண்டார்டிகாதான் இருக்கிறது ! ஐஸ் நிரம்பிய இடம் என்று நினைத்தாலே நமக்கு பெங்குயின் தானே நமக்கு நினைவுக்கு வரும் !! சிறிய, கருப்பு - வெளுப்பு நிறத்தில் அது தத்தி தத்தி நடந்து வரும்போது எவ்வளவு அழகாக இருக்கும், அதை நமது ஊரில் பார்க்க வேண்டும் என்றால் ஜூவில்தான் பார்க்க முடியும்.  ஒரு முறையாவது அதை இயற்கையாய் பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு மெல்போர்ன் நகரில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பிலிப் தீவு. இங்கு கடற்கரையின் ஓரத்தில் தினமும் மாலையில் தனது கூடுகளுக்கு திரும்பும் சிறிய பெங்குயின் வகைகளை காணலாம் !!



பிலிப் தீவு பற்றி நிறைய எழுதலாம், எங்கும் இயற்கைதான். கடல் அலைகளும் இயற்கையும் கைகோர்த்து விளையாடும் இடம். பனி பிரதேசங்களில் மட்டும் காணப்படுவது பெங்குயின். பறவை இனத்தை சேர்ந்ததுதான். ஆனாலும், பறக்க முடியாது. கூட்டம் கூட்டமாக செல்லும் பெங்குயின்கள் கைகளை அசைத்து செல்லும் அழகே அலாதி.  அவற்றில் இந்த வகை சுமார் 13 முதல் 17 இன்ச் வரை மட்டுமே வளரும், இதைதான் லிட்டில் பெங்குயின் என்கின்றனர் இங்கு. காலையில் இரையை தேடி செல்லும் இந்த இனம், மாலை மயங்கும்போது கூட்டம் கூட்டமாக கடற்கரையில் இருந்து தத்தி தத்தி நடந்து தனது கூடுகளுக்கு செல்லும் அழகே தனி !! ஒரு ராணுவம் தாளம் தப்பாமல் நடப்பது போல, கூட்டம் கூட்டமாக அது மாலை மயங்கும் வேளையில் கடற்கரையில் இருந்து நடந்து வருவது என்பது அருமையான காட்சி !



 
1920-இல் இதை கண்டுபிடித்த மக்கள், இதை காண தினமும் வருவார்களாம். ஆனால் இது ஒரு தீவு, இதை கடக்க அன்று படகுகளை மக்கள் பயன்படுத்தினர். 1939-இல் இந்த தீவை இணைத்து பாலம் கட்டப்பட்டது. 1984 முதல் அங்கு இதை காண ஒரு சிறிய கட்டிடம் கட்டப்பட்டது. இன்றும் அந்த இடத்தில் இந்த  ஒரு கட்டிடம் மட்டுமே, அதுவும் மாலையில் மட்டும் ஆட்களுடன், மற்ற பொழுதுகளில் ஒருவரும் இருக்க மாட்டார்கள். பெங்குயின் பார்க்கலாமா என்று நாங்கள் சென்றபோது அது மதிய பொழுது, ஒருவருமே இல்லை, இன்று விடுமுறையோ என்று நினைத்தோம். அங்கிருந்து நகருக்கு திரும்பி சுற்றும்போது விசாரித்தோம், அப்போதுதான் அங்கு மாலையில் மட்டுமே கூட்டம் கூடும் என்று தெரிந்துக்கொண்டோம். ஒரு ஆளுக்கு சுமார் 1300 ரூபாய் டிக்கெட், உள்ளே நுழைந்து கடற்க்கரை ஓரம் சென்றால் ஒரு தடுப்பு இருந்தது, அதை தாண்டி செல்ல முடியவில்லை. பெங்குயின் வரும்போது நீங்கள் அதை இந்த தடுப்பினில் இருந்து பார்க்கலாம் அவ்வளவுதான், அடுத்த அதிர்ச்சி என்பது போட்டோ எடுக்க கூடாது !!





பெங்குயின் மிக சிறியது, அதை நமது கூச்சலும், போட்டோ வெளிச்சமும் கலவரப்படுத்தும் என்பதால் இப்படி. அடேய்..... 1300 ரூபாய் கொடுத்துட்டு சும்மா பார்த்துட்டு மட்டும் போ அப்படின்னா எங்க ஊருல நம்ப மாட்டாங்களே என்று நினைத்து பார்த்தாலும், அவர்கள் அந்த பெங்குயின் இனங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை கண்டு ஓகே என்று சொல்லிவிட்டோம் (வேற என்ன செய்யறது !!). மெதுவாக சூரியன் மறைய ஆரம்பிக்கும்போது அதுவரை அலைகள் மட்டுமே இருந்து வந்த அந்த கடற்கரையில் சின்ன சின்னதாக கூட்டம் கூட்டமாக தத்தி தத்தி நடந்து வந்தது அந்த பெங்குயின் இனம் !! ஒரு சிறு குழந்தை நடை பழகும்போது தடுமாறி நடப்பது போல, நம்மை ஸ்டைல் ஆக ஒரு பார்வை பார்த்துக்கொண்டு தனது கூட்டுக்கு நடந்து செல்வதை பார்ப்பது கண்கொள்ளா காட்சி ! ஆயிரம் ஆயிரம் வருடங்களாக தினமும் இப்படி ஒரே இடத்தை அது கண்டுபிடித்து வருவது கண்டு அதிசயிப்பீர்கள். இயற்க்கை இந்த உலகில் எத்தனையோ அதிசயத்தை வைத்திருக்கிறது, அதில் இதுவும் ஒன்று !!

  
 


அந்த பெங்குயின் நடந்து வரும் கடற்க்கரை இதுதான் !
 Labels : Suresh, Kadalpayanangal, Australia, Penguin, Parade, Amazing, must see, Melbourne attractions